பொம்மையும் சிலையும்

ன்புள்ள ஜெயமோகன்,

இந்து மதத்தின் வழிபாட்டுச் சிலைகளை ஒவ்வொருவரும் தங்களுக்கு தோன்றியபடி விளக்கிக்கொள்ளலாம் என்று நீங்கள் சொல்கிறீர்களா? அவ்வாறு ஆளுக்காள் அதை மாற்றுவார்கள் என்றால் அதன் பின்னர் நம்முடைய விக்ரகங்கள் எப்படி இருக்கும்? வழிபடுவதற்கு சாமிகளே இருக்காதல்லவா? ஒருமதத்தின் அடிப்படைகளை மாற்றிக்கொண்டே இருப்பது எப்படி சரியானதாக ஆகும்?

நா.ஸ்ரீதர்

அன்புள்ள ஸ்ரீதர்

கொஞ்சநாள்முன்னர் மாலை வீட்டில் பாத்திரங்கள் கழுவிக்கொண்டிருந்தேன். அருகே பிள்ளைகள் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள்.சமையலறையில் அருண்மொழி சமையல்செய்துகொண்டு, காய்கறி நறுக்கிக்கொண்டு, பாட்டுகேட்டுக்கொண்டு, செல்போனை காதில் இடுக்கியபடி ‘டெலிவரி நோட் போட்டு ரிஜிஸ்டரிலே எண்டிரி போட்டிருங்க. நான் வந்து ஜி ஓ போடறேன்’ என்று பேசிக்கொண்டிருந்தாள். நடுவே பாய்ந்து வந்து வாஷிங் மெஷினை அணைத்துவிட்டு வழியில் நாலைந்து பாத்திரங்களை என்னிடம் கொண்டுவந்து போட்டுவிட்டு போனாள்.

நான் அப்போது காளியைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தேன். சிரித்தபடி சொன்னேன், ”காளிக்கு பதினாறு கையின்னா ஆச்சரியப்படறியே…இப்ப பார், உங்கம்மாவுக்கு எத்தனை கை இருக்குன்னு” சைதன்யா சிரிக்க ஆரம்பித்துவிட்டாள். நாம் ஒவ்வொருவரும் அன்றாடவாழ்க்கையில் கைகள் பெருகும் அனுபவத்தை அடைவதில்லையா என்ன? பதினாறு கைகொண்ட காளி திசைகளாகும் கைகள் கொண்டவள்.

காளி எத்தனை மகத்தான உருவகம்! பெண்மையின் கருணையும் கொடூரமும் எந்தப்புள்ளியில் இணைகின்றன? இருபது வருடம் முன்பு நான் காளியைக் கண்முன் கண்டேன். தருமபுரி தொலைபேசிநிலையம் முன்னால் டீ குடித்துக் கொண்டிருந்தேன். ஒரு மிகப் பெரிய தாய்ப்பன்றி ஏழு குட்டிகளுடன் சென்றது. முலைக்கொத்து இழுபட்டு மண்ணில் உரசியாடியது. பிடரி மயிர் முள்ளாக நின்றது. சிறிய தந்தங்கள் போல கோரைப்பற்கள்.

அம்மிக் குழவிகள் போல குட்டிகள் வாலை சுழற்றி வைத்துக்கொண்டு, ஒன்றுடன் ஒன்று முட்டி மோதி ‘மிரக்’ ‘மிரக்’ என்று சத்தம் போட்டு ஓடின. ஓடும்போதே தாயிடம் பால் குடிக்க முயன்றது ஒரு சவலை. அதற்கு வேறு நினைப்பே கிடையாது. ஒன்று இன்னொன்றின் மேலே ஏறி எளிதாகப் பயணம்செல்ல முடியுமா என்ற சோதனையில் இருந்தது. அன்னை ‘ர்ர்ர்ரம்’ என்று சுருக்கமான ஒற்றைச் சொல்லில் ஏழு குட்டிச்சுதந்திரங்களையும் கட்டுக்குள் வைத்திருந்தாள். போகும் வழி முழுக்க மண்சாலையில் சாக்கடை சொட்டி கருமையாக ஒரு தடம் நீண்டு போயிற்று.

பன்றிக்குட்டிகளில் எப்போதுமே ஓர் அதிகப்பிரசங்கி இருக்கும். அது அம்மாவை இரண்டடி தூரத்துக்கு மீறும். எதையாவது நோண்டியபடி நின்றுவிட்டு அதட்டல் கேட்டதும் குடுகுடுவென ஓடும். அல்லது முன்னால் ஓடிப்போய் முகம் தூக்கி மூக்கு விடைக்க நடந்து போகிற டீச்சரைப்பார்த்து ‘ஓடறேன், பிடிச்சிருவியா?’ என்று சவாலாக கால்பரப்பி நின்று பார்க்கும். அவ்வப்போது அன்னை அதன் வாலைக் கவ்வி இழுத்து பின்னால் போடுவாள்.

தண்ணீர் தொட்டி அருகே சென்ற அன்னை குப்பைக்குவியலில் எதையோ ஆராய்வதற்காக நின்றாள். குட்டிகள் அம்மா வாய்வைத்த இடத்தில் பாய்ந்து குப்பைக்குள் புகுந்து வெளிவந்து ஆட்டம்போட்டன. சட்டென்று டீக்கடைக்காரி ”குட்டீ குட்டீ” என்று கத்தினாள். அவள் கையில் இருந்த டம்ளரை வீசி எறிந்ததைப் பார்த்தேன். ஒரு சிவலைநாய் முன்னால் ஓடிச்சென்ற குட்டிப்புரட்சியாளனை கவ்விக்கொண்டு ஓடியதை மறுகணம் கண்டேன்.

டீ குடித்துக்கொண்டிருந்த அத்தனைபேரும் அனிச்சையாகவே கூச்சலிட்டார்கள். அதற்குள் அன்னை பார்த்துவிட்டாள். அந்த முதுகெலும்பைச் சிலிர்க்கச்செய்யும் உறுமல் ஒலி இன்றும் என் கனவுகளில் எழுவதுண்டு. அத்தனை பெரிய உருவத்தில் அவ்வளவு வேகம் கூடுமென எவரும் ஊகிக்க முடியாது. கரிய ஓர் அசைவு , அவ்வளவுதான். இருநூறடி தூரம் காற்றில் சீறிச்சென்று  அதே வேகத்தில் நாயை தண்ணீர்த்தொட்டியின் தூணோடு வைத்து பேன் கொல்வதுபோல நசுக்கிவிட்டாள். வாயிலிருந்த குட்டியுடன் நாயின் உள்ளுறுப்புகள் அனைத்தும் குருதிச்சதுப்பாக பிதுங்கி வெளியே கொட்டின. குதம் வழியாக குடல் சிதறியது. ஒரு சிறு ஒலிகூட இல்லாமல் நாய் சிவப்புச்சகதியாக ஆகி விழித்த கண்களுடன் கிடந்தது.

”ம்ம்’ என்ற உறுமலுடன் குட்டியைக் கவ்வி தூக்கி போட்டாள் கரிய அன்னை. முள்முள்ளாகப் பிடரி சிலிர்த்து நிற்க செவ்விழிகளுடன் திரும்பினாள். கன்னத்திலும் கழுத்திலும் கம்பிமுடிகளில் குருதியின் கொழுந்துளிகள் சிதறிச் சொட்டின. சொல்லிழந்து அந்தக்கூட்டமே பார்த்து நின்றது ”பின்ன? சாமியில்ல கூட இருக்கு?” என்றார் ஒரு கிழவர்.

ஏழு  அன்னையரில் [சப்தமாதாக்கள்] ஒருத்தி பன்றிமுகம் கொண்ட வராஹி. உழுபடையுடன் நிற்கும் தேவி. என் கனவிலிருந்து எழுந்து கதை ஒன்றில் மாகாளி  வராஹியாக உருவம் கொண்டு வந்தால் அதற்கு நம் மரபில்  இடமுண்டா? மதவாதிகள் மீறல் என்பார்கள். ·பத்வா எல்லாம் விதிக்க இந்து மதத்தில் இடமில்லை என்றாலும் ஆலோசனைகள் சொல்ல நிறையபேர் வருவார்கள். ஆனால் இந்து மெய்ஞான மரபில் அதற்கு முழுமையாகவே இடமுள்ளது. ஏன், அதை நான் செய்தாகவேண்டும் என்றே நம் மரபு ஆணையிடுகிறது.

எந்தச்சிலைக்கும் இறுதிப்பொருள் என ஒன்றில்லை. அவை படிமங்கள் .படிமங்களின் பொருளென்பது அவற்றை நோக்குபவனின் கற்பனையில், தியானம் மூலம் திறக்கும் அக ஆழத்தில் இருந்து எழுந்து வருவது. என் சமையலறைக்குள் எட்டு கரங்களுடன் என் கிருஹலட்சுமி குடிகொள்கிறாள் என நான் உணரலாம். அவள் என் சொல்லில் பேரழகுடன் அமரலாம். அதுவே என் தரிசனமாக ஆகலாம். நமது சிலைகளெல்லாம் அதற்காகவே உருவாக்கப்பட்டவை.

பொதுவாக கவிதைக்குள் நுழைந்து படிமங்களை அறிமுகம் செய்துகொள்ளும் ஆரம்ப காலத்தில் இந்த வினா எழும். ஒரு கவிதையின் படிமங்களை வாசகன் அர்த்தப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றால் அந்தப்படிமங்களுக்கு எந்தப்பொருளும் இல்லையா என்ன?  எந்த வரியையும் எப்படி வேண்டுமானாலும் அடையாளப்படுத்திக்கொள்ளலாமா? அப்படிப்பார்த்தால் நல்ல கவிதை மோசமான கவிதை என்று ஏன் சொல்லவேண்டும்? ஏன், கவிதையே எதற்காக எழுதவேண்டும். எந்த வரியையும் கவிதையாக ரசிக்கலாமே? பெரும்பாலான விவாதங்களில் ஆரம்பகால வாசகர்கள் இந்தக் கேள்வியைக் கேட்பார்கள்.

ஒரு நல்ல கவிப்படிமம் நமக்கு அர்த்தங்களை அளிப்பதில்லை. அர்த்தங்களை நாமேதான் கற்பனைசெய்துகொள்கிறோம். ஆனால் அது நமக்கு உணர்ச்சிகளை அளிக்கின்றது. நாம் அதன் உணர்ச்சிகளின் அடிப்படையில்தான் அர்த்தங்களை உருவாக்கிக்கொள்கிறோம். அதுதான் படிமங்களின் தனித்தன்மை என்பது. அவை நேரடியாக நம் மனதுள் நுழைந்து நமக்கு  உவகையை, மன எழுச்சியை, துயரத்தை உருவாக்குகின்றன. அவ்வுணர்ச்சிகளை அவை ஏன் உருவாக்குகின்றன என்ற சிந்தனை மூலமே நாம் அர்த்தங்களைக் கண்டடைகிறோம்.

காவியம்

 

சிறகிலிருந்து உதிர்ந்த
ஒற்றை இறகு
காற்றின்
தீராத பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை
எழுதிச்செல்கிறது

என்ற பிரமிளின் கவிதை ஒரு படிமம் மட்டுமே. இவ்வரிகளைப் படித்ததுமே நாம் அகக்கண்ணில் ஒரு காட்சியை அடைந்துவிடுகிறோம். காற்றின் அலைகளில் ஒரு இறகு சுழன்றிறங்குகிறது. சுழற்றிச் சுழற்றி எவரோ இறகால் எழுதுவது போல. அது எழுதுவது ஒரு பறவையின் வாழ்க்கையை. சென்று விட்ட, இப்போது காட்சியில் இல்லாத, ஏதோ ஒருபறவை. உடனடியாக ஓர் மன அதிர்வை, நுட்பமான பரவசத்தை நாம் அடைகிறோம். கவிதை நிகழ்ந்துவிடுகிறது.

அதன் பின்னர்தான் நாம் தலைப்புக்குச் செல்கிறோம். ‘காவியம்’ . அந்த இறகு எழுதுவது அப்பறவையின் வாழ்க்கையென்னும் காவியத்தை! எல்லா காவியங்களும் சென்று மறைந்த ஒன்றைப்பற்றியவைதானா? காற்றின் தீராதபக்கங்கள் என்ற வரி அருவவடிவான காலத்தைச் சுட்டுகிறதா? ஒரு சின்னஞ்சிறிய பறவையின் வாழ்க்கைகூட அழியாத காலத்தில் எங்கோ இருக்கத்தான் செய்கிறதா என்ன? நம் சிந்தனைகள் விரிந்து விரிந்து செல்கின்றன. நமக்கே உரிய ஒரு ஆழமான அக அர்த்தத்தை அடைகிறோம்.

ஆனால் நம்மருகே நின்று இக்கவிதையை வாசிக்கும் ஒருவர் முற்றிலும் மாறான இன்னொரு அர்த்தத்தை அடையக்கூடும். அந்த இறகு வானத்தில் இருந்து மண்ணை நோக்கி இறங்குகிறது. எல்லா காவியங்களும் உயர்ந்த இலட்சியத்தின் மேக ஒளியில் இருந்து மண்ணின் யதார்த்தம் நோக்கி இறங்குகின்றனவா?

ஆனால் எல்லா அர்த்தங்களும் அந்தப்படிமம் உருவாக்கும் ஆதார உணர்ச்சி என்ற விதையில் இருந்து முளைத்தவையே. அந்த உணர்ச்சியை அது ஏன் உருவாக்குகிறது? அதைப்பற்றி முற்றுமுடிவாக விளக்குவது கடினம். அகப்பிரபஞ்சத்துக்கும் புறப்பிரபஞ்சத்துக்கும் இடையேயான உறவாடல் மூலம் என்று பொதுவாகச் சொல்லலாம். மேலைச்சிந்தனையிலும் கீழைச்சிந்தனையிலும் அந்நிகழ்வைப்பற்றி மிக நுட்பமான பல கோட்பாடுகள் உள்ளன. அவையெல்லாம் ஏதேனும் ஒரு கோணத்தில் அந்நிகழ்வை விளக்குவன. விளக்கப்படாத ஒரு தளம் எப்போதும் எஞ்சும்.

மேலைச்சிந்தனையில் உள்ள குறிப்பிடத்தக்க அணுகுமுறை முழுவுரு கோட்பாடு [ Gestalt theory ] என்று சொல்லப்படுகிறது. மனிதமனம் உதிரிவடிவங்களை கற்பனைமூலம் இணைத்து முழுமையான வடிவங்களை உருவாக்கும் இயல்புகொண்டது. அவ்வாறு உருவாக்குவதற்கான காரணம் அது வெளியே உள்ள வடிவங்களை அகவயமாக அர்த்தப்படுத்திக்கொள்ள விரும்புகிறது என்பதே. மரத்தின் மீது பறவை அமர்ந்திருந்தால் ‘மரம் நிலையானது, பறவை பறப்பது’ என மனிதமனம் அவ்விரண்டையும் இணைத்து பொருள்கொள்கிறது .

இவ்வாறு வெளியே தெரியும்  தனித்தனிப் பொருட்களான அனைத்தையும் மனிதமனம் அர்த்தபூர்வமாக இணைத்துக்கொண்டே இருக்கிறது. சூழல், வீடு, ஊர், நாடு, இயற்கை,பிரபஞ்சம் என நாம் சொல்லும் அனைத்துமே இவ்வாறு நாம் இணைத்து உருவாக்கிக் கொள்வனவே. அந்த மனநிலையே கவித்துவம் என்பது. கவித்துவம் மனிதன் பயின்று உருவாக்கிக் கொண்ட ஒன்றல்ல, அவனுடைய மனத்தின் இயல்பே அதுதான். ஆகவேதான் ஒரு மொழி எந்த அளவு பழங்குடித்தன்மையுடன் இருக்கிறதோ அந்த அளவுக்கு அது கவித்துவமாக இருக்கிறது. அதில் நேரடி அர்த்தமே இருப்பதில்லை. கவிப்படிமங்கள் மட்டுமே இருக்கும்.

மரத்தில் இலைநாக்குகள் அசையும். யானையின் வால் அதன் காம்பு ஆகும். ஆட்டின் காது இலையாகும். வானத்தில் ஏரிகள் தலைகீழாக மிதக்கும். முளைக்கும் செடிகள் வானம் நோக்கிப் பெய்யும் தலைகீழ் பச்சை மழையாக ஆகும். இதுவே கவிதையின் பிறப்பிடம். நம் அனைவரின் மொழி கவிதையின் வண்டல் கொண்டது. நம் சமகாலக் கவிதைகள் அந்த வண்டலில் இருந்து பிறக்கின்றன.

இந்திய ஞான மரபில் இவ்விஷயம் குறித்து மிக விரிவான கோட்பாடுகள் உள்ளன. இரு கோட்பாடுகள் முக்கியமானவை. வைசேஷிக மரபில் உருவாகி பௌத்தத்தில் முழுமை கொண்ட ‘அந்தகரண-சப்தாகரண-ததாகரண விருத்தி’ முக்கியமான ஒரு கோட்பாடு. தென்னகத்தில் உருவான அகம்-புறம் கோட்பாடு இன்னொரு முக்கியமான அணுகுமுறை. அது சைவ சித்தாந்தத்தில் நான்கு நிலைகளாக விளக்கம் கொண்டது.

நாமும் நாமறியும் புறப்பொருளும் இணைந்ததே பிரபஞ்சம் என்பது. நமக்கு வெளியே நாம் காண்பது எதுவாக இருந்தாலும் அது நம் உள்ளே இருக்கும் பிரக்ஞையால் அடையாளப்படுத்தப்பட்டதுதான். ஆகவே பிரக்ஞையின் கூறு கலக்காமல் புறப்பொருள் இல்லை. அதையே சைவசிந்த்தாந்தம் புறம் என்கிறது. அதேபோல நம் அகவுலகம் என்பது வெளியே உள்ள பொருட்களின் வடிவில் மட்டுமே நம்மால் அறியப்பபட முடிவதாகும். அதை சைவசித்தாந்தம் அதை அகப்புறம் என்றது.

நம் பிரக்ஞைக்கு அப்பாற்பட்ட, நம்மால் ஒருபோதும் அறியவே முடியாத பொருள்வய உலகம் வெளியே இருக்கிறது. அது புறப்புறம் எனப்பட்டது. நம்மால் அறியவே முடியாத  முற்றிலும் அருவ வடிவமான அகவுலகமும் நமக்குள் உள்ளது. அதுவே அகம். கைவல்ய நிலையில் அகம் தூய்மையாக வெளிப்படும். புறப்புறமும் அப்போதே தன்னைக் காட்டும். இது சித்தாந்தம்.

அதாவது நாம் சாதாரணமாக அறியும் எல்லா புறப்பொருட்களும் நம் மனமும் கலந்தவையே. நம் மனம் என்பது நம்மைச் சூழ்ந்துள்ள பொருளால் ஆனதே. கவிதை நிகழ்வது இந்தச் சந்திப்புப் புள்ளியில்தான். நாம் ஒரு சிறகை பார்க்கையில் அதில் நம் மனதின் ஒரு கூறு கலந்துள்ளது. சிறகுக்கு நாம் கொடுக்கும் அர்த்தம் ஒன்றுடன் சேர்த்தே சிறகைப் பார்க்கிறோம்.

மென்மை, பறக்கும் தன்மை, காற்றுடன் உறவு, ஆற்றல் என எத்தனையோ நுண்மையான கருத்துக்களுடன் சேர்த்தே நம்மால் சிறகை அறியமுடியும். அந்தக்கருத்துக்களுடன் நம் வாழ்க்கை மூலம் நாம் கொண்டுள்ள உறவுகள்தான் அந்த உணர்ச்சியை உருவாக்குகின்றன. தன்னால் பறக்க முடியும் என நம்பும் ஒரு குழந்தை பார்க்கும் சிறகுகளும் வீட்டை விட்டு வெளியே செல்லவே அனுமதிக்கப்படாத ஒரு பெண் பார்க்கும் சிறகுகளும் வேறு வேறு உணர்ச்சிகள் கொண்டவை.

நூறுரூபாய்த்தாளுக்கு நம் மனம் ஒரு மதிப்பைக் கொடுத்திருக்கிறது. பத்து தேங்காய், ஐந்து கிலோ அரிசி, மதுரைக்கு ஒரு டிக்கெட், இவ்வாறு. அவ்வாறு நாம் சிறகுக்கு நமக்கு உள்ளே ஓர் அர்த்தமதிப்பை வைத்திருக்கிறோம். அதேபோல காற்றுக்கு, தூரிகைக்கு,பறவைக்கு…. இக்கவிதை அத்தனை அகப்படிமங்களையும் ஒரே கணத்தில் ஒன்றாக இணைத்து ஒரு புதிய படிமத்தை உருவாக்கிவிடுகிறது. இதுவே  நமக்கு உணர்வெழுச்சியை உருவாக்குகிறது.

காட்சிப் படிமங்கள் நேரடியாக நம் ஆழ்மனத்துடன் பேசுகின்றன. அங்கே உணர்ச்சிகளை எழுப்புகின்றன. அதன்பின்னரே நாம் அவற்றை பிரக்ஞைக்கு கொண்டுவருகிறோம். இதுவே எல்லா படிமங்களுக்கும் உரிய இயக்கவிதி. ஓவியப்படிமங்களுக்கு. சிற்பப் படிமங்களுக்கு. இசைப்படிமங்களுக்கு. சிற்பமும் இசையும் இணையும் நடனப்படிமங்களுக்கு…

விக்ரகம் என்றால் வி+கிரஹம் என்று பிரிந்து கிரகிப்பதற்கானது என்று பொருள்படும். நமது அகம் புறத்தை கிரகிப்பதற்கான வழிதான் அது. ஒரு தரிசனத்தை நம் மூளையின் தர்க்க அமைப்பை தொடாமல் நம் ஆழ்மனதுக்கு அனுப்புவதற்கான வழிமுறையே படிமங்கள். விக்ரகங்கள் அதற்காகவே உருவாக்கப்பட்டன.

விக்ரகங்கள் நமக்குள் உருவாக்கும் அகப்பதிவுகளை நாம்தான் எண்ணங்களாக கருத்துக்களாக ஆக்கிக் கொள்கிறோம். அவை நமக்கே உரியவை. நம் அருகே நின்று அதே விக்ரகத்தைப் பார்க்கும் ஒருவர் அதே  எண்ணங்களை அடைவார் என்று சொல்ல முடியாது. அதன் ‘பொருள்’ இன்னது என்று வகுத்துச் சொன்னால்கூட அவரது ஆழ்மனம் அதை ஏற்கும் என்று சொல்லமுடியாது. அது அவரது அதுவரையிலான அனுபவ மண்டலம் சார்ந்து, சிந்தனைவளர்ச்சி சார்ந்து சொந்த அர்த்தத்தை மட்டுமே உருவாக்கிக்கொள்ளும்.

ஒரு கருத்தைச் சொல்ல அதை எழுதி வைத்தாலே போதும். ஒரு தரிசனத்தை ஒருபோதும் தர்க்கபூர்வமாக சொல்லிவிடமுடியாது. காரணம் அந்த தரிசனம் மூளையால் புரிந்துகொள்ளப்படுவதல்ல. அந்த தரிசனத்தை அடைந்தவரின் அகம் ஒரு கணத்தில் விழிப்படைந்து அந்த தரிசனத்தை அடைகிறது. அதே தரிசனகணத்தை கொஞ்சமேனும் அடையாமல் இன்னொருவர் அதை உள்வாங்க முடியாது. ஆகவேதான் படிமங்கள் உருவாகின்றன. படிமங்கள் மூலம் சென்று அந்த அகவிழிப்பின் தருணத்தை இன்னொருவரும் தொடலாம்.

‘தொலைந்துபோன ஆட்டுக்குட்டி’ என்ற ஏசுவின் படிமம் அவரது ஞானதரிசனத்தின் எல்லா தளங்களுக்கும்  தியானிக்கும் ஒருவனைக் கொண்டுசெல்லும். மானுடத்துக்கு ஏசுவின் கொடையே அதுதான். உலகின் பெரும்பாலும் எல்லா மதங்களும் தகுதியானவனைநோக்கிப் பேசின. அறிஞனை, ஞானத்தேடல் கொண்டவனை,  சான்றோனை , நல்லவனை அவை முன்னிலையாக்கின. தீயவனை, கடையனை, எளியவனை முன்னிலையாக்கினார் கிறிஸ்து. அந்தப்பெருங்கருணையின் தரிசனம் அந்த ஒரே ஒரு படிமத்தில் உள்ளது. ஆட்டுக்குட்டியை மார்போடணைத்த ஏசுவின் ஒரு ஓவியம் தினம் அதைக் காணும் ஒருவனை அவருக்கு மிக அருகே கொண்டுசெல்ல முடியும்.

அவ்வாறுதான் இந்து ஞானமரபில் உள்ள விக்ரகங்கள் உருவாகின. அவற்றை தியானிக்கும் ஒருவன் அவற்றை கண்டடைந்தவனின் தரிசனம் நிகழ்ந்த கணத்தை தன் அகத்தில் நிகழ்த்திக்கொள்ள முடியும். வழிபாடும் ஒரு தியானமேயாகும். நாம் விக்ரகங்களை வழிபடவில்லை, விக்ரகங்களால் சுட்டப்படுவதையே வழிபடுகிறோம். இந்துக்கள் விக்ரகங்களைக் கும்பிடுகிறார்கள் என்பது இந்து மரபைப்பற்றிய அடிபப்டைப்புரிதல் கூட இல்லாத, இந்துமதத்தின் தத்துவதளத்துக்கு வெகுவாக கீழே இருக்கிற, பிறர் சொல்லும் அறியாமைக்கூற்று. தர்க்கத்தால் சொல்லப்படமுடியாத ஒன்றை உள்ளுணர்வுக்கு உணர்த்தும்பொருட்டே விக்ரகங்கள் உருவாக்கப்பட்டன.

ஆகவேதான் நம் விக்ரகங்கள் வளர்ந்துகொண்டே இருக்கின்றன. பிற விக்ரகங்களுடன் கலந்து புதுவடிவம் கொள்கின்றன. வினாயகர் என்ற ஒற்றை விக்ரகத்தை எடுத்துக்கொள்ளலாம். நம் ஆலயங்களில் எத்தனை நூறு வகையான விக்ரகங்கள் உள்ளன. மூன்றுமாதக் கைக்குழந்தையின் உடல் கொண்ட கணபதிகள் உண்டு. நன்றாக மத்தகம் முற்றிய முது கணபதி உண்டு. நடனமாடும் கணபதி உண்டு. தேவியருடன் அமர்ந்த கணபதி உண்டு. ஏன் இத்தனை கணபதிகள்? நிலையான அர்த்தம் போதும் என்றால் ஒரே சிலை போதுமே. கணபதியின் ஒவ்வொரு சிலையும் அந்தச் சிற்பியின் அகத்தில் கணபதி என்ற விக்ரகம் கொண்ட வளார்ச்சியைக் காட்டுகின்றன.

அந்த வளர்ச்சி ஒரு புள்ளியில் நிலைத்துவிடவேண்டும் என்று யார் சொல்ல முடியும்? அது மேலும் மேலும் வளர்ந்துதான் செல்லும். நவீனக்கலைகளில் அது ஊடுருவும். அதன் ஒவ்வொரு கூறும் புதிய புதிய தளங்களை அடையும். அவற்றில் அபத்தங்கள் இருக்கும். பிழைகள் இருக்கும். அசட்டு முயற்சிகள் இருக்கும். ஏனென்றால் கலை என்பது சீரான ஒரு செயல்பாடு அல்ல. அகத்தில் உன்னதமாக நிகழ்ந்த ஒன்று வெளியே பதிவாகும்போது அசட்டுத்தனமாக ஆகும் வாய்ப்புகூட கலையில் உண்டு. எது நம் அகத்துக்குள் சென்றிறங்குகிறதோ அது நீடிக்கும், மற்றது காலத்தில் அழியும்.

கலையும் தத்துவமும் மெய்ஞானமும்  சந்திக்கும் ஒரு புள்ளியில் விக்ரகம் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. அதை மதத்தின் சம்பிரதாயங்களினாலோ சட்டங்களினாலோ கட்டுப்படுத்த முடியாது. கட்டுப்படுத்தினால் நமக்கு எஞ்சுவது பொம்மைகள் மட்டுமே.

மறுபிரசுரம்/ முதற்பிரசுரம் நவம்பர் 2009

முந்தைய கட்டுரைகோட்டியும் கேயும்
அடுத்த கட்டுரைகாந்தி வெறுப்பு