ஹ¤ஸெய்ன் கடிதங்கள்

மதிப்பிற்குறிய ஐயா,

உங்கள் வலைப்பதிவில் “எம். எஃப். ஹுசைன், இந்து தாலிபானியம்” என்ற தலைப்பில் நீங்கள் கோபிநாத் வெங்கட்ரமணன் என்பவருக்கு எழுதிய பதிலைப் படித்தேன். அதில் நீங்கள் “பாண்டிசேரியில் நிர்வாணமாக நடந்து வந்த  திகம்பரச் சமணமுனிகள் மீது பச்சைமலத்தை பொட்டலம் கட்டி வீசியவர்கள் உங்கள் இந்துமுன்னணி இயக்கத்தினர்.” என்று எழுதியிருக்கிறீர்கள்.

எனக்குத் தெரிந்த வரை முற்றும் துரந்த திகம்பர சமணர்களை அடித்து விரட்ட வந்தவர்கள் தி.க வினர் தான். இந்து முண்ணணியினர் அல்ல.


எம்.எஃப். ஹுசைன் அவர்கள் தாராளமாக எந்த ஓவியங்கள் வேண்டுமானாலும் வரையலாம். அவரைத் தடுக்க யாருக்கும் எந்த உரிமையும் கிடையாது. நிற்க.

இந்துக்கள் புனிதமாகக் கருதும் பாரத மாதாவை நிர்வாணமாக்கும் சுதந்திரம் இந்து மதத்தில் உண்டு என்று அவர் கூறுகிறார். என் மதத்தில் சுதந்திரம் அதிகம் என்று அவர் கூறுவது எனக்கு சந்தோஷமே. ஆனால், இதே முஸ்லீம்கள் புனிதமாகக் கருதும் முஹம்மதை படமாக வரையக்கூட சுதந்திரம் அம்மதத்தில் இல்லை என்பதை ஏன் வெளிப்படையாக ஹுசைன் அவர்கள் ஒத்துக்கொள்வதில்லை ? இக்கேள்விக்கான விடையை அவரிடம் கேட்டாலும் நாங்களெல்லாம் இந்து தாலிபான்கள் ஆகிவிடுகிறோம் என்பது தான் இன்றைய நிலை.

ஷங்கர்.

 

அன்புள்ள சங்கர்

நான் வாசித்ததாக என் நினைவில் இருப்பது இந்துமுன்னணியினரும் அன்று திராவிடர் கழகம் மற்றும் ம.க.இ.கவினருடன் சேர்ந்து எதிர்ப்பு தெரிவித்தார்கள் என்றுதான். என் மனப்பதிவில் பிழை இருந்தால் வருந்துகிறேன்
ஹ¤சைய்ன் அவரது மதத்தில் சுதந்திரமில்லை என்று சொல்லவில்லை என்று நீங்கள் எப்படி உறுதியாகச் சொல்கிறீர்கள்? பலமுறை சொல்லியிருக்கிறார். சொல்லவில்லை என்றாலும் என்ன? உங்கள் மதத்தின் உயர் விழுமியங்களை கடைப்பிடிக்க வேறு எவர் உங்களுக்கு நிபந்தனை விதிக்க வேண்டும்?

என்னை எப்போதும் பொறுமையிழக்கச் செய்வது எதர்கெடுத்தாலும் இந்து மரபை இஸ்லாமுடன் ஒப்பிட்டு அவர்கள் மட்டும் அப்படிச் செய்யவில்லையா, அவர்களை மட்டும் அபப்டி சொல்வார்களா என்று கேட்கும் இந்துக்களைப் பார்க்கும்போதுதான். இந்து மதத்தின் ஞானமரபையும் வழிபாட்டு மரபையும் வரலாறையும் துளிகூட அறியாமல், அக்கறையே இல்லாமல், வெறும் கும்பலடையாளமாக மட்டுமே அதைக்காணும் தேங்கிச்சூம்பிய மனத்தின் கேள்வி அது.

இஸ்லாம் மதத்தில் ஒருவிஷயம் இருந்தால்மட்டுமே அதை இந்துமதத்தில் அனுமதிப்பீர்களா என்ன? அப்படியானால் இஸ்லாம் போல இந்துமதத்தையும் மாற்றிவிட நினைக்கிறீர்களா என்ன? அப்படி மாற்றினால் பிறகு இங்கே இந்துமதம் ஏன் இருக்க வேண்டும்? நகல் இஸ்லாமை விட உண்மையான இஸ்லாம் மதமே இருந்துவிட்டுப்போகட்டுமே

இந்த இந்து தாலிபான்களின் வெற்றி என்னவென்றால் இவர்கள் தங்கள் அடிப்படைவாதத்தை இஸ்லாமிய அடிபப்டைவாதத்தை நகல்செய்வதன் மூலமே உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பதே. அதன் விளைவாக இந்துக்களில் ஒரு சிலரை நகல் இஸ்லாமியராக மாற்றுவதில் வெற்றிபெற்றுள்ளார்கள் என்பதே. இந்து மதம் இன்று எதிர்கொள்ளும் ஆகப்பெரிய சிக்கலே இந்த இந்துதாலிபான்கள்தான்

ஜெ

 

 உண்மையை சொல்லவேணுமென்றால், ஹுசைனை அவரின் ஓவியத்திற்காக நானும் எதிர்த்தவன் தான். ஆனால், நம் சமயத்தில் இத்தனை விடயங்கள் இருப்பதை இப்பொழுது தான் அறிகிறேன். எனக்கு அவரின் செய்கையை விட, அவரின் நோக்கம் தான் பெரிதாக படுகிறது. அவர் கலையுணர்வோடு தான் வரைந்தார் என்றால் அதனை வரவேற்கிறேன். ஆனால், அவர் அந்த ஓவியத்தை களங்கப்படுத்தும் நோக்கில் வரைந்தாறென்றால் அதனை எதிர்க்கிறேன். நம் கலாச்சாரத்தில் என்றுமே செக்ஸை புனிதத்தன்மையுடன் தான் அனுகியிருக்கிறார்கள். அதனை வெறுத்ததில்லை. ஆனால், இப்பொழுது மற்ற வெளியே இருந்து வந்து, தனது மதம் ‘மட்டுமே’ உயர்ந்தது என்று எண்ணுபவர்களால் தான் இதனை கொச்சை படுத்த முடிகிறது.

மற்றபடி, ‘பல’ விஷயங்களை புரிய வைத்ததற்கு நன்றி. சீனு.
http://jeeno.blogspot.com

 

அன்புள்ள சீனு

ஹ¥செய்ன் அனைத்து ஓவியங்களையும் முழுக்க முழுக்க கலையூணர்ச்சியுடன் மட்டுமே வரைந்திருக்கிறார். நீங்கள் சொல்லும் இந்த நிர்வாண ஓவியங்களை மட்டும் அவர் வரையவில்லை. இந்து தெய்வங்கள் மற்றும் குறியீடுகளைப் பயன்படுத்தி பேரழகு கொண்ட நூற்றுக்கணக்கான ஓவியங்களை வரைந்திருக்கிறார். அவற்றின் உட்பொருளையும் தத்துவ நுட்பங்களையும் தன் பேட்டிகளில் விரிவாக விளக்கி இருக்கிறார். எம்.எ·ப் ஹ¤ஸெய்னுடன் சமமாக அமர்ந்து இந்து மெய்ஞானம் குறித்துப் பேசும் தகுதிகொண்ட இந்து தலைவர்கள் எத்தனைபேர் இருப்பார்கள் என்றே ஐயமாக இருக்கிறது.

முப்பது வருடங்களுக்கு முன்னர் அவர் வரைந்த ஓவியம் அந்த சரஸ்வதி. அது உயர்கலை வட்டத்துக்குள்ளேயே தான் இருந்தது. இந்து மரபின் முக்கியமான பலர் அதை பார்த்திருக்கிறார்கள், பாராட்டியிருக்கிறார்கள். டாக்டர் கரன்சிங், பபுல் ஜெயகர் போல. அதை ஒரு இந்தி மஞ்சள்பத்திரிகை எடுத்துப் பிரசுரித்து ஆபாசமான அடிக்குறிப்பும் கொடுத்து ஹ¤ஸெய்னுக்கு எதிராக குண்டர்களை தூண்டி விட்டு எழுதியது. விஸ்வ ஹிந்து பரிஷத் அதை கையில் எடுத்துக்கொண்டது — இதுதான் நடந்தது

ஜெ

 

மதிப்பிற்குரிய ஜெயமோகன்,

எம்.எப். ஹுசைன் குறித்தான உங்கள் கருத்துக்கள் மிகவும் சரியான ஒன்று. ஹுசைன் ஒரு மாபெரும் கலைஞர். அவரை இழிவு படுத்துவது, மிரட்டுவது போன்ற செயல்கள் மிகவும் கண்டிக்கத்தக்கவை. ஹிந்து மதத்தின் பலமே அதன் பன்முகத்தன்மையும், நெகிழ்ச்சித் தன்மையும்தான் என்ற உங்களின் கருத்து மறுக்கவியலாத ஒன்று. இல்லாவிட்டால் ஹிந்து மதம் இந்த மண்ணை விட்டு என்றோ மறைந்திருக்கும்.

இது குறித்து வி.எஸ். நைபால் எழுதியதை நீங்கள் படித்திருப்பீர்கள்.

… India did not wither, like Peru and Mexico, at the touch of Europe. If she were wholly Muslim, she might have done. But her Hindu experience of conquerors was great; Hindu India met the conquerors half-way and had always been able to absorb them….

அன்புடன்,
நரேந்திரன்.

அன்புள்ள நரேந்திரன்

இந்த வகையான அடிதடிக்கலாட்டாக்களுக்கும் அதை ஆதரிப்பதற்கும் இந்தியாவில் எளிதாக ஆட்களைச் சேர்க்க முடிகிறது. ஆனால் உண்மையான ஓர் இந்து அமைப்பு செய்யவேண்டிய எந்தவேலைகளுக்கும் இங்கே எவரும் வருவதில்லை. உண்மையுடன் ஆரம்பிக்கப்பட்ட பல முயற்சிகள் தேங்கிக் கிடப்பதைந் ஆன் அறிவேன்

இந்து மதத்தின் சாதியப் படிநிலைகளில் தாழ்ந்து கிடப்பவர்களுக்குள் சென்று கிறித்தவர்கள் இன்று பணியாற்றி வருகிறார்கள் . அந்தபப்ணிக்கு அரைசதவீதம் அளவுகெகெனும் பணியாற்றும் இந்து அமைப்புகள் ஏதும் இல்லை.  எந்த இந்துவுக்கும் ஆர்வம் இல்லை.

இந்துக்களில் கணிசமான சாரார் சாதிவெறி மட்டுமே மதமென நம்பியிருக்கிறார்கள். அவர்கள் நடுவே சென்று இந்துமதத்தின் ஆன்மீகத்தையும் தத்துவத்தையும் சொல்ல இன்று எவருமே இல்லை.

இந்துமதத்தின் பாரம்பரியமான தீய கூறுகளுக்கு எதிரான ஒரு போர் ஒரு நூற்றாண்டாக இங்கே நடந்தது. இன்று அந்தப்போராட்டமே முழுமையாக நின்றுவிட்டது. இந்துமதமே ஆக்ரமிப்புகளுக்காக திறந்துவிடப்பட்டிருக்கிறது

ஏன், தன் சொந்தவாழ்க்கையில் கொஞ்சம் முயர்சி எடுத்து தன் மதத்தைப் பற்றி ஒரு எளிய புரிதலை உருவாக்க கூட இன்று இந்துக்கள் தயாராக இல்லை. ஆனால் இம்மாதிரி கட்சி கட்டும் வேலைகளுக்கு ஆர்வமாக இருக்கிறார்கள்

ஆகவே அரசியல்கட்சிகளும் இதுவே போதும் என்ற நிலைக்கு வந்துவிட்டிருக்கிறார்கள். அதனால்தான் இம்மாதிரி சில்லறை அடிதடிகளில் ‘இந்து உணர்வை’ காட்டிக்கொண்டதாக ஒரு நிறைவு உருவாகி விடுகிறது

இந்தமாதிரி விஷயங்களில் உணர்ச்சிவசப்படுபவர்கள் ஓர் இந்துவாக வாழ, சிந்திக்க என்ன செய்தோம் என ஒரு கணம் எண்ணிக்கொண்டால் நல்லது
ஜெ

 

 

 

அன்புள்ள ஜெயமோகன் சார்,
காட்சி என்பது கண்ணில் என்ன தெரிகிறது என்பதல்ல. மனதில் என்ன உணர்கிறோம் என்பதுதான். எம்.எப்.ஹுசேன் பற்றிய புரிதலை அருமையாக வெளிப்படுத்தியிருந்தீர்கள். அவரை நான் நேரில் சந்தித்திருக்கிறேன். இந்து கடவுள்களின் உருவக உருவாக்கத்தைப் பற்றி நன்றாக அறிந்து அதன் மேல் அதிக மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தார். அவருடைய படைப்புகள் மூலம் அவர் கிட்டத்தட்ட மோன நிலையை அடைந்திருந்தார் என்றே சொல்ல வேண்டும். அவர் குறித்த உங்கள் கட்டுரை பலருக்கு தெளிவினை உண்டாக்கும் என்று நம்புகிறேன்.
ஓஷோவை ‘செக்ஸ் சாமியார்’ என்று ஒரு பத்திரிகை குறிப்பிட்டிருந்தது நினைவுக்கு வருகிறது.
அன்புடன்
இளம்பரிதி
அன்புள்ள இளம்பரிதி,

பெரும்பாலானவர்களுக்கு தத்துவம் கலை ஆகியவற்றை புரிந்துகொள்ளும் பொறுமையும் தகுதியும் இருப்பதில்லை. அவர்களிடம் அப்பொறுப்பை ஒப்படைப்பதற்குப் பெயரே ·பாஸிசம். அதற்கு மத அடையாளத்தைப் பயன்படுத்துவதற்குப் பெயர் தாலிபானியம். அவர்கள் ஓஷோஒவை அபப்டித்தான் அணுக முடியும். விஷ்ணுபுரத்தையே ஒரு கும்பல் செக்ஸ் நாவல் என்று சொல்லக்கூடும்.

ஜெ


elamparuthy

முந்தைய கட்டுரைகாந்தி சலிப்பூட்டுகிறாரா? கடிதங்கள்
அடுத்த கட்டுரைகாந்தி, கடிதங்கள் தொடர்கின்றன