தமிழ் இலக்கிய வடிவங்கள் நேற்று இன்று நாளை: ஓர் ஆய்வு-1 (அறிவியல் சிறுகதை)

சான்றோர்களே அன்பர்களே,

இக்கருத்தரங்கில் இதுவரை முன்வைக்கப்பட்ட கட்டுரைகள் அனைத்தும் இன்றுள்ள இலக்கியப் படைப்புகளின் பல்வேறு நுட்பங்களைப்பற்றிப் பேசின . உண்மையில் இலக்கியநுட்பங்கள் என்னும் போது அவையெல்லாம் இலக்கிய வடிவங்களின் நுட்பங்களையே உத்தேசிக்கின்றன. எல்லாக் காலத்திலும் இப்படித்தான் இருந்துள்ளது, இலக்கிய விவாதங்கள் அனைத்தும் இலக்கிய வடிவம் சார்ந்த விவாதங்களே. இலக்கியப்படைப்பின் உள்ளடக்கம் சார்ந்த விவாதங்கள் உண்மையில் இலக்கியத்துக்கு அப்பாற்பட்ட தளங்களுக்கு நகர்ந்துவிடுவதுதான் வழக்கம். ஆக, இலக்கியத்தைப் பற்றிப் பேசுவதென்றால் இலக்கிய வடிவத்தைப்பற்றியே பேசமுடியும். ஆகவேதான் உருவவியலாளர்கள் இலக்கியம் என்றால் அதன் உருவமேயாகும் என்று வாதிட்டனர்.

ஆனால் இப்படி எதிர்வாதிடலாம், இலக்கிய வடிவங்களைப்பற்றிய விவாதம் என்பது ஒரு கருவியின் அல்லது கட்டிடத்தின் அல்லது ஒர் ஓவியத்தின் வடிவத்தைப்பற்றிய விவாதத்திலிருந்து எவ்வண்ணம் மாறுபடுகிறது ?அப்போது ஒன்று தெரியும், இலக்கியத்தில் புறவயமான மாறாத ஒரு வடிவம் உண்மையில் கிடையாது. ஓர் இலக்கியப்படைப்பு ஒருவருக்குக் கச்சிதமான ஒன்றாக இருக்கும், பிறிதொருவருக்கு வளவளப்பாக இருக்கும். ஒருவரை அது தைத்து ஊடுருவும், பிறிதொருவரைத் தொட்டு உதிர்ந்துவிடும். அதன் வடிவத்தை ஒருவர் அந்தரங்கமாகவே உணர முடிகிறது. அதைப்பற்றிப் புறவயமாக ஒன்றும் சொல்லமுடியாது. ஒரு இலக்கியப்படைப்பின் வடிவச்சிறப்பு இன்னது என்று எவரும் ‘காட்டி ‘ விட முடியாது, தன் மனப்பதிவையே சொல்ல முடியும். இன்றுகூட இலக்கியம் சார்ந்த அனைத்துக் கருத்துக்களும் கோட்பாடுகளும் நிரூபணதளத்துக்கு வெளியேதான் உள்ளன. அவை கருதுகோள்கள் மட்டுமே, பொது உண்மைகள் அல்ல, தகவல்கள் கூட அல்ல.

இலக்கியத்தில் உள்ள வரிவடிவம் அல்லது ஒலிவடிவம் அல்லது மின்வடிவம் அல்லது நுண்வடிவம் என்பது இலக்கியத்தை நிகழ்த்தும் ஒரு முகாந்திரம் மட்டுமே, உணவைப் பரிமாறும் தட்டுபோல. இலக்கியம் நிகழ்த்தப்பட்டுள்ள மொழியமைப்பானது தன்னளவில் எந்த சுயத்துவமும் இல்லாதது. அதை ஒருவர் வாசித்து அர்த்தப்படுத்தும்போதே அது இலக்கியம். வாசிக்கப்படாத எழுத்துக்களில் உள்ள இலக்கியம் இல்லாத இலக்கியமேயாகும். ஆகவே இலக்கியவடிவம் என்பது அகவயமானது, வாசிப்பில் உருவாகி வருவது. ழாக் தெரிதாவைச் சார்ந்து கட்டவிழ்ப்புத்திறனாய்வாளர்களில் ஒருசாரார் இக்கருத்தை ஆழமாக வலியுறுத்தியிருக்கிறார்கள். .

ஆனால் அவர்கள் சொல்வது போல இலக்கிய வடிவம் முற்றிலும் அகவயமானதா என்ன ? அப்படி என்றால் எந்த ஒரு படைப்பிலும் ஒரு வாசகன் பேரிலக்கியத்தை வாசிக்க முடியுமே. அது இலக்கியம் என்ற இயக்கத்தையே மறுப்பதாகிவிடுமே. அது உண்மை இல்லை. இன்றைய நவீனப் படைப்புகளில் பேரிலக்கியமாகக் கருதப்படும் சரவணன் சண்முகமணியின் ‘இடதுகால் நடனம்’ அற்புதமான வடிவநுட்பமும் அழகும் கொண்ட பெரும் படைப்பு என்பது பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. சாதாரணப் படைப்பு ஒன்றை எடுத்துக் கொண்டு அதை இப்படைப்புடன் ஒப்பிட முடியுமா என்ன ? ஆக இலக்கிய வடிவம் வடிவம் என்பது ‘கண்ணுக்குத்தெரியாதபடி’ புறவயமாகவும் இருந்துகொண்டுதான் உள்ளது. கட்டவிழ்ப்பாளர்களுக்கு எதிராகவே அனைத்து அக உருவகங்களும் ஏதோ ஒருவகையில் மூளையின் நரம்பமைப்புடன் தொடர்புடையவை என்ற நரம்பியல் குறைத்தல்வாதம் உருவாகி வந்தது

அப்படியானால் இலக்கியவடிவம் சார்ந்த விவாதங்கள் எதைப்பற்றி விவாதிக்கின்றன ? ஒரு வசதிக்காக இப்படி சொல்கிறேன், அவை இலக்கியம் என்ற நிகழ்வைப்பற்றி விவாதிக்கின்றன. ஒரு மொழிவடிவம் உருவாக்கப்படுவது ஒரு முனை. வாசிக்கப்பட்டுப் பொருள் கொள்ளப்படுவது மறுமுனை. இந்த நேர் எதிர் முனைகள் சந்திக்கும் புள்ளியில் அவ்வடிவம் நிகழ்கிறது. அந்நிகழ்வின் பல்வேறு சாத்தியங்களைப்பற்றிய விவாதமே இலக்கிய வடிவம் குறித்த விவாதம். அப்படியானால் இலக்கியவடிவம்குறித்த விவாதம் என்பது தொடர்புறுத்தலின் ஒரு கணம் குறித்தது மட்டுமே.

இதை மேலும் விரிவு படுத்துகிறேன். இலக்கிய வடிவ விவாதம் என்பது ஒரு மனிதமனதுக்கும் இன்னொரு மனித மனதுக்கும் இடையேயான தொடர்புமுறை குறித்தது. [மூளையைப்பற்றி நாம் எவ்வளவோ அறிந்த பினும் அதன் செயல்பாட்டை மனம் என்ற உருவகம் மூலமே சொல்ல முடிகிறது] அத்தொடர்பை நிகழ்த்துவதற்கு ஒரு சமூகம் உருவாக்கித்தரும் பல்லாயிரம் கலாச்சாரக் குறியீடுகள் மற்றும் அடையாளங்கள் பற்றியது. என்னுடையது உன்னுடையதாக ஆகி நம்முடையதாக ஆகும் விதம் குறித்தது. நானும் நீயும் நாம் என்ற பொதுவெளியில் எப்படி ஒருவரை ஒருவர் உருவாக்கிக் கொள்கிறோம் என்பதைப்பற்றியது.

மொத்தத்தில் வகுத்துச்சொல்லப்போனால் இலக்கிய வடிவ விவாதம் என்பது தனிமனிதர்கள் தங்கள சமூகமாக உருவாக்கிக் கொள்வதற்காகச் செய்யும் பல்வேறு தளத்திலான செயல்பாடுகளின் சாத்தியங்களைப் பற்றிய விவாதமாகும்.

**

நான் என் தலைப்புக்கு வருகிறேன். இங்கே பேசிய அனைவருமே இலக்கிய வடிவ நுட்பங்களை விவாதித்தனர். பல்வேறு படைப்புகள் எப்படி அந்நுட்பங்களை நிகழ்த்தின அல்லது நிகழ்த்தவில்லை என்பதைப்பற்றிப் பேசினர். நான் இவ்வடிவங்கள் சென்ற சில நூற்றாண்டுகளில் எப்படியெல்லாம் உருவாகி உருமாறி வந்துள்ளன என்பதைப்பற்றி பேசலாம் என்று எண்ணுகிறேன். ஒவ்வொரு இலக்கியப்படைப்பும் தன்னளவில் ஒரு வடிவ வளர்ச்சியை நிகழ்த்துகிறதென்றாலும் கண்ணுக்குத்தெரியும்படியான ஒரு வடிவ மாற்றம் பல நூற்றாண்டுகளுக்கு ஒருமுறைதான் காணக்கிடைக்கிறது. நான் ஆரம்பத்திலிருந்தே தொடங்குகிறேன்.

நமது கதைவடிவ இலக்கியப்படைப்புகளின் முதல் வடிவம் நாட்டார் மரபில் உள்ள ‘கதைப்பாடல்கள்’ என்று சொல்லலாம். இருபதாம் நூற்றாண்டில் நாட்டரியல் தோன்றி நாட்டார்பாடல்களை முறைப்படி தொகுத்து ஆராயத் தொடங்கியபோது நிறுவப்பட்ட கருத்து இது. தமிழைப்பொறுத்தவரை ஆறுமுகப்பெருமாள் நாடார், பேராசிரியர் நா வானமாமலை, கலாநிதி கைலாசபதி, பேரா. தெ லூர்து , பேரா சக்திக்கனல் , பேரா. பக்தவத்சலபாரதி , பேரா. அ கா பெருமாள் ஆகியோரை நாம் நாட்டாரியலுக்காக நினைவுகூர்கிறோம்.

நமது கதைப்பாடல்கள் பொதுவாக மூன்று வகைப்பட்டவை. வீரகதைப்பாடல்கள், தாய்தெய்வப்பாடல்கள், பலி வழிபாட்டுப்பாடல்கள். பெருவீரன் ஒருவனைப் பொது நினைவில் நிறுத்துவதன் மூலம் அவ்விழுமியத்தை மக்கள் மனதில் நிலைநாட்டும் பொருட்டு உருவானவை வீரகதைப்பாடல்கள். பொதுவாக கதைப்பாடல்களில் இவ்வகையே முதன்மையானவை, அதிகமானவை. மிகப்பிற்காலத்தில்கூட நாட்டார் மரபில் இவை உருவாகியபடியே இருந்துள்ளன. அ .கா. பெருமாள் பதிப்பித்த ‘தம்பிமார் கதை’, ‘இரவிக்குட்டிப்பிள்ளை போர்’ , சக்திக்கனல் பதிப்பித்த ‘அண்ணன்மார்சாமி கதை’ முதலியவை இதற்கு சிறந்த உதாரணங்கள். வீரகதைப் பாடலின் விரிவாக்கப்பட்ட வடிவமே வம்சகதைப்பாடல். வீரர்களின் பரம்பரை இதன் மூலம் நினைவில் உருவாக்கப்படுகிறது. ராமாயணம் மகாபாரதம் போன்ற இதிகாசங்கள் மட்டுமல்ல கந்தபுராணம் போன்ற பிற்கால நூல்களும் சுடலைமாடன் கதை போன்ற நாட்டார் புராணங்களும் இம்மரபைச்சேர்ந்தவைதான். சீவக சிந்தாமணி இவ்வகைப்பட்ட கதையே. இன்றுவரை நீளும் ஒரு அழியாத மரபு இது என்றால் நீங்கள் வியப்படையமாட்டீர்கள்.

இரண்டாவது கதைப்பாடல்முறை தாய்தெய்வங்களின் புகழைப்பாடுதல். ஆதியில் இது அன்னை தெய்வங்களைப் பாடுதலாக இருந்தது. தாய்மை என்பது நிலவளத்துடனும் படைப்புச்சக்தியுடனும் தொடர்புடையதாகக் கருதப்பட்ட புராதன காலகட்டத்தில் இது உருவானது என்று சொல்லலாம். பின்பு கன்னியராக இறந்தவர்கள், அருங்கொலை செய்யப்பட்ட பெண்கள் ஆகியோரைப்பாடுதலும் இதில் சேர்த்துக்கொள்ளப்பட்டது. இம்மரபு சமீபகாலம் வரை தமிழ்நாட்டில் வலிமையுடன் இருந்துள்ளது. வீரகதைப்பாடலைத் தந்தைமைய சமூகத்தின் குரலாகவும் தாய்வழிபாட்டுப் பாடலைத் தாய்மைய சமூக அமைப்புடனும் தொடர்பு படுத்தலாம். இவற்றில் எது முந்தையது என்பது முடிவிலா விவாதப்பொருள். சிலப்பதிகாரம் தாய்வழிபாட்டு மரபைச் சேர்ந்ததே என்பேன். நல்லதங்காள் கதையையும் இதில் சேர்க்கத்துணிவேன்.

வழிபாட்டுக்காகவும் பலிச்சடங்குகளுக்காக இயற்கைசக்திகளையும் கடவுள்களையும் வாழ்த்திப்பாடும் நாட்டார்பாடல்கள் அடுத்தவகை. இவை பொதுவாக துதிகள். இயற்கையின் நுட்பங்களையும் மர்மங்களையும் புரிந்துகொள்ளும் முயற்சியின் பகுதியாகவும் இயற்கை குறித்த ஞானங்களைப் பகிர்ந்துகொள்ளும் முறையாகவும் இயற்கையை சாந்திசெய்யும் சடங்குகளாகவும் இவை உருவாகி வளர்ந்தன. மழை, கடல், புயல் போன்ற பலவகையான இயற்கைக் கூறுகள் தெய்வ வடிவம் கொண்டது இப்பாடல்களின் வழியாகவே. புராதன குறவர்பாடல்களும் சரி, ரிக்வேதமும் சரி இவ்வகைப்பட்ட பாடல்களே. இம்மரபு பிறகு பக்திமரபாக மாறியது. இன்றும் தொடர்கிறது.

இம்மூன்று வகைக் கதைப்பாடல்களும் கலந்து உருவானவையே ஆரம்ப கால இலக்கியப்படைப்புகள் என்றால் அது மிகையல்ல. நமது சங்க இலக்கியப்பாடல்கள் வீரகதைப்பாடல்களின் வளர்ச்சி நிலைகள். ‘பாடாண்’ திணை நேரடியாகவே அதைச்சுட்டுகிறது. இதனடிப்படையிலேயே க. கைலாசபதி அக்காலகட்டத்தை வீரயுகம் என்று சொல்லத்துணிந்தார். அடுத்த கட்டத்தில் உருவான காப்பியங்கள் அல்லது காவியங்கள் பொதுவாக வீரகதைப்பாடல்கள் தாய்தெய்வப்பாடல்கள் ஆகியவற்றின் கலப்பின் விளைவாக உருவானவை. சிலப்பதிகாரம் மணிமேகலை சீவகசிந்தாமணி குண்டலகேசி நீலகேசி முதலியவற்றை உதாரணமாகச் சொல்லலாம். இங்கு குறிப்பிட்டுச்சொல்லவேண்டிய ஒன்று நம் மரபில் வீரகதைப்பாடல்களுக்கான இடம் இரண்டாம்பட்சமானதே, நாம் தாய்தெய்வப் பாடல்களுக்கே அதிக இடம் அளித்திருக்கிறோம் என்பது. நாம் அடிப்படையில் தாய்மைய சமூகமாக இருந்திருக்கலாம். கம்பராமாயணம் ராமனின் வீரத்துக்கா சீதையின் துக்கத்துக்கா அதிக இடம் அளித்தது என்ற கேள்வி எளிதில் பதில் சொல்லத்தக்கதல்ல.

காப்பியங்களுக்குப் பின் நம் புனைகதைவடிவில் புராணங்கள் பெரும்செல்வாக்கு செலுத்தின. புராணங்களை நாம் பலிவழிபாட்டுக் கதைப்பாடல்களையும் வீரகதைப்பாடல்களையும் கலந்து செய்யப்பட்டவை என்று உருவகிக்க முடியும். அவை இலக்கிய நயத்தில் பொதுவாகக் காவியங்களின் நிழல்கள் போலக் காணப்பட்டன.

இவற்றின் அடுத்தநிலையாகவே நாம் நவீன காலகட்டத்துக்கு வருகிறோம். தாளும் அச்சும் சேர்ந்து உருவாக்கிய இலக்கிய காலகட்டத்தையே பொதுவாக நவீனகாலகட்டம் என்கிறோம். நவீனப் புனைகதை தமிழில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் தொடங்கியது. சி சுப்ரமணிய பாரதி, மாயூரம் வேதநாயகம் பிள்ளை, ராஜம் அய்யர், மாதவையா ஆகியோரை முன்னோடிகளாகச் சொல்வது மரபு. இவர்களின் ஆக்கங்களிலும் மரபின் சரடுகள் நீண்டுவருவதை நாம் காணலாம். பாரதியின் ‘பாஞ்சாலி சபதம்’ [1918] சிலப்பதிகாரத்தின் மறுவடிவமல்லவா ? ‘பிரதாப முதலியார் சரித்திரம்’ [1876] ஒரு வகை வீரகதைப்பாடல். ‘கமலாம்பாள் சரித்திரமும்’ [1893] ‘பத்மாவதி சரித்திர'[1898]மும் நம் மரபில் ஏற்கனவே உள்ள கன்னியம்மன், பத்தினியம்மன் கதைகளின் நீட்சிநிலைகள்தாமே ? கல்கி. சாண்டில்யன் நாவல்களில் உள்ள வீரகதைப்பாடல் தன்மையை விளக்கவேண்டியது இல்லை.

 

[மேலும்]

முந்தைய கட்டுரைதாகமும் தயக்கமும்
அடுத்த கட்டுரைதமிழ் இலக்கிய வடிவங்கள் நேற்று இன்று நாளை: ஓர் ஆய்வு-2