July 2008 :
பார்வதிபுரம் வழியாக வரும்போது நெடுஞ்சாலையை ஆக்ரமித்து போடப்பட்ட பழக்கடையில் ஒரு கூடை நாவற்பழங்கள் இருப்பதைக் கண்டேன். அருகே சென்றபோது கடையில் ஆளில்லை. ஒரு நாவல் பழத்தை எடுத்து வாயில்போட்டேன். சுமாரான பழம்தான். ”வாங்கலாம் அப்பா” என்றான் அஜிதன். ”இருடா ஆள் வரட்டும்” என்றேன்.
கடைஆள் சாலைக்கு அப்பால் சிறுநீர் கழிக்கச் சென்றிருந்தார். எங்களைப் பார்த்ததும் வந்தார்.”பழம் என்ன விலை?”என்றேன். ”சார், கிலோ நூறு ரூபாய்”என்றார். அதிர்ந்துவிட்டேன். அப்படியானால் நூறுகிராம் பத்து ரூபாய். பத்துபழம்கூட நிற்காது. ஒருபழமே ஒரு ரூபாய்க்கு மேல். நாவற்பழம் என்பது பெரும்பாலும் கொட்டைதான். அதன் மேல்பூச்சுதான் தின்பதற்கு.ஒரு ரூபாய்க்கு வாயில் ஒருமுறை புரட்டுவதற்குக் கூட ஒன்றும் இருக்காது. ”எடுக்கவா?” என்றார். ”வேண்டாம்…”என்று வந்துவிட்டேன்.
வரும் வழியெங்கும் புலம்பியபடியே வந்தேன். சின்னவயதில் நாங்கள் தோட்டங்களில் நாவல் பழங்கள் பொறுக்கச் சென்றால் கைகொள்ளாமல் தான் திரும்பிவருவோம். குமரி மாவட்டத்தில் அது எந்தவிதமான விலையும் இல்லாத பழம். இங்கே ஒரு ஊரில் பெயரே நாவல்காடுதான். நாஞ்சில்நாடன் ஊருக்குப்போகும் வழி. காடுகளில் நாவல்மரங்கள் காடுபிடித்துக் கிடக்கும். ஒருகிலோவுக்கு மேல் வரக்கூடிய கூறு ஒரு ரூபாய் என்று சமீபத்தில் கூட கிராமங்களில் விற்கப்படுவதைக் கண்டிருக்கிறேன். ”என்ன அநியாயம் இது” என்றேன் ”சும்மா வாப்பா…நீ வாங்கல்லை…பைசா உள்ளவன் வாங்கிட்டுபோறான்..ஏன் புலம்பறே?” என்றான் அஜிதன்.
எங்கள் வீட்டிலிருந்து மூன்று கிலோமீட்டர் சென்றால் பாறையடி மலையடிவாரம் வரும். அங்கிருந்து மேலே காடுகள் வானில் தொங்கி கிடக்கும் வேளிமலை. நாங்கள் வரும்போது அப்பகுதியே வயல்வெளியாக கிடந்தது. இரண்டு எஞ்சீனியரிங் கல்லூரிகள் வனநிலத்தை நூறாண்டு குத்தகைக்கு எடுத்து கட்டப்பட்டன. எட்டு வருடங்களில் அப்பகுதியே நகர விரிவாக்கமாக ஆகிக் கொண்டிருக்கிறது. சென்ட் லட்ச ரூபாய். ஆனாலும் இப்போதும் நடப்பதற்கு ஏற்ற இடம்தான். ஆனிமாதத்தில் காற்று பிடித்து தள்ளும்படி இருக்கும்
மாலை நடக்கச் சென்றபோது நேசமணியை பார்த்தேன்.எங்களுக்கு அவ்வப்போது சின்ன வேலைகளுக்கு வருவார். ”வயலு சோலி இல்லியா?” என்றேன். ”அருவு வெட்டுத சோலிகள் இப்பம் தொடங்குமில்லா.. இப்பம் ஞாறு பிடுங்கல் நடக்குவு”என்றார். ”அப்பம் பின்ன சோலி?” ”சோலிகள் பலதுண்டு சார். நேற்று மலைக்கு செண்ணு ஒரு கடவம் நாவல்பழம் கொண்டு வந்து வித்தேன்…அது அண்ணைக்குள்ள பாடாப் போச்சு…” என் மூளை நரம்பு லேசாகப் புரண்டது ”எம்பிடுவச்சு குடுத்தேரு?” என்றேன். ”சொமடுக்கு இருநூறு கேட்டேன்…குடுக்கமாட்டேண்ணு சொல்லிப்போட்டாவ..பின்ன நிண்ணு பெசகி நூற்றம்பதுக்கு குடுத்தேன்…சாயகுடிக்குள்ள வகையாட்டு மேலே ஒரு இருவது ரூவா”
நான் பிரமித்து நின்றுவிட்டேன். அந்தக்கூடை இருபதுகிலோவுக்கு மேல் இருக்கும்… கிட்டத்தட்ட இருபது மடங்கு அதிக விலை. ”வாங்கப்போனாக்க கொள்ள வெலையில்லாவே சொல்லுகான்?”என்றேன். ”..சொல்லுவானுக…அதுபின்ன கடையெல்லாம் அவனுகளுக்க ஏற்பாடுல்லா…அவன் சொன்னதுதான் வெலை” என்றார் நேசமணி ”…வரட்டா சார்? பட்டி சும்மா கெடக்கா?” அவருக்கு லாப்ரடார் நாய் மிருகங்களில் ஒரு தேவதூதன் என்ற எண்ணம்.
வில்லுக்குறியில் ஒரு தேங்காய் மூன்றுரூபாய் வீதம் மொத்தமாக எடுக்கப் படுகிறது. பத்து கிலோமீட்டர் தள்ளி நாகர்கோயிலில் ஒன்பது ரூபாய். பலசரக்கு கடையில் பத்து ரூபாய். அதைவிடக் கொடுமை, முருங்கைக்காய். ஒரு ஆள் சுமக்கும் அளவுக்கு முருங்கைக்காய்க்கு சமயங்களில் இருபது ரூபாய் விலை இருக்கும். எப்படியும் ஐநூறு காய் நிற்கும். ஒருகாய் இரண்டுரூபாய்க்கு விற்பார்கள். தமிழ்நாட்டில் விற்கப்படும் எந்த வேளாண்விளைபொருளுக்கும் விலையே கிடையாது.
விவசாயி என்ன செய்ய முடியும்? அவனே கொண்டுபோய் தெருத்தெருவாகக் கூவி விற்கலாம். ஆனால் முடியாது. தெருவியாபாரிகள் ஒரு குழு. அவர்கள் அவனை அப்படி விற்க விடமாட்டார்கள். தெருவோரம் விற்பது கனவிலும் நடக்காது. கடைகள், தெருவோர ஆக்ரமிப்புக் கடைகள், தலைச்சுமை வணிகர்கள், கூடைக்காரர்கள் அனைவருமே இங்கே ஒரே பெரிய அமைப்பின் உறுப்பினர்கள். விலையை அவர்கள்தான் தீர்மானிப்பார்கள், வாங்கும் விலை விற்கும் விலை இரண்டையும். வேறு எவரும் உள்ளேயே நுழைய முடியாது. வேறுவழியே இல்லை இவர்களிடம் தான் விற்றாக வேண்டும். வடசேரி கனகமூலம் சந்தை, ஒழுகினசேரி அப்டா மார்க்கெட் எல்லாமே இவர்கள்தான். மிகமிகக் கறாராக நடத்தப்படும் ஒரு பெரும் ‘சிண்டிகேட்’ இது.
அவர்கள் சிலரிடம் அந்தரங்கமாகப் பேசியிருக்கிறேன்.ஆச்சரியம் ஊட்டும் பல தகவல்கள் உண்டு. காய்கறி, மளிகை இரண்டிலும் இந்த சிண்டிகேட்டுகள் உள்ளன. இந்த சிண்டிகேட்டுகள் முறைப்படி நிர்வாகம் செய்யப்படுகின்றன.
தென் தமிழக நகரங்களில் சுவர்கள் முழுக்க ரவுடிகளின் சுவ்ரொட்டிகளைக் காணலாம். நற்பணி மன்றங்கள் என்றபேரில் அவர்களை வாழ்த்தியும், பிறந்தநாள் கொண்டாடியும், கொல்லப்பட்டவர்களுக்கு நினைவஞ்சலி செலு த்தியும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுக்கொண்டே உள்ளன. ஒவ்வொரு ஊர்களுக்கும் அவ்வூருக்கான ரவுடிகள் உண்டு. உண்மையில் அவர்கள் அரசியலை தீர்மானிக்கும் இடத்தில் உள்ளனர். ஆகவே அரசே அவர்களுக்கு கைகட்டி நிற்கிறது. மிக அபூர்வமாக அவர்கள் அரசால் களையெடுக்கப்படுகிறார்கள். அதற்கான காரணங்கள் நிழலானவை. இந்த மளிகை , காய்கறி சிண்டிகேட்டுதான் இவர்களை வளர்த்து பயன்படுத்திக் கொள்கிறது. நடைபாதை வணிகரிடம் கேட்டால் தன் லாபத்தில் கணிசமான பகுதி இந்த சிண்டிகேட்டுக்கான கப்பமாகவே செல்கிறது என்கிறார்கள். அதில் அரசியல்வாதிகள் வரை பணம்போகிறதாம். இருக்கலாம்.
தமிழகம் முழுக்க இதுவே இன்றுள்ள நிலை. விவசாயிகள் இந்த வணிகர்குழுக்களால் மூச்சு திணறச்செய்து கொல்லப்படுகிறார்கள் என்பதே உண்மை. நேரடியாகவே கேரள வணிகர்களுக்கு விற்பனைசெய்ய வாய்ப்புள்ள தென்குமரிமாவட்ட வாழை விவசாயிகள் மட்டும் இந்த இக்கட்டில் இல்லை. அவர்கள் லாபகரமாகவே இயங்குகிறார்கள்.
உழவர் சந்தை போன்ற அமைப்புகளை உருவாக்கி இந்த அமைப்பை உடைக்க முந்தைய கட்டத்தில் இப்போதைய முதல்வர் முயன்றார். நான் அப்போது சில மாதங்களில் வடசேரிச் சந்தையின் நாலில் ஒருபகுதி விலையில் அருகே உள்ள உழவர் சந்தையில் காய்கறி வாங்கியிருக்கிறேன்.ஆனால் ஒருவருடத்திற்குள் சிண்டிகேட் பெரும்பாலான உழவர் சந்தைகளைக் கைப்பற்றிவிட்டது. கோவை, பொள்ளாச்சி போன்ற சில ஊர்களில் மட்டும் விவசாயிகள் ஒன்றுபட்டு உழவர் சந்தைகளை நடத்தினர். செல்வி ஜெயலலிதா அவர்கள் ஆட்சிக்கு வருவதற்காக சிண்டிகேட்டுக்கு வாக்குறுதி அளித்ததன்படி வந்ததுமே எல்லா உழவர் சந்தைகளும் செயலிழக்கச் செய்யப்பட்டன.
அதன்பின் மு.கருணாநிதி அவர்கள் பதவிக்கு வந்தபின் உழவர் சந்தைகளை மீண்டும்செயல்படச் செய்ய எதுவுமே செய்யவில்லை. அதற்கும் சிண்டிகேட் பெரும் கட்டணம் கட்டியதாகச் சொல்கிறார்கள். சமீபத்தில் காலையில் உழவர் சந்தைக்குள் நுழைந்தேன். வடசேரி சந்தையின் கிளையான இரண்டு கடைக்காரர்கள் மட்டுமே லாரியில் வந்த காய்களை விற்றுக் கொண்டிருந்தார்கள். உழவர்கள் உள்ளே நுழைந்தாலே அடி உறுதி என்றார்கள். நானும் சொல்லேருழவன் ஆனதனால் அஞ்சிவிட்டேன்.
இந்த சிண்டிகேட்டை நமது எந்த ஆட்சியாளரும் உடைக்கப்போவதில்லை. உடைக்கும் வலிமை உள்ள ஒரே சக்தி ரிலையன்ஸ். பல இடங்களில் அவர்கள் சிண்டிகேட்டை கலகலக்கச் செய்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. ஆரம்பத்தில் அலட்சியமாக இருந்த சிண்டிகேட் இப்போது பயப்படுகிறது. பணத்தை அள்ளி இறைக்கிறது. நான் நேரடியாகப் பேசிய போது அறியவந்தது வியப்பூட்டுகிறது. விவசாய விளைபொருட்களுக்கு எட்டு மடங்குவரை ரிலையன்ஸ் விலை அளிக்கிறது!
சிண்டிகேட்டின் பணமே நம் அரசியல்வாதிகளை ரிலையன்சுக்கு எதிராக கொதித்தெழச் செய்தது. பட்டினியால் வாடும் சிறு வியாபாரிகளைப்பற்றி இதழ்களை கட்டுரைகள் வனையச் செய்தது. ஏழை வணிகர்களின் வயிற்றில் அடிக்கும் முதலாளிகளுக்கு எதிராக நக்சலைட் உட்பட எல்லா தோழர்களையும் பொங்கிப் போராட வைத்தது. அரசுப் பாதுகாப்பு கிடைக்காமல் ரிலையன்ஸ் தன் திட்டங்களை மெல்ல சுருக்கிக் கொண்டது என்று என் இதழியல் நண்பர்கள் சொன்னார்கள். குறிப்பாக ஊட்டி, மதுரையில் அவர்கள் நிறுவ இருந்த கொள்முதல் நிலையங்கள் நிறுத்தம் செய்யப்பட்டன.
வழக்கம்போல நம் ஆட்கள் ஆளுக்கொரு காரணம் சொன்னார்கள். நிலையன்ஸ் வடக்கத்தி நிறுவனம் என்று திராவிட கட்சிகள். அது பெருமுதலாளியின் அமைப்பு என்று கம்யூனிஸ்டுகள். என் தி.க.நண்பர் சொன்னார், ”ரிலையன்ஸெல்லாம் பார்ப்பான் கம்பெனி சார்”.சுத்தம்!