2. மணிலால்
‘தன் பிள்ளைகள் சிறந்த வணிகர்களாக அல்லது அதிகாரிகளாக ஆகவேண்டும் என்று நினைக்காத எழுத்தாளர்கள் எவரேனும் உண்டா?’ என்று ஒருமுறை என்னிடம் ஓரு மூத்த எழுத்தாளர் கேட்டார். அது உண்மைதான். தமிழ்நாட்டின் ஒவ்வொரு எழுத்தாளனின் கனவும் திட்டமும் அப்படித்தான் இருக்கிறது. ஏனென்றால் அவன் எழுத்தாளன் என்ற இடத்தைப்பற்றி உள்ளூரப் பெருமிதம் கொள்ளவில்லை. எழுத்தாளன் ஆவது தன் வாழ்க்கையின் வெற்றி என்று எண்ணவும் இல்லை. அவனை அந்த இடத்தில் தமிழ்ச்சமூகம் வைத்திருக்கிறது.
ஆனால் நடிகர்கள் தங்கள் பிள்ளைகளை நடிகர்களாக ஆக்குகிறார்கள்.இசைக்கலைஞர்கள் தங்கள் பிள்ளைகளை இசைக்கலைஞர்கள் ஆக்குகிறார்கள். அரசியல்வாதியின் பிள்ளைகள் அரசியல்வாதிகளேதான். வணிகர்களும் அதிகாரிகளும் அவ்வாறே எண்ணுகிறார்கள். ஒருவர் தன் பிள்ளை என்ன ஆகவேண்டும் என நினைக்கிறார் என்பதே அவர் உள்ளூர எதை வாழ்க்கையின் சிறந்த நிலை என்று நினைக்கிறார் என்பதற்கான சான்று.
நேரு தன் பெண்ணை பெருஞ்செலவில் உயர்கல்வி கற்கச்செய்தார். அரசியல் பயிற்சி அளித்து அதிகாரத்தின் மையத்தில் கொண்டுவந்து நிறுத்தினார். பட்டேல் தன் மகனை அரசியல்வாதியும் வணிகருமாக ஆக்கினார். சாஸ்திரியும் மகனை அரசியலதிகாரத்திற்குள் கொண்டுவந்தார். இந்தியாவின் கணிசமான அரசியல்வாதிகள் தங்கள் குழந்தைகளை மிகச்சிறந்த உலகியல் கல்வி அளித்து பதவியிலும் செல்வத்திலும் சாத்தியமான உயர்நிலைகளுக்குக் கொண்டுவந்திருக்கிறார்கள். கோடிக்கணக்கில் சொத்து சேர்த்து வைக்கும் இன்றைய அரசியல்வாதிகளைச் சொல்லவில்லை. பொதுவாழ்க்கையில் நேர்மையையும் உண்மையான இலட்சியவாதத்தையும் கடைப்பிடித்த அரசியல்வாதிகள் கூட அதைத்தான் செய்தார்கள்
எந்தபுரட்சியாளராவது தன் பிள்ளைகளை புரட்சிக்குக் கொண்டு வந்திருக்கிறாரா? மிக அபூர்வம். இடதுசாரிகளில் சிலர் செய்திருக்கிறார்கள் அவ்வளவுதான். ஆனால் தன் நெறியே உயர்ந்தது என நம்பி அதை தன் பிள்ளைகளுக்கும் கொடுத்தார் காந்தி. அவரது பிள்ளைகளில் அவருடன் வளர்ந்த மூன்றுபேருமே சோடைபோகவில்லை என்பதே வரலாறு. தன் கனவுகளை, தன் நெறிகளை தன் பிள்ளைகளுக்கு அளித்தார். அவர்களை சுதந்திரமாக வளரவும் விட்டார். அவர்கள் தன்னை நிராகரிக்கும் உரிமையை, தன்னைக் கண்டிக்கும் உரிமையைக்கூட அளித்தார்.
உண்மையில் இந்தியாவில் எந்த அரசியல்வாதிக்காவது பெருமைப்படக்கூடிய வாரிசுகள் உண்டு என்றால் அது காந்திக்கு மட்டுமே. மூன்றாம் தலைமுறையிலும் யாருக்காவது பெருமைசேர்க்கும் வாரிசுகள் இருக்கிறார்கள் என்றால் அதுவும் காந்திக்கு மட்டுமே. [ஏன் களங்கம் சேர்க்காத வாரிசுகளே காந்திக்கு மட்டும்தான் இருக்கிறார்கள் என்றுகூட படுகிறது!] காந்தியின் அபாரமான ஆளுமை அவர்களை மறைத்தது. அவர்கள் செயல்பட்ட தளம் இந்தியாவில் அதிகமும் அறியப்படவில்லை என்பதும் அவர்களை மறுத்தது.
அனைத்தையும் விட மேலாக அவர்கள் இந்திய ஜனநாயகத்தின் விளம்பர-அதிகார அரசியலுக்கு வரவேயில்லை என்பதும் அவர்களை மறைத்தது. ஆகவே இன்று வாசிக்கும்பழக்கம் கொண்டவர்கள்கூட காந்தியின் மகன்களை அறிவதில்லை. அரசல்புரசலாகக் கேட்ட ஹரிலாலின் கதையை வைத்தே காந்தியின் பிள்ளைகள் எல்லாருமே காந்தியால் சீரழிக்கப்பட்டார்கள் என்ற பிம்பத்தைச் சுமந்தலைகிறார்கள். மூத்த தமிழ் எழுத்தாளர்கள்கூட பலர் அப்படி எழுதியிருக்கிறார்கள்.
உண்மையில் காந்தியின் மூன்று மகன்களுமே தங்கள் அளவில் மாமனிதர்கள். அவர்களின் அடையாளம் காந்தியின் மகன்கள் என்பதல்ல. சொல்லப்போனால் அதுவே அவர்களை மறைத்தது. அவர்களுக்கு காந்தி எந்த ஒரு சமூக பீடத்தையும் அளிக்கவில்லை. தங்கள் சொந்த அறிவுத்திறனால்,ஆன்ம வல்லமையால் அவர்கள் எழுந்து வந்தார்கள். சமரசமில்லாத போராளிகளாக, புரட்சியாளர்களாக, வாழ்ந்து மறைந்தார்கள். காந்தியை போகிறபோக்கில் மட்டம்தட்டும் நம்மவர்கள் அந்த மாமனிதர்களைத்தான் உண்மையில் சிறுமைசெய்கிறார்கள்.
இந்திய அரசியலில் அதிகாரத்தைக் கைப்பற்றிய நேருபரம்பரை அரசுவிளம்பரம் மற்றும் அரசியல்விளம்பரம் மூலம் நமக்கு தெரியவருகிறது. அவர்களுக்கு அவர்கள் பரம்பரை அடையாளத்தால் அதிகாரத்துக்கு வந்தார்கள், அதிகாரத்தை கையாண்டார்கள் என்பதற்கு அப்பால் எந்த தனித்தகுதியும் இல்லை என்பதே உண்மை.
சிந்தித்துப்பார்த்தால் நேருவின் மகள் என்பதற்கு அப்பால் இந்திராவுக்கு என்ன தனிப்பட்ட அறிவுத்திறன் இருந்தது? மிக மோசமான மாணவியாக இருந்தவர் அவர். நேருவால் அரசியலில் பொதிப்பாதுகாக்கபப்ட்டு அறிமுகம்செய்யபப்ட்டவர். இந்தியப்பிரதமராக ஒரே ஒரு நல்ல உரையைக்கூட அவர் ஆற்றியதில்லை. ஒரே ஒரு நல்ல பேட்டியைக்கூட கொடுத்ததில்லை. ஒரு நிர்வாகக் குழுவை உருவாக்கி கூடவே வைத்திருந்தார் அவ்வளவுதான்.
ராஜீவ்காந்தி இந்திராவின் மகன் மட்டுமே. ராகுல் ராஜீவின் மகன், அதற்குமேல் ஏதுமில்லை. இந்திரா மற்றும் அவரது மகன்களின் கல்வித்தகுதிகூட மிகச்சாதாரணம். தங்களுக்கான தனித்திறன் என எதையும் அவர்கள் வெளிப்படுத்தவில்லை. சொல்லப்போனால் தகுதியின்மையையே பலசமயம் வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
காந்தி தன் பிள்ளைகளை அதிகார அரசியல்வாதிகளாக, அதிகாரிகளாக, வணிகர்களாக ஆக்க எண்ணவேயில்லை. தன்னைப்போன்றே சமரசமில்லாத சமூகப்போராளிகளாக அவர்களும் வரவேண்டுமென விரும்பினார். அவர்களை தனது ஆசிரமச் சூழலில் வளர்த்தார். அவர்களுக்கு கல்விகற்பிக்கும் பொறுப்பை தன் பரபரப்பான அரசியல் செயல்பாடுகள் நடுவேயும் தானே எடுத்துக்கொண்டார். அவர்களிடம் இடையறாது உரையாடி தன் இலட்சியவாதத்தை அவர்களுக்கும் அளித்தார்.
மணிலால் காந்தியின் இரண்டாவது மகன். 1892ல் காந்தி பாரிஸ்டர் படிப்பை முடித்து வந்த பின் பிறந்தவர். சிறுவயதிலேயே அவர் காந்தியால் தென்னாப்ரிக்காவுக்குக் கொண்டுசெல்லப்பட்டார். தந்தையின் அரவணைப்பில் வளர்ந்தவர் மணிலால். சத்திய சோதனையில் காந்தி மணிலாலைப்பற்றி எழுதும் ஒரு நிகழ்ச்சி சிறுவயதில் மணிலால் எப்படி உருவானார் என்பதற்கான ஆதாரம்.
மணிலாலுக்கு சிறுவயதில் டை·பாயிட் வந்தது. காந்தி அப்போது ஆங்கிலக் கல்வியிலும் ஆங்கில மருத்துவத்திலும் நம்பிக்கை இழந்திருந்தார். ஆகவே மணிலாலுக்கு அவரே சிகிழ்ச்சை அளிக்க விரும்பினார். ஆங்கில மருத்துவர் அதைக் கடுமையாக எதிர்த்தார். காந்தி மணிலாலின் கருத்தைக் கேட்டார். சிறுவனாக இருந்தாலும் சிந்திப்பவராக இருந்த மணிலால் தந்தையிடம் ‘எனக்கு உங்களிடம் நம்பிக்கை இருக்கிறது. என்ன ஆனாலும் நீங்களே மருத்துவம் பாருங்கள்’ என்றார்
காந்தி தான் நம்பி வந்த நீர் சிகிழ்ச்சையை மணிலாலுக்கு ஆரம்பித்தார். ஆரம்பத்தில் பலன் தெரியவில்லை என்பதுடன் காய்ச்சல் அதிகமாகவும்செய்தது. இடைவிடாத பிரார்த்தனையுடன் சிகிழ்ச்சையை தொடர்ந்த காந்தி ஒருகட்டத்தில் புத்திரபாசத்தால் தடுமாறினார். மணிலாலிடம் வேண்டுமென்றால் சிகிழ்ச்சையை நிறுத்தி ஆங்கில மருத்துவம்செய்யலாமா என்று கேட்டார்.ஆனால் தனக்கு காந்திமேல் நம்பிக்கை உள்ளது என உறுதியாகச் சொல்லிவிட்டார் மணிலால். காந்தி இரவெல்லாம் பிரார்த்தனை செய்தபடி ஈரத்துணிகளால் அவரை போர்த்தி சிகிழ்ச்சைசெய்தார். மணிலால் பிழைத்துக்கொண்டார்.
மணிலால் இதழ் அலுவலகத்தில்
ஆங்கில முறை கல்வியில் நம்பிக்கை இழந்த காந்தி தானே வடிவமைத்த கல்வியை பிள்ளைகளுக்கு அளித்தார். எழுத்துக்கல்விக்கு அப்பால் பொது அறிவு, மத அறிவு ஆகியவற்றையும் தர்க்கபூர்வமாகச் சிந்திக்கும் பயிற்சியையும் அளித்தார். வேளாண்மை செய்யவும் அவசியமான இயந்திரங்களை பழுதுபார்க்கவும் கற்றுக்கொடுத்தார். எல்லா வேலைகளையும் கூச்சப்படாமல் செய்யவேண்டும் என்பதும் சொந்தவேலைகளை முழுக்க தானே செய்துகொள்ளவேண்டும் என்பதும், உடலுழைப்பு இல்லாமல் ஒருநாள்கூட தாண்டிச் செல்லக்கூடாது என்பதும் காந்தியின் கல்விக்கோட்பாடு.
குழந்தைகள் தாங்களே நூல்களை வாசிக்க ஆரம்பித்த பின்னர் காந்தி அவர் தினமும் போகும் மூன்றுமணிநேர நடைப்பயிற்சிக்கு அவர்களைக் கூட்டிச்செல்வார். அவர்கள் வாசித்ததை அவர்களே விளக்க வைப்பார். காந்தி அவர்கள் சொன்னதற்கெல்லாம் எதிராக வாதிட்டு அவர்கள் உறுதியான சிந்தனைப்புள்ளியை வந்தடையும்வரை விடமாட்டார் என மணிலால் சொல்லியிருக்கிறார்.
மணிலால் கைதாகிறார்
காந்தி அபாரமான கண்டிப்பு கொண்ட ஆசிரியர். பத்து வயதில் காந்தியுடன் ஐந்துகிலோமீட்டர் நடைபயணம் சென்றுகொண்டிருந்த போது
தன் மூக்குக் கண்ணாடியை மறந்து வைத்துவிட்டார் மணிலால். காந்தி அதைக் கண்டு விசாரித்தார். நம் பொருளாதார நிலை இன்னொரு கண்ணாடி வாங்கும் தகுதி கொண்டதல்ல. ஆகவே நீ நடந்துசென்று அந்த கண்ணாடியை எடுத்துவா என அனுப்பினார். மேலும் ஐந்து கிலோ மீட்டர் நடந்து சென்று கண்ணாடியை எடுத்துவந்தார் மணிலால்.
காந்திசொனனர் ‘பொதுவாழ்க்கையில் இருப்பவனுக்கு மறதி இருக்கலாகாது. சின்ன மறதி பெரிய மறதிகளை உருவாக்கும்’ மணிலாலுக்கு அப்போது பத்தே வயதுதான். ஆனால் பல்லாயிரம் பேரின் வாழ்க்கைக்குப் பொறுப்பேற்று போராடவேண்டிய மனிதராக மட்டுமே காந்தி அந்தக்குழந்தையை பார்த்தார். அவர் செய்யும் சிறிய தவறு பல்லாயிரம் பேரின் வாழ்க்கையை பாதிக்கும் என எண்ணினார்
காந்தி தன் மகனை எதிர்காலத்து போராளி ஒருவரை உருவாக்கும் கோணத்திலேயே வளர்த்தார். பொது ஊழியன் பலவீனங்களுக்கு அப்பாற்பட்டவனாக இருக்க வேண்டும் என்றும், அவனுக்கு சொந்த வாழ்க்கை என ஒன்று இருக்கக் கூடாது என்றும் நம்பியவர் அவர். அதை தன் சீடர்கள் அனைவரிடமும் அவர் கடைப்பிடித்தார். அவரக்ளை காந்தி கடுமையான சோதனைகளுக்கு ஆளாக்கியிருக்கிறார். அவர்களில் பலர் கண்ணீருடன் காந்தியை விட்டு விட்டு ஓடி போய் மீண்டும் அவரிடம் திரும்பி வந்திருக்கிறார்கள்.
மணிலால் , மனைவி சுசீலா மஷ்ருவாலா
மணிலாலையும் காந்தி அவ்விதமே நடத்தினார். பீனிக்ஸ் ஆசிரமத்தில் மணிலால் ஒரு இளம்பெண்ணை முத்தமிட்டதை அறிந்த காந்தி மணிலாலை தண்டிப்பதற்காக நான்குநாள் உண்ணாவிரதம் இருந்தார். பண மோசடி வழக்கில் சிக்கி குடிகாரராக அலைந்த ஹரிலாலுக்கும் தனக்கும் எந்த உறவும் இல்லை என்று காந்தி அறிவித்திருந்த நிலையில் மணிலால் ஹரிலாலுக்கு ரகசியமாகப் பணம் கொடுத்ததை அறிந்த காந்தி சினம் கொண்டு மணிலாலை சென்னைக்குச் சென்று ஏதேனும் உடலுழைப்பு வேலை செய்து அந்தப்பணத்தை ஈட்டி திருப்பித்தந்தபின் தன் முன் வரும்படிப் பணித்தார். மணிலால் கையில் பைசா இல்லாமல் சென்னைக்கு வந்து சென்னைதெருக்களில் சுமைதூக்கியாக வேலைசெய்து பணம்சேர்த்தபின் திரும்பி சென்றார்.
மணிலால் தென்னாப்ரிக்காவைச் சேர்ந்த ·பாத்திமா கூல் என்ற இஸ்லாமியப்பெண்ணை மணம் புரிய விரும்பியதை காந்தி ஏற்கவில்லை. மணிலால் இந்திய, இந்துமுறைப்படி வளர்க்கப்பட்டவர் என்பதனால் அது சிக்கலையே உருவாக்கும் என காந்தி எச்சரித்தார். பின்னர் வேறுபல இந்து முஸ்லீம் மணங்களை அங்கீகரித்த காந்தி மணிலாலை ஒரு போராளியாக மட்டுமே கண்டமையால்தான் இந்த தடையை விதித்தார். மணிலால் பிரம்மசாரியாக இருக்கவேண்டும் என விரும்பி வலியுறுத்தினார் காந்தி. ஆனால் காந்தியை மீறி மணிலால் கஸ்தூர்பாயின் ஆசைப்படி சுசீலாவை மணந்தார்.
மணிலாலை காந்தி நடத்திய விதம் இன்றைய நவீன ஐரோப்பிய முறைகளுக்கு ஒவ்வாதது. சிலருக்கு அது கசப்பையும் அளிக்கலாம். ஆனால் எத்தனையோ நூற்றாண்டுகளாக இந்து,பௌத்த,சமண மதங்களில் உள்ள குருசீட உறவில் இருந்து வந்த முறைதான் அது. தன் மாணவனை கடுமையான சோதனைகள் வழியாக கடந்துவரச்செய்யும் குருநாதர்களை நாம் மீண்டும் மீண்டும் காணலாம். இன்றும் வரை இது தொடர்கிறது. நம்மில் பலரும் இன்றும் நினைத்திருக்கும் ஆசிரியர்கள் பலர் நம்மை நடத்திய விதமும் இதுதான். மேலைநாட்டு கல்விமுறை சுதந்திரம் என்ற விழுமியத்தை அடிப்படையாகக் கொண்டது. இங்குள்ளது சகிப்பதன் மூலம் தாண்டிச்செல்வதை அடிப்பப்டையாகக் கொண்டது.
நாராயணகுருகுலத்திலும் இந்த முறை நீடிக்கிறது. நித்யாவின் வரலாற்றில் நடராஜகுரு என்னென்ன சோதனைகளை நித்யாவுக்கு அளித்தார் என்பதைக் காணலாம். காந்தி மணிலாலை சென்னைக்கு காசில்லாமல் அனுப்பிய அதே செயலை நித்ய சைதன்ய யதி இருவருக்கு ஆணையிடுவதை நான் கண்டிருக்கிறேன். அதைப்பற்றி நான் விசாரித்தபோது நித்யா திபெத்திய மெய்ஞானியான மிலரேபாவின் [Jetsun Milarepa ] கதையை எனக்குச் சொன்னார். தன் குருநாதரான மார்ப்பாவால் கடுமையான, குரூரமான சோதனைகளுக்கு ஆளாக்கப்பட்டு அதனூடாக ஆன்மீக மீட்பை அடைந்த மிலரேபாவின் பாடல்கள் இன்றும் திபெத்திய கவிதையின் செல்வங்களாக உள்ளன.
சுய சமர்ப்பணம் மூலம், துயரங்களுக்கும் வலிகளுக்கும் தன்னை ஆளாக்கிக் கொள்வதன் மூலம், நெறிகளுக்காக புலனடக்கம் பயில்வதன் மூலம் மட்டுமே ஆன்மீக ஞானம் வசப்படும் என்பதும், ஆன்மீக விழிப்புள்ளவனே போராளியாக முடியும் என்பதும், போராளி மட்டுமே தலைவனாக வேண்டும் என்பதும் காந்தியின் கொள்கை. காந்தி முன்வைத்த அரசியல் பரிபூரணமான தியாகிகளால் முன்னெடுக்கப்படுவது. அவர் மணிலாலை அத்திசை நோக்கிக் கொண்டுசென்றார். அவர் மணிலாலை தன் சீடனாகவே நடத்தினார்.
விளைவாக சிறுவயதிலேயே மணிலால் முதிர்ச்சி கொண்டவராக உருவானார்.1904 ல் காந்தி நிறவெறிக்கெதிரான போராட்டத்தில் சிறைக்கு சென்றகாலத்தில் மணிலாலிடம் பொறுப்பை ஒப்படைத்துச் சென்றார். தன் பன்னிரண்டுவயதில் மூன்றுவருடம் பீனிக்ஸ் ஆசிரமத்தை தலைமை ஏற்று நடத்தினார் மணிலால். நிதியாதாரமே இல்லாத நிலை. அரசின் ஒடுக்குமுறைகள் நிலவிய காலம். பல சமயம் முள்ளங்கிகளை சந்தைக்கு சுமந்து கொண்டுசென்று விற்று ஆசிரமவாசிகளின் உணவுக்கு ஏற்பாடு செய்தார். கறாராக கணக்கு வைத்துக்கொண்டார். கடிதப்போக்குவரத்தைக் கவனித்துக்கொண்டார். அவற்றில் பல கடிதங்கள் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தவை.
ஏன், ஆசிரமவாசிகளின் சச்சரவுகளைக்கூட மணிலால்தான் தீர்த்து வைத்தார். தன் இளைய சகோதரர்களான ராமதாஸ், தேவதாஸ் ஆகியோரின் கல்வியையும் மணிலால்தான் கவனித்துக்கொண்டார். சிறையில் இருந்த காந்தி மணிலாலுக்கு நீண்ட கடிதங்கள் எழுதி செய்யவேண்டிய ஆசிரமவேலைகளை, கல்விப்பணிகளை, அரசியல்பணிகளைப்பற்றி அறிவுரைகள் சொன்னார். அக்கடிதங்களை காந்தியின் தொகுக்கப்பட்ட படைப்புகளில் காணலாம். கஸ்தூர்பா அப்போது நோயுற்றிருந்தார். மனம் தளர்ந்தும் காணப்பட்டார். கஸ்தூர்பாயை பாதுகாத்துத் தேற்றும் பொறுப்பையும் மணிலாலுக்கே அளித்திருந்தார் காந்தி.
மணிலாலின் அரசியல் வாழ்க்கை காந்தி சிறை மீண்டதுமே ஆரம்பித்தது. தன் 15 ஆவது வயதில் தென்னாப்ரிக்காவின் நிறவெறி கொள்கைக்கு எதிராக காந்தி முன்னெடுத்த சத்யாக்கிரகப்போராட்டத்தில் ஈடுபட்டு முதல்முறையாகச் சிறைசென்றார் மணிலால். அப்போது ஆரம்பித்த அரசியல்போராட்ட வாழ்க்கையில் தன் கடைசிக்கணம் வரை அர்ப்பணிப்புடன் வாழ்ந்த போராளி அவர்.
1914 ல் மணிலால் காந்தியுடன் மணிலாலும் இந்தியாவுக்கு வந்தார். காந்தியின் சபர்மதி ஆசிரமத்தை அவர்தான் திறம்பட நடத்தினார். காந்தி இந்தியா சென்றபோது தென்னாப்ரிக்காவில் இருந்த பீனிக்ஸ் ஆசிரமத்தையும் இந்தியன் ஒப்பினியன் இதழையும் தன் தோழர்களான ஹென்றிபோலக், ஆல்பெர்ட் வெஸ்ட் ஆகியோரிடம் ஒப்படைத்துவிட்டுச் சென்றார். 1918ல் அவர்கள் தாங்கள் பிரிட்டனுக்குத் திரும்ப விரும்புவதாக அறிவித்தார்கள். ஆகவே மணிலால் தென்னாபிரிக்கா செல்ல முன்வந்தார்
மணிலால் மீண்டும் தென்னாப்ரிக்கா வந்தபோது இருபத்தாறு மட்டுமே. தென்னாப்ரிக்காவில் காந்தி நடத்திய எல்லா போராட்டங்களையும் முன்னெடுக்கும் பொறுப்பு அவருக்கு வந்தது. அப்போது காந்தியே அகிம்சைப்போராட்டத்தைப் பற்றிய தெளிவான சித்திரத்தை அடையவில்லை. சம்பாரன் சத்தியாகிரகமே காந்திக்கு ஒரு தெளிவை அளித்தது. ஒத்துழையாமை போராட்டம் வழியாகவே காந்தி தன் இலக்கை திட்டவட்டமாக வகுத்துக்கொண்டார்.
காந்திக்கு முன் அரசியலில் அகிம்சைபோராட்டம் என்பதற்கு முன்னுதாரணமே இல்லை. ஆகவே மணிலால் காந்தியிடம் தொடர்ந்து கருத்துக்களும் ஆலோசனைகளும் கோரிக்கொண்டிருந்தார்.காந்திக்கும் அவருக்குமான ஏராளமான கடிதங்கள் காந்தியின் தொகுக்கப்பட்ட நூல்களில் உள்ளன. அவற்றை வைத்து மணிலால் சுயமாக முடிவெடுக்கும் திறனற்ற பலவீனமான மனிதர் என மணிலாலின் வரலாற்றை எழுதிய சில ஆசிரியர்கள் எழுதியிருக்கிறார்கள் என வாசித்தேன்.
ஆனால் இன்றைய வரலாற்றாசிரியர்கள் அதை ஒத்துக்கொள்ளவில்லை. மணிலாலின் வாழ்க்கையை உமா துபீலியா மேஸ்திரியின் நூலில் வாசிக்கலாம் [ Gandhi’s Prisoner?: The Life of Gandhi’s Son Manilal : Uma Dhupelia-Mesthrie ] உமா மணிலாலின் மகளான சீதாவின் மகள். காந்தியின் கொள்ளுபேத்தி . தென்னாப்ரிக்காவில் மேற்கு கேப் டவுன் பல்கலையில் வரலாற்று இணைப்பேராசிரியையாக பணிபுரிகிறார்.மண்டேலாவின் முன்னுரையுடன் வெளிவந்துள்ள முக்கியமான நூல் இது.
அக்காலத்தில் இருந்த அத்தனை தலைவர்களுமே அகிம்சைப்போராட்டத்தைப் பற்றிய குழப்பத்துடனேயே இருந்தார்கள். காந்தியிடம் அதைப்பற்றி பேசிக்கொண்டேதான் இருந்தார்கள். சம்பாரன் சத்யாகிரக காலத்தில் படேல் எழுதிய கடிதங்களும் அதையே காட்டுகின்றன. மணிலால் காந்தியிடம் உரையாடுகிறார், உத்தரவுகளைப் பெறவில்லை.
மேலும் மணிலால் தென்னாப்ரிக்காவில் அடைந்த அரசியல் வெற்றியைக் குறைத்துக்காட்டும் போக்கும் சிலரிடம் உள்ளது. இதுவும் வரலாற்றுப்பிரக்ஞ்ஞையுடன் ஆராயததன் விளைவே. இன்று இதுவும் விரிவாக விளக்கப்பட்டுவிட்டது. காந்தி தென்னாப்ரிக்காவில் இருந்த தொடக்க காலத்தில் அவருக்கு தென்னாப்ரிக்க கறுப்பினத்தவர் குறித்த எந்த அறிமுகமும் நெருக்கமும் இருக்கவில்லை. நிறம் இனம் குறித்த அவரது கருத்துக்கள் வலுவாக உருவாகவும் இல்லை. அவர் அன்றைய தென்னாப்ரிக்க இந்தியர்களின் மனநிலையையே பிரதிபலித்தார்
தென்னாப்ரிக்க இந்தியர்கள் அன்று கறுப்பர்களுடன் எந்த விதமான நேரடித்தொடர்பும் இல்லாமல் வாழ்ந்தார்கள். ஆப்ரிக்கப் பண்பாடு சமூகவழக்கங்கள் எதுவுமே அவர்களுக்கு தெரிந்திருக்கவில்லை. ஆப்ரிக்க மொழி தெரிந்தவர்களே சிலர்தான். அவர்கள் தங்களை ஆப்ரிக்கர்களை விட மேலான இனத்தவர் என்றும் தங்களை கறுப்பினத்தவருடன் சேர்க்கலாகாது என்றும் கோரி வந்தார்கள். அவர்களின் எண்ணத்தைப் பிரதிபலித்து காந்தியும் அக்கோரிக்கையை முன்வைத்திருக்கிறார்.
ஆனால் 1910ல் சிறைசென்றபோது காந்தியின் எண்ணங்கள் மாறின. அவர் தென்னாப்ரிக்கக் கறுப்பர்களுடன் நெருக்கமாகப் பழக நேர்ந்தது. ஆகவே இனவெறிக்கு எதிரான போராட்டத்தில் கறுப்பர்களுடன் இணைந்து போராடவேண்டுமென்ற என்ணம் அவருக்கு ஏற்பட்டது. இந்தியாவுக்கு அவர் வரநேரிட்டதனால் அதை அங்கே முன்னெடுக்கவில்லை. ஆகவே மணிலாலிடம் ஆப்ரிக்கக் கறுப்பர்களையும் அணிசேர்த்து போராடும்படிச் சொன்னார். அதை மணிலால் முயன்றார்.
ஆனால் இந்திய சமூகம் அதை ஏற்கவில்லை. மணிலால் அவர்களை ஒருங்கிணைப்பதில் தோல்வியடைந்தார். ஆங்கிலேயரும் இந்திய சமூகத்தின் போராடும்திறனையும் கல்வியறிவையும் ஊகித்ததும் அவர்களை கறுப்பர்களிடம் இருந்து பிரித்து தங்களுக்குச் சாதகமானவர்களாக ஆக்கினர். தென்னாப்ரிக்க இந்தியர்கள் பெரும்பாலும் அனைவருமே வணிகர்கள் ஆதலால் சில்லறை வணிகச் சலுகைகள் கொடுத்தும் வணிகரீதியாக அச்சுறுத்தியும் அவர்களின் எதிர்ப்பை இல்லாமலாக்கினர்.
ஆயினும் மனம்தளராமல் மணிலால் போராடினார். நிறவெறிக்கு எதிராகப் போராடி இருபத்தைந்து முறை மணிலால் சிறைசென்றிருக்கிறார். ஆப்ரிக்கச் சிறைகளின் அனைத்துவகையான வதைகளுக்கும் ஆளாகியிருக்கிறார். பிரிட்டிஷ் அரசின் அச்சுறுத்தல்கள் சக இந்தியர்களின் ஆசைகாட்டல்கள் எதற்குமே அவர் செவிசாய்க்கவில்லை.
இக்காலகட்டத்தில் ஆப்ரிக்கர்கள் பழங்குடித்தொகைகளாகவே இருந்தனர், அரசியல்மயமாக்கப்படவில்லை. அவர்கள் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக நிகழ்த்தியதும் பழங்குடிப்போர்களே. அவர்களுக்குள் இருந்துவந்த பழங்குடிப்பூசல்களை போர்களாக ஆக்கி மிக எளிதாக அவர்களை வென்றுவந்தது. மணிலால் ஆப்ரிக்கர்களிடையே ஓர் அரசியல் ஒற்றுமை உருவாகவேண்டுமென முயன்றார். அதற்கு அகிம்சை சார்ந்த ஜனநாயக அரசியலுக்கு அவர்கள் வருவதும் தங்களுக்குள் உள்ள முரண்பாடுகளை பேசித்தீர்த்துக்கொள்வதுமே சிறந்த வழி என்று எண்ணினார்.
நேட்டால் பகுதி ஜூலு பழங்குடிகளின் தலைவரான ஆல்பர்ட் லுதுலி [Albert Luthuli] ஆப்ரிக்க தேசிய காங்கிரஸின் பிராந்தியத் தலைவராக ஆகி ஜூலுக்களை நிறவெறி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடுத்தியபோது மணிலால் அவருடன் இணைந்து பணியாற்றினார். ஆல்பிரட் லுதுலியை வன்முறையைக் கைவிட்டுவிட்டு ஜனநாயகப்பாதைக்கு வந்து அகிம்சைமுறைப்போராட்டங்களில் ஈடுபடும்படி வற்புறுத்தினார். பீனிக்ஸ் ஆசிரமத்தில் வளார்ந்தவரான ஆல்பா கோபோ [Alpha Ngobo ] மணிலாலுக்கும் லுதுலிக்குமான தொடர்பாளராகச் செயல்பட்டார். லுதுலி அகிம்சை வழிக்கு வந்ததற்கு மணிலால் முக்கியமான காரணம். 1960ல் லுதுலி அமைதிக்கான நோபல் பரிசு பெற்றார்.
மணிலால் தென்னாப்ரிக்காவில் நிறவெறிக்கு எதிரான போராட்டங்களில் வாழ்நாள் முழுக்க ஈடுபட்டார். 1920 முதல் 1956ல் இறப்பதுவரை. அவர் நேட்டால் இந்தியக் காங்கிரஸின் தலைவர்களில் ஒருவராக இருந்தார். இடதுசாரியான டாக்டர் யூசு·ப் டாடூவிற்கு நெருக்கமாக இருந்தார் மணிலால். இந்தியன் ஒப்பினியனில் மணிலால் எழுதிய கட்டுரைகள் மிக வலுவானவை.
ஆனால் மெல்லமெல்ல மணிலால் அரசியல் ஓரம்கட்டப்பட்டார். ஏனென்றால் ஆப்ரிக்க இந்தியர்கள் மணிலாலின் சமரசமில்லாத நிறவெறி எதிர்ப்பை விரும்பவில்லை. மணிலால் ஆப்ரிக்கர்கள் நடுவே உருவாகி வந்த வன்முறை எதிர்ப்பை நிராகரித்தார். அகிம்சை வழியிலான ஜனநாயகப்போராட்டத்தின் தேவை குறித்து பிடிவாதமாகச் சொல்லிக்கொண்டிருந்தார். ஆப்ரிக்கப்போராட்டத்தின் வன்முறை குறித்து தொடர்ந்து கவலை தெரிவித்தாலும் அவரும் இந்தியன் ஒப்பினியனும் அப்போராட்டத்தில் கடைசிவரை உடனிருந்தனர். 1952ல் தன் அறுபத்தொன்றாவது வயதில் மணிலால் கடைசியாக சிறைசென்றார்.
தன்னை முன்னிறுத்தும் இயல்பில்லாதவரான மணிலால் ஆப்ரிக்க தேசிய போராட்ட வரலாற்றுச் சித்திரங்களில் உரிய முறையில் குறிப்பிடப்படவில்லை. ஆனால் சமீபகாலமாக ஆய்வுகள் வழியாக மணிலாலின் பங்களிப்பு அங்கீகரிக்கப்படுகிறது. மணிலால் வழியாகவே தான் காந்தியை அறிந்ததாக நெல்சன் மண்டேலா சொன்னார். ஆப்ரிக்கப்போராட்டம் வன்முறையற்றதாகவும் இனமோதலும் அழிவும் அற்றதாகவும் நிகழ காந்திய வழியேகாரணம் என்றார் மண்டேலா. அந்தவழியை அங்கே நிலைநாட்டியவர் மணிலால் காந்தி.
மனிலால் இந்தியாவின் சுதந்திரப்போராட்டத்திலும் கலந்துகொண்டிருக்கிறார். 1930 ல் காந்தி உப்புசத்யாகிரகத்தை அறிவித்தபோது மணிலால் அதற்காகவே இந்தியா வந்தார். குஜராத்தில் தாராசனா என்ற இடத்தில் கடற்கரையை உப்பு காய்ச்சுவதற்காக வேலி போட்டு வைத்திருக்கும் தகவல் . காந்திக்கு தெரிந்தது. அப்பாஸ் தயாப்ஜி என்ற மூத்த போராளியின் வழிகாட்டலில் கஸ்தூர்பா தலைமையில் உப்புசதியாகிரகிகள் தாராசனாவுக்குச் சென்றார்கள்.
செல்லும் வழியிலேயே தயாப்ஜியும் கஸ்தூர்பாவும் கைதானதனால் காந்தி சரோஜினி நாயிடுவையும் மௌலானா அபுல்கலாம் ஆஸாதையும் போராட்டத்தை தலைமைதாங்கும்படி கேட்டுக்கொண்டார். அவர்கள் மீது மிகக்கடுமையான தடியடி நடத்தப்பட்டது. வெப் மில்லர் என்ற அமெரிக்க இதழாளர் அங்கிருந்தார். அவர் அங்கே சத்தியாக்ரகிகள் முற்றிலும் வன்முறை இல்லாமல் போராடியதையும் பிரிட்டிஷ் போலீஸ் அவர்களை மிருகத்தனமாகத் தாக்கியதையும் இதழ்களில் பதிவுசெய்தார். அமெரிக்க செனெட்டில் அந்தச் செய்தி வாசிக்கப்பட்டது. இந்திய சுதந்திரப்போரில் அமெரிக்கா ஆதரவுநிலை எடுக்க அந்த செய்தி காரணமாக அமைந்தது.
மணிலால் தாராசனா உப்புத் தொழிற்சாலைக்குள் சக சத்தியாகிரகிகளுடன் நுழைய முயன்றபோது கடுமையாக தாக்கப்பட்டார். மண்டைஓடு உடைந்து மூளையில் காயம் ஏற்பட்டதனால் நினைவிழந்த அவரை அங்குள்ள ஆஸ்பத்திரியில் பேரில்லாமல் வைத்திருந்தார்கள். காந்தி குடும்பம் நான்குநாட்கள் மணிலாலுக்காக தேடியபின்னரே அவரை கண்டடைய முடிந்தது. அவர் ராஜ்காட் ஆஸ்பத்திரிக்குக் கொண்டுவரப்பட்டு சிகிழ்ச்சை செய்யப்பட்டார். உயிர் பிழைத்தாலும் அந்த தாக்குதலின் பாதிப்பு தொடர்ந்து இருந்தது.
ஒன்பதுமாத தண்டனை வழங்கப்பட்ட மணிலால் விடுதலையானதும் மீண்டும் ஆப்ரிககவுக்கே திரும்பினார். அதன்பின்னரும் அவர் சிலமுறை காந்தியின் போராட்டங்களில் கலந்துகொள்வதற்காக இந்தியா வந்திருக்கிறார். இந்தியன் ஒப்பினியன் இதழின் ஆசிரியராக முப்பத்துமூன்று வருடகாலம் பணியாற்றினார் மணிலால். அந்த இதழ் அவரது காலகட்டத்தில்தான் ஆப்ரிக்கர்களின் உரிமைக்காகவும் ஒட்டுமொத்த நிறவெறிக்கு எதிராகவும் குரல்கொடுக்கும் ஆவேசமான இதழாக ஆகியது. மணிலால் காந்தியை விடவும் சிறந்த இதழாசிரியர் என்று கருதப்படுகிறார். அவரது தலையங்கங்கள் இன்று ஆப்ரிக்க சுதந்திரப்போரின் ஆவணங்களாக பேணப்படுகின்றன
மணிலால் 1927ல் சுசீலா மஷ்ருவாலாவை மணாந்தார். சுசீலா மணிலாலின் அறிவார்ந்த துணையாகவும் போராட்டத்தோழராகவும் இருந்தார். இந்தியன் ஒப்பினியன் இதழின் இணைப்பொறுப்பில் இருந்த சுசீலா அதன் குஜராத்தி வடிவை கவனித்துக்கொண்டார். அவர்களுக்கு சீதா அருண் இளா ஆகிய மூன்று குழந்தைகள்.
மணிலால் காந்தியக் கோட்பாடுகளில் ஆழமான நம்பிக்கை கொண்டவர். ஆகவே தன்னை காந்தி எப்படி வளர்த்தாரோ அப்படித்தான் தன் குழந்தைகளை அவரும் வளர்த்தாள். மிக இளவயதிலேயே அவர்களை தன் பொறுப்பில் கல்விகற்பித்தார். அரசியல் போராட்டங்களிலும் அறிவியக்கங்களிலும் ஈடுபடுத்தினார். மணிலாலின் மகன் அருண் காந்தி தந்தையைப்போல சிறுவயதிலேயே சமூகப்போராளியாக உருவெடுத்தார்.
1948ல் மணிலால் ஆப்ரிக்க நிறவெறிக்கு எதிராக உலகசிந்தனையை திருப்பும்பொருட்டு உலகப்பயணங்கள் மேற்கொண்டார். ஆல்ப்ரட் ஐன்ஸ்டீன் போன்றவர்களைச் சந்தித்தார். ரெவெரெண்ட் ஹாரிங்டன் மணிலாலை ‘ ஒரு புனிதருக்குண்டான குணங்கள் கொண்ட ஆன்மீகமான மனிதர்’ என்றார். மணிலால் அதிர்ந்து பேசாதவர். ஒருபோதும் தன்னை முன்னிறுத்தாதவர். ஆகவே அவர் மிகவும் விரும்பப்பட்ட மதிக்கப்பட்ட தலைவராக இருந்தார்.
மணிலால் முற்றிலும் அச்சமற்ற மனிதர் என்று அவரது வரலாற்றாய்வாளார்கள் பதிவுசெய்கிறார்கள். [ Manilal Gandhi: a Hero in the New African Movement ,Brandon Smith ] சமரசமே செய்துகொள்ளாத மணிலால் மொத்தம் 14 ஆண்டுகள் பிரிட்டிஷாரின் சிறையில் கழித்திருக்கிறார் — இந்தியாவில் ஓர் ஆயுள்தண்டனையைவிட அதிக காலம்! காந்தி உட்பட இந்தியாவின் எந்த ஒரு தேசியத்தலைவரைவிடவும் அதிககாலம்! அவரது வாழ்க்கையை ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது ஒவ்வொரு கணமும் அவரை எண்ணி காந்தி பெருமைப்பட்டிருப்பார் என்றே எண்ணத்தோன்றுகிறது.
மணிலால் காந்தியின் மகன் அருண் மணிலால் காந்தி 1934ல் டர்பனில் பிறந்தார். காந்தியின் ஆசிரமத்தில் 1948 வரை வாழ்ந்தார் மணிலால். காந்தியால் ஆரம்பக்கல்வி புகட்டப்பட்டார். இந்திய சுதந்திரப்போரின் உச்சகட்டங்களை சிறுவனாக இருந்து கண்டார். காந்தியின் வாழ்க்கையை நேரில் கண்டு அவரால் ஆழமாக பாதிப்புக்குள்ளானார். 1948ல் காந்தி கொல்லப்படும்போது அருண் டர்பனில் இருந்தார்.
தன்னளவில் பெரும் கல்வியாளரும் தத்துவவாதியுமான அருண் மணிலால் காந்தி காந்தியிடமிருந்து அவரது அரசியல்போராட்டமுறையான அகிம்சையை எடுத்துக்கொண்டார். காந்தியின் ஆன்மீகக்கருத்துக்களை அவர் நிராகரித்தார். 1956ல் மணிலால் மறைந்தபோது தந்தையின் அஸ்தியை கங்கையில் கரைக்க இந்தியாவுக்கு வந்த அருண் மணிலால் காந்தி அங்கே நோயுற்று மருத்துவமனையில் இருந்தபோது பணிவிடை செய்த தாதியான சுனந்தாவை காதலித்து மணந்தார். ஆனால் சுனந்தா ஆப்ரிக்கா செல்ல ஆப்ரிக்க அரசு அனுமதி மறுத்துவிட்டது.
1957ல் டைம்ஸ் ஆ·ப் இந்தியா இதழில் பயிற்சி இதழாளராகச் சேர்ந்தார் அருண் மணிலால் காந்தி. சுனந்தா அருண் மணிலால் காந்தியின் அகிம்சை சார்ந்த மனித உரிமைப்போராட்டங்கள் அனைத்திலும் பங்காளியாக இருந்தார். 2007ல்தான் இறந்தார். அவர்களுக்கு ஒரே மகன், துஷார் காந்தி.
அருண் மணிலால் காந்தி அகிம்சைப்போராட்டத்தை உலகமெங்கும் பரப்புவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருந்தார். அமெரிக்காவில் குடியேறிய அருண் மணீலால் காந்தி டென்னஸி மாநிலத்தில் எம்.கெ.காந்தி அகிம்சை ஆய்வுமையத்தை நிறுவினார். இந்த ஆய்வுமையம் இப்போது நியூயார்க்கில் இருக்கிறது. அருண் உலகமெங்கும் காந்தியம் சார்ந்து ஏராளமான சொற்பொழிவுகள் நிகழ்த்தியிருக்கிறார். காந்திய சித்தாந்த்தை நவீன வாழ்க்கைக்கு உகந்த முறையில் விளக்கும் அறிஞராக இன்று உலகமெங்கும் மதிக்கப்படுகிறார்.
மணிலாலின் இன்னொரு மகளான சீதா காந்தியுடன் அவர் இருந்த நாட்களைப்பற்றியும் தன் தந்தையைப்பற்றியும் முக்கியமான நினைவுநூல் ஒன்றை எழுதியிருக்கிறார். டர்பன் முன்னாள் ஆர்ச் பிஷப் டெனிஸ் இ ஹர்லி [Denis E Hurley ] அவர்களின் முன்னுரையுடன் வெளிவந்துள்ளது அந்நூல். முன்னுரையில் டெனிஸ் ஹர்லி காந்தியை புனித பிரான்ஸிஸ் அஸிசிக்கு பின் மண்ணுலகு கண்ட மாபெரும் மனிதர் என்று குறிப்பிடுகிறார். சீத 1999 ல் இறந்தார். சீதாவின் மகளான உமா டுபீலியா மேஸ்திரி மணிலாலைப்பற்றிய வரலாற்றை எழுதியவர்
இளா மணிலால்
மணிலாலின் கடைசிக் குழந்தையால இளா காந்தி 1940ல் பிறந்தார். காந்தியின் ஆசிரமத்தில் குழந்தையாக இருந்து வளர்ந்தார். ஆப்ரிக்க நிறவெறிக்கு எதிரான போராட்டங்களிலும் ஆப்ரிக்க விடுதலை சமரிலும் தீவிரமாகப் பங்குகொண்ட இளா காந்தி 1994 முதல் 2004 வரை தென்னாப்ரிக்காவில் ஆப்ரிக்க தேசிய காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்திருக்கிறார். சுதந்திர ஆப்ரிக்காவின் பல்வேரு சட்ட-சமூக அமைப்புகளில் பங்களிப்பாற்றியிருக்கிறார்.
துஷார் காந்தி
அருண் மணிலால் காந்தியின் மகன் துஷார் காந்தி 1960ல் மும்பையில் பிறந்தார். மிதிபாய் கலைக்கல்லூரியில் ஓவியத்தில் பட்டம்பெற்றவர் ‘நாம் காந்தியைக் கொல்வோம்’ [Let’s Kill Gandhi] என்ற அவரது நூல் மிகுந்த சர்ச்சைகளை உருவாக்கியது. துஷார் அதில் காந்திகொலையில் பிராமணியத்தின் பங்கைப்பற்றி ஆராய்ந்திருந்தார். அது பிராமணர்களை இழிவுபடுத்துகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் பூனாவை மையமாக்கிய ஒரு பழமைவாத பிராமணக் கருத்தியலே காந்தியை தொடர்ந்து குணச்சித்திரப் படுகொலைசெய்தது என்றும் பின்னர் அவர்களே அந்தக்கொலையை பலகாலமாக திட்டமிட்டுச் செய்தனர் என்றும்தான் தான் எழுதியதாக துஷார் விளக்கம் அளித்தார்.
இப்போது மும்பையில் வசிக்கும் துஷார் காந்தி இரு குழந்தைகளுக்கு அப்பா. மகாத்மா காந்தி அறக்கட்டளையை நடத்தி காந்தியக் கோட்பாடுகளை முன்வைத்து வருகிறார். இந்திய அரசியல் விமரிசகராகவும் காந்தியப்போராட்டங்களில் முன்னணியில்ந் இன்றுசெயல்படுபவராகவும் இருக்கிறார்.
மணிலாலில் காந்தி உருவாக்கிய நிரந்தரமான அரசியல் புரட்சியாளன் அழியவில்லை. அவரிடமிருந்து அவரது குழந்தைகளுக்கும் அவர்களின் குழந்தைகளுக்கும் அது பரவியது. வேறெந்த இந்திய அரசியல் தலைவரின் வாரிசுகளிலும் இத்தனை அழுத்தமான சிந்தனையாளர்கள், போராளிகள் உருவாகி வரவில்லை என்பதே வரலாறு.
[மேலும்]