காந்தி சலிப்பூட்டுகிறாரா? கடிதங்கள்

  1. மாங்கு மாங்கு என்று காந்தியைப்பற்றி, சமூக நடுநிலை அலசல்கள் என எழுதிவருகிறீர்களே. உங்களால் ஒரு சமூக சிந்தனை மாற்றத்தை உருவக்கிவிட முடியும் என்று நிஜமாகவே நம்புகிறீர்களா? 
  2.  நீங்கள் பல சமயத்தில் “ங” என்று முழிப்பதுபோல கட்டுரைகளில் எழுதுகிறீர்களே(ஏ.டி.எம்). நீங்கள்  நிஜமாகவே அப்படித்தானா?
  3.  முன் நவீனத்துவம், பின் நவீனத்துவம், இருத்தலியம், பொருள்முதல்வாதம், நிரூபணவாதம், இருபொருள்வாதம்,இலட்சியவாதம் எல்லாவற்றையும் ஒரு மிக்ஸியில் போட்டு அடித்து எடுத்தால் என்ன வரும்?
  4. காசிரங்கா ஞானசபையில் தலைவர் பதவி வேண்டுமென்றால் யாரிடம் சிபாரிசு கேட்கலாம்?
  5. “நில்லா வுலகம் புல்லிய நெறித்தே” என்று மிதந்துகொண்டே உளரும் நண்பனை என்ன செய்யலாம்?

நன்றி
ராம்

அன்புள்ள ராம்,

உங்கள் முதல் கேள்விதவிர மற்ற கேள்விக்கான பதில்கள்.

2. சில சமயம் ஙீ என்றும் முழிப்பதுண்டு. [நடைமுறைஞானம் கொஞ்சம் குறைவான ஆள்தான். ஏதாவது சிந்தனை முட்டுச்சந்தில் இருப்பேன்]

3. தமிழவன்.  ஒன்றிரண்டை குறைத்தால் நாகார்ச்சுனன்

4.பருந்து

5. சேர்ந்து மிதக்கலாம்

 இனி முதல் கேள்விக்கு

 1. சமூக மாற்றத்தை வேறு எப்படி கொண்டுவர முடியும் என நினைக்கிறீர்கள்? சினிமாவில் நடிப்பது அல்லது அடிப்பது? தேர்தலில் போட்டியிடுவது? அதிதீவிர இடதுசாரி வசைமாரிச் சிற்றித்தழ் நடத்துவது?

 சமூக மாற்றம் என்பது எப்போதும் நடந்துகொண்டே இருக்கிறது. அது ஒரு கூட்டியக்கம். அதில் எல்லா கருத்துச் செயல்பாடுகளுக்கும் பங்குண்டு. நம் பங்கை நாம் அளிக்கலாம். விளைவுகள் வரலாற்றின் கையில்.

 ‘கர்மண்யே வா-அதிகாரஸ்தே மா ·பலேஷ¤  கதாசன’ என்பது பழைய கோனார் உரை. ‘அரசியல் யுகத்தில் நான் வரலாறு’ என்றும்  மாடுமேய்க்கும்போது  சொல்லியிருப்பார், தெரியவில்லை.

 ஜெ

 அன்புள்ள ஜெயமோகன்,

 நீங்கள் எழுதும் நீள நீளமான காந்திகட்டுரைகளை எவராவது படிக்கிறார்களா என்ன? நான் நிறைய பேரிடம் கேட்டேன். படிப்பதே இல்லை என்றார்கள். நானே சிலருக்கு அனுப்பியும் பார்த்தேன் படிக்க முடியவில்லை என்றார்கள். எனக்கும் ஒரிரு பத்திகளுக்குமேல் படிக்க முடியவில்லை

 இணையம் என்பது சுருக்கமான கட்டுரைகளுக்குரிய ஊடகம். வேடிக்கையும் செய்தியும் கலந்து கொடுக்க வேண்டிய ஊடகம். அதற்குமேல் இங்கே அலசல்களுக்கு ஏதும் இடமில்லை. அதைப் புரிந்துகொண்டுதான் சாரு நிவேதிதாவும் எஸ்.ராமகிருஷ்ணனும் எழுதுகிறார்கள். இணையத்தை புரிந்துகொள்ளாமல் எழுதக்கூடிய ஒரே மனிதர் நீங்கள்தான். இந்த மாதிரி கட்டுரைகளை நான் வேறு எந்த இணைய இதழிலும் பார்த்ததில்லை. ஆங்கிலத்தில்கூட கிடையாது.

 இந்தவகையான கட்டுரைகள் உங்களுக்கு ஒரு போலி திருப்தியை அளிக்கலாம். மற்றபடி நேரவிரயம் அவ்வளவுதான். மன்னிக்கவும்

 ராமசுப்ரமணியம்

 அன்புள்ள ராமசுப்ரமணியம்,

 நீங்கள் சொல்வது உண்மை. இணையத்தில் அத்தகைய கட்டுரைகளே அதிகம் கிடைக்கின்றன. தமிழில் மிகப்பெரும்பாலும் அப்படித்தான். ஆனால் ஆங்கிலத்தில் மிக விரிவான ஆய்வுக்கட்டுரைகளையும் நாம் இணையத்தில் வாசிக்க முடிகிறது. அத்தகைய ஒன்றாக இந்த இணைய தளம் இருக்கட்டுமே.

 உலகில் எங்கும் எழுத்தாளன் ஒருவன் இணையத்தில் இப்படி நீளமாக எழுதுவதும் தன் ஆக்கங்களை இலவசமாக பதிவேற்றம் செய்வதும் வழக்கம் இல்லை என நான் அறிவேன். ஆனால் தமிழில் எனக்கு தேவைப்படுகிறது.

 தமிழில் தினமும் 500 இதழ் பக்கங்கள் அச்சாகின்றன. அவற்றில் எத்தனை பக்கங்களில் ஏதேனும் ஒரு கருத்துவிவாதம் இருக்கிறது என நினைக்கிறீர்கள்? தினம்ணியின் நடுப்பக்கம் தவிர ஏதேனும் ஒரு கருத்தை விவாதிக்கும் மேடை என்று ஒன்று தமிழில் இல்லை. அது ஒரு நடுவாந்தர மேடை. பொதுவான எளிய விஷயங்களுக்குள்ளது.

ஆகவே தமிழில் தீவிரமான அரசியல்- இலக்கிய -வரலாற்று விவாதங்களே வேண்டாம் என்று சொல்ல முடியுமா என்ன?  ஒரு சமூகம் அப்படி வாழ்ந்துவிட முடியுமா? நமக்கு சினிமாவும் அரசியலும் வம்புகளாக மட்டுமே கிடைத்தால் போதுமா?

பிற மொழிகளில் அச்சு ஊடகத்தின் துணை ஊடகமாக இணையம் இருக்கிறது. விளம்பர ஊடகமாக இருக்கிறது. தமிழில் அச்சு ஊடகம் புறக்கணிக்கும் இடங்களை நிரப்புவதாக இருக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இது ஒரு வரலாற்றுத்தேவை

தமிழில் எப்படிபபர்த்தாலும் இரண்டாயிரம் வலைப்பூக்களும் இணையதளங்களும் எளிய வாசிப்பை அளிப்பதாக உள்ளன. நீங்கள் அங்கே வாசிக்கலாம் அல்லவா? இது ஒன்று இப்படி இருந்துவிட்டுப் போகட்டுமே.

என்னைப்பொறுத்தவரை நான் என்ன எழுத விரும்புகிறேனோ அதற்கான தளம் இது. ஒருவருமே வாசிக்கவில்லை என்றாலும் கவலை இல்லை. நாளை எவராவது வாசிக்க வருவார் என்ற நம்பிக்கை போதும்.

ஜெ

அன்புள்ள ஜெ,

உங்கள் இணையதளத்தில் நீளநீளமான கட்டுரைகளை தொடராகப் போட்டு போரடிக்கிறீர்கள் என்று சொன்னால் கோபம் கொள்ள மாட்டீர்களே. கொஞ்சநாள் கதைகளையும் மக்களுக்குப் பிடித்தமான கட்டுரைகளையும் போடுங்கள். இல்லாவிட்டால் இணையதளம் படுத்துவிடும்

உங்கள் நீளமான கட்டுரைகளை வாசித்தால் புரியவில்லை. பெரிய பெரிய தமிழ் வார்த்தைகளைப்போடுகிறீர்கள். அந்த வார்த்தைகளுக்கே அகராதி தேவை. அகராதியை வைத்துக்கொண்டெல்லாம் இந்த அவசரகாலகட்டத்தில் ஏன் கட்டுரைகளை படிகக்வேண்டும்?

சிவகுமார்

அன்புள்ள சிவகுமார்,

நான் பலமுறை சொன்னதுபோல, இந்த இணையதளம் எனக்கானது. என் சிந்தனைகளை முன்வைப்பதற்கானது. ஒரு முச்சந்தி பிரசங்கம். விரும்பியவர்கள் வாசிக்கலாம். இதற்காக நான் எவரிடமும் பணம் வாங்கவில்லை. பணம் வாங்கும் அமைப்பாக ஆக்கலாம் என்று பலர் சொன்னபோது மறுத்ததும் இதனாலேயே. இது ஒரு பொழுதுபோக்கு இணையதளம் அல்ல. அதற்கு பலநூறு  இணையதளங்கள்: உள்ளன.

இதில் தீவிரமான கட்டுரைகள் மட்டுமே வரும். அவற்றை முன்வைப்பதற்காகவே இந்த இணையதளம். இக்கட்டுரைகளில் உள்ள விஷயங்களை இதற்கு மேல் எளிதாக எவருமே எழுதமுடியாது. நல்ல தமிழில் எழுதுவது என்பது என் கொள்கை. ஆகவே தமிழ்க்கலைச்சொற்கள் இதில் இருக்கும். வாசகர்கடிதங்களில் உள்ள ஆங்கிலச்சொற்களும்கூட [நேரமிருந்தால்] தமிழாக ஆக்கப்படும்

இணையதளம் படுத்தாலும் எனக்கொரு கவலை இல்லை. நான் பணம் செலவழிக்கவில்லை. ஆனால் இணையதளம் ‘படுப்பதை’ பற்றி யோசிக்கவேண்டிய நிலை வரவில்லை என்றே படுகிறது. சந்தேகமிருந்தால் அலெக்ஸா ரேட்டிங்கில் பாருங்கள். காந்தியைப்பற்றிய கட்டுரைகள் வெளிவந்த பின்னர் வருகைப்புள்ளி ஏறியிருப்பதைக் காண்பீர்கள். தமிழில் நீங்கள் வசிக்கும் எந்த ஒரு ஜிலுஜிலு இணையதளத்தை விடவும் அதிகமானபேரைக் கவர்ந்த இணையதளம் இது, இது மிகப்பிரபலமான ஒரு இதழுக்குச் சமம் என்பதை உணர்வீர்கள்.

ஜெ

முந்தைய கட்டுரைவந்தேமாதரம்
அடுத்த கட்டுரைஹ¤ஸெய்ன் கடிதங்கள்