கதாநாயகன் தேர்வு

ஒரு முக்கியமான திரை முயற்சியை நான் எழுதிக் கொண்டிருக்கிறேன். இதுவரை நான் ஈடுபட்ட திரை ஆக்கங்கள் என்பவை என்னுடைய பங்களிப்பு மிகவும் குறைவானவை. என்னுடைய கதைஞானம் மற்றும் மொழிப்பயிர்ச்சியில் ஒரு சிறு பகுதியை நான் அந்த ஆக்கங்களை உருவாக்குபவர்களுக்கு என்னுடைய பங்களிப்பாக அளித்தேன், அதற்காக நல்ல ஊதியத்தை பெற்றுக் கோண்டேன், அது ஓர் எழுத்தாளனாக மேலும் நேரத்தையும் பயணங்களுக்கான வாய்ப்பையும் எனக்களித்தது என்று சொல்லலாம். இந்த முயற்சி அப்படி அல்ல. நான் இதன் ஆசிரியனாக இருக்கிறேன். இப்போது எழுத்துவடிவில் இருக்கிறது, விரைவில் அறிவிப்பு வெளிவரலாம்.

இதன் நடிகர்தேர்வுகளில் நான் வெறும் பார்வையாளனாகவே இருக்கிறேன். பொதுவாக இவற்றில் எல்லாம் அதிகமாக ஈடுபடுவது என் வழக்கம் அல்ல. ஆனால் நான் இதுவரை எழுதிய எல்லா திரை முயற்சிகளிலும் நடிகர்கள் சிலரை அவ்வப்போது சொல்லியிருக்கிறேன். எழுதுபவன் மனதில் அப்படி ஒரு நடிகன் முகம் வருவது மிக இயல்பான ஒரு நடிகர் தேர்வாகும். புதியவர்களையும் சொல்லியிருக்கிறேன். அது அந்த ஆக்கங்களை உருவாக்குபவர்களுக்கு உதவியாகவும் இருந்துள்ளது.  அவர்களை பயன்படுத்தியும் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு நடிகர் தேர்வுசெய்யப்படுவதைக் கவனிப்பது மிகமிக ஆர்வமூட்டும் விஷயம். முதலில் தோற்றம். பெரும்பாலும் அவ்வப்போது நினைவுக்கு வரும் முகங்கள் உடனடியாக குறித்துப்போடப்பட்டு அவர்கள் நேரில் அழைக்கப்பட்டு கவனிக்கப்படுகிறார்கள். இதில் உள்ள விந்தை என்னவென்றால் ஒரு நடிகரை ஒரு கதாபாத்திரத்துக்காக பரிசீலிக்கும்போது ‘சேச்சே இந்த முகமா அது ,அது வேறு முகம் அல்லவா!’ என்ற எண்ணமே முதலில் உருவாகும். அந்தக் கதாபாத்திரத்தையும் நடிகரையும் இணைப்பதே கஷ்டமாக இருக்கும். அதிலும் அதை எழுதியவனுக்கு இன்னும் கஷ்டம்.

ஆகவே பெரும்பாலும் இருக்கட்டும் பார்ப்போம் என்று வைத்துவிட்டு வேறு சாத்தியங்களை பரிசீலித்துவிட்டு பல கோணங்களில் யோசித்துக் கொண்டிருப்போம். மனம் மீண்டும் மீண்டும் அந்த நடிகருக்கே திரும்பி வரும். ஒரு கட்டத்தில் மனம் அவரை அந்தக் கதாபாத்திரமாக ஏற்றுக் கொண்டு விடும். அவர் ஒப்பந்தமாகி , ஒப்பனைப்படம் எடுக்கப்பட்டு, படங்கள் பிரசுரமாகி ,படப்பிடிப்பும் தொடங்கியபின்பு நோக்கினால் அவர் அந்தக் கதாபாத்திரமாக மனதில் தங்கியிருப்பார். ‘நான்கடவுள்’ படத்தின் ருத்ரன் அஜித்துக்காக உருவானவன். ஆனால் இப்போது ஆர்யா அல்லாமல் வேறு முகத்தை யோசிக்க முடியவில்லை.

இப்போது நடிகர் தேர்வுக்கான மும்முரம். ஏராளமான நடிகர்கள் தேவை. முக்கியமாக கதாநாயகன். நாயகன் எழுபதுகளின் கமலஹாசன், அறுபதுகளின் சிவகுமார் போல இருக்கவேண்டும். நல்ல நிறம், இருபதை ஒட்டிய வயது, உற்சாகமான அழகிய கண்கள். மனதுக்குப் பிடித்தமான ‘ஸ்வீட் பாய்’.

அத்தகைய இளைஞர்களை பொதுவாக முதலில் மாடலிங் துறைகளில் தேடுவார்கள். ஆனால் இதில் உள்ள சிக்கல் என்னவென்றால் மாடல்கள் பொதுவாக நடிப்பு ஆர்வமோ பயிற்சியோ இல்லாமல் இருப்பார்கள். அவர்களின் உடல்மொழி மிகச் செயற்கையாக உருவாக்கபப்ட்டதாக இருக்கும்– ஆங்கிலபாணியில். அவர்களில் அனேகமாக அனைவருக்குமே தமிழ் தெரிந்திருக்காது. அவர்களை உருமாற்றி எடுப்பது பாலா போன்றவர்களாலேயே முடியும்.

தமிழர்கள் அல்லாதவர்களையே இத்தகைய நடிகர்களுக்கு பெரும்பாலும் பரிசீலிக்க வேண்டியிருக்கும். தோற்றம் மட்டுமல கொஞ்சம் மொழியறிவும் பண்பாட்டு அறிவும் கொஞ்சம் நடிப்புத்திறனும் தேவை என்று எண்ணினால் தேர்வுக்கான வாசல் மிக மிக குறுகியதாக ஆகிவிடுகிறது.

நடிப்புக்கு வாய்ப்பு கோரி அலையும் இளைஞர்கள் பலர். பெரும்பாலானவர்களுக்கு சராசரி தமிழ் இளைஞனின் தோற்றமே இருக்கும். அசாதாரண மனிதர்களையே பெரும்பாலும் கதாநாயகர்களாகக் கொண்ட நம் கதைகளுக்கு அவர்கள் உதவ மாட்டார்கள். மேலும் அவர்களில் பெரும்பாலானவர்கள் எந்த தகுதியும் இல்லாமல் வெறும் ஆசையை மட்டுமே கொண்டவர்கள். வசந்தபாலன் ‘அங்காடித்தெரு’ படத்துக்காக கல்லூரிகள் தோறும் சென்று கிட்டத்தட்ட 2000 பேரை சந்தித்தபின் ·புட்பால் விளையாடிவிட்டு தெருவில் சென்ற ஓர் இளைஞனைப் பொறுக்கினார்.

இவ்வாறு இந்த தேர்வு பெரும்பாலும் சட்டென்று எப்படியோ அமையும். இதுவும் ஒருவகையில் பெண் பார்ப்பது போன்றதே. வருடக்கணக்காக பெண் பார்ப்போம். நுணுகி நுணுகி ஆராய்வோம். தட்டிப்போனபடியே இருக்கும்.சட்டென்று பத்தே நிமிடத்தில் அமைந்துவிடும்.

இந்த முயற்சிக்கும் அப்படி ஒருவர் அமையக்கூடும். நீங்களாகக்கூட இருக்கலாம். உங்கள் பக்கத்தில் நின்றுகொண்டிருக்கலாம்.

முந்தைய கட்டுரைவெயிலுக்கு விருது
அடுத்த கட்டுரைமலேசியா, மார்ச் 8, 2001