வெயிலுக்கு விருது

இந்த வருடத்துக்கான சிறந்த பிராந்திய மொழிப் படத்துக்கான தேசியவிருது வசந்தபாலனின் ‘வெயில்’ படத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட வெயில்தான் என்று அனைவருமே எண்ணியிருந்தார்கள். பருத்திவீரனா என்ற ஐயம் சிலருக்கு இருந்தது. எனக்கு அறிமுகமுள்ள மிகத்தீவிர கேரளத் திரைப்படைப்பாளிகள் பலரும் ‘வெயில்’ மிகவும் பிடித்திருந்ததாகச் சொன்னார்கள். ஒரு கலைப்படைப்பின் புதுமை நேர்த்தி எல்லாம் அது வெளிவந்த சில காலத்துக்கு மட்டுமே. அதிலும் தொழில்நுட்பம் தாவிச்சென்றுகொண்டிருக்கும் சினிமாவில் மிக வேகமாக புதுமை பின்னால் நகர்ந்து விடுகிறது. அதை மீறி படத்தை நெஞ்சில் நிறுத்துவது அதில் உள்ள மானுட அம்சம். அது காலாவதியாவதே இல்லை. வெயிலின் ஆத்மா வலியாலும் கொந்தளிப்பாலும் ஆனது. அதுவே அதன் சிறப்பும் வெற்றியும்.

வெயிலில் இந்தியாவெங்கும் ஒவ்வொரு வீட்டிலும் இருந்துகொண்டிருக்கும் உண்மையான ஒரு சிக்கல் அந்த உண்மையின் எரியும் தீவிரத்துடன் பேசப்பட்டிருந்தது. குழந்தைகள் மேல் உள்ள வன்முறை. குழந்தைகள் மேல் அதீதமான எதிர்பார்ப்பை திணிப்பதேகூட வன்முறையே. அதுவே அடுத்தகட்டத்தில் நேரடி வன்முறையாக மாறுகிறது ‘முருங்கைக் காயை ஒடிச்சு வளக்கணும், பிள்ளைய அடிச்சு வளக்கணும்’ போன்ற பழமொழிகள் வழியாக குழந்தைகள் மேல் நாம் செலுத்தும் வன்முறையை நமது மரபு நியாயப்படுத்துகிறது.

பெண்களை கோழைகளாகவும் ஆண்களை முரடர்களாகவும் ஆக்குகிறது இந்த வன்முறை. அதுவே நம் சமூகத்தில் உள்ள பெரும்பாலான குடும்பங்களின் உளவியல் அமைப்பு என்றால் அது மிகையல்ல. நம்முடைய குடும்பங்கள் வன்முறை நொதித்துக் கோண்டே இருக்கும் அமைப்புகள். பல வீடுகளில் ஒவ்வொரு நாளும் நேரடியான உடல்சார்ந்த வன்முறை நிலவுகிறது. குழந்தைகள் வன்முறையைக் கண்டும் அதற்கு ஆளாகியும் வளர்கிறார்கள்.பின்னர் அந்த மனிதர்களின் வாழ்க்கை முழுக்க அந்த வன்முறை இருந்துகொண்டே இருக்கிறது. குடும்ப வன்முறை என்பது உண்மையில் ஒரு விதை. அது சமூகத்தின் ஆழ்மனதில் விதைக்கபப்டுகிறது. முளைத்து கொண்டே இருக்கிறது. உள ஆழத்தின் வன்முறை விதைகள் உறங்கும் மனிதன் ஏதோ வகையில் கடுமையான பாதிப்பு கொண்டவன்.

மூத்த மலையாள திரைக்கதை ஆசிரியர் ஒருவர் என்னிடம் முருகேசனின் [பசுபதி] கதாபாத்திரத்தில் இயல்பாகவே அந்த நுட்பம் கைகூடியிருக்கிறது என்று சொன்னார். அவனது தாழ்வுணர்ச்சி, தோள்களை தொங்கவிட்டுக் கொண்டு பதுங்கி நடக்கும் உடல்மொழி, பரிதாபமான பார்வை என ஒரு பக்கம். ஒரு பிரச்சினை என வரும்போது உருவாகும் உச்சகட்ட கொலைவெறி இன்னொரு பக்கம். இளம்பருவ வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த இரு குணங்களையும் பெற்றவர்களாக, ஒரு குணத்தில் இருந்து இன்னொன்றுக்கு மாறக்கூடியவர்களாக, ஒருவகை இரட்டைத்தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள் என்றார்.

உண்மையில் நம்முடைய திரை அலசல்களில் வெயில் அளவுக்கு விவாதிக்கப்பட்ட படம் குறைவு.ஆனால் இன்னமும் கூட விவாதிக்க இடமிருக்கிறது. இளமைப்பருவ வன்முறையைப் பற்றிய எந்த விவாதத்திலும் வெயில் உடனடியாக குறிப்பிடப்படுகிறது. சமீபத்தில் நான் எழுதிய தேர்வு கட்டுரை குறித்த கடிதங்கள் பலவற்றில் வெயில் பற்றிய குறிப்பு இருந்தது. பல வாசகர்கள் தங்கள் இளமை அனுபவங்களை அந்த படத்துடன் இணைத்தே நோக்குகிறார்கள். ‘தந்தை’ என்ற நிலையில் உள்ள வன்முறை அதாவது  ‘நல்ல நோக்கம் கொண்ட வன்முறை’ என்ற கருத்தைப் பற்றி அப்படத்தை முன்வைத்துப் பேசலாம். வன்முறையை நம் சமூகம் எப்படி பெருக்கிக் கொள்கிறது என்று ஆராயலாம். அதற்கான பல நுண்ணிய ஊடுவழிகள் அந்தப் படத்தில் உள்ளன.

உதாரணமாக ஒன்று. உக்கிரமான குடும்ப வன்முறை என்பது பெரும்பாலும் தமிழகத்தில் நடுத்தர சாதிகளிலேயே இருக்கிறது. அதற்குக் காரணம் அந்த குடும்பங்களில் குடும்பத்தலைவர் மிக மிக வலிமை கொண்டவராக , எதிர்த்தே பேசமுடியாதவராக இருக்கிறார். பெண்களின் குரல் ஒலிப்பதேயில்லை.  அச்சமூகங்களில் ஆண் என்பவன் வன்முறையாலேயே அடையாளப்படுத்தப்பப்டுகிறான்.மீசை கிருதா என உடல்தோற்றமே அதற்கு ஆதாரமாகிறது. எங்கும் எதிலும் வன்முறைநோக்கை முன்னெடுபப்தே ஆண்மை என்று எண்ணப்படுகிறது. வெயில் அதைபப்ற்றிய பல நுண்விவரிப்புகளை முதல் காட்சி முதலே கொடுத்துச் செல்கிறது. வெளிவாழ்க்கையில் உள்ள தீவிரமான வன்முறையின் இன்னொரு வடிவமே குடும்பத்திற்குள் உள்ள வன்முறை என்பதே வெயில் அளிக்கும் சித்திரம். சமூக வன்முறை என்பது கிளைகள். குடும்ப வன்முறை வேர்.

அந்த வன்முறையால் உடனடியாகப் பாதிக்கப்படுவது குடும்பத்தின் பெண்களும் குழந்தைகளுமே. பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகமாகப் பேசபப்ட்டாலும்  குழந்தைகளுக்கு எதிரான வன்முறை இந்த திரைப்படத்திலேயே உக்கிரமாக வெளியாகியது. அதுவே இந்த ஆக்கத்தின் முக்கியத்தும்.

‘வெயில்’ வசந்தபாலன் என் நண்பர். இப்போது ‘அங்காடித்தெரு’வில் சேர்ந்து பணியாற்றுகிறோம். ‘வெயில்’ அவருக்கும் தயாரிப்பாளர் சங்கருக்கும் விருதுகளை அளித்தபடியே இருக்கிறது. இந்த தேசிய விருது அவருக்கு மேலும் உற்சாகத்தையும் நம்பிக்கையும் அளிக்கும். அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

தேர்வு

முந்தைய கட்டுரைகீதா உபநிடதம்
அடுத்த கட்டுரைகதாநாயகன் தேர்வு