காந்தியின் பிள்ளைகள் – 1

1. ஹரிலால்

மதுரையில் ஒரு திருமண நிகழ்ச்சியில் ஓர் இஸ்லாமிய நண்பரைச் சந்தித்த்தேன். மிதவாத நோக்கு கொண்டவர், அறிஞர் என்பது அவரைப்பற்றிய என் கணிப்பு. நான் எழுதும் காந்தியைப் பற்றிய கட்டுரைகளைப் பற்றி இயல்பாகப் பேச்சுவந்தது. அவர் ”காந்தியைப்பற்றி நாம தெரிஞ்சுக்கிட்டதெல்லாம் ஒண்ணுமே இல்லை. அவர் வேற ஆளு. அந்த உண்மைகளை எல்லாம் மறைச்சிட்டாங்க…” என்றார்.

நான் ”என்ன உண்மைகள்?” என்றேன். அவர் ”காந்தியின் பிள்ளைங்களைப் பத்திக் கேள்விப்பட்டிருக்கீங்களா? அவங்களைப்பத்தி யாருமே பேசறதில்லை. அவங்களிலே ஒருத்தர் பாகிஸ்தானுக்குப் போய் அங்கேதான் இருந்து இறந்தார். காந்தியைப்பத்தி ஏகப்பட்ட விஷயங்கள் சொல்லியிருக்கார்” என்றார்.

நான் ”ஹரிலால் காந்தியைச் சொல்கிறீர்களா? அவர் முஸ்லீமாக மதம் மாறினாரே ஒழிய பாகிஸ்தானுக்குப் போகவில்லையே” என்றேன். ”இல்லை. இவர் இன்னொருத்தர். இவர் காந்தி பெண்களுடன் படுத்ததைப் பாத்துட்டு காந்தியை வெறுத்து  பாகிஸ்தான் போய்ட்டார்” என்றார். எனக்கு அப்படி ஒரு தகவலே இல்லை. நான் உறுதியாக ”இல்லை. அவரது நான்கு மைந்தர்களைப் பற்றியும் என்னால் உறுதியாகவே பேசமுடியும்… ” என்றேன்

”உங்களுக்கு ஒண்ணும் தெரியாது…அரசாங்கம் பொய் சொல்றதைத்தான் நீங்களும் சொல்றீங்க. காந்தி அவரோட மகன்களை அவமானம் பண்ணி துரத்திவிட்டார். அவங்க அவரை வெறுத்தாங்க, நாட்டைவிட்டே ஓடிப்போனாங்க…” என்றார். நான் தகவல்களைச் சொல்ல ஆரம்பித்தேன். கல்யாணப்பந்தி. சாப்பிட்டபடியே நான் பேசிய கொஞ்சநேரத்தில் கண்டுகொண்டேன் நான் சொல்வதைக் கவனிக்கவே நண்பர் தயாராக இல்லை.

என் வழக்கமான குசும்புக்கு ஏற்ப வேண்டுமென்றே பிடிவாதமாகப் பேசினேன். நண்பர் கழிப்பறை நோக்கி பாய்ந்து செல்ல நானும் கூடவே சென்றேன். கழிப்பறை வாசலில் காத்து நின்று அவர் வெளியே வந்ததும் மீண்டும் பேச ஆரம்பித்தேன். நண்பர் தவியாய் தவித்தார். உள்ளூரச் சிரித்துக்கொண்டிருந்தேன். பின்னர் கொஞ்சம் அனுதாபம் தோன்றி விட்டுவிட்டேன். அவர் பாய்ந்து காணாமல் போனார்.

என் அனுபவத்தில் காந்தியைப்பற்றிய நல்லெண்ணம் கொண்ட இஸ்லாமியர்களை அனேகமாகக் கண்டதே இல்லை — மனுஷ்யபுத்திரன் மட்டுமே ஒரு இடத்தில் காந்தியைப்பற்றிய சாதகமான ஒரு குறிப்பை எழுதியிருக்கிறார். இஸ்லாமிய மதச்சூழலில் காந்தியைப் பற்றிய அவதூறுகள் ஒரு நூற்றாண்டுக்காலமாக பிரச்சாரம் செய்யப்பட்டு வருகின்றன. அவற்றைக் கேட்டே அவர்கள் வளர்கிறார்கள். அவற்றை மறுபரிசீலனை செய்யுமளவுக்கு வாசிப்பும் அவர்களிடம் இருப்பதில்லை.

ஆனால் அதைவிட முக்கியமான வினா அவதூறுகளை யார் சொன்னாலும் உடனடியாக நம்பும் மனநிலை அவர்களிடம் எப்படி உருவாகிறது என்பதுதான். ஆதாரங்கள் முன்வைக்கப்படும்போது அதைக் கேட்காமல் போகும் அந்தப் பொறுமையின்மை எப்படி வருகிறது? காந்தியை நிராகரிப்பதென்பது இந்தியாவின் சாரமான ஒரு பண்புநிலையை நிராகரிப்பது. அதைச்செய்யாமல் இஸ்லாமிய அடிப்படைவாதத்தையோ இந்து அடிப்படைவாதத்தையோ தக்கவைத்துக்கொள்ள முடியாதென்பதே பதில். மதஅடிப்படைவாதம் பெரும்பாலும் எல்லா இஸ்லாமியர்களின் ஆழத்திலும் இருக்கும். கற்று, கனிந்துதான் சிலர் வெளியே வரமுடியும்.

இஸ்லாமிய மதத்தை தழுவிய ஆறே மாதத்தில் மலையாள எழுத்தாளர் கமலா சுரையா காந்தியை கடுமையாகத் தாக்க ஆரம்பித்தார். ‘தன் சொந்த பிள்ளைளை உயர்நிலைக்குக் கொண்டுவராத காந்தி என்ன ஒரு மகாத்மா?’ என்றார் அவர். காந்தி தன் பிள்ளைகளை அவமதித்தார், கொடுமைப்படுத்தினார், அவர்கள் அவரை நிராகரித்தார்கள் என்ற வழக்கமான பல்லவியைப் பாடினார். காந்தியை நிராகரித்து ஹரிலால் இஸ்லாமுக்கு மாறியதை துதித்தார். ‘சொந்த மக்களின் முன்னேற்றமே வாழ்க்கையின் சாரமாக கருதும் கெ.கருணாகரன் அல்லவா உண்மையான மகாத்மா’ என்று அதற்கு கல்பற்றா நாராயணன் கிண்டலாக பதில் சொல்லியிருந்தார்.

Image

பேரன் பிரபுதாஸ் காந்தியுடன் காந்தி கரிஜன் பெண்கள் பள்ளியில்

காந்தியைப்பற்றிய அரட்டைகளில் அடிக்கடி அவர் தன் மகன்களை ஒழுங்காக வளர்க்கவில்லை என்று பலர் சொல்வதைக் கேட்கலாம். தமிழில் எழுத்தாளர்கள் கூட அவ்வாறு நிறைய எழுதியிருக்கிறார்கள். காந்தியைப் பற்றிய யாருக்கும் தெரியாத உண்மை தங்களுக்குத் தெரியும் என்ற பாவனையில் அதைச் சொல்லி அதற்காக காந்தியை மன்னிப்பார்கள்.

காந்தி தன் குழந்தைகளைப்  அவர்களைப் புரிந்துகொள்ள மறுத்தாரா? அவர்களின் வாழ்க்கையைச் சீரழித்தாரா? மீண்டும் மீண்டும் இந்த தகவல்கள் நம் பொதுமேடையில் வைக்கப்படுகின்றனவே, எவராவது உண்மையை நோக்கி ஓர் எளிய ஆய்வையாவது செய்திருக்கிறார்களா? இதைச் சொல்பவர்களிடம் ‘சரி காந்தியின் நான்கு பிள்ளைகளின் பெயர்களைச் சொல்லுங்கள் பார்ப்போம்’ என்று கேளுங்கள். நான் கேட்ட ஒருவர்கூட பதில் சொன்னதில்லை.

காந்திக்கு நான்கு பிள்ளைகள். மூத்தவர் ஹரிலால் (1888-1948)  அடுத்து மணிலால் (1892-1956)  மூன்றாவது  ராம்தாஸ் (1897-1969) கடைசியில் தேவதாஸ் (1900-1957). ஹரிலால் காந்தி தம்பதியர் இந்தியாவில் இருக்கையிலேயே பிறந்துவிட்டார். பிற மூவரும் தென்னாப்ரிக்காவில் அவர்கள் இருக்கும்போது பிறந்தவர்கள்.

உண்மையில் காந்தி பிள்ளைகளை எப்படி நடத்தினார்? நாம் சாதாரணமாகக் காணும் ‘பாசப்பிழம்பான’ அப்பா அல்ல காந்தி. அவருக்கு அவர் நம்பிய விழுமியங்களே முக்கியம். அதற்கு அப்பால் அவருக்கு எதுவுமே பெரிதல்ல. வாழ்க்கை என்பதே அவருக்கு சத்தியசோதனைதான். ஆகவே தான் எந்த நெறியைக் கடைப்பிடித்தாரோ, உலகுக்கு எந்த நெறியை உண்மை என பரிந்துரைத்தாரோ அந்த நெறியைக் கடைப்பிடிக்கும்படி குழந்தைகளை  அவர் வளர்த்தார். மேடையில் கதர் போட்டுக்கொண்டு குழந்தைகளுக்கு பட்டு வாங்கித்தரும் இரட்டைவேடதாரி அல்ல அவர்.

குழந்தைகள் சிறுவர்களாக இருக்கும்போதே காந்தி ஆசிரம வாழ்க்கைக்குள் வந்துவிட்டார். தேவதாஸுக்கு நான்குவயதிருக்கும்போதே அவர்கள் பீனிக்ஸ் ஆசிரமத்துக்கு வந்தாயிற்று. அங்கே பலவகைப்பட்ட மக்கள் இருந்தார்கள். தொழுநோயாளிகள்கூட. அனைவருக்கும் கடமைகள் இருந்தன. காந்தி அனைவரிடமும் சமானமான அன்பையே காட்டினார். சமானமான அக்கறையையே வெளிப்படுத்தினார். தன் குழந்தைகளுக்கு  எந்த சலுகைகளையும் காட்டவில்லை. காட்டியிருந்தால் அவர் காந்தியே அல்ல.

மூத்தவரான ஹரிலால் இந்தியச்சூழலில் பிறந்தவர். 1891ல் காந்தி லண்டனில் பாரிஸ்டர் படிப்பை முடித்து இந்தியா திரும்புவதுவரை காந்தியின் இல்லத்தில் காந்தியை அறியாமல் ஹரிலால் வளர்ந்தார். 1983ல் காந்தி ஹரிலாலை மட்டும் ராஜ்காட்டில் தன் அண்ணனுடன் விட்டுவிட்டு தென்னாப்ரிக்காவுக்கு சென்றார். அங்கே அவர் ஒரு சுதந்திரப்போராளியாக ஆனார். அப்போது ஹரிலால் ராஜ்காட்டில் படித்துக்கொண்டிருந்தார்

காந்தியின் ஆளுமை 1903 ல்தான் புரட்சிகரமான மாறுதல்களுக்கு உட்படுகிறது.  அவர் அதுவரை ஒரு உயர்தர பாரிஸ்டருக்கான வெற்றிகரமான வாழ்க்கை வாழ்ந்தவர். ஆடம்பரமானவர். ஆனால் சட்டென்று அவர் அனைத்தையும் துறக்க ஆரம்பித்தார். எளிமையான வாழ்க்கைக்கும் கடுமையான நெறிகளுக்கும் செல்ல ஆரம்பித்தார். இந்தக் காலகட்டத்திலெல்லாம் வரை ஹரிலாலுடன் காந்திக்கு ஒரு தந்தை என்ற நிலையில் நேரடி உறவே சாத்தியமாகவில்லை. சூழ்நிலைகள் அப்படி அமைந்திருந்தன.

ராஜ்காட்டில் வசதியான குடும்பத்தில் தந்தையின் கண்காணிப்பில்லாமல் வளர்ந்தார் ஹரிலால். அக்காலத்து இந்திய நகர்ப்புற இளைஞர்களின் வாழ்க்கையை நாம் சரத் சந்திரர், மௌனி, குபரா போன்றவர்களின் எழுத்துக்களில் காணலாம். தாசிகளுடன் தொடர்பும் மதுவருந்துதலும் அன்று மிகவும் சாதாரணம். செழிப்பான சூழலில் வாழ்ந்த ஹரிலால் அந்தவாழ்க்கைக்குள் சென்றார்.

கடிதத்தொடர்புவசதிகள் குறைந்த அக்காலகட்டத்தில் தென்னாப்ரிக்கா என்பது மிகநெடுந்தூர நாடு. ஹரிலால் தன் தந்தையின் அறிதல் இல்லாமலேயே குலாப்ஐ மணந்துகொண்டார். ஹரிலாலுக்கு போதிய அறிவுத்திறன் இருக்கவில்லை. மெட்ரிகுலேஷன் தேர்வை எழுதி தோல்வியடைந்தார். சுயமான முடிவெடுக்கும் திறந் இல்லை. ஆகவே எப்போதுமே நண்பர்களே அவர் வாழ்க்கையைத் தீர்மானித்தார்கள்.

ஹரிலால் படிப்பில் கோட்டைவிட்டதை அறிந்தபோது பீனிக்ஸ் ஆசிரமத்தில் இருந்த காந்தி ஹரிலாலை தன்னுடன் வந்து  இருக்குமாறும் தனது போராட்டங்களில் பங்குகொள்ளுமாறும் அழைத்தார். தென்னாப்ரிக்கா வந்த ஹரிலாலை தென்னாப்ரிக்க நிறவெறிக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபடுத்தினார்.

அன்று காந்தி எல்லாவிதமான வசதிகளையும் துறந்து மிக எளிமையான ஆசிரம வாழ்க்கையை வாழ ஆரம்பித்திருந்தார். கடுமையான நெறிகளை தனக்கும் தன்னைச் சார்ந்தவர்களுக்கும் விதித்துக்கொண்டார். பதினெட்டு வயதான ஹரிலாலால் அதை உள்வாங்கிக் கொள்ள முடியவில்லை. ஆசிரமத்தில் காந்தி பிறரை நடத்தியது போலவே ஹரிலாலையும் நடத்தினார். தனிப்பட்ட சலுகைகள் எதையுமே காட்டவில்லை. அது ஹரிலாலை புண்படுத்தியது.

ஏன் கஸ்தூர்பாவாலேயே எளிதில் அந்த மாற்றத்தை ஏற்க முடியவில்லை. அவரும் காந்தியை எதிர்த்து போராடினார். குறிப்பாக காந்தி தீண்டப்படாத சாதியினரை உடன் தங்கவைத்ததும், அவர்களும் பயன்படுத்தும் பொதுக்கழிவறையை முறைவைத்து அனைவருமே சுத்தம்செய்யவேண்டும் என்று சொன்னதும், ஆசாரவாதியான கஸ்தூர்பாயை கொந்தளிக்கச் செய்தன. இன்றைக்கு நூறுவருடம் முன்பு அது எத்தனைபெரிய மீறல் என்பதை இன்று ஊகிப்பது கடினம்.

இளமைக்குரிய ஆவேசமான மூர்க்கத்துடன் காந்தி இருந்தாலும் ஒவ்வொரு முறையும் கஸ்தூர்பாயின் கண்ணீருக்கு முன்னால் அவர் பணிவதை சுயசரிதையில் நாம் காணலாம். மெல்லமெல்ல கஸ்தூர்பாயை தன் தரப்புக்கு முழுமையாக இழுத்தார் காந்தி. அதற்கு கஸ்தூர்பாயின் பரிபூரணமான சுயசமர்ப்பணமும் உதவியது. ஆனால் ஹரிலால் அந்த சீர்திருத்தங்களை ஏற்க இயலாமல் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானார்.

ஹரிலாலிடம் காந்தி மீண்டும் மீண்டும் தன் நோக்கங்களை விளக்கிப் புரியவைக்க முயன்றார். ஆனால் ஹரிலால் வாழ்நாளின் கடைசிவரை  சராசரிக்கும் கீழான அறிவுத்திறனையே வெளிப்படுத்தியவர். அவருக்கு காந்தியை புரிந்துகொள்ளும் ஆற்றல் இருக்கவில்லை. காந்தியே அவருக்கு ஓர் அன்னியராகவே தோன்றினார்.

ஹரிலாலில் நோக்கில் காந்தி தன் சௌகரியமான வாழ்க்கையைப் பறித்துவிட்டார் என்றே தோன்றியது. ஆடம்பரப்பிரியரான ஹரிலால் பண்ணையில் வேலை செய்வதை வெறுத்தார். ஆனால் அனைவருமே உடலால் வேலைசெய்தாகவேண்டும் என்பதுதான் காந்தி கடைசிநாள் வரை முன்வைத்த கோட்பாடு. அதிலிருந்து தனக்கோ தன் பிள்ளைகளுக்கோ அவர் விதிவிலக்கு அளிக்கவில்லை.

மேலைநாட்டுக் கல்வியை முழுமையாக நிராகரித்தார் காந்தி. இந்தியக் கல்விக்காக வாதாடினார். இந்தியாவில் தாய்மொழிவழிக் கல்விக்காக எழுந்த முதற்குரல் காந்தியுடையது. ஆனால் ஹரிலால் பிரிட்டனுக்குச் சென்று பாரிஸ்டர் படிப்பை படிக்க விரும்பினார். அதற்கு காந்தி நிதியுதவி செய்ய வேண்டுமென கோரினார். அனைத்தையும்விட முக்கியமாக அத்தகைய படிப்புக்கான அடிப்படைக் கல்வித்தகுதி ஹரிலாலுக்கு இருக்கவில்லை. அவர் மெட்ரிகுலேஷனே வெல்லவில்லை, கடைசிவரை.

1910-ல் காந்தி தன் பொருளியல்தேவைக்காக வேலைசெய்வதை முற்றாக நிறுத்திவிட்டிருந்தார். நேட்டால் இந்தியக் காங்கிரஸின் ஊழியராக குறைவான உதவித்தொகை பெற்றுக்கொண்டு துறவுவாழ்க்கை வாழ ஆரம்பித்துவிட்டிருந்தார். ஆகவே அவர் பொருளியல்ரீதியாகவும் ஹரிலாலின் கோரிக்கையை ஏற்க முடியவில்லை. தென்னாப்ரிக்க தொழிலதிபர்களிடம் நிதியுதவிபெற்று தரும்படி ஹரிலால் கோரினார். ஆனால் காந்தி அதை முறையான செயலாக எண்ணவில்லை.

விளைவாக ஹரிலால் 1911-ல் எல்லா குடும்ப உறவுகளையும் நிராகரித்து வெளியேறி இந்தியா வந்தார். முன்னரே அவருக்கு மதுப்பழக்கம் இருந்தது.  இந்தியாவில் மெட்ரிகுலேஷன் தேர்வை பலமுறை எழுதி தோற்றார். காந்தி குடும்பத்தின் செலவில் சோம்பேறியாகவும் குடிகாரராகவும் வாழ்ந்தார். விபச்சாரத்தில் வெளிப்படையாகவே ஈடுபட்டார். அகமதாபாதில் அவருக்கு மூன்று ஆசைநாயகிகள் இருந்தார்கள்.

1915-ல் காந்தி இந்தியா திரும்பிய போது முற்றாக நொடித்துப்போய் ஆசைநாயகிகளால் துரத்தப்பட்டு கடன்காரர்களால் வேட்டையாடப்பட்ட ஹரிலால் மீண்டும் காந்தியிடம் வந்து தனக்கு தொழில் தொடங்க பணம் தரும்படி கட்டாயப்படுத்தினார். காந்தி அப்போது கிட்டத்தட்ட பணமே இல்லாத பொது ஊழியராக இருந்தார். தன்னுடன் இந்திய சுதந்திரப்போரில் ஈடுபடும்படி ஹரிலாலிடம் சொன்னார் காந்தி. அவரது கெட்டபழக்கங்களை விட்டுவிடும்படி மன்றாடினார். ஆனால் ஹரிலால் மீண்டும் கட்டாயப்படுத்தவே ஹரிலால் திருந்த ஒரு வாய்ப்பாக அமையட்டும் என எண்ணி தன் நெறிகளை கொஞ்சம் தளர்த்திக்கொண்டு கல்கத்தாவில் ஒரு நிறுவனத்துக்கு காந்தி அவரை சிபாரிசு செய்தார்.

கல்கத்தாவில் வேலைசெய்த ஹரிலால் அங்கே பெரும் பணத்தை ரகசியமாகக் கையாடல் செய்து ஒரு தனி வியாபாரத்தை ஆரம்பித்தார். அதில் ஊதாரித்தனமாக அந்தப்பணத்தை இறைத்து அழித்தார். மோசடிக் குற்றச்சாட்டு வந்தபோது காந்தி அதிர்ச்சி அடைந்தார். கடும் மன உளைச்சலுடன் எது நியாயமோ அதைச்செய்யும்படியும் தன் மகன் என்ற கரிசனை தேவையில்லை என்றும் அதிகாரிகளிடம் காந்தி சொல்லிவிட்டார். ஹரிலால் சிறைக்குச் செல்ல நேர்ந்தது.

சிறைமீண்ட ஹரிலால் மீண்டும் காந்தியிடம் வந்து அடைக்கலம் புகுந்தார். அவரது அடிப்படை இயல்பை மிக நன்றாக உணர்ந்திருந்தும் காந்தி அவரை அணைத்துக் கொண்டார். அவரது உடல்நலத்தை தேறச்செய்யவும் தீய பழக்கங்களை நீக்கவும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு  கடுமையாக முயன்றார். ஆனால் ஹரிலாலின் இயல்பான தீய இயல்பு அவரை விடவில்லை. காந்தி ஹரிலாலிடம் காட்டிய பிரியத்தையே ஹரிலால் சுயநலமாகப் பயன்படுத்திக்கொண்டார். ஒரு மோசடிக் கும்பலைச் சேர்த்துக்கொண்டு காந்தியின் பெயரை பயன்படுத்தி பலரிடம் பங்கு பணம் பெற்றுக்கொண்டு போலியான தொழில்களை ஆரம்பித்து அந்தப்பணத்தை குடித்தும் விபச்சாரம் செய்தும் செலவழித்தார்.

கடைசியில் ஏராளமான ஏழைகளின் பணம் பறிபோயிற்று என்பது வெளியாகியது. மோசடிக்கு ஆளான ஏழைகள் அரசுக்கு புகார் செய்தார்கள். காந்தியின் வாழ்க்கையின் மிக மோசமான நாட்கள் அவை. காந்தியே மோசடி செய்ததாக வதந்திகள் பரப்பப்பட்டன.  ஹரிலால் இனிமேல் தன் மகன் அல்ல என்று வெளிப்படையாக அறிவித்தார் காந்தி. அவருக்கு எவரும் தன் பெயரால் நிதியளிக்க வேண்டாமென கேட்டுக்கொண்டார்.

காந்தியை துறந்து சென்று பெருங்குடிகாரராக மாறிய ஹரிலால் அதன் பின்னரும் காந்தியின் பெயரைச் சொல்லி பலரிடமிருந்தும் நிதி பெற்று குடித்து அலைந்தார். பலமுறை கைகலப்புகளுக்காகவும், சில்லறைத் திருட்டுகளுக்காகவும், மோசடிக்காகவும், பொது இடங்களில் விபச்சாரம் செய்ததற்காகவும் கைது செய்யப்பட்டார். தன் மனைவி குலாபை தினமும் அடித்து உதைத்துச் சித்திரவதை செய்தார். தன் குழந்தைகளுடன் தாய்வீட்டுக்கு தப்பி ஓடிய குலாபை அங்கே சென்று பணம்கேட்டுக் கொடுமை செய்தார்.

மனமுடைந்து படுத்த படுக்கையான குலாப் காலராவால் இறந்தார். அவரது குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பு காந்தியிடம் வந்தது. இக்காலகட்டத்தில் குழந்தைகளை தன்னுடன் கூட்டிச்செல்லப்போவதாகச் சொல்லி மிரட்டி காந்தியிடம் பணம் பறித்தார் ஹரிலால். காந்தி அந்நிலையில்கூட ஹரிலாலை தன்னுடன் இருக்கும்படி மன்றாடினார். ஆனால் அதற்குள் தெருவாழ்க்கைக்குப் பழகிவிட்டிருந்தார் ஹரிலால்.

தனக்கு மீண்டும் திருமணம் செய்து வைக்கும்படி காந்தியைக் கட்டாயப்படுத்தினார் ஹரிலால். ஆனால் ஹரிலாலின் குணம் தெரிந்த காந்தி அதைச் செய்யமுடியாது என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டார். அதற்காக காந்தியை வசைபாடி கடிதங்கள் எழுதினார். புலன்களை அடக்கப்பழகும்படி ஹரிலாலுக்கு பதில் கடிதம் எழுதினார் காந்தி.

காந்தி ஹரிலாலிடம் பேச, அவரிடம் தன் கொள்கைகளை விளக்க மீண்டும் மீண்டும் முயன்றார். ஆனால் அதற்கான நிலையில் ஹரிலால் இருக்கவில்லை. பிற மகன்களிடம் சொல்லி ஹரிலாலை மீட்க பலமுறை முயன்றார் காந்தி. ஹரிலாலை ஒருமுறைகூட அவர் குறைசொன்னதில்லை, தன் பிழையாலேயே அவர் அப்படி ஆனார் என்றார். அவரை  திருத்தும் அளவுக்கு தன்னிடம் ஆன்மபலம் இல்லை என்பதே பிரச்சினை என்றார்.

1942-ல் முஸ்லீம்லீக் பாகிஸ்தான் கோரிக்கையை முன்வைத்து கடுமையான காந்திய எதிர்ப்பு பிரச்சாரத்தை நடத்தியபோது இஸ்லாமிய மதகுருக்கள் ஹரிலாலிடம் பேசி அவரை முஸ்லீமாக மதம் மாற்றினார்கள். அப்துல்லா காந்தி என அவர் மாறினார். முஸ்லீம்கள் அவரது கடன்களை அடைத்தார்கள். முஸ்லீம் உடையில் அவரை நாடெங்கும் கொண்டுசென்று முஸ்லீம் லீக் கூட்டங்களில் காந்தியைப் பற்றிய அவதூறான வசைகளைச் சொல்ல வைத்தார்கள். சென்னைக்குக் கூட ஹரிலால் வந்திருக்கிறார். பல மேடைகளில் கடும் போதையில் ஹரிலால் மயங்கி விழுந்திருக்கிறார். ஆனால் கராச்சியில் ஒருமேடையில் ஒரு முல்லா காந்தியைப்பற்றி அவதூறாகப் பேசியபோது ஹரிலால் செருப்பை உருவி அவரை அடித்தார்.

ஹரிலாலின் மதமாற்றம் காந்தியை கடுமையாகப் புண்படுத்தியது. ஹரிலால் இஸ்லாமுக்கு  அந்த மதத்தின் நம்பிக்கைகளை ஏற்று மதம் மாறியிருந்தால் அதை தானே வரவேற்றிருப்பேன் என்றார் காந்தி. ஒரு மது அடிமையை அவரது பலவீனத்தைப் பயன்படுத்திக்கொண்டு அரசியல் நோக்குடன் மதம் மாற்றுவதும், அவனது தந்தையை வசைபாடும் பாவச்செயலை செய்ய வைப்பதும், தீர்க்கதரிசியையே இழிவுசெய்வதாகும் என்று வருந்தினார்.

என்ன வேடிக்கை என்றால் ஹரிலால் மேடையிலேயே தனக்கு மது வாங்கித்தந்ததனால்தான் மதம் மாறினேன் என்று சொல்லியிருக்கிறார்.  அவரது தேவை முடிந்ததும் முஸ்லீம்லீக் அவரைக் கைவிட்டது. மீண்டும் தெருவில் அலைந்த ஹரிலால் இந்துவாக திருப்பி மதம் மாறினார். ஆனால் ஹரிலால் திருப்பி இந்துவாக மதம் மாறியதையும் காந்தி ஏற்கவில்லை. ஹரிலால் தீனை ஏற்றுக்கொண்ட காரணத்தால் அந்த மதத்துக்கே விசுவாசமாக இருக்கவேண்டும், எல்லா மதங்களும் ஒன்றே என்றார் காந்தி.

1947-ல் இந்தியா சுதந்திரம் பெறும்போது ஹரிலால் தெருப்பிச்சைக்காரனாக வாழ்ந்து கொண்டிருந்தார்.  1948-ல் காந்தியின் இறுதி நிகழ்ச்சிகளின்போது ஹரிலால் வந்திருந்தார். தந்தைக்கு ஆற்றிய பிழைகளை எண்ணி கதறி அழுதார். ஆனால் அவரை எவரும் அடையாளம் காணவில்லை.

காந்தியின் மரணம் ஹரிலாலுக்கு காந்தியை புரியவைத்தது. அவரது கண்களை மறைத்திருந்த வீம்பு இல்லாமலாகியது. காந்தியை எண்ணி மனம் வெதும்பிக் கொண்டிருந்தார். ஈரலும் கெட்டுபோயிருந்தது. காந்தி இறந்து ஐந்து மாதம் கழித்து மும்பையில் நகராட்சி மருத்துவமனையில் ஹரிலால் இறந்தார் [1948  June 18]

ஹரிலாலுக்கு குலாபில் ஐந்து குழந்தைகள். அவரது மூத்தமகள் ராமிபெஹனின் மகளான நீலம் பரிக் ஹரிலாலின் வாழ்க்கையை காந்திஜியின் தொலைந்துபோன நகை [Gandhiji’s Lost Jewel: Harilal Gandhi, Nilam  Parikh ]என்ற பேரில் ஒரு நூலாக எழுதியிருக்கிறார்.  சந்துலால் பாகுபாய் தலால் எழுதிய ‘ஹரிலால் காந்தி ஓர் வாழ்க்கைவரலாறு ‘ [Harilal Gandhi: A Life , Chandulal Bhagubhai Dalal.] அனைவராலும் குறிப்பிடப்படும் நூல்.

ஹரிலாலின் வாழ்க்கை ஒரு பெரும் துயரநாடகம். ஆனால் அது அபூர்வமானதும் அல்ல. இந்தியாவில் எவர் ஒருவர் தன் கொள்கையை முழுமையாகச் சொந்த வாழ்க்கையிலும் கடைப்பிடிக்கிறாரோ அவருக்கு இந்தச் சோதனை கண்டிப்பாக வந்திருக்கிறது. பல காந்தியர்களின் வாழ்க்கையில் இதைக்காணலாம். கணிசமான ஆரம்பகால கம்யூனிஸ்டுகளின் சொந்தவாழ்க்கையிலும் இந்த சிக்கலைக் காணலாம். இலட்சியவாதமும் குடும்பநலனும் முரண்படுபவை என்பதே எளிமையான விளக்கம். குடும்பநலன் என்பது சுயநலத்தையே சாரமாகக் கொண்டது.

எவர் பிள்ளைப்பாசத்தால் கொள்கைகளைச் சமரசம் செய்கிறார்களோ அவர்கள் காலப்போக்கில் அவர்களின் மொத்தக் கொள்கைகளையும் இழப்பதைக் காணலாம். அவர்களின் மகத்துவம் மிக்க வாழ்க்கையில் அந்தப் பாசம் தீராத களங்கமாக கடைசி வரை இருந்துகொண்டிருக்கும். இரு சிறந்த உதாரணங்கள் ஒன்று, நேருவுக்கு இந்திராகாந்தி. இன்னொன்று மொரார்ஜி தேசாய்க்கு காந்திபாய் தேசாய். தன் மகனுக்கு காந்தியின் பெயரை எத்தனை பேருவகையுடன் போட்டிருப்பார் மொரார்ஜி என்று சிந்திக்கும்போது கடைசியில் பேராசைகொண்ட மகன் மீதான பாசத்தால் மொராஜி பட்ட துன்பம் காந்தி பட்ட துன்பத்தைவிட அதிகம் என்று நான் எண்ணுவதுண்டு.

ஹரிலாலை எப்படிப் புரிந்துகொள்வது? தந்தை மகன் உறவென்பது எளிமையான ஒற்றைச் சமன்பாட்டில் நிற்பது அல்ல. தந்தையின் இயல்புகளின் வாரிசாகவும் தந்தையை நிராகரிப்பவனாகவும் மகன் வளர்கிறான். எந்த மகனிடத்திலும் உள்ளூர தந்தைநிராகரிப்பும் தந்தைவழிபாடும் விசித்திரமாகக் கலந்த நிலையில்தான் இருக்கும். அவற்றுக்கு இடையேயான சமன்பாடு என்பது பெரும்பாலும் வாழ்க்கைச்சூழல்களால் தன்னிச்சையாக உருவாவதே. அதை விதி என்றே சொல்லவேண்டும்.

காந்தியம் என்ற உயர்லட்சியவாதத்தைத் தாங்கிக்கொள்ளும் அறிவுத்திறனும் ஆன்மீகத்திறனும் கொண்டவரல்ல ஹரிலால். ஆனால் அவர் தன் தந்தை தனக்குமட்டும் தந்தையாக இருக்க வேண்டுமென விரும்பினார். தன் மகத்தான தந்தை தனக்கு அளித்ததை வாங்க திராணி இல்லாமல் தவித்தார். அந்த ஆங்காரமே அவரை காந்திக்கு எதிரியாக ஆக்கியது

தன் எதிரியின் வாசல்முற்றத்துக்குச் சென்று வயிற்றை அறுத்து ஹராகிரி செய்யும் ஜப்பானியனைப்போன்றது ஹரிலாலின் மரணம். தந்தையின் கண்முன் அவர் தன்னை அழித்துக்கொண்டார். அவர் முன் செத்துக்கிடக்க ஆசைப்பட்டார். ஹரிலால் ஒருபோதும் தந்தையை மறக்கவில்லை. உண்மையில் தந்தையை அன்றி எவரையுமே ஒரு பொருட்டாக நினைக்கவும் இல்லை. அவர் இல்லாமல் ஹரிலாலுக்கு வாழ்க்கை இல்லை. அவர் காந்தியின் கருநிழல். உரு மறைந்ததும் நிழலும் மறைந்தது.

ஹரிலாலுக்கு இன்னொரு விளக்கமும் உண்டு. ஹரிலால் காந்தியின் மறுபக்கம். காந்திக்கு எதிராக தன்னை ஆக்கிக்கொண்டவர் என்பதனாலேயே காந்தி எவற்றையெல்லாம் தவிர்த்தாரோ அவற்றை எல்லாம் ஹரிலால் செய்தார். காந்தியிடம் ஒடுங்கியவை எல்லாமே ஹரிலாலில் பேருருவம் கொண்டு எழுந்தன. காமம், ஊதாரித்தனம், குடி, குரூரம்,மோசடித்தனம்! பிரமிப்பூட்டும் சமன்பாடு இது. காந்தியின் இடைவெளிகளில் சரியாகப் பொருந்தும் மறுபாதி என்று கூட ஹரிலாலைச் சொல்லலாம்.

காந்தி தன்னிடமிருந்து துரத்திவிட்ட அனைத்தும் ஹரிலாலாக மாறி அவர் முன் வந்து நின்று அவரைச் சவாலுக்கு அழைத்தன. ‘நீ மகாத்மா என்றால் என்னை வென்றுசெல்!’ எனறன. காந்தி தன் வாழ்க்கையில் எதிர்கொண்ட ஆகப்பெரிய சோதனையே ஹரிலால்தான். ஹரிலால் மீது அவர் பெரும்பாசம் கொண்டிருந்தார் என தேவதாஸ் காந்தி எழுதினார். ‘தனது அரிய நகை’ என ஓர் இடத்தில் காந்தி ஹரிலாலைச் சொல்லியிருக்கிறார். காந்தியின் ஆத்மாவில் இறங்கிய கட்டாரி போன்றவர் ஹரிலால். தன் கண்ணீரால் தவத்தால் அந்த காயத்தை ஆற்றிக்கொண்டு எழுந்தார் காந்தி.

இந்த நாட்டுக்காக காந்தி செய்த மாபெரும் தியாகத்திற்கு அவர் ஹரிலாலை விலையாகக் கொடுத்தார் என்றுகூடச் சொல்லலாம்.  இந்த ஒரு காரணத்துக்காகவே அவரது அத்தனை அயோக்கியத்தனங்களுடனும் ஹரிலால் மன்னிக்கத்தக்கவர்.

ஆனால் காந்தி ஹரிலால் விஷயத்தில் ஏதேனும் பிழை செய்தாரா என்ன? இல்லை என்பதை எந்த ஒருவரும் அறியலாம். ஹரிலால் காந்தியின் வழிகாட்டலில் வளரவில்லை என்பது அவரது பிழை அல்ல. அன்றும் இன்றும் அத்தகைய சூழல் தந்தையரில் பாதிப்பேருக்கு விதிக்கப்பட்டிருக்கிறது. தன்னிடம் வந்தபின் ஹரிலாலை நல்வழிப்படுத்த நம்பமுடியாத அளவு பொறுமையுடன் மீண்டும் மீண்டும் காந்தி முயல்வதைக் காண்கிறோம். ஆனால் ஏற்கனவே கெட்டிப்பட்டுப்போன ஹரிலாலின் ஆளுமையை அவரால் ஒன்றுமே செய்யமுடியவில்லை. ராஜ்காட்டில் இருக்கையிலேயே விபச்சாரத்தில் மோகம் கொண்டுவிட்ட ஹரிலால் வேறெதிலுமே கவனம் செலுத்தாதவராக ஆகிவிட்டிருந்தார்.

காந்தி எத்தனை முறை ஹரிலாலை மன்னித்திருக்கிறார், எத்தனை முறை ஹரிலாலுக்கு வாய்ப்புகளை உருவாக்கி அளித்திருக்கிறார் என்று பார்க்கையில் வியப்பே ஏற்படுகிறது. ஒவ்வொருமுறையும் அவரது நம்பிக்கையை குரூரமாகச் சிதைத்தபின் ஹரிலால் திரும்பிவருகையில் காந்தி அவரை கண்ணீருடன் ஏற்றுக்கொள்கிறார்.  பழியை தானே சுமக்கிறார்.  ஆனால் காந்தியின் ஒவ்வொரு பெருந்தன்மையும் ஹரிலாலை மேலும் கீழ்மகனாகவே ஆக்குகிறது. கடைசிவரை காந்தி ஹரிலாலை மன்னித்து மீட்க முயன்றபடியே தான் இருக்கிறார். மனம்தளராமல் தன் மகனிடம் பேசிக்கொண்டே இருக்கிறார் காந்தி.

இதற்குமேல் ஒரு தந்தை என்ன செய்ய முடியும்? இதை வாசிக்கும் நீங்களோ நானோ இந்த அளவிற்கு பொறுமையைக் காட்டியிருப்போமா என்ன ? நமது மனசாட்சியைக் கேட்டுக்கொள்ளலாம். நான் ஒருபோதும் ஒருமுறைக்குமேல் தாங்கிக்கொண்டிருக்க மாட்டேன் என்றே எனக்குப் படுகிறது.

1906 ல் காந்தியிடம் வரும்போது ஹரிலாலுக்கு பதினெட்டு வயது. அவரது ஆளுமை முழுமையாக உருவாகிவிட்டிருந்தது. அவர் சந்திக்கும் காந்தி அவருக்கு முற்றிலும் அன்னியமான ஒரு மனிதர். சில இடைவெளிகளை தவிர்த்தால் ஹரிலால் தந்தையுடன் இருந்ததே இல்லை. ஹரிலாலை கடைசி வரை வேட்டையாடிய எல்லா கெட்ட பழக்கங்களும் அப்போதே ரகசியமாக ஆரம்பித்து விட்டிருந்தன.

ஆனால் காந்தியிடம் இருந்த ஏதோ தவறால்தான் ஹரிலால் அப்படி ஆனார் என்று சொல்லும் ‘ஆராய்ச்சிகள்’  இப்போது உருவாகி வருகின்றன. காந்தியை அவதூறு செய்ய முக்கால் நூற்றாண்டாக முஸ்லீம் லீக் பயன்படுத்தி வரும் அதே அவதூறு இப்போது உளவியலாராய்ச்சியின் வேடம் அணிந்துள்ளது. அந்தக்கோணத்தில் நாடகங்களும் திரைப்படங்களும் இன்று உருவாக்கப்படுகின்றன.

காந்தி ஹரிலாலுக்கு பாரிஸ்டர் ஆகும் வாய்ப்பை மறுத்தமையால் ஹரிலால் அப்படி ஆனார் என்று ஒரு வாதம். ஹரிலால் மெறிகுலேஷன் தேர்வை ஆறுமுறை எழுதி கடைசிவரை வெல்லமுடியாதவர் என்ற உண்மையை இவர்கள் பார்ப்பதில்லை. காந்தி ஹரிலாலின் மனைவி இறந்தபோது மறுமணம்செய்து வைக்க மறுத்து புலனடக்கத்தை உபதேசம் செய்தமையால்தான் ஹரிலால் குடிக்க ஆரம்பித்தார் என்பது இன்னொரு வாதம். பலவருடங்களுக்கு முன்னரே பெருங்குடிகாரராக ஆகிவிட்டிருந்த ஹரிலால் குலாபை மிருகத்தைவிட கேவலமாக நடத்தி சீரழித்ததை ரத்தக்கண்ணீருடன் பார்த்துக்கொண்டிருந்தார் காந்தி. ஆகவேதான் அவர் அதை ஏற்கவில்லை என்பது கவனிக்கப்படுவதில்லை.

காந்தியின் ஆத்மா தன் அருநகைக்காக உதிரம் வடித்தபடியே இருந்தது. தன்னில் இருந்து விலகிய காமமே ஹரிலாலால வந்திருக்கிறது என காந்தி எண்ணினார். தன்னை உபவாசங்கள் மூலம் வருத்திக்கொண்டு அதற்கு பியாயச்சித்தம் செய்ய தயாராக இருந்தார். ஒருபோதும் நெறிகளை விட்டுவிடாத பிடிவாதக்காரரான காந்தி மறுபக்கம் ஹரிலாலை மீனிம் மீண்டும் மன்னித்து மானசீகமாக நெஞ்சோடணைத்துக்கொண்டே இருந்தார்.

ஒருவேளை ஹரிலால் பாக்கியசாலியும்கூட. எத்தனை சீரழிந்தாலும் ஒரு மாமனிதனின் தந்தைப்பாசம் எந்த அளவுக்கு பெருகிவந்து சூழும் என அறியும் வாய்ப்பு அவருக்கல்லவா கிடைத்தது? தவறிப்போன அந்த  ஆடுக்கு அல்லவா ஏசுவின் நெஞ்சோடு சேர்ந்து இதயத்துடிப்பை கேட்கும் பெரும் வாய்ப்பு அளிக்கப்பட்டது!

இந்திய தேசிய காங்கிரஸின் வரலாற்றிலும், இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் வரலாற்றிலும் பல்லாயிரம் தியாகிகளின் சொந்த வாழ்க்கையில் இதே கதை நடந்திருக்கிறது. என் சொந்த அனுபவத்திலேயே இதே கதை எம்.கோவிந்தன், ஜெயகாந்தன் என்ற இரு மாமனிதர்களின் வாழ்க்கையில் ஏறத்தாழ இப்படியே மீண்டும் நிகழ்வதைக் கண்டிருக்கிறேன்.

இது ஒரு நிரந்தரமான சவால். எந்தவிதமான பொதுநலனும் இலட்சியவாதமும் இல்லாத அப்பட்டமான சுயநலமியே லௌகீகதளத்தில் மிகச்சிறந்த தந்தையாக இருக்கமுடியும். ஊழல்செய்தும், லஞ்சம் வாங்கியும், திருடியும் குடும்பத்திற்காகச் சேர்ப்பவர்கள் அக்குடும்பத்தின் பிள்ளைகளால் பாசமிகு தந்தையராகக் கொண்டாடப்படுவதை நாம் கண்டுகொண்டிருக்கிறோம். நேர்மையான தந்தையிடம் ‘எனக்கு நீ என்ன சேர்த்துத் தந்தாய்?’ என்று கேட்கும் மகன்களையும் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

‘மோசமான’ தந்தைகளால் உருவாக்கி நமக்களிக்கப்பட்ட இந்த நாடு ‘மிகச்சிறந்த’ தந்தைகளால் இன்று சீரழிக்கப்படுகிறது என்பதல்லவா உண்மை? நமது யுகம் அயோக்கியத்தனத்தை அரியணையில் அமர்த்தி மகத்தான தியாகங்களில் குறைகண்டுபிடிக்கிறது இல்லையா?

[மேலும்]

முந்தைய கட்டுரைகடிதங்கள்
அடுத்த கட்டுரைபசும்பொன்,கடிதம்