சுனாமி : மீட்சியின் இதிகாசம்

சுனாமி பாதித்த பகுதிகளைத் தொடர்ந்து கண்டுவருகிறேன். நாகப்பட்டினம் போய் மீண்டேன். சென்ற வாரம் எழுதிய மனநிலையில் இருந்து என்னுடைய மனநிலை வெகுவாக மாறியிருக்கிறது. சென்றவாரம் கண்ணில்பட்ட எல்லா எதிர்மறைக்கூறுகளும் இப்போதும் கண்முன் உள்ளன. ஆனால் பொதுவாக இந்தியா என்ற வல்லமையைப்பற்றி என்றுமே என் மனதில் உள்ள சித்திரம் மிக மிக வலுப்பெற்றுள்ளது.

*

முதலில் உறுத்தல்கள். நாகர்கோவில் முதல் நெல்லை வரை சரத் குமார் ரசிகர்மன்றம் பதினாறுவண்ண ஆப்செட் படமாக அவர் சுனாமிக்காக கதறி அழுவதுபோல [அது ஒரு சினிமா ஸ்டில் என்றார்கள்] ஒரு மிகப்பெரும் போஸ்டர் அடித்து ஆயிரக்கணக்கில் ஒட்டியிருந்தார்கள். ஒரு போஸ்டர் நூற்றைம்பது ரூபாய் மதிப்பில் குறைந்தது ஐம்பதுலட்சம் செலவிடப்பட்டிருக்கும்.அவர் கடலோரப்பகுதிக்கு வரவில்லை. அவரது ரசிகர்கள் எட்டிப்பார்க்கவில்லை. அவர் அளித்த நன்கொடை ஏழுலட்சம் என்று நினைக்கிறேன்

*

பலர் மீனவர்களின் ‘திமிர் ‘ பற்றி பேசியபடியே இருக்கிறார்கள். இதில் கம்யூனிஸ்டுகள் அதிகம். ‘ பழைய துணி வேண்டாமாம், தயிர்சாதம் சாப்பிட மாட்டானாம் . இங்க ஊரிலே ஜனங்கள் சோற்றுக்கு அலைகிறார்கள். கொழுப்புதானே ? ‘ என்ற பல்லவி கேட்காத இடமே இல்லை. நம் நாட்டில் உடலால் உழைப்பவனுக்கு அப்படி ஒரு ஒரு திமிர் இருந்தால் அது எத்தனை மகிழ்ச்சிக்குரிய பெருமிதத்துக்குரிய விஷயம்! உண்மையிலே ‘வள்ளம் போதும் சார் வேற ஒண்ணுமே வேண்டாம் ‘ என்ற சொல் நம்மை புளகாங்கிதம் கொள்ளச் செய்கிறது

*

ஒரு ஆரம்பகட்ட குழப்பத்துக்குப் பிறகு ஜெயலலிதா அரசு மிகத் தீவிரத்துடன் இறங்கியிருப்பதாகவே எண்ணத்தோன்றுகிறது. பெரிய அளவில் திட்டங்கள் தொடங்கி அமைச்சர்கள் நேரடிக் கண்காணிப்பில் வேகமாகவே வேலைகள் நடக்கின்றன. இன்றைய நிலையில் தமிழக அரசு பாராட்டுக்குரியது. பொதுவாக சன் டிவி அல்லாத ஊடகங்களும் இதையே சொல்கின்றன.

ஆனால் எல்லா இடங்களிலும் கரைவேட்டிக்காரர்கள் கொத்துகொத்தாக அலைகிறார்கள். ஏராளமான அளவில் ஊழல் நடப்பதாக பேச்சுகள் உள்ளன. சம்பந்தமில்லாதவர்கள் எல்லாம் வள்ளமும் வலையும் போச்சு என்று எழுதிக்கொடுப்பதாக எங்கும் புலம்பல்கள் உள்ளன.

*

சில சமயம்புகார்கள் தனிப்பட்ட கோபங்கள் காரணமாக அம்மக்கள் தங்களுக்குள் வேண்டுமென்றே சொல்வதாகவும் உள்ளன. இப்போது கிராமங்களுக்கு இடையே எப்போதும் இருந்துவந்த பகைகள் வெளியேதெரிய ஆரம்பித்துள்ளன

*

கடலோரங்களில் தற்காலிகக் குடியிருப்புகள் அமைக்கப்படுகின்றன. நிலைமை சரியாகும் வேகம் ஆச்சரியமளிப்பது. இந்தியமனநிலை மிக எளிதாக துயரங்களைத் தாண்டும் வலிமை கொண்டது. எதையும் தாக்குபிடிப்பது. இந்த ஏழைமக்களை விதியெல்லாம் அத்தனை எளிதில் தோற்கடித்துவிட முடியாது.பல இடங்களில் மீன்பிடி தொடங்கிவிட்டது. சந்தையில் மீன்கள்வர ஆரம்பித்துவிட்டன.

*

1986- 88 வருடங்களில் நான் இந்தியாவெங்கும் அலைந்திருக்கிறேன். இந்தியா என்ற யதார்த்தம் பற்றிய ஓர் ஆழமான சுயபுரிதல் எனக்கு உண்டு. இமையம் முதல் குமரி வரை இந்நாட்டை இணைக்கும் ஒரு மைய உணர்ச்சிப்பிணைப்பு உண்டு என்பதை நான் தொட்டறிந்திருக்கிறேன். நமது அரைவேக்காட்டு அறிவுஜீவிகளின் கோட்பாட்டுப் புலம்பல்களையும் அரசியல்வாதிகளின் பிளவுவேலைகளையும் எப்போதும் இளக்காரமாகவும் வெறுப்புடனும்தான் கண்டுவந்திருக்கிறேன் என்றால் அதற்குக் காரணம் இதுதான். விழிப்பிருக்கும் தருணங்களில் அந்த இந்தியாவின் தரிசனம் அடிக்கடி கிடைக்கும். அத்தகைய காட்சிகளில் ஒன்று இது. மொத்த இந்தியாவே ஆதுரத்துடன் கடற்கரை நோக்கிக் கைநீட்டுவதைக் கண்டேன். ஜெயின்கள், மார்வாடிகள், குஜராத்திகள் , வெளிநாடுவாழ் இந்தியர்கள் என்று நிதியும் பொருட்களும் குவிவதைக் கண்டேன். ஒப்புநோக்க தமிழகத்தின் பங்கு குறைவென்றே எனக்கு பொதுவாகத் தோன்றியது.

ஒரு கணத்தில் இந்தியாவே திரண்டு நம் கடற்கரைகளுக்கு வந்தது போல உள்ளது . சில நாட்களில் இவ்வழிவின் தடங்களே எஞ்சாது. அந்த மறு அமைப்பில் இந்தியாவில் அனைத்துப் பகுதிகளின் பங்களிப்பும் இருக்கும். உலகம் முழுக்க உள்ள இந்திய வம்சாவளியினரின் பங்களிப்பும் இருக்கும். ஆம், எந்த வெளிநாட்டு உதவியும் இந்த நாட்டுக்குத்தேவை இல்லை. இந்தியாதான் இலங்கை போன்ற பிற நாடுகளுக்கு உதவவேண்டும்.

இந்தியா எப்படி அரசியலால் சீரழிக்கப்பட்டிருந்தாலும் அதன் ஆத்மா இன்னும் சுடர்விடுகிறது என்பதைக் கண்கூடாகக் காணும் நிமிடங்கள் மிக மிக நெகிழ்ச்சிகரமானவை.

*

தனியார் தொண்டு அமைப்புகள் சிறிய அளவில் ஆக்கபூர்வமாகச்செய்யும் பணிகளின் மகத்துவத்தையும் கண்டேன். மிகச்சிறிய அளவில் செய்யபப்டும் ஒரு நேர்நிலைப்பணிக்கு எதைவிடவும் முக்கியத்துவம் உண்டு என்பதை அறிந்தேன்.

*

விஷயமறிந்தவர்களுக்கே உரிய சோர்வையும் அவநம்பிக்கையையும் மீறி சிலசமயங்களில் மட்டுமே நம்மால் ‘ வாழ்க இந்தியா ‘ என்று சொல்ல முடிகிறது. இது அப்படிப்பட்ட நேரம்

ஜெய் ஹிந்த்!

முந்தைய கட்டுரைசுனாமிப் பேரழிவும் பேரழிவு அரசியலும்: அனுபவக் குறிப்புகள்
அடுத்த கட்டுரைஏழாம் உலகம் (நாவல்) – ஜெயமோகன். – ஹரன் பிரசன்னா