கீதை வழிகள்

சில வருடம் முன்பு என் நண்பர் ஒருவரின் குழந்தைக்கு உடல் நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது சென்று பார்த்தேன். குழந்தையின் தலைமாட்டில் ஒரு பழைய மலையாள பகவத்கீதை நூல் வைக்கப்பட்டிருந்தது. நான் ”இதை யார் படிக்கிறார்கள்?” என்று கேட்டேன். நண்பர், அவரது அம்மாதான் குழந்தைக்கு கெட்ட கனவுகள் காணாமலிருக்கும் பொருட்டு அதை வைத்திருப்பதாகச் சொன்னார். இது இந்தியாவில் சாதாரணம். கீதையை பூசையறையில் வைத்து தொட்டுக் கும்பிடுபவர்கள், அதில் ஒருசில சமஸ்கிருத சுலோகங்களைப் பொருள் உணராமல் முணுமுணுத்த பிறகு வணங்கி எழுபவர்கள், கீதை வரிகளைத் தாளில் எழுதி மெல்லிய வெண்கலக் குழல்களுக்குள் அடைத்து இடுப்பிலும் கழுத்திலும் தாயத்தாக அணிந்து கொள்பவர்கள், கீதை வரிகளை செம்புத்தகட்டில் பொறித்து வீடு கட்டும்போது பூமியில் புதைத்து விடுபவர்கள் என்று நம்மிடையே நம்பிக்கையின் முகங்கள் பல.

அங்கீகரிக்கப்பட்ட சடங்குகளும் சில உள்ளன. வைணவர்கள் (அதிகமும் ஐயங்கார்கள்) இறக்கும் நிலையில் உள்ளபோது அவர் காதில் கீதையில் உள்ள ‘சகல தர்மங்களையும் துறந்து என்னையே சரணடைக’ என்ற வரிகளை ஓதுவது ஒரு முக்கியமான சடங்காகும். இது ‘சரம சுலோகம்’ என்றே இக்காரணத்தால் கூறப்படுகிறது. மரணத்தறுவாயில் கிடப்பவர்முன் கீதை வாசிக்கும் பழக்கம் கேரளத்தில் சில இடங்களில் உள்ளது.

என் மன அமைப்பின்படி எனக்கு எப்போதும் எதிலும் பூரண நம்பிக்கை வந்தது இல்லை. எங்கும் தர்க்கமே முன்னிட்டு நிற்பதனால் ஒன்றை நம்பி ஏற்பது என்பது எனக்குச் சாத்தியமில்லாததாகவே உள்ளது. என் நினைவு தெரிந்த நாளில் இருந்து இன்றுவரை நான் கடவுளை வழிபட்டதில்லை. பிரார்த்தனைகள் செய்ததோ வழிபாடுகள் ஆற்றியதோ இல்லை. இந்த நிமிடம் வரை எனக்கோ குழந்தைகளுக்கோ எவ்வித மதச்சடங்குகளும் செய்து கொண்டதும் இல்லை. இறந்துபோன என் பெற்றோருக்கான நீத்தார் கடன்களைக்கூட அதில் நம்பிக்கை இல்லை என்ற காரணத்தால் நான் செய்யவில்லை. இந்து மதத்தின் ராமன், கிருஷ்ணன், சிவன், விஷ்ணு, பலநூறு சிறுதெய்வங்கள், குலதெய்வங்கள் எதிலும் எனக்கு சற்றும் நம்பிக்கை இல்லை. என்னைப் பொருத்தவரை நான் நம்பாத எதையும் செய்வதும் இல்லை.

அதேசமயம் நம்பிக்கையாளர்களுடன் விவாதிக்கவும் மாட்டேன். என் இளவயதில் எனக்கு நம்பிக்கைகளைப் பற்றி கேலியும் விமர்சனங்களும் இருந்தன. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நான் விவாதிப்பதற்கும், ஏன் சண்டை போடுவதற்கும் தயங்கியதில்லை. உண்மையில் என்னால் எதையும் நம்பமுடியாத காரணத்தால் நம்புபவர்களைக் கண்டால் அவர்களுடைய நம்பிக்கையையும் நம்ப முடியவில்லை. விஷ்ணு வந்து மண்ணில் ராமனாகப் பிறந்தார் என்று ஒருவரால் எப்படி மனமார நம்பமுடியும்? விஷ்ணு பாற்கடலில் பள்ளி கொண்டிருப்பதை ஓர் உண்மை என்று எப்படி ஏற்கமுடியும்? ஏசு உயிர்த்தெழுந்ததையும் அற்புதங்கள் நிகழ்த்தியதையும், குர் ஆன் நேரடியாக விண்ணில் இருந்து இறங்கி வந்ததையும் ஒருவரால் அவரது அந்தரங்கத்திற்கு நேர்மையாக நம்பமுடியுமா என்ன? முடியாது என்றுதான் நான் எண்ணினேன், ஏன் இப்போதும் எண்ணுகிறேன்.

நம்பிக்கையாளர்கள் தங்கள் நம்பிக்கைகள் மீது உறுதியில்லாத காரணத்தால்தான் அதை நிலைநாட்ட மேலும் மேலும் பாடுபடுகிறார்கள். கிறிஸ்தவர்களின் வழிபாடுகளில் தங்களுக்கு அசையாத நம்பிக்கையை அளிக்கும்படித்தான் அவர்கள் முதன்மையாக மன்றாடுகிறார்கள். வழிபாடுகள் சரிந்தபடியே இருக்கும் நம்பிக்கையை ஒவ்வொரு கணமும் கட்டி நிறுத்துவதற்கான ஓயாத போராட்டமேயாகும். நம்பிக்கைகளை மீண்டும் மீண்டும் அறை கூவுகிறார்கள். அறிக்கையிட்டுக் கொள்கிறார்கள். ஒருவருக்கொருவர் சாட்சி சொல்லிக் கொள்கிறார்கள். ‘நான் நம்புகிறேன் நான் நம்புகிறேன்’ என்று ஓயாமல் தனக்குத்தானே சொல்லிக் கொள்கிறார்கள். நம்பிக்கையை உச்சகட்டமாக வலியுறுத்தும் மதங்களைச் சேர்ந்த கிறிஸ்தவரிடமோ இஸ்லாமியரிடமோ சாதாரணமாகப் பேசினால்கூட விரைவிலேயே ‘எனக்கு நம்பிக்கை இருக்கு’ என்ற வரியை ஏதோ ஒரு வடிவில் அவர் சொல்வதைக் கேட்கலாம். அவர் தன் சஞ்சலமுறும் ஆழ்மனத்துக்குத்தான் அப்படிச் சொல்லிக் கொள்கிறார்.

இந்துமத நம்பிக்கைகள் சடங்குகள் மூலம் உறுதிப்படுத்தப்படுகின்றன. கண்களையும் காதுகளையும் நாக்கையும் மூக்கையும் நிறைவு செய்யும் நோக்கம் கொண்டவை சடங்குகள். அழகுபடுத்துவது, இனிய இசை, சுவையான நைவேத்தியங்கள், நறுமணங்கள் என்று புலன்சார் இன்பங்கள்மேல் மனதை ஈர்த்து நம்பிக்கையின் பால் இட்டுச் செல்கின்றன. அடுத்த கட்டத்தில் உருக்கமான பக்திப்பாடல்கள், கவிதைகள், புராணங்கள் மற்றும் கலைகள் வழியாக உணர்ச்சிகரமாக நம்பிக்கையை நிலைநாட்டுகின்றன. மூன்றாம் கட்டத்தில் அடையாளங்கள், படிமங்கள், குறியீட்டுச் செயல்பாடுகள் மூலம் ஆழ்மனதை ஊடுருவுகின்றன. இவ்வாறு பிரக்ஞையின் மூன்று நிலைகளுமே முற்றுகையிடப்பட்டு நம்பிக்கை நிலைநாட்டப்படுகிறது.

நம்பிக்கையாளர்கள் மீதான எள்ளலையும் எதிர்ப்பையும் சுந்தர ராமசாமி வழியாகவே குறைத்துக்கொண்டேன். சுந்தர ராமசாமி மத நம்பிக்கையை ‘மூட நம்பிக்கை’ என்ற சொல்லால்தான் குறிப்பிடுவார். அப்படி அவர் திடமாகச் சொல்லும்போது எதையும் உறுதியாக ஏற்கத் தயங்கும் என் மனம் அதையும் எதிர்த்தது. அவருடன் வாதாடியது. அந்த உறுதியான நிலைப்பாடுகூட ஒருவகை நம்பிக்கையே என்று வாதிட்டு அறிந்துகொண்டேன். இல்லையேல் நாத்திகர்கள் ஏன் ஓயாது வாதிடுகிறார்கள்? ‘நான் நாத்திகன்! நான் நாத்திகன்!’ என்று சலிக்காமல் தனக்குத்தானே கூறிக்கொள்கிறார்கள்? தன்னுடைய நாத்திகத்தன்மையை தனது ஓர் இயல்பு என்று எடுத்துக் கொண்டு சாதாரணமாக இருக்க ஏன் அவர்களால் இயலவில்லை. பெரும்பாலான நாத்திகர்கள் தீவிரமான கிறிஸ்தவர்களைப்போல. அவர்கள் ஒவ்வொரு கணமும் சாத்தானுடன் போராடுகிறார்கள், இவர்கள் கடவுளுடன் போராடுகிறார்கள். ஆழத்தில் அச்சமும் சஞ்சலமும் இல்லாமல் இருக்கும் நாத்திகர்கள் மிக அபூர்வம். சுந்தர ராமசாமி அவர் மகள் மரணப்படுக்கையில் இருந்தபோது சஞ்சலம் கொண்டதை கூறியிருக்கிறார்.

அப்படியானால் இயல்பான நிலை என்றால் என்ன? நம்பிக்கைக்கும் அவநம்பிக்கைக்கும் இடையே ஓயாது ஆடும் ஊசலாக இருப்பதுதான் இயல்பான நிலையா? ஒருமுறை நித்ய சைதன்ய யதியைப் பார்க்க பேருந்தில் சென்று கொண்டிருக்கும்போது நண்பர் சேலம் ஆர்.குப்புசாமியை இதுகுறித்து கேட்டேன். அவர் ஜெ.கிருஷ்ணமூர்த்தி இதற்கு அளித்த பதிலைக் கூறினார். ”கடவுள் என்பது ஒரு கருத்து. கடவுள் இல்லை என்பது இன்னொரு கருத்து” என்று ஜெ.கிருஷ்ணமூர்த்தி பதில் கூறினாராம். அதைப்பற்றி அன்று ஊட்டிக்குச் சென்றதும் நித்யாவிடம் சொன்னேன். நித்யா அதற்கும் முன்னர் ஒருமுறை பால் பிரண்டனின் கேள்விக்கு ரமணர் அளித்த பதிலைக் கூறினார். ‘கடவுள் இருக்கிறார் என்பது ஒரு பொய் – கடவுள் இல்லை என்பது இன்னொரு பொய்.’

மத நம்பிக்கைகள் பற்றி இதை எழுதும்போது எனக்கு ஒரு தெளிவு இருக்கிறது என்று எண்ணுகிறேன். நம்பிக்கைகளை மூடத்தனம் என்று கூறுவது ஒருவகை மூடத்தனம். ரமணர் கூறுவது அதையே. நாம் அறிந்துள்ளவை நம்முடைய துளியினும் துளியான அன்றாட வாழ்வுக்குள் செல்லுபடியாகக் கூடிய சில நடைமுறை உண்மைகள் மட்டுமே. பெருவெளியின் முடிவிலியில் அவற்றுக்கு என்ன மதிப்பு? தன் தரப்பே உண்மை என்று நம்பும் நம்பிக்கையே இங்கு இருபக்கங்களிலும் உள்ளது. மதத்தையும் அதன் நம்பிக்கைகளையும் சதி வேலைகளாகவும் தந்திரங்களாகவும் காண்பது இன்னொரு வகை சதியும் தந்திரமும் ஆகும். அவை ஒருநாள் இல்லாவிட்டால் ஒருநாள் அழிவையே உருவாக்கும். உலகில் உள்ள மாபெரும் மானுடப் படுகொலைகள் அனைத்துமே அறிவு ஜீவிகள் அமைத்துக்கொடுத்த ‘வரலாற்றுச் சதி’ என்ற நம்பிக்கையின் மேடைமீது நிகழ்த்தப்படுபவையே. இதை விரிவாகப் பிறகு பேசலாம்.

சுந்தர ராமசாமியுடன் மதம் குறித்து விவாதித்துக் கொண்டிருந்த நாட்களில்தான் நான் கோவை ஞானியுடன் அறிமுகமாகி, அவர் வழியாக மதம் குறித்த மார்க்ஸிய கருத்துக்களை அறிந்தேன். சோவியத் வெளியீடாக வந்த ‘மதத்தைப் பற்றி’ என்ற சிறிய தொகுப்பு நூல் அவ்வகையில் எனக்கு ஒரு நல்ல தொடக்கத்தை அளித்தது. மதத்தைப் புறவயமாகவும், எதிர்நிலையில் நின்றும் புரிந்துகொள்ளும் முயற்சியில் இன்றுவரை வந்த மிகச்சிறந்த அணுகுமுறை கார்ல் மார்க்ஸிடம் இருந்தே தொடங்குகிறது என்றே நம்புகிறேன். அன்று எனக்குப் பெரிதும் நிறைவளித்த மார்க்ஸிய முரணியக்க வரலாற்றுவாத அணுகுமுறையில் இன்று நான் பல ஓட்டைகளையும் விடுபடல்களையும் காண்கிறேன். ஆனாலும் என் அணுகுமுறையின் அடித்தளம் அதுவே. என் விஷ்ணுபுரம் போன்ற நாவல்களிலும் அடியில் உள்ளது மார்க்சிய வரலாற்றுவாதமே என்று கூர்ந்து வாசிப்பவர்கள் கண்டு கொள்ள இயலும்.

கார்ல் மார்க்ஸ் வரலாற்றின் பரிணாமத்திற்கு ஒரு வரைபடச் சித்திரம் அளிக்கிறார். அது முரணியக்கங்களினால் (டைலடிக்ஸ்) ஆனது. இயற்கையும் மனிதனும் முரண்பட்டு மோதுவதன் மூலம் மானுட வாழ்வு பரிணாமம் கொள்கிறது. உற்பத்தி மற்றும் வினியோகத்தில் செயல்படும் பொருளியல் வல்லமைகள் முரண்பட்டு மோதுவதன்மூலம் மானுடப் பண்பாடு பரிணாமம் கொள்கிறது. மானுட வாழ்வில் முன்னேறுவதற்கான, வென்று முன்செல்வதற்கான ஒரு துடிப்பு உள்ளது. தங்களுக்குள் மோதும் பொருண்மைச் சக்திகளின் வழியாக அந்தத் துடிப்பு தன்னை நிகழ்த்திக் கொள்கிறது. மார்க்ஸிய பொருள் முதல்வாதச் சிந்தனையின் உள்ளுறையாக உள்ள இந்த கருத்துமுதல்வாத அம்சம் ஹெகலிடமிருந்து மார்க்ஸ் பெற்றுக்கொண்டது.

மார்க்ஸின் நோக்கில் மானுடப் பண்பாடு என்பது இந்த பொருளியல் வல்லமைகளின் மோதற்களத்தில் மனிதன் உருவாக்கிக் கொண்ட கருவிகளின் தொகையே. கருத்துக்களும் கருவிகளே. மனிதனின் கை ஒரு முக்கியமான கருவி. இயற்கையுடனும் தன் இனத்தின் உள்முரண்பாடுகளுடனும் அவன் மோதிப் போராடி வளர்ந்து வரும்போது கை பரிணாமம் பெற்று இன்றைய வடிவை அடைந்தது. அதைப் போலத்தான் வேலும் வாளும் மண்வெட்டியும் சுத்தியலும். அதைப் போன்றவையே வீடும் துணியும் சமையல் பொருட்களும். உணவுப் பழக்கமும் பழக்க வழக்கங்களும் அப்படி உருவானவையே. சடங்குகளும் நம்பிக்கைகளும் அப்படி உருவான கருவிகளே. அன்பு, பாசம், உறவு, நட்பு, நம்பிக்கை, துரோகம் போன்ற கருத்துகளும் அப்படி உருவான கருவிகளே. கடவுள், மறுபிறப்பு, பாவ புண்ணியங்கள், மேல் உலகம் ஆகியவையும் கருவிகளே. என் நோக்கில் ஜெ.கிருஷ்ணமூர்த்தியின் கூற்றை நான் மார்க்ஸின் கூற்றுடன் பொருத்தி விரிவுபடுத்திக் கொண்டேன். ஆம், எல்லாமே கருத்துக்கள் மட்டுமே. கருத்துக்கள் எல்லாமே கருவிகள்தான்.

மார்க்ஸின் இந்த விளக்கம் மிக எளிமைப்படுத்தப்பட்ட ஒன்று என்று சிலர் எண்ணலாம். பொதுவாக வரலாற்றில் ஒரு அர்த்தபூர்வமான இணைப்பையும் ஒழுங்கையும் இலக்கையும் கண்டடையும் வரலாற்றுவாத அணுகுமுறைகள் அனைத்துமே எளிமைப்படுத்தலில் இருந்தே தொடங்குகின்றன. மார்க்ஸியம் ஒரு வரலாற்றுவாத நோக்கு மட்டுமே.

இந்த எளிமைப் படுத்தலை விரித்து விரித்து ஏறத்தாழ ஒரு முழுமையான வரலாற்றுச் சித்திரத்தை புறவயமாக அளிக்குமளவுக்கு வளர்ச்சி அடைந்திருக்கிறது. தமிழ்ச்சூழலில் எந்தவிதமான வரலாற்று நோக்கும் இல்லாமல், சமூக நிகழ்வுகளின் ஊடுபாவுகளை சற்றும் விளக்க முடியாமல் மதம் என்பதும் இறைவன் என்பதும் ஏன் தத்துவமேகூட ஒருசாரார் பிறிதொரு சாராரை அடிமைப்படுத்திச் சுரண்டும் பொருட்டு உருவாக்கிக் கொண்ட மோசடியும் சதியும் மட்டுமே என்ற வறட்டுவாதம் முன்வைக்கப்பட்டு, ஓயாமல் பிரச்சாரம் செய்யப்படும் சூழலில் மார்க்ஸிய நோக்கு மிக மிக விரிவான, நுட்பமான ஓர் அணுகுமுறையாகவே படுகிறது.

”மதம் தலைகீழாகத் திருப்பப்பட்ட ஓர் உலகின் பிரக்ஞை. மதம் என்பது ஏறுக்கு மாறாக்கப்பட்ட அந்த உலகு பற்றிய ஒரு கோட்பாடு. அதன் கலைக்களஞ்சியத் தொகுதி, வெகுஜனத் தளத்தில் அதன் தர்க்கம், அதன் ஆன்மீக நிலையின் உச்சம். ஆறுதல் அளிக்கக் கூடியதும் நியாயப்படுத்திக் கூடியதுமான உலகப் பொதுவான ஒரு வழிமுறை. அது மனித சாரத்தின் வரம்பிலா கற்பனை சார்ந்த தன்னுருவாக்கம். மதம் ஒடுக்கப்பட்ட உயிரின் பெருமூச்சு. ஆன்மாவில்லாத சூழலின் ஆன்மாவாக அது அமைகிறது. அதைப்போல இதயமற்ற உலகின் இதயம் அது.” எண்ணற்ற முறை மார்க்ஸியர்களால் மேற்கோளாக்கப்பட்ட இந்தப் புகழ்பெற்ற வரிகளின் சாரத்தை நோக்கி சிந்திக்க முற்பட்டவர்கள் நம் சூழலில் மிகச்சிலரே. இதைத் தொடர்ந்துவரும் ‘மதம் மக்களை மயக்கும் தன்மை கொண்டது” என்ற சொல்லாட்சியை மட்டும் எடுத்துக் கொண்டு, அந்த மயக்க மருந்து மக்களில் சிலர் சுரண்டும் பொருட்டு பிறருக்கு உருவாக்கி அளிப்பது என்று விளக்கம் அளித்து, மதம் சார்ந்த அனைத்தையும் நிராகரிப்பவர்கள்தான் மேற்கூறிய வறட்டுவாதிகள்.

மார்க்ஸின் அடிப்படைக் கோட்பாடு உழைப்பு சுரண்டப்படுவதும் சுரண்டலுக்கு ஆளான வர்க்கம் உழைப்பிலிருந்து அன்னியப்பட்டு அவர்களின் வாழ்க்கை ‘ஏறுக்குமாறாக’ ஆவதும்தான். புற உலகிலிருந்து அகம் நோக்கிச் செல்லாமல் அக உலகில் இருந்து புற உலகை அணுகும் ”கருத்துலகின் தலைகீழ் நடை” இயல்பாக ஆகியது இவ்வாறுதான் என்கிறார் மார்க்ஸ். இதையே நாம் காணும் இவ்வுலகமாக வரையறுக்கிறார் மார்க்ஸ் என்று புரிந்துகொண்டால் இந்த உலகின் பிரக்ஞை நிலையாகவும், இதன் கலைக்களஞ்சியத் தொகுதியாகவும், இதன் ஆன்மீகத் தேடலின் உச்சமாகவும், ஆறுதல் அளிக்கக் கூடியதாகவும் நியாயப்படுத்தக் கூடியதாகவும் மதம் இருப்பதை அவர் நிர்ணயிக்கும் விதத்தை நம்மால் ஏற்கமுடியும்.

ஆனால் மார்க்ஸ் கூறியது போல இவ்வுலகம் ‘தலைகீழாகக்கப்பட்ட’ ஒன்று என்று நான் எண்ணவில்லை. அது மார்க்ஸ் வரலாற்றைப் புரிந்து கொள்ளும் பொருட்டு முன்வைத்த ஒரு தர்க்கமுறை மட்டுமே. வரலாற்றை அப்படி ஒரு தர்க்கபூர்வ பரிணாமம் உடைய ஒன்றாக விளக்கிக் காட்டுவதைத்தான்  வரலாற்றுவாதம் [Historicism] என்கிறார்கள். அப்படி வரலாறு மீது போடப்படும் எந்த ஒரு தர்க்கமும் அரைகுறையானதே என்று நான் நினைக்கிறேன்.

காரணம் வரலாற்றுக்கு அப்படி மனிதர்களால் முற்றாக நிர்ணயித்துவிடக் கூடிய ஒரு தர்க்க ஒழுங்கு இல்லை. இருக்கலாம், இருந்தால் அது மார்க்ஸ் கூறுவது போல மனிதர்கள் சார்ந்ததும் மனிதனை மட்டுமே மையமாக்கியதுமான ஒன்றாக கண்டிப்பாக இருக்காது. ஆகவே வரலாற்று வாதங்கள் அனைத்துமே புனைவுகள்தான். அதாவது மார்க்ஸியம் உட்பட எல்லா வரலாற்று வாதங்களும் கருவிகளே. அதனால் ஒரு வரலாற்று வாதத்தின் பயனை வைத்தே அதை மதிப்பிட வேண்டும். அக்கருவியின் நடைமுறை பயன்பாடும் ஆற்றலும்தான் அதன் முக்கியத்துவத்தைத் தீர்மானிக்கிறது. அது உண்மையா பொய்யா என்பதல்ல.

மார்க்ஸிய வரலாற்றுவாதம் மானுட சமூக அமைப்பை விளங்கிக் கொள்ளவும் அதனுள் சமத்துவமும் பொதுநீதியும் ஓங்கியுள்ள ஒரு மாற்றத்திற்காகப் போராடவும் மிகவும் உதவிகரமானது என்றே நான் நினைக்கிறேன். ஆனால் அதன் மூலம் இதுவரையிலான மானுட நாகரீகத்தின் வளர்ச்சிப் போக்கை தலைகீழாக்கி ஒரு முழுமையான உலகை ஆக்கமுடியும் என்று நான் நம்பவில்லை. அதை வைத்துக் கொண்டு மானுட சிந்தனையின் எல்லா தளங்களையும் ஆராய முடியும் என்பதையும் நான் ஏற்கவில்லை. அக்கருவியை அது எதற்கு உரியதோ அதற்கும் அப்பால் அனைத்திற்கும் பயன்படுத்துவதற்கு நான் எதிரானவன்.

என் நோக்கில் தர்க்கத்தின் தரப்பில் நின்றுகொண்டு நம்பிக்கையை மதிப்பிடுவதற்கு மிகச்சிறந்த அணுகுமுறை மார்க்ஸ் முன் வைத்ததேயாகும். நம்பிக்கை என்பது ஒரு முட்டாள்தனமோ, மனமயக்கோ அல்ல. அது ஒரு மானுடக் கருவி. அறியமுடியாமைகளும் எல்லையின்மைகளும் சூழ்ந்த இவ்வுலகில் தன் வாழ்வை ஒழுங்குபடுத்தி அமைத்துக் கொள்ளவும் தன்னம்பிக்கையுடன் எதிர்காலத்தை உருவாக்கிக் கொள்ளவும் மனிதனால் உருவாக்கப்படுவது. அதைத்தான் அந்தப் புகழ்பெற்ற மேற்கோளில் மார்க்ஸ் கூறுகிறார். அந்தக் கருவி இன்றுவரை தன்னளவில் பயன்பாட்டில்தான் உள்ளது. அந்தக் கருவி தேவைப்படாத ஒரு ‘பொன்னுலகை’யே மார்க்ஸ் கனவு கண்டார்.

மத நம்பிக்கை என்னும் அக்கருவியின் வலிமையால் இன்றுவரை இப்பூவுலகில் பல மகத்தான காரியங்கள் நிகழ்ந்துள்ளன. பல மாமனிதர்கள் தோன்றி மானுடப் பணியாற்றியுள்ளனர். அது சரியா, தவறா அல்லது உண்மையா பொய்யா என்று எவர் தீர்மானிப்பது? அது பயனுள்ளதா இல்லையா என்பதே வினா.

இறை நம்பிக்கைதான் லட்சக்கணக்கான மதப் பணியாளர்களை சேவையின் விளக்குடன் தொலைதூர தேசங்களுக்கு கொண்டு சென்றது. காந்தியைப் போன்ற ஒரு மாபெரும் போராளி நம்பிக்கையைப் படைக்கருவியாக வைத்திருந்தார். தல்ஸ்தோய் போன்ற மாபெரும் படைப்பாளி நம்பிக்கையின் ஒளியிலேயே எழுதினார். ஆகவே குறைந்தபட்ச சிந்தனை கொண்ட ஒருவன் கூட ஒருபோதும் தன் சிற்றறிவின் தளத்தில் நின்றபடி நூற்றாண்டுகளாக மானுடப்பிரவகத்தை வழி நடத்திவரும் நம்பிக்கைகளை எண்ணி நகையாடவோ விமரிசிக்கவோ முனையமாட்டான்… அதேசமயம்  ”கேளுங்கள், நான் நம்பிக்கையாளனல்ல. எனக்கு அது தேவைப்படவில்லை!” என்று கூற அவன் இம்மிகூடத் தயங்கவும் மாட்டான். அது தன் மீதான நம்பிக்கை. ”அனைத்து நம்பிக்கைகளையும் எதிர்க்கிறேன்” என்பது தன் மீதான மூடநம்பிக்கை.

தன் ஒரே மகன் சாலை விபத்தில் இறந்து போகவே முதிய வயதில் மனப்பிறழ்வு வரை சென்ற ஒரு தம்பதியை எனக்குத் தெரியும். அவர்கள் தற்செயலாக கிரிதாரிப் பிரசாத்தின் கீதை உரையைக் கேட்டனர். அது அவர்களை முதலில் தர்க்க பூர்வமாகக் கவர்ந்தது. பிறகு அது இறைவனின் நேரடி வசனமாகவே தெரிந்தது. அதிதீவிர கிருஷ்ணபக்தர்களாக மாறினார்கள். அந்தியில் மனைவி கீதையைப் படிக்க கணவன் அதைக் கேட்டிருப்பார். ”படைக்கப்பட்டவை எல்லாம் முதலில் இல்லாதிருந்து பிறகு தோன்றி மீண்டும் மறைகின்றன. எனவே கவலைப்பட என்ன இருக்கிறது?” என்ற வரி அவர்களுக்கு பரம்பொருளே நேரில் தோன்றி சொல்வது போல இருந்தது. வாழ்க்கைக்கு அவர்கள் திரும்பி வந்தனர். நான் என் தர்க்கத்தின் தடியுடன் போய் அவர்களை உடைக்க முயல்வதில் என்ன பொருள் இருக்க இயலும்?

ஆனால் எனக்கு அத்தகைய நிலை ஏற்பட்ட போது நம்பிக்கை என்ற அந்த மகத்தான கருவி எனக்கு உதவவில்லை. ஆகவே நான் தர்க்கம் நோக்கி வந்தேன். இது இன்னொரு கருவி. அதைவிட மேலானதோ இன்னும் உண்மையானதோ அல்ல, வேறு ஒருவகை கருவி அவ்வளவுதான். இக்கருவியை வைத்து நான் பெருமிதப்பட்டுக் கொள்ள ஏதுமில்லை. இது எனக்குப் பயன்தருகிறதா இல்லையா என்பது மட்டும்தான் ஒரே கேள்வி. ஒரு நம்பிக்கையாளன் அடையும் நிறைவையும் முழுமையையும் நான் அடைய முடியவில்லை என்றால் இக்கருவி பயனற்றது என்றே பொருள்.

நம்பிக்கையின் பாதையில் வருபவர்கள் உண்மையில் கீதையின் மிகச்சில பகுதிகளுடன் தங்களை நிறுத்திக் கொள்கிறார்கள் என்பதே உண்மை. கீதை தன் தரப்பை விரிவான தர்க்கங்களுடன் முன்வைக்கும் தத்துவநூல். அதை மதநூலாக வாசிப்பவர்கள் அதில் சில அருள் மொழிகளை மட்டுமே பெற்றுக்கொண்டு அமைகிறார்கள். உண்மையில் கீதை அவர்களுக்கான நூல் அல்ல. பக்திநூல்களே அவர்களுக்குரியவை. இந்த நூற்றாண்டில் கீதைக்கு அளிக்கப்பட்ட பிரச்சாரம் மூலம்தான் அது பக்தி நூலாகவும் சடங்கு நூலாகவும் மதநூலாகவும் வாசிக்கப்பட நேர்ந்தது என்று ஏற்கனவே கூறப்பட்டது.

தர்க்கபூர்வமான அணுகுமுறையிலேயே பல படிநிலைகள் உள்ளன. கீதையை வரலாற்றுக் கோணத்தில் ஆராயும் பல ஆய்வுகள் இன்று கிடைக்கின்றன. அதன் காலம், இந்திய தத்துவ ஞானத்தில் வரலாற்றுப் பரிமாணத்தில் அதன் இடம், இந்திய சமூக உருவாக்கத்தில் அதன் பங்களிப்பு ஆகியவை சார்ந்து விரிவாகவே ஆராய இடமிருக்கிறது. அதே போல கீதையை தத்துவ ரீதியாகவும் ஆராயலாம் – அதாவது தத்துவத்தை ஒரு பாடமாக எடுத்துக் கொண்ட ஆய்வு. இந்திய தத்துவ மரபை விரிவாக ஆராய்ந்து அதில் கீதை வகிக்கும் இடம் குறித்த ஆய்வுகளை இந்தியவியலாளர் பலர் மிக விரிவாகச் செய்துள்ளனர். இந்த ஆய்வுமரபு இன்னும் தொடர்ந்து சீராக வளர்ந்து வருகிறது. கீதைக்கும் பெளத்த மரபுகளுக்கும் உள்ள உறவு சார்ந்து இன்னும் விரிவாக ஆராய இடமிருக்கிறது. ஒட்டுமொத்தமாக இந்த ஆய்வுகளை அறிவுப்புலம் சார்ந்த (அகாதமிக்) ஆய்வுகள் என்று கூறுலாம். தொன்மையான நூல், இந்திய சமூகத்தையும் சிந்தனையையும் ஆழமாகப் பாதித்த நூல் என்ற வகையில் கீதை இதற்கெல்லாம் இடமளிக்கிறது.

ஆனால் என்னுடைய வாசிப்பு என்னுடைய சொந்த வாழ்வின் சிக்கல்கள், சவால்கள் சார்ந்து கீதையை ஒரு வழிகாட்டி நூலாகக் கொள்ள முடியுமா என்ற ஆய்வாகும். இதை தத்துவ ஞானத் தேடலின் அணுகுமுறை என்று கூறலாம். இங்கே நான் அறிய விரும்புவது கீதையை அல்ல, கீதையினூடாக மானுடவாழ்வை, பிரபஞ்சத்தை, என்னை. கீதை வாசிப்பின் மிக முக்கியமான வழிமுறை இதுவே என்றுதான் நான் எண்ணுகிறேன்.

கீதைத்தருணம்

கீதை இடைச்செருகலா? மூலநூலா?- கடிதம்

கீதையை எப்படிப் படிப்பது? ஏன்?

வேதாந்த மரபும் இலக்கியப் போக்குகளும்

கீதை அகம்

கீதைவெளி

முடிவற்ற அறிதல்:பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு ஒரு முன்னுரை

முந்தைய கட்டுரைதமிழ் படைப்பாளிகள் பேரியக்கம்:ஒரு கடிதம்
அடுத்த கட்டுரைஷோலே