கீதையை நான் ‘வாசித்து’ மீண்டும் சில வருடங்கள் கழித்து என் குரு நித்ய சைதன்ய யதியை ஊட்டியில் அவரது குருகுலத்தில் வைத்து சந்தித்து அறிமுகம் செய்து கொண்டேன். ‘சந்தேக இயந்திரம்’ என்று வேடிக்கையாக அவர் அழைப்பார். இலக்கியம், உளவியல், தத்துவம் என எல்லா தளங்களிலும் அவரிடம் கேள்வி கேட்டபடியே இருந்தேன். அவ்வினாக்களின் ஒரு சிறு தொகுப்பு ஒரு பேட்டி வடிவில் காலச்சுவடு இதழில் வெளியாயிற்று.
அந்நாட்களில் ஒருமுறை மாலைநேர வகுப்பில் நித்யா சுற்றிலும் பார்த்து ‘எங்கே என் சந்தேகத் தாமஸ்?’ என்றார். நான் ஒரு விருந்தினருக்குப் பின் அமர்ந்திருந்தேன். ‘இங்கேவந்து உட்கார்’ என்று தன் அருகே ஓர் இடத்தை நித்யா காட்டினார். அங்கே நான் அமர்ந்ததும் ”அருகே அமர்தல் என்றால் என்ன என்று தெரியுமா?” என்று புன்னகையுடன் என்னிடம் கேட்டார். நான் இல்லை என்று தலையசைத்தேன். நித்யா பதில் கூறாமல் வகுப்பிற்குப் புகுந்தார்.
‘பகவத்கீதை ஸ்வாத்யாயம்’ என்ற நித்யாவின் பெரும் மலையாள நூலின் சில பகுதிகளைப பற்றி ஆங்கிலத்தில் அவர் பேசினார். அங்கு சில ஐரோப்பியர் இருந்தனர் அப்போது. ‘ஸ்வாத்யாயம்’ என்றால் என்ன என்று நித்யா விளக்கினார். சரியானபடிச் சொன்னால் ‘தனக்குத்தானே கற்பித்துக் கொள்ளுதல்’ என்றுதான் அதற்குப் பொருள். கற்பித்தல் – கற்றல் என்ற இரு செயல்கள் இருமுனைகளில் ஒரே சமயம் நிகழும் தருணமே கல்வி என்பது. இங்கு கற்பிப்பதும் நாமே. ஆகவே இது ஸ்வாத்யாயம். நாம் கற்பவற்றின் மீது நாமே கொள்ளும் ஒயாத கவனமே அச்சொல்லால் குறிப்பிடப்படுகிறது.
”ஒரு புது அனுபவத்திறப்போ கருத்து முனையோ நிகழாமல் நம்முள் இருக்கும் ஒரு வரி என்பது உண்மையில் மூளைக்கு ஒரு சுமையே” என்றார் நித்யா. அவ்வகுப்பில் கேட்டு, இன்றுவரை என்னை ஆழமாகப் பின் தொடரும் வரி இதுவே. ஒவ்வொரு நாளும் எத்தனை நூல்களைப் படிக்கிறோம்! எத்தனை வரிகள் நம் தலைக்குள் உள்ளன! தகவல்கள், மேற்கோள்கள், உதாரணங்கள், கோட்பாடுகள், சூத்திரங்கள், கதைகள்… இவற்றில் எத்தனை வரிகளைப் பற்றி நாமே அடைந்த ஒரு கருத்து நம்மிடம் உள்ளது? நவீன மனிதனின் மூளை என்பது ஒரு விசித்திரமான சொற்கிடங்கு அல்லவா?
பலநாள் கழித்து சாந்தோக்ய உபநிடதம் குறித்த ஓர் உரையில் நித்யா ‘அருகே அமர்தல்’ என்றால் என்ன என்று எழுதியிருப்பதைப் படித்தேன். உபநிடதம் என்ற சொல்லுக்கு நேர்பொருள் ‘அருகே அமர்தல்’தான். குருவின் அருகே சீடன் அமர்தல். சீடன் அருகே குரு அமர்தல். மிக நெருக்கமாக அமர்ந்து உரையாடுதல். தங்கள் தேடலைப் பகிர்ந்து கொள்ளுதல்.
கீதையை நான் பலமுறை படித்திருக்கிறேன். பல உரைகளை ஆராய்ந்திருக்கிறேன். மூன்று அறிஞர்களிடம் விரிவாக உரையாடியுமிருக்கிறேன். ஆயினும் நித்யாவின் உரைகளிலிருந்தும் உரையாடல்களிலிருந்தும்தான் கீதையை ஓரளவேனும் புரிந்து கொண்டேன். அந்நாட்களில் ஒருமுறை நித்யா தன் பேச்சில் ‘கீதா உபநிஷத்’ என்று சொன்னார். அச்சொல் கீதையைப் புரிந்து கொள்வதற்கான சாவியாக இன்னும் என்னிடம் உள்ளது.
*
பகவத்கீதை ஓர் உபநிடதம். காலத்தால் பிந்திய உபநிடதங்களில் ஒன்றாக கீதையைக் கொள்ளலாம் என்று பல அறிஞர்கள் கூறியுள்ளனர். உபநிடதங்களில் இருந்து உருவான உபநிடதம், உபநிடதங்களின் சாரமான உபநிடதம் என்று அதைக் குறிப்பிடலாம். இதேபோல மகாபாரதத்தில் வரும் பீஷ்ம நீதி, விதுர நீதி, யட்சப் பிரஸ்னம் போன்றவற்றையும் தனித்தனியான உபநிடதங்களாகக் கூறமுடியும்.
ஒரு நூலை ‘உபநிடதம்’ என்று எப்படி வரையறுப்பது? உபநிடதம் என்பது ஒரு நூல்வகை என்றே கூறவேண்டியுள்ளது. பல நூற்றாண்டுக்காலம் இந்த அமைப்புள்ள நூல்கள் வந்தபடியே இருந்திருக்கின்றன. ஆயிரத்தெட்டு உபநிடதங்கள் உள்ளன என்று பெளராணிகர் கூறுகிறார்கள். 108 உபநிடதங்களின் பெயர்களை நாம் பெறமுடிகிறது. இவற்றில் 18 உபநிடதங்களையே காலத்தால் முந்தியவை, முக்கியமானவை என்று கூறுகிறார்கள் அறிஞர்கள். அவற்றிலும் ஈசம், கடம், கேனம் பிரச்னம், முண்டகம், மாண்டூக்யம், ஐதரேயம், சாந்தோக்யம், பிரகதாரண்யகம் ஆகிய ஒன்பது உபநிடதங்களே மையமானவை என்று கூறப்படுகிறது.
உபநிடதம் என்ற நூல்வகைக்கு இரண்டு வடிவச்சிறப்புகள் இருக்கும் என்று பொதுவாகக் கூறலாம். ஒன்று, உபநிடதம் ஒரு நாடகீயமான தருணத்தில் வெளிப்படுத்தப்பட்ட உபதேசமாக இருக்கும். அந்த நாடகீயத் தருணத்தின் புனைவுத்தன்மை அந்த உபதேசத்திலும் தொடரும். இரண்டு, அது ஒரு சீடனுக்கு குருவால் உபதேசிக்கப்பட்ட வடிவில் இருக்கும்.
இத்தன்மை மூலம் உருவாகும் சிறப்பே உபநிடதங்களை பிற நூல்களிலிருந்து வேறுபடுத்துகிறது. உபநிடதத்தை பிரம்ம சூத்திரம் முதலிய பிற நூல்களுடன் ஒப்பிட்டுப் பார்ப்போம். பிரம்மசூத்திரம் இந்திய ஞானமரபின் தொன்மையான நூல்களில் ஒன்று. அதற்கு முந்தைய மெய்ஞான மரபு அடைந்த, பிரம்ம ஞானம் குறித்த விளக்கங்களைக் கூறும் சூத்திரங்களினால் ஆன நூல். அதன் முதல் பாடலில் ‘அதாதோ பிரம்ம ஜிஞ்ஜாஸா’ என்று ஓர் அழைப்பு உள்ளது. ‘ஆகவே, பிரம்மத்தைப் பற்றி அறியும் ஆவல் உடையவனே’ என்று அதற்குப் பொருள். பிரம்ம ஞானத்தை அறிய ஆவல் உடைய அனைவரிடமும் நேரடியாகப் பேசும் நூல் அது.
பெரும்பாலான தத்துவ நூல்களுக்கு உரிய இயல்பு இது. பிரம்ம சூத்திரத்துடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டுமென்றால் இருபதாம் நூற்றாண்டு மொழியியல் தத்துவ மேதை விட்ஜென்ஸ்டீனின் நூல்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம். விட்ஜென்ஸ்டீனும் மொழியின் தத்துவார்த்த அடிப்படைகள் குறித்த எண்ணங்களை சிறிய சூத்திர வடிவில் சொல்லுகிறார். பாதராயணரின் பிரம்ம சூத்திரம் அது யாருக்காகச் சொல்லப்பட்டுள்ளது என்பதை முதல் வரியில் குறிப்பிடுகிறது. விட்ஜென்ஸ்டீன் அப்படி குறிப்பிடுவதில்லை. ஆயினும் மொழியியல் மற்றும் தத்துவ மாணவனிடம் மட்டுமே அவர் பேசுகிறார் என்று அவ்வடிவம் காட்டுகிறது.
மற்றபடி அவர்கள் கூறும் விஷயத்தில் அதைக் கேட்பவனுக்கு எந்தப் பங்கும் இல்லை. குறிப்பிட்ட காலத்திலோ குறிப்பிட்ட இடத்திலோ இல்லாத ஒரு ‘பொது’ மனத்திற்காக அவை கூறப்படுகின்றன. அதாவது அவை ஒரு ‘வெளிப்பாடுகளாக’ உள்ளனவே ஒழிய ‘கூற்று’களாக அல்ல.
மாறாக, உபநிடதங்களில் அந்நூலைக் கூறும் குருநாதர் அந்நூலிலேயே தெளிவான ஆளுமையாக வெளிப்படுகிறார். அதன் உண்மையான ஆசிரியர் தன்னை பின்னணிக்குத் தள்ளிக் கொள்கிறார். அதாவது பிரம்ம சூத்திரத்தின் ஒரு வரியானது ஒரு கட்டுரையின் வரிபோல. அக்கட்டுரை ஆசிரியரின் கருத்து அது. ஆனால் உபநிடதத்தின் ஒரு வரி ஒரு நாவலில் கதாபாத்திரம் கூறும் வரிபோல. அதுவும் நூலாசிரியரால் உருவாக்கப்பட்டதே. ஆனால் அவ்வரி நூலாசிரியரின் நேரடியான கருத்து அல்ல. அந்தக் கதாபாத்திரத்தின் இயல்புக்குக் கட்டுப்பட்டது அது.
அதேபோல உபநிடதத்தில் அந்த குருவின் உபதேசத்தைக் கேட்பவனும் தெளிவாக வரையறுக்கப்பட்டிருப்பான். அது நசிகேதன், ஸ்வேதகேது அல்லது அர்ஜுனன் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். கேட்பவனின் அறிவுத் தகுதி, உணர்வு ரீதியான இயல்பு, அவனுடைய குணாதிசயம், அவனுடைய வாழ்க்கைப் பின்புலம், அவனுடைய அந்தத் தருணத்துத் தேவை ஆகிய கூறுகள் அவனிடம் கூறப்படும் விஷயத்தைத் தீர்மானிக்கின்றன. அதாவது கீதை ஒரு போர்வீரனுக்குக் கூறப்பட்டது. கடோபநிடதம் ஒரு இளம் மாணவனுக்குக் கூறப்பட்டது. சாந்தோக்ய உபநிடதம் சாத்திரங்களைக் கற்று முடித்த மாணவனுக்குக் கூறப்பட்டது. இந்தக் கூறுகளை கணக்கில் கொண்ட பின்னரே அந்நூல்களை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
பிற தத்துவ நூல்களில் இருந்து உபநிடதங்களை வேறுபடுத்திக் காட்டும் இந்தக் கூறினை தத்துவ மாணவன் மிகுந்த கவனம் கொடுத்து ஒவ்வொரு தருணத்திலும் பரிசீலிக்க வேண்டும். நேரடியான தத்துவக் கூற்றுகளாக கருத்துக்களை முன்வைக்காமல் புனைவுக்குள் அவற்றைப் பொருத்தி, புனைவின் பகுதிகளாக ஒலிக்கச் செய்யும் தேவை அவற்றை இயற்றியவர்களுக்கு இருந்திருக்கிறது.
அந்தத் தேவை என்ன? புனைவு என்பது வாழ்வின் செறிவுபடுத்தப்பட்ட வடிவம். அப்படி தீவிரப்படுத்தப்பட்ட வாழ்க்கையின் பரப்பில் வைத்து தத்துவத்தை பரிசீலிக்கவும் விளக்கவும் வேண்டிய ஒரு கட்டாயம் இருந்திருக்கிறது இந்நூல்களின் ஆசிரியர்களுக்கு. பிரம்ம சூத்திரம் போல தூய தத்துவமாக இத்தரிசனங்களைக் கூறுவதற்குப் பதில் வாழ்வின் உச்ச நிலைகளாக முன்வைக்க விரும்பியிருக்கிறார்கள். அதாவது உபநிடதங்களில் வாழ்வில் இருந்து நேரடியாக தத்துவத்திற்குப் போகும் ஒரு ‘பாதை’ உள்ளது. அந்தப் பாதை மிக முக்கியமானது. சொல்லப்போனால், தத்துவம் அளவுக்கே அது முக்கியமானது.
இன்னும்கூட ஒன்றைச் சொல்லலாம், ஒரு தத்துவ தரிசனத்தை புனைவுத்தருணமாக மாற்றுவதன் மூலம் தத்துவ நூலுக்கு சாத்தியமில்லாத ஒரு கவித்துவத்தை உபநிடதங்கள் அடைகின்றன. தத்துவநூல் தூய தர்க்கம் மூலம் நம்மிடம் பேசுகிறது. அதில் கற்பனைக்கோ உள்ளுணர்வுக்கோ இடமில்லை. தத்துவத்தை புனைவுக்குள் தள்ளுவதன் மூலம் கற்பனையின் விரிவுக்கும் உள்ளுணர்வின் நுட்பமான ஊடுருவலுக்கும் இடம் ஏற்படுத்தித் தருகிறார் ஆசிரியர்!
கீதையைப் படிப்பதன் மூலம் தன்னை அர்ஜூனனின் இடத்தில் கற்பனை செய்து ஒருவன் ஒரு தத்துவ ஞானத்தை அடைகிறான். தன்னை ஒரு முதிரா இளைஞனாக கற்பனை செய்து அவன் உபநிடதத்தை உள்வாங்கி இன்னும் வேறு ஒரு கோணத்தில் தத்துவ ஞானத்தை அறியலாம். தத்துவத்தைப் புரிந்து கொள்வதில் கற்பனைக்கு இருக்கும் பெரும் பங்கினை உணர்ந்தவர்கள் இதன் முக்கியத்துவத்தை உணர்வார்கள்.
கற்பனை வழியாக உள்ளுணர்வைத் தூண்டும் உயர் கவித்துவத்தை தொடுகின்றன உபநிடதங்கள். ஒரு தத்துவ வரி ஓருபோதும் அளிக்காத மாபெரும் வெளிச்சத்தை உள்ளுணர்வைத் தீண்டும் கவிதை வரி அளிக்க முடியும். உபநிடதங்கள் அனைத்துமே கவிதைகளும் கூட.
*
உபநிடதத்தைக் கற்றுத் தெளிய சில வழிமுறைகள் உள்ளன. இவ்வழிமுறைகள் எந்தவிதமான குருகுலச் சடங்குகளினாலோ நம்பிக்கைகளினாலோ உருவானவை அல்ல. அந்நூல்களின் இயல்பினால் உருவான வழிமுறைகள் அவை. அந்நூல்களை வைத்தே அவற்றைப் புரிந்து கொள்ளலாம்
உபநிடதங்களின் தீவிரமான நாடகீயத் தருணங்களைப் பார்ப்போம். ‘கட’ உபநிடதத்தில் நசிகேதன் தன் தந்தை வேள்விக்குப் பிறகு பிராமணர்களுக்கு வற்றல் பசுக்களை தானம் செய்வதைக் காண்கிறான். ‘என்னை எப்போது தானம் செய்யப்போகிறீர்கள்’ என்று அந்தச் சிறுவன் தந்தையை நச்சரிக்கிறான். கையில் தர்ப்பையும் நீருமாக நின்ற தந்தை எரிச்சல் கொண்டு ”உன்னை எமனுக்கு தானம் செய்கிறேன்” என்று கூறிவிடுகிறார். தந்தை சொல் உண்மையாக வேண்டும் என்று நசிகேதன் எமபுரியை அடைந்து அதன் வாசல் கதவைத் தட்டுகிறான்.
எமனின் சிம்மாசனம் அசைகிறது. அவன் நசிசேதனை தவிர்க்க முயல்கிறான். ஆனால் உணவும் நீரும் தூக்கமும் இன்றி தன் வாசலில் அமர்ந்திருக்கும் குழந்தையை அவனால் தவிர்க்க இயலவில்லை. அவன் நசிகேதன்முன் தோன்றி மரணமடையாத ஒருவனை எமபுரி ஏற்க இயலாது என்று கூறி திரும்பும்படி வற்புறுத்துகிறான்.
ஆனால் நசிகேதன் எமனிடம் மரண ரகசியத்தைக் கேட்கிறான். அதை மானுடருக்குச் சொல்ல இறையுலக விதிகள் அனுமதிக்காது என்று கூறும் எமன் அதற்குப் பதிலாக எல்லையில்லாத செல்வம், பெரும்புகழ், பேரரசுகள் அனைத்தையும் நசிகேதனுக்குத் தருவதாக ஆசை காட்டுகிறான். இறவாமையின் ஞானமன்றி வேறு எதுவுமே தேவை இல்லை என்று நசிகேதன் மாளா உறுதியுடன் நிற்கிறான். வேறு வழியில்லாமல் எமன் தானே ஞான குருவாகி நசிகேதனுக்கு உபதேசித்ததுதான் ‘கட’ உபநிடதம்.
சாந்தோக்ய உபநிடதம் ஆருணியாகிய உத்தாலக ரிஷியால் மகன் ஸ்வேதகேதுவுக்குச் சொல்லப்பட்டது. மகனை தத்துவ கல்விக்கு அனுப்புகிறார் தந்தை. அனைத்தும் கற்றுத் திரும்பிய ஸ்வேதகேது கர்வத்துடன் தந்தையிடம் அவருக்கு சாஸ்திர விஷயத்தில் ஏதேனும் ஜயம் இருக்குமேனில் கேட்கலாம் என்று கூறுகிறான். மகனின் கர்வம் கண்டு மனமுடைந்த தந்தை அவனிடம் பிரபஞ்சப் பிறப்பு, மறைவு குறித்த அடிப்படை வினாக்களை கேட்கிறார்.
மனம் நடுங்கிய ஸ்வேதகேது கர்வம் அழிந்து அவற்றுக்கான பதில்களைத் தான் கற்கவில்லை என்று கூறி, தந்தையின் பாதங்களில் சரணாகதி அடைந்து, மெய்ஞானத்தைத் தனக்குக் கற்பிக்குமாறு கோருகிறான். அவர் அவனை அருகே இருத்தி ‘தத்வமஸி’ உபதேசத்தைக் கூறி ஞானம் கொடுக்கிறார்.
கீதையின் புனைவுத்தருணம் நாம் அறிந்ததே. உபநிடதங்களின் இந்தச் சந்தர்ப்பங்கள் அவற்றைக் கற்பவனுக்கு இருக்க வேண்டிய மனநிலையை சுட்டிக்காட்டுகின்றன. வாழ்விலிருந்து சற்றேனும் விடுபட்டு வாழ்வை ‘அறிய’ விரும்பும் ஞானத்தேடல் உடையவனுக்கான நூல்கள் அவை. ‘இதெல்லாம் என்ன, இதெல்லாம் எதற்காக?’ என்று ஒயாது வினவி அல்லல் கொள்ளும் தத்துவ மாணவனுக்கு உரியவை. அவன் அந்த மெய்ஞானத்திற்குப் பதிலாக பிறிதொன்றை முன் வைக்கும் மனமே இல்லாதவன். அதுவன்றி வேறு எதிலும் திருப்தி கொள்ளாதவன். அதன் பொருட்டு வேறு எதையும் இழக்கத் தயாரானவன். தன் கல்வியின் அகங்காரத்தை உதறிவிட்டு அதை அறியும் பொருட்டு சிந்தனையைத் திறந்து வைத்தவன்.
கீதா முகூர்த்தம் என்பது இதுவே. கடலில் பலகோடி சிப்பிகள் உள்ளன ஆனால் ஏதோ ஒரு சிப்பிக்குள் புகுந்த மணல்தான் முத்தாக மாற முடிகிறது. அந்தத் தருணத்தில் மணியை உருவாக்க சிப்பியின் ஆழம் திறந்து காத்திருக்க வேண்டும். ‘கீதா முகூர்த்தம்’ என்று கூறப்படுவது ஒரு ‘உபநிடத முகூர்த்தம்’தான் என்று கூறலாம். எல்லா உபநிடதங்களும் ஒரு உச்சகட்ட ‘திறக்கும் கணம்’ உள்ளது. அங்கு அவை ஏற்கச் சித்தமாக உள்ள ஒரு மனதுக்கு கூறும் தகுதி படைத்த ஒரு மனத்தால் கூறப்படுகின்றன.
இத்தகைய பலநூறு உபநிடதத் தருணங்கள் வழியாக மெல்ல மெல்ல வந்தடையப் பெற்ற ஓர் உச்சநிலையே கீதைத்தருணம் என்று கூறலாம். கீதையின் தருணத்தை பிற உபநிடதங்களின் நாடகத் தருணத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது அது மேலும் சிக்கலானதாக, சிந்திக்கும்தோறும் விரியக்கூடிய நுட்பங்கள் கொண்டதாக, இன்னும் குறியீட்டுத் தன்மையும் கவித்துவமும் கொண்டதாக இருப்பதைக் காண்கிறோம். ஆகவேதான் கீதையை உபநிடதமென்னும் பாலின் நெய் என்று கவித்துவமாகக் குறிப்பிடுகிறார்கள். ஜதீகப்படியும் புராணப்படியும் கீதை வைணவ மதத்திற்கு உரியது என்றாலும் அனேகமாக இந்து ஞானமரபின் எல்லாக் கிளைகளுக்கும் பொதுவானதாகவும் கருதப்படுகிறது.
உபநிடதங்களைக் கற்பதற்கான சிறந்த வழிமுறை அவற்றின் பெயரே குறிப்பிடுவது போல ‘அருகே அமர்தல்’தான். பெரும்பாலான உபநிடதங்கள் உரையாடல் வடிவில் உள்ளன. ஊஞ்சல் முன்னும் பின்னும் ஆடுவது போல அலை தர்க்கத்தின் இருபாற்பட்ட சாத்தியங்களுக்குள் செல்கின்றன. ஆகவே உரையாடல் வடிவில், தர்க்கபூர்வமாக அவற்றைக் கற்பதே முக்கியமானது. இதை நேற்று குருகுலக் கல்வி முறை நிகழ்த்தி வந்தது. இன்று இன்னும் விரிவான உரையாடல் களங்களை நாம் உருவாக்கிக் கொள்ள இயலும்.
இதற்கு அடுத்தப்படியாக உள்ளது சுயகல்வி. கீதையை நமக்கு நாமே கற்பித்துக் கொள்ளுதல். தர்க்கபூர்வமாக நாம் கற்ற ஒன்றின் மீது ஆழமான உள்ளுணர்வுத் திறப்புகளை அடைதல் என்று இதைச் சொல்லலாம். கீதை நீண்ட காலமாகவே ஒரு ஞானநூலாகவும் தியான நூலாகவும் ஒரே சமயம் கருதப்படுகிறது. ஞான நூலாக அதை அணுகுவதும் கற்பதும் தியான நூலாக அதை உள்வாங்குவதன் முதல்படியாகும். உள்வாங்கிக் கொள்ளும் போதே கீதை அதன் முழுமையான தளத்தில் நம்முடன் உரையாடுகிறது என்று கூறலாம்.
கீதை இடைச்செருகலா? மூலநூலா?- கடிதம்
கீதையை எப்படிப் படிப்பது? ஏன்?
வேதாந்த மரபும் இலக்கியப் போக்குகளும்
முடிவற்ற அறிதல்:பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு ஒரு முன்னுரை