உயிர்மை இந்த இதழில்…

மனுஷ்யபுத்திரனுடன் பேசிக்கொண்டிருந்தபோது சொன்னேன், ”புதிய உயிர்மையில் பாரதிமணி எழுதிய கட்டுரை மிக முக்கியமானது. மகாபாரத காலத்திலிருந்தே இந்திரபிரஸ்தத்தில் ஊழல், பாரபட்சம், காக்காய்பிடித்தல், அடுக்களைச்சதிகள், படுக்கையறைப் போராட்டங்கள் எல்லாம் இருந்துவந்திருப்பது தெரியும்….ஆனால் வழிப்பறியிலும் ஆட்சியாளர்கள் ஈடுபடுவார்கள் என்று இப்போதுதான் தெரிகிறது” என. வாய்விட்டுச் சிரித்தார்.

க.நா.சுப்ரமணியத்தின் மருமகனான பாரதிமணி எங்கள் ஊர் பார்வதிபுரத்தைச் சேர்ந்தவர். டெல்லியில் உயர்பதவிகள் வகித்தவர். ஞான ராஜசேகரனின் பாரதி படத்தில் பாரதிக்கு அப்பாவாக நடித்தமையால் அப்பெயர் பெற்றார். டெல்லியில் பல பயில்முறை நாடகங்களை நிகழ்த்தியவர். அவரது அனுபவப்பதிவுகலில் இரு விஷயங்களைக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். ஒன்று அவரது அபாரமான நகைச்சுவை உணர்வு. இன்னொன்று சின்னஞ்சிறு விஷயங்களே ஒரு நினைவுப்பதிவிற்கு இலக்கியத்தரத்தை அளிப்பவை என்ற பிரக்ஞை.

இப்பதிவில் மொரார்ஜிதேசாயின் மகனைப்பற்றிச் சொல்கிறார். காந்திபாய் தேசாய் அனைத்துண்ணி. ‘நீர்’வாழ் உயிரினம். அத்துடன் மிக வெளிப்படையாக பாரதிமணியின் நிறுவன அதிபரை மயக்கி அவரிடமிருந்து பல்லாயிரம் டாலர்களை ஏமாற்றிப் பறிக்கிறார். அதை திரும்பக் கேட்ட போது டெல்லிப் போலீசை அனுப்பி மிரட்டுகிறார். அந்த விஷயத்தை சொல்ல சுற்றிசுற்றிவந்து சுவாரசியமாக ஒரு பெரிய சித்திரத்தை உருவாக்குகிறார் மணி. ஆடம்பரம் ஏமாற்றுத்தனம் காமம் எலலம் கலந்த அதிகார வற்க அவழ்வின் அபத்தத்தை காட்டுகிறார்.

எழுபதுகளில் காந்திபாய் தேசாயைப்பற்றி நிறையவே விமரிசனங்கள் வந்தன. அவர் குற்றமற்றவர் என்றும் சஞ்சய்காந்தி வகையறா மீதான குற்றச்சாட்டுகளை சமன்செய்யவே அவர் மீது குற்றச்சாட்டுகள் சொல்லப்படுகின்றன என்றும் பொதுவாக நேர்மையானவர்களாகக் கருதப்படும் மூவர் அன்று தமிழில் மீண்டும் மீண்டும் எழுதினார்கள்.  சோ, இரா.செழியன் மற்றும் நெல்லை ஜெபமணி. அதே குரலில் அவர்களால் துதிக்கப்பட்டவர் சந்திரசேகர். அவரது இந்திய பாதயாத்திரையின்போது இந்த துதி உச்சமடைந்து ‘ மகாத்மா’ சாயல்களே அவர் மேல் ஏற்றப்பட்டன. பின்னர் வி.பி.சிங் ஆட்சியமைக்க முற்பட்டபோது அதிகாரபேரத்தில் நாறினார் அவர்.

‘இன்னும் நிறைய இருக்கிறது, எழுதப்போனால் எனக்குப் பிடித்தமான டெல்லியில் பிடிக்கவே பிடிக்காத திஹார் ஜெயிலில் இருக்க நேரும்’ என்று மணி எழுதுகிறர். அராஜக ஆட்சியில் நேர்மையாளர்களின் இடம் சிறைதான் என்று புரட்சியாளர் அ.மார்க்ஸ் சொல்லியிருக்கிறார். பாரதி மணி நேர்மையானவரும்கூட.

உயிர்மையில் உத்தப்புரம் பிரச்சினை பற்றி அ.முத்துகிருஷ்ணனின் கட்டுரை மிகத் தீவிரமான மொழியில் நேர்மையாக எழுதப்பட்டுள்ளது. அங்கே நேரில் சென்று பிரச்சினையை ஆராய்ந்து தனிப்பட்ட கருத்தை எழுதியிருக்கிறார். அப்பிரச்சினையை அதிகாரிகள் கையாண்டமுறை எங்கும் உள்ளதுதான்- அப்போதைக்கு எப்படியாவது சமாதானம்செய்துவிட்டு இடத்தைக் காலி செய்வது.  அது எப்போதுமே வலிமையானவர்களுக்குச் சாதகமாகவே இருக்கும். நியாயமாவது ஒன்றாவது. ஒரு ஜனநாயக நாட்டில் ஜனநாயக விரோதமான ஒரு ஒப்பந்தத்தை காவல்துறை மற்றும் அரசியல்பிரதிநிதிகள் முன்னிலையில் போட முடிகிறது என்பது நம் ஜனநாயகத்தின் அடிப்படையில் உள்ள ஆழமான விரிசலையே காட்டுகிறது.

யுவன் சந்திரசேகரின் கதை ‘சுவர்ப்பேய் ‘ வாசிக்க ஆர்வமூட்டுகிறது. ஆனால் அதன் மையமான குறை அதில் உள்ள அந்த நீண்ட கடிதத்தை அத்தனை இலக்கிய நயத்துடன் ஒரு சாதாரண கிராமத்துப்பெண் எப்படி எழுதினாள் என்பது. அந்தக் கடிதத்துக்குப் பதிலாக அது கிராமத்து இடக்கரடக்கலக்ள் மிக்க ஒரு பேச்சாக இருந்திருக்கலாம். அதைவிட முக்கியமாக காமத்தின் முடிவிலாத இச்சை என்ற கரு ·ப்ராய்டியம் வந்த காலத்தைய பழைமை கொண்டது. இன்றைய எழுத்தாளன் இன்னும் வெகுதூரம் சென்றாக வேண்டும்.  காமம் என்பது இச்சை மட்டுமல்ல. அடையாளம். இருத்தல். நிறைவு…இன்னும் எவ்வளவோ… ஆனால் சுவருக்குள் உறையும் பேய் என்ற அந்தப்படிமம் கதையை மீறியும் அழகாக உள்ளது.

ஸீமமெண்டா என்கோசீ அடிச்சியின் சிறுகதை ‘என் பைத்தியகார ஆப்ரிக்க அம்மா’. தமிழில் எழுதும் எந்த ‘கலைமகள்’ பெண்ணெழுத்தாளரும் எழுதக்கூடிய சர்வ சாதாரணமான கதை அது. அடிச்சியின் நாவலான ‘ Half Of A Yellow Sun ‘ பற்றி புளகாங்கிதம் கொண்ட எழுத்துக்கள் தமிழில் வெளிவந்தன. காரணம் அதைப்பற்றி இந்திய ஆங்கில இதழ்களில் புளகாங்கிதம் பிரசுரமானதே. அதற்குக் காரணம் அதைப்பற்றி அமெரிக்க இதழ்கள் புள்காங்கிதம் கொண்டதே. அந்நாவலைப் படித்து மனம் சோர்ந்த பல்லாயிரவரில் நானும் ஒருவன்.

மிகமிக தட்டையான ஆக்கம் அந்த  நாவல். அது ஏன் மேலை ஊடகங்களில் அப்படி புகழப்பட்டது? பிற ஆப்ரிக்க நாடுகளைப் போலவே நைஜீரியாவும் பல இனக்குழுக்களினால் ஆனது. அவர்களிடையே பேதத்தை வளர்த்தது அதை ஆண்ட ஆங்கில ஏகாதிபத்தியம். ஆங்கிலேயர் விட்டுவிட்டுச் சென்ற போது வழக்கம்போல இனச்சண்டை வெடித்து பெரும் கலவரமாகி பல்லாயிரம்பேர் இறந்தார்கள். இந்தக்கதை இப்படியே அச்சு பிசகாமல் ரவாண்டா, காங்கோ, தென்னாப்ரிக்கா எங்கும் நிகழ்ந்திருக்கிறது. இந்தியாவிலும் நாற்பத்தேழில் நிகழ்ந்தது.

பின்னர் அக்கலவரம் அடங்கி அவநம்பிக்கைகள் காலப்போக்கில் மழுங்கி நைஜீரியா இன்று வளர்ச்சியின் பாதையில் இருக்கிறது. இன்று இந்திய பொறியாளர்கள் ஆங்கில ஆசிரியர்கள் அதிகமாக அங்கே பணியாற்றுகிறார்கள்– காரணம் அது மெல்ல துயிலெழுந்துகொண்டிருக்கும் ஒரு தேசம்.அங்குள்ள இயற்கைவளங்களில் பெரும்பகுதி ஐரோப்பிய நாடுகளிடமே உள்ளது. ஆனாலும் அங்கு உருவாகிவரும் பொருளியல் விழிப்புணர்வு தடுக்கமுடியாத ஒன்று.  அங்குள்ள இனக்குழுக்களுக்கு இடையே உள்ள அவநம்பிக்கைகளை போக்கியதில் இலக்கியம் பெரும்பங்கு வகிக்கிறது. 

ஸீமமெண்டா என்கோசீ அடிச்சி ஒரு அமெரிக்க தயாரிப்பு. அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த அவருக்கு நைஜீரிய வேர்களே இல்லை. கேள்விப்பட்டவற்றின் அடிப்படையில் மீண்டும் நைஜீரிய இனக்குழுசார்ந்த உபதேசிய கனவுகளை கிளறியும், இனக்குழு சார்ந்த அவநம்பிக்கைகளை சீண்டியும் இந்நாவலை எழுதியிருக்கிறார். முழுக்கமுழுக்க ஆறிய புண்கலை கிளறும் நோக்கம் கொட்ன ஒரு படைப்பு இது. ஆங்கிலக்கல்வி மிக தீவிரமாக பரவி வரும் நைஜீரியாவில் இந்நாவல் மிக விரிவான பாதிப்புகளை உருவாக்கும்.

நைஜீரிய பின்னணி தெரிந்தவன் என்ற முறையில் [ நான் எழுதிய ‘தேவதை’ என்ற சிறுகதையில் நைஜீரிய இனக்குழு போராட்டம் விரிவாக சித்தரிக்கப்பட்டுள்ளது] இந்நாவலில் உள்ள நுட்பமான ‘விஷம்’ என்னை அயரச் செய்தது. இந்நாவலை அமெரிக்க ஊடகங்கள் தூக்கிபிடிக்கின்றன என்பதற்கு மிக விரிவான அரசியல் திட்டம் கண்டிப்பாக உள்ளது. உண்மையில் இந்நாவலில் அடிச்சியை விட பிற கைகள் அதிக பணியாற்றியிருக்குமோ என்றே எனக்கு ஐயமாக இருக்கிறது. நைஜீரியாவில் கண்ணிவெடிகளை புதைக்க முயல்கிறார்கள் ஏகாதிபத்தியவாதிகள். அவை வெடித்து அங்கே ரத்தஆறு ஓடினால் அவர்களே காமிராவுடன் போய் ‘ரவாண்டா ஓட்டல்’ போன்ற படங்களை எடுப்பார்கள். அவற்றைப்பற்றி நம் ஆங்கில இதழ்கள் கட்டுரைகள் எழுதும். நம் சிற்றிதழ் அறிவுஜீவிகள் பெரிய வியாசங்கள் சமைப்பார்கள்…

சி.சு.செல்லப்பா பற்றிய எஸ்.ராமகிருஷ்ணனின் பதிவு நேர்த்தியானது. நான் செல்லபபவை ஒருமுறை சந்தித்திருக்கிறேன். க.நா.சு உடனடியாக கழுவில் ஏற்றப்படவேண்டிய நாசகார சக்தி என்ற வகையில் பேசிக் கொண்டிருந்தார். இலக்கியம் நம்மை எங்கும் கொண்டுசேர்க்காது என்ற தெளிவை அதன் மூலம் எனக்கு ஏற்படுத்தினார். ‘சுமந்து சென்ற எழுத்து’ என்கிறார் ராமகிருஷ்ணன். சரிதான். எழுத்து வரைச் சுமந்தது. அவர் எழுத்தை. சென்றுசேரவில்லை.

வழக்கம்போல அங்கே வாசித்தவற்றை இங்கே எழுதியிருக்கிறார் யமுனா ராஜேந்திரன். ஆட்டோகிரா·ப் பற்றி வெங்கடேஷ் சக்ரவர்த்தி எழுதிய கட்டுரை சம்பந்தமில்லாமல் எதையாவது வாசித்து சம்பந்தமில்லாமல் எதன் மீதாவது ஏற்றி சொற்களை பெருக்கும் முயற்சி. சாரு நிவேதிதா புரட்சியாளர் ஆகியிருக்கிறார். நட்சத்திர ஒட்டலில் அனுராதா ரமணன், விமலா ரமணி போன்ற அவரது சக ‘பல்பர்’களுடன் அவரது நூலும் வெளியிடப்பட்டு ஸ்காட்ச்சும் பரிமாறப்பட்டதை ஒருவர் புல்லரித்து பதிவுசெய்கையில் அவர் பொலிவியா காடுகளில் சாய்பாபா டாலருடனும் துப்பாக்கியுடனும் அலைந்து கொண்டிருக்கிறார். வாழ்க.

சுகுமாரன் நெய்யாற்றின்கரை வாசுதேவனைப்பற்றி ஒரு நல்ல கட்டுரை எழுதியிருக்கிறார். அபூர்வமான பாடகர் அவர். பாவமே இசை என நம்பியவர். உணர்ச்சிகரமான பாடும் முறை கொண்டவர். ஒரு கச்சேரியில் ‘பதுமனாப பிரபு’ என அவர் ஒரு மனிநேரம் குழைந்து உருகியதை நினைவுகூர்கிறேன். .

கேரளத்தில் ஒரு ஆச்சரியமான விஷயம் உண்டு. சுகபாவமே இசையாகக் கொண்ட நெய்யாற்றின்கரைக்கு நேர் எதிரானவர் செம்பை வைத்யநாத பாகவதர். வெறும் கணக்குபுத்தகம் அவர். ”… அவர் எங்க பாடுறார், வாயால் தாளம்னா போடுவார்?” என்றார் சுந்தரராமசாமி.செம்பைக்கு திடீரென்று ஏதோ நரம்புச் சிக்கலால் குரல் போயிற்று. குருவாயூரில் போய் விரதமிருந்தார். குரல் மீண்டது [நரம்புச்சிக்கல்கள் 45 நாட்களில் பெரும்பாலும் சரியாகும் என்றார் என் மருத்துவர் ஒருமுறை] எப்படியோ ஒரு நவீன ஐதீகம் பிறந்தது.

ஆனால் உண்மையான அற்புதம் செம்பை அதன் பின் மிகமிக சுகபாவத்துடன் பாடுபவராக ஆனார் என்பது. என்ன நடந்தது? அதேபோன்ற ஆச்சரியம் குரலோ சுதியோ போகாமல் நெய்யாற்றின்கரை வாசுதேவனின் இசைச்சுவை மட்டும் தொண்ணூறுகளில் இல்லாமலானது.எப்படி? கலையின் மர்மம் அது. 
 

வார்த்தை

காலச்சுவடு நூறாவது இதழ்

சொல்புதிது பற்றி…

ஜூவியின் பதினாறாம் பக்கம்.

தமிழினி இரண்டாமிதழ்

உயிர் எழுத்து மாத இதழ்

முந்தைய கட்டுரைதேர்வு:மேலும் சில கடிதங்கள்
அடுத்த கட்டுரைதமிழினி ஐந்தாமிதழ்