«

»


Print this Post

தமிழினி ஐந்தாமிதழ்


தமிழினி ஐந்தாம் இதழ் வெளிவந்திருக்கிறது. தனித்தமிழார்வலர்களால் கொண்டாடப்படவேண்டிய இதழ். கொண்டாடியதாக தெரியவரவில்லை. தனித்தமிழின் பலவிதமான சாத்தியக்கூறுகளை நாம் இவ்விதழில் காண்கிறோம். தாசில்தார் சான்றிதழையும் பெயருடன் இணைத்துக் கொண்டுள்ள கரு.ஆறுமுகத்தமிழன் அன்றாட அரசியல் விமரிசனங்களை கலப்பிலா தமிழில் எழுதுகிறார். ராஜ சுந்தரராஜன் [அரச அழகரசன்?] திரை விமரிசனங்களை தூய தமிழில் எழுதுகிறார். தமிழால் எல்லாமே முடியும் என்பதற்கும் ,முடியத்தான் வேண்டுமா என்பதற்கும் ஆதாரம் இவை. ஆனால் இதழின் நிழல் ஆசிரியரான வசந்தகுமார் [ இளவேனில்மைந்தன்?] எழுதுவதேயில்லை.

இவ்விதழில் முக்கியமான கட்டுரை மதுசூதனன் எழுதிய நாளிதழ்போர் பற்றிய கட்டுரை. தமிழ்நாட்டை குறிவைக்கும் டைம்ஸ் ஆ·ப் இந்தியா, அதை எதிர்கொள்ள முற்படும் தி ஹிண்டு என்று இன்று முனைகொண்டுள்ள நாளிதழ்ச்சண்டையின் பல்வேறு உள்நுட்பங்களைக் கூறும் கட்டுரை இது. இத்தகைய ஒரு கட்டுரையை பொதுவாக நம் சிற்றிதழ்களில் காண்பதே அரிது.

வெங்கட் ரமணனின் வலைப்பதிவுகள் செயல்படும் விதம் மூலம் பல புதிய செய்திகளை அறிந்துகொள்ள முடிகிறது. வலைப்பதிவுகள் மூலம் அவற்றை அறிய முடியாது. பொதுவாக  வெங்கடரமணன் வலைப்பதிவுகளில் பின்னூட்டப்பகுதி கண்டிப்பாக இருக்கவேண்டும், அது ஜனநாயகம் என்று வாதிடுகிறார். அந்த வசதி தமிழ்நாட்டில் மனநோய் சுயசிகிழ்ச்சைக்கு மட்டுமே அதிகமும் பயன்படுகிறது. பரவாயில்லை, எழுத்தாளர்கள் அமர்ந்து மட்டுறுத்தட்டுமே[ வேறு என்ன சோலி?] என்று வெங்கடரமணன் வாதிடுகிறார். லத்தீன் அமெரிக்க இலக்கியம் பற்றி நுண்மாண்நுழைபுலம் கண்டு கட்டுரை எழுதுபவர்கள் ஏன் கணிப்பொறி நுட்பங்களை கற்க முடியாது, கொழுப்புதானே என்கிறார். வெக்கடரமணனைப்போன்ற ஆசிரியர்கள்தான் பள்ளிகளில் ‘தமிழ்ல எம்பது கணக்கில ·பெயிலா, திமிர்தானே’ என்று என்னை நோக்கி பிரம்பைச் சொடுக்கினார்கள்.

இன்றைய வாசகன் அவசரமானவன், ஆகவே அவனால் நிதானமாக மின்னஞ்சல் எல்லாம் செய்ய முடியாது என்பது வெங்கட் ரமணனின் வாதம். அது பொது விஷயங்களுக்குச் சரியாக இருக்கலாம். இலக்கியம் அவசரப்பின்னூட்டத்துக்கு உரிய துறை அல்ல. ஆத்திர அவசரத்துக்கு யாரும் இலக்கியம் படிக்கவேண்டாம் என்பதே என் மனம் கனிந்த விண்ணப்பம். 

குமரிமாவட்ட நீர்நிலைகள் ‘பொய்யாய் பழங்கதையாய் மெல்லமெல்ல இல்லாதான’ கதையை நகைச்சுவையும் ஆற்றாமையுமாக சொல்லிச் செல்கிறார் நாஞ்சில்நாடன் ‘வரப்புயர’ என்ற கட்டுரையில். பிழைபட்ட தமிழாதலால் பாலியலெழுத்து படிக்காதொழியும் பண்டிதர்களுக்காகவே ராஜ சுந்தரராஜன் தன் பரத்தமை இன்பம் குறித்து தூயதமிழில் எழுதியிருக்கிறார். வரைபடம் மட்டுமே குறைவு, மற்றபடி வாய்மொழி விளக்கமும் வாய்த்தாரி கொன்னக்கோல் எல்லாம் உண்டு. வழக்கம்போல பாதசாரியின் [அஞ்]ஞானப்புலம்பல்கள். நகைச்சுவை காரணமாகவே படிக்க வைக்கின்றன இவை.அவ்வப்போது ஒரு விசித்திரமான கவித்துவம் கைகூடுகிறது

தீவிரமான ஆராய்ச்சிக்கட்டுரை தளத்தில் பாரதியைப் பற்றி மறுவாசிப்பாக ஸ்ரீரங்கம் .மோகனரங்கனும், வர்மக்கலை பற்றி ராமச்சந்திரனும், மெய்யுணர்தல் பற்றி இரா.குப்புசாமியும் எழுதியிருக்கிறார்கள். கூர்ந்த வாசிப்புக்கும் விவாதத்துக்கும்  உரிய கட்டுரைகள். இன்று தமிழின் வேறெந்த சிற்றிதழிலும் எதிர்பார்க்க முடியாதவை. மு.ராகவையங்கார் பற்றிய அ.கா.பெருமாளின் அறிமுகக் கட்டுரையும் குறத்தி சிற்பம் பற்றி செந்தீ நடராஜனின் கட்டுரையும் சுருக்கமானவை, நேர்த்தியானவை.

இதழின் தலைமைப் படைப்பு தமிழினி குழுவே குமுளி மலை ஏறி மங்கல மடந்தை ஆலயத்துக்குச் சென்று வந்த பயணத்தைப் பற்றிய குமரிமைந்தனின் கட்டுரையும் புகைப்படங்களும்தான். இதழின் மிகப்பெரிய ஆறுதல் கவிதைகள் இல்லை என்பது. இக்காரணத்தாலேயே தமிழில் இதுவரை வெளிவந்தவற்றிலேயே சிறந்த இதழ் இதுதான் என நான் உணர்ச்சிவசப்பட்டு ஏதேனும் எழுதிவிடுவேனோ என்று பயமாக இருக்கிறது.

 வார்த்தை

காலச்சுவடு நூறாவது இதழ்

சொல்புதிது பற்றி…

ஜூவியின் பதினாறாம் பக்கம்.

தமிழினி இரண்டாமிதழ்

உயிர் எழுத்து மாத இதழ்

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: https://www.jeyamohan.in/495

4 pings

 1. jeyamohan.in » Blog Archive » தமிழினி ஒரு கடிதம்

  […] தமிழினி ஐந்தாமிதழ் […]

 2. தமிழ் சிறுபத்திரிகைகள் « Snap Judgment

  […] Tamil Ini magazine » தமிழினி ஐந்தாமிதழ் | Thamizh Ini 2nd Issue » தமிழினி இரண்டாமிதழ் | Thamilini » […]

 3. தமிழ் சிறுபத்திரிகைகள் « Snap Judgment

  […] Tamil Ini magazine » தமிழினி ஐந்தாமிதழ் | Thamizh Ini 2nd Issue » […]

 4. தமிழினி இணைய இதழ் | jeyamohan.in

  […] தமிழினி ஐந்தாமிதழ் […]

Comments have been disabled.