தேர்வு:சில கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன்,

“தேர்வு” – எட்டுமுறை படித்ததில் மூன்றம்முறையிலிருந்துதான் கண்ணீர் நின்றிருந்தது. இரண்டு நாட்களாக என் மனதில் இதே எண்ணம்தான். என் பத்தாவது வகுப்பில் மதிப்பெண் அதிகமான காரணத்தால் ‘மார்க்’காய்ச்சி பள்ளியில் சேர்க்கப்பட்டவன் நான். என் வாழ்க்கையை நரகமாக்கியது அந்தப் பள்ளி, அத்தனை நாளும் எனை தீயில் கருக்கப்பட்ட நாட்கள். அஜிதனின் அத்தனை வேதனைகளையும் நானும் பட்டவன். அதன்பின் நான் வடிகட்டிய முட்டாளில்லை என்பதை அறிவதற்கு சிலகாலம் பிடித்தது. இப்போது, ஜெர்மனியில் உயிரி ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கிறேன். ஆனால், அந்த இரண்டு வருடம் எனக்கு மிகுந்த தாழ்வு மனப்பான்மையை அளித்திருந்தது அந்தப்பள்ளி அதனால்தான் ‘தேர்வு’ படித்த முதல் இருமுறையும் கண்ணீர். மதிப்பெண் மரமாக பிள்ளைகளை நாம் பார்க்கும்வரை இது நிச்சயம் தொடரும். யோசித்துப்பார்கையில், எத்தனை ஆசிரியர்கள் இங்கு ‘தகுதியான’ ஆசிரியர்கள் என்பதும் கேள்விக்குரியதே!

அஜிதனுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்.

அன்புடன்,
TKB காந்தி
PhD scholar
Max-Planck-Institute
Tuebingen, Germany

&&&&&&&&&&&&&&&&&&

அஜித்தனுக்கும்  என் மகள் சுசித்ராவிக்கும் ஒரு பத்து வருட இடைவெளி
அப்போது அவள் படித்தது பத்மாசேஷாத்ரி பள்ளி. ஐந்தாம் வகுப்புவரை தேர்வு
கிடையாது. 8ம் வகுப்பில் கணிதத்தில் 40 மார்க். பெயில் ஆகிவிட்டால் வேறு
பள்ளிக்கு அனுப்பி விடுவார்கள் என்கிற பயம்.  அஜித்தனுக்கு இடது கைப்
பழக்கம் போல, என் மகளுக்கு தாரேஜமீன் பர் படத்தில் உள்ளது  போல
டிஸ்லெக்ஸியா, எழுத்துக்களை மாற்றி அறிந்து கொள்ளும் ஒரு மூளைப் பழக்கம்
அதனால் ஸ்பெல்லிங் மற்றும் என் சம்பந்தமான் திரிபு நிலை.
மீள்வது எப்படி?தனிப் பயிற்சி ஆசிரியர் ஒரு புறம் இருக்கட்டும். கல்வி
ஒருபுறம் இருக்க ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு தணல் ஒரு கணவு, ஒரு பற்று
இதில் ஏதாவது பற்றிக் கொண்டால் ராக்கெட் வேகத்தில் மீண்டு எழுவார்கள்.
என் மகளுக்கு டிபேட் ஸ்கில் இருப்பதையறிந்து ஒரு முறை பள்ளியின் சார்பில்
அனுப்பி பரிசு பெற்றவுடன் தொடர்ந்து அனுப்ப சிசித்ரா போனால் பள்ளிக்கு
கேட்யம் என்ற நிலை உருவாகி 10 11 12 ம் வகுப்புகளில் தொடராக சிறந்த மாணவி
என்பது சாத்த்யமாகி12ம் வகுப்பில் டாக் எ வே டு வாஷிங்டன் போட்டியில்
வெற்றி பெறும் வாய்பு உண்டானது.
இதற்கு நானோ பள்ளியோ காரணம் அல்ல. ஒரு குழந்தை தன் கணலை இன்ங்கண்டு
பற்றிக் கொண்டதே காரணம். செய்தி என்னவென்றால் பீறிடும் ஊற்றை
குழந்தையிடம் காணவைத்தால் தன்னால் அது வளரும். தானாகவே கற்கும் கல்வியே
ஏற்றம் தரும். பெற்றோர்களோ கல்வியாளர்களோ குழந்தைகளின் இந்த
உற்றைய்றியும் முறையை  அவர்களேஅறிந்து கொள்ளும் முறையை காண
முயற்சித்தால். அது தொடர்சியான முன்னேற்ற்த்தை தரும் என்பதற்கு
சுசித்ராவும் அஜித்தைப் போல ஒரு உதாரணம்.
சுசித்ராவின் இன்றைய நிலையை அறிய கீழே உள்ள வலைப்பக்கங்களையும் அதன்
துனைப்பக்கங்கலையும் வாசிக்கவும்.
www.childrenofthealley.blogspot.com  www.suchitravijayan.com
suchitravijayan photonet   Lines of grey  flickr.com

கெ.எம்.விஜயன்

88888888888888888888888


அன்புள்ள ஜெயமோகன்,

‘தேர்வு’ கண்டேன். அஜிதன் மற்றும் உங்கள் குடும்பத்திற்கு எனது வாழ்த்துக்கள்.

ஆறு வயது மகள் இருக்கும் எனக்கு உங்கள் கட்டுரை பெரிய தார்மீக பலம் கொடுத்தது. பேர் பெற்ற பள்ளிகள்தான் பிள்ளைகளை பெரிய அறிவாளியாக்கும் என்பதில் உங்களைப் போலவே நானும் மாற்றுக் கருத்து உள்ளவன். அரசுப் பள்ளியில் படித்து இன்று பல துறைகள் மற்றும் நாடுகளில் உயர்ந்தவர்களைப் பற்றி படித்தும் அறிந்தும் இருக்கிறேன்.

தொடரப்போகும் எனது மகளின் கல்வி , பெரிய பள்ளியில்தான் படிக்க வேண்டும் என்ற கருத்தை புறம் தள்ளியபடியேதான் அமைய வேண்டும் என்று விரும்புகிறேன்.
சூழ்நிலைகளின் அழுத்தம் என்னை உங்களைப்போல் உறுதியாக இருக்கச் செய்யுமா எனத் தெரியவில்லை. ஆயினும் உங்கள் கட்டுரை எனக்கு மிகப்பெரிய தார்மீக பலம் கொடுத்தது உண்மை. நன்றி

அன்புடன்,
மதி

 88888888888888888888888888

அன்பு ஜெயமோகன், “வேதாந்த மரபின்” தத்துவ மிரட்டலுக்குப் பயந்து ஓடி “தேர்வு” புரட்டி என் கண்கள் பெருக்கி நின்றேன். தாயின் கண்ணீர் உலகறியும் ஆனால் ஒரு தந்தையின் விம்மல்கள் ? தொட்டில் பருவத்தில் என் மடியிலேயே கிடந்துறங்கி, வலது கை விரல் வாய் சூப்பும் போது இடது கை நகம் என் காதைக் கிள்ளிக்கொண்டே இருக்க பொருக்கு தட்டிய என் காது மடல்கள் என்னை வேதனிக்கவில்லை. சொன்ன கதைகள் எத்தனை தந்த பதில்கள் எத்தனை. ஆனால் எட்டாம் வகுப்பு தொடங்கி, கல்லூரி முடிய (இரண்டு கல்லூரி- முதலில் தொழில் பாடம் –  மூன்று வருடங்களுக்கு அப்புறம் போக மாட்டேன் என்று அடம். பேராசிரியரிடம் கண் கலங்கி அமர்ந்த போது அவர் சொன்ன “dont worry! this is not the end of the world” என் மனதில் ஆணியடித்து நின்றது. பள்ளி சமயம் நல்ல சுதந்திரம் கொடுத்ததும் தோழனாய் வளர்த்ததும், மெடிக்கல், ஐ ஐ டி கனவுகளைத் திணிக்காமலும் வளர்த்தது தவறோ என்ரு குழம்பினேன். இரண்டாவது கல்லூரி சமயம், நான் கடுப்படித்தேன். மாதச்செலவில் கடுமையான அளவு விதித்தேன். பார்ட் டயம் வேலை பார்த்தான். விவேக் & கோ வில் செல் போன் விற்றான். பட்டம் பெற்று, தானே முயன்று வேலை தேடினான். இன்று மூன்று வருடங்களில் மென்பொருளில் 5 இலக்க சம்பளம். இடைப்பட்ட வருடங்களை நான் எப்படி அழுது கழித்தேன் என்ற எல்லா நினைவுகளையும் இன்று உங்கள் கட்டுரை புரட்டி மேலே எறிந்தது. பெத்த மனம் பித்து பிள்ளை மனம் தெளிவு என்கிறதோ புது மொழி? பிள்ளை வளர்ப்பு சொல்லித்தெரிவதில்லை சார். எப்பேர்ப்பட்ட கில்லாடிகளையும் எத்தி எறிந்து விடுகிறது. ஒரே ஆறுதல் “இவனா நம்மை அன்று அந்தப்பாடு படுத்தினான்?” என்று இன்று நினைத்து வியந்து கொள்வது.

ரகுநாதன்

8888888888888888888888888

மதிப்பிற்குரிய ஜெ. அவர்களுக்கு.

தேர்வுஇன்றுதான் படித்தேன்.அண்மை நாட்களாய் நான் மிகவும் நெகிழ்ச்சியானவனாய் இருக்கிறேன்.ஒரு ஆணாய் இருந்துகொண்டு இப்படி எதற்கெடுத்தாலும் கண்கள் துளிர்ப்பதை எண்ணி வெட்கமாயிருக்கிறது.தொலைக்காட்சிப் பார்க்க அமரும்போது என் மனைவி துண்டு எடுத்து வந்து தருகிறாள்.”தொடைச்சிக்கிறதுக்கு ஒதவும்“.உடல் குலுங்க விசும்புவதும் உண்டு.அதிலும் குறிப்பாக குழந்தைகளின் செயல்பாடுகளைப் பார்க்க நேரிடும்போதும், அவர்கள் கல்வியில் ,பேச்சில் சுட்டியாக இருப்பதைப் பார்க்க  நேரிடும்போதும்.இந்த வருடம் +2 வில் மாநிலத்திலேயே முதல் மதிப்பெண் எடுத்த ராஜேஷ்குமாரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது.வசதியான குடும்பப் பின்னணியும் சூழலும் இல்லாத கிராமத்துப் பையன்.ஒரு கவிதைத் தொகுப்பையும், பேனா ஒன்றும் சிறு அன்பளிப்பாக (என்னுடைய மன நிறைவுக்கு) தந்துவிட்டு, அவனோடு அன்பாகப்பேச முற்பட்டேன்.தொண்டை அடைத்துக்கொள்வதும்,வார்த்தைகள் சிக்கிக்கொள்வதும்,கண்களில் நீர் துளிர்த்துக்கொண்டே இருப்பதுமாக இருந்தது.ஆனந்தப்பெருக்குதான். அந்த வகையில்  தேர்வுபடிக்க நேர்ந்தபோதும் பல இடங்களில் நெகிழ்ச்சியாலும்,மகிழ்ச்சியாலும் கண்கள் துளிர்த்துக்கொண்டே இருந்தது.படிக்க ஆரம்பித்தபோதே அஜிதன் நல்ல மதிப்பெண்தான் பெற்றிருப்பான் என்று நம்பினேன்.புலிக்குப் பிறந்ததாயிற்றே! அஜிதனுக்கு என் வாழ்த்துகள்.

                                                                                                                                                                                     .முத்துவேல்.

*****************************

அன்புள்ள ஜெயமோகனுக்கு,

வணக்கம். நலம்தானே.

இப்பொழுது இரண்டு வாரங்களாக நான் உங்களுடைய இணையதளப் பக்கம் போகவில்லை. பலவிதமான தொந்திரவுகளில் நேரமே  கிடைக்கவில்லை. இன்று சில நண்பர்கள் சொன்னதில் போய் தேர்வு படித்து அப்படியே ஆடிப்போய்விட்டேன். இவ்வளவு மனச்சுமைகளையும் துயரங்களையும் வைத்துக்கொண்டு இத்தனை படைப்புகளை கொடுத்திருக்கிறீர்களே என்னால் நம்பவே முடியவில்லை. எத்தனை பெரிய போராட்டத்தை நீங்களும் அருண்மொழியும் தனியாகப் போராடி வென்றிருக்கிறீர்கள். எவ்வளவு பெரிய முடிவு எடுத்திருக்கிறீர்கள். அஜிதன் பாவம் குழந்தை எத்தனை கலங்கிப்போயிருப்பான். கடைசியில் நல்ல ஒரு நாவல் போல எல்லாம் சந்தோசமாக முடிந்திருக்கிறது. இனிமேல் அஜிதனைப்பற்றிய கவலையே உங்களுக்கு வேண்டாம்.

அஜிதனுக்கு சொல்லுங்கள் National Geographic படத்தில் அவர் பெயர் நிச்சயம் ஒருநாள் வரும் என்று.

இன்றே அஜிதனுடைய வெற்றியை பாராட்டி ஒரு டிவிடி அவருக்கு அனுப்பிவைக்கிறேன். அவருக்கும் அது பிடிக்கும் என்றே நினைக்கிறேன். என்ன என்பது சஸ்பென்ஸ். பார்த்துவிட்டு எழுதுங்கள். அஜிதனுடைய எல்லா முயற்சிகளையும், வெற்றிகளையும்  நான் இங்கிருந்து பார்த்துக்கொண்டே இருப்பேன்.

அன்புடன்

அ.முத்துலிங்கம்

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

ஜெயமோகன் அவர்களுக்கு,

உங்களின் பதிவுகளைத் தொடர்ந்து வாசித்து வருகிறேன்.  சமீபத்திய பதிவான ” தேர்வு” படித்ததும் –  மனசு கனத்துவிட்டது.  என் பையன் 11 மாத குழந்தை.  இப்போதுதான் குழந்தைகளின் உலகத்தை வாசிக்க முயன்று வருகிறேன்.  உங்களுடைய  இந்த கட்டுரை மனதை இளகச்செய்துவிட்டது. 

‘உங்கள் பிள்ளைகள் உங்கள் பிள்ளைகள் அல்ல
அவர்கள் அவர்களுடைய வாழ்கையை வாழ வந்தவர்கள்
உங்கள் பிள்ளைகள் உங்கள் பிள்ளைகள் அல்ல’   – என்ற கலில்ஜிப்ரானின் கவிதை வரிகளை சமீபத்தி்ல் வாசிக்க வாய்ப்பு கிட்டியது. 

அஜிதன் தொடர்ந்து சிறப்பாக தன் வாழ்க்கையை நடத்திச் செல்ல என் அன்பான வாழ்த்துக்கள்.

பேரன்புடன் நித்யகுமாரன்.

http://nithyakumaaran.blogspot.com/

******************************************

அன்புள்ள ஜெயமோகன் & அருணா

‘தேர்வு’ படிச்சுக்கிட்டே வந்தவுடன் பார்த்தால் …… கண்ணுலே இருந்து நீரூற்று.

அழுதுருக்கேன் போல!!

இருக்கும் ஒரே மகள் தேர்வு எழுதப் பயமுன்னு சேர்ந்த படிப்புகளில் எல்லாம் முக்கால் கிணறுமட்டுமே தாண்டி இருக்காள்.

ஆனால் புத்திசாலி. மனிதம் நிறைஞ்ச மனசு.

எனக்குன்னு என்னவோ ‘சேதி’ இந்தத் தேர்வில் இருக்கு.

அஜிதனுக்கு என் மனமார்ந்த வாழ்த்து(க்)களும் பாராட்டுகளும்.
 
என்றும் அன்புடன்,
துளசி கோபால்

***************************

அன்பு ஜெயன்..

“அப்பா உன் மூஞ்சியிலே கரிய அள்ளி பூசிட்டேன்ல?”என்றான் சிரித்தபடி. “ஆமாடா”என்றேன். “சும்மா ஜாலியாச் சொன்னேன்பா….உனக்காகத்தானே நான் படிச்சதே”

இந்த வரிகள் கண்ணீரை வர வைத்தது, அடுத்த முறையாக அமீர்கானின் ‘Taare Zaneen Par’ படம் பார்த்தபின்…இந்த ‘தேர்வு’ பதிவு என்னை மிகவும் மனச் சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது. என்னைப் பொறுத்தவரை குழந்தைகள் பள்ளிக்கே செல்லக்கூடாது.ஜேமோ குழந்தைகளை நாம் கொடுமைபடுத்துகிறோம்…

மனோ.

****************************

 தேர்வு

கொட்டடிகள் வேதபாடங்கள்: ‘தேர்வு’ குறித்து…

 


 

முந்தைய கட்டுரைமொழியும் நானும்
அடுத்த கட்டுரைதேர்வு:மேலும் சில கடிதங்கள்