அஜிதனின் பள்ளிச்சேர்க்கைப் படிவத்தை நானே ஒரு துணிச்சலில் நிரப்ப ஆரம்பித்தேன். பொதுவாக நான் இதையெல்லாம் செய்வதில்லை. ஒரு உற்சாகம்தான். நாலைந்து வரிகளுக்குள் ஏழெட்டு வெட்டுகள். பிழைகள். அஜிதன் வாங்கிப் பார்த்தான்.”உன்னை இதெல்லாம் யார் செய்யச்சொன்னது? நானே செய்வேன்ல? ”என்றான்”இங்கிலீஷ் அம்பிடும் தப்பு..தமிழிலயும் தப்பு…”என்றபடி அதை சுருட்டி வீசிவிட்டு இன்னொரு படிவத்தை எடுத்துவந்தான். ”இன்னொண்ணு இருக்கா?” என்றேன் அசட்டு புன்னகையுடன்.”பின்ன? எனக்கு உன் லெச்சணம் தெரியுமே” என்றான்.
என்னால் தமிழ் தவிர வேறு எந்த மொழியிலும் செயல்படவே முடியவில்லை. இருபதுவருடம் பயின்று ஒவ்வொரு நாளும் பலமணி நேரம் கையாண்டுகொண்டிருக்கும் ஆங்கிலம் இன்றுவரை எனக்கு ‘தெரியாத’ மொழியே. அதைவிட ஆச்சரியமானது என் தாய் மொழியான மலையாளத்தில் , இந்நாள்வரை அதிலேயே நான் புழங்கிக்கொண்டிருக்கும்போதுகூட , எனக்கு அடிப்படைத் தேர்ச்சி வரவில்லை என்பது. என் ஆங்கில நடை என்பது தமிழ் சென்ற தடத்தில் ஆங்கிலச் சொற்களை பதித்து வைப்பதாகவே உள்ளது. என் மலையாளமும் அப்படியே.
மலையாளத்தில் எழுதும்போது ஆங்காங்கே தமிழ் சொற்களை தமிழிலேயே எழுதிக்கொண்டே செல்வேன். பின்னர் அவற்றை தனியாக மொழிபெயர்ப்பேன். ஆங்கிலத்தில் ஓரிரு சொற்கள் எழுதினால் கூட சிலசமயம் மூளை அப்படியே உறைந்துவிடும். ஏன் என்று பார்த்தால் தமிழ் முந்திக் கொண்டிருப்பது தெரியும். சிலசமயம் எளிய விஷயத்தைக் கூட ஆங்கிலத்தில் சொல்ல முடியாது. இருபது வருடமாக நான் அலுவலகத்தில் கடிதங்கள் எழுதி வருகிறேன். சிலசமயம் அக்கடிதங்கள் மிகமிக பிழையாக அமைவதுண்டு. என்னால் கதைகள் எழுத முடிகிறது, எனக்குரிய விஷயங்கள் சிலவற்றில் நுழைய முடிகிறது. அதற்கு அப்பால் என் அறிவுத்திறன் மிகவும் எல்லைக்கு உட்பட்ட ஒன்றே என்று படுகிறது.
சிலசமயம் நான் எழுதிய மலையாள, ஆங்கில வரிகளைக் கண்டு எனக்கே அதிர்ச்சியாக இருக்கும். ஒருமுறை என்னை என் மேலதிகாரி அழைத்து ஒரு கடிதத்தைக் காட்டினார். and என்ற சொல்லை முழுக்க ant என்றே எழுதியிருந்தேன். இன்னும் ஆச்சரியமாக அக்கடிதத்தை நான்கு தடவை படித்தும்கூட என்னால் அதில் உள்ள தவறை கண்டுகொள்ள முடியவில்லை. ”நீ என்ன படித்திருக்கிறாய்” என்றார் அவர். ”பி காம், படிச்சு முடிக்கலை” என்றேன். கடிதத்தை சுருட்டி என் முன் எறிந்தார். ”உன்னாலே வேற ஒண்ணும் உருப்படியா முடியாதுண்ணுதான் இந்த சீட்டுலே உக்கார வச்சிருக்கு… பத்தாம் கிளாஸ் படிச்ச காஷ¤வல் லேபர் பையன் அந்த வேலைய உன்னைவிட மேலா செய்வான்…சும்மா உக்கார வச்சு சம்பளம் குடுக்க இதென்ன தர்ம ஸ்தாபனமா?” ”ஸாரி சார்” ”என்ன ஸாரி? இது எத்தனாம் தடவை?”
ஆங்கிலத்திலும் மலையாளத்திலும் எனக்கு spelling ஒரு மாபெரும் பிரச்சினை. ஆங்கிலத்திலாவது இப்போது spell check வந்துவிட்டது. மலையாளத்தில் இன்னும் சிக்கல். சந்தோஷம் என்று எழுத எந்த ஸ என்று குழம்புவேன். மலையாளத்தில் இந்த சிக்கல் பெரிது. அதில் சம்ஸ்கிருதம் போலவே எல்லா மெய்யெழுத்துக்களும் நான்கு உச்சரிப்பு வேறுபாடு உண்டு. பலசமயம் மலையாளத்தில் ஜெயமோகன் என்பதிலேயே ஹவுக்குப் பதில் ga போட்டு வைத்துவிடுவேன். ஆகவேதான் மலையாளத்தில் நான் என் நண்பர் ஆசிரியராக பணியாற்றும் பாஷாபோஷிணி இலக்கிய இதழ் தவிர வேறு இதழ்களில் என் படைப்புகளை அனுப்புவதில்லை. ஏழுமொழி நன்றாகத் தெரிந்த நண்பர் ஷாஜியை எண்ணும்போது எனக்கு ஏற்படும் பிரமிப்பு சாதாரணமல்ல.
இதைவிட மோசமான விஷயம் உச்சரிப்பு. நான் யூகி சேதுவிடம் ஒரு நாளெல்லாம் பேசியபின் கேட்டேன்.”என் தமிழிலே கொஞ்சம் மலையாள வாடை அடிக்குது இல்ல?” அவர் அதிர்ச்சி அடைந்தார். ”என்னது, தமிழா?அப்டினா நீங்க இதுவரை பேசினது மலையாளம் இல்லியா? ஏங்க?”. தமிழ்நாட்டில் 20 வருடங்கள் வாழ்ந்து தஞ்சாவூர்த் தமிழ்ப்பெண்ணை மணந்து நாளெல்லாம் தமிழ்பேசினாலும் என் உச்சரிப்பு அப்படியே கன்யாகுமரி மாவட்டம் விளவங்கோடு பகுதியின் மலையாள நெடியுடன்தான் இருக்கும். அதை மாற்றிக்கொள்ள நான் முயன்று முடியவேயில்லை. அபப்டியே விட்டுவிட்டேன். மேடைகளில் மட்டும் அச்சுத்தமிழில் பேச ஆரம்பித்தேன்.
நான் மோசமான மாணவனாக ஆனதற்கான முதன்மைக் காரணம் இதுவே. என்னால் ஒரு மொழிக்குள் மட்டுமே செல்ல முடியும். என் மனம் தமிழால் மட்டுமே ஆனது. தமிழ் மீது எனக்கு பிரியம் வந்தது என் மூன்று வயதில். அல்லது அதற்கும் முன்பாகக் கூட இருக்கலாம். மிகச்சிறிய வயதிலேயே நான் படிக்க ஆரம்பித்து விட்டதாக என் அம்மா சொல்லியிருக்கிறார்கள். நான் படித்தவை பெரும்பாலும் எனக்கு மறப்பதும் இல்லை. தேவையில்லாதவை கூட. குமுதம் இதழ் 1960களில் வெளியிட்ட பல கதைகள் அவற்றுக்கு பாலு வரைந்த ஓவியங்களுடன் அப்படியே எனக்கு நினைவுள்ளன. வெள்ளக்கால் இரா கந்தையா எழுதிய அக்கால துணுக்குகள் நினைவுள்ளன. ஏராளமான தினத்தந்திப் பக்கங்கள். ஒய்.எம்.சி.ஏ நூலகத்திலும் பின்னர் அருமனை நூலகத்திலும் நான் படித்த புத்தகங்களின் அட்டைகள் ,பக்கங்கள் உள்ள கிழிசல்கள் கூட நினைவில் உள்ளன.
ஆனால் என் பள்ளிநாட்கள் அப்படியே முழுமையாக நினைவில் இருந்து மறந்துவிட்டன. என்னுடன் படித்த மாணவர்கள் என் ஆசிரியர்கள் கற்ற பாடங்கள் அனைத்தும். மிக அபூர்வமாக யாராவது எதிர்பட்டு தங்களைப்பற்றிச் சொன்னால் மட்டுமே மெல்லிய நிழலாட்டமாக முகங்கள் எழுந்து வருகின்றன. என் இருபதாண்டுக்கால பள்ளி-கல்லூரி வாழ்க்கை என்பது ஒரு மாபெரும் வீண். காரணம் நான் மொழிவழிப்படுத்தி அறியாத எதுவுமே எனக்குள் நிற்காது என்பதே.மொழி எனக்கு ஒரு கோணத்தில் பெரிய சுமை. கல் உடைக்கும் தொழிலாளர் ஒருவர் மிகப்பெரிய சுத்தியலுடன் செல்வதுபோல. அது அவரது ஆயுதம். அவரது தெய்வம். அவரது சிலுவையும்கூட.
ஏன் இப்படி என்று நானே யோசித்துப் பார்க்கிறேன். நான் மொழியைப் ‘பார்க்கிறேன்’. மொழியின் ஒவ்வொரு சொல்லும் எனக்கு ஒரு படிமம். ஒலிப்படிமம், காட்சிப்படிமம். இன்னொரு சொல்லால் எனக்கு அதை இடம் மாற்றிக் கொள்ள முடிவதில்லை. dog எனக்கு ஒருபோது நாய் அல்ல. நாய் என்ற சொல்லில் என் மனம் கொள்ளும் விசித்திரமான இணைவுகள் ஏராளமாக உண்டு. உதாரணமாக அது நெய் என்ற ஒலியுடன் என் நெஞ்சில் இணைந்திருக்கிறது. ஆகவே மென்மை என்ற பொருள் அதில் கூடியிருக்கிறது. கதவு என்ற சொல்லுடன் பதமாக என்ற ஒலி எப்படியோ என் மனதில் இருக்கிறது. இதைத்தவிர நான் கண்டு கேட்டு அறிந்த எத்தனையோ அனுபவங்கள் அவற்றில் ஏறி இருக்கின்றன.
ஆகவே நல்ல ஒரு சொற்றொடர் மனதில் வந்தால் போது அப்படியே ஒரு கதையை எழுதிவிடலாம். எந்த திட்டமிடலும் வேண்டாம். கரு கூட தேவை இல்லை. இது பல எழுத்தாளர்களின் வழிமுறையே. என் அனுபவம் என்னவென்றால் நான் கட்டுரையைக் கூட அப்படியே எழுதுகிறேன். ஒரு சொல் ஒரு வரி போதும் ;ஒரு கட்டுரை, ஓர் இலக்கிய ஆய்வை எழுதி முடித்துவிடலாம். ‘எஸ்.பொன்னுதுரை’ பற்றிய கட்டுரை அந்த முதல் வரியின் தூண்டுதலே.பிற எல்லாமே நினைவின் சேமிப்பில் இருந்து எழும். நான் இன்றுவரை குறிப்புகள் வைத்துக்கொண்டு எதையுமே எழுதியதில்லை.
என் வரிகளை எனக்குள்ளேயே ஒலிக்க விடுவது என்னுடைய வழக்கம். நான் எழுதியவற்றையே மீண்டும் மீண்டும் படிப்பேன். அதிலிருந்தே எனக்கு அடுத்த தூண்டுதல் வரும். ஒரு கட்டத்தில் அப்படியே விட்டுவிட்டு அடுத்தகட்டத்துக்கு செல்வேன். அதன்பின் பழைய எழுத்தை மீண்டும் படிப்பது என்னால் முடியவே முடியாது. ஆனால் எழுதியவற்றை உடனே மீண்டும் படிப்பது எனக்குச் சாத்தியமே இல்லை. நீருள் பலூனை முக்க முயல்வதுபோல, மனம் எம்பி திமிறி மேலே வந்துவிடும்.
தமிழிலும் எனக்கு எழுத்துப்பிழைகள் வரும். சொற்றொடர்பிழைகள் குறைவாகவே நிகழும். விஷ்ணுபுரத்துக்குப் பின் நான் எழுதிய எதையுமே மீண்டும் படித்ததோ செப்பனிட்டதோ இல்லை. வசந்தகுமார் மனுஷ்யபுத்திரன் ஆகியோர் அதைச் செய்வார்கள். யுவன் சந்திரசேகர், ஹரன் பிரசன்னா ஆகியோர் செய்திருக்கிறார்கள். எம்.எஸ் எப்போதுமே உதவுபவர். எழுத்துப்பிழைகள் எப்போதுமே வேகமாக எழுதிச் செல்லும்போது நான் எழுத மறந்த எழுத்துக்களாக இருக்கும். நான் மிக மிக வேகமாக எழுதுபவன். என் மன வேகத்தை கையும் தொட்டுவிட வேண்டுமென விழைவேன். இப்போது தட்டச்சு செய்கிறேன். எழுத்துக்கள் மாறிவிடுவதன் பிழைகள் . ஆனால் என் கண்ணில் எத்தனை முறை படித்தாலும் பிழைகள் படுவதே இல்லை. என் மனதில் உள்ள பிரதியே படும். அதிலேயே என் மனம் ஈடுபடும். சொற்றொடர்ப் பிழைகள் பலசமயம் அச்சொற்றொடரை முடிப்பதற்குள்ளாகவே நான் அடுத்த சொற்றொடருக்குள் சென்றமையால் வருபவை.
எனக்கும் மொழிக்குமான உறவை நுணுகிப்பார்க்கையில் என்னை ஒரு மொழி அறிஞன் என்று சொல்ல முடியாது என்று படுகிறது. நாற்பது வருடங்களாக ஓய்வொழிவில்லாமல் இதில் ஈடுபட்டிருப்பதனால் வந்த குறைந்தபட்ச தேர்ச்சி மட்டுமே எனக்கு உள்ளது. தத்துவம் வரலாறு உள்பட நான் கற்கும் அனைத்தையுமே என் மொழியறிதலின் பகுதிகளாகவே உள்வாங்கிக் கொண்டிருக்கிறேன். நான் வாசிக்கும் அனைத்துமே எனக்கு மொழியனுபவங்கள்தான். பெரும்பாலான நூல்களை மொழிசார்ந்த மனப்பிம்பங்களாகவே நினைவில் வைத்திருக்கிறேன்.
யோசித்துப் பார்க்கையில் என்னுடைய ஒரே பலம் மொழியை– தமிழை மட்டும்– நான் அகமனச் சித்திரங்களாக மாற்றிக் கொள்ள முடிவதுதான். மொழியினூடாக கனவுகாண என்னால் முடிவதுதான். இந்த தனித்தன்மை காரணமாக பிற அனைத்துமே சராசாரிக்குக் கீழே குறுகி விட்டன. ஒரு படிவத்தில் நிரப்பபடும் தமிழ் என் கனவில் உள்ள தமிழ் அல்ல. அதை நான் கையாளவே முடியாது. மொழி புழங்கும் பலநூறு வணிகத்தளங்களில் ஒரு சாதாரண கல்வி உடையவன் அளவுக்குக் கூட செயல்பட என்னால் முடியாது.
ஆகவேதான் சென்றகாலங்களில் இலக்கியவாதியை சமூகமே பேணும் முறை இருந்து வந்திருக்கிறது. அவன் மொழியால் கையும் காலும் பிணைக்கப்பட்ட பரிதாபகரமான ஆத்மா. நல்ல வேளை அஜிதனுக்கு அது தெரிந்திருக்கிறது.