சிறிய இலக்கியம் பெரிய இலக்கியம்

அன்புள்ள ஜெ .

வழக்கம் போல தங்கள் மிக விரைவான பதிலுக்கும் விளக்கங்களுக்கும் நன்றி. தங்கள் பதிலும் விளக்கங்களும் எனக்கு சிலதெளிவுகளையும் (வழக்கம் போல ) சில கேள்விகளையும் தந்திருக்கிறது முதலில் நான் உங்களுடன் உடன்படும் இடங்களைச் சொல்லிவிடுகிறேன்.புதுமைப் பித்தனும் அசோகமித்திரனும் தமிழின் பேரிலக்கியவாதிகள் என்பதில் எனக்கும் எந்த சந்தேகமுமில்லை.. அவர்களுக்கு என் certificate நிச்சயமாக தேவையில்லை.இதை நான் ஒரு எளிய வாசகனாகச சொல்கிறேன். நான் எப்போதுமே என் ரசனை குறித்தும் வாசிப்பு குறித்தும் சற்று சந்தேகத்துடனேயே தொடர்ந்து வாசித்து வருபவன். அதனாலேயே நன்பர்களுடனான இலக்கிய உரையாடல்கள் மூலமும் இலக்கிய விமர்சனங்களை படித்தும் என் வாசிப்பைத் தொடர்ந்து கேள்விக்குள்ளாக்கிக் கொண்டே இருக்கிறேன். அதற்கு இந்த உரையாடலும் எனக்கு முக்கியமானதாக இருக்கிறது

.இலக்கியத்திலும் கலைகளிலும் ஓரளவுக்கு மேல் புறவயமான கறாரான அளவைகளுக்கு இடமில்லை என்றே நான் நினைக்கிறேன். இந்த இடத்தில் பொதுவாகவே தமிழில் (நவீன) இலக்கியத்தில் மிகப் பெரிய சமூகக் கொந்தளிப்புகளும், மாற்றங்களும் அரசியல் நிகழ்வுகளும் பேசு பொருட்கள் ஆகவில்லை என்று சொல்வதும் பொருந்தும்.90கள் வரை சிறு பத்திரிக்கைகளை மையமாகக் கொண்ட நவீனத் தமிழிலக்கியம் என்பது தனிமனிதனின் குடும்ப மற்றும் அக வாழ்க்கைச் சித்தரிப்புகளையே அதிகம் கொண்டிருந்தது என்பதும் உண்மையே. இது புதுமைப் பித்தன் தொடங்கி கோபிகிருஷ்ணன் வரை அனைவருக்குமே பொருந்தும். விதிவிலக்குகள் என்றால் அது ஜெயகாந்தன், சுந்தரராமசாமி மற்றும் இந்திராபார்த்தசாரதியை தான் சொல்ல முடியும். ( அசோகமித்திரனில் 18வது அட்சக்கோடு ஒரு விதி விளக்கு.)எனவே இந்தச் சூழலில் தனிமனிதனை அதிகம் அலைக்கழிக்கும் காமம் சார்ந்த பிரச்னைகள் இங்கு ஒரு முக்கிய பேசுபொருளாக அமைந்ததில் வியப்பில்லை என்றே நினைக்கிறேன். இது ஏன் அப்படி அமைந்தது என்பதற்கு தமிழ் சமூக அமைப்பு தொடங்கி பல்வேறு காரணங்களைச் சொல்லலாம். அது ஒரு நீண்ட தனி விவாதமாகிவிடும்.ஆனாலும் ,ஒருமுறை ராசேந்திர சோழன் ஒரு பேட்டியில் சொன்னது போல் பொருளாதரக் குற்றங்களுக்கு அடுத்தபடி அதிக சமூகக் குற்றங்கள் நடப்பது அடிப்படையில் காமம் சார்ந்த கார்ணங்களுக்க்காகத்தான். அந்த வகையில் இலக்கியத்தின் முக்கியமான பேசு பொருள்தான்.அதையும் அவர்கள் அப்பட்டமாக ,வெளிப்படையாக , தீவிரமாக எழுதவில்லை என்பதுதான் உங்கள் தரப்பு என்பதை புரிந்து கொள்கிறேன்.

தமிழின் தீவிர இலக்கியவாதிகளின் படைப்புகள் குறித்த உங்களது முன்னோடிகள் வரிசை எனக்கு பல புதிய திறப்புகளை உருவாக்கியதொன்று அவற்றில் உள்ள பல கட்டுரைகளை ஒன்றுக்கும் மேற்பட்ட முறை படித்துள்ளேன். முக்கியமாக ஜானகிராமன் குறித்த கட்டுரையை மழை இதழில் நீங்கள் எழுதியபோதே படித்திருக்கிறேன். அந்தக் கட்டுரையே சுந்தர ராமசாமி ஜானகிராமன் வைத்த ஒரு விமர்சனமான யதார்த்தத்தின் மீது கனவின் படலத்தை படர விட்ட கலைஞன் என்ற வரியை நிராகரிக்கும் வண்ணமாகவே முதன்மையாக அமைந்தது என்று எனக்குத் தோன்றியதுண்டு. அதிலும் ஜானகிராமனை தமிழின் முக்கிய படைப்பாளியாக நிலை நிறுத்துவது அவரது சிறுகதைகளே என்றும் அவரது நாவல்கள் நெடுங்கதைகள் மட்டுமே என்றும் நீங்கள் கூறிஇருக்கிறீர்கள் என்றாலும், இப்போது சொல்வது போல் அற்பப்புனைவு என்றும் ஓரக்கண் பார்வையின் அற்பத்தனம் கொண்டவை என்பதும் போன்ற கடுமையான வார்த்தைகள் இல்லை .இப்போதைய கடுமை அப்போது இல்லை என்பதையே நான் சுட்டிக்காட்டுகிறேன். ஆனால்,நிலைப்பாடுகள் மாறக்கூடாது என்பது ஒன்றுமில்லை .

மேலும் ஜானகிராமன் அவரது நாவல்களை ஆனந்தவிகடன் கல்கி போன்ற பேரிதழ்களில் எழுதினார் என்றும் அதற்கான ஒரு கோரிக்கை இருந்தது என்றும் அவருக்கு அவர்களை திருப்திபடுத்த வேண்டியிருந்தது என்றும் குறிப்பிடிருந்தீர்கள். மோகமுள், மரப்பசு அம்மா வந்தாள் , நளபாகம் ஆகிய நாவல்கள் கணையாழியில் வந்தவை. மலர் மஞ்சம் சுதேசமித்திரன் பத்திரிக்கையில் வந்தது. உயிர்த்தேன் மற்றும் அன்பே ஆரமுதே மட்டும்தான் ஆனந்தவிகடனில் வந்தது .மேலும் நீங்கள் ஆனந்த விகடன் கல்கி போன்ற இதழ்கள் என்று சொல்லும்போது உங்களை வாசிக்கும் இளம் வாசகர்கள் இன்றைய கல்கி ஆனந்தவிகடனைப் போல என்று பிழையாகப் புரிந்துகொள்ளும் அபாயமும் உள்ளது. அன்றைய ஆனந்த விகடனில் தான் ஜெயகாந்தன் இந்திரா பார்த்தசாரதி ஆகியோரின் முத்திரைக் கதைகள் வெளிவந்தது. ஜே.கே,வின் பாரிசுக்குப் போ நாவலும் உயிர்த்தேன் நாவலும் ஒரே சமயத்தில் தொடராக ஆ. வி. யில் வந்தவை. பைண்டு செய்யப்பட பாரிசுக்கு போ நாவல் படித்தபோது நான் இதை பார்த்திருக்கிறேன். ஜானகிராமன் நிச்சயமாக வணிக நோக்குள்ள எழுத்தாளர் என்று நான் நினைக்கவில்லை.(இங்கு வணிக நோக்கு என்று நான் கருதுவது ஏதாவது எழுதி நாலு காசு பார்ப்பது என்ற எண்ணம்) மேலும் ஒரு படைப்பு எதில் வெளியானது என்பதைக் கொண்டு அதன் தரம் நிர்ணயம் ஆகாது. எப்படி சங்கச்சித்திரங்களைக் கொண்டு ஆ.வியின் தரத்தையோ அல்லது ஆ.வியின் தரத்தைக் கொண்டு சங்கச்சித்திரங்கலையோ மதிப்பிட மாட்டோமோ அப்படி,

அந்த முன்னோடிகள் வரிசை நூல்களின் இறுதியில் அடுத்தத் தலைமுறை எழுத்தாளர்களைப் பற்றிய விமர்சன நூல்களும் எழுதவிருப்பதாக கூறியிருந்தீர்கள். ஆனால் அது இன்றுவரை நடக்கவேயில்லை. என்பதில் எனக்கு உங்கள் மேல் சற்றே(உரிமையுடன் கூடிய ) வருத்தமும் உண்டு. ஆனால் முதன்மையாக ஒரு படைப்பாளி இவ்வளவு விமர்சனங்கள் எழுதுவதே சிறப்புத்தான்.

இந்த உரையாடலிலேயே என்னை மிகவும் வியப்பில்ஆழ்த்துவது வண்ண நிலவன் சிறுகதைகளை நீங்கள் முற்றிலும் ஒதுக்குவதும் அவை அனைத்துமே (அல்லது பெரும்பான்மையானது) மோந்து பார்த்து விலகும் காமத்தையே பேசு பொருளாக கொண்டவை என்று சொல்வதும்தான்.நான் சமீபத்தில் கூட அவரது உள்ளும் புறமும் சிறுகதைத் தொகுதியை வாசித்திருந்தேன். அதில் மொத்தம் உள்ள பதின்மூன்று கதைகளில் காமம்/காதலை பேசுபொருளாக கொண்டது மனைவியின் நண்பர் என்ற ஒரே ஒரு கதைதான். மீதி அனைத்திலுமே இல்லாமைதான் கருப்பொருளாக அமைந்துள்ளது. ஏழ்மை உண்டாக்கும் நெருக்கடிகளுக்கு இடையே மனிதர்கள் தங்கள் கண்ணியத்தையும் பிற மனிதர்கள் மீதான கரிசனத்தையும் அன்பையும் தொலைத்துவிடாதிருக்கப் போராடியபடியே இருக்கும் சித்திரமே கிடைக்கிறது. அதிகமும் அல்லல்படும் பெண்கள் அவர்களை புரிந்துகொள்ளாதஅலட்சியமான சுயநலம் கொண்ட ஆண்கள் அதிகமும் படிக்க முடியாத வேலை வாய்ப்பும் இல்லாத இளைஞர்கள், இவர்களையே முதன்மையாகக் கொண்டது அவரது சிறுகதை உலகம் என்றே நான் நினைக்கிறேன். இந்தத் தொகுப்பில் இலாத என் நினைவில் இருக்கும் அவரது சிறுகதைகளான, பாம்பும் பிடாரனும், மிருகம் அந்திக் கரூக்கல் இரு பெண்கள் , மழை போன்றவையும் அத்தகைய படைப்புகளே. நீங்கள் அசோகமித்திரன் கதையுலகம் குறித்து கூறிய சாதாரண மனிதர்கள் சாதாரணமாக வாழ்ந்து சர்வ சாதாரணமாக மறைவதன் மகத்தான பிரம்மாண்டமான ஆட்டம் என்பது வண்ணநிலவன் சிறுகதைகளிலும் நிகழ்ந்திருப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது.

சுந்தர ராமசாமி வண்ணநிலவன் குறித்த தன் பார்வையில் ” வண்ணநிலவனின் பாத்திரங்கள் வாழ்க்கைச் சோதனையில் அனைத்தையும் பறிகொடுத்த பின்னரும் அன்பின் நெகிழ்ச்சியை தக்க வைத்துக் கொண்டிருப்பவர்கள் மனிதனை மனிதனாகக் காண்பதற்கு இவருக்குக் கடைசியாக மிஞ்சியிருக்கும் அடையாளம் இதுதான் என்றும் கதை மரபிலிருந்து விடுபட்டு சிறுகதைக்குரிய சிக்கனம், குறிப்புணர்த்துதல், குறைவாகக் கூறி அனுபவ அதிர்வுகளுக்கு இடம் தரும் பாங்கு ஆகிய சிறு கதைகளுக்குரிய சிறப்பம்சங்களைக் கைவரப் பெற்றவர் என்று கூறுகிறார். மேலும் வண்ணதாசனைப் பற்றி பேசும்போது வண்ணதாசன் வண்ண நிலவன் போல் யதார்தத்தில் நிற்காமல் கற்பனையின் ஆகர்ஷணத்தால் சபலம் கொண்டு விடுகிறார் என்றும் கூறுகிறார்.

சுந்தர ராமசாமி மட்டுமல்ல வேறு சில எழுத்தாளர்களும் கூட வண்ண நிலவனின் கதையுலகம் பற்றி கூறும்போது சுந்தர ராமசாமியின் மேற்சொன்ன பார்வையே கொண்டுள்ளனர். இவற்றினிடையே உங்களது விமர்சனம் மட்டுமே தனித்து நிற்கிறது அவர் படைப்புலகத்தின் அடிப்படைகள் குறித்து மாறுபட்டக் கருத்துக்களை கொண்டுள்ளது. அப்படி இருக்ககூடாது என்று ஒன்றுமில்லை. ஆனால் நீங்கள் சொல்வதற்கும் என் மனதில் அவரது கதைகளை குறித்து இருக்கும் சித்திரத்திற்கும் ( தமிழின் பிற விமர்சகர்களின் மதிப்பீட்டிற்கும்) மிகப்பெரிய ஒரு இடைவெளி இருப்பது உண்மையிலேயே பெரும் வியப்பளிக்கிறது. இலக்கிய விமர்சனங்களில் எப்போதும் ஒரு மறு மதிப்பீட்டிற்கு இடமுள்ளது என்ற நம்பிக்கை எனக்குள்ளது. மேலும் இத்தகைய பாரவை வித்தியாசங்களே இலக்கிய வாசிப்பை மேலும் சுவாரசியமாக்குகின்றன என்றும் நான் நினைக்கிறேன்.

அன்புடன் சுரேஷ்.

அன்புடன் சுரேஷ்,

என்னுடைய வாதம் ஒரு குறிப்பிட்ட கோணத்தில் மொத்த தமிழிலக்கியவாதிகளையும் அணுகி மதிப்பிடுவது. அதாவது அவர்கள் காமத்தை எழுதியதன் அடிப்படையில். அவர்கள் ஒவ்வொருவரின் தனிமதிப்பை அவர்களின் இலக்கியவெற்றிதோல்விகளைக் கொண்டு, அடிப்படை இயல்புகளைக்கொண்டு மதிப்பிட்டு விரிவாக முன்னர் எழுதியிருக்கிறேன். ஜானகிராமனைக் கலைஞராக ஆக்குவது அவரது மரபுசார்ந்த அறவுணர்ச்சி, நுண்சித்தரிப்புகள், கதைமாந்தர்கள். இக்கட்டுரையில் அவரது காமம் சார்ந்த பார்வையின் குறைபாடுகளையே நான் சுட்டிக்காட்டுகிறேன்.

ஜானகிராமனின் மோகமுள் அம்மாவந்தாள் இரண்டும் சுதேசமித்திரன் ஞாயிறுப்பதிப்பில் வெளிவந்தவை. பின்னர் கணையாழியில் மறுபிரசுரம் ஆயின.மரப்பசுதான் கணையாழியில் முதலில் வெளிவந்தது. பின் நளபாகம். சுதேசமித்திரன், ஆனந்தவிகடன் இதழ்கள் வெகுஜனரசனைக்குரிய படைப்புகளையே வெளியிட்டுவந்தன. ஜானகிராமனுடன் அவற்றில் கதைகளை எழுதியவர்கள் எவர் என்று நோக்கினால் தெரியும். அவை அவ்விதழ்களில் வெளியானவை என்பதனாலேயே வணிக எழுத்துக்கள் என நான் சொல்லவரவில்லை, அவை வணிக எழுத்துக்களின் பாணியில் வாசகனை குளிர்விக்கும் தன்மையுடன் ஆழமற்று நீள்வதற்கு அவை வணிகஇதழ்களில் வெளிவந்தமை காரணமாக இருக்கலாம் என்று சொல்கிறேன். நீங்கள் அதை தலைகீழாக எடுத்துக்கொண்டு வாதிடுகிறீர்கள்.

வண்ணநிலவன் கதைகளில் நடுத்தரவர்க்கத்து மனிதர்களின் எளிய அன்றாட வாழ்க்கையைச் சொல்லும் சிலநல்ல கதைகள் கண்டிப்பாக உண்டு. அவரை நான் முழுக்க நிராகரிக்கமாட்டேன். ஆனால் காமம் சார்ந்த அவரது பார்வை முகந்துவிலகும் நோக்குதான். அதைத்தான் அவரது ரசிகர்கள் இலக்கிய சாதனை எனக் கொண்டாடுகிறார்கள். உங்கள் தரப்பு வழியாக அவரது பிற கதைகளும் கவனத்துக்கு வருமென்றால் நல்லதுதான். என்னைப்பொறுத்தவரை பதின்பருத்துவத்தினரின் கிளுகிளுப்பை உத்தேசித்து எழுதப்பட்ட அக்காலத்து வணிகக் கதைகளின் சற்று நுட்பமான வடிவங்கள்தான் அவரது பலகதைகள்

வண்ணநிலவனைப் பற்றிய சுந்தர ராமசாமியின் பார்வை புரிந்துகொள்ளக்கூடியதே. ப.சிங்காரம் எழுத்தாளரே அல்ல என்று அவர் சொன்னார் என்பதையும் இணைத்துப்பார்க்கையில். அவரைப்பொறுத்தவரை கச்சிதமாக, சொற்சிக்கனத்துடன் ஒரு வாழ்க்கைத்தருணத்தைச் சொல்லிவிட்டால் அது கலை, சொல்லாவிட்டால் அது கலை அல்ல. ஆனால் நான் ஓர் எழுத்தாளர் எதைச் சொல்லி எங்கே செல்கிறார் என்பதே முக்கியம் என்றே அவரிடம் எப்போதும் வாதிட்டுவந்தேன். ஆகவேதான் நான் வாசிக்கவந்த அக்காலத்திலேயே வண்ணநிலவனுடையது petty writing என்றும், ப.சிங்காரம் எழுதுவது கட்டற்று இருந்தாலும் அசலான இலக்கிய அங்கதம் என்றும் வாதிட்டேன். அதையெ இப்போதும் சொல்கிறேன். வண்ணநிலவனின் முழுத்தொகுதியை தொடர்ந்து வாசிக்கும் ஒரு நல்ல வாசகன் நான் சொல்லாமலேயே அவை மிகவும் சல்லிசாக இருப்பதை உணரமுடியுமென நினைக்கிறேன்.

நான் சுட்டிக்காட்டுவது, வலியுறுத்த நினைப்பதை மீண்டும் நீங்கள் தவறவிடுகிறீர்கள். விளக்கம் நீளமாகச் செல்ல வேண்டாம் என்பதனால் இதை இங்கே சுருக்கமாகச் சொல்லி நிறுத்திக்கொள்கிறேன்.

இலக்கியப்படைப்பு என்பது வேறெந்த வடிவிலும் சொல்லப்படக்கூடிய ஒன்றை மீண்டும் சொல்வது அல்ல. அது ஒன்றைச் சொல்லும்போது அதன் முழுமையைச் சொல்லமுயல்கிறது. இங்கே இப்படி நிகழ்கிறது என்று அது சொல்லும்போது எங்கும் எப்போதும் நிகழும் ஒன்றின் துளியை அதில் கொண்டுவந்துசேர்க்கிறது. காமத்தை அல்லது காதலை எழுதலாம். ஆனால் அது ஒவ்வொருவரும் அன்றாட வாழ்க்கையில் சாதாரணமாக அறியும் ஒன்றைச் சொல்வதாக இருக்காது. முழுமானுடக் காமத்தையும், இயற்கையிலுள்ள காமம் என்ற நிகழ்வையே அது சொல்லமுற்படும். அதன் கவித்துவத்தை, பிரம்மாண்டத்தைச் சொல்வதாக விரியும். ஆகவே விரியும் இயல்பைக் கோண்டிருக்கும்.

அதுவே வாசகனை வாசிப்பனுபவம் வழியாக மேலே கொண்டுசெல்கிறது. அவன் பார்க்காத முழுமைநோக்கை அளிக்கிறது. துர்க்கனேவ் முதல் ஹென்றிமில்லர் வரை நான் உதாரணங்களைச் சொல்வேன். சொல்லப்போனால் அனைத்து இலக்கியப்படைப்புகளையும் உதாரணமாகச் சொல்வேன். இலக்கியம் எளிய, அன்றாட விஷயங்களுக்கான ‘நுகர்வோர் கையேடு’ அல்ல. ‘நான் நினைச்சதை அப்டியே அவரும் சொல்லியிருக்கார். நாங்களும் சின்ன வயசில இப்டித்தான் மீசைய பென்சிலால வரைஞ்சுகிட்டு சைக்கிளிலே சைட் அடிக்கப்போவோம்’ என்ற பரவசத்தை வாசகனுக்கு அளிப்பதல்ல இலக்கியத்தின் இயல்பு.நான் சுட்டிக்காட்டுவது இதையே.

இந்த அற்பரசனையை பழகிக்கொண்ட வாசகர்களால் பேரிலக்கியங்களுக்குள்கூட நுழையமுடியவில்லை என்பதை கண்டுகொண்டே இருக்கிறேன். ஆகவேதான் இந்த மனநிலையை உடைத்தாகவேண்டும் என நினைக்கிறேன். அதை இலக்கியத்தன்மை என நம்பும் நம்பவைக்கும் மனநிலையை வென்றாகவேண்டியிருக்கிறது. மோகமுள் எப்படி காமத்தை தொட்டுசெல்வதாக மட்டும் எழுதப்பட்டிருக்கிறது, அது காமத்தை உண்மையில் முழுமையாகப் பேசநினைத்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என என் ‘இலக்கியமுன்னோடிகள் வரிசை’ நூலில் மிகமிக விரிவாகவே பேசியிருக்கிறேன். அந்நூலில் குபரா ,மௌனி போன்றவர்களின் கதைகளைப்பற்றிய விமர்சனத்த்திலும் அதை விளக்கியிருக்கிறேன்

அதாவது நான் பேசிக்கொண்டிருப்பது ‘பெரிய’ இலக்கியம் பற்றி. அனைத்தையும் பேசலாம், அவை பெரியதாக ஆகவேண்டும். முழு வாழ்க்கையை சொல்லும் துளிகளாக விரிய வேண்டும். அப்படி ஆகாமல் தடுக்கும் அம்சங்களில் தமிழில் முதன்மையாகச் சுட்டப்படவேண்டியது நுட்பமான, மென்மையான ஆண்பெண் சல்லாபத்தை ஓர் இலக்கியச்சுவை என எண்ணும் வாச்கார்களும் எழுத்தாளர்களும்தான். அதற்கான சமூகக்காரணங்கள் அன்று நமக்கிருந்தன. இன்று அவற்றிலிருந்து நாம் விடுவித்துக்கொண்டிருக்கிறோம் என்பதை சமகால இலக்கியப்படைப்புகள் காட்டுகின்றன- இதுவே நான் சொல்வது.

அதை நீங்கள் வெவ்வேறான கோணங்களில் நின்று எதிர்கொள்கிறீர்கள். காமத்தை விட்டுவிட்டு மற்ற அரசியல் சமூக விஷயங்களைச் சொல்லியிருக்கிறார்களா என்று நான் கேட்பதாக புரிந்துகொண்டிருக்கிறீர்கள். அவற்றையும் அன்றாட லௌகீக தளத்துக்குள் நின்று பேசியிருந்தால் அவையும் அற்ப எழுத்தே. தன்னைச்சுற்றியிருப்பவற்றில் இருந்து அறம்சார்ந்த, பண்பாடுசார்ந்த நெருக்கடிகளை அடைவதும் அவற்றை முழுமைநோக்குடன் படைப்பில் எதிர்கொள்வதும்தான் நான் பேசிக்கொண்டிருப்பது. அந்த முழுமைநோக்கை நான் தரிசனம் என்கிறேன். தனக்குரிய தரிசனமில்லாத எழுத்து அற்ப எழுத்தே.

நான் இலக்கியத்தில் தரிசனம் [ vision] பற்றிப் பேச ஆரம்பித்து 25 ஆண்டுகளாகின்றன. நூறு கட்டுரைகளாவது எழுதியிருப்பேன். தரிசனம் என நான் சொல்வதை விவரித்து அதன் பல்வேறு வகைகளை வரையறை செய்து.[ எதிர்த்தரிசனமும் தரிசனமே] அந்த அடிப்படைகளைத்தான் மீண்டும் நீங்கள் விளக்கக் கோருகிறீர்கள். காமம் ஆயினும் பிற ஆயினும் எழுத்து அதற்கான தரிசனத்தைக்கொண்டிருக்கவேண்டும் என்று சொன்னால் ‘பேசுபொருள்’ விதவிதமாக இருப்பதைப்பற்றிய கேள்வியாக அதை புரிந்துகொண்டிருக்கிறீர்கள். இதுவே நம்மிடையே உள்ள சிக்கல்.

மற்றபடி வாசிப்பு என்பது அவரவர் விருப்பம். எனக்கு தரிசனம் நிகழும் பேரிலக்கியம் தேவையில்லை என்று சொல்லவும் வாசகனுக்கு உரிமை உண்டு. நான் பேசுவது பெரிதினும் பெரிது கேட்கும் இலட்சிய வாசகனிடம்.

ஜெ


ஆழமும் அலைகளும்

முந்தைய கட்டுரைகல்பற்றாவைப்பற்றி ஒரு கட்டுரை
அடுத்த கட்டுரைபெப்பர் தொலைக்காட்சி நேர்காணல்