அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
நலமாக இருப்பீர்களென நினைக்கின்றேன் …தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர்க்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
இன்று நற்றிணை பதிப்பகத்திற்கு சென்று முதற்கனல் செம்பதிப்பு பிரதியை வாங்கி வந்தேன் .. கடந்த 2 வாரம் மும்பையில் இருந்ததால் வெள்ளி அன்று நேரில் வந்து பெற்றுக்கொள்ள இயலவில்லை
பிரதி மிக பிரமாதமாகவும் மிக நேர்த்தியாகவும் வந்துள்ளது … காகித தரம், படங்களின் வண்ணக் கலவை, படம் பதிந்த காகித தரம், அச்சு தரம் அனைத்தும் மிகக் கச்சிதமாக வந்துள்ளது. தங்களின் கையெழுத்து புத்தகத்திற்கு ஒரு கூடுதல் மதிப்பை அளிக்கின்றது.
மழைப்பாடல் மிக விறுவிறுப்பாக முற்றிலுமாக முதற்கனல்-இல் இருந்து வேறு ஒரு தளத்தில் நடக்கின்றது … முதற்கனல் எனக்கு ஒரு மிகை புனைவு தளத்தில் (fantasy element)லும், ஒவ்வொரு வர்ணனை, அவதானிப்பு, உரையாடல் பல உள் அர்த்தங்கள், ஆழ்ந்த சிந்திப்புகளை என்னிடம் இருந்து வெளி கொண்டு வந்தது ..
மாறாக மழைப்பாடல் இடங்கள், கதாபாத்திரங்களின் உணர்ச்சிகள், அரசியல் ஆகியவை பற்றிய மிக விரிவான, ஆழ்ந்த, விவரணைகள் நிறைந்து மகாபாரதப் போரின் அடி வேரை (root cause) மிகப்பெரிய ஒரு வலையாக பின்னிக்கொண்டு செல்கிறது .. குந்தி, விதுரன், சகுனி, அம்பாலிகை, அம்பிகை போன்ற பாத்திரங்களை இதுவரை பாரதத்தில் வரும் துணை பாத்திரங்களாகவே, தாய், மாமன், சிற்றப்பா போன்ற உறவு முறை பாத்திரங்களாகவே நான் அறிந்திருந்தேன் .. இவர்களை இணைத்து ஒரு மிகப்பெரிய அரசியல் ஆடுகளத்தை உருவாக்கி வருகிறது மழைப்பாடல்.
இன்னும் 2000 வருடங்கள் கழித்து, மழைப்பாடல் 5000 வருடங்களுக்கு முன்பு பாரதவர்ஷத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்கையின் அரசியல், வாழ்வுமுறை ஆகியவற்றின் இலக்கிய சான்றாக இருக்கும் என்ற எண்ணம் மீண்டும் மீண்டும் வலுப்பெறுகிறது …
சென்னையில் தங்களை நேரில் சந்தித்து புத்தகம் வாங்க முடியாமல் போனது என் துரதிருஷ்டம் …
அன்புடன்
வெண்ணி
அன்புள்ள வெண்ணி அவர்களுக்கு,
மீண்டும் சந்திப்போம். சந்தித்தபடிதானே இருக்கிறோம். முதற்கனல் செம்பதிப்பு பற்றி பொதுவாக சிறந்த மதிப்பீடே வந்துகொண்டிருக்கிறது. பாதிவிலையில் மலிவுப்பதிப்பு கிடைத்தபோதிலும் கடைகள் உட்பட அனைவருமே செம்பதிப்பு வேண்டுமென்று கோருகிறார்கள் என்றார். ஆனால் அது கடைகளில் கிடைக்காது. 600 பிரதிகளில் 12 பிரதிகள் மட்டுமே மிச்சம். எனக்குக் கிடைத்த 5 பிரதிகளில் ஒன்றை இளையராஜா அவர்களுக்கு நேரில் சந்தித்து வணங்கி அளித்தேன். நூலை சற்றே தூக்கி தலையில் வைத்து வணங்கி ‘சந்தோஷம்…சந்தோஷம்’ என்றார். புரட்டிப்பார்த்து ‘வாசிக்கிறேன்’ என்றார். நானும் கே.பி.வினோதும் அன்புவும் சென்றிருந்தோம்.
பிரதிகள் இன்று தனித்தபாலில் சேர்க்கப்படுமென ‘நற்றிணை’ யுகன் சொன்னார்.
ஜெ