பழசிராஜா வெள்ளிக்கிழமை…

பழசிராஜா மலையாளத்தில் தீபாவளியன்று வெளியாகியது. கடந்த பத்தாண்டுகளில் கேரளத்தில் வெளியான எந்த ஒரு திரைப்படத்தைவிடவும் அதிகமான வசூல் இந்தப்படத்துக்கு இதற்குள்ளாகவே வந்துவிட்டது என்று தயாரிப்பாளர் சொன்னார். நேற்றுடன் ஏறத்தாழ ஒன்பதுகோடி ரூபாய் வசூலித்திருக்கிறது.

http://lh4.ggpht.com/_seLpP2eaeFA/Sva6otD3gNI/AAAAAAAAAV4/AF8M9By_eLw/s400/MDSG383628.jpg

 

அதன் விளைவாக கேரளத்தில் வெளியான மற்ற எல்லா படங்களும் முழுமையாகவே தோல்வியடைந்தன. மோகன்லால் நடித்த ஒருபடம் அரைக்கோடியைக்கூட தாண்டவில்லை என்றார்கள். காரணம் மலையாளிகளின் மன அமைப்பு. அவர்கள் ஒருபடம் பார்த்தால் உடனே இன்னொரு படத்தைப் பார்க்க அரங்குக்குச் செல்வதில்லை.

 

இப்போது மலையாளத்திரையுலகின் அமைப்பான அம்மா ஒரு விதியை முன்வைத்திருக்கிறது. அதிகபட்சம் நான்குகோடிக்குமேல் செலவழித்து எடுக்கப்படும் படங்களைத் தடை செய்வது. விளம்பரத்துக்கு  இருபத்தைந்து லட்சத்துக்குமேல் செல்வழிப்பதை தடைசெய்வது. இது எப்படி நடைமுறைச் சாத்தியமாகும் என தெரியவில்லை.

 

பழசிராஜாவின் இந்த வசூல்மழை இன்னும் ஒருமாதம் நீடித்தால்கூட அதன் செலவில் பாதி கைக்குவராது. கிட்டத்தட்ட இருபதுகோடிசெலவிடப்பட்ட படம். மூன்றுவருடம் எடுக்கப்பட்டது. வட்டியுடன் சேர்த்தால் 30 கோடி வசூலாகவேண்டும். அதற்காகவே தமிழ் தெலுங்கு மலையாளத்தை நம்பியிருக்கிறார்கள். வரும் நவம்பர் 13 அன்று தமிழகத்தில் வெளியாகிறது. தமிழில் வசனங்களை நான் எழுதியிருக்கிறேன்.

 

பழசிராஜாவைப் பார்ப்பவர்கள் அதன் செலவு முழுக்க படத்தில் தெரிவதை கண்டுகொள்வார்கள். பொதுவாக தமிழில் உயர்செலவுப் படங்களில் திரையில் ஒன்றுமிருக்காது. ஊதியங்கள், பலவகையான நிர்வாகச்சிக்கல்கள் காரணமாகவே செலவு அதிகமாகியிருக்கும். பழசிராஜா மிகக்கச்சிதமான திட்டமிடப்பட்டு துல்லியமாக காட்சிகள் கோர்க்கப்பட்டு எடுக்கப்பட்ட படம்.

 

செலவேறியதற்குக் காரணம் திரையின் காட்சிகளின் ‘அகலம்’. பெரும்பாலான காட்சிகளில் பெருங்கூட்டம். அத்தனைபேரும் வேடம் போட்ட துணைநடிகர்கள். அவ்வாரு ஏராளமானபேர் நடிக்கும் போது நீளமான ‘ஷாட்களை’ பொதுவாக வைக்க மாட்டார்கள். அத்தனை பேரின் சலனங்களையும் வடிவமைத்து, அவர்களுக்குப் பயிற்சி கொடுத்து, பிழையிலாது எடுப்பது கடினம். ஆனால் நீளமான காட்சிகளே கூட்டத்தின் விரிவையும் அந்நிலத்தின் அழகையும் காட்டும். பழசிராஜாவில் பெரும்பாலான காட்சிகள் நீளமான துரக்காட்சிகள்.

 

அடர்ந்த காட்டுக்குள் சென்று படம் எடுக்கபப்ட்டிருக்கிறது. பெரும்பொருட்செலவில் பல ‘செட்’கள் போடப்பட்டன. அவை போர்க்களக்காட்சிகளில் அழிக்கவும்பட்டன. அதற்குமுன் கேரளத்தில் போட்ட செட் மழையால் முழுமையாக அழிந்தது. பின்னர் தலைக்கோணம் காட்டில் மீண்டும் செட் போட்டு படத்தை எடுத்திருக்கிறார்கள்.

 

 

திரைப்படத்தில் ஈடுபாடுள்ள எந்த ஒருவரும் காட்சிக்கோர்ப்பில் உள்ள அபாரமான நேர்த்திக்காகவே இந்தப்படத்தைப் பார்க்கலாம். மாபெரும் செலவில் எடுக்கப்படும் ஹாலிவுட் படங்களுக்கு நிகரான ஒழுங்குடனும் கலையழகுடனும் உள்ள காட்சிகள். பல காட்சிகளில் காமிரா எப்படி திரும்பிச்செல்கிறது என்பதே ஊகிக்க முடியாதபடி உள்ளது.

 

இயக்குநர் ஹரிஹரனுக்கு 72 வயதாகிறது. 1965ல் திரையுலகுக்கு வந்தவர். 1973ல் ‘லேடீஸ் ஹாஸ்டல்’ என்ற படத்தை இயக்கியபடி அறிமுகமானார். கிட்டத்தட்ட முப்பத்திமூன்று வருடங்களாக கேரளத்தின் முக்கியமான திரை இயக்குநர். தொடர்ந்து மாபெரும் வெற்றிப்படங்களை அளித்திருக்கிறார். கேரளத்தின் மறக்கமுடியாத கலைப்படங்களையும் இயக்கியிருக்கிறார். கேரள அரசு விருதும் தேசியவிருதும் பெற்றிருக்கிறார்.பல சர்வதேச திரைவிழாக்களில் முக்கியமான விருதுகளைப் பெற்றவை அவரது படங்கள்.

 

ஹரிஹரனின் வயதில் அவர் ஒரு நாற்காலி இயக்குநராக இருக்க வேண்டும். ஆனால் காட்சியில் முந்நூறு பேர் இருந்தால் முந்நூறுபேரையும் அவர்தான் தயாரிப்பார். காட்சி முழுக்க அவரே ஓடி அலைந்து அணுவணுவாகக் கோர்ப்பார். அவரது உடலாற்றல் அபாரமானது. எந்த விதமான கெட்ட பழக்கங்களும் இல்லாத வேலையடிமை. எந்தவிதமான சுயப்பிரக்ஞையும் தோரணையும் இல்லாத மனிதர். ஒரு விவாதம் என்றால் அவரே கிளம்பி வந்து அமர்வார். பேசும்போதே நாற்காலியில் இருந்து கட்டிலுக்கு தாவுவார். எழுந்து அறைக்குள் சுற்றிவருவார். உரத்த குரலில் கைகளை ஆட்டி விவாதிப்பார்.

 

பழசிராஜாவின் வெற்றி குறித்து மெல்லிய ஐயம் இருந்தது. காரணம் அது செயற்கையாக நாடகப்படுத்தப்படாத படம். வரலாறு ஏறத்தாழ வரலாறாகவே சொல்லப்பட்டிருக்கிறது. அது அவ்வண்ணம்தான் இருந்தாகவேண்டும் என்பது எம்.டி.வாசுதேவன் நாயரின் விருப்பம். நெடுங்காலத்தயாரிப்பு வேறு. ஆனால் படத்தை மலையாளிகள் மிகவிரும்பியிருக்கிறார்கள்.

 

படத்தின் வெற்றிக்கு முக்கியமான காரணமே மாபெரும் ஓவியங்கள் போனற அழகிய காட்சியமைப்புகள்தான் என்கிறார்கள். ரசூல் பூக்குட்டியின் ஒலியமைப்பும் கேரளத்தில் பெரிதும் பேசப்படுகிறது. இளையராஜாவின் இசையில் பாடல்கள் பிரபலமாகின. ஒரு பாடல் மலையாளத்தின் எக்காலத்திலும் சிறந்த பாடல்களில் ஒன்று என்று விமரிசகர்கள் எழுதுகிறார்கள்.மம்மூட்டியை விடவும் சரத்குமாரின் நடிப்பு கேரளத்தில் அதிகமாகப் பேசப்படுகிறது.

 

தமிழில் எம்.டியின் வசனத்தை மொழியாக்கம் செய்வதிலேயே நான் பங்களிப்பாற்றியிருக்கிறேன். அது ஒரு மிகச்சிறிய பங்களிப்பே. எடுக்கப்பட்ட படம் நான்குமணி நேரம் ஓடுவது. இப்போதையபடம் மலையாளத்தில் மூன்றேகால் மணிநேரம்,தமிழ் தெலுங்கு இந்தியில் இரண்டேமுக்கால்மணிநேரம்.   

பதிமூன்றாம் தேதிக்குப்பின் சில நாட்களில் தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது தெரிந்துவிடும். இது ஒரு இனிய பதற்றம்

 

 

 

 

 

 

பழசி ராஜா

 

பழசிராஜா, கடிதங்கள்

முந்தைய கட்டுரைநெடுங்குருதி-1
அடுத்த கட்டுரைபழசிராஜா முன்னோட்டம்