கதைச் சதுரங்கம்

புத்தகக் கண்காட்சிகளை பார்க்கையில் தெரிகிறது, திடீரென்று வணிகக் கேளிக்கை புனைவெழுத்து அழிந்துவிட்டடது. சென்றகால நட்சத்திரங்கள் சிலர் இன்னும் விற்பனையில் உள்ளனர். அவர்களை வாங்கி வாசிப்பவர்கள் அன்றைய வாசகர்கள். சமகாலத்தில் உருவாகி வந்த புனைவெழுத்தாளர்கள் அனேகமாக எவருமில்லை

ஃப்ரெடெரிக் ஃபோர்ஸித்

வணிகக் கதைகள் காலம் மாறும்போது பொருளிழந்து செல்லக்கூடியவை. அதிலும் புலனாய்வு- திகில்- பரபரப்பு கதைகள் மிகவேகமாக பழையனவாகும். ஒரு காலத்தில் நான் ஆங்கிலத்திலும் தமிழிலும் வந்த வணிகக்கேளிக்கை நாவல்களை வாசித்துத் தள்ளியிருக்கிறேன். தீவிரவாசிப்புக்கு நிகராகவே அவை எனக்குத் தேவைப்பட்டிருந்தன. ஜேம்ஸ் ஹேட்லி சேஸ், ஃப்ரடரிக் ஃபோர்ஸித், இர்விங் வாலஸ்,மரியோ புஸோ,அலிஸ்டார் மக்லேன் போன்றவர்களின் பரபரப்புநாவல்கள் லென் டைட்டன்,கார்னிலியஸ் ரயான் போன்றவர்களின் போர் நாவல்கள்.

எங்கள் தலைமுறையில் நாங்கள் கொண்டாடிய அந்நாவல்களை இன்று வாசிக்கிறார்களா என்று தெரியவில்லை. ஆனால் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கிறார்கள். நான் வணிக எழுத்துக்களை வாசிப்பதை நிறுத்திவிட்டபின்னரும்கூட தொடர்ந்து காதில் விழுந்துகொண்டே இருந்தமையால் ஜெஃப்ரி ஆர்ச்சர், ஜான் கிரிஷாம் போன்றவர்களின் ஓரிரு நாவல்களை வாசித்தேன். கடைசியாக டான் பிரவுன் எழுதிய டாவின்ஸி கோட். அறிவியல் புனைவுகளில் கடைசியாக ஸ்டெஃபானி மேயர் எழுதிய தி ஹோஸ்ட்.

அவை எனக்கு ஏன் தேவைப்பட்டன என்று இன்று யோசிக்கையில் தீவிரவாசிப்பில் இருந்து இறங்கும்போதுகூட வாசிப்பின் கனவுலகில் நீடிக்க விரும்பியிருக்கிறேன் என்று தெரிகிறது. தொடர்ந்து ஒவ்வொருநாளும் வாசிப்பவனே நல்ல வாசகனாக இருக்கமுடியும். எங்கும் எப்போதும் இலக்கியத்தை வாசிக்கமுடியாது. வாசிப்பு ஓர் அன்றாடச்செயல்பாடாக, ஒரு சமூகஇயக்கமாக நிலைநிற்க வணிக எழுத்து அவசியம்.

தமிழில் வணிக எழுத்து என்பது வார இதழ்களை நம்பியே இருந்தது. தொலைக்காட்சித்தொடர்கள் தினமும் வர ஆரம்பித்தபோது வாரம்தோறும் வாசிப்பது அருகியது. விளைவாக தொடர்கதைகள் தவிர்க்கப்பட்டன. கூடவே வணிக எழுத்துக்கும் மறைந்தது. இன்று ஒரு வலுவான சமூக இயக்கமாக அது இல்லை.

அதன் விளைவாக ஒட்டுமொத்தமான புனைவுவாசிப்பு குறைகிறது. பயன்சார் எழுத்து அந்த இடத்தை எடுத்துக்கொள்கிறது. இன்று வணிக எழுத்து அவசியமாகிறது. தொடர்ந்து வாசிப்பு ஆர்வத்தை நிலைநாட்ட. ஆனால் அது வணிக எழுத்து என்றும் இலக்கியம் அல்ல என்றும் நாம் நினைவில் கொள்ளவேண்டியிருக்கிறது.

அத்துடன் வணிகக்கேளிக்கை எழுத்து இல்லாமலாகும்போது சாதாரண வணிக எழுத்துக்களை இலக்கியமாக முன்வைக்க்கும்போக்கும் உருவாகிறது. சமீபத்தில் ராஜீவ்காந்திசாலை என்ற நாவலை வாசித்தேன் – பாதிவரை.மொழித்திறனில்லாது எழுதப்பட்ட இரண்டாந்தர வணிக எழுத்து. எழுத்தாளருக்கு இலக்கிய அறிமுகமென ஏதுமில்லை, அந்த நோக்கமும் அவருக்கில்லை என்று வெளிப்படையாகத் தெரிகிறது. ஆனால் அந்தப்பதிப்பகம் அதை இலக்கியம் என்கிறது. இந்த வகை மோசடிகளைத் தவிர்ப்பதற்காவது தமிழில் வணிக எழுத்து நீடிக்கவேண்டியிருக்கிறது

கெ.என்.சிவராமன் எழுதிய கர்ணனின் கவசம் பாவனைகள் ஏதுமில்லாமல் தன்னை வணிகப்புனைவாகவே முன்வைக்கும் ஒரு நாவல். தமிழில் மீண்டும் தொடர்கதை வாசிக்கும் வழக்கத்தை நிலைநாட்ட அதனால் முடிந்துள்ளது என்கிறார்கள். அக்காரணத்தாலேயே அது வரவேற்புக்குரியது.

இரண்டு காரணங்களுக்காக இந்நாவலை பாராட்டவிரும்புகிறேன். தார்ண்டன் வைல்டர் [Thornton Wilder] எழுதிய சான் லூயிஸ் ரே-யின் பாலம் [The Bridge of San Luis Rey] என்னும் நாவல் 1927 ல் வெளிவந்தது. பெருநாட்டில் 1714 ல் ஒரு பாலம் உடைந்தது. அதிலிருந்த ஒவ்வொருவரின் வாழ்க்கையையும் பின்னோக்கிச்சென்று ஆராயும் நாவல் அத்தனை கதைகளும் ஒரு பாலத்தில் முடிவதை சித்தரித்து மரணத்தின் பொருளை ஆராய்ந்தது [1986ல் இதை வாசித்தேன்.நெடுநாள் இதை எழுதியவர் ஒரு லத்தீன் அமெரிக்க எழுத்தாளர் என்றே எண்ணியிருந்தேன். நன்றி விக்கிபீடியா ]

இந்நாவல் பலகதைகள் பின்னிச்செல்லும் நேர்கோடற்ற கதைகூறுமுறைக்கு ஒரு பெரிய முன்னுதாரணம். அது லத்தீனமேரிக்க நாவலாசிரியர்கள் பலரை கவர்ந்தது. அவர்கள் அதை ஒரு மிகவெற்றிகரமான இலக்கிய முறைமையாக ஆக்கினர். பின்நவீனத்துவ எழுத்தின் இயல்பாகவும் அது மாறியது.

அதன்பின் அந்தக் கதைகூறுமுறை வணிக எழுத்தில் புகுந்து வெற்றிபெற்றது. வணிக சினிமாவில் ஆழமாக வேரூன்றியது.அமோரெஸ் பெரோஸ் [ Amores Perros] மெமெண்டோ [Memento] இன்செப்ஷன் [ Inception] போன்ற படங்களை நினைவுகூரலாம்.

தமிழின் வணிக எழுத்தில் முழுமையாகவே பலசரடுகளாக கதைகளைப்பின்னிச்செல்லும் ஒரு கதைகூறல்முறையை அறிமுகம் செய்திருக்கிறது என்பதே கர்ணனின் கவசம் நாவலின் முக்கியமான சிறப்பு. புராணம், வரலாறு, சமகால அரசியல், சமகால சினிமா என அனைத்துமே வெறும் புனைவுகள்தான் என அது எடுத்துக்கொள்கிறது. ஆகவே புனைவுகள் அனைத்தையும் ஒன்றுடன் ஒன்று சுதந்திரமாகக் கலந்துகொள்கிறது.

இத்தகைய பின்நவீனத்துவ நோக்கு ஒன்றை தமிழின் வெகுஜனவாசிப்புக்குக் கொண்டுசென்று ஏற்கச்செய்யமுடியுமென நிரூபித்திருப்பது வியப்பூட்டுகிறது. இந்திரனால் பெறப்பட்ட கர்ணனின் கவசம் எங்கிருக்கிறது என்று தேடிச்ச்செலும் திகில்கதை. அதைத் தேடுபவர்கள் ஜெர்மானியர்கள். கூடவே ஹாலிவுட்தனமாக இணைந்துகொள்ளும் வெவ்வேறு குழுக்கள். அதைப் பாதுகாப்பவர்கள். பொன்னியின் செல்வனின் கதாபாத்திரங்கள். வரலாற்று மனிதர்கள். சமகால அரசியல் நிகழ்வுகள்.

இவ்வகை கதையை வாசிப்பதற்கான முதல் தகுதியே ‘இப்படி நடக்குமா?’ என்ற வினாவை ரத்து செய்வதுதான். நடந்தவை என்றும் வரலாறு என்றும் என நாம் முழுக்கமுழுக்க நம்புபவையே கதைகள்தான் என்று சொல்லும் ஒரு பின்நவீனத்துவ பார்வைதான் இந்தவகை புனைவை உருவாக்குகிறது.

இரண்டாவது தகுதி கதை தொட்டுச் செல்லும் அனைத்து முடிச்சுகளையும் கணக்கிலெடுத்துக்கொண்டு கதையை எழுதும் ஆசிரியனுடன் ஒரு சதுரங்கத்துக்கு வாசகன் முயல்வது. கதையை நம்பி அந்த உலகில் கற்பனையில் வாழும் வாசிப்பு இதற்கு ஒவ்வாது. ஆசிரியனை தாண்டிச்செல்லமுடிந்தால் அதுவே நல்ல வாசிப்பு

பொதுவாக வணிகப்புனைவு என்பது எழுதப்பட்ட பகற்கனவுதான். முதிரா இளமையில் அவை அளிக்கும் பரவசமே வாசிப்புக்குத் தூண்டுகிறது. அடுத்தகட்ட வாசிப்புதான் புனைவை ஒரு விளையாட்டாக காணத் தொடங்குவது. அங்கே பொழுதுபோக்கு வாசிப்பின் உச்சம் நிகழ்கிறது. இலக்கியவாசகனாக மாறியபின்னரும் நம்மை இழுப்பது இந்த கதையாடல்தான்

நான் என் இளமையில் வாசித்துத்தள்ளிய எர்ல் ஸ்டான்லி கார்ட்னரின் பெரிமேஸன் கதைகள், அகதா கிறிஸ்டி நாவல்கள் அவ்வகையில் முக்கியமானவை. [இப்போது அவற்றை எவராவது வாசிக்கிறார்களா?] அந்த வாசிப்பின் பின்நவீனத்துவ வடிவம் என இவ்வகை எழுத்தைச் சொல்லலாம்.

அத்தகைய புனைவுகளின் ஒரு தொடக்கமாக இது அமையுமென்றால் வலுவான ஒரு புதிய வணிக எழுத்தின் அலை தொடங்கக்கூடும். இக்கதையை வைத்து ஆசிரியனிடம் விளையாட நிறையவே உள்ளது

கெ.என்.சிவராமன்

ஆனால் நாவல் என்ற வகையில் இது ஒரு தொடக்கநிலை எழுத்தாகவே உள்ளது. தேர்ந்த வணிக எழுத்தாளனுக்குரிய சரளமான நடை சிவராமனுக்கு இன்னும் கைவரவில்லை. அத்துடன் பொதுவாக இவ்வகை எழுத்துக்களில் இன்றுவரை புழங்கும் தேய்வழக்குகளை தொடந்து கவனித்து களையவேண்டியிருக்கிறது

தொடர்ந்து எழுதுவதன் மூலம் புத்திசாலித்தனமான ஒரு பொழுதுபோக்கு வாசிப்பை உருவாக்க சிவராமனால் முடியலாம்.

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 52
அடுத்த கட்டுரைஃபேஸ்புக், ஞாநி-கடிதம்