அழியாக் கதைகள்

பால்ஸாக் என்ற பேரை நான் கேள்விப்படுவது கல்லூரி முதலாண்டு படிக்கும்போது என் வணிகவியல் பேராசிரியரான பேரா மனோகரன் அவர்களிடமிருந்து. நான் கையில் வைத்திருந்த அலக்ஸாண்டர் டூமாவின் பிளாக் ட்யூலிப் நாவலைப் பார்த்துவிட்டு ‘இந்த மயித்த எல்லாம் எதுக்குடே படிக்கே? எளவு ஒரு மாப்பசானையும் பாள்ஸாக்கையும் படிச்சால்லா எலக்கியம் பிடிகெடைக்கும்?’ என்றார்.

பால்ஸாக்

அன்று வாசித்த மாப்பஸானும் பால்ஸாக்கும் இன்றும் என் நினைவில் நிற்கும் எழுத்தாளர்கள். பலகதைகளை திரும்ப என்னால் வாசிக்கமுடியுமா என்று தெரியவில்லை. ஆனால் அவை நினைவில் நீடித்து பல எதிரொலிகளை உருவாக்குகின்றன. புதுமைப்பித்தன் கதைகளில் மாப்பஸான், பால்ஸாக் இருவருடைய பாதிப்பும் உண்டு. என் எழுத்திலும் எங்கேனும் இருக்கக்கூடும்.

சென்னைக்குச் செல்ல ரயில் ஏறும்போது சும்மா கையில் கிடைத்தது என பால்ஸாக் எழுதிய கதைகளின் தொகுதியான ‘செந்நிறவிடுதி’ யை எடுத்துக்கொண்டேன். தமிழினி வெளியீடு, ராஜேந்திரன் மொழியாக்கம். முதல் விஷயம் தமிழின் வழக்கமான மொழியாக்கங்களைப்போல மொழிப்படுத்தல் அல்ல இது. வாசிப்புக்கு உகந்த சரளமான மொழிநடை. ஒருமணிநேரத்தில் வாசித்துமுடித்தேன்.

பால்ஸாக்கின் கதைகளைப்புரிந்துகொள்ள அன்றைய வாசிப்புமுறையையும் அறிந்திருக்கவேண்டும். அக்காலத்தில் புத்தகங்கள் பெரும்பாலும் படித்தவர்கள் மற்றும் உயர்குடியினருக்குரியவை. அன்றைய முக்கியமான பொழுதுபோக்கு வாசிப்பே. நவீன இலக்கியம் என்ற வடிவமே உயர்தரக்கேளிக்கை என்ற நோக்குடன் உருவானதுதான். பண்டைய இலக்கியங்கள் ஞானப்பகிர்வுக்கும் நவீன இலக்கியங்கள் உல்லாசத்துக்கும் உரியவை என்ற நம்பிக்கை இருந்தது. நாவல், ரொமான் போன்ற பெயர்களே அதைத்தான் சுட்டுகின்றன.

பெரும்பாலான படைப்புகள் வாசிக்கப்படவில்லை, வாசித்துக்கேட்கப்பட்டன.ஒருவிருந்தில் அல்லது இரவுணவுக்குப்பின்பு கணப்பருகே அமர்ந்திருக்கும் நேரத்தில் அல்லது கோடைகாலத்தில் பூங்காக்களின் சிறுவிருந்துகளில் அவற்றை ஒருவர் வாசிக்க பிறர் கேட்பார்கள். இந்த அம்சம் அன்றைய இலக்கியத்தின் மொழிநடையையும் அமைப்பையும் தீர்மானித்தது.

ஒருவர் சொல்வதுபோன்ற கதையமைப்பு இத்தகையவாசிப்புக்கு மிக அண்மையானது. ஏனென்றால் அக்கதை வாசிப்பவரால் சொல்லப்படுவதுபோல கேட்பவர்களுக்கு ஒலிக்கும். சில வரிகளுக்குள்ளேயே வாசகனைப் பிணைத்துக்கொண்டு முன்செல்லும் கதைகளுக்கே ஆதரவு. ஆகவே மர்மம், திகில், காதல் போன்றவை புனைவில் அதிக இடம்பெற்றன. அக்காலம்தான் உலக இலக்கியத்தில் பேய்க்கதைகளின், சாகஸக்கதைகளின் பொற்காலம். இன்றுவரை ஹாலிவுட்டை ஆளும் அனைத்துக் கதைக்கருக்களும் அக்காலகட்டத்தில் உருவாக்கப்பட்டவையே.

பால்ஸாக்கின் கதைகளும் இந்த முதற்கட்ட குணாதிசயங்கள் கொண்டவை. ஆனால் அவற்றை எழுதியவர் ஒரு மேதை என்பதனாலேயே அனைத்துக்கதைகளும் வெறும்கதைகள் என்ற எல்லையை மிக எளிதாகத் தாண்டிவிடுகின்றன. மானுடவாழ்க்கையின் உச்ச கணங்களை, இருளின் முடிவின்மையை சென்று தொட்டு ஆழ்ந்த தரிசனம் கொண்டவையாகவும் ஆகின்றன.

உதாரணமாக செந்நிற விடுதியின் முதல்கதை. பாலைவனத்தில் சிக்கிக்கொண்ட ஒருவனுக்கு ஒரு சிறுத்தையுடன் உருவாகும் உறவைப்பற்றிய கதை இது. வெறும்கதையாகவே எந்தக்குழந்தைக்கும் இதைச் சொல்லலாம். ஆனால் ஒரு நுண்ணியவாசகன் ஆண்பெண் உறவின் நுட்பமான அகங்கார விளையாட்டை இக்கதையில் காணமுடியும். அதன் உச்சகட்ட முரண்பாட்டை கண்டு திகைக்கமுடியும் [A Passion in the Desert]

செந்நிற விடுதி சற்றே நீளமான குறுநாவல். தொடர்ந்து வரும் நுட்பமான கிண்டல்களுடன் வாய்ச்சாலமாக சொல்லப்படும் பாணியிலான கதை. திகைக்கவைக்கும் திருப்பங்கள் கொண்டது. ஆனால் கதையின் சாராம்சமென்பது குற்றவுணர்ச்சிக்கும் மானுடஇச்சைக்குமான பெரிய ஊசலாட்டத்தைப்பற்றியது என்பதை உணரும்போது முடிந்த கணத்திலிருந்தே கதை வளரத்தொடங்குகிறது. நூற்றைம்பதாண்டுகளுக்குப்பின்னரும் இக்குறுநாவலின் ஆற்றல் வியப்பூட்டுகிறது. இக்குறுநாவலுக்கும் தல்ஸ்தோய் தஸ்தயேவ்ஸ்கிக்கும் உள்ள தொடர்பென்ன என்று ஆராயச்செய்கிறது.

அத்தனை கதைகளும் விதவிதமாக மானுடஆழங்களை நோக்கித் திறக்கின்றன. இவை எழுதப்பட்டு நூற்றைம்பதாண்டுகளாகின்றன. ஒன்றரை நூற்றாண்டுக் காலத்தில் பால்ஸாக்கைத் தாண்டி அதிகம்பேர் சென்றதில்லை என்றும் எண்ணத்தோன்றுகிறது.

[செந்நிற விடுதி. பால்ஸாக். தமிழினி]

முந்தைய கட்டுரைஇந்துத்துவ அறிவியக்கத்தின் பங்களிப்பு- அரவிந்தன் நீலகண்டன்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 61