அன்புள்ள ஜெ, நலமா,
அறம் தொகுப்பிலுள்ள அத்தனைக் கதைகளும் நன்றாக இருக்கிறதென நண்பர்கள் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். குறிப்பாக “ஒருவன் தன் வாழக்கை முழுவதையும் புரிதலுக்காக பலி கொடுக்காவிட்டால் இதுபோன்ற ஒரு கதையை எழுத முடியாது” என்று “யானை டாக்டர்” பற்றி என் நண்பர் ஒருவர் விசேஷித்துச் சொன்னார்.
நானும் முதலில் தேர்ந்தெடுத்து வாசித்தது “யானை டாக்டர்” கதையைத்தான். மிகச் சாதாரணமாக பக்கங்களை கடந்துபோகையில் சராசரி வாசகர்கள் சாதாரண விஷயங்களைத்தான் கொண்டாடுவார்கள் என்ற எண்ணம் மேலிடுவதைத் தவிர்க்க முடியாமல் தொடர்ந்தேன்.
புழுக் குவியலின் அருவருப்பில் சிக்கி உடலெங்கும் நாற்றமெடுப்பதை உணர்வுபூர்வமாக அறியும் தறுவாயில் நானும் யானைக் காட்டில் இருக்கிறேன் என்பதைப் புரிந்து கொண்டேன். தொடர்ச்சியாக பக்கங்கள் நகர நகர உடல் வெது வெதுப்பாகி கண்ணீர் பொழிவதை நிறுத்த முடியாமல் அனிச்சையாக என் வலது கால் துடித்துக் கொண்டிருப்பதைக் கண்டேன். கீழ்த்தாடை, குளிரில் ஒடுங்கும் வயோதிக கிழவனுக்கு ஒப்பாக வலுவிழந்து தொடர்ந்து துடித்துக் கொண்டிருந்தது.
சுயத்தை மறுதலித்து பழகிக் கொண்டிருக்கும் எனக்கு இந்த “யானை டாக்டர்” என் மறுதலிப்பிற்கான நிச்சயப் புரிதலைதந்து மேலும் வலுவூட்டியிருக்கிறது. இன்றைக்கு அழுது தீர்த்தேன். பல ஆண்டுகள் அடங்கிக்கிடந்த விடுதலையுணர்ச்சி பெரு வெடிப்பெடுத்து கிளம்பியது போல அழுது தீர்த்தேன். பத்து நிமிடங்களுக்கு மேலாக எதையுமறியாமல் மூர்ச்சையாகியிருக்கிறேன் என்பதை மெல்ல உணர்ந்தபோது இலக்கியம் தொடர்ந்து என்னுள் செய்யும் சாகசங்களை நினைத்து பெருமிதம் கொண்டேன்.
மூன்றம்தரமான பரிவுணர்ச்சிக் கண்ணீர் இல்லையிது. ஒரு தரிசனத்தைக் காணும்போது, அல்லது தேடலுக்கு மேலாக கிடைக்கப் பெற்றதை கைக்கொள்ளத் தெரியாமல் நடுக்கத்துடன் திக்கெட்டும் அலறி அனுபவிக்கும் சந்தோஷ மன நிறைவு. மன ஆழத்திலிருந்து நன்றி ஜெ.
திருநெல்வேலியிலிருந்து,
சாம் நாதன்.
அன்புள்ள சாமிநாதன்,
வென்று செல்வது பற்றி திரும்பத்திரும்ப ஓஷோ சொல்லிக்கொண்டே இருக்கிறார். ஓஷோவின் பார்வையில் வெல்லவேண்டியவை அனைத்தும் வெல்லநினைப்பவனிடமே உள்ளன. தன்னை அன்றி வெல்வதற்கு ஏதுமில்லை. அச்சம் அருவருப்பு தயக்கம் ஐயம் என மனிதனின் அனைத்து சமர்களும் தன்னுடன் மட்டுமே.
தான் செய்யும் செயல்களின் வழியாக மனிதன் அடையும் திறன்கள் அனைத்துமே தன்னை வென்றுசெல்வதுதான். ஓட்டக்கற்றுக்கொண்ட ஒருவன் காரை கடந்துசென்றுவிட்டான். வெளியே இருக்கும் பருவடிவமான இயந்திரமான காரை வென்றுசெல்வதாக எண்ணுகிறான். வென்றிருப்பது அவனுடைய அறியாமையின் ஒருபகுதியை, அவன் கையின்கட்டுப்பாடுகளில் சிலவற்றை மட்டுமே.
கர்மயோகிகள் என்பவர்கள் தங்கள் புறத்தே செய்யும் சில செயல்கள் வழியாக அகத்தை வென்றவர்கள். அகத்தை வெல்வது யோகம்.
யானைடாக்டர் ஒரு கர்மயோகி. யானை வழியாக அவர் வென்றது காட்டை அல்ல. புழுவை அறிந்தது வழியாக அவர் வென்றது அருவருப்பையும் அல்ல. அவர் வென்று செல்வது அவரைத்தான்.
ஜெ