ந.பிச்சமூர்த்தி கதைகளின் இடம்

அன்புள்ள ஜெயமோகன்,

கந்தர்வன் பற்றிய உங்களது கட்டுரையை ( பழைய இடுகை) படித்தேன்.நெகிழ்ச்சியாக இருந்தது. கந்த‌ர்வன் எனது ஆதர்ச எழுத்தாளர்.

ஒரு கதையை படித்தவுடன் நம் ரசனையுடன் ஒத்த நண்பர்களிடம் படிக்கச்சொல்வதும், பகிர்ந்துகொள்வதும் ஒரு உன்னதமான மனநிலை. சு.ரா வின் விகாசம், கந்தர்வனின் கதைகள்தேசம்,பெருமாள் முருகனின் பெருவழி படித்தபோது எனக்கு அந்த மனநிலை இருந்தது . மிகச்சமீபமாக உங்களுடைய‌ “உச்சவழு” படித்துவிட்டு அப்படிதான் கடலூர் சீனுவிடம் பகிர்ந்துகொண்டேன்.அவர் கண்,சந்திப்பு போன்ற கதைகள் இதுபோல் மாறுபட்ட வடிவம் கொண்டவை என்றார்.

அறம் தொகுதியில்அனைத்து கதைகளையும் படித்துவிட்டேன்.ஓலைச்சிலுவை,வணங்கான்,நூறுநாற்காலி கதைகள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.ஓலைச்சிலுவை,வணங்கான் இரண்டையும் தனித்தனி நாவலாகவே எழுதியிருக்கலாம் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.நான் சமீபமாக உங்களது வலைதளத்தை படித்து

வருகிறேன். இலக்கியம் குறித்த உங்க‌ளுடைய பெரும்பாண்மையான கருத்துக்கள் சரியாக எனக்கு மிகச்சரியாகவே தெரிகிறது.

அப்படியே உங்க‌ளிடம் ஒரு சந்தேகம் கேட்க வேண்டும். நீங்கள் சொன்னால் சரியாகஇருக்கும். ந.பிச்சமூத்தி கதைகள் பற்றி உங்கள் மதிப்பீடு என்ன ? நான் கேட்டவரை எல்லோரும் ந.பிச்சமூத்தி ஒரு நல்ல கவிஞர் மட்டுமே,கதைகள் சுமார்தான் என்பதுபோல் சொல்கிறார்கள். உங்கள் கருத்து என்ன ?

(இது என் முத‌ல் கடிதம், எதுவும் தவறாக இருந்தால் மன்னிக்கவும்)

ஆர்.சரவணன்,புதுக்கோட்டை

அன்புள்ள சரவணன்

ஒருமொழியில் செவ்விலக்கியம் என்பது அதன் ஆரம்பகாலத்தில் உருவாவதும், அதில் பிறகுவளர்ந்து வரக்கூடிய அதன் அனைத்து வழிகளுக்கும் தொடக்கமாக அமைவதுமாகும். நவீனத்தமிழ் செவ்விலக்கியத்தின் தொடக்ககால நாயகர்கள் புதுமைப்பித்தன், கு.ப.ராஜகோபாலன், ந.பிச்சமூர்த்தி, மௌனி, எம்.எஸ்.கல்யாணசுந்தரம் ஆகியோர். அவர்களின் படைப்புகள் ஆரம்பகாலத்தையவை. ஆகவே அவர்களின் ஆக்கங்கள் பிற மொழி படைப்புகளின் முன்னுதாரணங்களைக் கொண்டிருக்கலாம். பல படைப்புகள் இயல்பான புனைவொருமை கலைவெற்றி கைகூடாதவையாக இருக்கலாம். அந்த மதிப்பீடுகளை நாம் தெளிவாகவே முன்வைக்கவேண்டும். ஆனாலும் அவர்கள் முன்னோடிகள், செவ்விலக்கியத்தை அளித்தவர்கள் என்பதை மறந்துவிடக்கூடாது.

புதுமைப்பித்தனை மட்டுமே நான் இவர்களில் முதன்மையான படைப்பாளி, மேதை என நினைக்கிறேன். பிறர் முன்னோடிகள், அவ்வளவுதான். இன்றைய வாசிப்பில் காலம் கடந்து நிற்கும் முதன்மையான ஆக்கங்கள் என சிலவற்றையே அவர்களில் நாம் கண்டடைய முடிகிறது. ஆனால் அவர்கள் அவர்களை விடமேலான படைப்பாளிகளுக்கு தொடக்கமாக அமைந்திருக்கிறார்கள்.

உதாரணமாக கு.ப.ராஜகோபாலன் தி.ஜானகிராமனுக்கு முன்னோடி. வண்ணதாசன் வரை வந்து மேலும் நீளும் ஒரு மெல்லிலக்கிய மரபின் தொடக்கப்புள்ளி. மௌனி அதேபோல நகுலன் வழியாக கோணங்கி வழியாக நீளும் ஒரு மரபின் தொடக்கம். ப.சிங்காரம், கோபிகிருஷ்ணன் வழியாக வளரும் ஒரு மரபின் முளையை நாம் எம்.எஸ்.கல்யாணசுந்தரத்தில் காணலாம். புதுமைப்பித்தன் அதற்குப்பின் வந்த அசோகமித்திரன், கி.ராஜநாராயணன், சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன் என்னும் நான்கு வெவ்வேறு வகை எழுத்துமரபுகளின் தொடக்கம்.

அவ்வகையில் பார்த்தால் ந.பிச்சமூர்த்தி ஒரு முக்கியமான தொடக்கப்புள்ளி. அவரது கதைகள் மேலோட்டமான எளிமை கொண்டவை. நேரடியாக வாசகனிடம் பேசமுற்படுபவை. ஆன்மீகமான , உணர்ச்சிகரமான தருணங்களை அழுத்தாமல் சொல்லி கடந்துசெல்லக்கூடியவை. அவ்வகைப்பட்ட நல்ல கதைகளை எழுதக்கூடிய படைப்பாளிகளின் ஒரு மரபு அவரில் இருந்து ஆரம்பிக்கிறது. கிருஷ்ணன் நம்பி, கு.அழகிரிசாமி போன்றவர்களில் ந பிச்சமூர்த்தியின் பாதிப்பு அதிகம். அடுத்த தலைமுறையில் கந்தர்வனிடம். நீங்கள் சரியாகவே அடையாளம் கண்டிருக்கிறீர்கள்

ந.பிச்சமூர்த்தி தமிழ் நவீனக்கவிதைக்கும் தொடக்கம் மட்டுமே, உச்சம் அல்ல. அவரது கவிதைகள் பெரும்பாலும் பாரதி வழி வந்த உருவகக் கவிதைகள். நவீனக்கவிதைக்குரிய உள் அமைதி கொண்டவை அல்ல. ‘கூண்டிலிகுருக்கும் கிளிக்குஞ்சே கண்மூடி ஏங்காதே’ என்று நேரடியாக பேசும் கவிதைகள் அவை. ஆனால் நவீனக்கவிதைக்குரிய படிம மொழி அவரிடமிருந்தே ஆரம்பிக்கிறது.

ந.பிச்சமூர்த்தியின் பலகதைகள் முக்கியமானவை. அடித்தள மக்களின் வாழ்க்கையை ஆர்ப்பாட்டமில்லாமல் சொல்லக்கூடியவை, உதாரணம் காவல், ஆன்மீகமான கதைகள் , உதாரணம் ஞானப்பால். இன்றைய தலித் இலக்கியத்துக்கே அடிப்படையாக அமையும் சில கதைகள்கூட அவரது புனைவுலகில் உள்ளன. அவரது அழகியல்மரபுக்கு என்றுமே தமிழில் வாரிசுகள் இருப்பார்கள்.

ஜெ

ந.பிச்சமூர்த்தி கதைகள் அழியாச்சுடர்கள்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 57
அடுத்த கட்டுரைமுதற்கனல் மலிவுவிலை நூல்