அன்புள்ள ஜெய மோகன்,
இதை இதைத்தான் நன்கு ரசிக்க முடிகிறது.என்னைப் பொறுத்து நீங்கள் இங்கே உண்மையிலேயே பேரன்புடன் ஜ்ஜீவிக்கிறீர்கள். ஒரு வருடப் பிறப்பன்று குடும்பத்தோடு உங்கள் பத்மநாப புரம் வீட்டிற்கு வந்தது நினைவுக்கு வருகிறது. அப்பா.. என்ன வித விதமாய் சமைத்து வைத்திருந்தார்கள் அருண் மொழி..
சாயந்தரம் நெருக்கடியான காருக்குள் -அலுவலகத்திலிருந்து வெளிவந்த கையோடு சாரி, காலோடு- திணிந்து, தரணியை மடியில் வைத்துக் கொண்டு திருவட்டார் கோயிலுக்கு தானும் ஒரு செல்ல அடத்தோடு வந்தது என்று…. இரண்டு நாள் முன்பாக நினத்துக் கொண்டிருந்தேன்…தனிமையில்..பணி நிறைவுத் தனிமையில்…
அன்புடன்
கலாப்ரியா
அன்புள்ள கலாப்ரியா,
சென்ற அக்டோபர் 30ல் மதுரை முத்துக்கிருஷ்ணன் கல்யாணத்தில் சமயவேலைப்பார்த்தேன். மழைச்சாரலுக்கு ஒதுங்கி நின்று பேசிக்கொண்டிருந்தோம்.பெண்ணுக்குக் கல்யாணம் என்றேன். ‘விளையாடாதீங்க’ என்றேன். ‘உண்மை’ என்றார். கொஞ்சநேரம் பேச்சே ஓடவில்லை. சமயவேல் சிரித்தபடி ‘இப்படித்தான் ஒருமுறை மதுரையில் ஒரு பெண் என்னைப்பார்த்து ‘சௌக்கியமா ?’ என்றாள். யார் என்றுபார்த்தால் கலாப்ரியாவின் பெண். குற்றாலம் பட்டறையில் சிற்றாடை கட்டிக்கொண்டு வந்து விளையாடிக்கொண்டிருக்கும்….ஆச்சரியம்தான்.’ என்றார்.
காலத்தை நம்மால் உணரமுடிவதில்லை என்பதைப்போல மாபெரும் மாயம் ஏதுமில்லை வாழ்க்கையில். உங்கள் கடிதம் உருவாக்கும் உணர்ச்சியலைகள் சாதாரணமல்ல. எத்தனை சந்திப்புகள். குற்றாலத்தில் ஊட்டியில்… குற்றாலம் பதிவுகள் நிகழ்ச்சிகளில் பார்த்த நண்பர்கள் எல்லாருமே நரையுடன் அலைகிறார்கள்…
நலமாக இருக்கிறீர்கள் அல்லவா? இணையப் பதிவுகளில் குற்றால நினைவுகளை எழுதுங்கள்.
அன்புடன்
ஜெ
அன்புள்ள ஜெ
நான் நீங்கள் சமீபத்தில் எழுதிய பெண்களுக்கான விடுமுறை பற்றிய பதிவை விரும்பி ரசித்தேன். ஆனால் அவர்கள் ஆண்கள் அளவுக்கு அதை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறார்களா என்ன? ஒரு தமிழ் சினிமாவில் ஜனகராஜ் கணவர்கள் மனைவி இல்லாதபோது அடையும் கொண்டாட்டத்தை சிறப்பாக காட்டியிருந்தார். பெண்களும் அப்படியே உணர்கிறார்கள் என்பது கொஞ்சம் அதிர்ச்சி அளிக்கிறது
எஸ்.செல்வராஜ்
அன்புள்ள செல்வராஜ்
ஆண்கள் எல்லாவற்றையும் வெளிப்படுத்தும் சுதந்திரத்துடன் இருக்கிறார்கள். பெண்கள் அப்படி அல்ல. எந்த ஒரு விஷயமானாலும் அது நித்ய ஆசாரமாக ஆகும்போது அதிலிருந்து ஓர் விடுமுறை தேவைதான். அன்பு காதல் பாசம் எல்லாவற்றுக்கும்…
ஜெ
அன்புள்ள ஜெ
உங்கள் கட்டுரைக்கு ஒரு விஷயத்தைச் சேர்க்க விரும்புகிறேன். ஆண்கள் கட்டாய பிரம்மசரிய வாழ்க்கை போன்ற சில சூழல்களால் சமைத்துச் சாப்பிட வேண்டிய நிலைக்கு ஆளாகும்போதுதான் சமைப்பது என்பதும் தானே சமைத்ததைச் சாப்பிடுவதென்பதும் எத்தனை அலுப்பூட்டக்கூடிய ஒரே மாதிரியான வேலை என்பதை அறிகிறார்கள். நமது அன்னையரும் மனைவியரும் தினமும் அந்தச் சித்திரவதைக்கு ஆளாகிறார்கள். மரணம் வரை. இதை ஆண்கள் உணர்ந்திருக்கிறார்களா தெரியவில்லை
சிலவருடங்கள் முன்பு நானும் ‘கட்டாய பிரம்மசாரி’யாக வாழவேண்டியதாயிற்று. நான் அதை உணர்ந்தேன். இப்போதெல்லாம் வர இறுதி என்றால் வெளியேதான் சாப்பாடு. ஆனால் இங்குள்ள மூன்று நட்சத்திர உணவுவிடுதிகளில்கூட உணவு என்பது மிகவும் சுமார் அல்லது மோசம்தான்
ஜாஸ் டயஸ்
அன்புள்ள ஜாஸ்,
என்னுடைய பையன் எதைச்சாப்பிட்டாலும் ருசியைப்பற்றி பெரிதாக அலட்டிக்கொள்வான். அருண்மொழி கடுப்பாவாள். நான் நினைத்துக்கொள்வேன், சரி உனக்குத்தான் ஹாஸ்டல்வாழ்க்கை வரப்போகிறதே என்று. ஆண்கள் கொஞ்சநாள் ஹாஸ்டலிலும் மெஸ்களிலும் ஓட்டல்களிலும் சாப்பிட்டு அதன்பின் கல்யாணம்செய்தால்தான் அடங்கி இருக்கிறார்கள். என்னைக்கேட்டால் அம்மாச்சமையலில் வளர்ந்து அப்படியே கல்யாணத்துக்கு வரும் பையன்களை பெண்கள் முற்றாகவே தவிர்த்துவிடவேண்டும்
கிட்டத்த பதிமூன்று வருடங்கள் நான் ருசி என்பதை அவ்வப்போதுதான் உணர்ந்திருக்கிறேன். ஒரு ஓட்டலில் சாப்பிட ஆரம்பித்த முதல் நான்குநால் ருசி தெரியும். பின்னர் சலித்து அலுத்து தாங்கமுடியாத கணத்தில் இன்னொரு ஓட்டல். மீண்டும் இன்னொரு ஓட்டல். வளையம் பூர்த்தியாகி முதல் ஓட்டலுக்கு வந்தால் அங்கு மீண்டும் இரண்டுநாள் ருசி இருக்கும்!
சொந்தச்சமையல் செய்யலாம். ஆனால் பொறுமையாக நினைவாக சமையல்செய்ய முடியாது. நான் சமைத்த நாட்களில் எல்லாம் தினசரி மோரும் முட்டை ஆம்லேட்டும்தான் .ஐந்தே நிமிடத்தில் வேலை முடியும். பாலகோடு [தருமபுரி மாவட்டம்] ஊரில் இருந்தபோது பாலசுப்ரமனிய அய்யர் மெஸ்ஸில் கொஞ்சநாள் சாப்பிட்டேன். அது ருசியான ஓட்டல். அய்யர் தாயினும் சாலப்பரிந்து உணவூட்டுபவர். குண்டாகி விட்டேன். காலச்சுவடு வருடமலர் 1989ல் திசைகளின் நடுவே கதையில் வந்த என் புகைப்படத்தில் மோகன்லால் போல இருக்கிறேன்!
சமைக்கலாம். இப்போதும் சமைப்பேன், பிள்ளைகளுக்காக. அப்படி பிறருக்காகச் சமைக்கும்போது அது உற்சாகமான செயலாக உள்ளது. இங்கு ஸ்டார் ஒட்டல்கள் இல்லை. சின்ன கடைகளில் அடிக்கடி உணவு வாங்குவோம். நன்றாகவே இருக்கும்
ஜெ
அன்புள்ள ஜெ மோ,
வணக்கம். நலமா?
தினமும் உங்களை வாசித்துக்கொண்டு இருந்தாலும், இன்று காலை’குடும்பத்தில் இருந்து விடுமுறை’ படித்ததும்…… என்னையே கண்ணாடியில் பார்த்துக்கொள்வது போல!
எங்களுக்கெல்லாம்(பெண்களைச் சொல்கிறேன்) நாங்கள் இல்லாவிட்டால் நீங்களெல்லாம் தத்தளித்துத் தடுமாறிப்போய்விடுவீர்கள் என்ற ஆழ்ந்த நம்பிக்கை இருக்கிறது. நீங்கள் சமாளித்து எல்லாவற்றையும் வெற்றிகரமாகச் செய்வீர்கள் என்றாலும் , ‘ஐயோ…இவருக்கு வெந்நீர் கூட வைக்கத் தெரியாதே….’ன்னு ஒரு அனுதாபத்தை கஷ்டப்பட்டு வரவழைத்துக்கொள்வோம்:-)
இதெல்லாம் வாழ்க்கையைச் சுவையாக்க வரும் இனிமைகளில் ஒன்று.
அருண்மொழியைக் கேட்டதாகச் சொல்லுங்கள்..
மொத்தக் குடும்பத்துக்கும் என் அன்பு.
என்றும் அன்புடன்,
துளசி
அன்புள்ள துளசி,
மனிதர்கள் தனிமையானவர்கள் ஆகவே தனிமையாக வாழ முடியாதவர்கள் என்று ஒருமுறை டைரியில் எழுதியிருக்கிறேன். எந்த கூட்டுவாழ்க்கையிலும் ஒரு தனிமையை தக்கவைத்துக்கொள்வதன் மூலமே அதை முழுமைசெய்ய முடியும். எந்த தனிமையும் சகமனித உறவுகளில் முடிந்தால்மட்டுமே முழுமை அடைய முடியும்
உறவுகளில் பிரிவு என்பது நல்ல விடுமுறை
ஜெ