நம்மை உடைப்பவர்கள்…

அன்புள்ள ஜெயமோகன், வணக்கம்.

எனது பள்ளிப் பிராயங்களில் எப்படியும் வருடத்திற்கு நான்கைந்து முறைகளாவது இனிப்புப் பலகாரம் செய்யப்படும். நான் அதை ஒரு தாளில் பொதிந்து சிறிது சிறிதாக வெகுநேரம் அனுபவித்துச் சாப்பிடுவேன். தீபாவளி நேரங்களில் பட்டாசுக் கட்டைப் பிரித்து ஒவ்வொரு பட்டாசாக நாள் முழுதும் வெடித்துக் கொண்டிருப்பேன். என் ஆயுள் முழுதும் இன்றுவரை எல்லா விஷயங்களையும் அப்படித்தான் அனுபவித்துள்ளேன். 55க்கும் 60க்கும் மிகச்சரியான இடைப்பட்ட காலத்தில் நிற்கும் இன்றும் என் குணம் மாறவில்லை! தங்கள் இணையத்தில் தங்கள் இடுகைகளையும், தங்கள் வாசகர்கள் இடுகைகளையும் தினமும் சிறிது சிறிதாக சுவைத்து அனுபவிக்கிறேன். உங்களுக்கு என் நன்றி.

சுந்தர ராமசாமி

இன்று என் மனம் நெகிழ்த்திய இடுகை [URL=http://www.jeyamohan.in/?p=5706] நயத்தக்கோர்[/URL] . சுந்தர ராமசாமியின் பண்பாடு கண்டு என் மனம் நெகிழ்ந்தது. அத்தகைய நுட்பமான பண்பாடு வெளிப்படுத்தும் உரை மிகச் சிறப்பாக அமைந்திருந்தது. அருமையான மேற்கோள் கொடுத்திருந்தீர்கள். தங்கள் குழந்தைகளுக்கு நல்ல பண்பு புகட்டி உள்ளீர்கள். வாசிக்கச் சந்தோஷமாக உள்ளது.

பெயக்கண்டும் நஞ்சுண்டு அமைவர் நயத்தக்க
நாகரீகம் வேண்டு பவர்.

எத்தனையோ நயத்தகாதோருக்கு நானே சமைத்து விருந்து படைத்திருக்கிறேன். எனவே சுந்தர ராமசாமியின் பண்பாடு என்னிடம் ஒரு தாக்கம் ஏற்படுத்தியது. சில நயத்தக்கோருக்கும் விருந்தோம்பி உள்ளேன். அதில் ஒருவரைப் பற்றி எழுத விழைகிறேன்.

என் பணிக்கூடத்தில் பெண்கள் அதிகம். எல்லோரும் ஐரோப்பிய பின்புலம் கொண்டவர்கள். நான் சாதாரணமாக நான் கொண்டு செல்லும் உணவை எல்லோருடனும் பகிர்வேன். அதில் ஒரு பெண், இந்திய உணவே சாப்பிடாதவள். அவள் நீண்ட மகப்பேறு விடுப்பில் சென்றிருந்தாள். என்னுடன் அதிகம் பழகாதவள். விடுப்பு முடிந்து திரும்பியதும் என்னுடன் அளவளாவும்போது, எல்லோரும் என் சமையலை பற்றி சொன்னதை குறிப்பிட்டுவிட்டு, தான் இந்திய உணவு சாப்பிடுவதில்லை என்று கூறினாள்.

அவளுக்கு என்று ஒருமுறை பாகம் செய்து கொண்டு போனேன். மிதமான உணவுதான். கண்களில் நீர் வழிய ஒரு வழியாக உண்டு முடித்து விட்டு, ” நீ எனக்காக செய்து கொண்டு வந்ததால்தான் உண்டேன். நன்றாக இருந்தது, ஆனால் காரம் அதிகம்” என்றாள்! இபோது சர்க்கரைபொங்கல் மட்டும்தான் அவளுக்குக் கொடுக்கிறேன்!

நீங்கள் எழுதிய ” நயத்தக்கோர்” வாசித்தபோது எனக்கு அந்த நிகழ்ச்சிதான் ஞாபகத்திற்கு வந்தது.

அன்புடன்

ராகவன் ராமன்.

ஆற்றூர் ரவிவர்மா

அன்புள்ள ராகவன்,

ஆம், எனக்கும் நீண்டநாட்களுக்குப்பின் அக்கட்டுரையை திரும்ப நினைவுகூர வாய்ப்பு. பெரியவர்களைச் சந்திப்பது எப்போதுமே விதவிதமான சவால்கள் கொண்டதாகவே இருந்துள்ளது. நம் அகங்காரம் அடிபடும் என்பதே முக்கியமான தடை. நம்மை சிறியவர்களாக உணரச்செய்வார்கள்.

பெரும்பாலானவர்கள் தங்களைவிட சற்றேனும் மேலானவர்களை சந்திப்பதை தவிர்ப்பது அதனால்தான் என்பதை கவனித்திருக்கிறேன். தங்கள் சுயச்சிறுமை உணர்வை மறைக்க ‘அத்தனைபேரும் சமம்தான். ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு திறமை’ ‘ஜனநாயகத்திலே மேலுன்னும் கீழுன்னும் கெடையாது’ என்பது போன்ற தேய்வழக்குகளைப் பிடித்துக்கொள்வார்கள்.

அசோகமித்திரனுடன்

அடுத்த கட்டத்தில் சிலர் சில்லறை நக்கல்கள் அல்லது எளிய நிராகரிப்பு மூலம் தங்கள் சாதாரணத்தன்மையை பாதுகாத்துக்கொள்வார்கள். அதன்மூலம் தங்களை முன்வைக்க முடியுமென நம்புவார்கள். பெரும்பாலானவர்கள் ‘அவங்கள்லாம் பெரியவங்க. நாம அவங்க கிட்ட எதுக்கு வச்சுக்கணும்? நாமபாட்டுக்கு ஜாலியா இருப்போம்’ என்று சொல்லி ஒதுங்கிக்கொள்வார்கள்.

மறுபக்க மனநிலை ஒன்றுண்டு. தங்களை முக்கியமாக நினைத்துக்கொண்டு முக்கியமானவர்களை சந்திக்கச்செல்வது. அச்சந்திப்பை ஒரு வரலாற்று நிகழ்வாக தாங்களே எண்ணிக்கொள்வது. அப்படி அவர்கள் எண்ணவில்லை என்றால் சீண்டப்பட்டு கடும் விமர்சனத்துடன் ‘என்ன மனுஷன் நம்மள மதிக்கவே மாட்டேங்கிறான்’ என்று திரும்பிவிடுவது.

இன்னும் சிலர் சந்திப்பை தங்களுக்கான ஒரு நாடகமாக ஆக்கிக்கொள்வார்கள். முக்கியமானவர்களைச் சந்திக்கையில் அவர்களை சீண்டும்பொருட்டோ மடக்கும்பொருட்டோ பேசுவார்கள்.அவர்களிடம் தங்கள் குரலை மட்டுமே ஒலிக்கவிட்டுக்கொள்வார்கள். பின்னர் ‘மடக்கிட்டேன்ல?’ என்று மகிழ்வார்கள். ‘ஒரு நாலுமணிநேரம் எடுத்துச்சொல்லிட்டிருந்தேன்’ என நிறைவுகொள்வார்கள். சுந்தர ராமசாமியைச் சந்திக்கவரும் பலரிடம் அந்த மனநிலையை நான் கண்டிருக்கிறேன்.

என் தலைமுறையைச் சேர்ந்த எழுத்தாளர் ஒருவரிடம் இருபத்தைந்தாண்டுகளுக்கு முன் பேசிக்கொண்டிருந்தபோது நான் கேட்டேன் ‘சுந்தர ராமசாமி வீடுவழியாத்தானே போனீங்க? அவரைச் சந்தித்திருக்கலாமே?’ என்று. அவர் சொன்னார் ‘நான் அவரோட வீடு வழியா மாசம் மூணுமுறை போவேன். மகாஅலக்ஸாண்டர்கள் கிட்ட நம்மால பழக முடியாது. அதனால அப்டியே அவர் வீட்டுப்பக்கம் திரும்பாம ஓடிடுவேன்’

பி.கெ.பாலகிருஷ்ணன்

அவரது பிரச்சினை என்ன என்று எனக்குப்புரிந்தது. அவரைக் கண்டதுமே மலர்ந்து உபசரித்து, அவரை மிக அபூர்வமான ஒரு விசித்திர மனிதராக எண்ணி வழிபட்டு, அவர் சொல்வதை திகைப்பும் வியப்புமாக கேட்டுக்கொண்டிருக்கும் ஒருவகை பாமரர்களையே அவர் தேடிக்கொண்டிருந்தார். பெரும்பாலும் இளம் இலக்கியவாசகர்கள்.அவர்கள் கொஞ்சம் இலக்கியம் வாசிக்கத்தொடங்கி அவருக்குச் சமானமாக நின்று சில வினாக்களைக் கேட்கத் தொடங்கியதுமே விலகிவிடுவார்.

இருபத்தைந்தாண்டுகளாக அந்த நண்பர் அப்படியேதான் இருக்கிறார். தொழில்முறைநாடகத்தில் ஒரே வேடத்தை தினம் மேடையில் நடிக்கும் நடிகரைப்போல. அவரை உடைக்கும், மறுவார்ப்பு செய்யும் எந்த ஆளுமையையும் அவர் சந்திக்கவேயில்லை.

ஆச்சரியமாக இருக்கிறது, நான் இளமையில் மிகவும் தன்னகங்காரம் கொண்டவனாகவே இருந்திருக்கிறேன். என் பழைய நண்பர்கள் அனைவரும் அதைச் சொல்லியிருக்கிறார்கள். என் நண்பர் சுப்ரபாரதிமணியன் பலமுறை நேரில் சொல்லியிருக்கிறார். ஆனால் நான் இந்தியாவெங்கும் சென்று நான் மதிக்கும் ஆளுமைகளை நேரில் சந்தித்திருக்கிறேன். தயங்காமல் பழகியிருக்கிறேன். அவமதிப்புகளையும் புறக்கணிப்புகளையும்கூட எதிர்கொண்டிருக்கிறேன். அதற்கு என் அகங்காரம் தடையாக இருந்ததில்லை.

ஜெயகாந்தன்

என் இதுவரையிலான வாழ்க்கையில் நான் சந்தித்தவர்களும் பழகியவர்களும் எவ்வளவு பெரியவர்கள், வரலாற்றுநாயகர்கள் என்பது என்னை பெருமிதம் கொள்ளச்செய்கிறது. அந்தச் சந்திப்புகளெல்லாமே என்னுடைய தேடலால் விளைந்தவையே. இந்த நாளில் சிவராம காரந்த், பஷீர், அதீன் பந்த்யோபாத்யாய, டி.ஆர்.நாகராஜ், அசோகமித்திரன், ஜெயகாந்தன் என என் எண்ணத்தில் ஒளிமிக்க முகங்கள் விரிந்தபடியே செல்கின்றன.

இப்போது தோன்றுகிறது என் அகங்காரம்தான் அந்த தன்னம்பிக்கையை அளித்து அவர்களை நெருங்கச்செய்தது என. என் அகங்காரத்தை தொடர்ந்து அவர்களின் ஆளுமைகள் உடைத்தாலும் நான் எளியவனல்ல, என்னால் எழமுடியும் என்ற நம்பிக்கை எனக்கிருந்தது. ஆகவே நான் எவரையும் தவிர்க்கவில்லை. என்னை அவர்கள் உடைத்தால் உடைக்கட்டுமே என்ற திமிருடன்தான் என்னை மீண்டும் மீண்டும் அவர்கள்முன் வைத்துக் கொண்டிருந்தேன்.

நித்ய சைதன்ய யதி

சில அனுபவங்கள் பெரிய வலியை அளித்தவை. பி.கெ.பாலகிருஷ்ணன் கடுமையானவர். லாரி பேக்கர் உதாசீனம் செய்பவர். நித்ய சைதன்ய யதியுடனான உறவு எழுத்தாளன் வாசகன் என்னும் ஆணவம் அடிபட்டுத் துடிக்கும் நாட்களால் ஆனது. மீண்டும் மீண்டும் இறந்து மீளும் அனுபவம் அது. ஆனாலும் நான் தொடர்ந்து அவருடன் இருந்தேன்.

சுந்தர ராமசாமியின் நிமிர்வும் அவரது உறுதியான கருத்துக்களும் மிகவும் சீண்டக்கூடியவை. அவருடன் விவாதிக்க எப்போதுமே நா துடித்துக்கொண்டிருந்தது. என்னுடைய நூற்றுக்கணக்கான வாதங்களை அவர் எளிய சொற்களில் உடைத்துவீசியிருக்கிறார். அவரது ஆணவத்தையும் கனிவையும் கடுமையையும் எளிமையையும் தொடர்ந்து பார்த்துக்கொண்டிருந்தேன்.

அவர் என்னை உடைத்த தருணங்களிலெல்லாம் என்னை உருவாக்கிக்கொண்டும் இருந்தார் என இப்போது உணர்கிறேன்.

ஜெ

அசடனும் ஞானியும்

எழுத்தாளர்களைச் சந்திப்பது

முந்தைய கட்டுரைஅன்னியநிதி இன்னொரு பார்வை
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 60