‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 67

பகுதி பதின்மூன்று : தனிப்புரவி

[ 3 ]

பீஷ்மர் அஸ்தினபுரியின் எல்லைக்குள் நுழைந்துவிட்டார் என்று செய்திவந்தபோதே விதுரனுக்குள் மெல்லிய பதற்றம் பரவியது. அதைவெல்ல தன்னை சுவடிகளுக்குள் செலுத்திக்கொண்டான். ஏமாற்றத்துக்கு தன்னை ஒருக்கிக்கொள்பவன்போல அந்த எதிர்பார்ப்புக்கு எதிராக எண்ணங்களைச் செலுத்தினான். சுவடிகளில் வெறும் எண்கள். லிகிதர் எப்போதுமே சுருக்கமான செய்திகளை அளிப்பதில் வல்லவர். அச்செய்திகள் அலையடிக்கும் கங்கைநீரின் குமிழிகள் போல. குமிழிகளை வைத்து கங்கையின் திசையை, விரைவை அறிந்துகொள்ளமுடியும்.

சற்றுநேரம் கழித்துதான் தன் நெஞ்சு அச்செய்திகளில் இல்லை என்பதை அவன் உணர்ந்துகொண்டான். எழுந்துவந்து அலுவல்மண்டபத்தின் இடைநாழியில் நின்றபடி அங்கே நின்றிருந்த பெரிய அரசமரத்தின் இலைகள் காற்றில் துடித்துக்கொண்டிருப்பதைப் பார்த்தான். எதை எதிர்பார்க்கிறேன்? ஒரு பெண். அவள் எப்படிப்பட்டவள் என அவன் அறியமுற்படவில்லை. அவளுடைய உருவப்படத்தை சூதர்கள் வழி பெற்றிருக்கக்கூட முடியும். பாடகர்களை வரவழைத்து அவளைப்பற்றி பாடச்சொல்லியிருக்கலாம். ஆனால் அவனுக்கு உண்மையிலேயே ஈடுபாடு எழவில்லை.

குந்திபோஜன் அந்த எண்ணத்தைச் சொன்னதும் அதன் அரசியல் உள்ளடக்கம் மட்டுமே அவன் எண்ணத்தில் எழுந்தது. பிதாமகரிடம் அதைப்பற்றிப் பேசும்படி சொன்னான். பிதாமகர் அவனை அழைத்து “தேவகன் நமக்கு உதவியாக இருப்பான். நாம் ஒருபோதும் யமுனைவழித்தடத்தை விட்டுவிடமுடியாது. கம்சன் இப்போது மகதத்துடன் சேர்ந்துகொண்டுவிட்டான்” என்றார். “ஆம், மார்த்திகாவதியும் உத்தரமதுராபுரியும் நம்முடன் இருந்தால் மகதத்துடன் நாம் சமநிலையில் இருப்போம்” என்றான் விதுரன். அதையே அவன் ஒப்புதலாக எடுத்துக்கொண்டு “நான் குந்திபோஜனுக்கு செய்தியை அனுப்பிவிடுகிறேன்” என்றார் பிதாமகர். அப்போதெல்லாம் அப்பேச்சுக்குள் உள்ளடக்கமாக ஒரு பெண் இருக்கிறாள் என அவன் எண்ணவில்லை.

பீஷ்மர் கிளம்பிச்சென்ற அன்று அவன் உள்ளம் பாண்டுவின் உடல்நிலை குறித்த கவலையில் ஈடுபட்டிருந்தது. மாத்ரநாட்டிலிருந்து வந்ததுமே பிதாமகர் அடுத்த பயணத்துக்கான ஆணைகளை விடுத்துவிட்டார். அஸ்தினபுரியின் தூதுப்படை மார்த்திகாவதிக்குச் சென்று அங்கிருந்து உத்தரமதுராபுரிக்குச் செல்வதாக சோமர் சொன்னார். மாத்ரி அரண்மனை புகுந்த அன்றே விதுரன் மருத்துவர் அருணரை அழைத்து பாண்டுவின் உடல்நிலை குறித்து கேட்டான். அவர் தயங்கி “என்னால் விடை சொல்ல இயலவில்லை அமைச்சரே. அரசரின் உடல்நிலையில் எந்த இக்கட்டும் இல்லை. அவரது உள்ளம் நரம்புகளை அதிரச்செய்கிறது. உள்ளத்தை அறிய மருத்துவத்தால் இயலாது” என்றார்.

மேலும் அவர் ஏதோ சொல்லவருவதை உணர்ந்து விதுரன் பார்வையை விலக்கிக்கொண்டு காத்திருந்தான். “சிறிய அரசியார் அரசரின் உடல்நிலை சீர்கெட்டிருக்கிறது, மணநிறைவுநாளை ஒருமாதகாலம் கழித்து முடிவுசெய்யலாமென்று சொல்லும்படி என்னிடம் சொல்கிறார்.” விதுரன் தலையை அசைத்து “நீர் உம் கடமையைச் செய்யும்” என்று சொல்லி விலகிச்சென்றான். பாண்டுவைச் சென்று பார்க்க எண்ணி பின் தயங்கினான். அந்த நிகழ்ச்சிகளின் ஒழுக்கில் தான் செய்வதற்கேதுமில்லை என்று உணர்ந்தான்.

அவன் நினைத்தவை அனைத்தும் நடந்தன. நிமித்திகர் வந்துசென்ற மறுநாள் அவன் பாண்டுவின் மஞ்சத்தறைக்குள் நுழைந்தபோது அவன் ஓவியம் தீட்டிக்கொண்டிருந்தான். காலடியோசைகேட்டு திரும்பாமலேயே “நிமித்திகரின் கதையை கேட்டிருப்பாய்” என்றான். “ஆம், அவர்கள் விளங்கிக்கொள்ளமுடியாதவற்றுக்கு புராணக்கதை ஒன்றை உருவாக்கித்தருகிறார்கள். அது தெப்பம்போல. அதைப்பற்றியபடி பெருவெள்ளத்தை நீந்திவிடலாம்” என்றான் விதுரன்.

“ஆம். அது கதைதான். ஆனால் அதில் ஒரு முனை உண்மையில் வேரூன்றியிருக்கிறது” என்றான் பாண்டு. “நான் அந்த இணைமானைக் கொன்றது உண்மை. அப்போது என் உள்ளத்தில் ஓடியவை அனைத்தும் உண்மை. அவற்றை நானன்றி வேறெவரும் அறிந்திருக்கவுமில்லை.” விதுரன் புன்னகைசெய்து “புராணத்தில் மட்டுமே இன்றும் வாழும் அந்த கிந்தம முனிவர் ஓர் அறியாப்பிழைக்கு முடிவிலிவரை நீளும் தண்டனையை அளித்தாரா என்ன?” என்றான். சற்று தயங்கி “மேலும் தண்டனை உங்களுக்கு அல்ல. உங்கள் இரு துணைவியருக்கும் சேர்த்து அல்லவா?” என்றான்.

“இல்லை. அவர்களை தண்டித்தது அவரல்ல. நான். நான் மட்டும் அல்ல நீயும் பிதாமகரும் பேரரசியும் இந்த நகரின் அனைத்துக் குடிமக்களும்தான்.” விதுரன் “இந்தவகைப்பேச்சுக்களை நான் எண்ணுவதில்லை. இதிலென்ன இருக்கிறது? அரசியலாடல் என்றும் எப்போதும் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. போர்கள் நிகழ்கின்றன. பல்லாயிரம் படைவீரர்கள் இறந்துவிழுகிறார்கள். பல்லாயிரம் விதவைகள் இருளறைகளுக்குள் சென்று அடங்குகிறார்கள்” என்றான். பாண்டு “நான் சொல்லியிருக்கிறேனே, நான் இன்னும் ஒரு நல்ல மதியூகி ஆகவில்லை. அரசியலும் கற்கவில்லை” என்றான்.

விதுரன் பேசாமல் நின்றான். “பிதாமகர் உத்தரமதுராபுரிக்குச் சென்றிருப்பதாகச் சொன்னார்கள். ஆகவே என் முடிவை நான் உன்னிடம்தான் முதலில் சொல்லவேண்டியிருக்கிறது” என்றான் பாண்டு. விதுரன் ஏறிட்டுப்பார்த்தான். “நான் வனம்புகுவதாக இருக்கிறேன்.” விதுரன் திகைத்து “என்ன முடிவு இது? ஒரு நிமித்திகரின் பேச்சைக்கேட்டா?” என்றான். “ஆம், நிமித்திகர் சொன்னதனால்தான். ஆனால் என் ஆன்மா இதை எண்ணத்தொடங்கி நெடுநாட்களாகின்றன” என்றான் பாண்டு. “இப்போதுதான் தெளிவாக இதை என் சித்தம் அறிகிறது.”

தூரிகையை வைத்துவிட்டு அவன் விதுரனை நோக்கினான். “நான் எத்தனைநாள் வாழ்வேன் என்று ஐயம் வந்துவிட்டது. இன்னும் சில வருடங்கள். அதை இந்த அரண்மனையின் முறைமைச்செயல்களிலும் அணிச்சொற்களிலும் அரசியலாடல்களிலும் வீணடிக்க விரும்பவில்லை. என் அகம் கோருவது எதை என்று திரும்பி நின்று கேட்டேன். மகிழ்ச்சியை மட்டுமே என்று அது சொன்னது. செல்வத்தையும் வெற்றியையும் அல்ல. புகழையும் முக்தியையும் கூட அல்ல. மகிழ்ச்சியை மட்டும்தான். தேனீ தேனைமட்டும் தேடுவதுபோல. இங்கிருப்பது ஓவியமலர்களின் காடு. இங்கே நான் அதை ஒருதுளியும் அருந்தமுடியாது.”

“அதை குந்தியிடம் சொன்னேன். ஆம் என்று அவளும் ஒப்புக்கொண்டாள். நான் தேடுவதெல்லாம் எங்கிருக்கின்றன என்று அறியேன். ஆனால் உறுதியாக இங்கில்லை. ஆகவே இங்கே நான் செலவிடும் கணங்களெல்லாமே வீணானவைதான். உடனே கிளம்பிவிடலாமென்று முடிவெடுத்தேன்” என்று பாண்டு சொன்னான். “அதை பேரரசிக்குச் சொல்லி ஆணைபெறவேண்டும். அதைவிட மூத்தவரிடம் சொல்லவேண்டும். அவர் என்னைப்பிரிய ஒப்பமாட்டார்.”

“ஆம்” என்றான் விதுரன். “அவரால் உங்களை முற்றிலும் பிரிவதைப்பற்றி எண்ணவே முடியாது. அவரது கண்ணற்ற பேரன்பை மீறி நீங்கள் செல்லவும் முடியாது.” “ஆனால் நான் இங்கிருந்தால் மட்கி உயிர்துறப்பேன். நீ அதை எனக்காக செவ்வனே முடித்துத்தரவேண்டும்” என்றான் பாண்டு. விதுரன் “நான் முயல்கிறேன்” என்றான். “குந்தியும் மாத்ரியும் என்னுடன் வருகிறார்கள். அவர்கள் வருவது எனக்குச் சுமையே. என் அன்னை நான் எஞ்சிய வாழ்நாளெல்லாம் காமமறுப்புடன் வாழ்வேன் என நிமித்திகருக்கு சூள் சொல்லியிருக்கிறாள்” என்று நகைத்தான்.

“அரசே, இந்த வனம் புகுதலுக்குப்பின் சிறியஅரசியின் சொல் உள்ளது அல்லவா?” என்றான் விதுரன். பாண்டு சிலகணங்கள் பார்வையை சாளரத்தை நோக்கித் திருப்பினான். பின்னர் திரும்பி “உன்னிடம் மறைக்கும் பகுதி ஏதும் என் அகத்தில் இல்லை. அந்தச்சூளுரையை என் அன்னை உரைக்கையில் அவள் கண்களை நான் பார்த்தேன். அங்கே இருந்தது துயரல்ல, களிப்பு. ஆம் களிப்பு… தெய்வங்களும் அறிந்துகொள்ளமுடியாத ஒரு அகநிறைவு…” என்றான். விதுரன் புன்னகைசெய்து “அதை என்னால் விளங்கிக்கொள்ளமுடியவில்லை. ஆனால் நான் வியப்படையவில்லை” என்றான்.

“அக்கணமே முடிவெடுத்தேன், இனி அவள் மடியில் வெண்ணிறப்பளிங்குப்பாவை அல்ல நான் என்று. கிளம்புவதென்று எண்ணிய கணம் அதுதான்.” பாண்டு புன்னகைசெய்தான். “அம்முடிவை எடுத்ததும் நேராக அவளிடம்தான் சென்றேன். உறுதியான குரலில் அவள் கண்களை நோக்கியபடி நான் வனம்புகவிருப்பதைச் சொன்னேன். அவள் முதலில் அச்சொற்களை அகத்தே வாங்காமல் எங்கே என்றாள். மீண்டும் சொன்னதும் அலறியபடி என் ஆடையைப்பற்றிக்கொண்டாள். அப்போது அவள் விழிகளில் எழுந்த வலியைக் கண்டேன். இறக்கும் மிருகங்களின் கண்களைப்போல. எனக்குள் உறைந்த பலவீனன் நிமிர்ந்து வானம் நோக்கிப் புன்னகைபுரிந்தான்.”

விதுரன் “அவர்கள் அதை எதிர்கொள்ளமுடியாது” என்றான். “ஆம், கதறி அழுதாள். நெஞ்சில் அறைந்துகொண்டு மயங்கி விழுந்தாள். தூணில் தலையை முட்டிக்கொண்டாள். ஓடிப்போய் உப்பரிகையிலிருந்து குதிக்கப்போனாள். நான் அவளைப்பிடித்துக்கொண்டேன். அவள் இறுதியாக தன்னையும் அழைத்துக்கொண்டுசெல்லும்படி கோரினாள். வனம்புகுதலில் அதற்கு நெறியில்லை என்று சொன்னேன். அழுகையின் சோர்வால் சற்று அமைதிகொண்டபின் மீண்டும் அழுதாள். அகிபீனா ஒன்றே அவளை ஆறுதல்படுத்துகிறது.”

மறுநாள் காலை பாண்டுவும் துணைவியரும் நகர்நீங்கும்போது பந்த ஒளியில் இருந்து சற்றே விலகிநின்று விதுரன் நோக்கினான். முதலில் மாத்ரியும் பின்னர் குந்தியும் ரதத்தில் ஏறிக்கொண்டனர். பாண்டு மீண்டுமொருமுறை அரண்மனையை நோக்கிவிட்டு ரதத்தில் ஏறிக்கொண்டான். திருதராஷ்டிரன் பெருங்குரலில் அழுதபடி சரிய விதுரன் அவன் கனத்த கைகளை தன் தோள்களால் தாங்கிக்கொண்டான்.

பாண்டுவின் தலை மீண்டும் வெளியே வந்து அரண்மனையை நோக்கியதை விதுரன் கண்டான். எண்பதாண்டுகளுக்கு முன்பு இதே அரண்மனைமுற்றத்தில் இருந்து இப்படித்தான் தேவாபி இறங்கிச்சென்றிருப்பான். அரண்மனையை மீண்டும் மீண்டும் நோக்கியபடி. வெளியேற்றப்பட்டவனும் துறப்பவனும் ஆடும் ஒரே நாடகக்காட்சி. இன்னொருமுறையும் இதே அரண்மனை முற்றத்தில் இது நிகழுமா என்ன? பால்ஹிகன் பெருந்தோள்களுடன் கதறியபடி நிலத்தில் அமர்ந்தான் என்றன சூதர்பாடல்கள். அதைப்போலவே திருதராஷ்டிரனும் படிகளில் அமர்ந்து தன் தலையை கைகளால் தாங்கிக்கொண்டு கண்ணீர்விட்டான்.

ஓவியம்: ஷண்முகவேல் [பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]
ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]

நீ இப்போது இந்நகரின் அரசபாதைகளை பார்த்துக்கொண்டிருப்பாய். நெய்தீர்ந்து கருகும் பந்தங்களின் ஒளியில் அலையும் தெருக்களை. உனக்கு விடைசொல்ல முழங்கும் பெருமுரசத்தின் தோலென அதிரும் காற்றை. நீ விட்டுச்செல்வது என்ன என்று நீ அறிவாயா? உன் மென்சதைப்பாதங்கள் ஒற்றி ஒற்றிச் சென்ற அரண்மனை முற்றமாக விரிந்துகிடந்தது எதுவென்று?

ஆம், நீ அறிவாய். அதை உன் கண்களுக்கு நீ மறைக்கலாம். உன் நெஞ்சுக்கு நீ ஒளிக்கலாம். உன் ஆன்மாவுக்கே அறிவிக்காமலிருக்கலாம். உன்னைச்சூழ்ந்துள்ள காற்று அதை அறியும். உன் வளையல்கள் அதைச் சொல்லும். நீ சென்றபின் அசையும் திரைச்சீலைகள் அதை நடிக்கும் . நீயும் நானும் இம்மண்ணிலுள்ள அனைவரும் திளைத்து மகிழும் ஒற்றைக்கனவுவெளியில் அது ஓர் அழகிய நீர்க்குமிழி. வண்ணங்கள் பொலிய சுழன்று பறக்கும் ஒரு விழி.

அன்றுமாலைதான் செய்திவந்தது பீஷ்மர் அஸ்தினபுரியின் எல்லைக்குள் நுழைந்துவிட்டார் என்று. அவரது படகுகள் கங்கைக்குள் நுழையும்போது பாண்டுவும் மனைவியரும் படகில் கங்கையில் வடக்காகச் சென்றுவிட்டிருந்தனர். மறுநாள் அவர்கள் கங்கபுரிக்கும் அப்பால் குஜவனம் என்னும் இடத்தில் படகை ஒதுக்கி அங்குள்ள புல்வெளியில் இறங்கி விடைபெற்றுச் சென்றனர். கரையில் நின்ற குகர்கள் கண்ணீருடன் கைகூப்பி வாழ்த்தொலித்து அவர்களை வழியனுப்பினர்.

மறுநாள் காலையில்தான் பிதாமகர் கங்கைக்கரையில் வந்திறங்கினார். அவர் வரும் செய்தியை தூதன் சொன்னபோதுதான் விதுரன் முதல்முறையாக அது ஒரு பெண்ணின் வாழ்வு என்பதை சிந்தனையில் ஏற்றிக்கொண்டான். அவள் பெயர் என்ன என்று தன் அகத்தைத் துழாவினான். கிருதை. அல்ல, அப்பெயரைக் கேட்டதும் அதை வேதத்துடன் இணைத்துப் புரிந்துகொண்டது நினைவில் எழுந்தது. ஆம், சுருதை. தேவகனின் மகள்.

கீழே காஞ்சனம் ஒலிக்கக் கேட்டதும் விதுரன் மெல்ல நடந்து உப்பரிகைக்கு வந்து அங்கே நின்றபடி பார்த்தான். வெயில் பரவிய முற்றத்தில் குதிரைக்குளம்படிகள் ஒலித்தன. தங்கள் நீள் நிழல்களின் மேல் குதிரைகள் ஓடிவந்து நின்றன. வேல்முனைகள் பளபளத்துச் சரிந்தன. அங்கே தன் அன்னையும் சத்யவதியும் எதிரேற்கச் சென்று நிற்பதை விதுரன் கண்டான். சூதப்பெண்ணை எதிரேற்க பேரரசி செல்லும் வழக்கம் இல்லை. சூதப்பெண்ணை வேதமங்கலமும் சூதமங்கலமும் ஒலிக்க வரவேற்பதுமில்லை. அது சத்யவதியின் ஆணை என்று எண்ணிக்கொண்டான். அவனுக்கு அவள் அளிக்கும் பரிசு அது.

ரதம் வந்து நின்று உள்ளிருந்து மெல்லிய தோள்கள் கொண்ட மாநிறமான பெண் இறங்கி நிற்பதைக் கண்டான். நீண்டமுகம், பெரிய கண்கள். காதோரம் ஆடிய சுரிகுழல்கள். சிலகணங்களுக்குள் அவனுள்ளம் ஏமாற்றத்தால் சுருங்கிக்கொண்டது. திரும்பி பேரரசியின் அறைக்குள் சென்று ஆமாடப்பெட்டியைத் திறந்து சுவடிகளை எடுத்து வாசிக்கத்தொடங்கினான். சொற்களேதும் பொருளாகவில்லை. ஆனால் பிடிவாதமாக வாசித்துக்கொண்டே இருந்தான்.

சத்யவதி மேலேவந்து அவனைநோக்கி புன்னகை செய்து “நீ இங்கேயா இருக்கிறாய்? இப்போதுதான் உன் துணைவி அரண்மனை புகுந்தாள். அழகி. மாந்தளிர்போல இருக்கிறாள்” என்றாள். அக்கணம் ஏன் தன்னுள் எண்ணையில் நெருப்பு ஏறுவதுபோல சினம் பெருகியது என விதுரன் எண்ணிக்கொண்டான். சத்யவதியின் சிறிய சீர்ம்பல் நகைப்பை, கன்னங்களில் விழுந்த அழகிய சுருக்கத்தை, நரையோடிய கூந்தல்சுருள்களை அனைத்தையும் வெறுத்தான். வாளால் நெஞ்சில் குத்தி இதயத்தைப்பிளப்பதுபோல ஏதேனும் சொல்லவேண்டுமென நாவெழுந்தது.

அவன் தன் முழு சிந்தையாலும் நெஞ்சை வென்றடக்கினான். ஆம், எளியபெண். மிக எளிய சூதப்பெண். அரசி அல்ல. சக்ரவர்த்தினி அல்ல. வாளும்வேலும் நூலும் நெறியும் கற்றவளல்ல. தலைநிமிர்ந்தவள் அல்ல. தோள்விரிந்தவள் அல்ல. கண்களையும் முகத்தையும் சித்தத்தால் ஆட்டிவைக்கும் மதியூகி அல்ல. வெறும் பெண். உன்னுள் உள்ள வெறும் சூதனுக்கு அவளே துணை. அவள்தான் நீ நடக்கும் மண்ணில் தானும் நடப்பவள். ஆம், அவள்தான் உனக்கானவள். அவள் மட்டும்தான்.

அவள் பெயரென்ன? சுருதை! ஆம் சுருதை. அது வெறும்பெயரல்ல. அதன் ஒலி வேறேதோ பெயராகிறது. ஆம். அவன் முகம் மலர்ந்தான். “சுருதை! நல்ல பெயர் அல்லவா?” என்று சத்யவதிகேட்டாள். அவன் திடுக்கிட்டு நிமிர்ந்தான். மிக அருகே அவள் வந்துவிட்டது போல, மிக ஆழத்தில் எதையோ மறுகணமே பார்த்துவிடுவாளென்பதுபோல. “ஆம்” என்றான். “வேதங்களை நினைவுறுத்தும் பெயர்” என்றான். சத்யவதி சிரித்து “இப்படி அவளிடம் காவியம் பேசினாயென்றால் அஞ்சிவிடுவாள். எளியபெண்…” என்றாள். அவன் புன்னகைசெய்தான்.

“நீ உன் அரண்மனைக்குச் செல். அன்னையிடம் ஆசி பெற்று மணியறை புகவேண்டும் அல்லவா?” என்றாள் சத்யவதி. அவன் புன்னகையுடன் ஏடுகளைக் கட்டிவைத்துவிட்டு எழுந்தான். “மணமங்கலம் என்னும்போது உன் முகத்தில் அது தெரியவேண்டும். நீ சாலையில் செல்லும்போதே அதை நகர்மக்கள் காணவேண்டும்” என்று சத்யவதி மேலும் நகையாடினாள். விதுரன் தன் முகத்தை அவள் பார்க்காமல் திருப்பிக்கொண்டான்.

ஆனால் அவன் நேராக தன் மாளிகைக்குச் செல்லவில்லை. அங்கே செல்லவேண்டுமென்றுதான் கிளம்பினான். ஆனால் இடைநாழியிலேயே கால்கள் தயங்கின. திரும்பி கருவூலத்துக்குச் சென்றான். அங்கிருந்து ஆயுதசாலைக்கும் கிழக்கு எல்லைக் காவல்மாடத்துக்கும் சென்றுவிட்டு மீண்டும் அரண்மனைக்கே வந்தான். அவனுக்காக ஒற்றர்கள் காத்திருந்தனர். அவர்களிடம் செய்திகேட்டுக்கொண்டிருக்கும்போது அவன் மாளிகையில் இருந்து கிரிஜை அனுப்பிய சேடி வந்து அங்கே மணியறைமங்கலம் ஒருங்கியிருப்பதைச் சொன்னாள்.

விசைமிக்க காற்றை எதிர்த்து நடப்பதுபோல நடந்து அவன் மாளிகையின் படிகளில் ஏறினான். அந்தக்காற்று மேலும் மேலும் குளிரானபடியே சென்றது. மடைதிறந்து பாயும் நீரை எதிர்ப்பவன்போலத்தான் தன் அறைக்கு முன்னால் அவன் நின்றான். அவனுடைய சேவகன் பணிந்து “அமைச்சரே தாங்கள் அணிகொள்ளவேண்டும்” என்றான். அந்தக்குரல் ஒரே கணத்தில் விதுரனை விடுதலைசெய்தது. காற்று அடங்கும்போது பறந்துகொண்டிருக்கும் திரைச்சீலைகளெல்லாம் அமைவதுபோல அவன் அகம் நிலைகொண்டது. “ஆம்” என்றான்.

தன் உடலை சேவகர்களிடம் ஒப்படைத்துக்கொண்டான். அவர்கள் அதை அணிசெய்தனர். கூந்தலை கொண்டையாக்கி மலர்சூட்டினர். வாசனைபூசினர். அதன்பின் கிரிஜையால் அழைத்துச்செல்லப்பட்டு அன்னை முன் நின்றபோது அவனால் அவளை நிமிர்ந்தே பார்க்கமுடியவில்லை. அவளை வணங்கி அருட்சொல் பெற்றுத் திரும்பும்போது ஒரு கோயில்சிலைமுன் நின்று திரும்பியதாகவே உணர்ந்தான். நினைவறிந்த நாள்முதல் அவள் அப்படித்தான் இருந்தாள். இருண்ட கருவறைக்குள் காலாதீதத்தில் அமர்ந்து வெறிக்கும் இரு சிலைவிழிகள்தான் அவள்.

மணியறைக்குள் வந்து நின்ற சுருதை மெல்ல நடுங்கிக்கொண்டிருந்தாள். அவன் மஞ்சத்திலிருந்து எழுந்து அவளை நெருங்கி “வருக” என்று சொன்னான். அவள் கைகளைக் கூப்பி முறைப்படி வணங்கியபின் நடுங்கும் கால்களை எடுத்துவைத்து அவனை அணுகினாள். அவளுடைய மெலிந்த மாந்தளிர்நிறமான கழுத்தில் ஒரு நரம்பு அதிர்ந்துகொண்டிருப்பதை அவன் கண்டான். மிகமெல்லிய உடல். இடை ஒடுங்கியிருப்பதனாலேயே சற்று முன்னால் வளைந்திருந்தாள். மெல்லிய தோள்களில் இருந்து பட்டாடை நழுவியபோது அதை அள்ளிப் பற்றியபடி அவனைப்பார்த்தபின் தலை குனிந்தாள். துலக்கப்பட்ட செம்புச்சிலை போல இருந்தாள்.

“சுருதை என்பதல்லவா உன் பெயர்?” என்றான் விதுரன். அக்கணமே அவன் உள்ளே சிரிப்பு எழுந்தது. மொழியறிந்தநாள்முதல் கவிதை வாசிப்பவன் தன் பெண்ணிடம் கேட்கும் முதல் வினா! கவிதைகளெல்லாம் கோடைகாலத்தில் மழைமேகம் நினைவுக்கு வருவதுபோல எங்கோ நெடுந்தொலைவில், வந்தனவா நிகழ்ந்தனவா குளிர்கனவா என்பதுபோல விலகித்தெரிந்தன. இல்லை, அவை வேறு ஒருபெண்ணுக்கான சொற்கள். கவிதைகளில் வாழ்பவள். நெருப்புபோல எழுந்து நின்றாடுபவள். பந்தங்கள் எரிய கருவறைக்குள் நின்றருளும் பொற்சிலை. இவள் மடைப்பள்ளியின் எளிய செம்புப்பாத்திரம். அச்சொற்கள் இவளுக்குரியனவல்ல.

“நீ யாதவப்பெண்ணா?” என்றான் விதுரன். அது இன்னும் அபத்தமான சொற்றொடராக இருந்தது. அவள் ஆம் என தலையை அசைத்தாள். அதற்குமேல் அவளிடம் என்ன சொல்வதென்று தெரியவில்லை. யார் இந்த அறியாத பெண்? நடுங்கும் கைகளும் வியர்வைபூத்த முகமும் சரிந்த விழிகளுமாக என் முன் நிற்கும் இவள் யார்? இவள் வயிற்றில்தான் என் மைந்தர்கள் பிறப்பார்களா என்ன? காவியங்கள் எனக்குள் சொரிந்து நிறைத்த பெருங்காதலை முழுக்க இவளுக்குத்தான் நான் பரிமாறவேண்டுமா?

இனி என்ன சொல்லவேண்டும்? இத்தருணத்தில் என்ன சொல்வார்கள்? அவளிடம் அன்பாக ஏதேனும் சொல்லவேண்டும். காதலைத் தெரிவிக்கவேண்டும். அவள் அழகை புகழவேண்டும். எந்தப்பெண்ணுக்கும் அதைப்பெறும் உரிமை உண்டு, அதைமறுக்கும் சுதந்திரம் கொண்ட ஆணென எவருமில்லை. ஆனால் அவனறிந்தவை அனைத்தும் காவியச்சொற்கள். வாழைப்பூ போன்ற முகமும் சிறிய உதடுகளுமாக நிற்கும் இந்தப்பெண் காவியநூலுக்குமேல் வந்தமரும் ஒரு வண்ணத்துப்பூச்சி. ஒரு சொல்லும் அறியாதவள். ஆனால் காவியம் அவளை அறியும்.

அந்த உவமை அவனை மகிழ்வித்தது. புன்னகையுடன் “அமர்ந்துகொள்” என்றான். அவள் மெல்ல மஞ்சத்தில் அமர்ந்துகொண்டாள். “சூதப்பெண்ணாக இருந்தாலும் நீ யாதவமுறைப்படி வளர்ந்திருக்கிறாய். இங்கே ஷத்ரியர்களின் முறைகளை மெதுவாகக் கற்றுக்கொள்” என்றான். அவள் தலையை அசைத்தாள். அவன் சொல்ல எண்ணியது அதுவல்ல. மெல்லிய பட்டாம்பூச்சி போலிருக்கிறாய் என்று சொல்ல நினைத்தான். ஆனால் அவளிடம் அச்சொற்களை சொல்லமுடியாதென்று தோன்றியது. ஆனால் இத்தருணத்தில் வேறு எதைத்தான் பேசுவது? அவன் நெஞ்சு சொற்களுக்காகத் துழாவியது. அவள் கைகளைப்பற்றிக்கொண்டான்.

கதவு இடிபடும் ஒலியைக்கேட்டு திகைத்து அவன் எழுந்தான். முதலில் அவ்வொலி வேறெங்கோ இருந்து கேட்பது போலிருந்தது. பின்னர் விரைந்து சென்று கதவைத்திறந்தான். கதவைத் தள்ளித்திறந்து உள்ளேவந்த அன்னை அஞ்சியவள் போல, அரிய எதையோ இழந்தவள்போல இருகைகளையும் விரித்து அலறி அழுதாள். மார்பை ஓங்கி ஓங்கி அறைந்தபடி கூச்சலிட்டுக்கொண்டு தன் தலையை கையால்பற்றி முழந்தாள் மடிந்து அமர்ந்தாள்.

விதுரன் திகைத்து கதவைப்பற்றிக்கொண்டு நின்றான். அவன் பிடியில் கதவு நடுங்கி ஆடியது. மேலாடையை இழுத்துப்போட்டபடி எழுந்த சுருதை ஒரு கணம் திகைத்தபின் குனிந்து அன்னையை பற்றிக்கொண்டாள். “அன்னையே… அழாதீர்கள்… இதோ நான்… நானிருக்கிறேன்… என்ன வேண்டும்?” என்றாள். அவள் திகைத்தவள்போல சுருதையைப் பார்த்தாள். “நான் நான்…” என்றாள். “நான் உங்கள் மருகி… நான் என்ன செய்யவேண்டும் சொல்லுங்கள்” என்றாள் சுருதை. அவள் ஆடையைப்பற்றியபடி அன்னை “நீ இங்கேயே இரு… நீ இங்கேயே இரு” என்றாள். பதறும் கண்களால் மாறி மாறிப்பார்த்து “என்னை விட்டுவிடாதே… இங்கேயே இரு” என்றாள்.

சுருதை விதுரனிடம் “நான் அன்னையை தூங்கச்செய்துவிட்டு வருகிறேன்” என்றபின் மெல்ல எழுப்பினாள். வாயிலில் நின்ற கிரிஜையிடம் சைகையில் அவளே பார்த்துக்கொள்வதாகச் சொல்லி அழைத்துச்சென்றாள். கிரிஜை ஒருகணம் அவனை நோக்கிவிட்டுச் சென்றாள். விதுரன் தன் கால்கள் தன்னிச்சையாக ஆடிக்கொண்டிருப்பதை உணர்ந்தான். மெல்ல நடந்து சென்று மஞ்சத்தில் அமர்ந்துகொண்டான். சிலகணங்கள் கழித்து கடும் நீர்விடாயை அறிந்து எழுந்து நீர்க்குடத்தை எடுத்து அப்படியே தூக்கி அருந்தினான்.

மேலும் ஒரு நாழிகை கடந்து சுருதை உள்ளே வந்தாள். அணிகளும் ஆடைகளும் குழலும் கலைந்திருந்தன. அவனிடம் “அன்னை ஏதோ நிலைகுலைந்திருக்கிறார். என்னை மெல்லத்தான் அடையாளம் கண்டுகொண்டார்” என்றாள். “என்ன செய்கிறார்கள்?” என்றான் விதுரன். “துயில்கிறார்கள்” என்று புன்னகைசெய்தபடி அவள் அவனருகே வந்து அமர்ந்தாள். அப்போது நெடுங்காலமாக அறிந்தவள் போல, மிகமிக அண்மையானவள்போலத் தோன்றினாள்.

முந்தைய கட்டுரைஇருநாவல்கள்
அடுத்த கட்டுரைகொங்குநாடும் மன்றோவும்