பகுதி பதின்மூன்று : தனிப்புரவி
[ 2 ]
முதியசேடி கிரிஜை அருகே வந்து வணங்கி நின்றதை சிவை திரும்பிப்பார்த்தாள். பலவருடங்களாவே அவள் பேசுவது மிகவும் குறைந்துவிட்டிருந்தது. கேட்கவேண்டியவற்றை எல்லாம் விழிகளாலேயே கேட்பாள். சொல்லவேண்டியவற்றை சைகைகளாலும் ஒற்றைச்சொற்களாலும் அறிவிப்பாள். பெரும்பாலான நேரம் உப்பரிகையில் சாளரம்வழியாக வெளியே பார்த்தபடி அமர்ந்திருப்பாள். வடக்குவாயில்கோட்டையும் யானைக்கொட்டிலும் வடமேற்குமூலை குளமும் அதையொட்டிய அரசபாதையும் அரண்மனையின் வடக்குமுற்றமும் அங்கிருந்து தெரியும். இருபதுவருடங்களாக அவள் அதைமட்டும்தான் பார்த்துக்கொண்டே இருக்கிறாள் என்பது சேடியர் அனைவருக்கும் தெரியும்.
அவளுக்கு அஸ்தினபுரியின் அரசச்சடங்குகள் எதிலும் இடமில்லை. அனைத்துவிழாக்களிலும் சூதர்கள் அமரும் பகுதியில் அவளுக்கென தனியானபீடம் ஒன்று போடப்பட்டிருக்கும். தன் தலைமீது போடப்பட்ட மெல்லிய பட்டாடையை பெரும்பகுதி முகத்தை மறைக்கும்படி இழுத்துவிட்டுக்கொண்டு அசையாமல் அமர்ந்திருப்பாள். அவள் செய்யவேண்டியவை அனைத்தும் அவளுக்குத் தெரிந்திருந்தது. ஆடிப்பாவைபோல ஓசையே இல்லாமல் அவற்றைச்செய்துவிட்டு மீள்வாள். அம்பிகையும் அம்பாலிகையும் அவளிடம் முகம் நோக்கிப்பேசுவதேயில்லை. அரசமுறைப்படியென்றாலும்கூட அவளிடம் ஓரிரு சொற்கள் பேசுபவள் சத்யவதி மட்டும்தான்.
அவள் ஓசையில்லாமல் ஆகும்தோறும் அனைவரும் அவளைவிட்டு மேலும் விலகிச்சென்றார்கள். மெல்லமெல்ல அவள் அவர்கள் அனைவரின் கண்களில் இருந்தும் மறைந்துபோனாள். ஒரு சுவரோவியம்போல ஆனாள். திரைச்சீலை ஓவியம்கூட அல்ல. அது அசையும், நடனமிடும். சுவரோவியம் ஒற்றை பாவனையுடன் நிலைத்தவிழிகளுடன் அசைவின்மையின் முடிவிலியில் இருப்பது. அணுக்கச்சேடிகளான இரு முதியபெண்கள் மட்டும் அவளுக்கான சேவைகளைச் செய்தனர்.
விதுரனின் உள்ளத்திலும் அவளுக்கு இடமில்லை என்பதை அனைவரும் அறிந்திருந்தனர். நினைவறிந்தநாள் முதல் அவன் பேரரசியின் மடியில்தான் வளர்ந்தான். அவள் அரண்மனையில்தான் பெரும்பாலும் இருந்தான். அவன் பேசத்தொடங்கியபோதே சிவை பேச்சை இழக்கத் தொடங்கிவிட்டிருந்தாள். அவன் அவளிடம் விளையாடியதில்லை, அவள் குரலே அவன் உள்ளத்தில் இருக்கவில்லை. அன்னைக்குரிய மதிப்பையும் வணக்கத்தையும் எப்போதும் செலுத்துபவனாக விதுரன் இருந்தான், அன்னை என்னும் சுவரோவியத்த்துக்கு.
கிரிஜை “பிதாமகரின் ரதம் கோட்டைக்குள் நுழைந்துவிட்டது அரசி” என்றாள். சிவையின் பார்வையை அரைக்கணம் நோக்கிவிட்டு “கிழக்குக் கோட்டைவாயிலில் முரசம் முழங்குகிறது” என்றாள். சிவை தலையை அசைத்தாள். “அமைச்சர் அரண்மனையில் பேரரசியுடன் இருக்கிறார்” என்றாள் கிரிஜை. பின்பு தலைவணங்கி பின்னகர்ந்தாள். சிவை மீண்டும் வெளியே நோக்கத் தொடங்கினாள். ஒரு ரதம் வடக்குரதவீதியின் வழியாக செம்புழுதியை சுருளெழுப்பியபடி சென்றது. குதிரைகளின் கால்கள் முரசுத்தோலை அறையும் கோல்கள் போல செம்மண்ணை அறைந்து சென்றன.
சற்றுநேரம் கழித்து கிரிஜை வந்து வணங்கி “அரண்மனையிலிருந்து செய்தி வந்துள்ளது அரசி. தாங்கள் உத்தரமதுராபுரியின் இளவரசியை வரவேற்கச் செல்லவேண்டும் என்று” என்றாள். சிவை எழுந்து தன் கூந்தலில் இருந்து சரிந்த ஆடையை சீரமைத்துக்கொண்டாள். நிழல் செல்வதுபோல நடந்து சென்று அவள் தன் நீராட்டறையை அடைந்தாள். சேடி அவளை விரைவாக நீராட்டினாள். அணியறைக்குச் சென்று பட்டாடையும் நகைகளும் அணிந்துகொண்டாள். அது கோயில்சிலையை அணிசெய்வதுபோல என்று சேடி எப்போதும் உணர்வதுண்டு. அவள் அசையாமல் அமர்ந்திருப்பாள். எந்த ஆடையும் அணியும் அவள் கண்களிலும் உடலிலும் உயிரசைவை உருவாக்குவதில்லை.
சிவை அரண்மனை முகப்பிற்குச் சென்றபோது அங்கு எவரும் இல்லை. கிரிஜை “சேடியர் வருவார்கள். செய்தி சென்றிருக்கும் அரசி” என்றாள். சிவை தலையசைத்தபின்னர் பெரிய மரத்தூணில் சாய்ந்தபடி நின்றாள். அதில் சுற்றப்பட்டிருந்த அலங்காரப்பட்டு காற்றில் அசைந்து உரசி ஒலியெழுப்பிக்கொண்டிருந்தது. முற்றத்தில் மதியவெயில் கண்களைக் கூசச்செய்தபடி விரிந்துகிடக்க அரண்மனைக்கூரையின் விளிம்பின் நிழல் வளைந்து வளைந்து தெரிந்தது. சிவை அசையா விழிகளுடன் ஒளிர்ந்துகொண்டிருந்த எதிர்ப்பக்க மாளிகைச்சுவரை நோக்கிக்கொண்டு நின்றாள்.
உள்ளிருந்து ஏழெட்டு சேடிகளும் இரு அணிப்பரத்தையரும் பேசியபடியே வந்தனர். பரத்தையர் கைகளில் மங்கலத்தாலங்களும் சேடியர் கைகளில் அகல்விளக்குகளும் மலர்த்தாலங்களும் நிறைகுடமும் இருந்தன. அவர்களில் ஒருத்தி தூணருகே சிவை நிற்பதைக்கண்டதும் மெல்லியகுரலில் அதட்ட பிறர் பேச்சை தாழ்த்தினர். அப்போதும் ஒருசிலர் சிரித்துக்கொண்டிருந்தனர். மீண்டும் அதட்டல் ஒலி கேட்டது. அவர்கள் படியிறங்கி வந்து முற்றத்தில் கூரைநிழலுக்கு அடியில் நின்றுகொண்டனர்.
தொலைவில் பெருமுரச ஒலி கேட்டுக்கொண்டிருந்தது. வாழ்த்தொலிகள் மெல்லியதாக ஒலித்தன, பெரும்பாலும் படைவீரர்களின் குரல்கள். வெயிலில் அவ்வொலிகள் வண்ணமிழந்தவை போலத் தோன்றின. முற்றத்தின் கருங்கல்தரையில் இருந்து எழுந்த வெம்மை அனைவரையும் சோர்வுறச்செய்தது. வியர்வை முகத்திலும் கழுத்திலும் வழிய, முகம் சுளித்து கண்களைச் சுருக்கியபடி, கால்களை மாற்றிக்கொண்டும் இடையை வளைத்தும் பெண்கள் நின்றனர்.
அப்பால் அரண்மனை இடைநாழியில் “பேரரசி சத்யவதி வருகை” என நிமித்தச்சேடி அறிவித்தாள். மங்கலத்தாசிகளும் சேடிகளும் திகைத்து திரும்பிப்பார்த்தனர். “பேரரசியா?” என்று ஒரு பெண் கேட்டாள். “ஆம்… பேரரசி!” என பல குரல்கள் ஒலித்தன. பெண்கள் ஆடைகளையும் கூந்தலையும் சீர்செய்துகொண்டனர். கைகளில் இருந்த தாலங்களை சரியாக ஏந்தினர். இடைநாழியில் பேரரசியின் செங்கோலுடன் முதற்சேடி தோன்றினாள். அதன்பின் சாமரங்களும் மங்கலத்தாலங்களும் ஏந்திய சேடியர் சூழ பேரரசி சத்யவதி தளர்ந்தநடையுடன் வந்தாள். அவளுக்குப்பின்னால் உயர்ந்த கொண்டையுடன் கரியபேருடலுடன் சியாமை வந்தாள்.
சத்யவதி வந்து கால்களை மெல்ல படிகளில் எடுத்துவைத்து இறங்கி முற்றத்தில் நின்றாள். “முற்றத்தில் கல் சுடுகிறது பேரரசி” என ஒரு சேடி சொன்னபோது தாழ்வில்லை என்று அவள் கையை மெல்ல வீசி அறிவித்தாள். அதன்பின் திரும்பிப்பார்த்தபோதுதான் சுவரை ஒட்டி நின்றிருந்த சிவையைக் கண்டாள். “நீயா?” என்றாள் சத்யவதி. “உன்னைத்தான் வரும்போதே தேடினேன். உன் மருகியின் நகர்நுழைவல்லவா? முன்னால் வந்து நில்!” சிவை ஒன்றும் சொல்லாமல் மெல்ல சில அடிகள் முன்னால் நகர்ந்து நின்றாள்.
சத்யவதி அவள் கண்களைப் பார்த்தாள். “தேவகனின் மகள். உத்தரமதுராபுரியின் துணை நமக்குத்தேவை என்பதனால் உன் மைந்தன் எடுத்த முடிவு இது. அறிந்திருப்பாய்” என்றாள். சிவை கண்களால் ஆம் என்றாள். “அழகிய பெண் என்கிறார்கள். இளவரசிக்குரிய அனைத்துக்கல்வியும் பெற்றிருக்கிறாள். நம் அரண்மனைக்கு இன்னொரு ஒளிவிளக்காக இருப்பாள்” என்றாள். சிவை அதற்கும் கண்களாலேயே பதில் சொன்னாள்.
காஞ்சனம் முழங்கத்தொடங்கியது. காவலர்களின் நான்கு வெண்குதிரைகள் குளம்புகள் ஒலிக்க உள்ளே நுழைந்தன. அவற்றில் அமர்ந்திருந்த படைவீரர்களின் வேல்நுனிகள் வெயிலில் ஒளிவிட்டுத் திரும்பின. அவர்கள் குதிரைகளைத் திருப்பி நிறுத்தி கல்தரையில் உலோகக் காலணிகள் ஒலிக்க இறங்கி பேரரசிக்கு வேல்தாழ்த்தி வணக்கம் சொல்லிவிட்டு விலகி நின்றனர். சத்யவதி திரும்பிப்பார்த்து “சூதர்களும் வைதிகர்களும் எங்கே?” என்றாள். ஒருசேடி விழிகளைத் தாழ்த்தி “அவர்கள் தேவையில்லை என்று…” என்றாள்.
“யார் சொன்னது?” என்றாள் சத்யவதி. சேடி மீண்டும் தலைதாழ்த்தி “அரண்மனை முழுக்க அமைச்சர் பலபத்ரரின் பொறுப்பில் உள்ளது” என்றாள். சத்யவதி ஒருகணம் அவளைக் கூர்ந்து நோக்கிவிட்டு வீரரை நோக்கி கையசைத்தாள். “ரதம் சற்று விரைவுகுறைவாக அரண்மனைக்குள் நுழையட்டும் என்று சொல்… இங்கிருந்து சங்கொலி எழுவது வரை காத்திருக்கட்டும்” என்றாள்.
சத்யவதி திரும்பியதும் சியாமை “அரசி” என்றாள். “வைதிகரும் சூதரும் இக்கணமே இங்கே வரவேண்டும். பலபத்ரரின் அனைத்து அரசுப்பொறுப்புகளையும் அவரது துணையமைச்சர் மரீசரிடம் ஒப்படைத்துவிட்டு அரச இலச்சினையையும் கையளிக்கவேண்டுமென்று சொல். மாலையில் அவரை என்னை அரசவையில் வந்து பார்க்கச்சொல்” என்றாள். சியாமை “ஆணை” என்றபின் விரைந்து மறுமுனை நோக்கி ஓடினாள்.
சற்று நேரத்தில் மூச்சிரைக்க வைதிகர் எழுவரும் சூதர்கள் எழுவரும் ஓடிவந்தனர். வைதிகர் நின்றபின் பொற்குடங்களில் நீரை நிறைக்கத்தொடங்க சூதர்கள் தங்கள் மங்கலவாத்தியங்களை அவிழ்த்து தோலைமுறுக்கத்தொடங்கினர். சத்யவதி கையசைத்ததும் மேலே நின்றிருந்த காவலன் தன் சங்கை எடுத்து மும்முறை முழக்கினான். அரண்மனையின் கோட்டைவாயிலுக்குள் உத்தரமதுராபுரியின் கருடக்கொடியுடன் அணிரதம் உள்ளே நுழைந்தது. அதைச்சூழ்ந்து வந்த குதிரைவீரர்கள் முன்னால் வந்து இறங்க ஒருவன் சென்று ரதத்தின் வாயிலைத் திறந்து படிகளை வைத்தான்.
வைதிகரின் வேதநாதமும் சூதர்களின் வாத்தியங்களும் இணைந்து முழங்கின. ரதத்திலிருந்து சுருதை தன் வலக்காலை எடுத்து வைத்ததும் வைதிகர் முன்னால் சென்று அவள்மேல் நிறைகுடத்து நீரை வேதமோதித்தெளித்து வரவேற்றனர். சத்யவதி திரும்பிப் பார்த்துவிட்டு முன்னால் சென்றாள். சிவை அவளைத் தொடர்ந்தாள். வெளியே பொழிந்துகொண்டிருந்த உச்சிவெயிலில் கண்கள் கூச சுருதை இறங்கி நின்று கைகளைக் கூப்பிக்கொண்டாள். சத்யவதி அருகே சென்று மங்கலத்தாலத்தில் இருந்து குங்குமத்தை எடுத்து அவள் நெற்றியில் வைத்து “அஸ்தினபுரியில் உன் வரவு மங்கலத்தை நிறைக்கட்டும்” என்றாள். சிறு செம்மலர் ஒன்றை கூந்தலில் சூட்டி “நீ நன்மக்களைப் பெற்று இல்லத்தை நிறைப்பாயாக” என்றாள்.
சிவை சுருதையைப் பார்த்தாள். மாநிறமான நீள்முகமும் பெரிய கருவிழிளும் கொண்ட மெல்லிய பெண். அவள் மேலுதடு சற்று எழுந்து வளைந்திருந்தமையால் ஆவல்கொண்ட குழந்தையின் முகம் அவளுக்கிருந்தது. காதோர மயிர்ச்சுருள்களின் நிழல் கன்னத்தில் ஆடியது. காதிலணிந்த மகரக்குழையின் நிழல் கழுத்துவளைவில் விழுந்துகிடந்தது. சத்யவதி சிவையிடம் திரும்பி கைகாட்ட அவள் முன்னால் சென்று குங்குமமும் மலரும் அணிவித்து வாழ்த்தினாள். சூதர்களின் இசையும் வாழ்த்தொலிகளும் குரவையொலியும் சூழ்ந்திருக்க அவளால் அங்கே நிற்கமுடியவில்லை. மூச்சுத்திணறுவதுபோலத் தோன்றியது.
சுருதை கையில் நிறைகுடமும் விளக்கும் ஏந்தி அரண்மனைக்குள் காலடி எடுத்துவைத்தாள். அவளை சத்யவதி கைப்பற்றி அரண்மனையின் முதற்கூடத்திற்கு அழைத்துச்சென்றாள். அங்கே மாக்கோலமிட்ட களத்தில் முக்குவை அடுப்பு கூட்டப்பட்டிருந்தது. சிறுபொற்குடத்தில் நிரப்பிய பசும்பாலை அதில் ஏற்றி நெருப்புமூட்டி பொங்கவைத்தாள் சுருதை. அந்தப்பாலை சத்யவதிக்கும் சிவைக்கும் பகிர்ந்தளித்தாள். அடுப்பை மும்முறை வலம் வந்து வணங்கியபின் நவதானியங்களை அள்ளி எட்டு திசையிலும் வைத்து வீட்டை ஆளும் முன்னோர்களை வணங்கினாள்.
ஒவ்வொருசடங்கு முடியும்போதும் சிவை திரும்பி தன் அரண்மனைக்குச் செல்வதைப்பற்றியே எண்ணிக்கொண்டிருந்தாள். ஒவ்வொன்றுக்கும்பின் இன்னொரு சடங்கு வந்தது. இறுதியில் அவள் சுருதையின் கையைப்பற்றி தன் அரண்மனைக்கு அழைத்துச்செல்லும் சடங்கு. ‘என் இல்லத்துக்கு வருக! என் மைந்தனின் கருவைச் சுமந்து என் மூதாதையரை மீட்டுத்தருக. என் இல்லத்தில் உன் காலடிகள் செழுமை சேர்க்கட்டும். மைந்தரும் கன்றுகளும் தானியங்களும் பட்டும் பொன்னும் என ஐந்து மங்கலங்களும் என் இல்லத்தை ஒளிபெறச்செய்யட்டும். ஆம் அவ்வாறே ஆகுக!’ என்ற மந்திரத்தை அவள் ஒவ்வொரு சொல்லாகச் சொன்னாள். ஒலியை எதிரொலிக்கும் வெண்கலப் பானை அவள் என சேடியர் நினைத்தனர்.
சுருதை அரண்மனையின் உள்ளறைக்குச் சென்றபின் சிவை தன் அறைக்குச் சென்றாள். ஆடைகளையும் அணிகளையும் விரைந்து கழற்றிவிட்டு மறந்துவைத்த எதையோ தேடுபவள் போல தன் உப்பரிகைச் சாளரத்துக்குச் சென்று அமர்ந்துகொண்டாள். வெளியே வெயில் மங்கலாகத் தொடங்கியிருந்தது. தழல்போல எரிந்துபரவியிருந்த செம்மண் சாலையில் நிறம் சற்று அடர்ந்தது. மேகமற்ற வானம் அப்போதும் ஒளிப்பரப்பாகவே தெரிந்தது. வடமேற்கில் குளத்தின் அலைகளில் வெயிலொளி சாய்ந்துவிழுந்தமையால் அது தளதளத்துக்கொண்டிருந்தது.
கண்ணெதிரே மெல்ல மாலைவந்து சூழ்வதை சிவை அசையாமல் பார்த்திருந்தாள். நிழல்களின் அடர்ந்தி குறைவதை, யானைக்குளத்தின் நீர் இருள்வதை, அப்பால் வடக்குக்கோட்டை கரியடவரியாக மாறுவதை, மாலைக்காவலுக்கான வீரர்கள் வேல்களுடன் நிரைவகுத்துச்செல்வதை, புராணகங்கையின் பல்லாயிரம் மரங்களில் இருந்து பறவைகள் எழுந்து வானில் சிறகடிப்பதை, சாலைகள் வழியாக சிரித்துப்பேசிச்செல்லும் பெண்களை, கோட்டையை ஒட்டி இருந்த சிற்றாலயங்களில் நெய்விளக்குகள் சுடர்விடத்தொடங்குவதை, அங்கே எழும் மெல்லிய மணியோசையை, கோட்டைமுகப்பின் காவல்மாடங்களில் மீன்நெய்ப்பந்தங்கள் செந்நிறப்பதாகையாக விரிவதை, அந்தியை அறிவிக்கும் பெருமுரசமும் கோட்டைமுகப்பு மணிகளும் ஒலித்தடங்குவதை அவள் என்றுமென அன்றும் நோக்கியிருந்தாள்.
கிரிஜை வந்து வணங்கி “அமைச்சருக்கு மணியறை அமைக்கும்படி பேரரசி ஆணை” என்றாள். சிவை விழிகளை மட்டும் மெல்ல அசைத்தாள். “மணியறை அமைத்துவிட்டோம். உத்தரமதுராபுரியின் இளவரசியை சேடியர் அணிசெய்துகொண்டிருக்கிறார்கள்” என்றாள். பின்னர் “தாங்கள் வந்து அவரைப் பார்த்து அணிசெய்கை நிறைவுற்றதா என்று சொல்லும் மரபு ஒன்றுண்டு” என்றாள். சிவை அசைவற்ற விழிகளுடன் வெளியே நோக்கி இருக்கக் கண்டபின் தலைவணங்கி திரும்பிச்சென்றாள்.
அந்திவெயில் சிவந்து பரவிக்கிடந்த சாலைவழியாக ஒரு சிறிய கூண்டுவண்டி சென்றது. அதனுள்ளிருந்த வணிகப்பெண் திரைச்சீலையைத் தூக்கி வெளியே நோக்கியபடி சென்றாள். செந்நிறக்குதிரையின் மீது கையில் வேலுடன் ஒரு காவலதிகாரி விரைந்து கடந்துசென்றான். சிரித்தபடி இரு சிறுவர்கள் ஒருவரை ஒருவர் துரத்திவந்தனர். பின்னால் இரு சிறுமியர் சிரித்துக்கொண்டே ஓடிவந்தனர். அவர்களை ஓடவேண்டாமென கூவி கையசைத்துக்கொண்டு கையில் ஒருகுழந்தையும் இடையில் ஒரு குழந்தையுமாக ஒரு பெண் பின்னால் வந்தாள்.
ஒருகணம் திகைத்த சிவையின் சிந்தை பின்னர் தெளிந்து தன் படபடப்பை உணர்ந்து மெல்ல அமைந்தது. எட்டாண்டுகளுக்கு முன்னர் அவள் தெற்குக்கோட்டை முனையில் மன்றமர்ந்த கொற்றவையின் ஆலயத்துக்குச் சென்றபின் திரும்பிக்கொண்டிருந்தபோது ரதத்தில் ஏறுவதற்கு முன்பு கிருபையைக் கண்டாள். அவள் தன்னைப் பார்த்துவிட்டதை அறிந்த கிருபை ஒருகணம் திகைத்து தயங்கியபின் கூப்பியகரங்களுடன் அருகே வந்தாள்.
கிருபையின் மார்பகங்கள் கனத்து சற்றே தொய்ந்திருக்க, கைகளும் தோள்களும் தடித்து உருண்டு உடல் பருத்திருந்தது. கழுத்தும் கன்னங்களும் பளபளப்பாக சதைப்பற்றுகொண்டிருக்க அவளுடைய மாநிறம் செம்மைகொண்டு அவளை மேலும் அழகியாக்கியிருந்ததாகத் தோன்றியது. எளிய ஆடையை உடலைச்சுற்றிக்கட்டியிருந்தாள். கழுத்தில் ஒற்றைக்கல் மட்டும் தொங்கும் வெள்ளிச்சரடு. கைகளில் வங்கநாட்டு வெண்சங்கு வளையல்கள். முன்தலை மயிர் உதிர்ந்து நெற்றிமேலேறியிருந்ததனால் அவள் மேலும் அமைதியானவள் போலத் தோன்றினாள்.
நான்கு மைந்தர்கள் அவளைச்சுற்றி ஓடிவிளையாடிக்கொண்டிருந்தனர். அரசரதத்தைக் கண்டதும் மூத்தவன் கையை அசைத்து பிற மூவரையும் அழைத்து தன்னருகே நிறுத்திக்கொண்டான். முன்நெற்றி மயிர் குதிரைக்குஞ்சி போலச் சரிந்து கிடந்த சிறியவனுக்கு ஆறுவயதிருக்கும். கரிய உடலும் கூரிய கண்களும் கொண்டிருந்தான். கிருபையின் இடையில் ஒருவயதான பெண்குழந்தை புத்தாடை அணிந்து கழுத்தில் கல்நகையுடன் வாய்க்குள் இடதுகையின் கட்டைவிரலைப் போட்டுக்கொண்டு அமர்ந்திருந்து பெரிய வெண்விழிகளால் அவளைக் கூர்ந்து பார்த்தது.
கிருபை அருகே வந்து பணிந்து “அரசிக்கு வணக்கம்” என்றாள். சிவை தலையை மட்டும் அசைத்தாள். கிருபை பதற்றத்துடன் திரும்பிப்பார்த்து அப்பால் கையில் குதிரைச்சவுக்குடன் நின்றிருந்த கரிய மனிதனை கைகாட்டி அழைத்து “அரசி” என்று மெல்லியகுரலில் சொன்னாள். அவன் வணங்கி “தங்கள் அருள்” என்றான். கிருபை “இங்கே குதிரைப்பந்தியில் இருக்கிறோம் அரசி. இவளுக்கு இன்று ஒருவயது. கொற்றவை தரிசனம் வேண்டும் என்று கூட்டிவந்தேன்… எனக்கு ஐந்து குழந்தைகள். மூத்தவன் விக்ருதன்… இவன் சித்ரன். இளையவன் கிருதன். அவன் சுகிர்தன்…” என்றாள். மூச்சிரைக்க “இவளுக்கு நீலி என்று கொற்றவையின் பெயரைத்தான் வைத்திருக்கிறேன். பெண் பிறந்தால் கொற்றவை பெயரையே வைப்பதாக வேண்டிக்கொண்டிருந்தேன்” என்றாள்.
சிவை தலையை அசைத்துவிட்டு ரதசாரதியிடம் போகலாமென கையசைத்தாள். அவன் சாட்டையால் குதிரையைத் தொட்டதும் ரதம் அதிர்ந்து முன்னகர்ந்தது. கிரிஜை மிகமெல்ல “அரசி, குழந்தையை வாழ்த்துங்கள்” என்றாள். சிவை திரும்பி குழந்தையைப்பார்த்துவிட்டு தன் கழுத்தில் கிடந்த சரப்பொளி மாலையைக் கழற்றி குழந்தையின் கழுத்தில்போட்டாள். அதன் கால்வரை அது பளபளத்துத் தொங்கியது. கிருபை திகைத்து வாய்திறந்து நின்றாள். “நீண்ட ஆயுளும் நிறைவாழ்வும் திகழட்டும்” என்று வாழ்த்திவிட்டு சிவை திரைச்சீலையைப் போட்டாள்.
“அது மிகப்பெரிய பரிசு அரசி… ஒரு பொன் நாணயம் போதும்… வேண்டுமென்றால் ஒரு மோதிரம்… சரப்பொளிமாலை மிகப்பெரிய பரிசு” என்றாள் கிரிஜை. சிவை பதில் சொல்லாமல் ஆடிக்கொண்டிருந்த திரைச்சீலையை நோக்கிக்கொண்டிருந்தாள். பின்பக்கம் அவர்கள் ஏதோ பேசிக்கொள்ளும் ஒலி கேட்டது. அவன் தன் அலுவல் ரதத்தில் குடும்பத்தை அழைத்து வந்திருப்பான்போலும். அது அருகே நின்றிருக்க குதிரைகள் மேய்ந்துகொண்டிருந்தன.
கீழே அந்தப்பெண் குழந்தைகளுடன் கோட்டையை நெருங்கிக்கொண்டிருந்தாள். பத்தாண்டுகள் கடந்து கிருபையின் அக்கணத்துப்பார்வை மிக அண்மையில் தெரிந்தது. அதிலிருந்தது திகைப்பு மட்டும் அல்ல என்று சிவை கண்டாள். ஆழ்ந்த அவமதிப்பு கொண்டதுபோல ஒரு வலி. ஆம், வலிதான் அது. அந்த சரப்பொளி மாலையை என்ன செய்திருப்பாள்? ஒருபோதும் தூக்கி வீசியிருக்கமாட்டாள். அதை அவள் கணவன் ஒப்பமாட்டான். அவளாலேயே முடிந்திராது. ஆனால் அதை திரும்பிப்பார்த்திருக்க மாட்டாள். அதை தன் பெண்ணுக்கு அணிவித்திருக்கவே மாட்டாள். அது மிகச்சிலநாட்களிலேயே விற்கப்பட்டுவிடும்.
கிரிஜை வந்து நின்று “அரசி, அமைச்சர் தங்கள் வாழ்த்துபெறுவதற்காக வந்திருக்கிறார்” என்றாள். சிவை திரும்பிப்பார்த்தாள். அப்பால் விதுரன் புத்தாடையும் அணிகளும் அணிந்து கொண்டையாகக் கட்டிய கூந்தலில் புதுமலருடன் நின்றுகொண்டிருந்தான். அவள் அவனையே நோக்கினாள். அவன் விழிகள் அவள் விழிகளை ஒருகணம் சந்தித்து விலகிக்கொண்டன. “தாங்கள் ஆசியளிக்கவேண்டும் அரசி” என்று கிரிஜை மீண்டும் சொன்னாள்.
விதுரன் வந்து அவள் பாதங்களைத் தொட்டு வணங்கினான். சிவை எழுந்து தன் கைகளை விரித்து “ஆயுளுடன் இரு… நிறைவுடன் இரு” என்று வழக்கமான சொற்களை வழக்கமான குரலில் சொல்லி வாழ்த்திவிட்டு மீண்டும் அமர்ந்துகொண்டாள். அவன் மீண்டும் வணங்கிவிட்டு திரும்பிச்சென்றான். அவன் செல்வதை சிலகணங்கள் நோக்கிவிட்டு அவள் வெளியே இருண்டிருந்த தெருவை பார்க்கத் தொடங்கினாள். வடக்குக்கோட்டை வாயிலுக்கு அப்பால் ஒளியுடன் ஒரே ஒரு விண்மீன் தெரிந்தது. அது விண்மீனல்ல, ஏதோ கோள். இன்னும் சற்றுநேரத்தில் ஒவ்வொரு விண்மீனாக வெளியே வரத்தொடங்கும்.
அவள் நோக்கிக்கொண்டே அமர்ந்திருந்தாள். வானின் இருண்ட நீர்ப்பரப்பில் இருந்து எழுந்து வருவதுபோல விண்மீன்கள் ஒவ்வொன்றாக தெரியத்தொடங்கின. அங்கே கடுங்குளிர் இருப்பதுபோல அவை மெல்ல அதிர்ந்தன. காற்று வந்தபோது அதில் வெந்த மண்ணின் வாசனையும் மரங்களில் இருந்து எழுந்த நீராவியும் இருந்தன. யானைக்கொட்டிலில் ஒரு யானை சின்னம் விளித்தது. தொலைவில் எங்கோ ஏதோ ஆலயத்தில் மணி அதிர்ந்துகொண்டிருந்தது. அரண்மனையின் கீழ்த்தளத்தில் ஒரு பூனை மியாவ் என மெல்லியகுரலில் அழைத்தது. கைக்குழந்தை அழும் ஒலிபோல அது கேட்டது.
அவள் திடுக்கிட்டதுபோல எழுந்தாள். தன் உடல் நடுங்கிக்கொண்டிருப்பதையும் கால்கள் தளர்ந்து தரை நழுவப்போவதுபோலிருப்பதையும் உணர்ந்தாள். சுவரைப்பற்றிக்கொண்டு சிலகணங்கள் நின்றாள். பின்னர் சீறி அழுதபடி இடைநாழியில் ஓடி அறைகளின் கதவுகள் தோளில் பட்டுத் தெறித்து சுவரில் மோதி ஒலிக்க விரைந்து உள்ளறைக்குச் சென்று தன் மைந்தனின் மணியறைக்கதவை வெறிபிடித்தவள் போல தட்டினாள். அவள் வாய் பொருளில்லாத ஏதோ ஒலிகளை எழுப்பிக்கொண்டிருந்தது.
கதவைத்திறந்து விதுரன் எட்டிப்பார்ப்பதற்குள் அவள் பாய்ந்து உள்ளே நுழைந்தாள். மஞ்சத்தில் அமர்ந்திருந்த சுருதை திகைத்து எழுந்து மார்பைப்பற்றியபடி சுவரோரமாகச் சென்று சாய்ந்து நின்றாள். கதவைப்பற்றியபடி விதுரன் நோக்கி நின்றான். மார்பில் ஓங்கி அறைந்து அலறியழுதபடி சிவை தரையில் அமர்ந்தாள்.