‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 65

பகுதி பதின்மூன்று : தனிப்புரவி

[ 1 ]

அஸ்தினபுரியின் அரண்மனை வளாகத்தின் வடக்குமூலையில் தனியாக இணைத்துக்கட்டப்பட்ட தன் சிறிய அரண்மனையின் உப்பரிகையில் அமர்ந்து அப்பால் யானைகள் நீராடச்செல்வதை சிவை நோக்கியிருந்தாள். அணிகளற்ற கரியயானைகள் தங்கள் கனத்த சங்கிலிகளை தங்கள் துதிக்கைகளில் சுருட்டி எடுத்துக்கொண்டு ஒன்றன்பின் ஒன்றாக தலையை ஆட்டியபடி மகிழ்வுடன் சென்றுகொண்டிருந்தன. பகல்வெம்மையைத் தாளாமல் அவை அள்ளிக்குவித்த செம்மண் அவற்றின் அகன்ற முதுகிலும் மத்தகத்திலும் பரவியிருந்தது. கைகளில் கோல்களுடன் பாகர்கள் ஆணைகளைப் பிறப்பித்தபடி அவற்றின் வெண்தந்தங்களைப்பற்றியபடி நடந்தனர்.

வடமேற்கு எல்லையில் கோட்டைமதிலை ஒட்டி யானைகளை நீராட்டுவதற்கென்று உருவாக்கப்பட்ட சிறிய ஏரியில் நீர் நன்றாகக் கீழிறங்கி ஓரங்களில் அரக்குநிறமான சேற்றுப்படுகை வெடித்துப்பரவியிருந்தது. முன்னரே நீருக்குள் இறங்கி நின்றிருந்த ஏழெட்டுயானைகள் துதிக்கையால் நீரை அள்ளி விலாவிலும் முதுகிலும் வெண்ணிற ஒளிச்சிதறல்களாக பாய்ச்சிக்கொண்டிருந்தன. நீருக்குள் மூழ்கியபடி துதிக்கையை மட்டும் வெளியே நீட்டிக்கொண்டு வந்த ஒரு யானை அவற்றின் அருகே வந்து எழுந்தபோது பிற யானைகள் திகைத்தவைபோல வழிவிட்டன. சேற்றின்மீது படுத்துப்புரண்டுகொண்டிருந்த இருகுட்டியானைகளில் ஒன்று எழுந்து துதிக்கையை நீட்டியபடி மூழ்கிவந்த இளம் யானையை நோக்கி ஆவலாகச் சென்றது. சேற்றில் கால்களைப் பரப்பி வைத்து முதுகைப்புரட்டிக்கொண்டிருந்த இன்னொரு யானை எழுந்து அமர்ந்து அதை நோக்கியது.

சாலையில் சென்ற யானைகள் சேற்றைக்கண்டதும் தயங்கிநிற்க முன்னால்சென்ற பிடியானை துதிக்கையால் சேற்றை மெல்லத்தொட்டு ஆராய்ந்தபின் கால்களை மெல்லத்தூக்கி வைத்து நடந்து நீரை நோக்கிச்சென்றது. நீந்தி வந்த இளம் யானை துதிக்கையை நீட்டியபடி அவற்றை நோக்கி வந்தது. பின்னால் சென்ற யானை பக்கவாட்டில் நகர்ந்து துதிக்கையை நீட்ட பாகன் அதை கோலால் மெல்லத் தட்டி முன்னால் செலுத்தினான். பாகர்களின் குரல்கள் மிகமெல்ல கேட்டன. பெரிய பிடியானையின் உறுமல் உலோக ஒலிபோலக் கேட்டது. அல்லது மேகங்களுக்குள் புதைந்து ஒலிக்கும் இடியோசைபோல.

சிவை பெருமூச்சுடன் நகரத்தெருக்களைப் பார்த்தாள். அவள் விதுரனைக் கருவுற்றிருக்கும்போது அந்த மாளிகை கட்டப்பட்டு அவள் அங்கே குடிவந்தாள். அவளுக்குரிய சேடிகளும் காவலர்களும் உடன் வந்தனர். அன்று அது அவளை உவகையால் நிலையழியச்செய்வதாக இருந்தது. அவளுக்குரிய அரண்மனை. அவள் ஏவலுக்குச் சேடிப்பெண்கள். தன் அணுக்கச்சேடியாக கிருபைதான் வேண்டும் என்று சொல்லியிருந்தாள். வலக்காலெடுத்து அரண்மனைக்குள் நுழைந்தபோது அவளுடன் கிருபை தாலம் ஏந்தி உள்ளே வந்தாள். விரிந்த அரண்மனைக்கூடத்தில் நின்று அண்ணாந்து பார்த்தபின் “மிகப்பெரியது இல்லையா?” என்று சிவை கேட்டாள். “ஆம் அரசி” என்று கிருபை பதில் சொன்னாள். மீண்டும் நோக்கிவிட்டு “ஆனால் மற்ற இரு அரண்மனைக்கூடங்களும் இதைவிடப் பெரியவை” என்றாள் சிவை. கிருபை “ஆம் அரசி” என்றாள்.

அந்தப்பணிவை அப்போதுதான் சிவை கவனித்தாள். ஒருகணம் அதை மறுக்க நாவெழுந்தாலும் அடக்கிக்கொண்டு “நீ அனைத்துப்பொருட்களையும் சீர்ப்படுத்தி வை. என் படுக்கையறையின் அருகே உள்ள சிற்றறையில் நீ தங்கிக்கொள்” என ஆணையிட்டாள். கிருபை தலைவணங்கி “ஆணை” என்றாள். அவளுக்கு கிருபையின் விழிகளைப்பார்க்கவேண்டும் போலத் தோன்றியது. அங்கே நீராழத்துக்குள் கிடக்கும் ஒளிவிடும் வாள்போல ஓர் ஏளனம் கிடக்குமா என்ன? அந்த ஐயத்தாலேயே அவளால் அக்கண்களைப் பார்க்கும் துணிவைக் கொள்ளமுடியவில்லை.

அவள் வாழ்க்கையின் ஒளிமிக்க நாட்கள் அவை. அவள் வயிற்றில் ஞானவடிவான கரு வளர்கிறதென்றனர் நிமித்திகர். ஒவ்வொருநாளும் அவள் சேடிகள் சூழ மையகோட்டம் சென்று சத்யவதியை சந்தித்தாள். அவள் விரும்பியவை அனைத்தும் கிடைத்தன. எந்நேரமும் மருத்துவச்சிகள் நால்வர் உடனிருந்தனர். தன்னுள் வளரும் குழந்தையை கண்ணுக்குள் பல்லாயிரம் வடிவங்களில் அவள் மாறிமாறிப்பார்த்துக்கொண்டிருந்தாள். பலநூறு வாழ்க்கைகளை அவனுக்களித்துக்கொண்டிருந்தாள். ஒரு பகற்கனவிலிருந்து இன்னொன்றுக்குள் நுழைவதையே வாழ்க்கையாக அறிந்தாள்.

ஒருநாள் இரவின் குளிர்ந்த இருளுக்குள் விழித்துக்கொண்டபோது அவள் கண்ட கனவை நினைவுகூர்ந்து வியர்வை வழிந்த உடல்குளிர்ந்து சிலிர்க்க பெருமூச்சுவிட்டாள். அதில் அம்பிகையும் அம்பாலிகையும் பெற்ற இரு குழந்தைகளும் இறந்தே பிறந்தன. சத்யவதி அவள் பெற்ற அழகிய மகவை காணவந்தாள். கையில் ஒரு சிறிய மணிமுடி இருந்தது. அதை அவள் குழந்தையின் புன்தலையில் சூட்டினாள். அரண்மனைச்சேடியர் குரவையிட்டனர். சூதர்கள் மங்கலப்பண் இசைக்க வெளியே நகர்மக்களின் வாழ்த்தொலிகள் எழுந்தன.

பெருமூச்சுடன் அவள் கண்களை மீண்டும் மூடிக்கொண்டு உள்ளே சுழித்துப்பறந்த செங்குருதியின் ஒளியை நோக்கிக்கொண்டிருந்தாள். மீண்டும் அரைத்துயிலில் ஆழ்ந்தபோது இருளில் ஒளிவிடும் வாள்களுடன் மூவர் வருவதைக்கண்டாள். அம்பிகை முன்னால் வர பின்னால் அம்பாலிகை. இருவர் விழிகளும் நீர் நிறைந்து குரோதத்தால் வெறித்திருந்தன. அவள் குழந்தை சந்தனத் தொட்டிலில் கைகளை ஆட்டியபடி புன்னகைசெய்துகொண்டிருந்தது.

பின்னால் வந்த சேடி இந்தக்குழந்தைதான் என்பதுபோல சுட்டிக்காட்டினாள். அம்பிகையும் அம்பாலிகையும் வாள்களைத் தூக்கி குழந்தையை வெட்டினார்கள். வாளின் ஒளிமின்னலை அவள் கண்டாள். ஆனால் அவளால் அசையவோ ஒலியெழுப்பவோ முடியவில்லை. அவள் உடல் குளிர்ந்த பாறையாலானதுபோல உள்ளத்தை அறியாததாக இருந்தது. அவள் கண்முன் குழந்தை துண்டுகளாக வெட்டுப்பட்டது. குருதி வழிய அது கைகால்களை ஆட்டிக்கொண்டிருந்தது. மீண்டும் எழுந்தமர்ந்து மூச்சிரைத்தபடி நெஞ்சை அள்ளிப்பற்றிக்கொண்டாள். விடாய் நெஞ்சையும் தொண்டையையும் உடலனைத்தையும் எரியச்செய்தது.

அவளுடைய குரல் கேட்டு கிருபை கைவிளக்குடன் சிறுவாயிலைத் திறந்து உள்ளே வந்தாள். அவள் கண்களைக் கண்டதும் சிவை அச்சத்துடன் நினைவுகூர்ந்தாள், அம்பிகை அம்பாலிகைக்குப்பின்னால் நின்றிருந்த அந்தச்சேடி கிருபைதான். “அரசி, என்ன ஆயிற்று?” என்றாள் கிருபை. “நீர்… நீர் வேண்டும்” என்று சிவை சொன்னாள். “இதோ” என கிருபை நீர்க்குடுவையை எடுக்க “நீ வெளியே போ… சரபையை வரச்சொல்…” என்று மூச்சடைக்க சிவை கூவினாள். “அரசி…” என கிருபை ஏதோ சொல்லவர “போ… போகச்சொன்னேன்” என்று சிவை கூச்சலிட்டாள்.

ஓவியம்: ஷண்முகவேல் [பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]
ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]

விதுரன் பிறப்பதற்குள்ளாகவே கிருபையை சிவை திரும்பவும் மடைப்பள்ளிக்கே அனுப்பிவிட்டாள். அவளை திரும்பச்செல்லும்படி ஆணையிட்ட அன்று அவளுக்குள் நிலையின்மையும் இனிய உவகையும் கலந்த உணர்வே இருந்தது. கிருபை வந்து தன் அறைவாயிலில் கண்ணீருடன் நிற்பாள் என்றும் தன்னை அரண்மனையிலேயே வைத்துக்கொள்ளும்படி மன்றாடுவாள் என்றும் பகற்கனவாக விரித்துக்கொண்டாள். “நீ என் குழந்தையை வெறுக்கிறாய்…” என்று அவளிடம் சிவை சொன்னாள். “உன் இடம் இந்த அரண்மனை அல்ல. நீ மடைப்பள்ளியில் அனலில் வேகவேண்டும். அதுதான் உனக்கான வாழ்க்கை.”

கிருபை வந்து அவள் காலில் விழுந்து பாதங்களில் கண்ணீர்த்துளிகள் வெம்மையுடன் உதிர மன்றாடினாள். “அரசி, என்னை மீண்டும் அங்கே அனுப்பாதீர்கள்… நான் தங்கள் அடிமை. தங்கள் கருணையில் வாழ்பவள்.” அப்போது அவளும் அகம் உருகிக் கண்ணீர் விட்டாள். குனிந்து கிருபையை அள்ளி தன்னுடன் சேர்த்துக்கொண்டு “நீ எப்படி என் குழந்தையை வெறுக்கலாம்? நீயும் நானும் சேர்ந்து எவ்வளவுமுறை நீர்விளையாடினோம்? எவ்வளவுமுறை அடிவாங்கினோம்?” என்றாள். கிருபை கண்ணீருடன் கைகூப்பினாள். “நீ செய்தவற்றை எல்லாம் நான் பொறுக்கிறேன். நீ என்னுடன் இரு” என அவள் ஆணையிட்டாள்.

ஆனால் கிருபை அமைதியாக தன் மான்தோல் மூட்டையுடன் மடைப்பள்ளிக்கே சென்றுவிட்டாள் என்று சேடியர் சொன்னார்கள். கடும்சினத்துடன் மூச்சிரைக்க எழுந்து சாளரத்தைப்பற்றிக்கொண்ட சிவை அவளை அப்படி அனுப்பியது பிழை என எண்ணிக்கொண்டாள். அவளை குதிரைலாயத்துக்கு அனுப்பியிருக்கவேண்டும். அல்லது ஐந்து சவுக்கடித்தண்டனையை அளித்திருக்கவேண்டும். அவள் கதறி அழுவதை உப்பரிகைமேலிருந்து பார்த்திருக்கவேண்டும். அவ்வெண்ணம் எழுந்ததுமே எப்போது அத்தனை கீழ்மை கொண்டோம் என அவளே எண்ணிக்கொண்டாள். உடனே எழுந்த தன்னிரக்கத்தால் மனம் கரைந்து கண்ணீர்விட்டு அழத்தொடங்கினாள்.

அப்போதெல்லாம் அவள் ஒவ்வொருநாளும் அழுதுகொண்டிருந்தாள். வயிறு கனத்துவரும்தோறும் அவளுடைய தனிமையும் தன்னிரக்கமும் பெருகிப் பெருகி வந்தன. அவள் குழந்தைப்பேற்றுக்குப்பின் இறந்துவிடுவாளென்பதில் ஐயமே இருக்கவில்லை. அவர்களுக்குத்தேவை என் குழந்தை. வியாசனின் மைந்தன், விசித்திரவீரியனின் அறப்புதல்வன், எதிர்காலத்து அறிஞன். அவனைப்பெற்றதும் பருப்பை எடுத்துவிட்டு தோலை வீசுவதுபோல அவளை வீசிவிடுவார்கள். எவருமே காணாமல் தெற்கே கோட்டைக்கு அப்பாலிருக்கும் சூதர்களின் சிறிய மயானத்தில் அவள் உடலை எரிப்பார்கள். அவளை அனைவரும் அக்கணமே மறந்துவிடுவார்கள். அவள்குழந்தையிடம்கூட அவளைப்பற்றிச் சொல்லமாட்டார்கள். அவள்பெயர் கூட வரலாற்றில் எஞ்சாது. ஒரு சூதப்பெண், அவ்வளவுதான். வழிவழியாக சூதர்பாடல்களிலும் காவியங்களிலும் அவள் மைந்தன் இருப்பான், அவளிருக்கமாட்டாள். ஒரு எளிய சூதப்பெண். பெயரற்றவள்.

அந்த எல்லையை அடைந்ததும் அவளை உடைத்தபடி அழுகை எழுந்துவரும். உடல் உலுக்க, முலைகள் நனைய அவள் அழுதுகொண்டிருப்பாள். முதியசேடி அவள் அருகே நின்று ஐயத்துடன் பார்த்துக்கொண்டிருப்பாள். அவர்களனைவருமே சூதப்பெண்கள். அவளை அரசியாக நடத்துவதா என்பதில் அவர்களுக்கு ஐயங்கள் இருந்தன. அவர்களின் அனைத்து அரசமரியாதைகளும் வெறும் நடிப்பாக மாறின. அதை ஒவ்வொரு சொல்லிலும் அசைவிலும் சிவை உணர்ந்துகொண்டிருந்தாள். அது அவளை மேலும் மேலும் சினம்கொண்டவளாக, வசைபாடுபவளாக ஆக்கியது. அதன்மூலம் அவர்கள் அவளை மேலும் மேலும் வெறுத்தார்கள்.

“என்ன பார்க்கிறாய்? எங்கே என் கஷாயம்?” என்று அழுகையை நிறுத்தி கண்ணீரைத்துடைத்தபடி சிவை கூவினாள். “இதோ அரசி” என்றாள் முதியசேடி. “அதைச்செய்யாமல் இங்கே நின்று என்ன பார்க்கிறாய்? பிணமே, உன்னை நூறு கசையடிக்கு அனுப்பிவிடுவேன். போ. உடனே கஷாயத்துடன் வரவில்லை என்றால் நீ இன்றே அழிந்தாய்” என சிவை கூவினாள். முதியசேடி “மன்னிக்கவேண்டும் அரசி” என தலைவணங்கிவிட்டு விலகிச்சென்றாள். அரைநாழிகை முன்புதான் அவள் கஷாயம் அருந்தியிருந்தாள். செல்லும்போது முதியசேடி அதைச் சொல்லி தன்னை மௌனமாக சபிப்பாள் என சிவை அறிந்திருந்தாள். அவ்வெண்ணம் மேலும் சினம் கொள்ளச்செய்தது.

அம்பிகையின் குழந்தை பிறந்த செய்தி வந்ததும் அவள் முதலில் அடைந்தது திகில்தான். “விழிகளே இல்லையா?” என்று கேட்டாள். “ஆம் அரசி” என்றாள் சேடி. “விழிகள் இல்லை என்றால்?” என்று மீண்டும் கேட்டாள். “இரு சிவந்த சதைக்குழிகள் மட்டும்தான் அரசி.” அவளால் அதை கற்பனையில் விரிக்கமுடியவில்லை. ஆனால் அன்றிரவு கனவில் அதைக் கண்டாள். அவளுக்குப்பிறந்த குழந்தையை வயற்றாட்டி எடுத்து நீட்டி “ஆண்குழந்தை அரசி” என்றாள். அவள் பார்த்தபோது அக்குழந்தையின் கண்கள் இருந்த இடத்தில் இரு பெரிய புண்கள் சீழும்குருதியும் வழியவிட்டுக் கொண்டிருந்தன.

அலறியபடி விழித்துக்கொண்டு எழுந்து ஓடப்போனவளை சேடியர் இருவர் பற்றிக்கொண்டார்கள். அவள் அவர்களை உதறி கைகளை வீசி பெருங்குரலில் அழுதுகொண்டிருந்தாள். “என் குழந்தையின் கண்களைத் தின்றுவிட்டார்கள்!” என்று கூவினாள். தன் வயிற்றில் கையால் ஓங்கி அறைந்தாள். அவர்கள் அந்தக் கைகளைப்பற்றிக்கொண்டபோது அவை எவ்வளவு ஆற்றல்கொண்டவை என்று திகைத்தனர். அவள் உடல் விரைத்து இறுகி அதிர்ந்தது. மயங்கிச் சரிந்தவளை அகிபீனா புகைகொடுத்து அரைமயக்கநிலையிலேயே நாலைந்துநாள் வைத்திருந்தனர்.

அம்பிகையின் குழந்தை விழியிழந்து பிறந்தது அரண்மனையின் சமநிலையையே அழித்தது. அம்பிகை வெறிகொண்டவள் போல கைகளை முட்டி சுருட்டி ஆட்டியபடி கூவிக்கொண்டிருந்தாள். இளையவள் தன் குழந்தை விழியில்லாமல் பிறப்பதற்காக நாகசூதர்களை அழைத்துவந்து தீச்செய்கை செய்துவிட்டாள் என்றாள். “அவளுக்குப்பிறக்கும் குழந்தை அரசாள விடமாட்டேன்…அதைநான் கொல்வேன்…” என்று கூவினாள். குழந்தையைப் பார்க்கவந்த சத்யவதியிடம் “என் குழந்தையை குருடாக்கியவள் அவள். அவள் குருதியுடன் வா. அதன் பின் என் குழந்தையைத் தொடு…போ” என்று கூவியபடி குழந்தையை மார்போடு அணைத்து இறுக்கிக்கொண்டாள்.

நாட்கணக்கில் அம்பிகையின் மனக்கொந்தளிப்பு நீடித்தது. அவள் குழந்தையை கைகளால் தள்ளி விலக்கி வெறுப்புடன் “இது குழந்தை அல்ல, இது பேய்… பாதாளநாகத்தின் மனிதவடிவம்… இது இருட்டின் குழந்தை” என்று கூவினாள். இருமுறை குழந்தையைத் தூக்கி மரத்தரை ஓசையெழுப்ப வீசினாள். அதன்பின் சற்று நேரம் கழித்து அலறியபடி அதை எடுத்து மார்போடணைத்துக்கொண்டு “என் குழந்தை… என் குழந்தை… என் தெய்வம்” என்று கூச்சலிட்டு கதறியழுதாள். இரவில் குழந்தையை அள்ளி மார்போடணைத்துக்கொண்டு அரண்மனையில் இருந்து கிளம்பிச்சென்றாள். “நான் காட்டுக்குச் செல்கிறேன். இங்கே என் குழந்தையைக் கொன்றுவிடுவார்கள்” என்று அழுதாள்.

அவளைச்சூழ்ந்து மருத்துவர்களும் சேடிகளும் எப்போதுமிருந்தனர். “தொடர்ந்து முலைப்பால் கொடுக்கட்டும் பேரரசி. அதுவே அவர்களை நிலைகொள்ளச் செய்யும்” என்றார் முதுமருத்துவரான அனாரண்யர். நாள் செல்லச்செல்ல அவள் மெல்ல அடங்கினாள். குழந்தையை மார்போடணைத்துக்கொண்டு நாள்முழுக்க கண்ணீருடன் அமர்ந்திருந்தாள். அதை எவரும் தீண்ட அவள் ஒப்பவில்லை. பின்னர் அதைத்தவிர வேறு உலகமே இல்லாதவளானாள்.

அம்பிகையின் குழந்தை விழியில்லாமல் பிறந்தது அம்பாலிகையை அச்சம்கொள்ளச்செய்தது. அவள் பால்போல வெளிறிவிட்டாள் என்றனர் சேடிகள். அவள் குருதியெல்லாம் வற்றிப்போனதுபோலத் தோன்றியது. அவள் ஆடியை நோக்கியபடி “என் குருதியை அவள் குடிக்கிறாள்… அவளுடைய தீவினைஞர் என் குருதியைக் குடிக்கிறார்கள்” என்று கூவினாள். கண்ணீருடன் கைகளை விரித்து “தெய்வங்களே என்னைக் காப்பாற்றுங்கள்… என் குழந்தையைக் கொல்கிறார்கள்!” என்று அலறினாள்.

சேடியரும் மருத்துவச்சிகளும் அம்பாலிகையைச் சூழ்ந்து எந்நேரமும் இருந்தனர். தன் வயிற்றைத்தொட்டு “என் குழந்தை இறந்துவிட்டது… அசைவே இல்லை… ஆம், அவள் என்குழந்தையைக் கொன்றுவிட்டாள்” என்று கூவினாள். நெடுநேரம் அவள் தன் வயிற்றை மாறி மாறித் தொட்டுப்பார்ப்பாள். அசைவு நிகழும்போது மேலும் அச்சம் கொண்டு “என் குழந்தை உள்ளே மூச்சுத்திணறுகிறது… அது வெளியே வரத்துடிக்கிறது. என் வயிற்றைக்கிழித்து அதைவெளியே எடுங்கள்” என அழுதாள்.

அம்பாலிகையின் குழந்தை அசைவில்லாத வெண்பாவையாகப் பிறந்த செய்தியை சேடி வந்து சிவையிடம் சொன்னாள். அவள் உள்ளூர அச்செய்தியை எதிர்பார்த்துக்கொண்டிருந்தாள். ஆம் அவ்வாறுதான் நிகழும். மூன்று குழந்தைகளுமே இயல்பாகப் பிறந்தவை அல்ல. அவை பிறப்பதை தெய்வங்கள் விரும்புவதில்லை. தன் குழந்தை வாய்பேசாததாகவே இருக்கமுடியும் என்று அவள் கற்பனைசெய்துகொண்டாள். ஏன் அப்படித்தோன்றியது என அவள் பலமுறை பின்னர் எண்ணிப்பார்த்ததுண்டு. ஆனால் அது ஊமைக்குழந்தை என்பதை நாள்செல்லச்செல்ல உறுதிசெய்துகொண்டாள்.

வாளேந்திய ஷத்ரியரின் நகரில் வாயற்ற சூதன். அவன் வெறும் ஏவலன். ஏவலன்கூட அல்ல. கற்றவை எதையும் சொல்லமுடியாதவன். ஞானியென்றாலும் இளிவரலுக்குரிய பேதை. அவனை சேவகர்களும் இழித்துப்பேசுகிறார்கள். அவனை அடிக்கிறார்கள். அவன் அனைவருக்கும் ஏவல்செய்கிறான். குதிரைக்கொட்டிலில் சாணி உருட்டுகிறான். குதிரைத்தோலை நீவுகிறான். சவுக்குகள் அவன் முதுகில் பறந்துபதிகின்றன. விதவிதமாகக் கற்பனை செய்துகொண்டு அவள் கண்ணீர் விட்டாள். ஒருநாள் தன் ஆடைகளை எடுத்துக்கொண்டு கிளம்பிச்சென்றாள். அவளை இடைநாழியிலேயே மடக்கிப்பிடித்து கொண்டுவந்தார்கள். “என்னை விடுங்கள். என் குழந்தையை அடிமையாக்கமாட்டேன்” என்று அவள் கூவினாள். “அவன் ஊமை அல்ல… அவன் ஞானி!” என்று அலறி அழுதாள்.

கரிய சிறுகுழந்தையை வயற்றாட்டி காட்டியபோது அதற்கு என்ன குறை என்றுதான் அவள் எண்ணினாள். “எப்படி இருக்கிறது?” என்று கேட்டாள். “அழகிய குழந்தை. நலமாக இருக்கிறது” என்றாள் வயற்றாட்டி. “அழுகிறதா?” என்றாள் சிவை. “ஆம் அரசி, அழுகை இருக்கிறது… நலமான குழந்தை.” அவளால் நம்பமுடியவில்லை. அவளருகே மான்தோல்மெத்தையில் அதைப் படுக்கச்செய்தபோது குனிந்து அதன் மாவுபடிந்த மெல்லிய உடலை, மொட்டுக்குள் சுருண்டிருக்கும் அல்லிவட்டம் போன்ற கைகளை, காற்றை உதைத்த மெல்லிய கால்களை தொட்டுத் தொட்டுப்பார்த்தாள். ஆம், முழுமையான குழந்தை. நலமான குழந்தை.

அதன்பின் அந்தப்பெருங்கனவு எழுந்துவந்தது. அஸ்தினபுரியின் இளவரசனா இவன்? இந்த மாநகரை ஆளப்போகிறானா? ஏன் முடியாது? அவனை ரிஷிகள் முன்னிலையில் வைதிகமுறைப்படி ஹிரண்யகர்ப்பம் செய்து ஷத்ரியனாக்கினால் போதும். அவன் அஸ்தினபுரிக்கு தலைமைகொள்ளமுடியும். மணிமுடியும் செங்கோலும் சத்ரமும் சாமரமுமாக அவன் அரியணை அமரமுடியும். யார் இவன்? அஸ்தினபுரியின் அரசனா? பாரதவர்ஷத்தை ஆளப்போகும் சக்ரவர்த்தியா? அவன் மெல்லிய பாதங்களை கண்ணில் ஒற்றியபடி சிவை கண்ணீர்விட்டாள்.

சத்யவதி ஈற்றறைக்கு வந்து குழந்தையைப் பார்த்தாள். அவள் முகம் மலர்ந்தது. குனிந்து குழந்தையை அவள் எடுத்தபோது அவள் கழுத்திலாடிய முத்தாரம் குழந்தையின் சுருட்டப்பட்ட சிறிய கைகளுக்குள் சிக்கிக்கொண்டது. மலர்ந்த முகத்தில் அழகிய சிறுபற்கள் விரிய சத்யவதி உரக்கச்சிரித்தாள். “நகைவேண்டுமா உனக்கு? அஸ்தினபுரியின் கருவூலத்தையே எடுத்துக்கொள்” என்று சொல்லி அவன் சிறிய மெல்லிய வயிற்றில் முத்தமிட்டாள். அதைக்கேட்டு சிவை மனம் மலர்ந்து கண்ணீர்விட்டாள். “நீ எனக்கு ஒரு செல்வத்தை அளித்திருக்கிறாய் சிவை… உனக்கு நான் தலைவணங்கி நன்றி சொல்கிறேன்” என்று சத்யவதி சொன்னபோது அவள் முகம் புதைத்து அழத்தொடங்கினாள்.

ஏழாம்நாள் முதல் காலையிலேயே குழந்தையை சத்யவதியின் அரண்மனைக்குக் கொண்டுசென்றார்கள். பால்குடிப்பதற்காக மட்டுமே அவன் சிவையிடம் வந்தான். பின்னர் பால்கொடுக்கவும் அங்கேயே சேடிகளை அமைத்துக்கொண்டனர். அவனை அவள் இரவில் மட்டுமே பார்க்கமுடியும் என்று ஆகியது. தூக்கத்தில் இருகைகளையும் சுருட்டி வாய்மேல் வைத்து சுருண்டிருக்கும் குழந்தையை பட்டுத்துணிச்சுருளில் வைத்து அவளருகே கொண்டுவந்து வைப்பார்கள்.

அவள் அவன் பாதங்களை வருடியபடி சிறிய செவிகளையும் கிள்ளிவைத்ததுபோன்ற மூக்கையும் மூடிய இமைகளையும் பார்ப்பாள். கைகளை விலக்கி உதடுகள் கூம்புவதை பார்த்துச் சிரிப்பாள். ஆம், அவன் சக்ரவர்த்தி. அவன் அவளுடைய கைகளுக்குள் அடங்குபவன் அல்ல. அவள் எளியவள். ஆனால் சக்ரவர்த்தியைப் பெற்ற அன்னை. ஆம், அவள் பெயரை இனி எவரும் மறக்கமுடியாது. சிவேயன் என்ற பெயர் என்றும் அவனுக்கிருக்கும்.

அவனுக்கு விதுரன் என்று பெயர்சூட்டும்படி கானகத்திலிருந்து பீஷ்மர் செய்தியனுப்பியிருந்தார். நாமகரணச்சடங்கு நடந்தபோது சத்யவதி அவனை தன் முகத்தோடணைத்து “விதுரா விதுரா விதுரா” என்று மும்முறை அழைத்தாள். விதுரன் என்றால் திறன்கொண்டவன் என்று பொருள் என்றார் முதுநிமித்திகர். அவள் தனக்குள் விதுரன் விதுரன் என சொல்லிக்கொண்டே இருந்தாள். ஒரு சொல் அத்தனை தித்திக்கமுடியுமா என்று எண்ணிக்கொண்டாள். அச்சொல் இனிமேல் தன் ஆன்மாவின் பெயராக ஒலிக்கும் என உணர்ந்தாள்.

அவனுடைய பிறவிநூலை கணிகர் கணித்துச் சொன்னார்கள். அவனுக்குரிய திசை தெற்கு, அவனுடைய தேவன் யமன். அவனுடைய நிறம் நீலம். நிமித்திகர் அவன் அறவுலகை ஆளும் தருமனின் அருள்வடிவமாக மண்ணில் பிறந்தவன் என்றனர். “இந்த மண்ணில் இவனால் அறம் நிலைக்கட்டும்” என்று சொல்லி சத்யவதி அவன் பாதங்கள் இரண்டையும் தூக்கி தன் நெற்றியில் சூடிக்கொண்டாள்.

நான்குமாதம் கழித்து பீஷ்மர் காட்டிலிருந்து திரும்பிவந்தபின்னர்தான் சூரியதரிசனச் சடங்கு குறிக்கப்பட்டது. அதற்கான நாள்குறிக்கப்பட்ட பின்னர் ஒவ்வொரு கணமும் அவள் அகம் விரைவுகொண்டபடியே இருந்தது. ஆம், அந்த நாளில் அனைத்தும் முடிவாகிவிடும். உடற்குறை உள்ள முதலிரு குழந்தைகளும் அரியணை ஏறமுடியாதென்பது வெளிப்படை. சத்யவதி தன் குருதியை அன்றி பிறிதொரு குழந்தையை அரியணை ஏற்றமாட்டாள். அச்சடங்கே அதை அறிவிக்கத்தானா? மூவேதமறிந்த முதுவைதிகர்களும் நிமித்திகர்களும் அச்சடங்குக்கு வந்தாகவேண்டுமென அவள் ஏன் ஆணையிட்டாள்?

பின்னர் அவள் அச்சமும் பதற்றமும் கொண்டாள். அம்பிகையும் அம்பாலிகையும் இதை அறிந்திருப்பார்களா என்ன? அறியாமலிருக்கமாட்டார்கள். அவர்களின் சேடிகள் நுட்பமானவர்கள். மேலும் என்னதான் இருந்தாலும் அவர்கள் அரசகுலம். அதிகாரத்தின் சுவையறிந்தவர்கள். அது செல்லும் வழியும் அறிந்தவர்கள். அவர்கள் என்ன செய்யமுடியும்? அவர்களால் பேரரசியின் ஆணையை மீறமுடியுமா? பிதாமகர் பீஷ்மர் ஒருபோதும் பேரரசியை மீறிச்செல்லமாட்டார். பிதாமகரின் ஆணை இருக்கையில் நகரம் அவளை மீறிச்செல்லாது. ஆனால் அரசியர் மீறக்கூடும். எழுந்து கூச்சலிட்டு அழக்கூடும். எதிர்ப்பு தெரிவித்து குழந்தைகளுடன் வெளியேறக்கூடும்.

ஆனால் சத்யவதி முடிவெடுத்துவிட்டால் ஏதும் செய்யமுடியாது. சத்யவதி உறுதியான முடிவை எடுக்கக்கூடியவள். அவளுடைய குருதி ஓடும் குழந்தைகளில் விதுரன் மட்டுமே தகுதியானவன். அவளுக்கு வேறுவழியே இல்லை. ஆனால் வைதிகர் எதிர்த்தால்? மூத்தகுடிகள் எதிர்ப்பு தெரிவித்தால்? அவர்கள் குலமுறை நோக்குபவர்கள். மரபை மீறாதவர்கள். ஆனால் அரசவல்லமை எப்போதும் வென்று செல்வது. ஒவ்வொன்றுக்கும் வழி இருக்கும். அதுதான் மச்சகுலத்தவளான சத்யவதியை பேரரசியாக்கி தேவயானியின் மணிமுடியை சூடச்செய்தது.

வைதிகர்கள் என்ன சொல்வார்கள்? ஹிரண்யகர்ப்பம் செய்யவேண்டும். பொன்னாலான பசுவின் வயிற்றில் குழந்தை மீண்டும் பிறக்கவேண்டும். அந்தப்பொன் முழுக்க அவர்களுக்குக் கிடைக்கும். குலமூத்தார் என்ன சொல்லமுடியும்? தெய்வங்களை நிறைவுசெய்ய சில பூசைகள். விதுரன் விசித்திரவீரியனின் குருதி என்று காட்டும் சில சூதர்பாடல்கள். அவ்வளவுதான். மிக எளியதுதான். அதை சத்யவதி அறிந்திருப்பாள். முன்னரே திட்டமிட்டிருப்பாள்.

அவள் முந்தையநாள் இரவே விதுரன் அணியவேண்டிய அணிகளை எடுத்துவைத்துவிட்டாள். பின்னர் இரவெல்லாம் அதை மாற்றிக்கொண்டே இருந்தாள். எதைச்சேர்த்தாலும் நிறைவு வரவில்லை. சேடி “அரசி இத்தனை அணிகளை குழந்தை அணியமுடியாது” என்றாள். “ஏன், என் குழந்தை அணியமுடியாத அணி என ஒன்றுண்டா என்ன?”  என்றாள் சிவை. “அவன் அஸ்தினபுரியின் அரசன். அதை மறக்காதே!” காலையில் குழந்தையை சேடிகள் அணிசெய்தபோது அருகே நின்று அவள் ஆணைகளை விடுத்துக்கொண்டே இருந்தாள்.

அதிகாலையில் குழந்தையுடன் அவள் அரண்மனையின் தென்மேற்கே இருந்த பித்ருமண்டபத்திற்குச் சென்றபோது கால்கள் மண்ணில்படவில்லை. பாதங்கள் இறகுகளாலானவை போல தரையை வருடிச்சென்றன. அத்தனை அணிகளையும் பட்டாடைகளையும் அவளும் எப்போதும் அணிந்திருக்கவில்லை. சேடிகள் அவளுக்கு மங்கலத்தாலமும் தாம்பூலத்தாலமுமாக அகம்படி செய்ததும் இல்லை. அவளது வருகை அறிவிக்கப்பட்டதில்லை. அவள் வந்தபோது சூதர்களின் இசைக்கருவிகள் முழங்கியதில்லை. வாழ்த்தொலிகள் வரவேற்றதில்லை.

பித்ருமண்டபத்தில் அஸ்தினபுரியின் பேரமைச்சர் யக்ஞசேனர் தலைமையில் சடங்குகள் ஒருங்கிக்கொண்டிருந்தன. தளகர்த்தர்களாகிய உக்ரசேனரும், சத்ருஞ்சயரும், வியாஹ்ரதத்தரும் அமைச்சர்களான லிகிதரும், சோமரும், தீர்க்கவ்யோமரும், விப்ரரும், வைராடரும் அங்கே இருந்தனர். இருள்விலகாத காலையில் தூண்களில் மாட்டப்பட்ட நெய்விளக்குகள் படபடத்துக்கொண்டிருந்தன அவ்வொளியில் வெண்கலக்குமிழ்களும் பாத்திரங்களும் கண்கள் கொண்டிருந்தன. பலகைத்தரையில் ஐந்துவண்ணங்களில் கோலமிடப்பட்ட களத்தின்மேல் வைக்கப்பட்டிருந்த மலர்களும் நெய்யும் கலந்து எழுப்பிய வாசனை அதிகாலையின் குளிர்ந்த காற்றில் கலந்து வந்தது.

சிவை கையில் விதுரனுடன் மண்டபத்தருகே வந்தாள். சத்யவதியும் அம்பிகையும் அம்பாலிகையும் குழந்தைகளுடன் மேலே நின்றனர். துணைவைதிகர் களத்தில் பட்டுப்பாய்களை விரித்தனர். முதுவைதிகர் “பேரரசியும் அரசிகளும் குழந்தைகளுடன் அமரலாம்” என்றார். அம்பிகையும் அம்பாலிகையும் குழந்தைகளுடன் அமர்ந்துகொண்டனர். சத்யவதி சிவையிடம் திரும்பி மண்டபத்துக்கு வெளியே விரிக்கப்பட்ட பட்டுப்பாயைக் காட்டி அங்கே அமரும்படி மெல்லியகுரலில் சொன்னபின் மண்டபத்தின் மையத்திலிடப்பட்ட தன் இருக்கையில் சென்று அமர்ந்துகொண்டாள். திகைத்தவளாக சிவை நோக்கினாள். துணைவைதிகர் பணிவுடன் “சூத அரசி, தங்கள் இருக்கை” என மீண்டும் சுட்டிக்காட்டினார்.

யானைகள் நீராடிமுடித்து கரையேறின. நீரின் குளுமை அவற்றை உவகையிலாழ்த்தியது என்பது அவற்றின் உடலசைவுகளிலிருந்து தெரிந்தது. அவள் சாளரப்பலகையைப் பற்றியபடி பார்த்துக்கொண்டே இருந்தாள். யானைகளில் இருக்கும் அழியாத குழந்தைத்தன்மை. முன்பொருமுறை மதமேறிய யானை ஒன்று துதிக்கையைத் தூக்கி சின்னம்விளித்தபடி அந்தச்சாலைவழியாக ஓடியது. அதைத்தொடர்ந்து புரவிகளில் வீரர்கள் சென்றனர். யானைப்பாகன்கள் துரட்டிகளும் குத்துக்கோல்களுமாக பின்னால் ஓடினர். அப்போதுகூட அது அச்சமுற்ற குழந்தையென்றே தோன்றியது.

இன்னும் சற்று நேரத்தில் புரவிப்படை ஒன்று மேற்குவாயில் காவலை மாற்றிக்கொள்வதற்காகச் செல்லும். அதன்பின் இரவில்தான் அடுத்த காலாள்படை காவல்மாற்றம். அந்தச்சாளரத்தின் வழியாகத் தெரியும் காட்சிகள் மாறுவதேயில்லை. இருபதாண்டுகாலமாக அவள் ஒவ்வொருநாளும் அங்குதான் அமர்ந்திருக்கிறாள். காலையிலிருந்து மாலைவரை. அவள் வாழ்க்கையில் மாற்றமே இல்லை. காலையிலும் மாலையிலும் அரண்மனையில் நிகழும் இரு ஆலயபூசனைகளுக்கு அவள் சென்றாகவேண்டும். அதன்பின் அவளுக்குக் கடமைகளே இல்லை. அவளுடைய எண்ணங்கள் அன்றி துணையும் இல்லை.

ஒரு சிறுயானை சங்கிலியை புழுதியில் போட்டுவிட்டு ஓடியது. பாகன் அதை அதட்டினான். அது அவசியம் எடுத்துக்கொள்ளத்தான் வேண்டுமா என்று தயங்கியது. அவன் கோலைத் தூக்கியதும் வந்து சங்கிலியை துதிக்கை நுனியால் பலமுறை சுழற்றிப்பிடித்து எடுத்துக்கொண்டது. சங்கிலிகளைச் சுமந்தபடி முதிய யானைகள் மெதுவாகக் காலடி எடுத்துவைத்தன. அந்த ஒலியை சற்று செவிகூர்ந்தால் கேட்கமுடியுமென்று சிவை நினைத்தாள்.

முந்தைய கட்டுரைபொருள் அமராச் சொல்
அடுத்த கட்டுரைபஞ்சப்பாட்டு