சல்லாபமும் இலக்கியமும்

வெ. சுரேஷ்

தி.ஜானகிராமன் விக்கி

அன்புள்ள ஜெ ,

உங்கள் பகற்கனவின் பாதையில் கட்டுரைக்கு ஜடாயு ஒருவரைத் தவிர வேறு எவரும் எதிர்வினை ஆற்றாதது வியப்பை அளித்தது. ஜடாயுவும் ஜானகிராமனை defend செய்த ஒரு கருத்துடன் நிறுத்திக்கொண்டுவிட்டார். நம் நண்பர்கள் இவ்வளவு எளிதாக ஜானகிராமனையும், வண்ணநிலவனையும் விட்டுக்கொடுத்துவிடுவார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை.வேறு யாராவது அந்தக் கட்டுரை குறித்து ஒரு நல்ல விவாதத்தை துவக்குவார்கள் என்று எதிர்பார்த்துக் காத்திருந்துவிட்டு,அப்படி எதுவும் இதுவரை வராததால் நான் முயன்று பார்க்கலாம் என்றுதான் இந்தக்கடிதம். (உண்மையில் அந்தக் கட்டுரை மிக நல்ல விவாதங்களைத் துவக்கியிருக்க வேண்டும்.)

ஒரு முதல் பார்வையில் அந்தக் கட்டுரையின் அடிநாதமும், நீங்கள் குறிப்பிட்டிருக்கும் எழுத்தாளர்களும் அவர்களின் படைப்புகளின் தேர்வுகளும் சரியாகவே தோன்றுகின்றன.ஆனால் ஒரு மறுவாசிப்பில் நீங்கள் ஜானகிராமன் மற்றும் வண்ணநிலவனின் படைப்புகளின் மாதிரிகளின் தேர்வை உங்கள் வாதத்திற்கு ஏற்ப தெரிவு செய்து கொண்டுவிட்டீர்களோ என்று தோன்றுகிறது.(சிலரை உயர்த்தி சிலரை தாழ்த்துவதற்கு ஏதுவாக)) உதாரணமாக,

உலகமெங்கும் உருவாகி வந்த புத்திலக்கியம் என்பது ஜனநாயக அரசியல்பிரக்ஞையையும், நவீன ஆன்மீகத்தேடலையும் சாரமாகக் கொண்டது. புத்துலகம் என்று அவை நினைத்த வரும்காலத்தின் அறவியலையும் அழகியலையும் தீர்மானிக்கும் அடித்தளங்கள் அவை.

இந்த அளவுகோலினைக் கொண்டு மட்டும் பார்த்தால் புதுமைப் பித்தனில் மட்டும் என்ன ஜனநாயக அரசியல் பிரக்ஞை உள்ளது என்பது என்பது எனக்குப் புரியவில்லை. புதுமைப்பித்தனைப் பற்றிய (ஓரளவுக்கு நியாயமான)முக்கியமான இடதுசாரி விமர்சனமே அவருக்கு சமூக அரசியல் பிரக்ஞை கிடையாது என்பதும் தனிமனிதவாத அராஜக வாத பார்வை மட்டும்தான் என்பதுதான். மேலும் அவரது தரிசனம் என்று சொல்லத்தக்க வகையில் ஒன்றை குறிப்பிட முடியுமா என்பதும் விவாதத்துக்குரியது, இந்த தரிசனம் என்பது மிகவும் காத்திரமாக வெளிப்படும் இலக்கிய வகையான நாவல் என்பதை அவர் எழுதியதே இல்லையே.(ஓர் முடிவுறாத நாவலைத் தவிர.) அதற்கான நீண்ட ஆயுளும் அவருக்கு இருக்கவில்லைதான். அப்படியிருக்கும் போது சிறுகதைகளை மட்டும் வைத்துக் கொண்டு பார்த்தால் ஜானகிராமன் நிச்சயமாக புதுமைப் பித்தனுக்கு நிகரான முன்னோடிப் படைப்பாளிதான் என்றே நான் கருதுகிறேன். இந்த jஜனநாயக அரசியல் பிரக்ஞை குறித்த நாவல்கள் எதுவுமே தமிழின் நவீனத்வர்கள் முயலவில்லை என்றே சொல்லவேண்டும் விதிவிலக்குகள் சுந்தரராமசாமி, ஜெயகாந்தன் மற்றும் (அதிக அளவில்) இந்திரா பார்த்தசாரதி. என்று நினைக்கிறேன். மற்றபடி அமைப்பு சார்ந்த இடது சாரிகளின் படைப்புகளிலேதான் இந்த அரசியல் பிரக்ஞை ஓரளவேனும் ( சற்றே குறைபட்ட ஒரு வடிவத்தில் ) வெளிப்பட்டது என்று நினைக்கிறேன்.

ஜானகிராமனையும் வண்ண நிலவனையும் நீங்கள்,
ஏன் மீண்டும் மீண்டும் அவர்கள் காதோரம் முடி இறங்கிய வட்டமுகமும் காந்தக்கண்களும் கொண்ட கட்டழகிகளைப்பற்றியே எழுதினார்கள்? ஏன் மனிதவாழ்க்கையின் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் நிகழும் ஒரு குறிப்பிட்ட உணர்ச்சி மட்டும் அவர்களுக்கு மொத்த வாழ்க்கையாக தெரிந்தது என்று கூறுவது, நியாயமல்ல என்றே நினைக்கிறேன்.

ஜானகிராமனின் எல்லா நாவல்களையும் வண்ண நிலவனின் அத்தனை சிறுகதைகளையும் இந்த வரிகளுக்குள் சுருக்கிவிட முடியுமா என்ன? நிச்சயமாக ஜானகிராமனின் எல்லா நாவல்களையும் படித்தவர்கள் இதை ஒப்புக் கொள்ளவே முடியாது. மோகமுள்ளின் சிறப்பை ஜடாயு சரியாகவே சொல்லியிருந்தார்.அம்மா வந்தாள் பற்றி அவர் எழுதியதற்கு நீங்கள் பதிலளிக்கவில்லை. மேலும் ஜானகிராமனின் நாவல்களில் ஏனோ செம்பருத்தியும் நளபாகமும் அவ்வளவாக விவாதிக்கப்படுவதில்லை. நிச்சயமாக மனித இருத்தல் குறித்த ஆழமான கேள்விகள் அந்த இரண்டு நாவல்களிலும் உண்டு. செம்பருத்தியின் சட்டநாதனின் moral Dilemma நிச்சயம் எளிமையான காதல்/காமம் சார்ந்ததல்ல . அதே போல் நளபாகத்தின் காமேச்வரனின் சிக்கல்களும். குறிப்பாக அவன் தன் குருவுடன் ஸ்ம்ருதிகள் குறித்து மேற்கொள்ளும் விவாதமும், ஜோசியர் முத்துசாமியின் சங்கரரின் மாயா வாதம் குறித்த விவாதமும் ஆழமானவை என்றே நான் நினைக்கிறேன். மலர்மஞ்சம் மேலோட்டமாக ஒரு காதல் கதை போல் தோன்றினாலும் அப்படியல்ல என்றே நான் நினைக்கிறேன். முக்கியமாக அதில் வரும் கோணவாய் நாயக்கரின் பாத்திரப் படைப்பு வாழ்க்கையின் ஆழமான பல கேள்விகளைக் கொண்டது.நாவலின் உச்ச கட்டத்தில் ஒரு குறியீடாக மாறி நிற்கும் தஞ்சை பெரிய கோவில் கோபுரம் குறித்த கதை மாந்தர்களின் பார்வைகளும் அது அவர்களில் உருவாக்கும் மனநிலையும் அற்புதமானவை.

அதேபோல புதுமைப் பித்தனின் மீது வைக்கப்பட்டிருக்கும் அனைத்து இடதுசாரி விமர்சனங்களும் அசோகமித்திரனுக்கும் நாகராஜனுக்கும் பொருந்தக் கூடியதுதான். அப்படியிருக்க அவர்கள் இடம் பெறும் ஒரு வரிசையில் வண்ண நிலவனை மட்டும் ஒதுக்கி விடுவது எனக்கு வியப்பளிக்கிறது.நிச்சயமாக இந்த வரிசையில் வண்ண நிலவுனுக்கு ஒரு இடம் உண்டு. அவரது கடல் புரத்தில் மற்றும் கம்பா நதி இரு படைப்புகளை மட்டுமே கொண்டு நீங்கள் இந்த முடிவுக்கு வர முடியாது. கம்பா நதி நீண்ட நாட்களுக்கு முன்னால் படித்ததாகையால் அது குறித்து என்னால் ஏதும் கூற முடியவில்லை. ஆனால் கடல் புரத்தில் நாவல் நிச்சயமாக ஆண் பெண் உறவினை மட்டும் குறித்த அற்பப் புனைவு என்று ஒதுக்க முடியாதது. நிச்சயமாக அதற்கு மேல் அதில் உள்ளது. உடனடியாகச் சொல்வதானால் தென் தமிழகத்தில் விசைப்படககுளின் வருகையும் பயன்பாடும் அதனை எதிர் கொள்ள முடியாத எளிய மீனவர்களின் வாழ்வை பாதிப்பது குறித்த ஒரு வலுவான சித்திரம்.அதில் உண்டு. பின் ரெயினீஸ் அய்யர் தெரு அதன் வகையிலேயே ஒரு முன்னோடிப் படைப்பு. சமீபத்தில் வந்திருக்கும் ( அதே வகையினை சார்ந்த) சுகுமாரனின் வெலிங்டன் நாவலைப் படித்து முடித்தவுடன் ரெயினீஸ் அய்யர் தெருவின் மேன்மை மேலும் துலங்கியது.

வண்ண நிலவனின் சிறுகதைகளையும் முற்றிலுமாக ஒதுக்கிவிட்டீர்கள். பல கதைகளைப் பட்டியலிட்டே விவாதம் செய்யலாம். நிச்சயமாக ஆண் பெண் உறவு குறித்த கதைகள் உண்டுதான். ஆனால் அவை மட்டுமே அல்ல.70களிலும் 80களிலும் தமிழகத்தில் நிலவி வந்த கடுமையான வேலையில்லாத் திண்டாட்டத்தையும் வறுமையையும், எதிர்கொள்ள வேண்டி வந்த கீழ் மத்யதர வர்க்க இளைஞர்களைக் கொண்ட அவர் படைப்புலகம் முக்கியமானது.என்றும் நவீனத்துவத்தின் வடிவ அமைதியையும் கச்சிதத்தையும் கொண்டவை என்றுமே நான் நினைக்கிறேன்.
நாளை யாராவது ஜெயமோகனின்,கன்னி நிலம்,அனல் காற்று, இரவு , காடு ஆகியவற்றை மட்டும் முன்வைத்து அவர் முதன்மையாக ஆண் பெண் காதல்/காமம் பற்றி மட்டுமே எழுதியவர் என்று சொன்னால் அது சரியாக இருக்குமா என்ன?

மேலும் நீங்கள் கொடுத்திருக்கும் உங்களது மற்றும் அடுத்தத் தலைமுறை எழுத்தாளர்களின் பெயர்களின் தேர்வும் என்னை வியப்பில் ஆழ்த்தியது. உங்கள் தலைமுறையில் முந்தைய தலைமுறையுடன் ஒப்பிடத் தக்கவர்கள் என்று நான் உங்கள் பெயரையும், யுவன் பெயரையும் மட்டுமே வைப்பேன். பெருமாள் முருகனுக்கு ஒரு முக்கிய இடமுண்டு. ஆனால் அது இனவரைவியல் எழுத்து என்ற அடிப்படையில் என்று நான் நினைக்கிறேன்.

அடுத்த தலைமுறையில் நீங்கள் தவற விட்ட முக்கியமான பெயர் சு.வேணுகோபாலுடயது . அவரது ரட்சண்யம் அபாயச் சங்கு,,கூந்தப்பனை,மற்றும் இப்போது வந்திருக்கும் ஆட்டம், பால்கனிகள் போன்றவை நீங்கள் கூறும் வகையின் குறிப்பிடத் தகுந்த படைப்புகள். மணல் கடிகையை மட்டும் வைத்து பார்த்தால் கூட எம். கோபாலக்ருஷ்ணன் பெயரும் அதில் கண்டிப்பாக இடம் பெறக் கூடியது. இவர்கள் இருவரையும் தாண்டி நீங்கள் கொடுத்திருக்கும் பெயர் வரிசை, ( முக்கியமாக வா. மு. கோமு? ) ஜாகிர் ராஜா நீங்கலாக எனக்கு அதிர்ச்சியையே அளித்தது.

என்னைப் பொறுத்தவரையில் நீங்கள் தமிழின் முதன்மையான படைப்பாளிகளில் ஒருவர் மட்டுமல்ல விமர்சகர்களிலும் ஒருவர்.அதனாலேயே நீங்கள் ஜானகிராமன் மற்றும் வண்ணநிலவன் படைப்புகளை (நிச்சயமாக ஜானகிராமனைப் பொறுத்தவரையிலேனும் எல்லா படைப்புகளையும் இல்லையென்றாலும்) அற்பப் புனைவு என்றும்,ஓரக்கண் பார்வையின் அற்பத்தனம் கொண்டது என்று சொல்வதும் too strong and Unfair என்று சொல்வேன்.

அன்புடன் சுரேஷ் கோவை.
[http:// sureeven.wordpress.com/][

தி. ஜானகிராமன்

அன்புள்ள சுரேஷ்

நான் நவீன எழுத்தாளர்கள் என்று கொடுத்திருக்கும் பட்டியல் இன்றைய புதிய தலைமுறையினர் மட்டுமே. ஜானகிராமனுக்கும் வண்ணநிலவனுக்கும் பின் எழுதிய அனைவரையும் அல்ல. இப்போது எழுதுபவர்கள் என்று தெளிவாகவே அதில் சொல்லப்பட்டிருக்கிறது.

இரண்டு, நான் அரசியல் சமூகப்பிரக்ஞை என்று சொல்வது ஏதேனும் அரசியல் நிலைபாட்டை எடுப்பதைப்பற்றி அல்ல. வாழ்க்கையின் அரசியல் சமூகவியல் உள்ளடக்கம் குறித்த பிரக்ஞையைத்தான். புதுமைப்பித்தனில் செயல்படும் அரசின்மைவாத நோக்கே அவரது அரசியல் பார்வைதான்.

இவ்விரு தளத்திலும் என் நோக்கை சற்றே பிழையாக புரிந்துகொண்டு எதிர்வினையாற்றியிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.

*

இத்தகைய ஒரு கருத்து நம் வாசிப்பில் ஒரு கோணத்தில் தோன்றுவது. இதை உங்களையோ ஜடாயுவையோ போன்ற தேர்ந்த வாசகர்களுடன் விவாதித்தே மேலும் கூர்மையாக்கிக்கொள்ள முடியும்.மேலும் இது ஒருபோதும் இறுதி முடிவாக, தீர்ப்பாக அமைய முடியாது. ஏன் இப்படிப்பார்க்கக்கூடாது?’என்ற வகையிலோ ‘இது ஏன் இப்படி இருக்கிறது?’என்ற அளவிலோ மட்டும்தான் இருக்கமுடியும்.
சொல்லும்கருத்துக்கள் சற்று மையம் மாறியே புரிந்துகொள்ளப்படும். ஆகவே மீளமீள சொல்லித்தான் பொதுவாக பகிர்ந்துகொள்ளமுடியும். நம்மிடையே புரிதலில் உள்ள இடைவெளியை மட்டும் மீண்டும் விளக்குகிறேன்.

நான் குறிப்பிடும் எழுத்தாளர்கள் ஆண்பெண் சல்லாபத்தை மட்டுமே எழுதினார்கள் என்றும், அவர்கள் நூல்களில் வேறு எதுவுமே இல்லை என்றும் நான் சொல்வதாகப் பொருள் கொள்கிறீர்கள். நான் அவர்களின் மையச்சிக்கல் ஏன் அதுமட்டுமாக இருக்கிறது, ஏன் அவர்களின் ஆக்கங்களில் திரும்பத்திரும்ப உள்ளாழமற்ற வெற்றுக்காமம் மட்டுமே வெளிப்படும்’சல்லாபம்’ மட்டும் பெரும்பக்கங்களை எடுத்துக்கொள்கிறது என்றே கேட்டிருக்கிறேன்.

அம்மாவந்தாள், மோகமுள், அன்பே ஆரமுதே, செம்பருத்தி, மலர்மஞ்சம் அனைத்துமே ஆண் பெண் உறவைப்பற்றிய நாவல்கள். அவற்றின் பக்கங்களில் பெரும்பகுதி ஊமைக்காமத்தின் பொருமல்களும் சல்லாபமும்தான் நிறைந்திருக்கிறது என இன்று வாசிக்கும் எவரும் உணரலாம். ஓரத்தில் வேறு சில விஷயங்கள் பேசப்பட்டுள்ளன என்று சொல்வது அதற்கான எதிர்வாதமாக எனக்குப்படவில்லை. அப்படிப்பார்த்தால் பாலகுமாரனும் சுஜாதாவும் கூடத்தான் அதேபோன்ற ஆயிரம் சமூகவியல்- தத்துவ விஷயங்களைப்பற்றி பேசியிருக்கிறார்கள். அவற்றை சற்றேனும் பேசாத எந்த எழுத்தாளரும் இல்லை.

தி.ஜானகிராமனின் சிறுகதைகளைப்பற்றி நான் மிகவிரிவாகவே எழுதியிருக்கிறேன். பல முக்கியமான கதைகளை கவனப்படுத்தியிருக்கிறேன். ஒரு சிறுகதையாசிரியனாக அவரது இடத்தை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். ஆனால் அவரது நாவல்களில் மோகமுள் அம்மாவந்தாள் இரண்டும் தவிர பிறவற்றை வளவளவென நீண்டு செல்லும் வெற்றுச்சல்லாபச் சித்திரங்கள், இலக்கியத்தரமற்றவை என்றே எண்ணுகிறேன். என் விரிவான விமர்சனக்கட்டுரை [இலக்கிய முன்னோடிகள் வரிசை]யிலும் இதை விவாதித்துள்ளேன்.

வெளிப்படுத்தப்படாத காமம் [மோகமுள், செம்பருத்தி] பொருந்தாக்காமம் [அன்பே ஆரமுதே, அம்மாவந்தாள்] என்றுதான் தி.ஜானகிராமன் வாழ்நாள் முழுக்க பெரும் பக்கங்களுக்கு எழுதியிருக்கிறார். பெரும்பாலான பக்கங்கள் காமம் கொண்ட கதைமாந்தர் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். எந்த உளவியல் ஆழமும் தரிசனமும் வெளிப்படுவதில்லை. மறைத்தும் தெளிந்தும் வெளிப்படுத்தப்படும் எளிய காமம் மட்டுமே.

அவற்றை ஏன் அவர் ஆனந்தவிகடன் கல்கி போன்ற பேரிதழ்களில் மீளமீள எழுதினார்? அதற்கு வாசகர்கள் இருந்தனர். அவர்கள் எழுதும்படி கோரினர். அவர் அவர்களை திரும்பத்திரும்ப திருப்திப் படுத்திக்கொண்டிருந்தார். அவர்கள் அதை இலக்கியம் என்று கொண்டாடினர். திரும்பதிரும்ப சப்புகொட்டி ரசித்தனர். இலக்கிய ரசனை என்பது இப்படி மாயக்காமத்தை இலக்கிய மாறுவேடம் போட்டு ரசிப்பது அல்ல. அதன் சவால்களும் சாத்தியங்களும் பிரம்மாண்டமானவை. நாவல் என்பதோ காவியத்தையும் வெல்லும் நவீன இலக்கிய வடிவம். எந்தப்பொருளில் போரும் அமைதியும் அல்லது தனிமையின் நூறுவருடங்களை நாவல் என்கிறோமோ அந்த பொருளில்ஜானகிராமனின் நாவல்களை நாவல்கள் என சொல்லமுடியாது. இதுவும் நான் 1991 முதல் சொல்லிவரும் கருத்தே.

ஒருபோதும் அசோகமித்திரன் செய்யாதது இவ்வகை எழுத்து. அதுவே அசோகமித்திரனை பெரும்படைப்பாளியாக்குகிறது. அசோகமித்திரனுடன் ஜானகிராமனை ஒப்பிட்டால் இப்படித்தான் சொல்லமுடியும். அசோகமித்திரன் தமிழ் கண்ட பேரிலக்கியவாதி. ஜானகிராமன் நல்ல கதைகளை எழுதிய, சற்று மேம்பட்ட வணிக எழுத்தாளர்

*

மோகமுள், அம்மாவந்தாள் போன்ற நாவல்கள் மோசமானவை அல்லது தரமற்றவை என்று நான் சொல்லவில்லை. என் வினா ஏன் தமிழில் இந்த ஆண்பெண் சல்லாபம் மட்டும் இலக்கியத்தின் மையச்சரடாக உள்ளது, ஏன் மீண்டும் மீண்டும் அது ஒரு முதன்மையான கலைநுட்பம் என நம் இலக்கியவாசகர்களில் ஒருசாராரால் கருதப்படுகிறது என்பது மட்டுமே.
[என் வாசிப்பில் நளபாகமும் சரி அதில் வரும்’தத்துவ’ விவாதங்களும் சரி மிக முதிர்ச்சியற்றவை. நளபாகம் அடி போன்ற நாவல்களை ஜானகிராமனின் உதாரணப்படைப்புகளாக நான் எண்ணுவதில்லை]

வண்ணநிலவன் போன்றவர்களில் கு.ப.ரா வில் தொடங்கி ஜானகிராமனிலும் லா.ச.ராவிலும் மேலோங்கிய அந்த சல்லாபம் என்னும் கூறு மையக்கூறாக வெளிப்படுவதன் சமூக- உளவியல் காரணியையே நான் சுட்டிக்காட்டுகிறேன். மீண்டும் மீண்டும் அந்த ‘மோந்துபார்த்து விலகும்’காமம் ஏன் நம் பேசுபொருளாக இருக்கிறது என. கடல்புரத்தில் லாஞ்சிக்கும் படகுக்கும் நடக்கும் பூசல் பற்றிய பதினைந்து இருபது வரிகள்தான் மையக்கரு என்றும் பெரும்பாலான பக்கங்களை நிறைத்துச்செல்லும் தமிழ் சினிமா சாயல்கொண்ட பிலோமி சாமிதாஸ் ‘காதல்’ அல்ல என்றும் நீங்கள் வாதிட்டால் நான் ஒன்றும் சொல்லமுடியாது. லாஞ்சிக்கும் படகுக்கும் இடையேயான போராட்டத்தைத்தான் அதை ரசித்தவர்கள் சுட்டிக்காட்டினார்கள் என்று வாதிடுகிறீர்கள் என்றாலும் நான் பதில் சொல்லமுடியாது

வண்னநிலவன் கதைகளில் ஆங்காங்கே வேலையில்லா இளைஞனின் துக்கம் வரவில்லையே என்பதெல்லாம் அல்ல என் குற்றச்சாட்டு. அவர் எழுதியவற்றில் பெரும்பகுதி ஊமைக்காமம் சார்ந்தவை என்பதும் அவையே இங்கு இலக்கியத்தை கொஞ்சம் செறிவான குமுதம் கதையாக நினைத்த வாசகர்களால் கொண்டாடப்பட்டவை என்பதும்தான். தி.ஜானகிராமனையும் லா.ச.ராமாமிருதத்தையும் இந்த அம்சத்தை கலையழகுடன் எழுதிய படைப்பாளிகள் என்னும்போது வண்ணநிலவனை வணிக இதழ்களில் பாலகுமாரனும் தேவகோட்டை வா மூர்த்தியும் கார்த்திகா ராஜ்குமாரும் எழுதியவற்றை சிற்றிதழ் மொழியில் எழுதியவர் என்றே உறுதியாக மதிப்பிடுவேன். இவற்றை அற்ப  எழுத்து என உணரமுடியாத ஒரு வாசகனால் உலக இலக்கியத்தின் எந்தப் பகுதியையும் உள்வாங்க முடியாது. கனமும் ஆழமும் கொன்ட ஆக்கங்களுக்குள் நுழையவும் முடியாது.

இந்த கறாரான மனநிலையுடன் இவர்களை நான் நிராகரிப்பது ஏன் நம்மால் உலகின் முதன்மையான இலக்கியங்களை வாசிக்க முடியாமலிருக்கிறது என்ற வினாவில் இருந்து எழுந்த கவலையால்தான். இன்று தல்ஸ்தோயும் தஸ்தயேவ்ஸ்கியும் எழுதிய பேரிலக்கியங்கள் தமிழில் கிடைக்கின்றன. வங்க, கன்னட, உருது பேரிலக்கியங்கள் கிடைக்கின்றன. உலகமொழிகளில் இருந்து இலக்கியங்கள் மொழியாக்கம் செய்யப்படுகின்றன. அவையெல்லாமே இந்த தித்திப்புச்சுவை தேடும் நாக்குகளுக்கு உவப்பாக இல்லை என்பதனால்தான். இலக்கியம் என்பது வேறு என்ற போதத்தை நாம் அடையாமல் முன்னோக்கி ஒரடி எடுத்து வைக்கமுடியாது. சென்ற நாட்களில் இந்த அசட்டுச்சுவையை இலக்கியமாக எண்ணிக்கொண்டிருந்தவர்களை [அதற்கான காரணங்கள் அவர்களுக்கு இருந்தன. தெருவில் நடக்கையில் சாளரம் வழியாக தெரியும் பக்கத்துவீட்டுப் பெண்ணின் முகத்தின் பாதியைப்பார்ப்பதையே காதல் சாகசமாகக் கொண்ட ஒரு தலைமுறை அவர்கள்] தாண்டிசெல்லவேண்டியிருக்கிறது

நான் இன்றைய படைப்பாளிகளைச் சுட்டிக்காட்டுவது ஒரே நோக்கில்தான். தமிழகத்தை மூன்று தலைமுறைக்காலம் பீடித்திருந்த இந்த ஊமைக்காமம் எப்படி சட்டென்று விலகிச்சென்றது என்று சுட்டுவதற்காக.

ஜெ

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 45
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 46