மழைப்பாடலின் மௌனம்

அன்புள்ள ஜெ,

வெண்முரசுவை மிகுந்த மன எழுச்சியுடன் ஒவ்வொருநாளும் இருமுறைக்குமேல் வாசித்துக்கொண்டிருக்கிறேன். பெரிய புத்தகமாகக் கையில் கிடைக்காமல் இபப்டிச் சிறிய அத்தியாயங்களாக கிடைப்பது எல்லா நுட்பங்களையும் பலமுறைவாசித்து அர்த்தம் அடைவதற்கு மிகவும் உதவியாக இருக்கிறது. அதிலும் முதற்கனலை விட மழைப்பாடல் இன்னும்கூட நுட்பமானது.

முதற்கனலில் வெளிப்படையாக நிறைய விஷயங்கள் இருந்தன. தீவிரமான நிகழ்ச்சிகள் நடந்துகொண்டே இருந்தன. இதில் பெரியவிஷயங்கள் அதிகமாக நடக்கவில்லை. சுயம்வரங்களும் குழந்தைபிறப்பதும் மட்டும்தான் நடக்கிறது. ஆனால் கதாபாத்திரங்களின் குணச்சித்திரங்களும் அவர்களின் உறவுகளுக்கிடையே உள்ள நுட்பமான விளையாட்டும் மிகவும் சூட்சமமாக சொல்லப்பட்டுள்ளன. நல்ல வாசகன்கூட தொடர்ந்து கவனமாக வாசிக்கவில்லை என்றால் தவறிவிடும். நான் என்னுடன் சேர்ந்து வாசிப்பவர்களிடம் பலவிஷயங்களைக் கவனித்தீர்களா என்று கேட்டால் கவனித்திருக்கவில்லை என்று தெரிந்தது. முழுக்கமுழுக்க நுட்பமாகச் சொல்லப்பட்ட விஷயங்கள் வழியாக மட்டுமே இப்படி கதையைக் கொண்டுசெல்வது ஆச்சரியம் அளிக்கிறது. நான் இவ்வகையில் தமிழில் ஏதும் வாசித்ததில்லை

உதாரணமாக குந்தியின் முலைப்பால் பைரவியன்னை வழியாக ராதைக்கு இடம் மாறும் கதை மிக அழகானது. உச்சமானது. ஆனால் அதை அனைவரும் வாசித்து உணரவும் முடியும். ஆனால் குந்தி கர்ணனைப் பெற்றபின்பு திரும்பி குந்திபோஜனின் சபைக்கு வரும்போது அவளுடைய வளர்ப்புத்தாயான தேவவதிக்கும் அவளுக்கும் கண்களாலும் சில சொற்களாலும் மட்டும் நடக்கும் பேச்சு மிகப்பூடகமானது. ஏதோ ஒன்று நடக்கிறது. ஆனால் சரியாக வெளியே வரவும் இல்லை. தேவவதி அவளுடைய முந்தானையை திருகிக்கொண்டே பேசுகிறாள். குந்தி அதைப்பார்க்கிறாள். அதைக்கண்டு தேவவதி முந்தானையை கீழே விடுகிறாள். அதன் வழியாக குந்தி அரசி மாதிரியும் தேவவதி வெறும் யாதவப்பெண்ணாகவும் ஆகிவிடுகிறார்கள். இந்தமாதிரி. இதேமாதிரியான இடங்களை கவனிப்பதுதான் மழைப்பாடலை சரியாகப் புரிந்துகொள்ளத் தேவையான வாசிப்பு. அப்படி எவ்வளவோ விஷயங்கள்

அம்பாலிகையின் மனதையும் அதனுடன் சேர்ந்து வளர்ந்த பாண்டுவின் மனதையும் சொல்லக்கூடிய இடம் அதேபோல முக்கியமானது.கங்கையில் போகக்கூடிய படகுக்காரர்கள் பாடும்பாடலில் கங்கை சீதையிடம் நீ ஏன் சிரித்தாய் என்று கேட்கிறாள். நீ பூமிபிளந்து நுழையப்போகும் தீயை அணைக்க என் நீர் போதாது என எனக்குத்தெரியும் என்கிறாள். அந்தவரிகளை கேட்டபின்புதான் அம்பாலிகையின் மனசுக்குள் உள்ள தீயை பாண்டு புரிந்துகொள்கிறான். நுட்பமாக மட்டுமே பேசிக்கொண்டு செல்கிறது கதை. மேலோட்டமாக இருப்பது குறைவு. இந்த நுட்பங்களை வாசிக்கும்பயிற்சி எனக்கு பெரிய அனுபவமாக உள்ளது

சுகவனம்

அன்புள்ள சுகவனம்

மழைப்பாடலைப்பற்றி நீங்கள் சொன்னது உண்மை. கதைப்படி பெரியதாக ஏதும் நிகழவில்லை. திருமணங்கள் மட்டுமே. ஆனால் கடைசிவரை மகாபாரதத்தில் நீடிக்கும் சிக்கல்களும் முடிச்சுகளும் இங்குதான் விழுகின்றன. அதற்குக் காரணமாக உள்ள கதாபாத்திரங்களின் சிறப்பியல்புகளும் இங்குதான் வெளிப்படுகின்றன. மகாபாரத்தின் game players சகுனி,குந்தி,விதுரன் ஆகியோர். அவர்களை தெளிவாக வகுத்துக்கொண்டு கதை முன்னகர்கிறது. அந்த குணச்சித்திரங்கள் பெரும்பாலும் அவர்களின் எண்ணங்கள் மற்றும் நடத்தைகளால் மட்டுமே வெளிப்படுகின்றன. ஆகவே முக்கியமான அனைத்துமே வாசகன் ஊகத்துக்குத்தான் விடப்பட்டுள்ளன. இப்போதே கூர்ந்து வாசிப்பவர்கள் அவற்றை அடையலாம். அல்லது கதை விரியவிரிய புரிந்துகொள்ளமுடியும்

ஜெ

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 49
அடுத்த கட்டுரைமழைப்பாடலின் ஓவியங்கள்