‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 64

பகுதி பன்னிரண்டு : விதைநிலம்

[ 5 ]

சியாமை வந்து வாயிலில் நின்றபோது சத்யவதி திரும்பிப்பார்த்தாள். “பிரம்மமுகூர்த்தம்” என்று சியாமை சொன்னாள். சத்யவதி பெருமூச்சுடன் திரும்பி பீடத்தில் கிடந்த தன் மேலாடையை எடுத்தணிந்துகொண்டு முன்னால் நடந்தாள். சியாமை பின்னால் வந்தபடி “தாங்கள் இரவெல்லாம் துயிலவில்லையா பேரரசி?” என்றாள். சத்யவதி தலையசைத்தாள். சியாமை “யாதவ அரசியும் மாத்ரநாட்டு அரசியும்கூடத் துயிலவில்லை. ஆனால் அரசர் நன்றாகத் துயின்றதாகச் சொன்னார்கள்” என்றாள்.

அரண்மனையின் இடைநாழியில் தூண்களில் நெய்விளக்குச்சுடர்கள் எரிந்து நிழலை நிலத்திலும் கூரையிலும் வீழ்த்தியிருந்தன. சாளரத்திரைச்சீலைகள் காற்றில் படபடக்கும் ஒலி அவை பட்டுச்சேலையுடன் நடந்துவருவதுபோலக் கேட்டது. அவர்களின் காலடியோசை சுவர்களில் எதிரொலித்தது. செஞ்சுடர் பிரதிபலித்து விழிகளாக ஆன படைக்கலன்களைத் தாழ்த்தி வீரர்கள் சத்யவதியை வணங்கினர். அரண்மனைக்குள் எங்கெங்கோ சேவகர்களும் சேடிகளும் மெல்லிய குரலில் பேசும் ஒலி துயிலில் அரண்மனை முனகிக்கொள்வதுபோலக் கேட்டது.

அரண்மனை முற்றம் நோக்கிச் செல்லும் திறந்த இடைகழியை அடைந்ததும் சத்யவதி நின்று வானை நோக்கினாள். கோடைகால மேகமற்ற வானில் விண்மீன்கள் குவிந்துகிடந்தன. நோக்குந்தோறும் இருண்ட இடைவெளிகளில்கூட மெல்லிய விண்மீன் ஒளி தெரியத்தொடங்கியது. எத்தனை ஆயிரம், லட்சம், கோடி. எந்த வடிவும் அற்றவை. யாரோ எதற்கோ அள்ளி அள்ளிப்பரப்பியவை. பெருமூச்சுடன் “யமுனைக்கரைக்குச் சென்று நெடுநாட்களாகின்றன சியாமை” என்றாள் சத்யவதி. “யமுனையின் நீரில் விண்மீன்களைப் பார்த்த நினைவு எழுகிறது.”

சியாமை முகம் மலர்ந்து “ஆம், காளிந்தி இருண்டவானம்போலவே கரியவள்” என்றாள். “மேலே தெரிவது ஒரு நதி என்ற எண்ணத்தை என்னால் ஒருபோதும் வெல்லமுடிந்ததில்லை” என்று சத்யவதி சொன்னாள். “நான் வானை நோக்குவதேயில்லை. வானம் நான் இங்கே செய்வதையும் சுமப்பதையும் எல்லாம் வீண்செயலாக ஆக்கிக்காட்டுகிறது. இந்த அரண்மனையை, மணிமுடியை, அணிகளை துறந்து வெளியே இறங்கி ஓடிவிடுவேன் என்று எண்ணச்செய்கிறது.”

சியாமை புன்னகை புரிந்தாள். “என்ன புன்னகை?” என்றாள் சத்யவதி. “துறந்துசெல்வது எளிதா என்ன? எளிதாக இருந்தால் பாரதவர்ஷம் ஏன் துறந்துசென்றவர்களின் காலடியில் காலகாலமாக பணிந்துகொண்டிருக்கிறது?” என்று சியாமை சொன்னாள். “ஆம்” என்றாள் சத்யவதி, மீண்டும் வானைநோக்கியபடி.

அரண்மனை முற்றத்தில் நெய்ப்பந்தங்கள் தழலாடின. அலையடித்த ஒளியில் சூதர்கள் தங்கள் வாத்தியங்களுடன் வந்து நின்றுகொண்டிருப்பதையும் ஏழு வைதிகர்கள் நிறைகுடத்துடன் ஒருவரோடொருவர் உரையாடியபடி நிற்பதையும் காணமுடிந்தது. சூதர்களின் வெண்கல இலைத்தாளங்களில் பந்தச்சுடர் செந்நிறமாக அசைந்தது. வளையல்களும் அணிகளும் குலுங்க எதிர்ப்பக்கமிருந்து அணிப்பரத்தையர் கைகளில் தாலங்களுடன் அரண்மனைமுற்றத்துக்கு படியிறங்கினர். சூதர்களில் ஒருவர் ஏதோ சொல்ல பரத்தையர் சதங்கையொலி போல சிரித்தனர். யாரோ ‘பேரரசி’ என எச்சரிக்க பலதலைகள் திரும்பிப்பார்த்தன.

சேடியர் மங்கலத்தாலங்களுடனும் கவரிகளுடனும் வந்து சத்யவதியின் இருபக்கமும் இணைந்துகொண்டனர். படிகளில் இறங்கும்போது சத்யவதி தன் தொடைகளில் கைகளை ஊன்றி மெதுவாகக் காலெடுத்து வைத்தாள். அவளைத் தொட்டு உதவலாமா என தயங்கிய சேடியர் சியாமையைப் பார்த்தபின் விலகிக்கொண்டனர். அரண்மனை முற்றத்தின் கிழக்கு எல்லையில் இருளுக்குள் இரட்டைப்புரவிகள் பூட்டப்பட்ட பயணத்தேர் நின்றுகொண்டிருந்தது. குதிரைகள் துயிலை விடாமல் பிடரிமயிர் சரிய தலைதாழ்த்தி ஒற்றைக்கால் தூக்கி நின்றன. தேரின் பித்தளைக்குமிழ்களில் பந்தவெளிச்சம் அகல்சுடரெனத் தெரிந்தது.

முற்றத்தில் அஸ்தினபுரியின் அனைத்து அமைச்சர்களும் படைத்தலைவர்களும் நின்றிருந்தனர். உக்ரசேனரும், சத்ருஞ்சயரும், வியாஹ்ரதத்தரும் தங்கள் முழுக் கவச உடையுடன் இடையில் வாளுடன் நின்றிருந்தனர். களஞ்சியக்காப்பாளராகிய லிகிதரும், வரிகளுக்குப் பொறுப்பாளராகிய சோமரும், ஆயுதசாலைக்கு அதிபராகிய தீர்க்கவ்யோமரும், எல்லைக்காவலர் தலைவரான விப்ரரும், யானைக்கொட்டடிக்கு அதிபராகிய வைராடரும் தங்கள் துணைவர்களுடன் நிரையாக நின்றிருந்தனர். பலபத்ரர் மெல்லியகுரலில் ஆணைகளை விடுத்தபடி அனைத்தையும் ஒருங்குசெய்துகொண்டிருந்தார்.

சத்யவதி சியாமையிடம் “மூத்தவளிடம் சொன்னாயல்லவா?” என்றாள். “ஆம் சொன்னேன். அரண்மனை முற்றத்துக்கு வரவேண்டிய முறை அவருக்கு உண்டு என்றும் சொன்னேன்” என்றாள் சியாமை. சத்யவதி பேசாமல் பார்த்தாள். “என் மைந்தனின் மணிமுடி அது. அதை முறைமீறி ஒருநாள் சூடிய பிழைக்காக இறைவன் அளிக்கும் தண்டனையை அவன் அறிகிறான். அதற்கு நான் ஏன் வரவேண்டும், வந்தால் என் தீச்சொல்லையே அவன் மேலும் பெறுவான் என்றார்கள். அருகே காந்தாரத்தின் அரசியர் பதினொருவரும் இருந்தனர்.”

சத்யவதி மெல்ல புன்னகைசெய்து “மாமிக்கும் மருகியருக்கும் அவ்வளவு ஒற்றுமை. புறப்பகையைப்போல ஒருமையைக் கொண்டுவரும் ஆற்றல் வேறில்லை” என்றாள். சியாமை புன்னகை செய்தாள். “கன்னிமனங்கள் தாயாகும்போது எவ்வாறு திரிபுகொள்கின்றன என்று சொல்ல எந்த ரிஷியாலும் இதுவரை முடிந்ததில்லை” என்றாள் சியாமை. சத்யவதி புன்னகைசெய்து “கிருஷ்ணனை இங்கே வந்து இவர்களை மீண்டும் சந்திக்கச்சொல்லவேண்டும்” என்றாள்.

“இளையஅரசி மூன்றுநாட்களாக அழுதுகொண்டிருக்கிறார்கள். எந்தச் சொற்களும் அவரை ஆற்றவில்லை. அரசர் அன்னையை தேற்றிச் சொன்ன சொற்களை எல்லாம் மேலும் துயரம்கொள்ளவே அவர்கள் பயன்படுத்திக்கொள்கிறார்கள்” என்றாள் சியாமை. சத்யவதி பெருமூச்சுவிட்டு தலையை மட்டும் அசைத்தாள். “நேற்றிரவு அவர்களுக்கு உடல்வெப்பு கண்டுவிட்டது. மருத்துவர் வந்து மருந்து கொடுத்து துயில்கொள்ளச்செய்திருக்கிறார். அரசர் நாடுநீங்குவதையே அவர்கள் அறியப்போவதில்லை” என்றாள் சியாமை.

மீண்டும் தலைதூக்கி விண்மீன் விதானத்தைக் கண்டாள். நூற்றாண்டுகளாக யுகங்களாக மனிதகுலம் அந்தப் பெருவிரிவைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. அதன் அடியில்தான் அனைத்துச் சிறுமைகளையும் நிகழ்த்திக்கொண்டும் இருக்கிறது.

நிமித்திகர் நாளும்கோளும் தெரிந்துசொன்ன செய்தி அன்றே அம்பிகைக்குச் சென்றுவிட்டது என்று சியாமை வந்துசொன்னாள். “அவனுக்கு மண்ணையும் பெண்ணையும் அருகே வைத்துப்பார்க்கவே விதி. ஆள்வதற்கல்ல” என்று சொல்லி அம்பிகை நகைத்தாள் என்றாள். சத்யவதி முகம் சுளித்து “ஷத்ரியப்பெண்ணின் குரலா அது?” என்றாள். “எதை ஷத்ரியகுலத்து குணம் என்கிறீர்கள் பேரரசி? மண்மீதான தீராப்பெருவிருப்பு அன்றி அவர்களிடம் வேறென்ன உள்ளது?” என்றாள் சியாமை. “மண்ணில் உழுதும் மேய்த்தும் வேட்டும் வாழ்பவர்களில் சிலருக்கு மண் தங்கள் முழுதுடைமை என்னும் எண்ணம் வருகிறது. அவ்வண்ணம் முறைமீறி எழுந்து ஆட்கொண்ட சிலரையே நாம் ஷத்ரியர் என்கிறோம்.”

அச்செய்தியைக் கேட்டபடி அன்று சத்யவதி கண்களை மூடிக்கொண்டு அகச்சொற்களை கோர்க்கமுயன்றபடி பீடத்தில் அமர்ந்திருந்தாள். “அரசரின் நோய்நிலைக்காக மன்றமர்ந்த கொற்றவைக்கு கடன்தீர்க்கிறார்கள் என்று அங்குள்ள உளவுச்சேடி சொன்னாள்” என்றாள் சியாமை. சத்யவதி திடுக்கிட்டு எழுந்து “எதற்காக?” என்றாள். “அரசருக்கு காமம் விலக்கப்பட்டிருக்கிறதல்லவா? அப்படியென்றால் காந்தாரநாட்டு அரசியர் பெற்றெடுக்கும் மைந்தருக்கு அஸ்தினபுரியில் ஒப்பும் இணையும் இல்லை என்று எண்ணுகிறார்கள்.” வெறுப்புடன் முகம் சுளித்தபடி “அவள் முகத்தையே நான் பார்க்கவிரும்பவில்லை, சியாமை. இங்கு காலெடுத்துவைத்த அந்தக் காசிநாட்டு இளவரசியையே நினைத்திருக்க விரும்புகிறேன்” என்றாள்.

மன்றமர்ந்த கொற்றவைக்கு ஏழு உயிர்ப்பலிகொடுத்து விழவுசூழ்வதை சத்யவதிக்கு முறைப்படி அறிவித்தார்கள். திருதராஷ்டிர மன்னரின் உடல்நிலையின் பொருட்டு அதைச்செய்வதாகத்தான் சொல்லப்பட்டது. ஆனால் அரண்மனை எங்கும் அது எதற்காக என்று தெரிந்திருந்தது. அலுவல் நோக்க தன் அந்தப்புரத்தறைக்கு வந்த குந்தியிடம் சத்யவதி “அவ்விழவு எதற்கென்று அறிவாயா?” என்றாள். குந்தி நிமிர்ந்து நோக்கி “ஆம்” என்றாள். “பாண்டுவிற்கு மைந்தர் பிறக்கப்போவதில்லை என்பதற்காக” என்று சத்யவதி குந்தியை கூர்ந்து நோக்கியபடி சொன்னாள்.

தன் கையில் இருந்த ஓலையை அதற்குரிய தந்தப்பேழைக்குள் வைத்து அடுத்த ஓலையை எடுத்தபடி குந்தி “ஆம், வெற்றிக்காக கொற்றவையை வழிபடுவது ஷத்ரியர் வழக்கமல்லவா?” என்றாள். சத்யவதி அவள் முகத்தையே நோக்கிக்கொண்டிருந்தாள். நீண்ட விழிகள் ஓலையில் ஓடின. உதடுகளில் அவள் வாசித்த சொற்கள் ஓசையின்றி நிகழ்ந்தன. அவள் முடிவெடுத்தபோது இதழ்கள் நீண்டு பொன்னிறக் கன்னங்களில் சிறிய குழிகள் விழுந்தன. ஆணையை இன்னொரு ஓலையில் ஒரு சில சொற்களில் குறித்தாள். சத்யவதி புன்னகையுடன் பெருமூச்சு விட்டாள். “பிருதை” என்றாள்.

அவள் அப்படி அழைப்பது அதிகம் நிகழ்வதல்ல என்பதனால் குந்தி நிமிர்ந்து நோக்கினாள். “அரசியல் மதிசூழ்கை என்பது கருவறைக்குள் நம் அறிவை நிறுவி அதற்கு நாம் பூசனையும் பலியும் செய்துகொண்டிருப்பதுதான். அந்தத் தெய்வம் அகந்தை என்னும் கரிய மிருகத்தின்மேல் அமர்ந்திருக்கிறது” என்றாள். குந்தி தலையை அசைத்தாள். “தனித்திருந்து அழுவதற்கு சிலதுளி விழிநீரை எப்போதும் எஞ்சவைத்துக்கொள். எப்போதேனும் பேதையாகவும் அபலையாகவும் இரு.” குந்தி தலைகுனிந்து கொண்டாள்.

அரண்மனையின் தென்மேற்குமூலையில் இருந்த சிற்றாலயத்தில் நள்ளிரவில் கொற்றவைக்கு பூசனைநிகழ்வதற்கு சற்றுமுன்னர்தான் சத்யவதி முடிவெடுத்து கிளம்பிச்சென்றாள். பீஷ்மர் தேவகனை சந்திக்க உத்தரமதுராபுரிக்குச் சென்றிருந்தார். அவள் வருவாளென அம்பிகை எண்ணியிருக்கவில்லை. தொலைவிலேயே அவள் ரதத்தைப் பார்த்துவிட்ட சத்யசேனையும் சத்யவிரதையும் ஆலயமுகப்பில் நின்றிருந்த அம்பிகையிடம் சென்று சொல்ல அவள் திகைத்தபின் முன்னால் வந்து நின்றாள். ரதத்தில் இருந்து சியாமையின் தோள்களைப் பற்றியபடி சத்யவதி இறங்கியபோது அம்பிகையும் நான்கு அரசிகளும் வந்து வணங்கி முகமன் சொன்னார்கள். சம்படையின் கையைப்பற்றியபடி வந்த காந்தாரி வணங்கியபோது சத்யவதி அவள் வகிடில் கைவைத்து “பேரன்னையாகுக!” என்று வாழ்த்தினாள்.

அப்பகுதியெங்கும் எண்ணைப்பந்தங்கள் கொழுந்தாடிக்கொண்டிருந்தன. பலியாகக் கொண்டு வரப்பட்டிருந்த கோலாடும், வெள்ளாடும், காளைக்கன்றும், எருமைக்கன்றும், மானும், பன்றியும், குதிரைக்குட்டியும் ஆலயத்தின் வலப்பக்கத்தில் கோட்டைச்சுவர் ஓரமாகக் கட்டப்பட்டிருந்தன. பலிபூசனை செய்யும் வைராகர்கள் செம்பட்டு சுற்றி நெற்றியில் செஞ்சாந்துத் திலகமணிந்து பலிப்பொருட்களை ஒருக்கிக் கொண்டிருந்தனர். சற்றுநேரத்தில் திருதராஷ்டிரன் ரதத்தில் வந்திறங்கி விதுரனின் கைகளைப்பற்றியபடி ஆலயமுகப்புக்கு வந்தான்.

திருதராஷ்டிரன் தன்னைப் பணிந்தபோது அவன் உடலை நிமிர்ந்து நோக்கிய சத்யவதி ஒருகணம் திகைத்தாள். தன்னைச்சூழ்ந்திருக்கும் உலகம் தன்னை மிகச்சிறியதாக ஆக்கி வளர்ந்து பேருருவம் கொண்டதுபோலத் தோன்றியது. ஒவ்வொன்றும் தெளிவிழந்து விளங்கமுடியாதனவாக மாறிக்கொண்டிருப்பது போல. முற்றிலும் வேறுலகம். வேறு மக்கள். அஸ்தினபுரியில் பீஷ்மரையும் சியாமையையும் தவிர எவரையும் உண்மையில் அவளறிந்திருக்கவில்லை என்று எண்ணிக்கொண்டாள். அந்த அச்சம்தான் முதுமையா என மறுகணம் புன்னகைசெய்தாள்.

பூசனை தொடங்கியதும் சத்யவதி மேலும் சோர்வடைந்தாள். உரக்க ஒலித்த முழவுகளின் சீரான தாளம் அவள் வயிற்றில் அதிர்ந்துகொண்டிருப்பது போலத் தோன்றியது. சற்றுநேரத்தில் உடற்தசைகளே முரசுத்தோல் என அதிரத்தொடங்கின. அருகே கட்டப்பட்டிருந்த பலிவிலங்குகளைப் பார்த்தாள். அவற்றின் கண்களில் பந்த ஒளி தெரிந்தது. மான் கால்மடக்கி படுத்திருக்க பசுக்கன்றும் குதிரைக்கன்றும் புல்கட்டில் இருந்து பசுந்தாள்களை உருவி தலையை ஆட்டி மென்றுகொண்டிருந்தன. அவற்றின் குருதியைக் காணும் வல்லமை தனக்கில்லை என்று சத்யவதி எண்ணினாள். எந்தக்குருதியையும் அவளால் பார்க்கமுடியாது. விந்துவாகி வெளுத்து கருவறையில் குடியேறி மைந்தர்களாக மாறி உலகை நிறைப்பதன்றி வேறெந்த இலக்கும் குருதிக்கு இருக்கலாகாது. ஆம்.

அவள் சியாமையை நோக்கி கையைத் தூக்கியபோது பெரிய ரதம் அசைந்து வருவதைக் கண்டாள். அதன் அச்சுக்குடத்தில் ஆணி உரசும் ஒலியும் சகடங்கள் கல்மீது ஏறியமரும் ஒலியும் கேட்டன. சத்யவிரதை அம்பிகையின் தோளில் கையை வைத்தாள். அம்பிகை முன்னரே நிலையழிந்து நின்றிருந்தவள் திடுக்கிட்டு “என்ன?” என்றாள். “அரசர்” என்றாள் சத்யவிரதை. காந்தாரி யார் என்று கேட்க சத்யசேனை குனிந்து அவள் காதில் சொன்னாள்.

ரதத்தில் இருந்து பாண்டுவும் பின்னால் குந்தியும் மாத்ரியும் இறங்கினர். அவர்களுக்கு அழைப்பு இருக்கவில்லை என்பதை சத்யவதி அறிந்திருந்தாள். அவர்களுடன் அம்பாலிகை இருக்கிறாளா என்று மட்டும் அவள் பார்த்தாள். இல்லை என்றதும் அமைதிகொண்டு குந்தியின் முகத்தையே நோக்கினாள். அவர்கள் நடந்து வருவதை காந்தார அரசிகள் திகைத்த முகத்துடன் நோக்கி நின்றனர். தீப்பந்தங்களின் ஒளியில் குந்தியின் அணிகள் ஒளிவிட்டன. விதுரன் குனிந்து திருதராஷ்டிரன் காதுகளில் அவர்களின் வருகையைச் சொன்னான்.

பாண்டு வந்ததுமே சத்யவதியை அணுகி வணங்கினான். பின்னர் திரும்பி அம்பிகையை அணுகி குனிந்து வணங்கினான். அவள் தடுமாற்றத்துடன் சத்யசேனையை நோக்கியபின் நடுங்கும் கைகளைத் தூக்கி “நீண்ட ஆயுளுடன் இரு” என வாழ்த்தினாள். பாண்டு திருதராஷ்டிரனை அணுகி வணங்கி “மூத்தவரே தங்கள் அருளை நாடுகிறேன்” என்றான். திருதராஷ்டிரன் “மூடா, நான் உன்னை நெடுநேரமாக எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன்… நீ அரண்மனையில் என்னதான் செய்கிறாய்? இசைகேட்க அழைத்தால்கூட வருவதேயில்லை” என்றான்.

ஓவியம்: ஷண்முகவேல் [பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]
ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]

பாண்டு சிலகணங்கள் தயங்கியபின் “மூத்தவரே நான் என் துணைவியருடன் கானகவாழ்க்கைக்குச் செல்வதாக முடிவெடுத்திருக்கிறேன்” என்றான் பாண்டு. “நல்ல முடிவு… இங்கே இருப்பதைவிட உன் உடல்நலம் மேம்படும். பௌர்ணமிக்குள் திரும்பிவிடுவாயல்லவா?” என்றான் திருதராஷ்டிரன். “இல்லை மூத்தவரே, நான் திரும்புவதாக இல்லை.” திருதராஷ்டிரன் அதைப் புரிந்துகொள்ளமுடியாமல் கைகளைத் தூக்கி ஏதோ சொல்லவந்து தூக்கிய கைகளுடன் அசையாமல் இருந்தான். விதுரன் பாண்டுவை தன் ஒரு கையால் விலக்கி நிறுத்திவிட்டு “அரசே, அவர் வனம்புகுதலைப்பற்றிச் சொல்கிறார்” என்றான்.

“சீ, மூடா” என்று கூவியபடி திருதராஷ்டிரன் கைகளை வீசி பாண்டுவை அறைந்தான். பாண்டு முன்னரே விலக்கப்பட்டிருந்தமையால் அடி காற்றில் சுழன்றது. விதுரன் திருதராஷ்டிரன் கைகளைப்பற்றியபடி “மூத்தவரே, அவரது மருத்துவர்களும் நிமித்திகர்களும் இட்ட ஆணை அது. அவர் மீறலாகாது” என்றான். “என்ன ஆணை? அதைப்போட்ட நிமித்திகனை என்னிடம் கொண்டுவா. மூத்தவன் நானிருக்க என் இளவல் எப்படி வனம்புகமுடியும்?” என்று தன் கைகளை ஓங்கித்தட்டியபடி திருதராஷ்டிரன் கூவினான்.

“அரசே, அவரது நலனைமட்டுமே நாம் பார்க்கவேண்டும்” என்றான் விதுரன். “அவனுக்கு என்ன குறை இங்கே? அரசும் அழகிய இரு மனைவியரும் இருக்கிறார்கள். ஆட்சித்துணைக்கு நீ இருக்கிறாய். வேறென்ன வேண்டும்? அவன் உடலுக்கு ஒன்றுமில்லை. கண்களும் பார்வையும் இருக்கிறது. மருத்துவர்களும் நிமித்திகர்களும் பசப்புகிறார்கள். என்னருகே கொண்டுவா அவர்களை. யார் சொன்னது இதை என்று கேட்கிறேன்.”

“மூத்தவரே, இங்கே அரசை நான் பார்த்துக்கொள்கிறேன். அவர் தனக்கு உகந்த அழகிய காட்டுவாழ்க்கையை வாழட்டுமே” என்றான் விதுரன். “வாழட்டும்… ஆனால் அரசைத்துறந்து அவன் எங்கும் செல்ல நான் ஒப்பமாட்டேன். அவன் என் தம்பி. அவனுக்குரிய நாடு இது…” விதுரன் தணிந்து “அரசே, அவர் சிலகாலம் அங்கிருக்கட்டும். அவருடைய உடல்நிலை மேம்பட்டு மைந்தர்களும் பிறந்தபின் நகர் திரும்பட்டும்” என்றான். “எப்போது நகர் திரும்புவான் என்று கேட்டுச்சொல்… இல்லை, வேண்டாம், அவனை என் கையருகே வரச்சொல்.”

வரவேண்டாம் என்று விதுரன் கையைக்காட்டினான். “அரசே, அவர் திரும்பிவருவார். திரும்பிவருவாரென உறுதியளிக்கிறார்” என்றான். “எப்போது… எப்போதென்று அவனிடம் சொல்லச்சொல்” என்றான் திருதராஷ்டிரன். விதுரன் “மைந்தர்கள் பிறந்து அவர்களுக்குரிய அரசபட்டங்கள் சூட்டப்படும் நாளில் திரும்புவார்” என்றான். பாண்டு எதையோ சொல்லப்போக விதுரன் அவனை கையசைத்து நிறுத்தி அதைச் சொல்லும்படி சைகை காட்டினான். பாண்டு “ஆம் மூத்தவரே அவ்வண்ணமே வருகிறேன்” என்றான்.

திருதராஷ்டிரன் தலையை ஆட்டியபடி “உன் இரு துணைவியரும் உடனிருப்பார்களா?” என்றான். “ஆம் மூத்தவரே” என்றான் பாண்டு. “உன் முதல் அரசி அனைத்தும் அறிந்தவள்… அவள் எங்கே?” குந்தி முன்னால் வந்து “பணிகிறேன் அரசே” என்றாள். “என் தம்பியை உன்னிடம் ஒப்பளிக்கிறேன். அவனை உன் மைந்தன் என நீ பேணவேண்டும்” என்றான் திருதராஷ்டிரன். “ஆணை” என்றாள் குந்தி. திருதராஷ்டிரன் “எங்கே மாத்ரநாட்டு அரசி?” என்றான். மாத்ரி வந்து வணங்கி “பணிகிறேன் அரசே” என்றாள். “என் தம்பியுடன் வனத்தில் மகிழ்ந்திரு… அவன் தேடும் இளம்துணையாக இரு” என்றான் திருதராஷ்டிரன்.

பாண்டுவை அருகே வரும்படி விதுரன் சைகை காட்டினான். பாண்டு வந்து திருதராஷ்டிரனின் கால்களைத் தொட்டபோது அவனை இருகைகளாலும் அள்ளித் தழுவிக்கொண்டான் திருதராஷ்டிரன். “நீ இங்கே அரண்மனையில் வாழமுடியாதென்று நான் அறிவேன். இங்கே வண்ணங்கள் இல்லை. காட்டில் நீ மகிழ்ந்து வாழமுடியும். ஆனால் நான் இங்கு தனித்திருக்கிறேன். அதை நீ மறவாமலிருந்தால் போதும்” என்றான். பாண்டுவின் தலையையும் காதுகளையும் கன்னங்களையும் தன் கரிய கனத்த விரல்களால் வருடியபடி “உன்னைத் தொட்ட இந்த உணர்வை என் கைகள் நெடுநாட்கள் வைத்திருக்கும். அதற்குள் நீ வந்துவிடவேண்டும்” என்றான். “ஆணை மூத்தவரே” என்றான் பாண்டு.

சத்யவதி எழுந்து “நான் கிளம்புகிறேன் விதுரா” என்றாள். “பேரரசி, பூசனை இன்னும் சற்றுநேரத்தில் தொடங்கிவிடும்” என்றான் விதுரன். சத்யவதி “என்னால் குருதியைக் காணமுடியாது” என்றாள். “மகதத்தை வெல்லவேண்டுமென்று துடித்த பேரரசியா பேசுவது?” என்று திருதராஷ்டிரன் உரக்கச்சிரித்து தன் தொடையில் தட்டினான். “ஆம், ஆனால் அந்தி மிகவிரைவில் கவிந்துவிடும் மைந்தா…நான் இன்று முதியவளாகிவிட்டேன். இந்த கன்றுகளின் அன்னையாக மட்டுமே என்னால் சிந்திக்கமுடிகிறது. இவை கொற்றவைக்குரியவை அல்ல என்றால் பலியை தடுத்திருப்பேன்” என்றபின் “ஆம், நான் போரை நினைத்துக்கொண்டிருந்த நாட்கள் உண்டு. இப்போது மென்மையான அமைதியான படுக்கையில் என் இளம் சிறுமைந்தர்களுடன் படுத்திருப்பதை மட்டும்தான் கனவுகாண்கிறேன்” என்றபடி சியாமையை நோக்கி கையை நீட்டினாள் சத்யவதி.

குறுமுழவுகளும் சங்கும் சல்லரியும் ஒலிக்க அரண்மனைக்குள் இருந்து திருதராஷ்டிரன் விதுரனின் கைபற்றி வெளியேவந்தான். வாழ்த்தொலிகள் எழுப்பி வீரர்கள் பணிந்து இருபக்கமும் விலகினர். அவன் வெண்ணிற ஆடையும் தலையில் வெண்பட்டுத் தலைப்பாகையும் அணிந்திருந்தான். விதுரன் கையசைவால் ஏதோ கேட்க காவலர்தலைவன் உள்ளே ஓடினான். திருதராஷ்டிரன் சத்யவதி அருகே வந்து “வணங்குகிறேன் அன்னையே” என்றான். “புகழுடன் இரு” என சத்யவதி வாழ்த்தினாள்.

மீண்டும் சங்குகளும் குறுமுழவுகளும் சல்லரிகளும் ஒலித்தன. அரண்மனை முற்றம் முழுக்க பரபரப்பு பரவியோடுவது தெரிந்தது. கடிவாளம் இழுக்கப்பட குதிரைகள் திடுக்கிட்டு நிமிர்ந்தபோது ரதமும் உயிர்கொண்டது. அரண்மனைக்கு அப்பால் இரு நெய்ப்பந்தங்களை ஏந்தி இருவர் முன்னால் வர பின்னால் வெண்கொற்றக்குடை மேலெழுந்து தெரிந்தது. சாமரங்கள் இருபக்கமும் அசைய மங்கலச்சேடியர் சூழ பாண்டு வந்தான். அவனைத் தொடர்ந்து குந்தியும் மாத்ரியும் வந்தனர். பாண்டுவின் வலப்பக்கமாக பேரமைச்சர் யக்ஞசர்மர் முதுமையில் தளர்ந்த உடல் கன்றுபோல கூனியிருக்க மெதுவாக நடந்துவந்தார்.

பாண்டுவும் குந்தியும் மாத்ரியும் அணிகலன்களைத் துறந்து மரவுரியாடை அணிந்திருந்தனர். ஒருகணம் அவர்களைப் பார்த்த சத்யவதி தன் அகத்தில் கூரிய வலியை உணர்ந்தவளாக பார்வையைத் திருப்பிக்கொண்டாள். வாழ்த்தொலிகள் முற்றத்தை நிறைத்து எழுந்தபோதிலும் அவர்களின் மரவுரிக்கோலம் மெல்ல அம்முழக்கத்தை கரைந்தழியச்செய்தது. திருதராஷ்டிரன் “வந்துவிட்டானா?” என்றான். விதுரன் “ஆம் அரசே” என்றான்.

பாண்டு வந்து முற்றத்தில் நின்றான். இருகைகளையும் கூப்பியபடி அங்கே நின்ற அனைவரையும் நோக்கியபின் “பெரியவர்கள் அனைவரையும் வணங்குகிறேன்” என்றான். “ஆன்றோரே, என் இளமைக்காலத் தீச்செயல் ஒன்றினால் என் மீது முனிவரின் தீச்சொல் ஒன்று விழுந்துவிட்டது என்று அறிந்துகொண்டேன். நான் செய்தவையும் அதற்கு ஈடாக நான் அடைந்தவையும் அனைவரும் அறிந்திருக்கவேண்டியவை என்று எண்ணுகிறேன். ஆகவே அவற்றை சூதர் பாடவேண்டுமென்று கோருகிறேன்” என்றான். சூதர்கள் ‘ஆம் ஆம் ஆம்’ என்று சொல்லி தலைவணங்கினர்.

“என் மீதான பழியின் கறை என் குலம் மீதோ என் மூதாதையரின் இந்நகர் மீதோ விழலாகாதென்று எண்ணியே நான் வனம்புக முடிவெடுத்தேன். விசித்திரவீரிய மாமன்னரின் அருளும் மாமுனிவர் கிருஷ்ணதுவைபாயனரின் கருணையும் என்னைக் காக்குமென உறுதிகொள்கிறேன். நமது வனங்கள் இனியவை. அங்கே கருணையை கனிகளாக நிறைத்துக்கொண்டிருக்கும் மரங்கள் நிறைந்துள்ளன. அருளே குளிர்ந்து ஓடும் ஓடைகள் உள்ளன. நான் அவற்றில் பசியாறுவேன். குளிர்ந்த மலைச்சாரலில் பிடியானையின் காலடியில் நின்றிருக்கும் குட்டிபோல வாழ்வேன்.”

“சான்றோரே, இங்கு நான் ஒவ்வொருநாளும் அஞ்சிக்கொண்டிருந்தேன். இறப்பை, அவமதிப்பை, தனிமையை. இங்கே என்னைச்சுற்றியிருந்த உறவுகளில் முள்ளில் சிக்கும் வௌவால் என என் சிறகுகளை கிழித்துக்கொண்டிருந்தேன். கானகம் என்னை விடுதலை செய்யும் என்று எண்ணுகிறேன். அனைத்தையும் துறப்பதென்பது என்ன என்று இப்போது அறிந்தேன். அது கைகளையும் நெஞ்சையும் வெறுமையாக்கி வைத்திருப்பது. வானுக்கும் மண்ணுக்கும் தெய்வங்களுக்கும் மானுடர்க்கும் எனக்களிப்பதற்கு இன்னும் எவ்வளவோ உள்ளன. அனைத்தையும் நான் பெறமுடியும். மீண்டும் மீண்டும் புதியவாழ்க்கைகளை அடையமுடியும்.”

“என்னை வாழ்த்துங்கள் சான்றோரே. நானும் என் துணைவியரும் அனைத்து நலன்களையும் அடையவேண்டும் என்று நற்சொல்கூறுங்கள்” என்று பாண்டு சொன்னான். அந்தமுற்றத்தில் நின்றிருந்த சேவகரும் படைவீரர்களும் கண்ணீர் விட்டுக்கொண்டிருந்தனர். தளகர்த்தர்களும் அமைச்சர்களும் தலைகுனிந்து கண்ணீரை அடக்கிக்கொண்டனர். திருதராஷ்டிரன் இருகைகளையும் விரித்து தலையைச் சரித்து கண்ணீர் மார்பின் மீது கொட்ட நின்றிருந்தான்.

கண்ணீர் விடமுடியவில்லை என்பதை சத்யவதி உணர்ந்தாள். நெஞ்சுக்குள் நிறைந்திருந்தவை ஏன் கண்ணீராக மாறி கண்களை அடையவில்லை. இனி இவனை நான் பார்க்கவேபோவதில்லை என நன்கறிவேன். அவன் செல்வதாகச் சொன்னதுமே அதை உணர்ந்துவிட்டேன். ஆம், இந்த மெலிந்த வெண்ணிறத்தோள்கள், இந்தக் கைகள், இந்தச் செவ்விழிகள், இந்தச் சிறு செவ்வுதடுகள், நான் கைகளில் ஏந்திய இச்சிறு உடல், இதை நான் இனி காணவே போவதில்லை. அவ்வெண்ணம் எங்கோ தீக்குழம்பாக உருகி உருகி வழிந்துகொண்டிருந்தது. ஆனால் அவள் வெறித்த விழிகளுடன் அசையாமல் நோக்கி நின்றிருந்தாள்.

பாண்டு ஒவ்வொருவரிடமாக விடைபெற்றான். படைத்தலைவர்கள் உதடுகளை இறுக்கியபடி உடைவாள்களை கைகளால் பற்றிக்கொண்டு தலைவணங்கி அவனுக்கு விடையளித்தனர். மூத்த பிராமண அமைச்சர்கள் அவன் தலைமேல் கைவைத்து வேதமந்திரம் சொல்லி கண்ணீருடன் விடைகொடுத்தனர். பாண்டு திருதராஷ்டிரனை அணுகி கால்களைத் தொட்டு வணங்கினான். திருதராஷ்டிரன் பெருங்குரலில் விம்மியபடி விதுரன் தோள்களைப் பற்றிக்கொண்டான். “அரசே, தங்கள் இளையவரை வாழ்த்துங்கள்” என்றான் விதுரன். திருதராஷ்டிரன் தன் கைகளை பாண்டுவின் தலையில் வெறுமே வைத்தான்.

தன்முன் பாண்டு பணிந்தபோது சத்யவதி “நிறைவுடன் வாழ்க!” என்று வாழ்த்தினாள். நெஞ்சு எடைமிகுந்து உடலை அழுத்துவதுபோலத் தோன்றியது. சியாமை அவளை தோளைப்பிடித்து நிறுத்திக்கொண்டாள். குந்தியும் மாத்ரியும் அவளை வணங்கியபோதும் அரசமுறைச் சொற்களில் வாழ்த்தி விடைகொடுத்தாள். அவர்கள் சென்று ரதத்தில் ஏறிக்கொண்டனர். அவர்களின் கால்கள் முற்றத்தை மிதித்துச்செல்வதை மரப்படிகளில் அவர்கள் காலெடுத்துவைத்து ஏறுவதை அவர்கள் அமர்ந்ததும் ரதம் சற்றே அசைவதை குதிரைகள் கழுத்தை குலுக்கிக்கொள்வதை அவள் வேறு எதையோ என நோக்கிநின்றாள்.

காஞ்சனம் ஒலித்ததும் பெருமுரசும் சேர்ந்து அதிர்ந்தது. சூதர்களின் மங்கல இசையும் தாசியரின் வாழ்த்துப்பாடல்களும் எழுந்தன. வைதிகர்கள் வேதநாதம் எழுப்பி நிறைகுடத்து நீரைத்தெளித்து பாண்டுவை வாழ்த்தினர். ரதம் அசைந்து முன்னால் சென்றபோது பாண்டு குனிந்து தலையை நீட்டி அரண்மனையை ஏறிட்டு நோக்கினான். அவ்விழிகளைக் கண்டதும் பழுத்த கட்டி உடைந்து சலம் பீரிடுவதுபோல சத்யவதியின் நெஞ்சிலிருந்த அனைத்துக்கண்ணீரும் பொங்கி வெளியே வந்தது. அவள் அழுதபடி சியாமையின் உடலில் சாய்ந்துகொண்டாள்.

முந்தைய கட்டுரைநாடக முகம்
அடுத்த கட்டுரைகனவுப்புத்தகம்