பகுதி பன்னிரண்டு : விதைநிலம்
[ 3 ]
மாத்ரியின் தோழி சுதமை அவளை அணிசெய்துகொண்டிருக்கையில் அனகை வந்து வணங்கி குந்தியின் வருகையை அறிவித்தாள். மாத்ரி சற்று திகைத்து எழுந்து “இங்கா? நான் மூத்த அரசியைப்பார்க்க அங்கேயே செல்கிறேன் என்று சொல்” என்றாள். “குந்திதேவி இங்கே தங்கள் அரண்மனைக்கூடத்தில் காத்திருக்கிறார்” என்றாள் அனகை. “இங்கா?” என்றபடி மாத்ரி தோழியை நோக்கினாள். சுதமை “அணிசெய்துவிட்டுச் செல்லுங்கள் அரசி” என்றாள். அனகை “குந்திதேவி தங்களை அணிசெய்யவே வந்திருக்கிறார்கள்” என்றாள்.
மாத்ரி பதில்சொல்லும் முன்னரே சுதமை “குந்திதேவியைப் பணிந்து மாத்ரிதேவி வரவேற்கிறார்கள்” என்று சொன்னாள். சற்றுமுன்னர்தான் மாத்ரி குந்தி தன்னிடம் இயல்பாகப் பழகவில்லை என்றும் நெருங்கமுயன்றபோதெல்லாம் விலகிச்செல்கிறாளென்றும் சொல்லியிருந்தாள். அவள் அப்போது தன் பெரியவிழிகளைத் தூக்கி சுதமையை நோக்கினாள். “அரசி, அவர்களின் நெஞ்சில் எழுந்த ஏதேனும் ஐயம் விலகியிருக்கும். அவர்கள் தேடிய வினாவுக்கு விடைகிடைத்திருக்கும்” என்றாள் சுதமை.
குந்தி உள்ளே வந்ததும் மாத்ரி எழுந்து வணங்கினாள். குந்தி “யாதவநாட்டில் ஒரு வழக்கமுண்டு. சபத்னியை மூத்தவள்தான் மணியறைக்கு அனுப்பவேண்டும்” என்றாள். அவளுடைய மலர்ந்த முகத்தைநோக்கியபோது மாத்ரிக்கு எந்த ஐயமும் எழவில்லை. எவ்வளவு அழகி என்ற எண்ணம்தான் எழுந்தது. தங்கத்துடன் செம்புகலக்கும்போதுதான் அழகும் உறுதியும் உருவாகிறது. பெண்மையில் சற்றேனும் ஆண்மை கலக்காவிடில் அது வெறும் குழைவாக மாறிவிடுகிறது. அவளுடைய நிமிர்வு, ஆழம் மிக்க குரல், திடமான மூக்கு, செறிந்த உதடுகள், கன்னங்களில் விழும் புன்னகைக்குழிகள், வெண்பற்கள்… தேவயானி இப்படித்தான் இருந்திருப்பாள்.
குந்தி கண்காட்டியதும் அனகையும் சுதமையும் வெளியேறினார்கள். “அமர்ந்துகொள், நான் அணிசெய்கிறேன்” என்றாள் குந்தி. “இல்லை அரசி, நான்… தாங்கள்… என்னை…” என மாத்ரி தடுமாறினாள். “அமர்ந்துகொள்ளச் சொன்னேன்” என்று சொல்லி குந்தி அவள் தோளைப்பற்றி அமரச்செய்தாள். அந்த தொடுகையிலேயே அவள் மனம் நெகிழ்ந்துவிட்டது. “நான் தங்களைப்பார்க்கும் வரை அஞ்சிக்கொண்டிருந்தேன் அரசி. தங்களை அரண்மனை முற்றத்தில் கண்டதுமே தங்களை என் அன்னைவடிவமாகவே கொண்டேன். ஒருபோதும் தாங்கள் எனக்கோ பிறருக்கோ துன்பமிழைக்கமாட்டீர்கள் என்று உறுதியடைந்தேன்” என்று சொல்லும்போது மாத்ரியின் குரல் இடறியது. முகம் சிவந்து கண்களில் கண்ணீர் நிறைந்தது.
“நான் உன்னைப்பற்றி கேள்விப்பட்டிருந்தேன். சிறுமி என்று சொன்னார்கள். ஆனால் இத்தனை சிறியபெண் என நினைக்கவில்லை” என்றாள் குந்தி. “நீ என்னை அரங்கிலும்கூட அக்கா என்றே அழைக்கவேண்டும்.” “ஆணை” என மாத்ரி புன்னகைசெய்தாள். “புன்னகை செய்யும்போது பேரழகியாக இருக்கிறாய். புன்னகைமட்டும் செய்துகொண்டிரு… வேறெதையும் எண்ணாதே” என்று குந்தி சொல்லி அவள் அணிகளை சரிநோக்கத் தொடங்கினாள்.
“நான் எப்போதுமே எதைப்பற்றியும் எண்ணியதில்லை” என்றாள் மாத்ரி. “என் தமையன்தான் மாத்ரநாட்டின் பகைவர்களைப் பற்றியே எண்ணிக்கொண்டிருப்பார். என்னைவைத்து ஒரு வலுவான ஷத்ரியநாட்டின் உதவியை அடைந்துவிடலாமென அவர் சொல்வார்.” குந்தி “ஆம், அது நல்ல திட்டம்தான். அடைந்தும் விட்டார்” என்றாள். “ஆனால் நானறிந்த தமையனல்ல இப்போதிருப்பவர். அவர் எப்போதும் உவகை நிறைந்தவர். காடுகளில் வேட்டையாடி அலையவும் இசைகேட்டு இரவெல்லாம் விழித்திருக்கவும் விரும்புபவர். இப்போது அவரது இயல்பே மாறிவிட்டது.”
“அரசச்சுமைகள் அல்லவா?” என்றாள் குந்தி. “அல்ல அக்கா, அவருடைய உள்ளத்தில் வேறேதோ குடியேறிவிட்டது. எனக்கு சொல்லத்தெரியவில்லை. மிகமிக அரிய சில நிகழ்வுகள் மனித வாழ்க்கையில் நிகழுமென கதைகளில் சொல்லப்பட்டிருக்கிறதே. ராகவ ராமனின் வாழ்க்கையில் அவர் கானகமேகவேண்டுமென தந்தையின் ஆணை வந்தது போல… இல்லை, சீதையை இலங்கைமன்னன் தூக்கிக்கொண்டுசென்றதுபோல. அந்த நிகழ்ச்சியின் விளைவுகளில் இருந்து அவர்களால் வெளியேறவே முடியாதல்லவா? அவர்கள் முழுமையாகவே மாறிவிடுவார்களல்லவா? அதைப்போல..”
“சல்லியர் எவ்வண்ணம் மாறினார்?” என்றாள் குந்தி. மாத்ரி தன் பேச்சு எங்கு கொண்டுவந்துவிட்டது என்பதை உணர்ந்தவளாகத் திகைத்து “தாங்கள் சினம்கொள்ளவில்லை என்றால் சொல்கிறேன். தங்களை மணம்கொள்ள மார்த்திகாவதிக்கு வந்தபோது தமையனார் பூத்தமரம்போலிருந்தார். திரும்பிவந்தவர் இன்னொருவர். அதன்பின் பழைய தமையனார் மீளவே இல்லை. கசப்பும் சினமும் கொண்ட இருண்ட தெய்வம் ஒன்று அவரில் ஏறிக்கொண்டிருப்பதுபோலத் தோன்றியது” என்றாள் மாத்ரி.
“அது மெல்லிய ஏமாற்றம்தான்” என்றாள் குந்தி. “நாம் அரசியர். நமக்கென எண்ணங்களோ விழைவுகளோ இல்லை. நம் அரசுகளின் விளையாடலில் வெறும் காய்கள்,” மாத்ரி பெருமூச்சுடன் “ஆம், உண்மைதான் அக்கா. என்னை அஸ்தினபுரிக்கு அனுப்புவதாக என் தமையன் முடிவெடுத்திருப்பதை பீஷ்மபிதாமகர் மாத்ரபுரிக்கு வந்தபின்னர்தான் நான் அறிந்தேன்” என்றாள். “ஆம், அதை நான் உணரந்தேன். ஆனால் அது நம் கடமையை மீறிச்செல்ல ஒருபோதும் வழிவகுக்கலாகாது” என்றாள் குந்தி. அந்த வழக்கமான சொற்றொடரினூடாக அந்த இக்கட்டான இடத்தைவிட்டு பேச்சை வெளிக்கொண்டுவந்ததை உணர்ந்தபின் “உன் சேடி அழகுணர்வுள்ளவள். நகைகளை கோத்தமைத்திருக்கும் விதம் சிறப்பாக உள்ளது” என்றாள்.
“சுதமையும் நானும் சேர்ந்தே வளர்ந்தோம்” என்றாள் மாத்ரி. “சுதமையின் அன்னை கிரீஷ்மை என் அன்னையின் சேடியாக இருந்தாள்.”. “சேடிப்பெண்களுடன் எங்கும் செல்லமுடிகிறது என்பதே அரசியருக்கு இருக்கும் ஒரே இனிய வாய்ப்பு” என்று குந்தி புன்னகை செய்தாள். “அக்கா, என்னை எதற்காக இங்கே கொண்டுவந்தார்கள் என்று தெரியவில்லை. எதற்காக என்றாலும் நான் என்றும் உங்கள் தங்கை. உங்கள் அடிமை என்றுவேண்டுமானாலும் கொள்ளுங்கள். என் நலன் என் விருப்பு என ஏதும் இல்லை. நான் என்றும் உங்கள் கைகளுக்குள் இருக்கவே விழைகிறேன். என் மேல் ஒருநாளும் நீங்கள் ஐயமோ விலக்கமோ கொள்ளலாகாது” என்றாள் மாத்ரி.
குந்தி அவளைத் தழுவிக்கொண்டு “உன் மீது நான் ஏன் மனவிலக்கம் கொள்ளவேண்டும்?” என்றாள். “நீ அரசியலாடலில் ஒரு எளிய காய் என நான் நன்கறிவேன். ஆகவேதான் சொன்னேன், உன் விளையாட்டுலகுக்கு வெளியே வராதே என்று. இதை உன்னால் தாளமுடியாது. நான் இதைப்பார்த்துக்கொள்கிறேன்.” குந்தி மலர்மாலையை மாத்ரியின் கூந்தலில் சூட்டினாள். மாத்ரி ஆடியைப்பார்த்து அதை சரிசெய்துகொண்டாள். அவள் எதையோ கேட்கப்போவதை அந்த அமைதியிலிருந்து, உடலில் உருவான மெல்லிய சமநிலையின்மையிலிருந்து உய்த்துக்கொண்டாலும் குந்தி அதை அவள் சொல்வதற்காகக் காத்திருந்தாள்.
மாத்ரி “அக்கா” என்றாள். “சொல்” என்றாள் குந்தி. “நம் அரசரின் உடல்நிலைபற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” குந்தி புன்னகையை இதழ்களுக்குள் நிறுத்திக்கொண்டாள். மாத்ரி அந்த வினாவை கேட்கும் விதங்களை தொட்டுத்தொட்டுச்சென்று வந்தடைந்தது அந்த நேரடிச் சொற்றொடர். “அவரது உடல்நிலையைப்பற்றி உன்னிடம் என்ன சொன்னார்கள்?” என்றாள் குந்தி. “அவர் பிறவிநோய் கொண்டவர். அவரது குருதி வெண்ணிறமானது, ஆகவே…” என்றாள் மாத்ரி. “சொல்” என்றாள் குந்தி. “ஆண்களின் விந்து வெண்விழியின் நிறம்கொண்டது. அவரது விழி குருதிநிறமானது” என்று மாத்ரி சொல்லி ஏறிட்டுப்பார்த்தாள்.
“பிறவிக்குறைகளைப்பற்றி மருத்துவர்கள் முழுதறிந்தவர்களல்ல” என்று குந்தி சொன்னாள். “அரசருக்கு உடலில் தோல் வெண்ணிறமானது. யானைகளிலும் பன்றிகளிலும் அவ்வாறு வெண்ணிறமானவை பிறப்பதுண்டு. அது குறைபாடுதான். அவரது குருதி நலமாகவே உள்ளது.” மாத்ரி மேலும் எதையோ கேட்க எண்ணுவதை அவள் உடலில் பரவிய தத்தளிப்பு காட்டியது. நீர்நிறைந்த தோல்குடம் தளும்புவதுபோல என குந்தி நினைத்துக்கொண்டாள்.
“அவரது நரம்புகள் சிடுக்குவிழுந்தவை என்பதே அவரது உண்மையான குறைபாடு. அது அவரது பிறவியால் வந்ததல்ல. அவரது அன்னை அவரை அவ்வாறு வளர்த்தார். அவரால் ஒளியை நேருக்குநேர் பார்க்க இயலாது. அவரது தோல் நேரடி வெயிலை தாங்காது. அவரது அன்னை அகமுதிர்வற்ற பேதை. அவரை தனக்கான விளையாட்டுப்பாவையாக ஆக்கிக்கொண்டார். புறவுலகைக் காட்டவில்லை. மானுடக்குழந்தைகள் விழுந்தும் எழுந்தும் கற்றுக்கொள்ளும் எதையுமே கற்றுக்கொள்ள விடவில்லை. அதுதான் அவரது நரம்புகளை நொய்மையாக்கியிருக்கிறது. அவற்றை மருத்துவர் சீர்செய்ய இயலாது. நாம் அவற்றை வலுப்படுத்துவோம்.”
மாத்ரி வாய்நீரை விழுங்கும் ஒலி கேட்டது. “சொல்” என்றாள் குந்தி. “இல்லை” என அவள் தயங்கினாள். “நீ கேட்கவிருப்பதை நான் அறிவேன்” என்றாள் குந்தி. “ஆம் அக்கா. அவர் உங்கள் படுக்கையில் ஆண்மகனாக இருந்திருக்கிறாரா?” என்றாள் மாத்ரி. மீண்டும் ஒரு நேரடியான வினா. மதியூகிகளிடம் பேசிப்பேசி நேரடி வினாக்களை எதிர்கொள்ளும் வல்லமையை இழந்துவிட்டேனா என்ன என்று குந்தி வியந்துகொண்டாள்.
“இல்லை” என்றாள் குந்தி. மாத்ரி நிமிர்ந்து நோக்கினாள். “அதற்குக் காரணம் நானே. என்னை அவர் துணைவியாக எண்ண இயலவில்லை. நான் அவரை முதலில் காணும்போது அவரது நரம்புகள் அதிர்ந்து முடிச்சிட்டுக்கொண்டன. நான் அவரை அன்னையின் இடத்திலிருந்து ஆற்றுப்படுத்தினேன். அதன்பின் நாங்கள் ஆணும்பெண்ணுமாக உணரவில்லை. என் உடல் அவரை என் மைந்தனாகவே எண்ணுகிறது.” மாத்ரியால் அதை விளங்கிக்கொள்ள முடியவில்லை என கண்கள் காட்டின. “ஆனால் அவர் உடலால் பெண்ணுடன் இருக்கமுடியும். அதை நான் அறிவேன்.”
மாத்ரி மூச்சை இழுத்துவிட்டாள். “அவ்வாறு ஒருமுறை இருந்துவிட்டாரென்றால் அவரைக் கட்டியிருக்கும் நரம்புகளின் முடிச்சுகளெல்லாம் தளரும். அவர் விடுதலை பெறுவார். அதை நீ நிகழ்த்துவாயென நான் எண்ணுகிறேன்” என்றாள் குந்தி. “எனக்கு ஒன்றுமே விளங்கவில்லை அக்கா” என்றாள் மாத்ரி. “விளங்கிக்கொள்ள ஏதுமில்லை. நீ அவருக்கிணையான விளையாட்டுப்பெண். அவ்வாறே அவருடன் இரு” என்றாள் குந்தி.
மாத்ரி மெல்லிய விசும்பல் ஓசையுடன் முகம் பொத்திக்கொண்டாள். “என்ன இது? நீ ஒரு ஷத்ரியப்பெண். அஸ்தினபுரியின் அரசி” என்று அவள் தலையைத் தொட்டு தன்னுடன் அணைத்துக்கொண்டாள் குந்தி. “எனக்கு அச்சமாக இருக்கிறது… என் அகம் நடுங்கிக்கொண்டே இருக்கிறது.” குந்தி “அது நீ கேட்ட கதைகளின் விளைவு. அவரை அணுக்கமாகக் கண்டதுமே உன் அச்சம் மறைந்துவிடும்” என்றாள்.
கதவருகே அனகை வந்து நின்றாள். குந்தி ஏறிட்டதும் “சிறியஅரசியின் சேடி சாரிகை வந்திருக்கிறாள்” என்றாள் அனகை. “ஏன்?” என குந்தி புருவங்கள் சுருங்க வினவினாள். “இன்று மணியறைபுகும்நாள் என சிறிய அரசி சற்றுமுன்னர்தான் அறிந்திருக்கிறார்கள். உடனே ஆதுரசாலைக்குச் சென்று மருத்துவரைச் சந்தித்தார்களாம். மருத்துவர் அருணர் அரசர் இன்னும் ஒருமண்டலகாலம் மணவறை புகுதல் நன்றல்ல, ஒரு மண்டலகாலம் பூர்ணலேபன நீராட்டுக்குப்பின் செய்வதே முறை என்றாராம். அரசரை ஆதுரசாலைக்குச் செல்ல சிறியஅரசி ஆணையிட்டிருக்கிறார்கள்” என்றாள் அனகை.
“அரசர் இப்போது எங்கிருக்கிறார்?” என்றாள் குந்தி. “இன்னும் ஆதுரசாலைக்குச் செல்லவில்லை” என்றாள் அனகை. “அவரிடம் இன்று மணியறைபுகுதல் நிகழும் என நான் சொன்னதாகச் சொல். அருணர் இக்கணமே ஆதுரசாலைக்குத் திரும்பிவிடவேண்டுமென்றும், நான் அழைக்காமல் ஆதுரசாலைவிட்டு வெளியே வரலாகாது என்றும், எவரையும் சந்திக்கலாகாதென்றும் சொல்!” என்றாள் குந்தி. அனகை தலைவணங்கினாள். “மீறப்படும் எந்த ஆணையும் கழுவேற்றத்தண்டனை நோக்கிக் கொண்டுசெல்லும் என்றும் அருணரிடம் சொல். நான் மீறல்களை விரும்பமாட்டேன்.”
“ஆணை” என்று அனகை வணங்கி பின்னகர்ந்தாள். மாத்ரி குந்தியின் கைகளைப் பற்றிக்கொண்டு “அக்கா, உங்களால் உண்மையிலேயே ஒருவரை கழுவேற்ற ஆணையிட முடியுமா?” என்றாள். குந்தி புன்னகைசெய்து “உயிர்விடச் சித்தமாக இருக்கும் எவராலும் கொல்லவும் முடியும்” என்றாள். “அக்கா நீங்கள்தான் உண்மையான ஷத்ரியப்பெண். அஸ்தினபுரியின் பேரரசி. நீங்கள் யாதவப்பெண், தேவயானியின் அரியணையில் நீங்கள் அமரக்கூடாது என்று ஷத்ரியர்கள் சொன்னார்கள் என்று நினைக்கும்போது சிரிப்பு வருகிறது” என்றாள்.
“குலம் குணத்தால் வருவது என்றே நூல்கள் சொல்கின்றன” என்றாள் குந்தி. “ஆனால் குணம் தன்னை ஐயம்திரிபற நிறுவியாகவேண்டும். அவ்வாறு முன்னர் நிறுவப்பட்ட குணங்களால் ஆனவையே இன்றைய குலங்கள்.” மாத்ரி அதைப்புரிந்துகொள்ளாமல் தலையசைத்தாள். பின்பு “அரசரின் அன்னை தங்கள் ஆணையைக்கேட்டால் என்ன செய்வார்?” என்றாள். குந்தி “என் ஆணையை பேரரசியும் பிதாமகருமன்றி எவரும் மீறமாட்டார்கள்” என்றாள்.
மாத்ரியை குந்தியே மணியறைக்கு அழைத்துக்கொண்டுசென்றாள். மாத்ரி கையில் பொற்தாலத்தில் மங்கலப்பொருட்கள் வைத்திருந்தாள். அவளுடைய கைகளின் நடுக்கத்தில் தாலம் அசைந்தது. மாத்ரி “என் கால்கள் அச்சத்தால் நடுங்குகின்றன” என்றாள். அவளுடைய வெண்ணிறமான வட்டமுகமும் குறுகிய கழுத்தும் திறந்த வெண்பளிங்குத் தோள்களும் வியர்வையால் மூடப்பட்டிருந்தன. அவளுடைய வியர்வைக்கு வாடிய பாதிரிமலரின் வாசனை இருந்தது. “அச்சமும் இந்தத் தருணத்தின் அழகுதான் என்பார்கள்” என்றாள் குந்தி.
அனகை எதிரே வந்து வணங்கினாள். குந்தி அவளை நோக்கியபின் மாத்ரியை மணியறையின் வாயில்முன் கொண்டு சென்று நிறுத்தி “அனைத்து இன்பங்களும் நிகழ்க! குலம் வாழும் மைந்தர்களைப்பெறுக! தெய்வங்களனைத்தும் துணையாகுக!” என வாழ்த்தி தாலத்தில் இருந்த மலர் ஒன்றை எடுத்து அவளுடைய தலையில் சூட்டி உள்ளே அனுப்பினாள். மாத்ரி ஓரடி எடுத்துவைத்து அறியாமலேயே ஒரடி பின்னால் நகர அவள் தோளைப்பிடித்து உந்தி உள்ளே செலுத்திவிட்டு கதவை பின்பக்கம் இழுத்து மூடினாள்.
அவள் திரும்பி நடந்தபோது அனகை பின்னால் வந்தாள். “என்ன சொல்கிறார்கள்?” என்றாள் குந்தி . “தங்கள் ஆணைகளைச் சொன்னதுமே சொல்லிழந்து திகைத்து அமர்ந்துவிட்டார்கள். நான் திரும்பியதும் என் பின்னால் எழுந்துவந்து உரத்தகுரலில் நீங்கள் அவர் மைந்தனை கொல்லப்போகிறீர்கள் என்று கூவினார். பின்னர் தலையில் அறைந்து அழுதபடி உள்ளே ஓடினார்கள்.” குந்தி ஒன்றும் சொல்லவில்லை. பெருமூச்சுடன் நடந்தாள்.
தன் அறைக்குள் சென்று மஞ்சத்தில் சாய்ந்துகொண்டாள். அனகை வந்து அருகே தரையில் அமர்ந்தாள். “பேரரசியிடம் சொன்னாயா?” என்றாள். “ஆம், ஆனால் பேரரசி மெல்ல அனைத்திலும் ஈடுபாட்டை இழந்துவருவதாகத் தெரிகிறது” என்றாள் அனகை. “முதுமை” என்றாள் குந்தி. “அனைத்தையும் நீங்களே பார்த்துக்கொள்வீர்கள் என எண்ணுகிறார்கள்” என்றாள் அனகை. “ஆம் அதுவும் இயல்புதானே?”
குந்தி கண்களை மூடிக்கொண்டு இமைகளுக்குள் சுழன்ற செந்நிற ஒளிப்பொட்டுகளை பார்த்துக் கொண்டிருந்தாள். “மார்த்திகாவதியின் உளவுச்செய்திகள் நான்கு வந்தன. சிறப்பாக ஏதுமில்லை. கம்சன் மகதத்திற்குச் சென்றுவிட்டார். மகதத்தின் அணிப்பதாகைகளில் ஒன்றை சூடிக்கொள்ளும் உரிமையை மகதம் அளிக்கும் என்று சொன்னார்கள்.” குந்தி புன்னகையுடன் கண்களை மூடியபடியே “ஆம், அவ்வளவுதான் அளிப்பார்கள். ஒருபோதும் மகற்கொடை செய்யமாட்டார்கள்” என்றாள்.
“அஸ்தினபுரியின் இரண்டு படைப்பிரிவுகளை மார்த்திகாவதிக்கு அருகே ஊஷரபதத்தில் நிறுத்தும்படி விதுரரின் ஆணை பிறந்திருக்கிறது. குந்திபோஜர் மகிழ்ந்து செய்தியனுப்பியிருக்கிறார்” என்றாள் அனகை. “மார்த்திகாவதி இனிமேல் கப்பமும் கட்டவேண்டியதில்லை. இன்னும் இருபத்தெட்டு நாட்களில் யாதவர்களின் காளிந்திபோஜனப் பெருவிழா. அனைத்து குலங்களும் கூடவிருக்கின்றன. குந்திபோஜர் விருஷ்ணிகுலத்தவரும் தன் தலைமையை ஏற்கவேண்டுமென கோரவிருக்கிறார்.”
“அவர்கள் இணைந்துகொண்டால் கம்சருடன் போருக்குச் செல்வாரா உன் அரசர்?” என்று கண்களை மூடியபடியே குந்தி கேட்டாள். அனகை “அப்படி திட்டமிடுவதே சிறந்தது அல்லவா? அதுவே அவரை தலைமையைநோக்கிக் கொண்டுசெல்லும்” என்றாள். “அனகை, தலைமையை ஏற்கும் தகுதி இயல்பிலேயே வரவேண்டும். குந்திபோஜருக்கு இப்போது ஐம்பது வயது. இதுவரை அவர் ஏற்காத தலைமையை இனிமேலா ஏற்கவிருக்கிறார்?” என்றாள் குந்தி. புரண்டு படுத்து கண்களைத்திறந்து சிரித்தபடி “ஆனால் அனைத்துக்கோழைகளுக்கும் பேரரசுக்கனவுகள் இருக்கின்றன” என்றாள்.
“அவர் விதுரரின் உதவியைத்தான் பெரிதும் நாடியிருக்கிறார்” என்றாள் அனகை. “தினமும் ஒரு செய்தி விதுரருக்கு வந்துசேர்கிறது.” குந்தியின் முகத்தில் புன்னகை மறைந்து உள்ளே ஏதோ எண்ணங்கள் எழுவது தெரிந்தது. “இன்னொரு செய்தியும் செவியில் விழுந்தது” என்றாள் அனகை. குந்தி வெற்றுவிழிகளைத் திருப்பி பார்த்தாள். “உத்தரமதுராபுரியின் தேவகருக்கு சூத மனைவியில் பிறந்த சுருதை என்னும் மகள் இருப்பதாகச் சொல்கிறார்கள். இளவரசியருக்குரிய கல்வியை அவளுக்கு அவர் அளித்திருக்கிறார். தேவகியின் தங்கையாக அரண்மனையில்தான் வாழ்கிறாள்.”
குந்தி தன் விழிகள் நிலையழிவதை உணர்ந்து அவற்றை அடக்கி அனகையின் முகத்தில் நிலைக்கச்செய்தாள். “அது எவருடைய திட்டம்?” என்றாள். “பிதாமகர் பீஷ்மரிடம் குந்திபோஜர் தெரிவித்திருக்கிறார். பிதாமகருக்கும் அதில் ஒப்புதல்தான்.” குந்தி சிலகணங்கள் நோக்கியபடி இருந்தபின் “விதுரருக்கு?” என்றாள். “அவர் பிதாமகரைக் கடந்து ஏதும் எண்ணுபவரல்ல என்கிறார்கள்.” குந்தியின் விழிகள் மீண்டும் காற்றுபட்ட கதிர்போல அலைபாய்ந்ததைக் கண்டு அனகை வியந்தாள். “அவளை நான் கண்டிருக்கிறேனா?” என்றாள் குந்தி. “வாய்ப்பிருக்கிறது அரசி. அவளும் தேவகியுடன் கன்னிமாடத்தில் இருந்திருக்கிறாள்.”
குந்தி எழுந்து அமர்ந்து “அவள் மாந்தளிர் நிறமுள்ள மெல்லிய பெண். தேவகியைவிட ஒருவயது இளையவள்” என்றாள். “ஆம், நன்றாகவே நினைவுகூர்கிறேன். அவள்தான் எனக்கு ஒவ்வொருநாளும் மருத்துவச்சியை அழைத்துவந்தாள். அவள் பெயரை அப்போது நான் நினைவில் நிறுத்தவில்லை” என்றபடி கண்களை மூடிக்கொண்டாள். “சுருதை… ஆம் அவள்தான்.” அனகை மெல்லிய புன்னகையை வாய்க்குள் நிறுத்தி “அழகியா?” என்றாள். குந்தி திடுக்கிட்டு கண்விழித்து திரும்பிநோக்கியபோது அனகை இயல்பாக “அரசகுலத்தவள் போலிருக்கிறாள் என்று சொன்னார்கள்” என்றாள்.
“ஆம், அழகிதான். அரசகுலத்துத் தோற்றம் கொண்டவள்தான்” என்று குந்தி சொன்னாள். பெருமூச்சுடன் “இந்தப் பகடையில் எப்பக்கம் எண்கள் விழுகின்றன என எவராலும் சொல்லிவிடமுடியாது” என்றாள். “ஆம் அரசி, தேவகரையும் அஸ்தினபுரியின்பக்கம் இழுத்துக்கொள்வது தன் வெற்றியின் அடுத்த படி என குந்திபோஜர் எண்ணுகிறார். முன்னரே தங்கள் தமையன் தேவகியை மணக்கவிருக்கிறார் என்று குந்திபோஜர் அறிந்திருக்கிறார்.”
சுதமை வாயிலைத் தட்டி “அரசி!” என மூச்சடைக்க மெல்லியகுரலில் கூவியபோது குந்தி எழுந்துகொண்டாள். அதுவரை அவள் சொற்கள் வழியாக தள்ளித்தள்ளிவிட்டுக்கொண்டிருந்த அச்சம் எழுந்து கருஞ்சுவராக கண்முன் நின்றது. “என்ன?” என்றாள் அனகை. “அரசர்…” குந்தி மேலாடையை அணிந்துகொண்டு “என்னுடன் வா…வந்தபடியே சொல்” என்றாள்.
“அரசி, இளைய அரசி மணியறையில் அரசருடன் மஞ்சத்தில் இருந்திருக்கிறார். அவர் காமமும் கொண்டிருக்கிறார். அதன்பின்…” குந்தி “அவருக்கு இப்போது தன்னினைவிருக்கிறதா?” என்றாள். “இல்லை… இளைய அரசி அழுதுகொண்டிருக்கிறார்” குந்தி “அனகை, உடனே ஆதுரசாலைக்குச் சென்று அருணரையும் பிற மருத்துவர்களையும் அழைத்துவா” என்றாள். அனகை தலைவணங்கி ஓடினாள்.
குந்தி மணியறைக்குள் நுழைந்தபோது காலடியோசைகேட்டு அதிர்ந்து திரும்பிய மாத்ரி ஓடிவந்து அவளை பற்றிக்கொண்டாள். ஆடைகளை பிழையாகச் சுற்றியிருந்தாள். கண்ணீர் குந்தியின் தோள்களில் விழுந்தது. “அக்கா அக்கா” என்ற சொல்லுக்குமேல் மாத்ரியால் பேசமுடியவில்லை. அப்பால் மஞ்சத்தில் விழிகள் மூடி உயிரற்ற உடலென வெளுத்துப்போய் பாண்டு கிடந்தான். கைவிரல்கள் இறுகப்பற்றப்பட்டிருக்க பாதங்கள் வெளிநோக்கி இழுபட்டு வளைந்து உள்ளங்கால் வெண்மைகள் இறுகித் தெறிக்க கழுத்திலும் கன்னங்களிலும் நீலநரம்புகள் புடைத்துத் தெரிந்தன.
மாத்ரி மயங்கி குந்தியின் தோள்களைப் பற்றியிருந்த கைகள் தளர்ந்து நழுவ கீழே சரியப்போனாள். அவளைப்பிடித்துக்கொண்டு “சுதமை, இவளை அந்தபுரத்துக்குக் கொண்டு செல். சேடிகள் எதையும் அறியவேண்டாம். ஆதுரசாலைக்கு ஆளனுப்பி மருத்துவச்சிகளை வரச்சொல்” என்றாள் குந்தி. சுதமை மாத்ரியை இருகைகளையும் பற்றிச் சுழற்றி தோளில் தூக்கிக்கொண்டாள்.