வல்லினம் உரை

http://www.youtube.com/watch?v=3uHF8z_RVeA&list=UUfbl4acGS6o5f5Tq_EWRiaQ

http://www.youtube.com/watch?v=pw-gmw38Fvw&list=UUfbl4acGS6o5f5Tq_EWRiaQ

மேலுள்ள இரண்டு லிங்க் வழி உங்கள் உரையைக் கேட்டேன் சர். கண்களில் கண்ணீர் வந்துவிட்டது. கவிதையை உணரும் போது அவ்வாறு வரும் என்பார்கள். கவிதை என்பதை என்னவென்று உணரும் போதும் அது வருகிறது. யானையையும் தேனியையும் பற்றி சொல்லும் இடம் SUPERB. அது ஏன் மலேசிய நிகழ்வுகளில் மட்டும் நீங்கள் அபரிமித எழுச்சியுடன் பேசுகிறீர்கள் :) ? ஏற்கனவே நாவல் குறித்த உங்கள் உரையின் போதும் அது குறித்து கடிதம் எழுதியிருந்தேன். வல்லினத்துக்கு வாழ்த்துகள்.

மீனா

அன்புள்ள மீனா,

வல்லினம் உரை நன்றாகவே அமைந்தது. அதற்குக்காரணம் அங்கிருந்த சூழல். மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் சமீபகால உரைகள் நன்றாக வந்திருப்பதாக நண்பர்கள் சொன்னார்கள். அரங்கினருக்குத்தான் நான் நன்றி சொல்லவேண்டும்.

அங்கிருந்து வந்தபின் மதுரை காமராஜர் பல்கலையில் ஓர் உரைக்காகச் சென்றிருந்தேன். தமிழகக் கல்லூரிகளுக்குச் செல்ல நான் விரும்புவதில்லை. நான் பெரிதும் மதிக்கும் இளம் சிந்தனையாளரின் அழைப்பு காரணமாக செல்லநேர்ந்தது. மேடையில் பேசுபவனை அவமதிப்பது எப்படி என பயிற்சி பெற்றுவந்த மூடர்களாக இருந்தனர் அவையினர். எங்காவது பார்த்துக்கொண்டு அமர்ந்திருப்பது பரவாயில்லை. உரைநடுவே முதுகைக்காட்டி எழுந்துசெல்வது, பாதி உரையில் வந்தமர்வது, உடனே சிலர் எழுந்து செல்வது, வரும்போதும் செல்லும்போதும் கதவை படீரென திறந்து மூடுவது என அனேகமாக உலகில் வேறெங்குமே காணக்கிடைக்காத நடைமுறை.

மேடையிலேயே என் வருத்தத்தையும் கோபத்தையும் தெரிவித்துவிட்டேன். இனிமேல் பல்கலைக்கழக நிகழ்ச்சிகளுக்கு தயவுசெய்து என்னை நண்பர்கள் அழைக்கக்கூடாது என கோரிக்கை விடுத்தேன். நமக்கு மாணவர்கள் என எவரும் இல்லை. அடிப்படை நாகரீகமோ குறைந்தபட்ச அறிவுத்திறனோ இல்லாத மூடர்கள் என்ன காரணத்தாலோ கல்லூரிக்கு வந்து அமர்ந்திருக்கிறார்கள். தயாரித்துக்கொண்டுசென்றிருந்த நல்ல உரையை ஆற்றி முடிக்க அரும்பாடுபட்டேன்.

மலேசியாவின் கல்லூரிச்சூழலை நினைத்து நினைத்து ஏக்கமும் பொருமலும் கொண்டிருக்கிறேன். தமிழ்ச்சாதியை எண்ணி விதியிடம் குமுறியவனின் சொற்கள்தான் நினைவில் எழுந்தன.

ஜெ

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 44
அடுத்த கட்டுரைமலேசியாவும் இலக்கியமும்