சிறு பொன்மணி அசையும்

அது ஒரு காலம் ஜெ..

கல்வி தேடிப் பிறந்த ஊர் பிரிந்து சென்ற காலம். கனவிலும், சில தடவைகள் நனவிலும் பார்த்துத் தீராத அவளையும் பிரிந்து சென்ற காலம்.

தூரதேசக் கல்வித் தேடல் பூசல்களில் மனம் சலித்துக் கண் மூடும் கணங்களில் எல்லாம் அந்த முகம் கண்னகம் நிறையும்.. ஆறுதல் சொல்லும்.. சிரிக்கும்.. கண்மயங்கிச் செருகுமுன் தென்படும் அம்முகம் கனவிலும் வந்துலவும். எழுந்தவுடன், தன்நினவு மனதுள் எழும் அடுத்த கணம் மீண்டும் வரும்..

நாடியில் மட்டுமல்ல, அவள் கடிதங்களிலும் துடிப்பு இருக்குமென மயங்கிய காலம்.. கூரிய நாசியும், முழு நிலவாய்க் கருவிழிகளும், மழைக்கால மின்னல் போல் வெட்டிச் செல்லும் கூர் அறிவும்..

முதல் பருவம் முடிந்து, ஊர் வந்து, அத்தையென்னும் அம்மை தந்த சிற்றுண்டி முடித்த அடுத்த கணம் அவளைத் தேடிப் பயணம்.. கோவை தாவரவியல் பூங்காவின் நிறுத்தத்தில் நின்ற பேருந்தில் இருந்து இறங்கிய கால்கள் அவள் விடுதி வாசலுக்கு எப்படிச் சென்றன என யாரறிவார்??

முதல் தளத்தின் படிகளில் இருந்து துள்ளலாய் இறங்கி வரும் அவள் காதுகளின் கம்மல்கள் ஆடிய நடனம்..

முகமன் கூறும் அவளுக்கு பதில் முகமன் வாய் சொல்கிறது.. உள்ளே உள்ளம், மழை முடிந்த காலை வீசும் தென்றலில், இளங்கன்றாய்த் தாவிக் குதித்தாடுகிறது..

”இந்த முகம், இந்த விழிகள், இவ்விதழ், இந்நாசி, இந்நறுநுதல், இங்கே நான் என இவையன்றி ஏதுமில்லா பேருலகம். தன்னைத்தான் நோக்கி வியந்து நிற்கும் பெருங்கணமென காலம்.”

மீண்டும் வாழ்ந்தேன் அக்காலம். காலனை வென்று நிற்கும் உம் எழுத்து..

பாலா

முந்தைய கட்டுரைஇரவும் இருளும்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 44