காந்தி, கடிதங்கள் தொடர்கின்றன

அன்புள்ள ஜெயமோகன்,

 

நீங்கள் காந்தி பற்றி குறிப்பிட்டு இருந்த ‘Post Modern Gandhi and other essays’
படித்துக் கொண்டு இருக்கிறேன். மிகச்சிறந்த வகையில் எழுதப்பட்டு இருக்கிறது. Rudolph தம்பதியினர் இங்கே ராஜன் வேலை செய்யும் இடத்துக்கு (Berkeley) அருகே தான் வசிக்கின்றனர். நீங்கள் விரும்பியிருந்தால் கூட சந்தித்து இருக்கலாம்.

 

இந்த புத்தகத்தில் இருந்து திருவாளர் ஜஸ்வந்த் சிங் நிறைய ‘சுட்டு’ இருக்கிறார். அடைப்புக்குறி போடாமல் சும்மா புகுந்து விளையாடி இருக்கிறார்.

 

நிற்க. உங்களிடம் கேட்க இருந்த கேள்வி வேறு. Anna Karenina படித்து முடித்து Anna தற்கொலை செய்து கொண்ட இடத்தில் நெஞ்சு விம்மி எனக்கும் இதயம் இருக்கிறது என்று நிருபித்துக்கொண்ட பின் அன்னா இரண்டு முறை கண்ட ஒரே கனவின் பொருள் என்ன என்று சுமாராக கூட புரியவில்லை. இதற்கு ஏதாவது முக்கியத்துவம் உண்டா?

 

எனக்கு தெரிந்த வகையில் Vronsky யுடனான முதல் சந்திப்பில் ரயில் தண்டவாளத்தில் வேலை செய்து வந்த ஏதாவது கிழம் கண்ணில் பட்டது மனதில் தங்கி இருக்குமோ என நினைக்கிறேன்.

 

இப்படி ‘கோனார் உரையாக’ உங்களிடம் கேட்பது கொஞ்சம் அதிகம் தான். உங்களுக்கு நேரம் கிடைத்தால் பதில் எழுதவும்.

 

 

நன்றி,

ஸ்ரீநிவாஸன்.

 

 

 

 

 

அன்புள்ள ஸ்ரீனிவாசன்

 

ருடால்ப் தம்பதியினரைச் சந்தித்திருக்கலாம். ஆனால் என்ன சிக்கல் என்றால் ஓர் இந்திய பிராந்திய மொழி எழுத்தாளன் எங்குமே தன்னை எழுத்தாளனாக அடையாளப்படுத்திக்கொள்ள முடியாது. ஒரு வாசகனாக மட்டுமே பேசமுடியும். நாலுபேருக்குக் காட்டும்படியான ஒரு மொழிபெயர்ப்பு அவனுக்கு அமைவதேயில்லை.

 

மற்றும் சிலர் சொன்னார்கள் ஜஸ்வந்த்சிங் நிறையச் சுட்டிருக்கிறார் என்று. இதற்கெல்லாம் டெஹல்கா வந்து படம்பிடிக்கமாட்டார்கள் என்று துணிந்திருப்பார்

 

அன்னாகரீனினாவின் அந்தக்கனவு இலக்கியத்தின் ‘மர்மங்களில்’ ஒன்று. வில்லியம் எம்ஸன் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். புதுத்திறனாய்வு என்று சொல்லப்படும் அமெரிக்க விமரிசன மரபைச் சேர்ந்தவர். இம்மாதிரியான பொருட்குழப்பங்கள் வெளிப்பாட்டுமயக்கங்கள் இலக்கியத்திற்கு அழகையும் ஆழத்தையும் அளிக்கின்றன என்று சொல்கிறார். ஏழுவகை பொருள்மயக்கங்களை பட்டியலிடுகிறார். [ “Seven Types of Ambiguity’, William Empson]

 

கோனார் நோட் போடவேகூடாது. குறைந்தது ஆறுமாதகாலம் அந்த குழப்பம் உங்கள்ள் கூடவே வந்தாலொழிய நீங்கள் அன்னாவை புரிந்துகொள்ளபோவதில்லை. நீங்கள் அதற்கு அளிக்கும் பொருள் அன்னாவை உங்களுக்குள் உள்வாங்கும் விதம்

 

ஜெ

 

 

அன்புள்ள ஜெ

 

மன்னிக்கவும் என் மென்பொருளில் ஏதோ சிக்கல். தமிழில் எழுதமுடியவில்லை. காந்தியைப்பற்றிய உங்கள் கட்டுரைகள் சிந்தனையை தூண்டுவனவாக இருந்தன. நம் காலத்து மாபெரும் பொருளியல் சிந்தனையாலார் காந்தி

 

ஒரு சிறிய விஷயம். ஈவேரா அவர்கள் ஒரு நாத்திகர். கடவுளை நம்புகிறவன் முட்டாள் என்றவர். இஸ்லாமிய மதம் முழுக்க முழுக்க கடவுள்நம்பிக்கை கொண்டது. நாத்திகத்தை கொடிய பாவம் என்று அது நினைக்கும். கொலைகூடச்செய்யும். ஆனால் அந்த இஸ்லாமியத்தலைவர்கள் ஈவேராவுடன் நெருக்கமாக இருந்தார்கள். ஈவேரா பார்ப்பனியம் என முத்திரை குத்திய இந்து மரபுக்கு எதிராக இந்த எளிய கூட்டணியை அவர்கள் மைத்தார்கள்

 

ஆர்.வெங்கட்ராமன்

 

அன்புள்ள ஆர்.வெங்க்டராமன்

 

ஈவேரா அவர்களின் தனிப்பட்ட நேர்மை குறித்து எனக்கு எந்தவிதமான ஐயமும் இல்லை. சொன்னேனே, மேதைகள் உங்களுக்கு வேண்டுமென்றால் கிறுக்குத்தனங்களுடன் தான் பெற்றுக்கொள்ளவேண்டும்.

 

 ஈவேரா அவர்கள் தன் கருத்துக்களை அவ்வப்போது உள்ள சூழலில் அமைப்புகளுக்கும் நிறுவப்பட்ட கருத்துக்களுக்கும் நேர் எதிராகச் சொல்லியிருக்கிறார். தமிழைப் படிக்கக்கூடாது என்று சொல்லியிருக்கிறார், அனைவரும் இஸ்லாமுக்கு மாறவேண்டும் என்று சொல்லியிருக்கிறார். அவரது சிந்தனைகளை வெட்டி ஒட்டி சீரான கோட்பாடாக ஆக்குபவர்கள் அவரை முரண்பாடுகள் கொண்ட அயோக்கியர் என்று தங்களை அறியாமலே ஆக்கிக்கொண்டிருக்கிறார்கள்.

 

உலகம் முழுக்க மறுப்பாளர்கள் [நிஹிலிஸ்டுகள்] இப்படித்தான் இருந்திருக்கிறார்கள். எந்த ஒரு ஆரோக்கியமான சிந்தனைக்களத்திலும் மறுப்பாளர்களுக்கு மிக முக்கியமான பங்களிப்பு உண்டு. எதுவும் உறையாமல் கலைப்பவர்கள் அவர்கள். புதியதை நோக்கி நகர்த்துபவர்கள். ஈவேரா அவர்களின் பங்களிப்பைப்பற்றி பெருமதிப்பு எனக்குண்டு. அவரது சிந்தனைகளில் உள்ள வெறுப்பரசியல், பிளவுநோக்கு எனக்கு உடன்பாடானதல்ல, அவ்வளவே

 

ஜெ

 

 

அன்புள்ள ஆர்வெங்கட் ராமன்

 

இதில் என்ன ரகசியம் இருக்கிறது? இந்து வெறுப்பு, இந்திய வெறுப்பு. 1946ல் நேரடிநடவடிக்கை மூலம் ரத்த ஆறை ஓடவிட்டு தேசத்தைப்பிளந்த முஸ்லீம்லீக் சில வருடங்களுக்குள்ளாகவே சுதந்திர இந்தியாவில் மறுபடியும் ஒருங்கிணைந்து இந்திய தேசியத்தை இந்துதேசியம் என்று சொல்லி நிராகரித்தது. இந்திய தேசியத்தை நிராகரிக்கக்கூடிய எல்லாவகையான பிளவுவாதிகளிடமும் உறவு வைத்துக்கொண்டது. மதங்களைப் போற்றிய மதசார்பற்ற நேருவை விட மதங்களைப் பழித்த ஈவேரா அவர்களுக்கு உகந்தவரானது அதனால் மட்டும்தான்.

 

இந்தியாவை சிதிலப்படுத்தும் ஆயுதமாக அம்பேத்காரை எடுத்துக்கொள்ள பெரும் பொருள்பலத்துடன் சர்வதேச நாடுகளின் பின்பலத்துடன் முயன்றது. அவர்களின் தந்திரங்களை வெட்டவெளிச்சமாக்கிய அம்பேத்கார் முழுமையாக அதை நிராகரித்துவிட்டார். அவர்களின் நோக்கம் அன்றும் இன்றும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக இந்தியாவைச் சிதிலப்படுத்துவது மட்டுமே.

 

ஆகவே வந்தேமாதரம் அவர்களுக்கு பாவமாக பட்டது, தமிழ்த்தாய் வாழ்த்து உகந்ததாக இருந்தது. ஆனால் இது மிகத்தந்திரமான ஒருபாவனை மட்டுமே. தமிழ்த்தேசியம் இந்திய எதிர்ப்பு அரசியலுக்கு உதவும் வரை மட்டுமே இந்த ஒத்துழைப்பு. அது  ஈழத்தில் கொஞ்சம் அதிகாரத்தைக் கையாள ஆரம்பித்தபோது உடனே அதற்கு எதிராக அணிதிரண்டார்கள் என்பது வரலாறு

 

இஸ்லாமிய மதத்தலைமைக்கு எப்போதுமே மதமோ நம்பிக்கையோ ஒரு பொருட்டாக இருந்ததில்லை. அது வெறும் அதிகார அரசியல் மட்டுமே. அப்பட்டமான சந்தர்ப்பவாத அரசியல்

 

ஜெ

 

***************************

 

ஜெ..

இன்று பெரியாருக்கும் அம்பேட்கருக்கும் உருவாக்கப் பட்டிருக்கும் வீர வழிபாடு அவர்களைச் சரியாக மதிப்பிடத் தடையாக உள்ளது. ஆனால், சாதாரண மக்கள் அனைவரும் காந்தியை வைத்திருக்கும் தளம் வேறு.  மீண்டும் எனது வாழ்க்கையையே இதற்கு உதாரணம் கூறுகிறேன்.

ஒருசிறு கிராமத்திலிருந்து, எனது தாய் மாமாவின் உதவியோடு  நகரத்து மேல்நிலைப் பள்ளியில் படிக்க பஸ் ஏறும் அந்த நாள். காலை  பஸ்ஸு க்காக நின்று கொண்டிருக்கிறேன். என் அம்மாவின் கண்களில் நீர். தன் முந்தானையைப் பிடித்துக் கொண்டு திரிந்த இந்தப் பையன் இனிமேல் நிரந்தரமாகத் தன்னை விட்டுச் சென்று விடுவான் என்று அவங்களுக்குத் தெரிந்த காரணம்.

 

அம்மா அப்போது காந்திஜி லண்டன் செல்லும் முன் தன் அன்னைக்குத் தந்த வாக்குறுதியைச் சொல்லி, அதே போல் ஈரோட்டில், மாமாவின் மனைவிக்குத் தொந்தரவு கொடுக்கக் கூடாது – நீயே உனக்கு வேண்டியதைச் செய்து கொள்ள வேண்டும். அத்தை என்ன வேலை சொன்னாலும் செய்ய வேண்டும். அவங்கள ஏது வாங்கித் தரச் சொல்லக் கூடாது என்றார். இன்று வரை என் வேலைகளை நானே செய்து கொண்டிருக்கிறேன் –

இன்று உங்கள் கட்டுரைகளைப் படிக்கும் போது நான் அந்த நாளை நினைத்துக் கொண்டேன். மூன்றாம் வகுப்பு கூட தேறாத அந்தப் பாமரப் பெண்ணை, காந்தி ஒரு தெய்வமாக எப்படிப் பாதித்திருக்கிறார் என்பது மிகப் பெரும் அதிசயம். வானொலி , மின்சாரம் இல்லாத கிராமம் அது.

ஆனால், உங்கள் கட்டுரைகளின் சாரம், பெரியார் என்னும் மனிதரின் contributions ஐ முற்றிலும் மறுதலிப்பது போல் தோற்றம் தருகிறது. பெரும் காங்கிரஸ் தலைவராக இருந்திருக்கிறார். ஈரோடு முனிசிபல் சேர்மனாக இருந்து அவர் செய்தது மிகப் பெரும் பணி. சேரன்மாதேவி ஆசிரமத்தில் நடந்த அந்த (பிற்பாடு தமிழக முதல்வராக ஆன ஓமந்தூர் ரெட்டியாரின் மகனென்று நினைவு) சம்பவத்தில், அவர்கள், பெரியாரிடம் சென்று முறையிட்டிருக்கிறார்கள். அவர் அதன் பின் சேரன்மாதேவி ஆசிரமத்துக்கு காங்கிரஸ் உதவியளிக்கக் கூடாது என்று போராடியிருக்கிறார்.

 

ஆனால் காந்தியின் சமரச நோக்கம் – long term vision கொண்டது. அந்த நோக்கத்தை , கனவை முழுமையாகப் புரிந்து கொள்ளும் பொறுமை இவர்களுக்கு இருந்திருக்க வில்லை போலத் தோன்றுகிறது.

காந்தியின் வழிமுறைகளில் பலருக்கு மாற்றுக் கருத்துக்கள் இருந்திருக்கிறது. நேரு, பட்டேல், போஸ் , அம்பேட்கர், பெரியார் உட்பட. இதில் நேருவும் பட்டேலும் பக்தர்கள். காந்தியின் மிக அருகில் நின்று அவரை தரிசித்தவர்கள்.

பெரியார் காந்தி போலோ அல்லது நீங்கள் எதிர்பார்க்கும் அளவு குறைகள் இல்லாத கோட்பாடோ கொண்டவரல்ல. ஆனால், அவர் ஒரு செயல் வீரர் என்னும் தளத்தில் நீங்கள் பார்ப்பதில்லை போலத் தோன்றுகிறது. 

கடவுள் வழிபாட்டின் முட்டாள்தனங்களைக் கடைசி வரை போராடி – அதன் மீது மக்களுக்கு இருக்கும் மூடத்தனமான நம்பிக்கையை கொஞ்சமேனும் பாதித்த மனிதர். பெண் விடுதலை பற்றிய அவர் கருத்துக்களும் நிச்சயம் மரியாதைக்குரியவை

 

. இன்று நாத்திகம் பற்றிப் பேசினால் கூட பெரும் எதிர்ப்பு வரும் இந்துத்துவக் கட்சிகள் dominate செய்யும் காலம். கற் கடவுள் வெறும் கல்லே. அதை என்ன நிந்தனை செய்தாலும் கடவுள் கண்ணைப் பிடுங்க மாட்டார் என்று பாமர மக்களுக்குக் காட்டியவர். வழிமுறைகள் முரட்டுத் தனமானவையே. ஆனால் வன்முறையல்ல . வன்முறை அவரை வைத்து நிறுவனங்கள் நடத்திப் பணமும் அதிகாரமும் சம்பாதித்தவர்களின் தொழில் நுட்பம். ஜேகே பெரியாரின் கொள்கைகளை எதிர்த்துப் பேசிய பொது மேடையில் பெரியார் கடைபிடித்த நாகரிகம் மிக உயர்வானது.

பெரியார் நிச்சயம் காந்தி அல்ல. பெரும்பான்மையான தமிழ்ச் சமூகக் கிராமத்தின் காவல் தெய்வம் என்ற அளவில் அவருக்கு ஒரு இடம் உள்ளது. அந்த இடம் மக்களிடம் இன்னும் பல காலம் இருக்கும்.

 கிருஷ்

 

 

அன்புள்ள  கிருஷ்

 

உங்கள் கடிதத்தின் கருத்துக்களில் எனக்கு மிகவும் உடன்பாடுள்ளது. நான் ஈவேரா அவரக்ளைப்பற்றி முன்னரே எழுதியிருக்கிறேன். பிறிதொரு தருணத்தில் விரிவாக எழுதுகிறேன்.

 

ஒன்று சொல்கிறேன். என் குரு நித்ய சைதன்ய யதி சன்யாசம் வாங்கிக்கொள்ளும்போது அவர் சென்று காலில் விழுந்து ஆசிவாங்கவேண்டிய பெரியார்களில் ஒருவராக நடராஜகுரு சொல்லியனுப்பிய சிலரில் ஈவேராவும் ஒருவர். ஆக ஈவேரா குறித்த மிக மதிப்புமிக்க ஒரு சித்திரமே எனக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.

 

ஆனால் என் கொள்கைகளின் சாரம் அவரை ஏற்க எனக்கு தடையாக இருக்கிறது. அவரை அல்ல, எந்த நோக்கத்திற்காகவும் எந்த ஒரு மனிதக்கூட்டம் மீதும் வெறுப்பை உருவாக்கிய, கசப்பின் மொழியில் பேசிய, பிளவுவாதத்தை முன்வைத்த எந்த ஒரு சிந்தனையாளரையும், தலைவரையும் என்னால் ஏற்க முடியாது. அப்படி ஒரே ஒருவரை நான் ஏற்றுக்கொண்டு ஈவேரா அவர்களை நிராகரித்திருந்தால் நீங்கள் தட்டிக் கேட்கலாம்.

 

ஈவேரா அவர்கள் ஒரு சிந்தனையாளரோ படிப்பாளியோ அல்ல. இந்திய மரபையோ இந்து மரபையோ ஒரு பொதுமனிதர் எந்த அளவுக்கு அறிந்திருக்க வேண்டுமோ அந்த அளவுக்கு அறிந்தவரல்ல. இன்று அவரது தொகுக்கப்பட்ட சிந்தனைகளைப் பார்க்கையில் வெவ்வேறுநபர்கள் அளித்த தகவல்களை அவ்வப்போது அப்படியே சொல்லிக்கொண்டிருந்தாரா என்ற எண்ணமே ஏற்படுகிறது.

 

ஈவேரா அவர்களை இயக்கிய ஆற்றல் என்பது வெறுப்பே. மனிதாபிமானத்தை விட அறச்சீற்றத்தைவிட அவரது எழுத்துக்களில் அதிகமாகக் காணக்கிடைப்பது வெறுப்புதான். அது ஒருபோதும் ஓர் ஆரோக்கியமான விஷயம் அல்ல. சராசரித்தமிழ் மனத்தின் இயல்பான ஒத்திசைவுப்போக்கால் அந்த வெறுப்பு வன்முறையாக வளராது போயிற்று. மிக எளிதாக பெரும் மானுட அழிவுகளை உருவாக்கச் சாத்தியமான வெறுப்பு அது.

 

ஈவேரா ஒருபோதும் பெரும் மக்கள்செல்வாக்குடன் இருந்ததில்லை. அவரால் வெகுஜனங்களிடம் பேச முடிந்ததில்லை. அவருடன் ஒப்பிடுகையில் காமராஜ் மாபெரும் மக்கள்தலைவர். சி.என்.அண்ணாத்துரை வந்து மேடையையும் கேளிக்கையையும் பயன்படுத்தி திராவிட இயக்கத்தை ஒரு பரப்பிய [Populist] இயக்கமாக ஆக்காவிட்டால் ஈவேரா அவர்களை மிகச்சிலரே அறிந்திருப்பாகள். இன்றைய அவரது பிம்பம்  இப்போது உருவாக்கப்படும் ஒன்றே.

 

ஈவேராவின் காலத்தில் அவர் உருவாக்கிய வெறுப்பு பற்றிக்கொள்ள தோதான சூழல் இருக்கவில்லை.  தமிழகத்தை காந்திய இயக்கம் ஆண்டுகொண்டிருந்தது.  ஆகவே அவரது விளைவுகள் பெரும் அழிவுகளை உருவாக்கவில்லை. ஆனால் அதை வைத்து அவரை நான் மதிப்பிடமாட்டேன். என்ன நடந்திருக்க முடியும் என்பதை வைத்தே மதிப்பிடுவேன்.

 

இன்றும் ஈவேரா அவர்களை நாம் நமக்குள் எரியும் சகமனித வெறுப்பைக் கொண்டே அடையாளம் காண்கிறோம். உங்கள் உள்ளே கொஞ்சம் பிராமண வெறுப்பு இருந்தால் நீங்கள் உடனே ஈவேராவை ஏற்க ஆரம்பிப்பீர்கள். நேர்நிலையான ஒரு ஏற்பை ஈவேரா எவரிடமும் உருவாக்கி நான் பார்த்ததில்லை. வெறுப்பின் குரலில் பேசாத ஒரே ஒரு பெரியாரியரைக்கூட இன்று வரை நான் சந்தித்ததில்லை. என் ஆசிரியராகவே நான் எண்ணும் கோவை ஞானி கூட இதில் அடக்கம்.

 

பெரியாரியர் ஒருவர் நம்மிடம் முதல் தளத்தில் பிராமண வெறுப்பைக் கக்குவார். அவரிடம் சில மணிநேரம் பேசமுடிந்தால், நாம் ஒரு தலித் அல்ல என்று அவர் அறிந்தால், அவர் அதைவிட உக்கிரமான தலித் வெறுப்பைக் கக்குவார். இதற்கும் ஒரே ஒரு விதிவிலக்கைக் கூட நான் கண்டதில்லை. நான் சந்தித்துப்பேசிய பெரியாரியர்களில் புகழ்பெற்ற மூத்த பெரியாரிய அறிஞர்கள் பலர் உண்டு என்பதை நினைத்துக்கொள்ளுங்கள். நான் ஈவேரா அவர்களை இவர்களை வைத்தே மதிப்பிடுகிறேன்.

 

ஈவேரா அவர்கள் ஓர் அதிஉணர்வாளர். அரசின்மைவாதி. முழுமையான அமைப்பு மறுப்பாளர். அவ்வகையில் அவரது ஆளுமை வண்ணமயமானது. நாம் மூடத்தனமாக நம்பிய பலவற்றை முச்சந்தியில் இழுத்துப்போட்டவர். ஒரு சமூக சீர்திருத்தவாதி என்ற வகையில் அவரது பங்களிப்பை நான் நிராகரிக்க மாட்டேன்.  தமிழ்ச்சமூகம் தன்னை மறுபரிசீலனைசெய்ய வைத்த ஆற்றல் அவர். அரசின்மைவாதிகள் எப்போதுமே நம்மை சிந்தனைத்தளத்தில் கலைத்து முன்னகர்த்துகிறார்கள்.

 

மிகுந்த மரியாதையுடன் ஈவேரா அவர்களை நிராகரிக்க எனக்கு உரிமை  உண்டு என்றே எண்ணுகிறேன். என்னுடைய மறுப்புகளுக்கும் ஐயங்களுக்கும் பெரியாரியர் இன்றுவரை பெரும்பாலும் ஆபாசமான வசைகளையும் அவதூறுகளையும் மட்டுமே பதிலாக அளித்திருக்கிறார்கள்.

 

ஜெ

முந்தைய கட்டுரைஹ¤ஸெய்ன் கடிதங்கள்
அடுத்த கட்டுரைபழசிராஜா இணைப்புகள்