சாதிப்பிரச்சினை பற்றி விவாதிக்கப்படாத ஓர் உரையாடல் தமிழில் அனேகமாக நிகழ்வதில்லை. ஆனால் சாதிகளின் உருவாக்கம், சாதிகள் நீடிக்கும் விதம், சாதிகளின் இணைவு மற்றும் பிரிவு பற்றிய இயக்கவியல் சார்ந்து ஓர் எளிய அறிதல்கொண்டவர்கள் தமிழகத்தில் மிகமிகக்குறைவு.பெரும்பாலானவர்களின் சாதி சார்ந்த அறிதல் என்பது தங்கள் சாதியின் உட்பிரிவுகள் மற்றும் சமூக இடம் பற்றி ஒரு மதிப்பீடு. தங்களுக்கு மேலான சாதி எப்படி தங்கள் சாதியை ஒடுக்கியது என்பது பற்றிய ஒரு மனப்பதிவு- அவ்வளவுதான்.
கூடவே தமிழ்ச்சமூகத்தில் முற்போக்காகக் கருதப்பட சாதிகளைப்பற்றி என்ன சொல்லவேண்டும் என்ற எளிமையான மனவரைபடம் அனைவரிடமும் உண்டு. அனைத்துச்சாதியினரும் கூடிய அவையில் அதைச் சொல்வார்கள். அதாவது சாதியை உருவாக்கியவர்கள் பிராமணர்கள். அது மக்களை ஒடுக்கும்பொருட்டு உருவாக்கப்பட்ட ஒரு சதி. அது ஒழியவேண்டும். தலித் மற்றும் பழங்குடிகள் கொடுமைக்குள்ளானவர்கள். அவர்களுக்கு மற்றவர்கள் உதவவேண்டும்.
ஆனால் அவர்களின் சொந்தச்சாதியினர் அல்லது சமானமான சாதியினர் மட்டும் கூடிய அவையில் பேச்சு வேறாக இருக்கும். சாதியின் விளிம்புகளை விட்டு மீறிச்சென்றால் உருவாகும் சிக்கல்கள் மற்றும் அழிவுகள், சாதியின் அடையாளமாக விளங்கும் ஆளுமைகள் பற்றிய வழிபாடுகள், தங்கள் சாதியின் ஒற்றுமையின்மை அல்லது வீழ்ச்சி பற்றிய அங்கலாய்ப்புகள், நேற்றுவரை கீழே இருந்தவர்கள் மேலே சென்றுவிட்டது பற்றிய கசப்பு — இவைதான் பகிரப்படும்.
இவற்றுக்கு அப்பால் தமிழில் சாதிகளைப்பற்றிய கறாரான உரையாடல்கள் அறிஞர் மத்தியில்கூட மிகமிகக்குறைவு. அதற்கு பலகாரணங்கள். ஒன்று, சுயசாதிப்பெருமிதம். பெரும்பாலும் இடைநிலைச் சாதியினர் இந்தப்பெருமிதத்தை விட்டு வெளியே வருவதேயில்லை. இடைநிலைச்சாதியினர் சொல்லிக்கொள்ளும் பெருமிதவரலாறுகளில் பெரும்பகுதி சென்ற நூற்றாண்டுகளில் கட்டமைக்கப்பட்டது என்பதையும் இடைநிலைச்சாதியினர் இன்று முன்வைக்கும் ஒட்டுமொத்த அடையாளமேகூட அக்காலகட்டத்தில் உருவானதே என்பதையும் அவர்களில் எந்த அறிஞரும் சொல்லமாட்டார்கள், சொல்லிவிட்டு நிம்மதியாக் வாழவும் முடியாது.
சென்ற ஐம்பதாண்டுக்காலத்தில் சாதிகளின் உருவாக்கம், செயல்பாட்டுமுறைமை குறித்து மிகமுக்கியமான திறப்புகள் கருத்துலகில் உருவாகிவந்துவிட்டன. அதற்கு முன்புவரை சாதிகளைப்பற்றிய பொதுவான நேரடி அறிதல்களும், பிரிட்டிஷார் எடுத்த மக்கள்தொகைல்க் கணக்கெடுப்பு அளிக்கும் பொதுவான தரவுகளும் மட்டுமே சாதிகளைப்பற்றி அறிவதற்கான ஆதாரங்களாக அமைந்தன. ஆகவே பெரும்பாலான கருத்துக்கள் பொத்தாம்பொதுவான ஊகங்களே. நாம் சொல்லிக்கொண்டிருக்கும் பொதுக்கருத்துக்கள் பல அவ்வாறு உருவான ஊகங்கள் மட்டுமே. அவை அரசியல்காரணங்களுக்காக பிரச்சாரம் செய்து நிலைநாட்டப்பட்டன. அரசியல்சரிகளாக நீடித்து அரட்டைகளில் தொடர்ந்து ஒலிக்கின்றன
அக்கருத்துக்களை பெரும்பாலும் காலாவதியாக்கும் கொள்கைகள் இன்று வந்துவிட்டன. தொடர்ந்து இந்தியச்சாதிகளைப்பற்றிய நேரடி ஆய்வுத்தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன. உலகம் முழுக்க சாதியமைப்புக்கு நிகராக உள்ள அமைப்புகளைப்பற்றிய ஆய்வுகள் வந்துகொண்டிருக்கின்றன. அவற்றுக்கிடையேயான ஒப்பாய்வு மூலம் சாதியமைப்பின் பண்பாட்டு அடிப்படையும் பொருளியல் அடிப்படையும் தெளிவடைந்தபடியே வருகின்றன. அவற்றை நம் அரசியல்சிந்தனையாளர்கள் அறிவதில்லை. காரணம் அவர்களுக்கு வாசிக்கும்பழக்கம் பெரும்பாலும் இருப்பதில்லை
ஆகவே பெரும்பாலான விவாதங்களில் நாம் கேட்பது ‘ஆமாங்க சாதி ஒழியணுங்க.அதெல்லாம் பார்ப்பான் உருவாக்கி நம்ம மேல திணிச்சதுங்க’ என்ற ஒற்றைவரி. ‘சரி அப்படியென்றால் உங்கள் சாதியை நீங்கள் துறப்பீர்களா?’ என்று கேட்டால் ‘அதெப்டீங்க? நாங்களும் அவுங்களும் ஒண்ணா?’ என்ற மாய்மாலம். அரங்கில் ஒன்று அந்தரங்கத்தில் ஒன்று. இப்போது இணையம் வந்தபின் அந்தரங்கம் நேரடியாக அரங்கேறும் வாய்ப்பு வந்துள்ளது. ஆகவே நாம் ‘இதென்ன திடீர்னு தமிழ்ல சாதிவெறு ஜாஸ்தியா கண்ணுல படுது?’ என திகைக்கிறோம்.
இக்காரணத்தால் இன்று சாதிச்சங்கங்கள் மட்டுமே சாதியைப்பற்றிப் பேசமுடியுமென்ற நிலை மெல்ல உருவாகிவிட்டிருக்கிறது. வேறு எவர் சாதியைப்பற்றி எந்தக் கருத்தை சொன்னாலும் ஏதேனும் சாதிச்சங்கங்கள் அதை எதிர்க்கும். வன்முறைமிரட்டல் கிளம்பிவரும். ஒருவர் இன்று பிராமணர் அல்லாத எந்தச் சாதியைப்பற்றியும் வாய் திறக்கமுடியாது. சொந்தச்சாதியைப்பற்றி மட்டுமே பேசமுடியும். அச்சாதிச்சங்கம் முன்வைக்கும் ஒற்றைவரிகளையே தானும் சொல்லமுடியும். ஆகவே பெரும்பாலான அறிஞர்கள் இன்று இதைப்பற்றி வாயே திறப்பதில்லை.
எம்.வேதசகாயகுமார் எப்போதுமே துணிச்சலான நேரடியான கருத்துக்களுக்காக அறியப்படுபவர். நேரடியான களஆய்வுப்பின்னணியும் துல்லியமான வாசிப்பும் கொண்டவர். அவரது கருத்துக்களை மறுக்கலாம், ஆனால் புறக்கணிக்கமுடியாது. ‘எக்கர்’ என்றபேரில் வேதசகாயகுமார் மீனவர்களைப்பற்றி பேசிய உரைகளின் தொகுப்பு வறீதையா கன்ஸ்தண்டீன் அவர்களால் தொகுக்கப்பட்டு உயிர் எழுத்து வெளியீடாக வந்துள்ளது
இந்நூலின் முக்கியமான சிறப்பு இதன் நேரடித்தன்மை. வேதசகாயகுமார் நாடார் சாதியைச் சேர்ந்தவர். சீர்திருத்தக் கிறித்தவசபை பின்னணி கொண்டவர். அவர்களுக்கும் கத்தோலிக்கர்களான மீனவர்களுக்கும் இடையே உள்ள பூசல் புகழ்பெற்றது. முந்நூறாண்டுக்காலமாக அவர்கள் போட்டிச்சாதிகள். இந்நிலையில் பேசவரும் ஓர் அறிஞர் கொள்ளவேண்டிய எச்சரிக்கைகள், தாஜா செய்தல்கள் ஏதுமில்லாமல் நேரடியாகவே வேதசகாயகுமார் பேசிச்செல்கிறார். இரு சாதிகளின் செயலபாடுகளையும் மனநிலைகளையும் விமர்சிக்கிறார், நுணுக்கமாக உள்ளே புகுந்து ஆராய்கிறார்.
அவ்வகையில் நெய்தல்மக்களை அறிந்துகொள்வதற்கு மட்டுமல்ல, நெய்தல் மக்களுக்கும் பிறருக்குமான உறவின் சிக்கலைப்புரிந்துகொள்ளவும் இந்நூல் முக்கியமானது. இன்று இவ்வுரையாடல் எந்தத் தளத்தில் நிகழ்வேண்டுமெ என்பதற்கும் முன்னுதாரணமானது.
வேதசமாயகுமாரின் அணுகுமுறையை காட்ட சில அவதானிப்புகளை எடுத்துக்காட்டலாம்.’விளிம்புநிலைச் சமூகம்’ என்ற வரையரையை உருவாக்கும்போது ‘விளிம்புநிலைச் சமூகத்துக்கு அதிகாரத்தில் எந்தப்பங்கும் இல்லை. வாய்ப்புகள் கிடைப்பதில்லை’ என வகுப்பவர் ‘ஆனால் விளிம்புநிலைச் சமூகத்திலேயே அனைவருக்கும் அந்நிலை இல்லை. மீனவ சமூகம் விளிம்புநிலைச் சமூகம். ஆனல ஜேப்பியார் அப்படி அல்ல. ஒரு சமூகத்தின் பெரும்பாலான மக்களின் நிலையே அளவுகோல்’ என மேலும் சொல்கிறார். இந்த யதார்த்தவுணர்ச்சியே அவரது அடிப்படை வலிமை
’விளிம்புநிலைச் சமூகங்கள் காலாகாலமாக அப்படியே இருந்தவையா? விளிம்புநிலைச் சமூகம் மேலே வரமுடியுமா?’ என்ற வினாவை தொடர்ந்து எழுப்பும் வேதசகாயகுமார் ’மள்ளர்கள் [தேவேந்திரகுலவேளாளர் அல்லது பள்ளர்கள்] பதினாறாம்நூற்றாண்டின் இறுதிவரை நிலவுடைமைகொண்ட உயர்குடியினராக இருந்தவர்கள் என்பதற்குச் சான்றுகள் ஏராளமாக உள்ளன .வெண்கொற்றக்குடை பிடிக்கும் உரிமை பல்லக்கிலேறும் உரிமை திருமணங்களில் வெண்பட்டுக்கம்பளம் விரிக்கும் உரிமை என பல உரிமைகள் அவர்களுக்கிருந்தன. சில சோழமன்னர்கள் அவர்களின் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என ஊகிக்க இடமிருக்கிறது.அவர்களின் நிலைபற்றிச் சொல்லும் பல கல்வெட்டுகள் பொதுவிவாதத்துக்குக் கொண்டுவரப்படவே இல்லை’ என்கிறார்
அதற்கு மாறாக விளிம்புநிலையில் இருந்த் சமூகம் மேலே வந்தமைக்கும் சான்றுகள் உண்டு என்கிறார் வேதசகாயகுமார். நாடார்சமூகம் வணிகச்சமூகமாக இருந்தத். சாணார்கள் விளிம்புநிலையில் இருந்தனர். 1910ல் முதல் அரசு மக்கள்தொகை கணக்கெடுப்பில் அவர்கள் இணைந்து நாடார் சாதியாக அறிவித்துக்கொண்டனர். அதிகராத்துக்கான போட்டியில் இறங்கினர். கல்வியை ஆயுதமாகக் கொண்டனர். வணிகத்தை முன்னெடுத்து இன்று ஆதிக்கசாதியாக உள்ளனர், ஆதிக்கசாதிக்குரிய ஒடுக்குமுறைகளிலும் ஈடுபடுகின்றனர் என்கிறார்
நெய்தல் நில மக்களின் வரலாற்றை அவர்கள் இழந்தமை குறித்து மீண்டும் மீண்டும் பேசிச்செல்கிறார் வேதசகாயகுமார். ‘பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிராமணர்களும் வேளாளர்களும் தமிழ் மொழியின் மீதான ஆதிக்கத்துக்காக மோதிக்கொண்டனர்.மொழிமீதான ஆதிக்கம் ஏன் இந்த அளவுக்கு முக்கியமானதாகக் கருதப்படுகிறது? ஏனென்றால் மொழியின்மீதான ஆதிக்கம் என்பது நிலத்தின் மீதான , உற்பத்திசக்திகளின் மீதான ஆதிக்கத்திற்கு அடுத்தபடியாக முக்கியமானது.
நேரடியாக உற்பத்தியில் ஈடுபடும் சாதிகள் பெரும்பாலும் விளிம்புநிலைக்குத் தள்ளப்படுவதில்லை என்று சொல்லும் வேதசகாயகுமார் மீனவர்கள் தங்கள் உற்பத்திச்சாதனம் மீதான கட்ட்டுப்பாட்டை இழந்தமைதான் அவர்கள் விளிம்புநிலைக்குச் சென்றமைக்கு முக்கியமான காரணம் என்கிறார். அவ்வாறு இழந்தமைக்குக் காரணம் மொழியை இழந்தமைதான். மொழி ஒருங்கிணைவுக்கான கருத்தியலை உருவாக்கி அளிக்கிறது என வாதிடுகிறார். ஆகவே நெய்தல்சார்ந்த படைப்பாளிகள் உருவாவதும், அவர்கள் விவாதிக்க ஆரம்பிப்பதுமே முக்கியமான அரசியல் செயல்பாடுகள் என்று வாதிடுகிறார்.
வேதசகாயகுமார் சீராக இரு விவாதத்தரப்பை உருவாக்குபவர். கூடவே தெறிப்புகளாக சிந்தனையைத் தூண்டும் வரிகள் அவரது உரைநடையில் வெளிவந்தபடியே உள்ளன. ‘இருபதாம் நூற்றாண்டில்நமக்கு ஒரு பெரும் விபத்து நிகழ்ந்துவிட்டது. நம் சிந்தனைகள் இரு குவியங்களாக ஆகிவிட்ட்னா- பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார். இவ்விருசாராரின் போராட்ட்த்துக்கு வெளியே உள்ளவர்களின் இடம் குறித்து எந்தவிவாதமும் நிகழாதுபோய்விட்டது’ என்று அவர் சொல்லும் வரி ஒருவகை சீண்டலாகத் தெரியும். ஆனால் நம் சிந்தனையைச் சீண்டாத ஒருவர் எதையும் புதியதாகச் சொல்லவில்லை என்றே பொருள். அவ்வரியில் இருந்து அவர் சமகாலச் சமூகவியல் சூழலை விரித்துக்கொண்டு செல்லும் விதமே முக்கியமானது.
பலகோணங்களில் திறந்துகொண்டே இருக்கக்கூடிய, நேர்மையான சமூகவியல்விவாதம் நிகழும் நூல்கள் தமிழில் அரிதிலும் அரிது. தான் சார்ந்திருக்கும் அரசியல், தன் சுயநலன்கள், தன்னுடைய முற்போக்குப் பாவனைகள் சார்ந்து சொல்லப்படும் இடக்கரடக்கல்களையே நாம் வாசிக்கநேர்கிறது. அப்பட்டமாகப் பேசும் கூரிய நூல் என வேதசகாயகுமாரின் எக்கரைச் சொல்லலாம்
[எக்கர் வேதசகாயகுமார். தொகுப்பு வறீதையா கன்ஸ்தண்டீன்/ உயிர் எழுத்து பதிப்பகம். திருச்சி]