இனிய ஜெயம், முதிர்மரத்தின் இன்கனி வாசித்தேன். சென்றவாரம் ஓர் இலக்கியத் தோழமை வசம், நாஞ்சிலின் சமீபத்திய கதைகளின் கொண்டாட்ட அனுபவம் அளிக்கும் வாசிப்பு இன்பம் பற்றி பேசிக்கொண்டிருந்தேன்.
கதைகளின் உள்ளும் புறமும் ஆசிரியனின் குரல் ஓங்கி ஒலிப்பது, ஒரு பலவீனம் இல்லையா?
நுட்பம், குறிப்புஉணர்த்தல் மற்றும் கலை அமைதி என்பவைதானே இது நல்ல கதை என்பதன் அளவுகோலாகக் கொள்கிறோம்? ஜெயகாந்தன் கதைகளில் அறத்தின் குரலாக ஆசிரியர் குரல் ஒலித்தாலும், வடிவம் மற்றும் கலை அமைதி இவற்றை அக் கதைகள் இழந்து விடுகிறதே என்று வினவினார்.
அதற்கு நான் அளித்த பதில் திருப்திகரமாக இல்லை என்றார். இனிய ஜெயம் வினா இதுதான், ஒரு கதை அதன் அறம் சார்ந்த பெறுமானம் சார்ந்தே ‘சிறந்த ‘ கதை எனும் நிலையை எய்தினால், இத் தகு கதைகளில் ஆசிரியனின் குரலின் பணி, அக் கதைகளின் இயல்பான சித்தரிப்பின் வழியே பூத்துவரும் அறச் சீற்றம் எனும் விழுமியத்தை குறுக்கி, அறத்தின் பதாகையாக அக் கதை மாறுவதற்குப் பதிலாக, அறத்தின் பிரதிநிதியின்[அந்த எழுத்தாளர்] பதாகையாக, அக்கதை மாறி விடுகிறது.
எனில் ஒரு கலைச் சித்தரிப்பில் ஆசிரியனின் குரலின் இருப்பு எந்த அளவின் வரை இருந்தால் அது, கதையின் கலையம்சத்தைக் குறுக்காது? கதைகளில் ஆசிரியனின் குரலின் தனிப்பட்ட ‘இருப்பு’ அக் கதையின் சாரத்தை என்ன வகையில் ‘மேம்படுத்துகிறது’?
மெய்யாகவே ஒரு நல்ல கதையில் ஆசிரியனின் காத்திரமான இருப்பு என்பது ஒரு குறைபாடா?
கடலூர் சீனு
அன்புள்ள சீனு,
இலக்கியத்தில் இப்படி இருக்கவேன்டும்- இருக்கக்கூடாது’என்னும் விதிகள் இல்லை. அப்படி யோசிக்கையிலேயே நூற்றுக்கணக்கான பேரிலக்கியங்களை வெளியே தள்ளிவிடுவோம். அப்படைப்பு உருவாக்கும் விளைவு என்ன என்பது மட்டுமே அளவுகோலாகும். விளைவை உருவாக்க ஒவ்வொரு இலக்கிய ஆக்கமும் ஒவ்வொரு வழிமுறையை கையாள்கின்றது. அது அவ்வாசிரியனின் தேர்வு மட்டுமே. கச்சிதமாக, கூர்மையாகச் சொல்லப்பட்ட கதை ஒரு வகை விளைவை உருவாக்குகிறது. கச்சிதமற்று அலையும் வடிவில் சொல்லப்பட்ட கதையின் விளைவு இன்னொன்று. இரண்டுமே இருவகை இலக்கிய அனுபவங்களாக இருக்கலாம்
ஆசிரியனின் குரல் கதைக்குள் வரலாமா? இக்கேள்விக்கான விடை, அது என்னவகைக்கதை என்பதே. உதாரணமாக ஓர் இயல்புவாதக் கதையில் கதைக்குள் உள்ள புற நிகழ்வுகள் மட்டுமே முக்கியமானவை. அதுவே அதன் அழகியல். அங்கே ஆசிரியன் குரல் மட்டுமல்ல ஆசிரியனின் கோணம் என ஒன்று வெளிப்பட்டாலே அழகியல் சிதைவு உருவாகிறது. அதை ஓர் ஆசிரியன் எழுதியிருக்கிறான் என்றே வாசகனுக்குத் தோன்றக்கூடாது. அது கண்முன் தன்னிச்சையாக நிகழ்வதுபோலவே இருக்கவேண்டும்
யதார்த்தவாதக் கதையில் அது நிகழ்வதுபோல தோன்றும்போதே ஆசிரியனின் கோணமும் வலுவாக நிறுவப்பட்டுக்கொண்டே இருக்கும். ஆசிரியன் அந்த புறவுலகை உருவாக்குகிறான், அதற்கேற்ப கதைமாந்தரின் அக உலகை சமைக்கிறான் என நாம் அறிந்துகொண்டே வாசிப்போம். பெரும்பாலும் ஆசிரியனுக்குச் சமானமான ஒருசில கதாபாத்திரங்களை உருவாக்கி அவன் பார்வை, அவன் எண்ணங்கள் வழியாக ஆசிரியன் அதை நிகழ்த்துகிறான்
ஆசிரியர் குரல் அனுமதிக்கப்பட்டுள்ள இலக்கியவகை என்றால் பெரும் செவ்விலக்கியங்களைச் சொல்லலாம். அங்கே உன்னதமாக்கல் [சப்ளிமேஷன்] நிகழும் தருணங்களில் கதைக்குள் இருந்து ஆசிரியன் வெளிப்படுகிறான். மொழியை, அத்தருணத்து உணர்ச்சிகளை அவன் நேரடியாக வந்து வெளிப்படுத்துகிறான். கூடைப்பந்தில் வீரர்கள் பந்தாடுகிறார்கள். பந்து ஓர் எல்லைக்குமேல் சென்றதும் காற்றும் இணைந்துகொண்டு பந்தை மேலே தூக்குவதுபோல கதாபாத்திரங்கள் அடையும் உச்சத்தை எழுத்தாளன் ஏற்றிக்கொண்டு மேலே செல்கிறான். ‘மானுடம் வென்றதம்மா’என கம்பன் கூவும் இடம் உதாரணம். போரும் அமைதியும் நாவலில் ‘ராணுவத்தின் உள்ளக்கிடக்கை’என தல்ஸ்தோயே நேரில் வந்து பேசும் இடம் இன்னொரு உதாரணம்.
சிலசமயம் சில கதைமாந்தரை மேலதிகமாகப் பேசச்செய்து சிந்திக்கசெய்து ஆசிரியன் அந்த உன்னதமாக்கலை நிகழ்த்துவான். அந்தக்கதாபாத்திரம் அப்படியெல்லாம் சிந்திக்குமா, அது ஆசிரியன் குரல் அல்லவா என்ற வினாவுக்கு செவ்வியல் படைப்பில் இடமில்லை
ஆசிரியன் குரல் இயல்பாகவே அதிக முக்கியத்துவம் பெறுவது அங்கதத்தில். சொல்லப்போனால் அங்கதத்தில் ஆசிரியன் இல்லாமல் எழுத்தே நிகழாது. அங்கதத்தை நிகழ்த்தும் மொழி எவருடையது என வினவினாலே போதும் ஆசிரியனைக் கண்டுவிடலாம். உதாரணம் புதுமைப்பித்தன் அல்லது ப.சிங்காரம் படைப்புகள்.’ஊர்க்காவல் அல்லது சில்லறைக்களவு’ என ஊர்விவரணை நடுவே மேலதிக தகவல்களை தந்துசெல்வது யார், புதுமைப்பித்தனின் குறும்புக்குரல் அல்லவா? ‘வாணிதாசபுரம் என்பது வாணியின் கடைக்கண் படாத இடம்’என பேச ஆரம்பிப்பதே அவனல்லவா?
சுந்தர ராமசாமியின் அங்கதக்கதைகள் அனைத்திலும் வலுவான ஆசிரியர்குரல் உள்ளது. ஆசிரியனே கதைக்குள் வந்து கதை சொல்கிறான். பிற கதைகளில் ஆசிரியனின் கோணமே முன்னிற்கிறது.ப.சிங்காரத்தின் கதைசொல்லி நக்கலும் கசப்புமாக அனைத்து குரல்களையும் தானே எடுத்துக்கொள்கிறான்
பகடி , அங்கதம் இரண்டும் ஆசிரியன் வந்தேயாகவேன்டிய கதைவடிவுகள்.அல்லது ஆசிரியன் அதற்குள் ஒரு கதாபாத்திரமாக வேடம் புனைந்து வரலாம். நாஞ்சில்நாடனின் அங்கதக்கதைகளில் நேரடியாகவே ஆசிரியன் பேசுகிறான். கும்பமுனி வரும் கதைகளில் கும்பமுனியே நாஞ்சில்நாடனாகப்பேசத்தொடங்குகிறார்.
இவ்வகைக் கதைகளில் எங்கே மறைபிரதி உள்ளது என்று கேட்கிறீர்கள். அங்கதத்துக்காக அவர் கொடுக்கும் உட்குறிப்புகள் மொழியின் மடிப்புகள் பிறநூல்சுட்டுகள் ஆகியவற்றையே வாசகன் விரிவாக்கிக்கொள்ள முடியும். நாஞ்சில்நாடன் கதைகள் அங்கதத்தன்மை அதிகரிக்கும் தோறும் மேலும் செறிவு கொள்வது இதனால்தான்.
ஒருபிரச்சாரக்கதையில் கதையைச் சொல்லிவிட்டு பொழிப்புரையையும் அளிப்பதற்கும் அங்கதக்கதையில் ஆசிரியன் குரல் ஊடாடுவதற்கும் பெரும் வேறுபாடுள்ளது. ப.சிங்காரத்துக்கும் மேலாண்மை பொன்னுச்சாமிக்கும் இடையே உள்ள வேறுபாடு அது
ஜெ