பகுதி பன்னிரண்டு : விதைநிலம்
[ 1 ]
மணப்பெண்ணாக குந்தி மார்த்திகாவதியில் இருந்து விடியற்காலையில் கிளம்பி யமுனை வழியாக கங்கையை அடைந்தபோது அந்தியாகி இருந்தது. இருண்ட ஒளியாக வழிந்துகொண்டிருந்த கங்கைமேல் வெண்ணிறப்பாய்களுடன் செல்லும் பெரும்படகுகளை நோக்கியபடி அவள் அமரத்திலேயே நின்றிருந்தாள். இருளுக்குள் அப்படகுகளின் விளக்குகளின் செவ்வொளிப்பொட்டுகள் மெல்ல நகர்ந்து சென்றன. கடந்துசெல்லும் படகுகளில் இருந்து துடுப்புபோடும் குகர்களின் பாடல்கள் வலுப்பெற்றுவந்து தேய்ந்து மறைந்தன.
கலைந்த தாமரையிதழ் அடுக்குகளைப்போலத் தெரிந்த படகின் பாய்கள் காற்றை உண்டு திசைதிருப்பி முன்பக்கம் வளைந்து புடைத்திருந்த பாய்மேல் செலுத்த அலைகளில் எழுந்து அமர்ந்து படகு சென்றுகொண்டிருந்தது. படகின் அறைக்குள் ஏற்றிவைக்கப்பட்ட நெய் ஊற்றப்பட்ட பீதர்களின் தூக்குவிளக்கு காற்றிலாடி ஒளியை அலைகள் மேல் வீசிக்கொண்டிருக்க அவள் கங்கையையே நோக்கிக்கொண்டிருந்தாள். நினைவறிந்த நாள்முதல் அவள் கற்றுவந்த பேராறு. யமுனையின் தமக்கை. பிருத்விதேவியின் முதல்மகள். இமயத்தின் தங்கை. முக்கண்முதல்வனின் தோழி.
அது அவ்வளவு அகன்றிருக்குமென அவள் எண்ணியிருக்கவில்லை. இருபக்கமும் கரைகளே தெரியாமல் நீர் வேலிகட்டியிருந்தது. அவர்கள் சென்ற பெரும் படகுவரிசையை கழற்காய் ஆடும் சிறுமியின் உள்ளங்கை என நீர்வெளி எடுத்தாடிக்கொண்டிருந்தது. ஒருகணம் கங்கை பூமியைப்போல இன்னொரு பரப்பு என்ற எண்ணம் அவளுக்கு வந்தது. அந்தப்படகுகள் அங்கே மனிதன் கட்டிவைத்திருக்கும் கட்டடங்கள். கலைந்து கலைந்து உருமாறிக்கொண்டே இருக்கும் நகரம்.
மழைத்தூறல் விழுந்தபோது அவளை உள்ளே வந்து படுக்கும்படி அனகை சொன்னாள். அவள் உள்ளே சென்று மான்தோல் மஞ்சத்தில் படுத்துக்கொண்டாள். அன்னையின் தொடைகளின் மேல் படுத்திருக்கும் குழந்தைபோல அசைவதாக உணர்ந்தாள். அந்த எண்ணம் அவளுக்குள் நிறைந்திருந்த பதற்றங்களை அழித்து துயிலச்செய்தது. அனகை அவள் தோளைத் தொட்டு “அரசி, விழித்தெழுங்கள். அஸ்தினபுரி வந்துவிட்டது” என்றாள். அவள் எழுந்து ஒருகணம் புரியாமல் “எங்கே?” என்றாள். “படகுகள் அஸ்தினபுரியின் துறையை நெருங்குகின்றன அரசி” என்றாள் அனகை.
அவள் எழுந்து வெளியே நோக்கியபோது மழைச்சரங்கள் சாளரங்களுக்கு அப்பால் இறங்கிக்கொண்டிருப்பதைக் கண்டாள். படகின் கூரை பேரொலி எழுப்பிக்கொண்டிருந்தது. “அங்கிருந்தே மழை. தென்மேற்குக் காற்று வீசியடிக்கிறது. ஆகவேதான் மிக விரைவாகவே வந்துவிட்டோம்” என்றாள் அனகை. குந்தி எழுந்து அந்த அறைக்குள்ளேயே தன்னை ஒருக்கிக்கொண்டாள். வெளியே மழைத்திரைக்கு அப்பால் குகர்கள் நின்றிருந்தனர். எவரும் துடுப்பிடவில்லை. சுக்கானைமட்டும் நால்வர் பற்றியிருந்தனர். அனைத்துப்பாய்களும் முன் திசை நோக்கி புடைத்து வளைந்திருக்க வானில் வழுக்கிச்செல்லும் பறவைபோல சென்றுகொண்டிருந்தது படகு.
அஸ்தினபுரியின் படகுத்துறையில் இறங்கும்போதும் மழை சரம் முறியாமல் பொழிந்துகொண்டிருந்தது. மரங்களும் நீர்ப்பரப்பும் வானின் அறைபட்டு ஓலமிட்டன. குடைமறைகளுடன் வீரர்கள் காத்து நின்றனர். அவள் இறங்கி அஸ்தினபுரியின் மண்ணில் கால்வைத்தபோது அனகை “தங்கள் பாதங்கள் அஸ்தினபுரியை வளம்கொழிக்கச் செய்யட்டும் அரசி” என வாழ்த்தினாள். அவள் சேற்றிலிறங்கி குடைமறைக்குள் ஒடுங்கியபடி குறுகி நடந்து மூடிய ரதத்துக்குள் ஏறிக்கொண்டாள்.
அரியணை அமர்ந்து மணிமுடிசூடியபோது அவள்மீது ஒன்பது பொற்குடங்களிலாக கங்கையின் நீரை ஊற்றி திருமுழுக்காட்டினர். நறுமணவேர்களும் மலர்களுமிட்டு இரவெல்லாம் வைக்கப்பட்டிருந்த நீர் குளிர்ந்து கனத்திருந்தது. நீரில் நனைந்த பட்டாடை உடலில் ஒட்டியிருக்க தலையில் மணிமுடியுடன் தர்ப்பைப்புல் சுற்றிய விரல்களால் ஒன்பது மணிகளும் ஒன்பது தானியங்களும் ஒன்பது மலர்களும் கலந்து வைக்கப்பட்டிருந்த தாலத்தில் இருந்து கைப்பிடிகளாக அள்ளி எடுத்து முது வைதிகர்களுக்கு அளித்து கங்கைநீரால் கைகழுவினாள்.
கங்கை நீரால் பன்னிரு அன்னையரின் சிலைகளுக்கு திருமுழுக்காட்டி பூசனை செய்தாள். கங்கை நீர் நிறைந்த பொற்குடத்தை இடையில் ஏந்தி மும்முறை அரியணையைச் சுற்றிவந்தாள். அரண்மனையின் மலர்வனத்தின் தென்மேற்கு மூலையில் நடப்பட்ட பேராலமரத்தின் கிளைக்கு கங்கை நீரை ஊற்றினாள். அஸ்தினபுரிக்கு வடக்கே இருந்த புராணகங்கை என்னும் காட்டில் ஓடிய சிற்றோடைக்குச் சென்று அதன் கரைகளில் நிறுவப்பட்டிருந்த பதினெட்டு கானிறைவியருக்கு கொடையளித்து வணங்கினாள். அன்றுமுழுக்க அவளுடன் அனைத்துச்சடங்குகளிலும் கங்கை இருந்துகொண்டே இருந்தது.
முடிசூட்டுவிழவின் சடங்குகள் பகலில் தொடங்கி இரவெல்லாம் நீடித்தன. நகர்மக்களுக்கான பெருவிருந்துகள் நகரின் இருபது இடங்களில் நடந்தன. அங்கெல்லாம் சென்று அவள் முதல் அன்னத்தை தன் கைகளால் பரிமாறினாள். குடித்தலைவர்களும் குலமூத்தாரும் அளித்த பரிசில்களைப் பெற்றுக்கொண்டாள். வைதிகர்களுக்கும் புலவர்களுக்கும் சிற்பிகளுக்கும் கணிகர்களுக்கும் நிமித்திகர்களுக்கும் மருத்துவர்களுக்கும் பரிசுகளை வழங்கினாள். நகரமெங்கும் முரசுகளும் கொம்புகளும் குரலோசையும் முழங்கிக்கொண்டே இருந்தன. துயில்கலைந்த யானைகள் ஊடாக சின்னம் விளித்தன.
சோர்ந்து அவள் தன் அந்தப்புரத்து அறைக்குச் சென்றபோதே முதுசேடி கிருதை வந்து கங்கைபூசனைக்கு அவளை சித்தமாகும்படிச் சொன்னாள். விடியலின் முதற்கதிர் கங்கையைத் தொடும்போது செய்யவேண்டிய பூசனை என்பதனால் குந்தி அப்போதே குளித்து உடைமாற்றிக்கொண்டு அரண்மனை முகப்புக்கு வந்தாள். அவளுக்கான ரதங்கள் அங்கே காத்துநின்றன. அனகை அவளுடன் ஏறிக்கொண்டாள். ரதங்கள் ஓடத்தொடங்கியதுமே அவள் சாய்ந்து அமர்ந்து தூங்கிவிட்டாள்.
குந்தியையும் துயில் அழுத்தியது. அவள் முந்தைய இரவும் துயின்றிருக்கவில்லை. ஆனால் ரதம் நகர்ப்பகுதிக்குள் நுழைந்ததுமே அவள் அகம் பரபரப்படைந்து துயில் விலகிச்சென்றது. அவள் மூடிய ரதத்தின் சாளரம் வழியாக நகரைப்பார்த்துக்கொண்டே சென்றாள். நகரத்தெருக்கள் முழுக்க மக்கள் நிறைந்து முட்டிமோதிக்கொண்டிருந்தனர். பெரும்பாலும் பெண்கள். விழவுக்காலம் அவர்களுக்கு அளிப்பது இரவைத்தான் என குந்தி எண்ணிக்கொண்டாள். அவர்கள் வெளியே வரமுடியாத பின்னிரவுகள் இப்போது திறந்துகிடக்கின்றன. அவர்கள் உரக்கப்பேசியபடியும் சிரித்தபடியும் கூட்டம்கூட்டமாக கொண்டாடிக்கொண்டிருப்பது அந்த விடுதலையைத்தான்.
நகரெங்கும் மீன்நெய்ப்பந்தங்கள் எரிந்துகொண்டிருந்தன. காவல்மாடங்களின் நான்குபக்கமும் பெரிய மீன்நெய் குடுவைகளில் அழலெரியவைத்திருந்தனர். காட்டுநெருப்பு போல அவை வானில் எழுந்து எரிந்து அப்பகுதியையே செவ்வொளியால் அலையடிக்கச்செய்தன. குதிரைகளில் படைவீரர்கள் பாய்ந்துசென்றனர். அரண்மனை ரதம் செல்வதைக்கூட எவரும் கவனிக்காதபடி களிவெறி அவர்களை நிறைத்திருந்தது. அங்காடிக்குள் பெரும் சிரிப்பொலிகள் கேட்டன. அங்கே மதுக்கடைகள்முன் நகரின் ஆடவரில் பாதிப்பேர் நின்றிருப்பார்கள் என குந்தி எண்ணிக்கொண்டாள்.
கங்கையை நோக்கி ரதங்கள் இறங்கியபோது விடியல்வெளிச்சம் பரவத்தொடங்கியிருந்தது. மரங்களின் இலைகளின் பளபளப்பை புதர்பறவைகள் ஊடுருவிச்செல்லும் காட்டின் சிலிர்ப்பை தலைக்குமேல் கேட்டுக்கொண்டிருந்த பறவைகளின் குரல்பெருக்கை அன்று புதியதாகப்பிறந்தவள் போல கேட்டுக்கொண்டிருந்தாள். இதுதான் மகிழ்ச்சி போலும் என எண்ணிக்கொண்டாள். இளமையில் அவள் துள்ளிக்குதித்ததுண்டு. நெடுநேரம் பொங்கிச் சிரித்ததுண்டு. எங்கிருக்கிறோமென்ற உணர்வே இன்றி மிதந்தலைந்ததுண்டு. பகற்கனவுகளில் மூழ்கிக்கிடந்ததுண்டு. அவையனைத்தும் படகை விட்டு விலகிச்செல்லும் ஊர் போல மென்மையாக சீராக மறைந்துகொண்டே இருந்தன. அதன் பின் மகிழ்ச்சி என்றால் அல்லல்கள் விடுபடும் உணர்வு. சலிப்பு மறையும் நேரம். அல்லது வெற்றியின் முதற்கணம்.
மகிழ்ச்சி என்பது இப்படித்தான் இருக்கும்போலும். சிந்தனைகள் இல்லாமல். உணர்ச்சிகளும் இல்லாமல். கழுவிய பளிங்குப்பரப்பு போல துல்லியமாக. இருக்கிறோமென்ற உணர்வு மட்டுமே இருப்பாக. ஒவ்வொன்றும் துல்லியம் கொண்டிருக்கின்றன. ஒலிகள், காட்சிகள், வாசனைகள், நினைவுகள். அனைத்தும் பிசிறின்றி இணைந்து முழுமையடைந்து ஒன்றென நின்றிருக்க காலம் அதன்முன் அமைதியான ஓடை என வழிந்தோடுகிறது. ஆம், இதுதான் மகிழ்ச்சி. இதுதான்.
மகிழ்ச்சி என்பது ஈட்டக்கூடிய ஒன்றாக இருக்கமுடியுமா என்ன? கைவிரிக்க பழம் வந்து விழுந்ததுபோல நிகழவேண்டும். எப்படி இது நிகழ்ந்தது என்ற வியப்பையும் அனைத்தும் இப்படித்தானே என்ற அறிதலையும் இருபக்கமும் கொண்ட சமநிலை அது. அடையப்படும் எதுவும் குறையுடையதே. கொடுக்காமல் அடைவதேதும் இல்லை. கொடுத்தவற்றை அடைந்தவற்றில் கழித்தால் எஞ்சுவதும் குறைவு. அடைதலின் மகிழ்ச்சி என்பது ஆணவத்தின் விளைவான பாவனை மட்டுமே. அளிக்கப்படுவதே மகிழ்ச்சி. இக்கணம் போல. இந்தக் காலைநேரம் போல.
என்னென்ன எண்ணிக்கொண்டிருக்கிறோமென அவளே உணரும் வரை உதிரி எண்ணங்கள் வழியாகச் சென்றுகொண்டிருந்த குந்தி பெருமூச்சுடன் நிமிர்ந்து அமர்ந்தாள். அவ்வசைவில் விழித்துக்கொண்ட அனகை “எங்கிருக்கிறோம் அரசி?” என்றாள். “கங்கை வரவிருக்கிறது” என்றாள் குந்தி. அனகை தன் முகத்தை முந்தானையால் துடைத்தபடி “நான் துயின்று மூன்றுநாட்களாகின்றன” என்றாள். “இப்போதுகூட துயில் என்று சொல்லமுடியாது. என்னென்னவோ கனவுகள். நான் படகில் சென்றுகொண்டிருக்கிறேன். படகு ஒரு பசுவின் முதுகின் மேல் இருக்கிறது. மிகப்பெரிய பசு… யானைகளைப்போல நூறுமடங்குபெரியது”
“ஆம், கங்கையை ஒரு பசுவாக யாதவர்கள் சொல்வதுண்டு” என்றாள் குந்தி. “அப்படியா?” என்றபின் அனகை “பின்பக்கம் வரும் ரதங்களில்தான் காந்தார இளவரசியர் வருகிறார்கள். அவர்கள் துயின்றிருக்கவே முடியாது” என்றாள். குந்தி நோக்கியதும் சிரித்தபடி “நேற்று தங்கள் ஆடைநுனிபற்றி அகம்படி செய்தபோது இளையகாந்தாரியின் முகத்தைப் பார்த்தேன். அனல் எரிந்தது” என்றாள் அனகை. குந்தி கடுமையாக “இந்த எண்ணங்கள் உன் நெஞ்சில் இருந்தால் எங்கோ எப்படியோ அது வெளிப்பட்டுவிடும். அவர்களை அவமதிக்கும் ஒருசெயலையும் நீயோ நம்மவர் எவருமோ செய்ய நான் ஒப்பமாட்டேன்” என்றாள். அனகை அஞ்சி “ஆணை” என்றாள்.
“அரசகுலத்தவர் வெற்றிதோல்விகளால் ஆக்கப்பட்டவர்கள் அல்ல. குலத்தாலும் குணத்தாலும் ஆனவர்கள். என் தமக்கை என்றும் அஸ்தினபுரியின் பேரரசிக்கு அடுத்த இடத்திலேயே இருப்பார். அவர் தங்கையரும் அந்நிலையிலேயே இருப்பார்கள்” என்று சொன்னபின் குந்தி தலையைத் திருப்பிக்கொண்டாள். தன் அகம் மாறிவிட்டிருப்பதை அவள் கண்டாள். ஆம், சற்றுமுன் மகிழ்ச்சியாக இருந்தேன். அதன் தடயமே இல்லாமல் மறைந்துவிட்டிருக்கிறது. அனைத்தும் கலைந்துவிட்டிருக்கிறது. எண்ணங்கள் ஒன்றை ஒன்று துரத்துகின்றன. உணர்ச்சிகளின் வண்ணங்கள் ஒன்றுடன் ஒன்று கலக்கின்றன.
கங்கை தெரியத்தொடங்கியதும் அவளுக்குள் மெல்லிய அச்சம்தான் எழுந்தது. விரும்பத்தகாத ஒன்று நிகழ்ந்துவிடும் என்ற எதிர்பார்ப்பு போல. என் வாழ்க்கையின் முதன்மையானவை என நான் நினைக்கவேண்டிய நாட்கள் இவை. எளிய யாதவப்பெண்ணுக்கு அஸ்தினபுரியின் மணிமுடி வந்து தலையிலமர்ந்திருக்கிறது. பாரதவர்ஷத்தின் மாமன்னர்கள் கூடி அளித்த செங்கோல் கைவந்திருக்கிறது. ஆனால் அந்த வெற்றி ஒரு கணம்தான். அதன்பின் மெல்லமெல்ல அந்தச் சிகரத்திலிருந்து அவள் இறங்கிக்கொண்டுதான் இருந்தாள். கடைசியில் இந்தவிடிகாலையின் மோனம். அது முடிந்துவிட்டது. அனைத்தும் உலகியல்வாழ்க்கையின் அன்றாடச்செயல்களாக ஆகிவிட்டிருக்கின்றன.
அந்தப்பிரக்ஞை மட்டும் அல்ல இது. இந்த அமைதியின்மைக்குக் காரணம் அதுமட்டும் அல்ல. நான் என்னுள் அறியும் இன்னொன்று. எந்த அளவைகளுக்குள்ளும் நிற்காத ஒரு மெல்லுணர்வு. வரவிருப்பதை முன்னரே உணர்ந்துகொள்ளும் அகம். இவ்வுலகைச்சேர்ந்த எந்த இன்பத்திலும் அகம் முழுமையை அறியாது என்று மீளமீள நூல்கள் சொல்கின்றன. அந்தக்கணத்தில் அகம் ஆழத்தில் நிறைவின்மையை அறிந்து தயங்கும் என்கின்றன. ஆனால் அது மட்டும் அல்ல.
முற்றிலும் சிடுக்காகிப்போன நூல்வேலைப்பாட்டை அப்படியே சுருட்டி ஒதுக்கி வைப்பதுபோல அவ்வெண்ணங்களை அவள் முழுதாக விலக்கிக் கொண்டாள். பெருமூச்சுடன் கங்கையில் சரிந்து இறங்கும் சாலையை நோக்கினாள். இருபக்கமும் மரங்களின் நிமிர்வும் கனமும் கூடிக்கூடி வந்தன. பெரும்கற்கோபுரங்களென மருதமரங்கள். சடைதொங்கும் ஆலமரங்கள். கருங்கால் வேங்கை. வண்டிச்சகடங்களின் ஒலி மாறுபட்டது. சக்கரங்களை உரசும் தடைக்கட்டைகளின் ஓசை. குதிரைகளின் குளம்புகள் தயங்கும் ஒலி. அவற்றின் பெருமூச்சொலி.
கங்கை தெரிந்தது. ஆனால் சிலகணங்கள் அது கங்கை என அவளால் அறியமுடியவில்லை. மரங்களுக்கு அப்பால் நீலவானம் இறங்கியிருப்பதாகவே எண்ணினாள். அதன் ஒளியில் மரங்களின் இலைவிளிம்புகள் கூர்மைகொண்டன. அது நதியென உணரச்செய்தது அங்கிருந்து வந்த நீரை ஏந்திய குளிர்காற்றுதான். அந்த எண்ணம் வந்ததுமே கரைப்பாசிகளின் சேற்றின் வாசனையையும் உணர்ந்துகொண்டாள்.
ரதங்களும் வண்டிகளும் நின்றன. அரண்மனைச்சேடியர் நால்வர் வந்து குந்தியின் ரதத்தை அணுகி பின்பக்கம் படிப்பெட்டியை எடுத்துப்போட்டு “அரசிக்கு வணக்கம்” என்றனர். அவள் இறங்கி கூந்தலை சீர் செய்து காற்றிலாடிய மேலாடையை இழுத்துச் சுற்றியபடி கங்கையைப் பார்த்தாள். கரைவிளிம்புக்கு அப்பால் நீண்ட மணற்சரிவின் முடிவில் நுரைக்குமிழிகளாலான அலைநுனிகள் வளைந்து வளைந்து நெளிந்துகொண்டிருந்தன. நெடுந்தொலைவுக்கு அப்பால் நாலைந்து பெரிய வணிகப்படகுகள் விரிந்த சிறகுகளுடன் சென்றன. கரைமுழுக்க காகங்கள் கூட்டமாக எழுந்து அமர்ந்து கூவிக்கொண்டிருந்தன. நீரில் ஒரு சிறிய கரும்படகு அலைகளில் எழுந்தாடியபடி நின்றது.
அவள் வந்திறங்கிய படித்துறை அல்ல அது என்று தெரிந்தது. அந்தக்கரையை ஒட்டி அடர்ந்த காடு நீண்டு சென்றது. அந்தச்சாலை படித்துறை எதையும் சென்று சேரவில்லை. அதிகமாக எவரும் வராத சாலை என்பதும் சிலநாட்களுக்கு முன்னர்தான் அது சீரமைக்கப்பட்டிருக்கிறது என்பதும் தெரிந்தது. பெருங்கரைக்குமேல் புதர்களை வெட்டி ஒருக்கிய செம்மண்ணாலான ரதமுற்றத்தில் இருபது ரதங்கள் நின்றிருந்தன. அவற்றிலிருந்து குதிரைகளை அவிழ்த்துக்கொண்டிருந்தனர். வேலேந்திய காவலர்கள் தொலைவில் காவலுக்கு நிற்க வெண்ணிறத்தலைப்பாகை அணிந்த சேவகர்கள் வண்டிகளிலிருந்து இறக்கிய பொருட்களுடன் கங்கை நோக்கிச் சென்றுகொண்டிருந்தனர்.
தொலைவில் பேரரசியின் ஆமைக்கொடி பறக்கும் முதன்மை ரதம் நின்றது. சத்யவதி அதிலிருந்து இறங்கி கங்கைக்கரையோரமாக கட்டப்பட்டிருந்த தழைப்பந்தலில் போடப்பட்ட பீடத்தில் சென்று அமர்ந்தாள். அருகே சியாமை நின்றிருக்க காவலர்களும் அமைச்சர்களும் சூழ்ந்திருந்தனர். அவளைத் தொடர்ந்து வந்த இரு ரதங்களில் இருந்து காந்தாரியும் தங்கையரும் இறங்கி அவர்களுக்காக அமைக்கப்பட்டிருந்த இன்னொரு தழைப்பந்தலை நோக்கி சேவகர்களால் இட்டுச்செல்லப்பட்டனர்.
சேடிப்பெண் “தங்களுக்கான பந்தல் ஒருங்கியிருக்கிறது அரசி” என்றாள். அனகை அவள் பெட்டியுடன் பின்னால் வந்தாள். குந்தி அப்பகுதியில் கங்கையின் ஆலயமேதும் இருக்கிறதா என்று நோக்கினாள். மணல்கரையை ஒட்டி இடைநிறைத்த புதர்களுடன் பெருமரம் செறிந்த காடுதான் பச்சைக்கோட்டைச்சுவரென நீண்டு சென்றது. அவள் தனக்கான தழைப்பந்தல் நோக்கிச் செல்கையில் சியாமை வந்து வணங்கி “அரசி, தங்களை பேரரசி அழைக்கிறார்” என்றாள்.
குந்தி சத்யவதியின் பந்தலை அணுகி “பேரரசியை வணங்குகிறேன்” என்று தலைவணங்கி நின்றாள். அவளிடம் தன்னருகே இருந்த பீடத்தில் அமரும்படி சத்யவதி கைகாட்டினாள். அமர்ந்ததும் “களைத்திருக்கிறாய்…” என்றாள் சத்யவதி. குந்தி “என் கடமைகள் இவை” என்றாள். சத்யவதியின் புன்னகை பெரிதாகியது. “எப்போதுமே அரசியைப்போலப் பேசுகிறாய். அரசியைப்போலவே இருக்கிறாய்… இதை எங்கே கற்றாய்?” என்றாள். குந்தி மெல்ல தலைதாழ்த்தி “அஸ்தினபுரியின் மாண்பு எப்போதும் என் நெஞ்சில் உள்ளது” என்றாள். “நீ நேற்று அரியணையில் அமர்ந்திருக்கும் கோலத்தைப் பார்த்தேன். தேவயானியின் அரியணை அதற்குரியவளை அதுவே தேர்ந்தெடுத்துக்கொண்டுவிடுகிறது என நினைத்தேன்” என்றாள் சத்யவதி. “தங்கள் நற்சொல் அது” என்றாள் குந்தி.
சத்யவதியின் முகம் சற்று மாறுபட்டது. “ஆனால் பேரரசியரின் ஊழ் என்றுமே கரியதுதான். தேவயானியின் ஊழும் பிறிதொன்றல்ல. அரியணையில் அமர்ந்தவள் விழையும் அனைத்தும் கைதொடும் தொலைவில் இருக்கும். செல்வம், அரசு, மக்கள், புகழ். ஒவ்வொன்றுக்கும் நிகராக தன்னுள் இருந்து மதிப்புமிக்க ஒன்றை அவள் இழந்துகொண்டே இருப்பாள். இறுதியில் வெறுமையையே சுமந்துகொண்டிருப்பாள்.” குந்தி ஒன்றும் சொல்லவில்லை. “நன்னாளில் நான் தீதென ஏதும் சொல்லவிரும்பவில்லை. அனைத்தும் கைவருக! மகிழ்வும் நீடிக்குமாறாகுக! என்று வாழ்த்தவே விரும்புகிறேன்” என்றாள் சத்யவதி.
கீழே மணல்கரையில் வைதிகர்கள் இறங்கிச்செல்வதை குந்தி கண்டாள். அங்கே அவர்கள் அமர்ந்துகொள்வதற்காக தர்ப்பைப்புல் விரிக்கப்பட்டது. சூதர்கள் இடப்பக்கம் சற்று அப்பால் நின்றுகொண்டனர். சேடிகள் கரையிறக்கத்தில் கூடி நின்றனர். வைதிகர் செங்கற்களை அடுக்கி வேள்விக்கான எரிகுளம் அமைக்கத்தொடங்கினர். இரு சேவகர்கள் அஸ்தினபுரியின் அமுதகலசக்கொடி பறக்கும் மூங்கிலை அங்கே மண்ணில் நாட்ட அருகே கங்கையின் மீன் இலச்சினைக்கொடியை இருவர் நட்டனர்.
“நான் உன்னிடம் ஒரு செய்தியைச் சொல்லவே அழைத்தேன்” என்றாள் சத்யவதி. “நேற்று முடிசூட்டலுக்குப்பின் ஷத்ரியர் அவையில் இந்தப்பேச்சு எழுந்திருக்கிறது. நீ யாதவப்பெண். பாண்டு முடிசூடப்போவதில்லை என்பதனால்தான் உன்னை மணமகளாக்க தேவவிரதன் முடிவெடுத்தான். ஷத்ரியர்களும் அதை ஏற்றனர்.” குந்திக்கு அவள் சொல்லப்போவதென்ன என்று புரிந்தது. அவள் தலையசைத்தாள்.
“யாதவர் குலத்தில் பெண்களுக்குரிய மணமுறைகள் ஷத்ரியர்கள் ஏற்றுக்கொள்பவை அல்ல. ஷத்ரியர்கள் பெண்ணின் கருத்தூய்மையை முதன்மையாகக் கருதுபவர்கள். ஆகவே அஸ்தினபுரியை ஆளும் மன்னனின் துணைவியாக ஒரு ஷத்ரியப்பெண் இருந்தாகவேண்டும் என்று ஷத்ரியர்கள் சினத்தில் கூவியிருக்கிறார்கள். முடிவில் அவர்கள் ஒருங்கிணைந்து பாண்டுவுக்கு ஒரு ஷத்ரிய மனைவியை மணம்புரிந்து வைக்கும்படி ஆணையிட்டிருக்கிறார்கள். தேவவிரதன் அதை ஏற்றிருக்கிறான்” என்றாள் சத்யவதி.
குந்தி தலையசைத்தாள். “ஆனால் நீயே மூத்தவள். ஆகவே அவனுக்கு மகள்கொடையளிக்க ஷத்ரியர் எவரும் முன்வரவுமில்லை. அப்போது மாத்ரநாட்டு இளவரசர் சல்லியர் எழுந்து அவரது தங்கை மாத்ரியை பாண்டுவுக்கு மணமுடிப்பதாக வாக்களித்தார். அந்த வாக்கை தேவவிரதன் ஏற்றுக்கொண்டான். இச்சடங்குகள் முடிந்தபின்னர் மாத்ரநாட்டுக்குச் சென்று மாத்ரியை பாண்டுவுக்கு துணைவியாகப் பெறுவதாக தேவவிரதன் ஷத்ரியர்களுக்கு உறுதியளித்திருக்கிறான்” என்றாள் சத்யவதி.
குந்தி தன் விழிகளில் எதுவும் தெரியாதபடி அகத்தை வைத்துக்கொண்டாள். அவள் இதழ்கள் புன்னகையில் விரிந்தவை அப்படியே நீடித்தன. சத்யவதி அவள் முகத்தை நோக்கியபின் “நீ அகத்தை மறைப்பதில் தேர்ந்தவள்” என புன்னகை செய்தாள். “உன் எண்ணங்களை நான் அறிவேன். நீ விழைந்தது மார்த்திகாவதியின் வெற்றியும் உன் யாதவக்குலங்களின் வளர்ச்சியும். அவற்றை நீ அடையமுடியும். தேவயானியின் அரியணையில் நீ அமர்ந்து முடிசூடவும் முடிந்திருக்கிறது. நீ விழைந்ததற்கும் அப்பால் வென்றிருக்கிறாய்.”
குந்தி “ஆனால் இனி நான் அந்த அரியணையில் அமரமுடியாது அல்லவா?” என்றாள். “பாண்டுவின் மூத்த துணைவியாக நீயே இருப்பாய். ஆகவே நீயே பட்டத்தரசி. பாண்டு மீண்டும் ஒருமுறை அந்த அரியணையில் அமர்ந்து முடிசூடும் நிகழ்ச்சி நடந்தால்தான் அரியணையில் மாத்ரி முடிசூடி அமர்வாள். அவன் இருபெரும் வேள்விகளில் எதையாவது ஆற்றினால் மட்டுமே அவ்வாறு முடிசூடும் விழா நிகழும். அது நிகழ வாய்ப்பில்லை” என்றாள் சத்யவதி. “நீ தோற்கடிக்கப்படவில்லை குந்தி. உன் வெற்றி ஷத்ரியர்களால் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. நான் இதைவிடவும் பெரிய கட்டுகளை உடைத்தபடிதான் இவ்வரியணையில் இத்தனைநாள் அமர்ந்திருக்கிறேன்.”
குந்தி புன்னகைசெய்தாள். “நான் நினைத்தவை நினைத்தவாறு கைகூடும் என்ற எதிர்பார்ப்பையே இழந்துவிட்டேன்” என்று சத்யவதி சொன்னாள். “இக்கட்டுகள் இன்றி இந்நகரம் முன்னகருமென்றால் அதுவே போதும் என எண்ணத் தொடங்கிவிட்டேன். பெருகிவந்த அனைத்து இடுக்கண்களும் விலகி இவ்வண்ணம் இவையனைத்தும் முடிந்ததைவிட எனக்கு நிறைவூட்டுவது பிறிதொன்றில்லை.”
சியாமை வந்து அப்பால் நின்று தலைவணங்கினாள். சத்யவதி எழுந்தபடி “கங்கைவணக்கம் என்பது அஸ்தினபுரியில் அரியணையமரும் அரசியர் மட்டும் செய்யும் ஒரு சடங்கு. அவர்களின் அகத்தூய்மைக்கும் புறத்தூய்மைக்கும் கங்கையே சான்றளிப்பதற்காக இது நடத்தப்படுகிறது” என்றாள். குந்தி அவளையறியாமல் கங்கைக்கரையில் நிகழ்ந்துகொண்டிருக்கும் சடங்குகளை நோக்கினாள். அனகை வந்து வணங்கி “அரசி, தாங்கள் ஆடைமாற்றிக்கொள்ளவேண்டும்” என்றாள்.
தன் பந்தலுக்குள் சென்று குந்தி மரவுரியாடையை அணிந்துகொண்டாள். கொண்டையாக கட்டப்பட்டிருந்த கூந்தலைப்பிரித்து திறந்த தோள்களில் பரப்பிக்கொண்டாள். அனகை “கங்கைக்கரைக்குச் சென்று மணலை அள்ளி தங்கள் கற்பின் வல்லமையால் அதை ஒரு சிறு குடமாக ஆக்கி நீர் முகர்ந்து கரையில் கங்கையாக நிறுவப்பட்டுள்ள உருளைக்கல்லை மும்முறை முழுக்காட்டவேண்டுமாம்” என்றாள். அவள் விழிகளை குந்தியின் விழிகள் ஒருமுறை தொட்டுச்சென்றன. புன்னகையுடன் “இதற்கு முன்னர் தேவியர் அதைச்செய்திருக்கிறார்களா?” என்றாள். “பேரரசி?”
“ஆம்” என்றாள் அனகை. “அப்போது பேரரசிக்கும் ஒரு கரியகுழந்தை இருந்தது” என்றாள் குந்தி. எழுந்த புன்னகையை அனகை அடக்கிக்கொண்டாள். அவர்கள் இருவரும் வெளியே வந்தபோது சேடியர் கைகளில் தாலங்களுடன் காத்து நின்றனர். குந்தி கையில் பெரிய தாலத்தில் மலர்களும் கனிகளும் மஞ்சளரிசியும் நெய்விட்ட அகல்விளக்குமாக சரிவிறங்கி பூசனை நிகழுமிடத்துக்குச் சென்றாள். அவளைக் கண்டதும் சேடியர் குரவை ஒலியெழுப்பினர்.
அவள் வேள்விச்சுடர் அருகே சென்று நின்றாள். முதுவைதிகர் “அரசி, சுடரை வணங்குங்கள். இதிலிருந்து அந்த அகல்விளக்கை ஏற்றிக்கொள்ளுங்கள்” என்றார். குந்தி குனிந்து சுடரை வணங்கி அவிச்சாம்பலை நெற்றியிலணிந்தபின் அகல்திரியை ஏற்றிக்கொண்டாள். உடலால் காற்றை மறைத்து சுடர் அணையாமல் மெல்ல கங்கையை நோக்கிச் சென்றாள். அவளுடன் வந்த முதியசேடிப்பெண் அவள் செய்யவேண்டியதென்ன என்று மெல்லியகுரலில் சொல்லிக்கொண்டே வந்தாள்.
இடைவரை நீரில் இறங்கி நின்று தாலத்தை நீரில்மிதக்கவிட்டு கங்கையை மும்முறை வணங்கி அதிலிருந்த மலரையும் கனிகளையும் நீரில் விட்டாள். அங்கே நீர் மெல்லச்சுழன்றுகொண்டிருந்தது. அகல்விளக்கு சுடருடன் மும்முறை நீரில் சுற்றிவந்தபின் விலகிச்செல்ல கரையில் நின்றவர்கள் “கங்கையன்னையே வாழ்க! அழிவற்ற பெருக்கே வாழ்க! பகீரதன் புதல்வியே வாழ்க! முக்கண்ணன் தோழியே வாழ்க!” என்று வாழ்த்துரை கூவினர்.
மேலும் முன்னால் சென்று மார்பளவு நீரில் நின்றாள் குந்தி. கால்களில் மிதிபட்ட மண்ணை உணர்ந்ததுமே அவ்விடம் ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது, ஏன் அத்தனை பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கிறது என அவளுக்குப் புரிந்தது. நீரில் மூழ்கி அந்த மண்ணைப்பார்த்தாள். மணல்போலவே தெரிந்தாலும் அது அரக்கைப்போல உறுதியான பசையாக இருந்தது. மேலே எழுந்து மூச்சு வாங்கும்போது அதன் ஒருபகுதியை கால்களால் மிதித்து பிரித்தபின் மீண்டும் மூழ்கி அந்த மண்ணை தன் இருகைகளாலும் அழுந்தப்பற்றி பிய்த்து உருட்டி எடுத்துக்கொண்டாள்.
கைநிறைய அந்த மண்ணுடன் அவள் கரைநோக்கி வந்தபோது வாழ்த்தொலிகள் மேலும் உரத்தன. அவள் கரையில் கால்மடித்து அமர்ந்து அதை கையிலேயே வைத்து சிறிய கலம்போலச் செய்தாள். மணலால் ஆன கலம் போலவே தோன்றியது அது. அந்தக்கலத்தைக் கையிலேந்தி அவள் எழுந்தபோது குரவையொலிகளும் வாழ்த்தொலிகளும் சூதர்களின் இசைக்கருவிகளின் ஓசையும் இணைந்து முழங்கின. கங்கையின் நீரை அதில் அள்ளி எடுத்து வந்தாள். வேள்விக்களத்தின் தென்மேற்கு மூலையில் கங்கையாக நிறுவப்பட்டிருந்த வெண்ணிறமான உருளைக்கல்மேல் அந்த நீரைப் பொழிந்து முழுக்காட்டினாள்.
மும்முறை முழுக்காட்டியதும் கலம் சற்று நெகிழத்தொடங்கியிருந்தது. அவள் அதைத் திரும்பக்கொண்டுசென்று நீரில் விட்டாள். அவள் திரும்பி வந்து அமர்ந்ததும் காந்தாரியும் பத்து தங்கைகளும் அவளுடன் வந்து அமர்ந்துகொண்டனர். கங்கைக்கு மலரும் தீபமும் காட்டி பூசனைசெய்தனர். அவர்கள் வணங்கி எழுந்ததும் வைதிகர் வேள்விச்சாம்பலையும் எரிகுளத்துக் கற்களையும் கொண்டுசென்று கங்கையில் ஒழுக்கினர்.
வைதிகர் கங்கையில் மூழ்கி எழுந்து வேதகோஷத்துடன் கங்கை நீரை பொற்குடங்களில் அள்ளி தலையில் ஏற்றிக்கொண்டு கரைநோக்கிச் சென்றதும் முதியசேடி “அரசியர் நீராடி வருக” என்றாள். குந்தி தனியாக கங்கை நோக்கிச் சென்றாள். சத்யசேனையின் கரம்பற்றி காந்தாரி நடந்தாள். சத்யவிரதையும் சுஸ்ரவையும் இரு சிறுமிகளையும் கைப்பிடித்துக்கொண்டு நீரில் இறங்கினர்.
மும்முறை நீரில் மூழ்கி எழுந்து தோளில் ஒட்டிய கூந்தலை பின்னால் தள்ளி சுழற்றிக் கட்டிக்கொண்டாள் குந்தி. சத்யசேனை மெல்லியகுரலில் “யாதவப்பெண்ணின் கற்புக்கும் சான்றுரைக்கிறது கங்கை!” என்றாள். குந்தி தலைதிருப்பி அவள் கண்களை நோக்கி “தேவயானியின் மணிமுடியை அவமதித்து இன்னொரு சொல்லைச் சொல்ல நான் எவரையும் அனுமதிக்கப்போவதில்லை. எவராக இருந்தாலும் மறுகணமே அந்நாவை வெட்டவே ஆணையிடுவேன்” என்றாள். காந்தாரி திகைத்து சத்யசேனையின் தோளைப்பற்றிக்கொண்டாள். காந்தார இளவரசிகளின் விழித்த பார்வைகளை முற்றிலும் தவிர்த்து நீரை அளைந்து மணல்மேல் ஏறி குந்தி கரைநோக்கிச் சென்றாள்.