பேபி குட்டி

மலேசிய எழுத்தாளர் கெ.பாலமுருகன் நான் ஏழாண்டுகளாக கவனித்துவரும் படைப்பாளி. சமீபத்தில் மலேசியாவில் சந்திக்க நேர்ந்தபோது சற்று சோர்ந்துபோனவராகத் தெரிந்தார். மலேசிய இலக்கியச் சூழலில் இயல்பு அது. சிறிய வட்டம் ஆனதனால் வாசிப்பு குறைவு, வம்புகள் அதிகம். ஆகவே சோர்வுக்கு காரணங்கள் நிறைய. முன்பு சிற்றிதழ்க்காலகட்டத்தில் இங்கும் அப்படித்தான் இருந்தது.

அவர் சோர்விலிருந்து மீண்டு எழுதிய பேபி குட்டி என்ற சிறுகதையை வாசித்தேன். சமீபத்தில் வாசித்த மிகச்சிறந்த கதைகளில் ஒன்று இது. ஒருகுழந்தையின் மரணம். அந்த இழப்பின் பின்னணியில் நிகழ்ந்துகொண்டிருக்கும் இன்னொரு குழந்தைமையை எவரும் கவனிப்பதேயில்லை. மேலும் முதுமை என்பது மரணத்தின் இன்னொரு வடிவம். ஆகவே அதை சபிக்கிறார்கள், பழிக்கிறார்கள்.

பலகோணங்களில் அந்தத் தருணத்தை நம் கற்பனை விரித்துக்கொள்ளும்படி கதையை உருவாக்கியிருக்கிறார் பாலமுருகன். தலைப்பில் இருந்து கதையின் அனைத்து படிமங்களும் கதையின் மையமாக விளங்கும் தரிசனத்தை நோக்கியே செல்கின்றன. குழந்தை என்பதுதான் என்ன என்ற வினாவை நோக்கி.

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 41
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 42