‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 59

பகுதி பதினொன்று : முதற்களம்

[ 6 ]

வேதநாதம் மீண்டும் எழுவதைக் கேட்டதுமே குந்தி இக்கட்டு சீர்செய்யப்பட்டுவிட்டது என்று உணர்ந்தாள். அனகை வாயிலுக்கு அருகே வந்து நின்றபோது அவள் கண்களை குந்தியின் கண்கள் தொட்டன. அவள் சொல்லவருவதை குந்தி உணர்ந்துகொண்டாள். சத்யவதியும் பீஷ்மரும் சகுனியும் மீண்டும் அவைக்கு வந்து அமர்ந்துகொண்டிருக்கிறார்கள். அரியணையின் கால்களுக்கும் மணிமுடிக்கும் செங்கோலுக்கும் பூசைகள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. அவள் பெருமூச்சுவிட்டாள். சிலகணங்கள் தன்னுள் எழுந்து அமைந்த எண்ணங்களை அப்போது அவளே திரும்பிப்பார்க்க நாணினாள். காம விருப்பை வெல்லும் மனிதர்கள் நிகழலாம், அதிகார விருப்பை வெல்ல தெய்வங்களாலும் ஆவதில்லை.

அவள் புன்னகை செய்துகொண்டாள். மிகச்சில கணங்கள்தான். அதற்குள் என்னென்ன கற்பனைகள். ஒரு பேரரசு உருவாகி, சிறந்தோங்கி, வீழ்ச்சியடைந்து மறைந்தது. மண்ணில் உருவாகிமறையும் உண்மையான பேரரசுகள்கூட அவ்வண்ணம் எங்கோ எவரோ கொள்ளும் கணநேர கண்மயக்குகளாக இருக்குமா? மானுடருக்கு கோடி கல்பங்கள் பிரம்மனின் ஒருநாள் என்று புராணங்கள் சொல்கின்றன. கோடிபிரம்மன்கள் விஷ்ணுவின் ஒரு கணம். விஷ்ணுவோ பிரம்மத்தில் ஓயாது வீசும் அலைகளில் ஒன்று. காலம் என எதைவைத்து விளையாடிக்கொண்டிருக்கிறது மனம்?

தங்கைகள் சூழ அமர்ந்திருந்த காந்தாரி மெல்லியகுரலில் “யாதவ அரசி எங்கே?” என்றாள். குந்தி அருகே சென்று வணங்கி “அருகே இருக்கிறேன் அரசி” என்றாள். “வெளியே மகாமண்டபத்தில் அவள் இருக்கிறாளா என்று பார்த்து வா. எங்கிருக்கிறாள் என்று எனக்குத் தெரிந்தாகவேண்டும்” என்றாள் காந்தாரி. குந்தி புன்னகைசெய்தாள். ஒருசேடியிடம் சொல்லியனுப்பவேண்டிய வேலை. ஆனால் அதை சேடியிடம் சொல்ல காந்தாரி வெட்குகிறாள் என்று அவளுக்குத் தெரிந்தது. சத்யசேனையும் சத்யவிரதையும் அவளை திரும்பிப்பார்க்கவில்லை என்றாலும் அவர்களின் உடல்கள் அவளை பார்த்துக்கொண்டிருந்தன. குந்தி திரும்பியபோது சத்யவிரதை தன் கைகளைத் தாழ்த்த வளையல்கள் சரியும் ஒலி ஒரு மெல்லிய சிரிப்பைப்போல ஒலித்தது.

அந்த ஒலி அவளை அமைதியிழக்கச் செய்தது. ஒவ்வொருமுறையும் அவள் தலைக்குப்பின் அந்த வளையல் ஓசை கேட்கிறது. அது வேண்டுமென்றே எழுப்பப்படுவதல்ல. அவள் பார்வைமுன் இருக்கையில் அவர்களிடம் கூடும் இறுக்கம் அவள் திரும்பியதும் விலகும்போது ஏற்படும் உடலசைவின் ஒலி அது. ஆனால் அது திட்டவட்டமாக ஒன்றைச் சொல்கிறது. சிரிப்பைவிடக் கூரியது. சிரிப்புக்குப்பின் இருக்கும் எண்ணம் அவர்கள் அறிந்து எழுவது. ஆகவே எல்லைக்குட்பட்டது. இது உடலை இயக்கும் ஆன்மாவின் நேரடி ஒலி.

“ஆணை அரசி” என்று சொல்லி வாயிலை நோக்கிச் சென்ற குந்தி காலடிகளை சீராக எடுத்துவைத்தாள். அகம் நிலையழியும் கணத்தில் அளவான அமைதியான காலடிகளுடன் நடப்பது உடலைச் சீராக்கி அதனூடாக அகத்தையும் நிலைகொள்ளச்செய்கிறது. முகத்தை புன்னகைபோல விரித்துக்கொண்டால் உண்மையிலேயே அகத்திலும் சிறு புன்னகை பரவுகிறது.

அவள் புன்னகை புரிந்தாள். காந்தாரிக்கும் அவள் தங்கைகளுக்கும் அங்கே சற்று முன் வரை என்ன நிகழ்ந்துகொண்டிருந்தது என்பதே தெரியவில்லை. ஆனால் அதில் வியப்பதற்கேதுமில்லை. அவர்கள் எக்காலத்திலும் எந்த அரசியலையும் அறிந்தவர்களல்ல. விழிதிறந்திருந்தால் காந்தாரி ஓரிரு ஒலிகளிலேயே அனைத்தையும் உணர்ந்துகொண்டிருப்பாள். ஆனால் அவள் இப்போது அவளுடைய அகத்தின் ஒலிகளையன்றி எதையும் கேட்பதில்லை.

புறவிழிகள் மூடும்போது எப்படி அகமும் மூடிவிடுகிறது என்பது பெருவியப்புதான். காந்தாரி ஒவ்வொருநாளும் அவளுடைய இளையவர்களைப்போல மாறிக்கொண்டிருந்தாள். அவர்களின் சொற்களை அவள் பேசினாள். அவர்களின் ஐயங்களும் அமைதியின்மைகளும் துயரங்களும்தான் அவளுக்குள் ஓடிக்கொண்டிருந்தன. இல்லை, அவை இன்னும் தீவிரமடைந்திருக்கும். விழிகளை மூடிக்கொள்வதுபோல அகத்தைக் கூர்மையாக்குவது பிறிதொன்றில்லை. அவள் அகத்தில் அனைத்தும் புறவுலகின் அளவைகளில் இருந்து விடுபட்டு தன்னிச்சையாக வளர்ந்து பேருருவம் கொண்டிருக்கும். கரிய பெருநாகங்கள் நெளியும் ஒரு தலைகீழ் உலகம் போலிருக்கும் அவள் உள்ளம்.

குந்தி அணியறைக்கு அப்பால் நீண்டுகிடந்த இடைநாழியைப் பார்த்தாள். அங்கே சேடிகள் எவரேனும் தெரிந்தால் மகாமண்டபத்துக்குச் சென்று அந்த வைசியப்பெண் அங்கிருக்கிறாளா என்று பார்க்கச் சொல்லலாம் என நினைத்தாள். ஆனால் இடைநாழியில் பிறர் நடமாடுவது கட்டுப்படுத்தப்பட்டிருந்தது. தேன்மெழுகு பூசப்பட்டு ஒளிரச்செய்யப்பட்ட தோதகத்திப் பலகைகளினாலான செந்நிறத் தரை நீரோடை போல பட்டுத்திரைச்சீலைகளும் பாவட்டாக்களும் மூடி நின்ற தூண்களை எதிரொளித்தபடி நீண்டு கிடந்தது,

குந்தி தயங்கிபடி நடந்தாள். தன் நடையும் மாறிவிட்டிருக்கிறதோ என்ற எண்ணம் எழுந்தது. செய்யும் வேலைகள் எண்ணங்களை வடிவமைக்கின்றன. எண்ணங்கள் உடலசைவுகளை, மொழியை, முகத்தை மாற்றியமைக்கின்றன. புறத்தோற்றம் பிறரிடம் அதற்குரிய எதிர்வினைகளை உருவாக்குகிறது. அந்த எதிர்வினைகள் மீண்டும் நம்மை அதேபோல மாற்றியமைக்கின்றன. சேடியின் பணியை பத்துநாட்களுக்குச் செய்தால் அகமும் புறமும் சேடியுடையதாகிவிடும்.

குந்தி மகாமண்டபத்தின் உள்ளே நுழையும் சிறுவாயிலில் நின்றாள். அங்கு நின்றபடி அவையை எட்டிப்பார்க்கமுடியும். ஆனால் ஒருபோதும் மறைந்துநின்று பார்க்கலாகாது என அவள் தனக்கே ஆணையிட்டுக்கொண்டாள். ஒரு பேரரசி செய்யாத எதையும் எந்நிலையிலும் செய்யலாகாது. அந்த ஆணையை மூன்றுமாதங்களுக்கு முன் பாண்டுவின் மனைவியாக அவள் அஸ்தினபுரியின் கோட்டைவாயிலுக்குள் நுழைந்தபோதே தனக்கு விடுத்துக்கொண்டிருந்தாள். காலையில் மெல்லிய ஒளியில் அவளுடைய ரதம் கோட்டையைத்தாண்டி உள்ளே வந்தபோது மண்ணில்பரவிய மேகக்குவைகள் போல அஸ்தினபுரியின் மாடமுகடுகளின் திரளைத்தான் கண்டாள். அவற்றில் படபடத்த கொடிகளை, காற்றில் எழுந்து அமர்ந்த புறாக்களை, அப்பால் ஒரு சிறிய நகை போலத் தெரிந்த காஞ்சனத்தை…

பெருமுரசுகளும் கொம்புகளும் முழங்கிக்கொண்டிருக்க வாழ்த்தொலிகள் செவிகளை நிறைக்க அவள் அஸ்தினபுரியின் மண்ணில் காலடி எடுத்துவைத்தாள். ஆனால் மறுகணமே அவளுக்குத் தெரிந்தது அவை படைவீரர்களின் குரல்கள் என. அங்கே மிகக்குறைவான மக்களே வந்திருந்தனர். அவர்களும் அங்காடிகளில் இருந்து வந்து எட்டிப்பார்த்தவர்கள். இசைப்பதற்கு அரண்மனைச்சூதர்கள் அன்றி எவருமிருக்கவில்லை. நீர் அள்ளி வீசப்பட்டதுபோல உடலெங்கும் குளிர்வியர்வையை உணர்ந்தவள் உடனே தன்னைத் திரட்டிக்கொண்டாள். நிமிர்ந்த தலையுடன் மலர்ந்த விழிகளுடன் நடந்து தனக்காகக் காத்திருந்த அணித்தேரில் ஏறிக்கொண்டாள்.

அஸ்தினபுரியின் வீதிகளில் ரதம் செல்லும்போது எங்கும் அவள் மேல் மலர்களும் மங்கலஅரிசியும் பொழியவில்லை. ஆனால் நகரமே திரண்டு தன்னை வாழ்த்துவதை ஏற்பவள் போல அவள் அணித்தேரில் அமர்ந்திருந்தாள். ஆம், நான் ஆயர்மகள். இந்நகரம் ஒரு பசு. இதை என் தாழியில் கறந்து நிறைப்பதற்காக வந்தவள் என சொல்லிக்கொண்டபோது அவள் உதடுகளில் புன்னகை நிறைந்தது.

நிமிர்ந்த தலையுடன் சீரான காலடிகளுடன் குந்தி நடந்து மகாமண்டபத்துக்குள் நுழைந்தாள். அவளைக் கண்டதும் அந்த மண்டபத்தில் நிறைந்திருந்த குரல்கார்வை ஒருகணம் அறுபட்டது. அனைத்து உடல்கள் வழியாகவும் அசைவு ஒன்று நிகழந்தது. மறுகணம் குரலற்ற முழக்கம் பொங்கி மேலெழுந்தது. அவள் அப்பார்வைகள் மேல் என நடந்து சென்று மேடையின் வலப்பக்கம் அமர்ந்திருந்த சத்யவதியை அணுகினாள். சத்யவதியின் கண்களில் எழுந்த திகைப்பைக் கண்டாலும் அதை அறியாதவள் போல அவளிடம் குனிந்து “காந்தாரத்து அரசி மேடைக்கு தனித்து வருவதா அல்லது தங்கைகளுடனா?” என்று கேட்டாள்.

அவள் கேட்டது பொருளற்ற வினா என அக்கணமே சத்யவதி உணர்ந்துகொண்டாள். அவைக்கு வருவதற்காகவே அவள் அவ்வினாவை கொண்டுவந்தாள் என்றும் அவையை ஒளிந்துநின்று நோக்குவதைத் தவிர்க்கிறாள் என்றும் அவள் முகத்தை நோக்கியதும் அறிந்தாள். அவளிடம் மெல்லிய புன்னகை விரிந்தது. “நான் சியாமையை அனுப்புகிறேன்” என்று அவள் சொன்னாள். “ஆணை பேரரசி” என தலைவணங்கியபின் குந்தி சீரான நடையில் உள்ளே சென்றாள். செல்லும் வழியிலேயே வலக்கண்ணால் இடதுபக்கம் அரண்மனைப்பெண்டிர் அமரும் பகுதியில் முகப்பிலிடப்பட்ட பீடத்தில் தலையில் வைரச்சுட்டியும் மார்பில் முத்தாரமும் காதுகளில் பொற்குழைகளுமாக பிரகதி அமர்ந்திருப்பதைக் கண்டாள்.

விழிகளை வலப்பக்கம் திருப்பியபோது அவள் பார்வையில் அரியணைமேடை பட்டது. ஹஸ்தியின் அரியணை முற்றிலும் பொற்தகடுகளால் மூடப்பட்டிருந்தது. அதன் சிம்மவிழிகளும் வாயும் செவ்வைரங்களால் ஒளிகொண்டிருந்தன. அதன்மேல் இணைசெங்கழுகுகள் இருபக்கமும் வாய்திறந்து நோக்க நடுவே அஸ்தினபுரியின் அமுதகலச இலச்சினை பொறிக்கப்பட்டு நவமணிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அருகே அதைவிடச் சற்று சிறிய அரசியின் அரியணை. அதன் இருபக்கமும் பெண்சிம்மங்கள் வாய்மூடி விழிவைரங்கள் ஒளிவிட அமர்ந்திருந்தன. மேலே இணைமயில்களுக்கு நடுவே அஸ்தினபுரியின் இலச்சினை மணியொளிவிட்டது.

இரு சிம்மாசனங்களுக்கும் முன்னால் செம்பட்டு விரிக்கப்பட்ட பீடங்களில் மணிமுடிகள் வைக்கப்பட்டு அவற்றுக்கு வைதிகர் பூசனைசெய்துகொண்டிருந்தனர். அரசியின் மணிமுடி எட்டு இலட்சுமிகள் பொறிக்கப்பட்ட எட்டு இதழ்கள் கொண்ட தாமரை வடிவில் இருந்தது. அதன் வைரங்கள் இருபக்கமும் எரிந்த நெய்விளக்குகளின் ஒளியில் மின்னிக்கொண்டிருந்தன. அள்ளி கையிலெடுக்கப்பட்ட விண்மீன்கூட்டம் போல என குந்தி நினைத்துக்கொண்டாள்.

குந்தி சில கணங்களுக்குள் அப்பகுதியை கடந்துசென்றுவிட்டாள். அந்த மணிமுடியை அவள் ஒருகணமே நோக்கினாள். ஆனால் அதன் ஒவ்வொரு வளைவும் ஒவ்வொரு மலரும் ஒவ்வொரு ஒளிக்கல்லும் அவளுடைய அகக்கண்ணில் தெளிவாகத் தெரிந்தன. நெஞ்சுக்குள் இரும்புருளை ஒன்று அமர்ந்துகொண்டதுபோல, அதன் எடை கால்களை அழுத்துவதுபோல குந்தி சற்று தளர்ந்தாள். பெருமூச்சுவிட்டு அந்த எடையை தன்னுள் கரைத்துக்கொள்ள முயன்றாள்.

தேவயானி சூடிய மணிமுடி. அதைப்பற்றிய கதைகளை அவள் இளமையிலேயே கேட்டிருந்தாள். மன்வந்தரங்களின் தலைவனான பிரியவிரதனின் மகள் ஊர்ஜஸ்வதியின் கருவில் உதித்தவள் பேரரசி தேவயானி. அசுரகுருவான சுக்ரரின் மகள். யயாதி அவளை மணந்து அஸ்தினபுரியின் பட்டத்தரசியாக்கினான். பிறிதொருவர் சூடிய மணிமுடியை தான் அணிவதில்லை என்று தேவயானி ஆணையிட்டாள். யயாதியின் வேள்வித்தீயில் மயன் எழுந்தருளினான். என் அரசிக்குகந்த மணிமுடி ஒன்றைத் தருக என யயாதி கோரினான்.

ஓவியம்: ஷண்முகவேல் [பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]
ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]

யயாதியின் வேள்வியை பொருள்வேள்வியாக மயன் முன்னின்று நடத்தினான். வேள்விமுதிர்ந்தபோது எரிதழல் தாமரையாக மலர எட்டு இலட்சுமிகள் தோன்றினர். அனைத்தையும் அமைத்த ஆதிலட்சுமி. மக்கள்செல்வமாகப் பொலியும் சந்தானலட்சுமி. கலையறிவாகிய வித்யாலட்சுமி. பொன்னருள்செய் தனலட்சுமி. அமுதமாகிவரும் தான்யலட்சுமி. ஆற்றலாகி எழும் கஜலட்சுமி. அறமாகி நிற்கும் வீரலட்சுமி. வெற்றியின் முழுமையான விஜயலட்சுமி. எட்டு பொற்தாமரைகளையும் ஒன்றாக்கி மயன் மணிமுடி செய்தான். மார்கழிமாதம் முழுநிலவுநாளில் மகம் நட்சத்திரத்தில் தேவயானி அந்த மணிமுடியைச்சூடி அரியணையமர்ந்தாள். பாரதவர்ஷத்தில் அவளுக்கிணையான சக்ரவர்த்தினி வந்ததில்லை என்றன சூதர்பாடல்கள்.

காந்தாரியை வணங்கி “பிரகதி அரண்மனைப்பெண்டிருக்குரிய நிரையில் அமர்ந்திருக்கிறாள்” என்றாள் குந்தி. காந்தாரியின் முகத்தில் வந்த ஆறுதலை, அவளைச்சூழ்ந்திருந்த தங்கையரின் தலைகள் திரும்பியபோது உருவான மெல்லிய நகைமணியொலியைக் கேட்டதும் அவள் உள்ளத்தில் புன்னகை எழுந்தது. “ஆனால் அவளை முன்நிரையில் அமரச்செய்திருக்கிறார்கள். அவள் நெற்றியில் வைரச்சுட்டியும் கழுத்தில் பாண்டியமுத்தாரமும் அணிசெய்கின்றன” என்றாள்.

காந்தாரியால் தன் முகத்தின் இறுக்கத்தை மறைக்கமுடியவில்லை. வெண்பளிங்குக் கன்னங்களும் கழுத்தும் குருதியூறிச் சிவக்க மூச்செழுந்து மார்பகம் அசைய அவள் அறியாமலேயே தங்கையரை நோக்கித் திரும்பினாள். அவர்களின் கண்களைப் பார்க்கும் ஆவலை குந்தி வென்றாள். கண்களை சற்றும் திருப்பாமல் வணங்கி விலகி நின்றபோது சம்படையின் கண்களைச் சந்தித்தாள். சம்படை அவளை நோக்கி நாணத்துடன் சிரித்தபோது கன்னங்களில் குழிகள் விழ சிறுவெண்பற்கள் தெரிந்தன. தசார்ணை சம்படையையும் குந்தியையும் மாறி மாறி ஐயத்துடன் பார்த்துவிட்டு அவள் தொடையைத் தொட்டாள்.

குந்தி தசார்ணையை நோக்கி புன்னகை செய்தாள். அவள் சற்றுத்தயங்கியபின் வாயைப்பொத்தி உடலை வளைத்து புன்னகைசெய்தபின் பார்வையை திருப்பிக்கொண்டாள். ஆனால் அவள் உடல் நெளிந்தே இருந்தது. குந்தி புன்னகையுடன் தன் பீடத்தில் அமர்ந்துகொண்டாள். சம்படை குந்தியை விரலால் சுட்டி தசார்ணையிடம் ஏதோ சொல்ல அவள் சம்படையின் தொடையில் மெல்லக் கிள்ளினாள். குந்தி நோக்கியபோது சம்படை நன்றாக வாய்விரித்து கண்கள் ஒளிர சிரித்தாள். முகம் நாணத்தில் சிவக்க சற்று சிரித்தபின் தசார்ணை தலைகுனிந்துகொண்டாள்.

சியாமை நிமிர்ந்த தலையுடன் உள்ளே வந்தாள். காந்தாரியை அணுகி திடமான குரலில் “மூத்த அரசியை வணங்குகிறேன். பேரரசியின் ஆணையைச் சொல்லவந்த தூதுப்பெண் நான்” என்றாள். காந்தாரி எழுந்துகொண்டு “அவைக்கு அழைக்கிறார்கள், கிளம்புங்கள்” என தன் தங்கையரிடம் சொன்னாள். “சத்யசேனை, இவர்களிடம் எப்படி நடந்துகொள்ளவேண்டுமென்று சொன்னாயல்லவா?” சத்யசேனை “ஆம் அரசி” என்றபின் குந்தியை நோக்கி “எங்கே யாதவ இளவரசி? அவள்தானே அரசிக்கு அகம்படி செய்பவள்?” என்றாள்.

சியாமை ஒருகணம் திகைத்து அவர்களை மாறிமாறி நோக்கியபின் “அரசி, அழைப்புக்காக நான் வரவில்லை. நான் பேரரசியின் செய்தி ஒன்றைச் சொல்வதற்காகவே வந்தேன்” என்றாள். காந்தாரி அப்போதுதான் அவள் குரலில் இருந்த தீவிரத்தை உணர்ந்து மாறிமாறி பேசிக்கொண்டிருந்த தங்கையரை கைகளால் நிறுத்தி “சொல்” என்றாள். “அரசி, நேற்றுமதியம் நம் எல்லைப்பகுதியில் ஒரு புவியதிர்வு நிகழ்ந்திருக்கிறது. அஸ்தினபுரியின் மக்களுக்கு அது மிகமிகத் தீய குறி. முன்னரே இங்கு விழியிழந்த மன்னர் நாடாள்வது நெறிமீறல் என்னும் எண்ணம் இருந்தது. இந்த தீக்குறியைக் கண்டபின் அனைத்து குடித்தலைவர்களும் குலமூத்தாரும் வைதிகரும் மூத்தஇளவரசர் திருதராஷ்டிரர் அரசுப்பட்டமேற்கலாகாது என்று கூறிவிட்டனர். அவர்கள் கோல் தாழ்த்தி ஏற்காமல் அஸ்தினபுரியின் அரியணையில் எவரும் அமரவியலாது.”

குந்தி தன் நெஞ்சின் ஓசைக்கு மேல் அச்சொற்களை நெடுந்தொலைவில் என்பதுபோலக் கேட்டாள். சியாமையின் உதடுகளை விட்டு விலகி அவள் பார்வை காந்தாரியின் முகத்தில் பதிந்தது. அதைச் செய்யலாகாது என அவளுள் இருந்த அரசியல்மதி ஆணையிட்டாலும் அவளால் பார்க்காமலிருக்க முடியவில்லை. காந்தாரியின் உடல் நடுங்கிக்கொண்டிருப்பதையும் கழுத்திலும் நெற்றியிலும் நீலநரம்புகள் புடைக்கத் தொடங்கியதையும் அவள் கண்டாள்.

“ஆகவே என்ன செய்யலாமென்று பேரரசியும் பிதாமகரும் மூத்தவரிடமே கேட்டார்கள். தன் தம்பி அரசாளட்டும் என அவர் ஆணையிட்டார். அதன்படி இன்று அஸ்தினபுரியின் அரியணையில் அமரவிருப்பவர் இளையவரான பாண்டுதான்” என்றாள் சியாமை. சத்யசேனை அதை புரிந்துகொள்ளாதவள் போல “யார் நீ? என்ன சொல்கிறாய்?” என்றாள். “நான் சியாமை. பேரரசியின் அணுக்கத்தோழி” என்றாள் சியாமை. “நான் சொல்வது பேரரசியின் சொற்களை.”

“சீ, விலகி நின்று பேசு. தாசிகள் வந்து ஆணையிடும்படி காந்தாரக்குலம் இழிந்துவிடவில்லை” என்றாள் சத்யசேனை. சியாமை “நான் என் கடமையைச் செய்கிறேன்” என்றாள். சத்யசேனை “நாங்கள் எவருடைய ஆணைக்கும் கட்டுப்பட்டவர்களல்ல. எங்கள் தமையன் இங்கே வரட்டும். அவர் சொல்லட்டும்” என்று உடைந்த குரலில் கூச்சலிட்டாள். பட்டாடைகள் வைரங்கள் அனைத்துக்கும் உள்ளிருந்து அவளுள் வாழ்ந்த பாலைவனப் பெண் எழுந்து வருவதைக் கண்டு குந்தி தன்னுள் புன்னகை செய்தாள்.

சத்யவிரதையும் உரக்க “எங்கள் தமையனை இங்கே வரச்சொல்லுங்கள்… அவர் சொல்லாமல் நாங்கள் எதையும் ஏற்கமாட்டோம்” என்று கூவினாள். “சத்யவிரதை” என ஏதோ சொல்லவந்த காந்தாரியின் கைகளைப்பற்றி “மூத்தவளே, நீங்கள் இப்போது ஏதும் சொல்லலாகாது. இது வஞ்சகம். இந்த நயவஞ்சகத்தை நாம் ஏற்கலாகாது” என்று சத்யசேனை சொன்னாள். சத்யவிரதை தன்னை மறந்தவள் போல “எங்கே எங்கள் தமையன்? அழையுங்கள் அவரை” என்று கூவிக்கொண்டிருந்தாள். அந்தப்பதற்றம் பிறரையும் ஆட்கொள்ள சுதேஷ்ணையும் சம்ஹிதையும் தேஸ்ரவையும் கூட கைகளை நீட்டி கூவினர். சம்படையும் தசார்ணையும் திகைத்து அவர்களை மாறிமாறிப்பார்த்தனர். சம்படை தசார்ணையின் கைகளைப் பற்றிக்கொண்டாள்.

சியாமை “என் தூதைச் சொல்லிவிட்டேன் அரசியரே. தங்கள் ஆணையை நிறைவேற்றுகிறேன்” என்று தலைவணங்கினாள். சியாமையை ஏன் சத்யவதி முதன்மைச்சேடியாகக் கொண்டிருக்கிறாளென்று குந்தி அப்போது உணர்ந்தாள். அரசியரின் கொந்தளிப்பு அவளை தொடவேயில்லை. நாடகத்தில் முன்னரே எழுதிப்பயிலப்பட்டவற்றை நடிப்பவள் போல அமைதியாகப் பேசி வணங்கி அவள் விலகிச் சென்றாள்.

ஆங்காரத்துடன் பற்களை நெரித்தபடி சத்யசேனை குந்தியை நோக்கித் திரும்பினாள். “இதெல்லாம் உன் சூழ்ச்சி அல்லவா? யாதவப்பெண்ணுக்கு மணிமுடி தேடிவரும் என நினைக்கிறாயா? பார்ப்போம்” என்று கூவினாள். சத்யவிரதை நான்கடி முன்னால் வந்து கைகளை நீட்டி “நீ அமைதியாக இருப்பதைக் கண்டபோதே எண்ணினேன், இதில் ஏதோ வஞ்சகம் உண்டு என்று… உன் சூழ்ச்சி எங்களிடம் நடக்காது. எங்கள் தமையன் இதோ வருகிறார்” என்றாள். சத்யசேனை “இந்த அஸ்தினபுரியே எங்கள் படைகளிடம் இருக்கிறது. என் தமக்கையை அவமதித்த உன்னை கழுவிலேற்றாமல் ஓயமாட்டேன்” என்றாள்.

நாகம் போல அவர்கள் விழிகளை இமையாது உற்று நோக்கியபடி குந்தி அசையாமல் அமர்ந்திருந்தாள். ஒருசெய்தியைக் கேட்டதும் அதன் முழுப்பின்னணியையும் தெரிந்துகொள்ள அவர்கள் முற்படவில்லை. அக்கணமே எளிய உணர்ச்சிகளை பொழிகிறார்கள். சகுனி ஒப்பாத ஒன்றை பேரரசி ஆணையாக அறிவிக்கமாட்டாள். அரசியலோ அரசநடத்தையோ முறைமைகளோ பயிலாத எளிய பாலைவனப் பழங்குடிப்பெண்கள் அவர்கள். அவள் மீண்டும் தனக்குள் புன்னகைத்துக்கொண்டாள். ஒருபோதும் அவர்கள் தனக்கு எதிரிகளாக அமையப்போவதில்லை. மாறாக அவர்களுடைய எளிய காழ்ப்பு தன்னை மேலும்மேலும் வல்லமைகொள்ளச் செய்யும். தன்வெற்றிகளை மேலும் உவகையுடைவையாக ஆக்கும்.

காந்தாரி தன் தங்கைகளை கைநீட்டி அமைதிப்படுத்த முயன்றபடியே இருந்தாள். ஆனால் சினத்தால் கட்டற்றவர்களாக ஆகிவிட்டிருந்த அவர்களை அவளால் ஒன்றும் செய்யமுடியவில்லை. தசார்ணை சத்யசேனையின் ஆடையைப்பற்ற அவள் தசார்ணையை ஓங்கி அறைந்து “விலகிப் போ” என்று அதட்டினாள். அடிவாங்கிய தசார்ணை திகைத்த பெரியவிழிகளால் நோக்கியபடி பின்னடைந்தாள். அவற்றில் நீர் ஊறி கன்னத்தில் வழியத்தொடங்கியது. கண்களைக் கசக்கியபடி வாய் திறந்து நாக்கு தெரிய அவள் வீரிட்டழுதாள்.

அறைக்குள் சகுனி நுழைந்ததும் அனைத்துப்பெண்களும் கணத்தில் ஓசையடங்கினர். சகுனியின் கண் ஒரே கணத்தில் குந்தியை வந்து தொட்டுச்சென்றது. அவள் அவன் உள்ளே வரும் ஒலி கேட்டதுமே அக்கணத்தை எதிர்நோக்கியிருந்தாள். அவன் கண்களைச் சந்தித்ததுமே அவள் மென்மையாக புன்னகைசெய்தாள். பெருந்தன்மையுடன், மன்னிக்கும் தோரணையுடன், அவனைப்புரிந்துகொண்ட பாவனையுடன். அந்தப்புன்னகை அவனை பற்றி எரியச்செய்யும் என குந்தி அறிந்திருந்தாள்.

அதற்கேற்ப சகுனி கடும் சினத்துடன் பற்களைக் கடித்து மிகமெல்லிய குரலில் “என்ன ஓசை இங்கே? என்ன செய்கிறீர்கள்?” என்றான். அவன் சினத்தை அறிந்திருந்த சத்யசேனையும் சத்யவிரதையும் மெல்லப்பின்னடைந்தனர். காந்தாரி “இளையவனே, சற்றுமுன் ஒரு தூது வந்தது” என்றாள். “அது உண்மை மூத்தவளே. அஸ்தினபுரியின் அரசை நாம் சிலகாலத்துக்கு விட்டுக்கொடுக்கவேண்டியிருக்கிறது” என்றான். “சிலகாலத்துக்கா?” என்றாள் காந்தாரி. “ஆம், நமக்கு வேறுவழியே இல்லை. இந்தநாட்டுமக்கள் மூத்தஇளவரசரை ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்களை மீறி நாம் ஏதும் செய்யமுடியாது.”

“நம் படைகள் என்ன செய்கின்றன?’ என்றாள் காந்தாரி. “மூத்தவளே, படைபலத்தைக்கொண்டு இந்நகரை மட்டும் கைப்பற்றலாம். அதைக்கொண்டு என்ன செய்வது? மேலும் பீஷ்மபிதாமகரை எதிர்க்கும் ஆற்றல் எனக்கு இல்லை. ஆற்றலும் படைக்கலனும் இருந்தாலும் அவரை எதிர்க்க என்னால் முடியாது. அவர் எனக்கும் பிதாமகர்” என்றான். அவர்கள் திகைத்து அவனை நோக்கியபடி நின்றனர். யாரோ கைகளைத் தாழ்த்த வளையல்கள் ஒலியெழுப்பின. “இன்னும் பதினெட்டாண்டுகாலம் தமக்கையே. நான் இங்குதான் இருப்பேன். உங்கள் மைந்தனை அரியணை ஏற்றி அவன் பாரதவர்ஷத்தை வெல்வதைக் கண்டபின்னர்தான் காந்தாரத்துக்குச் செல்வேன்.”

சியாமை உள்ளே வந்து பணிந்தபின் அமைதியாக நின்றாள். “தமக்கையே, நாம் நமக்குரிய அரசை அவர்களிடம் சிலகாலம் கொடுத்து வைக்கப்போகிறோம், அவ்வளவுதான்” என்றபின் சகுனி வணங்கி திரும்பிச்சென்றான். அவன் முதுகை நோக்கிக்கொண்டு குந்தி அமர்ந்திருந்தாள். அவன் திரும்பமாட்டான் என அவள் அறிந்திருந்தாள், ஆனால் அவன் அவளைத்தான் எண்ணிக்கொண்டிருப்பான் என்றும் உணர்ந்தாள்.

சியாமை வந்து குந்தியை வணங்கி “அஸ்தினபுரியின் அரசி, தாங்கள் அரியணைமேடைக்கு வரவேண்டும் என்று பேரரசி தெரிவித்தார்” என்றாள். ஒருகணம் சியாமையின் கண்களில் வஞ்சம் வந்து சென்றதை குந்தி கண்டாள். “தங்கள் இளைய அரசி சத்யசேனை தங்களுக்கு அகம்படி செய்யவேண்டும் என்றும் பேரரசி ஆணையிட்டார்.” குந்தி சத்யசேனையின் மூச்சொலியைக் கேட்டாள். காந்தார இளவரசியரின் உடல்களில் இருந்து நகைகள் ஒலித்தன. அவள் திரும்பிப்பார்க்கவில்லை. தன் கண்ணுக்குள் எஞ்சியிருந்த தேவயானியின் மணிமுடியில் கருத்தை நிறுத்தினாள்.

முந்தைய கட்டுரைஅகழிகள் -கடிதங்கள்
அடுத்த கட்டுரைஅன்னியநிதி இன்னொரு பார்வை