இணையமும் நூல்களும்

இணையத்தில் வரும் எழுத்துக்களைப்பற்றி நண்பர்களிடம் பேசிக்கொண்டிருந்தேன். வலைப்பூ எழுத்துக்கள் மிகமிகக் குறைந்துவிட்டன என்று சொன்னார்கள். பெரும்பாலானவர்கள் ஃபேஸ் புக் எழுத்தாளர்களாக ஆகிவிட்டனர். ஃபேஸ்புக்கில் அப்படி என்னதான் எழுதுகிறார்கள் என்றேன். பெரும்பாலும் விவாதத்தைக் கோரும் சுருக்கமான குறிப்புகள், கவன ஈர்ப்பு கருத்துக்கள் மட்டுமே என்றார்கள். அதில் உள்ள உடனடி எதிர்வினைதான் அவ்வெழுத்தை வடிவமைக்கும் தூண்டுதல் என்றனர்.

எழுதுபவர்கள் கொஞ்சநாள் அந்த எதிர்வினையை முழுமையாகவே கவனிக்காமலாகிவிடவேண்டும். எத்தனை வாசகர்கள் என்பதை முற்றிலுமாக உதாசீனம் செய்துவிடவேண்டும் என நான் சொல்வேன். சில ஆண்டுகளுக்குமுன் சுனீல் கிருஷ்ணன் காந்தி டுடே தளத்தை ஆரம்பித்தபோது அவருக்கு நான் சொன்ன ஆலோசனை இது. அதை அவர் முழுமையாக நம்பியதனால்தான் இன்று காந்திடுடே முக்கியமான ஒரு தளமாக உள்ளது. காந்தி பற்றி அறிய எந்த ஒரு தமிழ்வாசகனும் உடனடியாக வந்துசேரவேண்டிய தளம் அது.சென்ற ஒருவாரத்தில் இரு வெவ்வேறு ஆய்வாளர்கள் காந்தியைப்பற்றிய ஆதாரங்களுக்காக அந்தத் தளத்தை வாசித்ததை பேச்சுவாக்கில் சொன்னதைக் கேட்டேன்.

சுனீல் கிருஷ்ணன்

ஃபேஸ்புக் பற்றி நண்பர்களிடம் பேசும்போது கேட்டேன். எப்படியும் ஒரு ஐம்பதாயிரம் பேர் அதில் தீவிரமாகச் செயல்படுகிறார்கள். தமிழில் வருடத்துக்கு முப்பதாயிரம் நூல்கள் வெளிவருகின்றன. அவற்றில் ஐநூறு நூல்களாவது பல்வேறு வகையிலும் முக்கியமானவை. நூல்களைப்பற்றிய எழுத்துக்கள் எவ்வளவு வருகின்றன? ஏதாவது நூலைப்பற்றி எதையாவது எழுதுவதையெல்லாம் சேர்த்துச் சொல்லுங்கள் என்றேன். அனேகமாக ஏதும் இல்லை என்றார்கள். ஒருவருடத்துக்கு பத்து நூல்கள் பேசப்பட்டிருந்தால் அதிகம் என்றார்கள். நண்பர்கள் ‘தமிழகத்தில் இளைஞர்கள் எதையாவது வாசிக்கிறார்களா என்ற பயமே வந்துவிடும். புத்தகம் வாசிப்பவர்கள் ஃபேஸ்புக் வாசிப்பதில்லை என்று பதில்சொல்லி சமாதானம் அடையவேண்டியதுதான்” என்றார்கள்.

அது உண்மை. எளிய மேலோட்டமான வாசிப்புக்கு மூளையைப் பழக்கிக்கொள்ளும் ஒருவரால் கனமான நீடித்த வாசிப்பை அளிக்கமுடியாது. ஃபேஸ்புக் வாசிக்காதீர் என நான் நண்பர்களிடம் மீண்டும் மீண்டும் சொல்வதற்கான காரணங்கள் இரண்டு.

ஒன்று, மொழியில் தொடர்பயிற்சியும், இயல்பான படைப்பூக்கமும் இல்லாதவர்கள் எழுதும் தரமற்ற உரைநடையை தொடர்ந்து வாசிப்பது நம் அகமொழிநடையை நம்மையறியாமலேயே கீழிறக்குகிறது. தரமான உரைநடையும் தெளிவான சிந்தனையும் வேறுவேறல்ல. நாம் வாசிக்க வாசிக்க நம் அகமொழி மேலும் கூர்மையும் தெளிவும் கொள்ளவேண்டும். நாம் நினைப்பதை திட்டவட்டமாகச் சொல்லும் திறன் நமக்கு கைவரவேண்டும். எப்படி தரமான உரைநடை நம்மை மேலெடுக்கிறதோ அதேயளவுக்கு தரமற்ற உரைநடை நம்மை கீழிறக்கவும் செய்யும். ஒரு தொடக்கநிலை தமிழ் வாசகன் தமிழில் புதுமைப்பித்தன் முதல் சுந்தர ராமசாமி ஈறாக எழுதப்பட்டுள்ள தரமான உரைநடைக்கு அறிமுகமாகவில்லை என்றால் அவனால் சிந்திக்கவேமுடியாது என்றே பொருள்.

இரண்டு, சமகாலத்தில் அரசியலில் இலக்கியத்தில் தொடர்ச்சியாக நூற்றுக்கணக்கான விவாதங்கள், அரட்டைகள் ஓடிக்கொண்டே இருக்கும். நாகர்கோயிலில் ஆயிரம் டீக்கடை இருந்தால் ஆயிரம் விவாதம் நிகழ்ந்துகொண்டிருக்கும். ஆயிரம் டீக்கடை விவாதத்தையும் பதிவுசெய்து அனைத்திலும் நாம் பங்குகொள்ளமுடியும் என்றால் அது ஒரு சமூகவலைத்தளம். அது நம்மை சமகாலவிவாதங்களுக்குள் மட்டுமே மூழ்கிவிடச்செய்கிறது. நிரந்தரமான, தொடர்ச்சியான எதிலும் ஈடுபட முடியாமல் வெறும் உடனடி அரட்டையில் நிறுத்திவிடுகிறது. அலைகளே எஞ்சுகின்றன, ஆழம் தென்படுவதில்லை. அலைகள் ஆழத்தை மறைக்கக்கூடியவை.

ஒரு நல்ல வாசகன் அவனுடைய இயல்புக்கு ஏற்ப அவன் ஆர்வம் கொள்ளும் விஷயங்களை தொடர்ச்சியாக, ஈடுபாட்டுடன் வாசிக்கவில்லை என்றால் அவன் எதையுமே அறியவில்லை என்று பொருள். அவனுக்கு தனித்தன்மை என்ற ஒன்று இல்லை என்று பொருள். உடனடியாக அனைத்தையும் வாசிப்பவன் எதையுமே வாசிப்பதில்லை.

ஒரு வளரும் எழுத்தாளன், ஓர் இளம் வாசகன், ஒரு மாணவன் கண்களை மூடிக்கொண்டு அனைத்து சமூக வலைத்தளங்களில் இருந்தும் உடனடியாக விலகிவிடவேண்டும் என்று மட்டுமே என்னால் சொல்லமுடியும். சமீபத்தில் நித்யாவின் மாணவரான அமெரிக்கக் கல்வியாளர் பீட்டர் மொரெஸிடம் இணையத்தில் உரையாடியபோது அவர் இவ்விரு விஷயத்தையும் தெளிவாகச் சொல்லி இது அமெரிக்கக் கல்விச்சூழலின் உறுதியான விதியாக மெதுவாக மாறிக்கொண்டிருப்பதாகச் சொன்னார். நம் நாட்டில் இதைக்குறித்த ஒரு விவாதம் நிகழும் சூழல்கூட இன்றில்லை.

வாசிக்க நினைப்பவர்களுக்கு தமிழ்ச்சூழலில் இணையம் மிகச்சிறந்த வழிகாட்டியாக அமையும் என்பது இதற்கு மறுபக்கமாக உள்ள உண்மை. இங்குள்ள அச்சு ஊடகங்கள் தீவிரவாசிப்பு என எதற்குமே இடமளிக்காத சூழலில் இணையம் வழியாகவே நல்ல நூல்களை நாம் அடையாளம் காணமுடியும். ஆம்னிபஸ் என்னும் இணையதளம் அவ்வகையில் மிக முக்கியமானது. அதில் மட்டுமே இன்று தொடர்ச்சியாக நூல்மதிப்புரைகள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. தமிழ் இணைய இதழ்களில் ‘சொல்வனம்’ தொடர்ச்சியான தரமான வாசிப்புக்கு உகந்ததாக உள்ளது.

மில்லி போலாக்

காலையில் ஆம்னிபஸ் இணையதளத்தில் தற்செயலாக இந்த மதிப்புரையைப் பார்த்தேன். மில்லி போலாக்கின் நூலுக்கு சுனீல் எழுதியிருக்கும் மதிப்புரை அதன் கச்சிதமான மொழிநடையாலும் தெளிவான மதிப்பீடுகளாலும் எப்படி ஒரு நூல்மதிப்புரை இருக்கவேண்டும் என்ற முன்னுதாரணம் போல அமைந்திருக்கிறது. மில்லிபோலக்கின் நூலின் சுருக்கமான மொழியாக்கம் காந்தி டுடே தளத்திலும் உள்ளது.


மில்லி போலக்கின் காந்தி என்னும் மனிதர், காந்தி டுடே

சுனீல் கிருஷ்ணன் மதிப்புரை

மனம் வெளுக்கக் காத்திருத்தல் – சுனீல்

உருகும் மெழுவர்த்தி வெளிச்சத்தில் – சுனீல்

முந்தைய கட்டுரைஎரியிதழ் மலேசியாவில் ஒருநாடகம்
அடுத்த கட்டுரைமலேசியத்தெருக்களில்…