எம்.எ·ப்..ஹ¤ஸெய்ன்,இந்து தாலிபானியம்

1

சுருக்கமான ஒற்றைவரி– இந்துதாலிபானியம். இங்கே பாமியான் சிலைகளை விட ஆயிரம் மடங்குபெரிய சிலைகளை; கிருஷ்ணன் முதல் காந்திவரை வரிசையாக ஒரு
பத்தாயிரம் ஞானிகளை
; நிற்கவைத்துச் சுடுகிறார்கள்

என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரியவில்லை. ஒரு ஓவியர், ஹிந்துக்கள் வழிபடும் ஒரு தெய்வத்தை நிர்வாணமாக வரைவார், அதை கண்டிக்காமல், என்ன செய்ய சொல்கிறீர்கள்?

உடனே வரும் ஒரு கேள்வி, எவ்வளவு மடத்தனமாக இருந்தாலும், இதே ஓவியர், மற்ற மத நம்பிக்கைகளை, இப்படி சிதைக்க முன் வருவாரா? இதை கேட்டால், அவர்கள், ஹிந்து பாசிஸ்டுகள்?

கோபிநாத் வெங்கட் ரமணன்

 

அன்புள்ள கோபிநாத் வெங்கட் ரமணன்,

பொதுவாக மதவெறியர்களிடம் இந்து ஞானமரபைப்பற்றியோ இந்தியதேச வரலாறைப் பற்றியோ பேசுவதில் பொருள் இருப்பதாகப் படவில்லை. அவர்களின் மனம் எப்போதுமே விரிவதில்லை, மேலும் மேலும் குறுகுவதே அவற்றின் இயல்பு.ஆனாலும் சில வரிகள்.

இந்துமதம் என்று நாம் இன்று பொதுவாகக் காணும் படிமங்கள், சடங்குகள், வழிபாட்டுமுறைகள்,நம்பிக்கைகள் போன்றவை அனைத்துமே இன்றைய தோற்றத்தை பக்தி இயக்கத்தின்போது உருவாக்கி கொண்டவை. ஆனால் இவை மட்டும் அல்ல இந்து மரபு. பக்தி இயக்கத்தால் வேற்றுப்பொருள் கொள்ளப்பட்டு உள்ளிழுக்கப்பட்ட பல ஞான மரபுகள்  இந்து மரபில் உண்டு. பக்தி இயக்கத்தால் முற்றாக நிராகரிக்கப்பட்ட மரபுகளும் உண்டு. அவை இப்போதும் இருந்துகொண்டுதான் உள்ளன.

முதல் உதாரணம் சுத்தஅத்வைதம். நீங்கள் வழிபடும் சரஸ்வதியின் சிலையும் நமீதாவின் படமும் எனக்கு ஒன்றுதான் என்று ஒர் அத்வைதி சொல்ல முடியும். பரந்தாமனின் சிவந்த கண்ணும் நாயின் சிவந்த குதமும் ஒன்றே என்று சொன்ன யமுனாச்சாரியார் போன்ற வேதாந்திகளை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆயிரத்தைநூறு வருடங்களாக அந்த ஞானமரபு இந்நிலத்தின் சிந்தனையின் சாராம்சமாக விளங்கி வந்துள்ளது. அவர்களை பாமர பக்த வெறியர்கள் கல்லால் அடிக்கவோ கழுவில் ஏற்றவோதான் துடிப்பார்கள்.

அதேபோன்றதே தாந்த்ரீக மரபும். இந்தியாவின் தாந்த்ரீக மரபு பக்தி இயக்கத்தால் வெறுத்து ஒதுக்கப்பட்ட ஒன்று.  தாந்த்ரீகத்தின் சடங்குகளும் ஆசாரங்களும் சாதாரணமான ஒரு ஆசார இந்துவுக்கு அதிர்ச்சியையும் கசப்பையும் அளிக்கக்கூடும். கன்னிபூஜையும், யோனிசேவையும், சகசயனமும் பஞ்சமகார வழிபாடும் [மது,மாமிசம்,மந்திரம், மாவு, மங்கை] பாமர மனத்த்தால் உள்வாங்கிக்கொள்ளக்கூடியவை அல்ல

இந்து ஞான மரபின் உள்வழிகளில் ஒன்றில் புனிதம் எனப்படுவது இன்னொன்றில் புனிதம் அல்ல. ஒன்றில் அபச்சாரம் எனப்படுவது இன்னொன்றில் ஓர் வழிபாட்டு முறையாகவே இருக்க முடியும்.

கொடுங்கல்லூர் பகவதி கோயிலில் சித்திரை மாதம் பரணி நட்சத்திரத்தில் [மீன பரணி உற்சவம்] நாற்பதுநாள்  கடும் நோன்பிருந்து, பூரப்பாட்டு என்னும்  பச்சைபச்சையான கெட்டவார்த்தைகளால் தேவியை வாழ்த்திப்பாடியபடி பலநூறு கிலோமீட்டர் தூரம் பிச்சை எடுத்து உண்டபடி, நடந்து வந்து வழிபடும் வழக்கம் உண்டு. தாந்த்ரீக மரபு உருவாக்கிய முறை அது. அந்தவழக்கம் நெல்லை சங்கரன்கோயில் ஆலயத்திலும் முன்பு இருந்திருக்கிறது.

பாலியல் இந்து மரபில் எக்காலத்திலும் அருவருப்பானதாக, ஆபாசமானதாக, ஏன் மறைக்கப்பட வேண்டியதாக க்கூட கருதப்பட்டதில்லை.  மானுட உடல் என்பது பிரபஞ்ச ஆற்றலின் ரகசியங்கள் உறையும் இடம் என்றும், ஆகவே அது ஓர் ஆல்யம் என்றும் அது எண்ணியது. ஆகவே மானுட உடலே பிரபஞ்சத்தின் மாபெரும் குறியீடு என்றது. மானுட உடல்களை உருவாக்கும்  பாலியல் ஆற்றலை மூலாதார சக்தி  என்று, பிரம்மத்தின் விசையாக பூமியில் இயங்கும் மகாசக்கரம் என்று, வகுத்தது தாந்த்ரீக மரபு.

நம் ஆலயங்கள் முழுக்க உள்ள பாலியல் சிற்பங்களின் காரணம் இதுவே. நாம் ஆண் குறியை செயலாற்றலாக, பெண்குறியை விளைவாற்றலாக  வகுத்துக்கொண்டு பிரபஞ்சத்தின்  கருத்து  X ஆற்றல்  என்னும் மகத்தான முரணியக்கத்தை புரிந்துகொண்ட ஒரு பண்பாட்டைச் சேர்ந்தவர்கள்

கோயில்களுக்குப் போய் கும்பிடுவதும், சோதிடம் பார்ப்பதும் ,பரிகாரங்கள் செய்வதும், சடங்குகளைக் கடைப்பிடிப்பதும் மட்டுமே அல்ல இந்து மதம். பக்தி நெகிழ்வு மட்டுமல்ல இந்து மதம். பிராமணச்சடங்குகள் மட்டுமல்ல இந்து மதம். அது பலலயிரமாண்டுகாலமாக உருவாகிவந்த பலநூறு வழிபாட்டுமுறைகள் பலநூற்றாண்டுக்கால மகத்தான தத்துவ , மெய்ஞான விவாதம் மூலம் தொகுக்கப்பட்டு உருவானது. இதை பன்மையாக அணுகும் நோக்கு மட்டுமே இதை புரிந்துகொள்ள உதவும். இதில் புகுத்தப்படும் ஒற்றைமைய நோக்கு இதைஅ ழிக்கும்.

பசுவைக் கும்பிடுவது மட்டும் இந்து மரபல்ல என்று உணருங்கள். பசுவைப்பலிகொடுக்கும் இந்து மரபுகளும் உண்டு. அதர்வ வேதம் முதல் இன்றுவரை நீடிக்கும் மரபு அது. இந்து மரபு இதுவே என சிலர் மேலே அமர்ந்து தீர்மானித்துவிட முடியாது    . அது மிகப்பிரம்மாண்டமான ஒரு பண்பாட்டு வெளி.

இத்தனைநாள் இந்த மூர்க்கம் மூலம் நீங்கள் உருவாக்கிய பேரழிவுகள் போதும், இனியாவது இந்த மரபின் பன்மையை புரிந்துகொள்ள முயலுங்கள். உலகில் எஞ்சியிருக்கும் ஒரே பன்மை மதமான இந்து மதத்தை வாழவிடுங்கள். இதையும் ஒற்றைப்படையான வழிபாட்டமைபபக ஆக்கி அழித்துவிடாதீர்கள்.

அதுவும் பாமர மக்களின் உணர்வுகளை தூண்டிவிட்டு அந்த மக்களின் அளவுகோல்களைக் கொண்டு நுண்மையும் விரிவும் கொண்ட இந்து மரபை வரையறுக்கவும் மாறானதை அழிக்கவும் நினைக்கும் செயல் அப்பட்டமான  ·பாஸிசம் மட்டுமே.

 

மானசா தேவி,பன்னிரண்டாம் நூற்றாண்டு

உங்களுக்கு தெரிந்திருக்காது, இந்து மதத்தின் பெரும்பாலான சிலைகள் தாந்த்ரீகத்தால் உருவாக்கப்பட்டவையே. தாந்த்ரீகம் மேலெழுந்த ஐந்து ஆறாம் நூற்றாண்டுகளில்தான் இன்று நாம் வழிபடும் பல்லாயிரம் சிலைப்படிமங்கள் உருவாயின. தாந்த்ரீகத்தின் கருத்துக்களை முன்வைக்கக்கூடிய, ஆழ்மனதுக்கு எடுத்துச்செல்லக்கூடிய குறியீட்டுமொழியின்  அலகுகள் அவை பெரும்பாலான அன்னை தெய்வங்களின் வடிவங்கள் தாந்த்ரீக உட்பொருள் உடையவை.

 நிர்வாணம் என்பது நமது மரபில்  முழுமையாக, பூரணமாகவே கருதப்பட்டத. நிர்வாணதேவியர் இந்நாட்டின் கோயில்கள் தோறும் நிறைந்திருக்கிறார்கள். பாடல்கள் தோறும் விளங்குகிறார்கள். உங்கள் ஒழுக்கவியல் என்பது விக்டோரிய யுகத்து தூய்மைவாத கிறித்தவர்கள் இங்கே கொண்டுவந்தது. அதை அளவுகோலாகக் கொண்டால் சௌந்தரிய லஹரியையும் அஷ்டபதியையும் உடனடியாக எரித்தாக வேண்டும். யார்கண்டது, ஒருவேளை உங்கள் அடுத்த நடவடிக்கை அதுவாகவே இருக்கும

ஹ¤செய்னின் சரஸ்வதி அழகிய ஒரு கலைப்படைப்பு. புகைபோலக் கரையும் நளினமும் எழிலும் கொண்ட ஓவியங்கள் அவ்வரிசையில் உள்ளன. முழுக்க முழுக்க அவை இந்திய கலைமரபின் அழகியல் தர்க்கத்திற்குள்ளேதான் அமைந்துள்ளன. இந்துக் கலைமரபின் சிறந்த அம்சங்களை நவீனக்கலைப்பானீக்குள் இணைத்த படைப்புகள் அவை.

ஹ¤செய்னின் ஓவியங்களில் எந்த விதமான ஆபாசமும் இல்லை. மாறாக இந்துக் கலைமரபின் அமைதி பரிபூரணமாகக் கூடிவந்திருக்கிறது. அவர் பிறந்த போரா முஸ்லீம் குலம் இந்தியப் பண்பாட்டின் பல்வேறு அம்சங்களை சுவீகரித்துக்கொண்டது. இந்திய சமூகத்துடன் பண்பாட்டு ஒருமையுடன் வாழ்வது. இந்துப்பண்பாட்டுக்கே ஆழமான கொடைகளை அளித்தது.

இந்தியாவிற்கு அதற்கே உரிய ஒரு கலைமரபு இருந்தது. அஜந்தாவில் அது உச்சம் கண்டது. ஆனால் மேலைக் கலைமரபு அதை வெறும் அலங்காரக்கலை என்று சொல்லி புறக்கணித்தது. இந்தியக்கலைகளின் தத்துவ அடிப்படைகளை முன்வைத்து அந்த எண்ணத்தை உடைத்தவர் ஈழ சைவ அறிஞர் ஆனந்தக் குமாரசாமி. அக்கால கலை எழுச்சியால் இந்தியக் கலையை மீட்கும் முயற்சிகள் எழுந்தன. தேவேந்திர நாத் தாகூர் அதன் முதல்வர்

நாளடைவில் அந்த மரபு தேங்கியது. படைப்பூக்கமே இல்லாமல் இந்தியாவின் வரைகலைப்பாணியை அப்படியே திருப்பிசெய்வதாக அது மாறியது. ஒரு வகை இந்தியத்தூய்மைவாதமாக அது ஆகியது. அந்த தேக்கத்தை உடைத்த பம்பாய் முகாமைச் சேர்ந்தவர் ஹ¤செய்ன். தன் ஓவியங்களில் நவீன ஐரோப்பிய ஓவியங்களின் அழகையும் இந்தியக்கலையின் தனித்தன்மையையும் கலந்து இந்திய ஓவியங்களுக்கு சர்வதேச மரியாதையை உருவாக்கியவர். ஐயமின்றி இந்தியக் கலைமேதைகளில் ஒருவர். இந்துக்கலை வடிவங்களை நவீனக்கலைக்குள் கோண்டுசென்றவ்ரும்கூட.

இந்து மரபின் இயல்பே அது தன்னில் இருந்து மேலும் மேலும் புதியவற்றை உருவாக்கும், ஓயாமல் படைப்புக்கற்பனையைத் தூண்டும் என்பதுதான். தியான மரபில் எளீய அறிமுகம் உடைய ஒருவருக்குத்தெரியும் இது. ஒரு ஞானி சீடனுக்கு தியானம்செய்ய  சிலை ஒன்றை சுட்டிக்காட்டினாரென்றால் அவர் அவனிடம் ‘இந்தப்படிமத்தை உன் அகத்தில் வளரவிடு’ என்றே சொல்வார். இதைக் கும்பிடு என்றல்ல.  இதுதான் கடைசிச்சொல் அல்லது வடிவம் என்று வரையறை செய்யும் இறுக்கத்திற்கு இந்து மரபில் இடமில்லை. அத்தகைய மூடநம்பிக்கைகளுக்கு அப்பாற்பட்டது இந்து மரபு

 

 

.இந்துமரபின் சிற்பங்கள் எவையுமே நிர்ணயிக்கப்பட்ட வடிவம் கொண்டவை அல்ல. அவை ஒரு மொழியின் சொற்களைப்போல. ஒரு கவிதையின் படிமங்களைப்போல. அச்சொற்களைக்கொண்டு நாம் உரையாடலாம். புதிது புதிதாக படைக்கலாம். நம் தேடலை அதனூடாக முன்னெடுக்கலாம். அதற்குத்தான் அவை உள்ளன.

இந்தியாவெங்கும் கோயில்களில் சிலைகளைப்பார்ப்பதற்கென்றே இருபத்தைந்துவருடங்களாக அலைந்து திரிபவன் நான். இந்தியாவில் எந்த ஒருசிலையையும் நாம் அதுவரை பார்க்காத கோணத்தில் பார்க்க வாய்ப்புள்ளது. சேலம் அருகே கந்தகோட்டம் என்ற மலைக்குச் சென்றிருந்தபோது நான் அதுவரைப் பார்க்காத சிலைகளை அங்கே பார்த்தேன். தாந்த்ரீக நூல்களில் இருந்து புதியசிலைகளை உருவாக்கியிருக்கிறார்கள்.

நமது சிலைகள் தியானத்துக்குரியவை. கற்பனையாலும் உள்ளுணர்வாலும் அகத்தில் வளர்த்தெடுத்துக்கொள்ளப்படவேண்டியவை.அதற்கு திராணியற்றவர்கள் தொட்டுக்கும்பிட்டுவிட்டு போகட்டும். ஆனால் நான் தொட்டு கும்பிட்டுவிட்டேன் இனி எவனும் இதை கையாண்டால் கையை வெட்டுவேன் என்று சொல்லும் பாமரத்தனமே ·பாசிசம் என்பது

 

உங்களுக்குத்தெரியுமா நமது தேவியர் அமர்ந்திருக்கும் கோலம் என்பது தாந்த்ரீகர்களின் கண்டுபிடிப்பு. கன்னியரும் அன்னையரும் தங்கள் குறி பிளந்திருக்கும் கோணத்தில் நிர்வாணமாக அமரச்செய்து வழிபடுவது தாந்த்ரீக மரபு. அந்தச்சிலைகளே பின்னர் பக்திமரபின் முறைகளுக்குள் புகுந்து பொது வழிபாட்டுருவங்களாக ஆனபோது ஆடைகளுடன் அமர ஆரம்பித்தன. சரஸ்வதியும் லட்சுமியும் அம்பிகையும் எல்லாமே அப்படித்தான்…

அந்தக் கோலத்தில் தரையில் களமெழுதப்பட்டு வழிபடப்பட்ட சரஸ்வதியை நான் கண்டிருக்கிறேன், குமரிமாவட்ட தாந்த்ரீக பூஜை ஒன்றில். சரஸ்வதி நிர்வாணமாக பிரம்மனைப் புணரும் களவரைபடத்தைக்கூட ஒரு தாந்த்ரீக பூஜையில் கண்டிருக்கிறேன்.

மேலே அமர்ந்து சிவனைப் புணரும் காளியின் சிலைகள் இன்றும் வங்கம் முழுக்க உள்ளன.  கங்கை கரையில் நீங்கள் குறிபிளந்து படுத்திருக்கும் பெண்தெய்வங்களைப் பார்க்கலாம். அந்தக்குறிகளை தொட்டுவணங்கிச் செல்லும் பெண்களைக் காணலாம்.

இன்றும் இந்தியா முழுக்க தாந்த்ரீகம் பல முறைகளில் செயலில் உள்ளது. அந்த மரபை அதற்குள் செல்லாமல் புரிந்துகொள்ள முடியாது. ஓர் இஸ்லாமிய நாடு அல்லது கிறித்தவ நாடு அவர்களை வேட்டையாடலாம். ஆனால் அத்தனை ஞானமரபுகளுக்கும் இடமளித்த நாடு இது. இடமளித்தாக வேண்டிய ஒரே நாடும் இதுவே. அதனால்தான் இது ஞானபூமி.

ஞானத்தை நிறுவனங்களின் சொத்தாக ஆக்காமல் தனிமனிதத்தேடலின் இறுதிப்புள்ளியாக வகுத்தது இது. ஆகவேதான் நமது சான்றோர்  உடன்பாடில்லா நிலையிலும் அவர்களை அனுமதித்தார்கள். ‘சித்தன் போக்கு சிவன் போக்கு’ என்றனர்.

 

 

ஏன் முழுமையான மதமறுப்பாளர்களான இறைமறுப்பாளர்களான சார்வாகர்களும் இந்துக்களே. உங்கள் அசட்டு ஒழுக்கவாதம் அத்வைதிகளை தாந்த்ரீகர்களை சார்வாகர்களை உங்கள் மதத்தை அவமதிப்பவர்கள் என்று சொல்லும்.

இந்து தெய்வங்களை ஏன் வரைகிறார் என்றால் இந்துமரபு அதை அனுமதிக்கிறது என்பதனால்தான். அந்த மரபை அவமதிக்கும் விதத்தில், அந்தப்படிமங்களின் சாரங்களை அழிக்கும் விதத்தில் அந்த ஓவியங்கள் இல்லாத நிலையில், அவை கலைபப்டைப்புகளாக இருக்கும் நிலையில், அவை ஏற்கத்தக்கவையே. ஏன் இஸ்லாமிய சின்னங்களை வரையவில்லை என்றால் அந்த மதம் அதை அனுமதிக்கவில்லை என்பதனால்.

இஸ்லாமியமதம் செய்வதே சரி, இந்துமதத்தையும் அதேபோல ஆக்கவேண்டும் என்கிறீர்களா என்ன?  நான் அப்படி நினைக்கவில்லை. இந்து மதம் இதே நெகிழ்தன்மையுடன், பன்மைத்தன்மையுடன், தனிப்பட்ட ஞானத்தேடலுக்கும் கலைச்செயல்பாடுகளுக்கும் முழுச்சுதந்திரம் அளிப்பதாக, உலக மதங்களுக்கு ஒரு முன்மாதிரியாக நீடிக்கவேண்டுமென்றே நினைப்பேன். என் மனதில் உள்ள இலட்சிய இந்து நாராயணகுருவே.

இன்று ஹ¤சேய்னுக்கு எதிராக திரும்பும்  நேற்று நீங்கள் ஆனந்தமார்க்கத்தை வேட்டையாடினீர்கள். தலைச்சேரி சித்தாசிரமத்தை வேட்டையாடினீர்கள்.

 

நீங்கள் முன்வைக்கும் இந்த ஒழுக்கவியல் இந்திய ஞானமரபின் மாபெரும் ஞானிகள் பலரை குற்றவாளிகளாக்கும் என்றாவது உங்களுக்கு தெரியுமா? தாந்த்ரீகம் பயின்ற ராமகிருஷ்ண பரமஹம்ஸரை, நாராயணகுருவை, அரவிந்தரை நீங்கள் என்ன செய்வீர்கள்?

பல்லாயிரம் நூல்களும் கொள்கைகளும் விவாதங்களும் கொண்ட ஒரு மரபை தெருக்குண்டர்களா தீர்மானிப்பது? இதுதான் இந்துமதம் என வரையறை செய்ய நீங்கள் யார்? உங்களுக்கு அதிகாரமளித்தது யார்? யாருமில்லை. கல்லையும் கம்புகளையும் பயன்படுத்தி, தெருக்குண்டர்களை திரட்டி நீங்கள் அந்த அதிகாரத்தை எடுத்துக்கொள்கிறீர்கள்.  அந்தக் குண்டர்களுக்குப் புரியக்கூடிய மத தத்துவமோ கலையோ வழிபாட்டுமுறையோ இருந்தால் போதும் என்கிறீர்கள். இதற்குப்பெயர்தான் தாலிபானியம் என்பது.

இஸ்லாமிய தாலிபானியத்தை விட இந்து தாலிபானியம் அருவருக்கத்தக்கது. ஏனென்றால் பலநூறு ஞானமார்க்கங்கள் வன்முறையின்றி ஒருங்கிணைந்து ஞானத்தேடலை நிகழ்த்திய ஒரு மாபெரும் வரலாற்றின் மீது தொடுக்கப்படும் வன்முறை இது.

மறுபிரசுரம் முதற்பிரசுரம் Nov 13, 2009

முந்தைய கட்டுரைநேமிநாதர்,கிருஷ்ணன்,காந்தி
அடுத்த கட்டுரைஅவதூறான தகவல் -கடிதம்