அன்புள்ள அய்யா அவர்களுக்கு
கிறித்தவர்கள் இந்நாட்டின் வந்தேரிகள் இல்லை, அவர்களே ஆதிகுடிகள் என்பதை நிறுவக்கூடிய உண்மைகளை உரத்துச்சொல்லியிருக்கும் உங்களுடைய நூல் கட்டுரையினை வாசித்தேன். மிகச்சிறப்பாகவும் நடுவுநிலைமையில் நின்றபடியும் அதனை எழுதியிருக்கிறீர்கள். தங்களுக்கு மனமார நன்றி சொல்லவேண்டும். மறைக்கப்பட்ட வரலாற்று உண்மைகளை எல்லாம் வெளிக்கொண்டுவந்து மக்களை நல்வழிப்படுத்தும் அய்யா தேவ அருணாச்சலம் போன்றவர்கள் இனம்காட்டப்படவேன்டிய பணியினை நீங்கள் நிறைவாக செய்து வருகிறீர்கள் என்பதுடன் இத்தகைய கட்டுரைகள் நாட்டுக்கு இன்றைய சூழலில் மிகவும் தேவையானவை என்பதும் உண்மை
ஜான் செல்வரத்தினம்
திரு ஜெமோ
உங்களுடைய கருத்துக்களில் எனக்கு மாற்றுக்கருத்துக்கள் நிறையவே உண்டு என்றாலும் இன்று வெளியான கட்டுரை சிறப்பாக அமைந்திருந்தது. பெரியவர் தேவ அருணாச்சலம் அவர்களின் நூலை நீங்கள் சற்றே கிண்டலுடன் அறிமுகம் செய்திருக்கிறீர்கள். ஆனால் உண்மைகளை இன்னமும்கூட விரிவாகவே பார்க்கமுடியும். குமரிமாவட்டத்திலும் நெல்லையிலும் பல இடங்களிலே இன்றைக்கும்கூட மக்கள் சாத்தான் வழிபாட்டைச் செய்துவருகிறார்கள். சாத்தானை யானைமேல் இருக்கும் வடிவிலும் உருண்டையான கல்லாகவும் கும்பிடுகிறார்கள். இது எப்படி என்பதை நாம் பார்க்கவேன்டும். சாத்தாங்கோயில் என மக்கள் தங்கள் தெய்வங்களைச் சொல்லமாட்டார்கள். அவர்கள் கும்பிடும் பொய்யான தெய்வங்களை எவரோ அவர்களுக்கு அடையாளம் காட்டியபிறகே இதெல்லாம் நடந்திருக்கிறது. உலகம் முழுக்க சாத்தான் வழிபாடு காணப்படுகிறது. மெசபடோமியாவிலும் ஐரோப்பாவிலும்கூட சாத்தான் வழிபாடு உள்ளது. அதுதான் கிறிஸ்தவம் வருவதற்கு முன்பாக இங்கே இருந்த வழிபாடு. இதைப்பற்றி நான் எழுதிய கட்டுரைகளை உங்கள் அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கிறேன்
ஜஸ்டின் ராஜ்
திரு ஜெயமோகன் அவர்களுக்கு
நீங்கள் புனித தாமஸ் அவர்களீன் வருகை பொய்யானது என்று எழுதியதை மறுத்து நான்கு நீளமான கடிதங்களை அனுப்பியிருந்தேன். உங்களிடமிருந்து பதில் இல்லை என்பதோடு அக்கடிதங்களை நீங்கள் பிரசுரம் பண்ணவும் கிடையாது. மன்னிக்கவும் எனக்கு கம்பியூட்டரில் எழுத வராது. ஆகவே விரிவாக எழுதவில்லை. ஏசுகிறிஸ்துவின் வருகையினைப்பற்றி இந்து வேதங்களிலேயே தெளிவாகவே சொல்லப்பட்டிருக்கிறது என்பதை நீங்கள் அறிய வேண்டும். அவை எல்லாம் மறைக்கப்பட்டுவிட்டன. பெரியவர் பாலாசீர் லாறி அவர்கள் அதையெல்லாம் விரிவாக ஆராய்ச்சி பண்ணி நூல்களை எழுதியிருக்கிறார். அதேபோல சாதுசெல்லப்பா அவர்களும் நன்ராகவே எழுதியிருக்கிறார். ஏசு கிறிஸ்துவானவர் உயிர்த்தெழுந்ததைப்பற்றியும் அவரை பிரஜாபதி என்று தீர்க்கதரிசிகள் கும்பிட்டதைப்பற்றியும் ரிக் வேதத்திலே சொல்லப்பட்டிருக்கிறது. விரிவாக நான் எழுதி அனுப்புகிறேன். உண்மைகளை நீங்கள் தாமதமாகவேனும் உணர்ந்துகொள்வதிலே மகிழ்ச்சி. கர்த்தருக்குத் துதி
சாமியப்பா
ஜெயமோகன் அவர்களுக்கு,
விவாதக்குழுமங்களிலே சிலர் உங்களை இந்து மதத்தை புகழ்ந்து பேசக்கூடியவர் என்று சொல்லும்போது நான் கடுமையாக அதை மறுத்திருக்கிறேன். நீங்கள் ஒரு கிறிஸ்தவ ஆதரவாளர்.. உங்கள் இணையதளத்தை ஒரு கிறிஸ்தவர்தான் நடத்துகிறார். நீங்கள் எப்போதும் கிறிஸ்துவை புகழ்ந்தும் மதமாற்றத்தை ஆதரித்தும்தான் நீங்கள் எழுதியிருக்கிறீர்கள். நீங்கள் இந்து ஆதரவாளர் என்ற போர்வையில் நீங்கள் இந்துபெரியவர்களை இழிவு படுத்தி எழுதியிருக்கிறீர்கள். சைனம் போன்ற கிறிஸ்துவத்துக்கு ஆதரவான மதங்களைத்தான் புகழ்ந்து எழுதுகிறீர்கள். காஞ்சி பெரியவாளைப்பற்றி அவதூறாக நீங்கள் எழுதியதை நான் வாசித்திருக்கிறேன். அதைப்போல நீங்கள் மதமாற்றச்தடைச்சட்டத்தை எதிர்த்து கிறிஸ்தவக்கும்பலுடன் சேர்ந்து கும்மியடித்ததையும் எல்லாரும் தெரிந்திருக்கிறார்கள். இந்துக்கோயில்களை நாஸ்திகர்ளுக்குக்கு திறந்துவிடவேன்டும் என்று நீங்கள் எழுதியிருக்கிறீர்கள்.இதேபோல அவ்வப்போது உங்கள் முகமூடியை கிழிக்கும் கட்டுரைகள் வந்தால்தான் நீங்கள் போடக்கூடிய வேசங்கள் மக்களுக்குத் தெரியும். இந்தக்கட்டுரையை எழுத எவ்வலவு காசு கொடுத்தார்கள் என்பதையும் எழுதிவிடுங்கள்
சிவராம்
ஜெயமோகன்,
அடுத்த பேருரை எங்கே? லயோலா காலேஜில் நீங்கள் ஜேசுசபை பாதிரியார்கள் எல்லாம் உத்தமர்கள் என்று பேசியதை கேட்டேன். அடுத்து என்ன மெட்ராஸ் கிறிஸ்டியன் காலேஜா? வாழக!
ராம்
ஜெ,
கட்டுரையை படித்துக்கொண்டிருக்கும்போது இப்படி எதிர்வினையாற்ற வேண்டும் என எனக்குத் தோன்றியது.
/ஏவாள் சுட்ட அப்பம்தான் இட்டிலியாக பரிணாம வளர்ச்சி பெற்றது. அதற்கு முன்னர் தமிழர்கள் மண்ணைத்தான் தின்று கொண்டிருந்தனர்/
:-).
இது நீங்கள் எழுதிய கட்டுரையா இல்லை யாரேனும் எழுதிய கடிதமா என திரும்பத் திரும்ப scroll செய்து கட்டுரையின் முடிவில் போய் பார்த்து ஏமாந்து மீண்டு வந்து படிக்கலானேன். உங்களுக்கு ஏதாவது கழண்டு விட்டதா அல்லது யாராவது hack செய்துவிட்டார்களா என்ற எண்ணம் ஏனோ வரவில்லை!
இவ்வரிகளை படித்தபின் ஆசுவாசமானேன்!
/* தமிழக வைணவ ஆலயங்களில் உள்ள தோசை நைவேதித்யம் என்பது புனித அப்பமேதான் என்று அவர் சொல்லும்போது நா ஊறுகிறது. ஆனால் ஒயின் துளசிநீராக மாறியது என்பது ஏமாற்றமளிப்பதாகவும் உள்ளது. */
அன்புடன்,
சாணக்கியன்
பெங்களூர்
//அதுவரை தமிழகக் காட்டுமிராண்டிகள் உடலை சுட்டுத்தின்னும் வழக்கம் கொண்டிருந்தனர். அதன் எச்சமாகவே இன்றுகூட அவர்கள் உடலை தீயில் போட்டு எரிக்கிறார்கள்.//
கூடவே அரிசியையும் நெய்யையும் சேர்த்து சுட்டிருப்பார்கள் என்று எண்ணுகிறேன். அதுதான் இன்று நெய் பந்தமாகவும் வாய்க்கரிசியாகவும் எஞ்சியிருக்கிறது போலும்.
நல்ல நூல். தமிழுக்கு முதல் நோபெல் உறுதியாகிவிட்டது. அடுத்த ஏப்ரலில் அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்கலாம். நூலின் ஆசிரியர் நலமா? முதற்பெண்ணை ஆதிமந்தி என்றழைத்த பிறகு, அவரது இல்லத்தில் அவருக்கு எப்படிப்பட்ட வரவேற்பு இருக்குமோ?!
நன்றி
கார்த்திகேயன்
[எழுபத்தேழு கடிதங்களில் விகிதாச்சார அடிப்படையில் சில கடிதங்கள் மட்டும் பிரசுரமாகின்றன. மற்றவர்கள் மன்னிக்கவும்]