காந்தி, புதிய கடிதங்கள்

அன்பின் ஜெயமோகன்

உங்களோடு முரண்படுவதில் பல நல்ல விஷயங்கள் நடக்கின்றன. ஒன்று ஏற்றுக்கொண்ட சில அடிப்படைகளை மீண்டும் ஆழமாக சிந்திக்கவும் அதனை பல்வேறு பரிமாணங்களில் புரிந்து கொள்ளவுமான வாய்ப்பாக அவை அமைகின்றன.

 

பாரதமாதா எனும் தெய்வத்தை வணங்காத நவீனத்துவர் என காந்தியைக் குறிப்பிடுகிறீர்கள். காந்தியின் இந்திய தேச நேசத்தின் அடிப்படை பாரத அன்னை குறித்த வணக்கத்திலிருந்து பிரித்தெடுக்க முடியாதது. காந்தியின் வந்தேமாதர கீதத்தைக் குறித்த நிலைப்பாட்டிலிருந்து அவரது பாரத அன்னை குறித்த கருத்தாக்கத்தை நாம் உணர முயற்சிக்கலாம்.

வங்க புரட்சியாளர்களின் பாரத அன்னை எனும் கண்டடைவில் சில ஐரோப்பிய தாக்கங்கள் இருந்தன. ஆனால் சாக்த மரபின் அடிப்படையிலேயே அவை அமைந்திருந்தன. அந்த அடிப்படையிலேயே அவை பாரதத்தின் கூட்டுப்பிரக்ஞையில் உணரவும்பட்டன. சிறுவனாக இருக்கும் போது வந்தேமாதர கீதம் தன்னுள் ஏற்படுத்திய உணர்ச்சிகளை காந்தி குறிப்பிடும் வரிகளைப் பாருங்கள்.

 

 1920களில் தன்னுடைய கையெழுத்துடன் வந்தேமாதரத்தையும் சேர்த்தே அவர் எழுதி வந்தார். வந்தேமாதரம் இஸ்லாமிய வகுப்புவாதிகளால் பிரச்சனையாக்கப்பட்ட போது “Mixed gathering” இல் வந்தேமாதரம் பாடப்படுவது குறித்து பிரச்சனை எழுந்தால் அதனை பாடவேண்டியதில்லை என அவர் கூறியதை சில இஸ்லாமிய பத்திரிகைகள் “வந்தேமாதர பாடலை காந்தி பாடவேண்டாமென்று சொல்லிவிட்டார்” என ஹைதராபாத்தில் வெளியிட்டன. இந்த பிரச்சனை அவரது பார்வைக்கு கொண்டு வந்தபோது பொறுமையிழந்து ஆத்திரமாகவே அதற்கு எதிர்வினை புரிந்தார். அத்தகைய திரித்தலை “முட்டாள்த்தனம்” (absurd) என்றார். இது நிகழ்ந்தது 1939 இல். 

 

1940 ஆம் ஆண்டு ஒரு கிறிஸ்தவ மாணவர் மகாத்மா காந்திக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் ஒரு மிஷன் பள்ளி விழாவில் வந்தேமாதரம் பாட அனுமதி மறுக்கப்பட்டதென்றும், இந்த பாடலுக்காக பத்துநிமிடங்கள் ஐரோப்பியர்களை எழுந்து நிற்கச் சொல்வது கஷ்டம் என்றும் மேலும் அப்படி ஒரு நிகழ்ச்சியில் வந்தேமாதரம் பாடப்பட்டு மக்கள் எழுந்து நின்றால் அது தேசியகீதமாக அங்கீகரிக்கப்பட்டது போல நிலை உண்டாகிவிடுமென்றும் காரணங்கள் கூறி தடுக்கப்பட்டது என்றும் இதனை எதிர்த்து மாணவர்கள் ஸ்டிரைக் செய்வதாகவும் எழுதியிருந்தார். இதற்கு காந்தி எழுதிய மறுமொழியில் தாம் பொதுவாக மாணவர்களின் ஸ்டிரைக்கை ஆதரிப்பதில்லை என்றாலும் இந்த விஷயத்தில் ஆதரிப்பதாகவும் கூறினார்.

 

அவர் மேலும் எழுதினார், “எந்த பாடல் தேசியப்பாடல் எது தேசியப்பாடல் அல்ல என மிஷினரிகள் தீர்மானிக்கப்பட வேண்டியதில்லை. அவர்களது மாணவர்கள் அப்பாடலை தேசியப்பாடலாக தெரிந்துகொள்கிறார்கள் என்பதே அவர்களுக்கு போதுமானது.” (ஹரிஜன் 6-அக்டோ பர்-1940)

 

காந்தியின் இந்த போக்குக்கு இஸ்லாமிய சமுதாயத்திலிருந்து எழுந்த எதிர்வினைகள் முக்கியமானவை. நாம் அறிவதெல்லாம் இஸ்லாமிய வகுப்புவாதிகளின் எதிர்வினைகளை மட்டுமே.  ஆனால் பாரம்பரியமிக்க முஸ்லீம்கள் இஸ்லாமில் பெருமளவு குறியீட்டுத்தன்மையும் அன்னையாக சித்தரிக்கும்  தன்மையும் இருப்பதையும், தூய இஸ்லாம் என்கிற கருத்தாக்கம் வரலாற்று யதார்த்தம் அல்ல என்பதையும் குறிப்பிட்டார்கள்.

 

 ரியாஸூல் கரீம் எனும் இஸ்லாமியர் 4 டிசம்பர் 1938 உல் எழுதிய கட்டுரையில் உம்முல் முஃமீன் (நம்பிக்கையாளர்களின் அன்னை) உம்முல் கிதாப் (நூல்களின் அன்னை) என்றெல்லாம் இஸ்லாமிய இலக்கியங்கள் பேசுவதைக் குறிப்பிட்டு அன்னைக்கு வணக்கம் தெரிவிப்பது இணைவைப்பது என சொல்வது சரியல்ல என வாதாடினார்.

 

நவம்பர் 1 1937 இல் டெல்லியிலிருந்து வெளியாகும் ரியாஸத் எனும் உருது பத்திரிகையில் அதன் ஆசிரியர் மௌலானா ஜஃபர் அகமது, இஸ்லாமிய ஓவியங்களில் ஸோக்ரா இசையின் தெய்வமாகக் காட்டப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டினார்.

 

1938 இல் காங்கிரஸ் மாநாட்டில் காந்தி ஒரு பெரும் சமூக பரிசோதனையை மேற்கொள்வதாக அறிவித்தார். தொழில்புரட்சியின் எவ்வித இயந்திரங்களையும் தொடாமல் வாழ சபதமேற்கும் இந்தியர்களை வல்லபாய் படேல் தானமாக அளித்த நிலத்தில் விவசாயம் மட்டுமே செய்து வாழ ஒரு திட்டத்தை அவர் அளித்தார். அவர்களின் தினசரி வாழ்க்கைக்கான கால அட்டவணையில் அவர்களின் மாலை நேர பிரார்த்தனை வந்தேமாதர கீதத்துடன் முடிகிறது.

1918 இல் அடிக்கல் நாட்டப்பட்டு 1936 இல் முடிக்கப்பட்ட காசி விஸ்வ வித்யாலயா பாரத அன்னை கோவிலை திறந்து வைத்தார். அவருடன் கான் அப்துல் கஃபர் கான் உட்பட பலர் அச்சமயம் இருந்தனர். காந்திய இயக்கங்களின் பிரச்சார வெளியீடுகளிலும் பாரத அன்னை ஒரு முக்கியமான குறியீடாக இருப்பதைக் காணலாம்.

 

இதே காலகட்டத்தில் பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜிய வாதம் முன்வைத்த பிரிட்டானியா தேவி, ஜெர்மானிய நாஸி பிரச்சாரங்களில் யூத மற்றும் கம்யூனிஸ்டுகளிடமிருந்து காப்பாற்றப்படவேண்டிய அன்னை ஐரோப்பியா ஆகியவற்றுடன் ஒப்பிடுகையில் பாரத அன்னை எனும் உருவாக்கத்தின் முக்கிய வித்தியாசம் அது ஒரு இனம் அல்லது ஒரு மொழி என்பதை கொண்ட கட்டமைப்பாக அமையவில்லை.

 

ஸ்ரீ அரவிந்தர் ஆகட்டும், விவேகானந்தர் ஆகட்டும் பாரதி ஆகட்டும் அவர்கள் கட்டமைக்கும் பாரத அன்னையின் வடிவம் அனைத்து மக்களையும் அணைக்கும் ஓர் அன்னை. எந்த குறிப்பிட்ட இனத்துக்கும் மதத்துக்கும் உரியவளல்ல. அத்தகைய ஒரு பிரபஞ்சம் தழுவும் அன்னையின் அன்பையே காந்தியும் தன் வாழ்க்கை மூலம் பிரகடனப்படுத்த முயன்றார். அவர் பெற்ற வெற்றிகளும் தோல்விகளும் நமக்கு வருங்கால பாடங்களாக அமைகின்றன.

 

 பாரத அன்னை குறித்து விவேகானந்தர் கூறிய வார்த்தைகள் இவை: “வருங்காலத்துக்குள் நான் புகுந்து பார்க்கவில்லை. அதில் எனக்கு அக்கறையுமில்லை. ஆனால் ஒரு காட்சியை மட்டும் தெள்ளத்தெளிவாக உயிர்த்துடிப்புடன் பார்க்கிறேன். புராதனமான அன்னை மீண்டும் எழுந்துவிட்டாள்…மீண்டும் இளமையெழிலுடன், முன் கண்டிராத புகழ்ச் சிறப்புடன் அமர்ந்து கொண்டிருக்கிறாள். அமைதியும் அன்பு கொண்ட அருளும்  கலந்த மொழியால் உலகுக்கு அவளைப் பிரகடனம் செய்யுங்கள்”

 

 ஒருவேளை பிஸ்மார்க்கோ மாஸினியோ ஏன் சர்ச்சிலோ கூட இதே வாசகத்தை சொல்லியிருந்தார் எப்படி சொல்லியிருப்பார்கள்? “உருக்கும் தசைவலிமையும் கொண்ட கரங்களால் அவளை உலகுக்கு பிரகடனம் செய்யுங்கள்” என சொல்லியிருக்கலாம். ஆனால் நவீன இந்திய தேசியத்தின் ஊற்றுக்கண்ணான விவேகானந்தர் தசை வலிமை குறித்து பேசும் போது கூட “நலிந்தவர்களுக்காக இரத்தம் சிந்தும் இருதயமும்” உடைய இளைஞர்களைத்தான் கேட்டார்.

 

இந்த மரபின் நீட்சியாகவே காந்தியும் அமைகிறார். அன்பும் அருளும் கொண்ட குரலால் பாரத அன்னை அவர் பிரகடனப்படுத்தினார். அவர் நவீனரா நவீன எதிர்ப்பாளரா அல்லது பின்-நவீனத்துவரா எனக்கு தெரியவில்லை,

அன்புடன்

 

அரவிந்தன் நீலகண்டன்

 

 

 

அன்புள்ள அரவிந்தன்,

 

காந்தியைப்பற்றிய என்னுடைய கருத்துக்கள் இருபதாண்டுக்காலமாக அவரை பல கோணங்களில் வாசித்து தானாகவே உருவாகி வந்தவை. இவற்றுக்கு குறையும் நிறையும் உண்டு. குறை என்பது சிலசமயம் திட்டவட்டமான ஆதாரம் இல்லாது மனப்பிம்பமாக சில உருவாகியிருக்கலாம் என்பது. நிறை என்பது எல்லா எண்ணங்களும் ஒட்டுமொத்தமாக உருவாகி வந்திருக்கும் என்பது.

 

காந்தி மட்டுமல்ல இந்தியதேசியத்தலைவர்கள் அனைவருமே இந்தியாவை அதன் நூற்றாண்டுக்கால துயில் இருந்து எழுப்பிய இந்து சீர்திருத்த இயக்கங்களின் உருவாக்கங்களே. அம்பேத்கார், சுபாஷ் சந்திர போஸ் மட்டுமல்ல நேருவும் இ.எம்.எஸ்ஸ¤ம் கூட. இந்து சீர்திருத்த இயக்கங்கள் அவற்றின் சாராம்சத்தில் பக்தி இயக்கத்தைக் கொண்டிருக்கின்றன. ஆகவே எப்போதுமே உள்ளுறையாக பக்தி இயக்கம் உருவாக்கிய பண்பாட்டுக்கூறுகள் அவர்களுள் இருக்கும். நாத்திகராக தன்னை அறிவித்துக்கொண்ட நேருவின் கடைசிச்சொற்களில் கங்கை வெளிப்படும் விதமே அதற்குச் சான்றாகும்.

 

ஏன், திராவிட இயக்கத்தையே எடுத்துக்கொள்வோம். நாத்திக, இந்து எதிர்ப்பியக்கமான அதில் உள்ள அத்தனை மையக்குறியீடுகளும் இந்து மரபிலிருந்து பெறப்பட்டவை. வந்தே மாதரம் பாடலுக்கும் தமிழ்த்தாய் வாழ்த்துக்கும் இடையே உள்ள ஒற்றுமையை நாம் கவனித்தாலே தெரியும். ‘தக்கசிறு பிறைநுதல் தரித்த நறும் திலகம்’ அல்லவா தமிழ்நாடு?

 

காந்தி அவரது காலகட்டத்தில் இருந்த இந்திய மறுமலர்ச்சியின் அத்தனை உணர்வெழுச்சிகளாலும் உருவாக்கப்பட்டவர். பக்தி இயக்கத்தின் நேரடி நீட்சி கொண்டவர். அவருக்கும் கபீருக்குமான தூரம் என்பது மிகமிகக் குறைவே. அவரில் வந்தேமாதரமும் , பாரதமாதா என்ற உருவகமும் இல்லாமல் இருந்தால்தான் ஆச்சரியம்.

 

ஆனால் படிப்படியான அவரது அரசியல்தரிசன வளர்ச்சியில் அரவிந்தர் திலகர் போன்றவர்களிடம் இருந்த பாரதமாதா வழிபாட்டுமனநிலை பின்னர் கரைந்தழிந்தது என்றே நான் நினைக்கிறேன். ஒரு நவீன தேசிய உருவகத்தை நோக்கி காந்தி நகர்ந்தார். 1930 களுக்குப்பின்னர் இந்த வேறுபாட்டை நாம் காந்தி-சுபாஷ் இருவருடைய உரைகளை ஒப்பிட்டால் காணாலாம். சுபாஷ் இந்தியாவின் ஒப்புயர்வற்ற தனித்தன்மையைக் குறித்து பேசினார். சுபாஷின் உணர்வெழுச்சியை பழமைவாதம் சார்ந்தது என நேரு முற்றாகவே நிராகரித்தார்.

 

ஆனால் காந்தி இந்த நாடு ஓர் அரசியல் தேசமாக ஆவதன் சிக்கல்களைப்பற்றி நடைமுறைத்தளத்தில் பேசினார். இதன் உறுப்புகளான அனைவரையும் உள்ளடக்கியதாக இந்த தேசியத்தை ஆக்க முயன்றார். அதன் மீதான உணர்வெழுச்சிகளை முன்வைக்கவில்லை. இந்த முரண்பாடே அன்று காந்திக்கும் தீவிரவாத இயக்கத்தினருக்கும் இடையே உள்ளுறையாக ஓடியது.

 

காந்தி வந்தே மாதரம் பாடலை அல்லது அந்த உணர்ச்சிகளை எதிர்த்தார் அல்லது நிராகரித்தார் என்று நான் சொல்லவில்லை. அத்தகைய எல்லா உணர்வுகளையும் சமரசப்படுத்தி சாராம்சப்படுத்துவதே அவரது அரசியல். ஆனால் அந்த உணர்வெழுச்சிகளில் அவர் பங்கெடுத்துக்கொள்ளவில்லை. இந்தியநிலத்தை ஓர் அன்னையாக எண்ணும் வழிபாட்டு மனநிலைகளுக்குச் செல்லவும் இல்லை.

 

ஜெ

 

888888888888

 

அன்புள்ள ஜெயமோகன்

   வணக்கம். உங்களுடைய காந்தி கட்டுரைகளை கவனத்துடனும் ஆர்வத்துடனும் படித்துவருகிறேன். (மற்ற கட்டுரைகளையும்தான். கடந்த இரு வருடங்களில் உங்கள் வலைதளம் வராத நாட்களே இல்லை.) காந்தியைப்பற்றி எனக்கு முதலிலேயே இத்தகைய சித்திரம் நான் படித்த காந்தி நூல்கள் மற்றும் லூயி பிஷர் எழுதிய காந்தி வாழ்க்கை  ஆகியவற்றின் மூலம் நான் அடைந்திருக்கிறேன். உங்கள் கட்டுரைகள் அதை முழுமைப்படுத்தி உயிர் கொடுக்கின்றன.  காந்தி உங்கள் கட்டுரைகளின் மூலம் மீண்டும் உருப்பெற்று எழுந்துவருகின்றார்.  உங்களின் இப்பணி மிக உயர்வானதாகும் வாசகர்களுக்கு மிக பயனளிப்பனவாகும். தங்கள் பணி மேன்மேலும் சிறக்க இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.
  காந்தி, பால் உடல் ஆரோக்கியத்திற்கு தேவை என வலியுறுத்தவதாக நீங்கள் எழுதியதாக நினைவு. ஆனால் காந்தி முதலில் பசுவதைக்கு எதிர்ப்பாக பாலை தவிர்த்தாலும்  பின்னர் அது உடலிச்சையை தூண்டும் தேவையற்ற ஒன்றாகவே கருதுகிறார். பல ஆண்டுகளுக்குப்பின்னால் அவர் உயிர்வாழ குறைந்தபட்ச தேவையாக பாலை மருத்துவர் மற்றும் மனைவியும் வலியுறுத்தியபோது மிகுந்த தயக்கத்திற்கு பிறகு ஆட்டுப்பாலை ஏற்றுக்கொள்கிறார். அவர் பாலை குழந்தைகளுக்கும் சத்துகுறைந்தவர்களுக்கு மட்டுமே பரிந்துரைத்ததாக நினைவு. 
அன்புடன்
த.துரைவேல்

 

அன்புள்ள துரைவேல்

நன்றி. காந்தியை நானே எனக்காக மீட்டுக்கொள்கிறேன் என்றுதான் சொல்லவேண்டும். நம்பிக்கையிழந்த பொறுமையற்ற ஒரு சூழலில் தொடர்ந்து வாழ்வதற்கான முகாந்திரங்களை காந்திவழியாகவே உருவாக்கிக்கொள்ள முடிகிறது

காந்தி அவரது மருத்துவச் சோதனைகளை விரிவாக முறையாக எழுதவில்லை. ஆகவே முழுமையான சித்திரத்தை நாம டைய முடிவதில்லை. காந்தி தனக்காக புலனுணர்வைத்தூண்டும் உணவுகளை தவிர்க்க முயன்றார். ஆனால் சமண அகிம்சைமுறை தவிர்க்கும் உணவுகளை தவிர்க்கவில்லை. பாலை அனைவருக்குமான நல்ல உணவாகவே முன்வைத்தார். தேனை விரும்பி உண்டிருக்கிறார். நான் சொல்லவந்தது அதுவே

ஜெ

 

**************

அன்புள்ள ஜெயமோகன்

 

காந்திய தேசியம் 4 ல் நீங்கள் தமிழகத்தில் ஏறத்தாழ நான்குகோடிப்பேர் தமிழை வீட்டில் பேசாதவர் இருக்கக் கூடும் என்று சொல்லியிருந்தீர்கள்

 

தமிழகத்தில் வன்னியர் 30 சதமும் முக்குலத்தோர் 15 சதமும் வேளாளார் 15 சதமும் தலித்துக்கள் [பகடைகள் தவிர] 20 சதமும் இருக்கக் கூடும். ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் தமிழகத்தில் நான்குகோடிபெர் வேறுமொழியினர் என்பது சரிஅ ல்ல என்று படுகிறது

 

நான் இதை ஏன் எழுதுகிறேன் என்றால் நான் உங்கள் கட்டுரைகளை இணையத்தில் தொடர்ந்து வாசித்து வருகிறேன். உங்கள் கட்டுரைகள் இந்த நாட்டைக்குறித்தும் இதன் உருவாக்கம் குறித்தும் ஒரு விழிப்புணர்ச்சியை உருவாக்குகின்றன. சிங்களர் நடுவே காந்தி அல்லது நேரு போன்ற ஒரு தலைவர் இல்லாததனால் தான் இன்றைய பிரச்சினைகள் என தோன்றுகிறது

 

சுப்புராஜ்

 

 

அன்புள்ள சுப்புராஜ்,

தமிழக சாதி அரசியலில் அனேகமாக எல்லா சாதிகளுமே தங்கள் எண்ணிக்கையை கூட்டிச் சொல்கின்றன. ஒருகோடிக்குக் கீழே தாங்கள் இருப்பதாகச் சொல்லும் எந்தச் சாதியும் இங்கே இல்லை. அந்த எண்ணிக்கையைக் கூட்டிப்பார்த்தால் தமிழ்கத்து மக்கள் எண்ணிக்கை இருபதுகோடியைத்தாண்டும். இப்போது அதிகபட்சம் 11 கோடி இருக்கலாம்., அவ்வளவுதான்

1931க்குப்பின்னர் இந்தியாவில் சாதிவாரி மக்கள் கணக்கெடுப்பு நிகழ்ந்ததில்லை. அன்றைய கணக்குகள் முழுமையானவை அல்ல. தாழ்த்தப்ப்பட்ட சாதிகள் முறையாக கணக்கெடுக்கப்படவில்லை. பிரிட்டிஷ் அரசின் கணக்கெடுப்பு ஊழியர்கள் பெரும்பாலும் சேரிகளுக்குள் செல்லாத உயர் சாதியினர். தலையாரி போன்றவர்களிடம் கேட்டு எழுதப்பட்ட குத்துமதிப்பான கணக்கு அது. நரிக்குறவர் போன்ற அலையும் சாதிகள் மற்றும் பழங்குடிகள் அன்று பேரளவுக்கே கணக்கில் கொள்ளப்பட்டன.

தமிழகத்தின் தாழ்த்தப்பட்ட சாதிகளிடம் குடும்பக்கட்டுப்பாடு குறைவென்பதனால் அவர்களின் எண்ணிக்கை மேலும் ஏறியிருக்கும். ஆகவே இன்று சாதிவாரி கணக்கெடுப்பு நிகழ்த்தப்பட்டால் ஆச்சரியங்கள் பல காத்திருக்கின்றன. ஒன்று இங்குள்ள பிற்படுத்தப்பட்ட சாதிகளில் தேவர் நாடார் இருவரும் அவர்கள் சொல்லி நாம் எண்ணுவதை விட எண்ணிக்கையில் மிகக் குறைவென்பது தெரியவரும். இதை கணக்கெடுப்புத்துறை அரசு உயரதிகாரி ஒருவர் என்னிடம் தனிப்பட்ட முறை பேச்சில் சொன்னார்.

தமிழகத்தின் பிற்படுத்தப்பட்ட சாதிகளில் வன்னியர் மட்டுமே எண்ணிக்கையில் அதிகமிருப்பார்கள்.  அவர்கள் இரண்டாமிடம். தமிழக மக்கள்தொகையில் சாதிவாரியாக அதிகமிருப்பவர்கள் பறையர்களாகவே இருக்க வாய்ப்பு. வேளாளர்களின் எண்ணிக்கை நாம் நினைப்பதைவிட நம்பமுடியாத அளவுக்குக் குறைவாகவே இருக்கும்.

தமிழை வீட்டில் பேசாத சாதிகளில் பரவலாக அறியப்படாத பலர் இருக்கிறார்கள். தெலுங்கு பேசும் நாயக்கர்கள், நாயுடுக்கள், ரெட்டியார்கள், பகடைகள் , காட்டுநாயக்கர்கள்  போன்ற சாதிகள் நாம் நினைப்பதைவிட எண்ணிக்கையில் அதிகம். குறிப்பாக எல்லைப்புற மாவட்டங்களில். கன்னடம் பேசும்  செட்டியார்கள், வொக்கலிகர்கள் போன்ற பலர் இங்கே உண்டு. சௌராஷ்டிரர்கள், மராட்டியர்கள், தமிழல்லாத மொழிகள் பேசும்  பழங்குடிகள், அலைந்து திரியும் நரிக்குறவர்கள் போன்றவர்கள் உண்டு. பிராமணர்களிலேயே கன்னட, தெலுங்கு பிராமணர்கள் பாதிப்பேர் இருப்பார்கள்.

இவர்களின் மொத்த எண்ணிக்கை தமிழகத்தின் மக்கல்தொகையில் முப்பதில் இருந்து நாற்பது சதவீதம் வரை வரக்கூடும் என நான் நினைக்கிறேன். இன்று இவர்கள் சாதிவாரியாக திரளாமல் இருப்பதனாலேயே இவர்களின் எண்ணிக்கையை நாம்  ஊகிக்க முடியாமலிருக்கிறது.

ஜெ

 

அன்புள்ள ஜெ

1948ல் காந்தி கொல்லப்பட்டபின்னர் இந்திய அரசியல்சட்டத்தை வடிவமைத்த அம்பேத்கார் போன்றவர்களால் மிக எளிதாக பூனா ஒப்பந்தம் ரத்துசெய்யப்பட்டிருக்கலாம். ஆனால் பின்னர் யோசித்தபோது அவர்களுக்கு காந்தியின் விவேகமே மேல் என்று பட்டிருக்கலாம். ஆகவே பெரிதும் சர்ச்சை செய்யப்பட்ட பூனா ஒப்பந்தத்தை ரத்துசெய்ய எந்த முயற்சியும் செய்யப்படவில்லை. 

பொதுவாக நம் மக்கள் இந்த தகவல்களைப்பற்றிய எந்த அறிதலும் இல்லாமலிருக்கிறார்கள். இன்றுவரை அம்பேத்கார் முன்வைத்த திட்டத்தை அமல்படுத்த எந்த முயற்சியும் அவர்கள் தரப்பில் எடுக்கப்பட்டதில்லை. காந்தியை பூனா ஒப்பந்தத்துக்காக கண்டிப்பவர்கள் இதற்கெல்லாம் பதில் சொல்லலாம்

அதியமான் கரூர் 
Chennai – 96

http://nellikkani.blogspot.com 

http://athiyamaan.blogspot.com

http://athiyaman.blogspot.com

 

அன்புள்ள அதியமான்

பூனா ஒப்பந்தம் குறித்த பேச்சு கிளம்புவதற்கு ஒரு விதமான தர்க்கபூர்வ காரணமும் கிடையாது. காந்தியை நிராகரித்து அம்பேத்கார் பேசிய பகுதிகள் சிலருக்கு தேவையாகியது. அது பூனா ஒப்பந்த காலகட்டத்தில்தான் உள்ளது. ஆகவே அவரக்ள் அந்த நிகழ்ச்சியை பெரிதாக்கினார்கள். அதே காந்தியால் அரசியல்நிர்ணயசபைக்கு கொண்டுவரப்பட்டு அரசியல்சாசனம் எழுதவைக்கப்பட்டார் அம்பேத்கார் என்ற உண்மையை புதைத்து அதை பிரச்சாரம் செய்கிறார்கள், அவ்வளவுதான்

ஜெ
 

 

அன்பின் ஜெயமோகன்,

காந்தி எனும் பனியா கட்டுரைகள் சில தவறுகள் இருப்பதாக கருதுகிறேன். அவை கீழே. கொஞ்சம் நீளமான பதில் தான். :-)

1. முதலாவதாக சமணம் வியாபாரம் மூலம் பரவியது. ஆனால் பிராம்மணிய மதங்கள் அவ்வாறல்ல என்பதே அடிப்படையில் தவறானது. இஸ்ஸாமும் கிறுத்துவமும் இந்தியாவுக்கு வந்தது வியாபாரம் மூலம் தான். இன்றைக்கு இந்தோனேசியாவில் இந்து மதம் இருப்பதும் வியாபாரம் மூலம் தான். வியாபாரம் மூலம் தான் ஆங்கிலேயர்களும் இந்தியாவுக்குள் வந்தனர். சமணத்திற்கு மட்டும் அதை சொல்ல முடியுமா?

2. மாகாவீரர் சத்ரியர். தீர்த்தங்கர்களில் பெரும்பாலானவர்கள் சத்ரியர்கள். கவுதம புத்தரும் சத்ரியர்தான். இவர்கள் தாம் அகிம்சை என்று சொல்லக்கூடிய மதத்தை நிறுவினார்களா? சமணம் அகிம்சையை மட்டும் கொண்ட மதமா? சமணர்கள் இருப்பை எதிர்த்து வேலை செய்யாதவர்கள். ஆற்றில் விழுந்தால் கூட ஆற்றில் போக்கிலியே சென்று கரை ஏறுபவர்கள். அதை அகிம்சை மட்டும் கொண்ட மதம் என்று சாயம் பூசுவது எவ்வாறு?

3. சத்ரியர்கள் எவ்வாறு அகிம்சையை பரப்ப முடியும்? அவர்களின் அகிம்சை ரத்த ஆற்றை கண்டதால் வருவதில்லை. பலத்தை தேவைக்கு மீறி உபயோகிக்காததால் வருகிறது. களரிபயற்றில் சொல்லித்தருவார்களே அடிக்க தெரியும் என்பதற்காக அடிக்க கூடாது. தமிழில் ஒரு பழமொழி உண்டு, எதிர்ப்பவன் ஏழை என்றால் கோபம் சண்டாளன். :-) சத்ரியர்களின் அகிம்சை அந்த படிப்பால் வருமே தவிர எதிர்த்து வினைபுரியாமல் இருப்பதால் அல்ல. இந்தியர்களின் போரிடும் மனப்பான்மையை “வீம்புக்கு வேடையாடுவது” என்ற சொற்றொடரில் குறுக்கலாம். மாமிசத்துக்கு வேடையாடலாம், மிருகங்களை அழிக்க வேட்டையாடலாம், வீம்புக்கு வேட்டையாடினால்? :-). மேலும் சாம-தான-பேத-தண்டம் பற்றி நீங்கள் படிக்காமல் இருந்ததில்லை.

4. பிராம்மணர்கள் மட்டுமே படித்தவர்கள் மற்ற சாதிகள் எல்லோரும் படிக்காதவர்கள். பிராம்மணர்கள் படிப்பால் மற்ற சாதிகளை அடக்கி ஆண்டார்கள் என்பது இண்டாலஜிஸ்டுகள் எழுதும் வரலாறு. அதை நீங்களும் ஏன் வழிமொழியவேண்டும். சத்ரியர்கள் கத்தி ஏந்திய முரட்டு மூடர்களாக இருக்கவில்லை. உபநிடதங்களில் சத்ரியர்களிடம் மட்டுமே இருந்த அறிவுவைப்பற்றிய குறிப்பு உண்டு. ஜனகர், பர்த்ருஹரி என ஆரம்பித்து நூல்கள் எழுதிய, பாஷ்யங்கள் எழுதிய அரசர்கள், சத்ரியர்கள் நிறைய உண்டு. மேலும் வைசியர்கள் எனப்படும் மற்ற வேலைகள் செய்பவர்களும் அதற்காக அறிவை பெற்றிருந்தார்கள். சிற்பிகள்,கட்டிடக்கலை நிபுணர்கள் தத்துவ ஆராய்ச்சி செய்யவில்லை என்று சொல்வது சிரிப்பையே வரவழைக்கும்.

பிராம்மண-சத்ரிய போராட்டம் பற்றிய தகவல்கள் புராணங்களில் நிறைய இருக்கிறது. கார்த்தவீர்யார்ச்சுனன்–ராவணன் , கார்த்தவீர்யார்ச்சுனன் — பரசுராமன், பரசுராமன் – அயோத்திராமன், அயோத்தி ராமன் – ராவணன், துரோணன் – பாண்டவர்கள் என மோதலைப்பற்றிய தகவல்களுக்கு பஞ்சமே இல்லை. அம்பேத்கர் இதை நன்கு ஆராய்ந்திருப்பார். மனுஸ்மிருதி ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. ஆனால் பிராம்மணர்களே எல்லா இடத்திலும் ஆதிக்கம் செலுத்தினார்கள் மற்ற சாதிகள் கைகட்டி வாய்பொத்தி அவர்களின் மேலாதிக்கத்தை ஏற்றுக்கொண்டார்கள் என்பது கற்பனையை அதன் எல்லை வரை செலுத்துவது ஆகும்.  இந்திய வரலாற்றில் கீழ் சாதிகள் மேலே போனதும், மேல் சாதிகள் கீழே வந்ததும் ஆதாரங்களுடன் உள்ள தகவல். உங்கள் மொழியில் சொல்வதென்றால் முரணியக்கம். :-). எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் கொள்கை ஒன்றை சமணர்களும் பவுத்தகளும் உருவாக்கினார்கள் என்று சொன்னால், சாங்கிய-யோகியர்களும் பக்தி இயக்கத்தவரும் சும்மா இருந்தார்களா?

5. காந்தியின் செயல்களுக்கு வருவோம். காந்தி அகிம்சையை கொண்டிருந்தார். அதைக்கொண்டு போராடினார். அகிம்சை  என்பதை மற்றவர்களை துன்புறுத்தாமல் இருப்பது என எடுத்துக்கொண்டால் ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடியவர்கள் துன்பமே அடைந்தார் அல்லவா? எவ்வளவு பேர் ஆங்கிலேயரின் அடக்கு முறைகளுக்கு ஆளாகியிருப்பார்கள். இதுவெல்லாம் காந்தியே சொன்ன அகிம்சைக்கு எதிரானதாக ஆகாதா?  காந்தி போர், போராட்டம் எனும் வார்தைகளை எத்துனை இடங்களில் பயன்படுத்திருக்கிறார், அவைகள் எல்லாம் அகிம்சைக்கு எதிரானதாக ஆகாதா?

6. வெள்ளையர்கள் ஒரு நூற்றாண்டாக போரில் ஈடுபட்டு சீரழிந்த நாட்டில் போரை நிறுத்தினார்கள். எதிர்பாராமல் கொள்ளையடிக்காமல் அதை சட்டபூர்வ நிறுவனமாக்கினார்கள். இதுவே ஆங்கிலேயர்கள் ஒரு பாச உணர்ச்சியை உண்டாக்கியது. இன்னமும் வெள்ளையர்கள் துரை என்றே குறிப்பிடபடுகிறார்கள் அது விருமாண்டி படமாகட்டும் (கட்டபொம்மனை புடிக்கற ஜாக்ஸன் துரையாருய்யா) , ஏரி காத்த ராமன் கோயில் கதையாகட்டும் (துரையவர்கள் செய்த பல்லக்கு). இதயே எதிர்த்து காந்தி போராடினார். அவருடைய சீற்றம் அறச்சீற்றம்.

வெள்ளையர்களுடன் சதுரங்கம் ஆடினார். தேவைப்பட்டபோது வேண்டிய காய்களை வெட்டினார். உப்பு சத்தியாகிரகத்தில் செய்த செயல்களாகட்டும், சுபாஷ் சந்திர போஸை தோற்கடித்தாக ஆகட்டும் எல்லாமே கைதேர்ந்த அரசியல் வாதிகளின் செயல். காந்தியின் அரசியலை இப்போதுள்ளவர்கள் ஒரு சதவீதம் கூட செய்ய முடியாது :-). காந்தியினுடைய அரசியல் அல்லது பொதுவான உத்திகளை பண்டைய நூல்களில் தெளிவாக காண்லாம். திருக்குறள், விதுர நீதி போன்றவற்றில் இந்த உத்திகள் விரவிக்கிடக்கின்றன. வெள்ளையர் மீது இருக்கும் பாச உணர்ச்சியை ஆயுதப்போராட்டம் மூலம் வெல்ல முடியாது என்பது கொஞ்சம் யோசிக்கும் திறனுடையவர்களுக்கும் புரியும். :-) அதையே காந்தி செய்தார்.

கோயில்களை சுத்தம் இல்லாத்தாக பார்த்து, சாதிக்கொடுமைகளை எதிர்த்து போராடியது, உரிமைக்காக போராடியது என்பதெல்லாம் காந்தி மட்டும் செய்ததில்லை. இவைகள் எல்லாம் செய்யக்கூடியவராகவும் மனிதர்களின் மனங்களை புரிந்து கொண்ட அதே நேரத்தில் பிடிவாதக்காராகவும் காந்தி இருந்தார். :-)

7. பனியாத்தனம் தான் காந்தியின் வெற்றிக்கு காரணம், பனியாக்களால் தான் ஒரு நிறுவனைத்தை நடத்த முடியும், பனியா அனுபவம் மற்றும் அறிவு காந்திக்கு உதவியது என்று சொல்வது காந்தியின் வாழ்க்கையில் இல்லாத ஒன்று. காந்தி தன்னுடைய வாழ்நாளில் ஏதேனும் வியாபார நிறுவனம் நடத்தி சம்பாதித்த பணம் எவ்வளவு இருக்கும்? அவர் பனியாவாக தன்னுடைய வாழ்க்கையை வாழ்வில்லை. வியாபாரம் பார்ப்பவர்கள் லாப-நட்டம் பார்க்காமல் வியாபாரம் நடத்த முடியும் என்று சொல்வது எனக்கு சரியாக படவில்லை.  என்னைப்பொறுத்தவரை காந்தி நீதிக்காக போராடிய சத்ரியர். அதிகார போதைக்கு அடிமையாகாத சத்ரியர். வாழ்க்கையை போராட்டமாகவே வாழ்ந்தவர். அதில் தன்னையே பணயமாக வைத்தவர். போராட்டம் என்பது சத்ரியர்கள் நிகழ்த்துவது. அங்கு வறட்டு வாதங்களோ, பகட்டு ஆடம்பரங்களோ வெற்றியை தருவதில்லை. அதனாலேயே பிராம்மணர்களாலும் மற்றவர்களாலும் முடிந்த வெற்றி என்பதை பெறுவதில்லை.

ராஜசங்கர்

 

 

அன்புள்ள ராஜசங்கர்

 

நீங்கள் தவறுகள் என்று சொல்பவை என் நோக்கில் தவறுகள் அல்ல. நீங்கள் நான் எழுதியவற்றை முழுமையில்லாமல் உள்வாங்கிக் கொண்டிருக்கிறீர்கள். சமணம் மட்டுமே வணிகம் செய்தது என்றோ, பிராமணர் மட்டுமே நூல்களை எழுதினார்கள் என்றோ நான் எங்கும் எழுதியிருக்கவில்லை

 

நீங்கள் ஒரு கோணத்தை முன்வைக்கிறீர்கள். அது எனக்கு ஏற்புடைய தருக்கத்துடன் இல்லை

 

ஜெ

முந்தைய கட்டுரைநெடுங்குருதி 4
அடுத்த கட்டுரைஇளையராஜாவின் இசை,கடிதம்