விஷ்ணுபுரம்:மீண்டும் ஒரு கடிதம்

அன்பு நண்பர் ஜெயமோகன் அவர்களுக்கு,
உங்கள் விரிவான பதிலுக்கு நன்றி.. நான் உங்களிடம் கேட்ட அனைத்தும் நீங்கள் குறிப்பிட்டது போல மிகுந்த அந்தரங்கமானவையே.. நான் சொன்னது போல இவற்றை உங்களுக்கு பகிர்தலின் பொருட்டே எழுதினேன். அவை தீர்மானமான விடைகளை தர வல்லது அல்ல என்றும் உணர்வேன்…தத்துவங்கள் அற்ற  வெளியில் சித்தர்கள் நிற்பதாக நீங்கள் குறிப்பிடுவது முக்கியமான ஒன்றாய் எனக்கு படுகிறது (அத்தகைய வெளியை என்னால் உணர முடியவில்லை என்றாலும் அதன் சாத்தியக்கூறு குறித்த ஆச்சர்யம் ஏற்படுகிறது)

எனது இலக்கிய அனுபவத்தை ஜே ஜே சில குறிப்புகளுக்கு முன், பின் என்று பிரிக்க முடியும் ( அதற்கு முன் எனக்கு இலக்கிய அனுபவமே இருந்ததில்லை என்றும் கூட சொல்லலாம்). அது போல் என் தத்துவ புரிதல்களை விஷ்னுபுரத்திற்கு முன் பின் என்று பிரிக்கலாம்.. (முன்னால் இருந்ததெல்லாம் தத்துவம் குறித்த ஏளன போக்கு மட்டுமே.. காரணம் என் முன் இருந்த வைக்கப்பட்ட   தத்துவ கருத்துகள் அது போன்றவை.. கல்வி மற்றும் ஊடகங்கள் வழி கிடைத்தவை அவை  )
விஷ்ணுபுரம் மறுவாசிப்பு செய்ய உள்ளேன்…

ஒரு புதினம் என்ற முறையில் எனக்கு விஷ்ணுபுரம் குறித்த சில சந்தேகங்கள் உள்ளன. விஷ்ணுபுரம் நடை அடிப்படையில் மிகுந்த கட்டுக்கோப்பான கொஞ்சமும் நெகிழ்வு அற்ற முறையில் எழுதப்பட்டதாக தோன்றுகிறது.. இதற்க்கு தனிப்பட்ட காரணம் ஏதேனும் உள்ளதா காட்சி விவரணைகள் அவ்வளவு விஸ்தாரமாக
வருவதோடன்றி மீண்டும் மீண்டும் வருகிறது.. கட்டமைப்பு மற்றும் கதை சொல்லல் இரண்டும் மிகுந்த நுணுக்கமாய் செதுக்கப்படத்தை போல் தோன்றுகிறது.. (ஒரு கட்டிட நிர்மாணம் போல) இதனால் நாவல் தன் போக்கில் சென்று படைப்பாளியை மீறி செயல்படும் தருணம்  தவிர்க்கப்பட்டுள்ளது என்றும் தோன்றுகிறது. எளிமையாக சொல்ல வேண்டும் என்றால் நீங்கள் நாவலின் மீது அதிக கட்டுபாட்டை ஏற்படுத்தி உள்ளீர்கள்  என்று தோன்றுகிறது.. இது வலிந்து  செய்யப்பட்டதா (தத்துவ தளத்தை அடிப்படையாக கொண்டதால் என்பதாலா) .. சில இடங்கள் சற்று அதிகமான நாடகத்தன்மை கொண்டது போல் உள்ளது.. (உம்.. தாயை கோவிலில் விட்டு செல்லுதல்) இதற்கும் ஏதேனும் காரணம் உள்ளதா …
காட்சி விவரணைகள் அதிகம் உள்ளதால் பல இடங்களில் நாவல் எனக்கு ஒரு சினிமா அனுபவம் தந்தது. அதன் ஆழமான  தத்துவ விவாதங்கள்,தேர்ந்த புதின கட்டமைப்பு இவ்வரை மீறி எனக்கு இந்த  சினிமா அனுபவம் மிகுந்து நின்றது .. அந்தரங்கமாய் இதை நான் கேள்விக்கு உள்ளாக்கவில்லை என்றாலும், படைத்தவர் என்ற முறையில் இத்தகு அனுபவம் நோக்கி நீங்கள் எழுதினீர்களா  என்று ஒரு ஐயம் … விஷ்ணுபுரம் வந்து சில காலம் ஆகிவிட்ட நிலையில் நீங்கள் ஏன் அந்த படைப்பின் காரணம், விமர்சனம், கட்டமைப்பு, வாசிப்பு முறை, அனுபவம் பற்றி ஒரு நூல் எழுதக்கூடாது?

நன்றி…

ராஜரத்தினம்

8888888888888888

அன்புள்ள ராஜரத்தினம்

நலம்தானே?

நானும் நலமே.

விஷ்ணுபுரம் பற்றிய உங்கள் கேள்விகள் சரியானவையே. செவ்வியல்[ கிளாசிக்] தன்மை  கொண்ட படைப்பு. செவ்வியல் என்பதன் முதல் இலக்கணம் ஒரு படைப்பின் எல்லா தளங்களும் ஒன்றுடன் ஒன்று சரியாகச் சமன் செய்யப்பட்டிருத்தல். எல்லா கூறுகளும் ஒன்றுடன் ஒன்று சரியாகப் பொருந்துதல். இரண்டாவது இலக்கணம் அதன் எந்த உணர்ச்சியும் கட்டுமீறாமல் சரியான அளவில் இருத்தல். இந்த தேவை காரணமாகவே செவ்வியலின் அடுத்த இலக்கணம் உருவாகிறது, அது அதன் ஆசிரியனால் மிகுந்த கவனத்துடன் உருவாக்கப்பட்டிருக்கும். அதன் ஆக்கத்தில் எப்போதும் படைப்பூக்கத்தின் தன்னிச்சையான தன்மை இருக்கும். அது அதன் உட்கூறுகளில் தெரியவரும். ஆனால் ஒட்டுமொத்தமான அதன் அமைப்பு சரியானமுறையில் தொகுத்து சமன்படுத்தப்பட்டு உருவாக்கப்பட்டிருக்கும்.

செவ்வியல் வடிவம் ஏன் தேவைப்படுகிறது என்றால் வாழ்க்கையை ஒட்டுமொத்தமாகச் சொல்ல முயல்வதற்காகவே. விஷ்ணுபுரம் ஒருபக்கம் வரலாற்றையும் மறு பக்கம் தத்துவத்தையும் மறுபக்கம் தனிப்பட்ட உணர்ச்சிகளையும் மறுபக்கம் ஆன்மீகத் தேடல்களையும் சொல்ல முயல்கிறது. இத்தனை விஷயங்களை சொல்வதற்கான வடிவம் விரிவானதாகவே இருக்க முடியும். அதற்கு செவ்வியல் தேவைப்படுகிறது. செவ்வியலின் சமநிலை இல்லாமல் சொல்லப்போனால் சொல்லும் விஷயங்கள் திருகி குழப்பமாக ஆகிவிடும். பேசுபொருள் திரளாது போகும்.

மேலும் எப்போதுமே எனக்கு செவ்வியல் அழகியல் மீது விருப்பம் அதிகம். என் மனம் அதில்தான் ஈடுபடுகிறது.நான் எழுத வந்தபோது நவீனத்துவத்தின் காலம். அதற்கு முன் கற்பனாவாதம். இரண்டுமே இரண்டு வழிகளில் செவ்வியலுக்கு எதிரானவை. ஆகவே என் நாவலை வாசகர்கள் புரிந்துகொள்வார்களா என்ற ஐயம் இருந்தது. ஆனால் நம் மனதில் பேரிலக்கியங்கள் வழியாக செவ்வியல் தன்மை ஆழமாக பதிந்திருக்கிறது. ஆகவே நவீனத்துவ எழுத்துக்களை விட விஷ்ணுபுரம் வாசகர்களைக் கவர்ந்தது.

உணர்ச்சிகளைக் கட்டறுத்து அதன் போக்கில் விடுவது கற்பனாவாத அழகியல். எல்லாவற்றையும் தர்க்கக் கட்டுப்பாட்டுக்குள் வைப்பது நவீனத்துவ அழகியல். செவ்வியலில் கற்பனாவாதம் உட்பட அனைத்துக்கும் இடம் உண்டு. ஆனால் அதன் ஒவ்வொரு கூறும் இன்னொன்றால் சமன் செய்யப்பட்டிருக்கும்.

இன்னொன்று, என்னுடைய செவ்வியல் என்பது நான் மேலை நாட்டில் இருந்து கற்றுக் கொண்டது அல்ல. அது நம் காவிய மரபில் இருந்து பெற்றுக் கொண்டது. விஷ்ணுபுரத்தில் சம்ஸ்கிருத காவிய மரபு கூறும் காவிய லட்சணம் முழுமையாகவே உண்டு. [கிட்டத்தட்ட அதுவே தமிழ் காவிய இலக்கணம்] அது முழுமை+ சமநிலை என்ற இயல்பு கொண்டது. பீபத்சம்[ அருவருப்பு] உட்பட எல்லாச் சுவைகளும் திரண்டு ஒன்றை ஒன்று சமன் செய்து சாந்தத்தை உருவாக்குவதே காவியம் என்று இலக்கணம் கூறுகிறது.

காட்சித்தன்மையை பொறுத்தவரை அதன் இயல்பை நீங்கள் அந்நாவலின் கருவிலேயே தேட வேண்டும். இல்லாத ஓர் உலகைப் பற்றிய நாவல் அது. அவ்வுலகைக் ‘கண்முன்’ காட்டினால் மட்டுமே அந்த உலகுக்குள் வாசகன் புக முடியும். இந்த அம்சத்தை கம்பராமாயணத்தில் காணலாம்.கம்பனின் காவியம் முழுக்க முழுக்க  காட்சித்தன்மை கொண்டது. ஒரு அதி பிரம்மாண்டமான சினிமா அது. அந்தக் காட்சித்தன்மையில் பாதிகூட விஷ்ணுபுரத்தில் இல்லை. உண்மையில் என் இலக்கு அதுவாகவெ இருந்தது.

ஜெயமோகன்

விஷ்ணுபுரம்–ஒரு கடிதம்

முந்தைய கட்டுரைகொட்டடிகள் வேதபாடங்கள்: ‘தேர்வு’ குறித்து…
அடுத்த கட்டுரைஎஸ்.பொன்னுத்துரை: யாழ்நிலத்துப் பாணன்-1