ஏப்ரல் நன்னாளில்

நேற்று இந்த தளத்தில் வெளியான கட்டுரையை தீவிரமாக எடுத்துக்கொண்டு பலர் எதிர்வினையாற்றியிருந்தனர். இந்துக்களும் கிறித்தவர்களும். அது ஏப்ரல் முதல்தினம் என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன்.

இந்துக்களின் எதிர்வினைகளுக்கு என் பதில் இது. கேலிக்குரியதாக, அபத்தத்தின் உச்சமாகக் கருதப்படும் இந்தவாதங்கள் மெல்லமெல்ல நம் கல்விநிறுவனங்களில் ஊடுருவச்செய்யப்படுகின்றன என்பதை நீங்கள் அறிவீர்களா? புனித தாமஸை ஒரு பிராமணர் கொலைசெய்தார் என்கிறார்கள். குடுமியுடன் பிராமணன் அவரை பின்னாலிருந்து குத்தும் சிலையை ஊர் ஊராக நிறுவியிருக்கிறார்கள். புனித தாமஸ் இந்தியா வந்தார் என்பது இன்றுவரை கத்தோலிக்க திருச்சபையாலேயே ஏற்றுக்கொள்ளப்படாத கருத்து. அவர் சென்றதும் கொல்லப்பட்டதும் வேறு ஊர் என திட்டவட்டமாகவே ஆய்வுகள் நிறுவுகின்றன. ஆயினும் குடுமியும் பூணூலும் கொண்ட ஒருவர் ஈட்டியால் குத்தும் கதை எப்படி எங்கு உருவாக்கப்பட்டது? எப்போது அது நிறுவப்பட்டது? எப்படி நாம் அதை கேள்வியே கேட்காமல் ஏற்றுக்கொண்டுவிட்டோம்?

கிறித்துவர்களின் எதிர்வினைகளுக்கான பதில் இது. அந்தக் கட்டுரையில் நான் சொல்லியிருக்கும் பெரும்பாலான விஷயங்கள் ‘உண்மையிலேயே’ கிறித்தவ மதப்பரப்புநர்களால் சொல்லிப்பரப்பப்படும் திரிபுரைகள் என்பது தெரியுமா? இந்துக்கள் நெற்றியில் அணியும் சந்தனக்குறி ஏசுவின் சிலுவையையும் அதன் நடுவே உள்ள செந்தூரம் அவரது குருதியையும் குறிக்கிறது என்றும் இந்துக்கள் எல்லாரும் தாமஸ் சொன்ன கிறித்துவமதத்தை திரித்துப்பொருள்கொண்டவர்கள், பிராமணர்களால் ஏமாற்றப்பட்டவர்கள் என்றும் நூற்றுக்கணக்கான நூல்கள் தமிழில் எழுதப்பட்டுள்ளன தெரியுமா?

அந்தக்கட்டுரையில் உள்ள வரிகளை விட வேடிக்கையான ‘ஆய்வுகளை’ செய்துகொண்டிருக்கும் தெய்வநாயகம் என்பவர் கணிசமான கிறித்தவசபைகளால் கொண்டாடப்பட்டு முன்வைக்கப்படுபவர் என்பதை அறிவீர்களா? அதை எப்போதேனும் கண்டித்திருக்கிறீர்களா? இந்த இணையதளத்தில் இக்கட்டுரையை விட மும்மடங்கு வேடிக்கையான ஆய்வுகளை நீங்கள் காணலாம். ஏப்ரல் ஒன்று அன்று மட்டுமல்ல வருடம் முழுக்க soulology என்ற புதிய அறிவியல் முதல் வேடிக்கை ஆரம்பிக்கிறது.

கிறித்துவின் செய்தி மீது எப்போதும் என் பெருமதிப்பை பதிவுசெய்துவருபவன் நான். மானுடத்தின் மகத்தான ஞானகுருக்களில் ஒருவர் அவர். ஞானத்துடன் இங்கு வந்தவர்களில் கடையரை எளியோரை இழிந்தோரை நோக்கிப்பேசிய முதல் ஞானி. ஆகவே இறைமகன். அவர் பாதங்கள் என்றும் மானுடத்தின் சிரத்தில் அணியத்தக்கவை.

அர்ப்பணிப்பையும் சேவையையும் முன்வைக்கும் கிறித்தவம் அந்தச்செய்தியுடன் இந்தியாவில் என்றும் தன்குரலை ஒலிக்கவேண்டும் என விழைபவன் நான். அத்தகைய அருட்பணி செய்பவர்களை வணங்குபவன். அவர்களின் மதிப்புக்குரியவனாகவே நீடிப்பவன். இந்த மதமாற்ற மோசடிகள் உண்மையில் கிறிஸ்துவை, கிறிஸ்துவின் தொண்டர்களை இழிவுசெய்கின்றன என்பதை உணருங்கள். மோசடிகள் வழியாக அல்ல, உண்மை அன்பின் வழியாகவே கிறிஸ்துவை அறிமுகம் செய்யமுடியும்.

கோடைநல்வாழ்த்துக்கள்

முந்தைய கட்டுரைஆதிச்சநல்லூர் – கோடைக்கொடுமை- எதிர்வினைகள்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 39