திரு ஜெயமோகன் அவர்களுக்கு,
அண்மையில் நடந்தேறிய மலேசிய இலக்கிய கூட்டத்தில் நானும் கலந்து கொண்டேன். இலக்கிய கூட்டம் ஒன்றில் கொண்டது எனக்கு முற்றிலும் புதிய அனுபவமே. கவிதை, நாவல், புதினம், சமூகம், ஆன்மீகம் என்று பல கோணங்களில் அலசப்பட்ட வாதவிவாதங்களும், உரைகளும், விளக்கங்களும் ஒரு இனிய இலக்கிய சூழலை ஏற்படுத்தி தந்தது. ‘வித்யா விநய சம்பன்னே’ என்பதற்கேற்ப குருசிஷ்ய பாவனையுடன் கேட்டுக் கொண்டிருந்தேன்.
எங்கள் மலேசிய மண்ணில் மொழியும் இலக்கியமும் என்றும் பேணி பாதுகாக்கப்பட்டு வருகிறது. தமிழ் வளர்த்த பெரியோர்கள் பலர் உண்டு. இலக்கிய ஆர்வலர்களுக்கும் குறைவில்லை. எனினும் எங்களின் இலக்கிய போதாமையை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டியிருந்தது. இலக்கியத்தில் புதிய பரிணாமங்களையும் பாங்கையும் கற்றுத் தேற வேண்டிய அவசியம் தெரிகிறது. புதிய புதிய யுத்திகளும், ஆராய்ச்சிகளும், ஆழங்களும், தரிசனங்களும், தத்துவங்களும் இன்னும் போதிய அளவில் நிரப்பப்பட வேண்டி இருக்கிறது. அவ்வகையில், தங்களின் உரைகளில் இருந்த செறிவும் அழுத்தமும் இளம் எழுத்தாளர்களை நன்கு ஊக்கப்படுத்தும் வகையில் இருந்தது. எம்மண்ணின் துடிப்புமிக்க இளம் எழுத்தாளர்களுக்கு வழிகாட்டியாக முன்னோடியாக தங்களைக் கொள்வதில் என் பெருமகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நாகம்மா மாரிமுத்து
அன்புக்குரிய நாகம்மா மாரிமுத்து அவர்களுக்கு,
மலேசியாவின் இலக்கியச்சூழல் உற்சாகமானதாக நம்பிக்கையூட்டுவதாகவே இருக்கிறது. நான் 2006-இல் அங்கே வந்தபோதே அதை உணர்ந்து பதிவும் செய்திருக்கிறேன். அங்கு நிகழும் விவாதங்களும் மோதல்களும்கூட வளர்ச்சியின் சான்றுகளே. இலக்கியச்சூழலில் புதியது நிகழும்போது பழமையுடன் மோதல் நிகழந்தேதீரும். புதியகருத்துக்களோ அதற்குரிய குழப்பங்கள் தடுமாற்றங்கள் உள்மோதல்களுடன் மட்டுமே வளரவும் செய்யும்.
மலேசியச்சூழலில் உள்ள சவால்கள் பல. தொடர்ந்து புறவுலகச்சூழல் மாறிக்கொண்டே இருக்கிறது. தமிழர்களின் வாழ்விடம் மாறுகிறது. புதிய அறைகூவல்கள் நிகழ்கின்றன. அத்தகைய சூழலில் கலையிலக்கியங்கள் முக்கியத்துவம் இழக்கநேர்வது இயல்பே. ஆனால் அத்தகைய சூழலில் கலையிலக்கியங்களின் முக்கியத்துவம் மேலும் அதிகரிக்கிறது. அவை மக்களை ஒருங்கிணையச்செய்யவும் வரலாற்றுச்சரடில் நீட்டிக்கவும் உதவுகின்றன. அந்த உணர்ச்சி அங்கிருப்பதைக் காண்கிறேன்.
மலேசியாவில் மொழிக்கல்வி தமிழகத்தைவிடச் சிறப்பாக இருப்பதாகவே எனக்குப்படுகிறது. ஆகவே அங்கே தனித்ததோர் இலக்கியமரபு உருவாகி நீடிக்கும் என்றும் உணர்கிறேன். ஆனால் முறையான கல்விக்கூடக் கல்வி தரப்படுத்தப்பட்ட பாடங்களை, பொதுவான நூல்களையே அளிக்கும். அதுவே இயல்பு. அதற்கப்பால் தேடிவாசிக்கக்கூடியவர்கள் மட்டுமே வாழும் இலக்கியம் நோக்கி வரமுடியும். அதுவும் வலிமைபெற்று வருவதையே காண்கிறேன்.
நானும் சரி, என்னுடன் வந்தவர்களும் சரி, மலேசிய இலக்கியச்சூழலைப்பற்றி நிறைவும் நம்பிக்கையும் கொண்டவர்களாகவே திரும்பிவந்தோம்.