வந்தேமாதரம்

அன்புள்ள ஜெயமோகன்,

வந்தேமாதரம் பாடலை பாடலாகாது என்று இப்போது மீண்டும்  உருவாகிவந்திருக்கும்  பிரச்சினையைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

சிவம்

அன்புள்ள சிவம்,

வந்தேமாதரம் பாடுவது இஸ்லாமுக்கு விரோதமானது என்பது இஸ்லாமிய மதகுருமார்கள் தங்கள் மத அதிகாரத்தை அரசியல் தளத்தில் விரிவாக்கம்செய்ய வேண்டுமென்று திட்டமிட்டு  உருவாக்கும் ஒரு சர்ச்சை என்றே நான் நினைக்கிறேன். வந்தேமாதரம் பாடல் — அதன் இப்போதுள்ள அங்கீகரிக்கப்பட்ட வடிவம் — இந்திய தேசத்தை வழிபடவேண்டிய கடவுளாக முன்வைக்கவில்லை. அனைவரையும் வழிபடவும் சொல்லவில்லை. அந்தப்பாடலில் இஸ்லாமிய மதம் ஷிர்க் [இணைவைத்தல்] என்று சொல்லும் எதுவும் இல்லை என்பது சமநிலை கொண்ட எந்த இஸ்லாமியருக்கும் கண்கூடாகத் தெரிவதே.

மாறாக அது இந்தியநிலத்தை அன்னைக்கு இணையாகச் சொல்கிறது. ஒருவர் தன் அன்னையை மதிக்கக்கூடாது என்று எந்த மதமும் சொல்லாது. அதேயளவு முக்கியத்துவத்தை தான் முக்கியமாக எண்ணும் ஓர் விழுமியத்துக்கு அளிக்கக் கூடாது என்றும் எந்த மதமும் சொல்வாதில்லை.  இஸ்லாமிய நூல்களில் குரானை அன்னை என்று சொல்லும் பல வரிகள் உள்ளன என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.  நபி அவர்களின் துணைவியரை அன்னை என்று சொல்லும் ஏராளமான வரிகளை நாம் ஒவ்வொரு நாளும் கேட்டுக்கொண்டிருக்கிறோம்.

 

துருக்கி, எகிப்து முதலிய பல இஸ்லாமிய நாடுகளில் அந்நாடுகளை தந்தைநாடு என்று சொல்லும் மரபு உண்டு. ஐரோப்பாவிற்கு குடியேறும் இஸ்லாமியர் அங்கே அந்நாடுகள் தங்கள் மண்ணை அன்னை என்றும் தந்தை என்றும் சொல்லும் வரிகளை ஏற்றுக்கொண்டுதான் வாழ்கிறார்கள். நைல்நதி எகிப்தில் அன்னை என்றே சொல்லப்படுகிறது. இதெல்லாம் ஒன்றும் மதச் சுதந்திரத்துக்கு எதிரல்ல.

இந்த விவாதம் முதன்முதலில் எவ்வாறு, எதற்காக உருவாக்கப்பட்டது என்பதை நாம் நினைவிற்கொள்ள வேண்டும். காங்கிரஸ் இந்தியமக்களின் பிரதிநிதியாக உருவாகி வந்த நிலையில் இந்தப்பாடல் அதன் உணர்ச்சிநிலைகளின் ஒரு பகுதியாக இருந்தது. பங்கிம் சந்திர சட்டோபாத்யாய 1882ல் எழுதிய ஆனந்தமடம் என்ற நாவலில் உள்ள பாடல் இது. அக்கால சுதந்திரப்போராட்டத்தின் குரலாக இது தன்னிச்சையாகவே மாறியது.  .

இது வங்கமொழியில் அமைந்திருந்த போதிலும் கூட இந்தியா முழுக்க பரவவும் செய்தது. 1896ல் கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டில் ரவீந்திரநாத் தாகூர் இதை முதல் முதலாக இசையமைத்துப் பாடினார். அதன்பின்னர் இது இந்திய சுதந்திரப்போராட்டத்தின் குரலாக அங்கீகரிக்கப்பட்டது. இந்தியாவின் எல்லா தேசியக்கவிஞர்களும் இதை மொழியாக்கம் செய்திருக்கிறார்கள்.பாரதி உட்பட.

இந்தியாவை உடைக்கும் பொருட்டு, காங்கிரஸை ஓர் இந்து அமைப்பாக காட்ட விரும்பிய முஸ்லீம் அடிபப்டைவாதிகள்தான் 1920 களில் முதல்முறையாக வந்தேமாதரம் ஒரு இந்துப் பாடல் என்று குற்றம்சாட்டிப்பேச ஆரம்பித்தார்கள். அப்போதே மிக வலுவான சொற்களால் அவர்களுக்கு மாபெரும் இஸ்லாமிய அறிஞர்களே மிகவிரிவாகப் பதில் சொல்லியிருக்கிறார்கள். ஒருவன் தன் தாயை வணங்குவதென்பது படைப்புசக்தியாகிய அல்லாவுக்கு நிகராக அவளை வைப்பதல்ல, அது ஒரு மரியாதை மட்டுமே. இந்திய முஸ்லீம்கள் சாதாரணமாக தங்கள் வாழ்க்கையில்செய்துகொண்டிருப்பதுதான் அது, அதை ஷிர்க் என்று சொல்ல முடியாது என்று வாதிட்டார்கள் அவர்கள்

ஆனால் அப்பட்டமான மதவெறிப்பிரச்சாரம் மூலம் அந்தப்பாடலுக்கு எதிரான வெறுப்பு உருவாக்கப்பட்டது. அதைச்சார்ந்து ஒட்டுமொத்த காங்கிரஸ¤ம்,  ஒட்டுமொத்த இந்துக்களும், ஒட்டுமொத்த இந்தியாவும் இஸ்லாமியர்களுக்கு எதிரானதே என்ற எண்ணம் இஸ்லாமியர்களின் ஒரு சாரார் நெஞ்சில் உருவாக்கப்பட்டது. அந்த வெறுப்புதான் இந்தத் தேசத்தை துண்டாடியது. கிட்டத்தட்ட அரைக்கோடி உயிர்களை பலிகொண்டது.

அந்த வெறுப்பே  மதவெறியை அடிப்படையுணர்வாகக் கொண்ட பாகிஸ்தானிய தேசத்தை  உருவாக்கி அரைநூற்றாண்டுக்காலமாக அங்கே ஒவ்வொருநாளும் குருதி சிந்தச் செய்து கொண்டிருக்கிறது. செத்த பிணத்தை பேன்கள் விட்டு நீங்கும். ஆனால் மத அடிப்படைவாதிகள் பாக்டீரியாக்களைப்போல. அந்த பிணம் அழுகியபின்னர்தான் அடுத்ததற்கு பரவுவார்கள். இன்று அந்நாட்டின் முக்கால்பங்கை மதவெறியர்கள் மறைமுகமாக அழிக்கிறார்கள். மீதிக் கால்பங்கை  நேரடியாக கைப்பற்றி அழித்துக்கொண்டிருக்கிறார்கள்.

அந்த மதவெறியின் சமகாலத்து நீட்சி என்றே வந்தே மாதரம் குறித்த இன்றைய தடையை பார்க்கிறேன். இது இந்திய இஸ்லாமிய சமூகத்தை தாலிபான் மயமாக்கும் போக்கின் ஒரு படிநிலை மட்டுமே.  இந்தியாவின் கோடிக்கணக்கான இஸ்லாமியர்களின் அரசியலை தீர்மானிக்கும் உரிமையை விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு மதகுருக்களின் குழு தங்கள் கையில் எடுத்துக்கொள்கிறது. அவர்களின் அதிகாரம் என்பது அடிப்படைவாதத்தின் அதிகாரம். அது உலகம் முழுக்க இஸ்லாமிய மக்களை பெருந்துயரில் ஆழ்த்திக்கொண்டிருக்கும் புற்றுநோய்.

ஜாமாயத் உலமா எ ஹிந்த் அமைப்பு, நவம்பர் 2, 2009 அன்று இப்பாடல்களை இஸ்லாமியர் பாடக்கூடாது என்று பத்வா விதித்திருக்கிறது. இந்த அமைப்புக்கு இந்த அதிகாரத்தை இஸ்லாமியர் ஒட்டுமொத்தமாக அளித்திருக்கிறார்களா என்ன? ஏற்கனவே  ஆல் இந்தியா ஸ¤ன்னி உலமா போர்டு போன்ற பல அமைப்புகள் வந்தேமாதரம் ஷிர்க் அல்ல, அதைப் பாடலாம் என்று சொல்லியிருக்கிறார்களே. ஏ.ஆர்.ரஹ்மான் பாடியிருக்கிறாரே? அவர்களை எல்லாம் இவர்கள் என்ன செய்வார்கள்?

வந்தேமாதர எதிர்ப்பின் உள்ளர்த்தத்தை எத்தனைபேர் புரிந்துகொண்டிருப்பார்கள் என்று தெரியவில்லை. வந்தேமாதரத்தை ஏற்க முடியாதென்றால் தமிழ்த்தாய் வாழ்த்தை மட்டும் எப்படி ஏற்க முடியும்? உலகின் நெற்றியாகிய தக்கணத்தில் விளங்கும் திலகத்தை வாழ்த்துவது ஹராம் அல்லவா? இன்று இவர்களின் இந்திய எதிர்ப்புக்கு தமிழ்த்தேசியம் ஒத்துழைப்பதனால் சும்மா இருக்கிறார்கள். ஆனால் ஓரளவு அதிகாரத்தை இந்த தமிழ்த்தேசியம் கையாள ஆரம்பித்தால் இந்த முல்லாக்களின் குரல் மா றுபட்டு ஒலிக்கும், ஈழத்தில் ஒலித்தது போல.

வந்தேமாதரத்தை எதிர்ப்பதன் அதே வாதத்தை முன்வைத்து ஓர் இஸ்லாமியனை கம்யூனிஸ்டுக் கட்சியில் சேரலாகாது என்று சொல்ல முடியும். காங்கிரஸில் சேரலாகாது என்று சொல்ல முடியும். அவனது அரசியலை அன்றாட வாழ்க்கையை முழுக்க தீர்மானிக்க முடியும். அந்த இடத்தை இஸ்லாமியச் சமூகம் இந்த மதவெறியர்களுக்கு வழங்கப்போகிறதா என்ன?

எந்த ஒரு மதத்திலும் மதகுருக்கள் அவர்களுக்கான இடத்தில் அமர வைக்கப்படவேண்டும். ஓர் இந்து மதகுரு இப்படிச் சொன்னால் எவரும் அவரை பொருட்படுத்தப்போவதில்லை. ஏனென்றால் இங்கே கட்டுப்படுத்தும் அமைப்பு ஏதும் இல்லை. மதகுருக்களிடம் அரசியலைக் கொடுத்ததன் விளைவை அறுவடைசெய்பவை இஸ்லாமிய நாடுகள் மட்டுமல்ல, நம் கண்ணெதிரே ஸ்ரீலங்காவும்கூடத்தான்.

பத்வா என்றால் அது தண்டனையுடன் இணைந்தது. ஆம், இவர்கள் விடுப்பது ஒரு மதவன்முறைக்கான அழைப்பு. உலகில் பெரும்பாலான இஸ்லாமிய நாடுகளில் மாறிமாறி மசூதிகளில் குண்டு வைத்துக்கொள்ளும் அந்த மதவெறியின் கீழ்த்தரமான முகம் மட்டும்தான் இது. நாளை இது இஸ்லாமியரின் இலக்கியங்கள்பால் திரும்பும். சீறாப்புராணமும் குணங்குடி மஸ்தான் சாகிபு பாடல்களும் எல்லாமே ஏற்கனவே இங்குள்ள அடிப்படைவாத வெறியர்களால் ஷிர்க் என்று குற்றம்சாட்டப்படுகின்றன என்பதை நினைவில்கொள்ளவேண்டும். அஜ்மீர் முதல் நாகூர் வரையிலான எல்லா தர்காக்களையும் தகர்க்க இவர்கள் நாளை ஆணையிடலாம். அவையும் அனாசாரம் என்றே இவர்களால் சொல்லப்படுகின்றன. இந்த பூமியில் குண்டுகளை கொண்டு வரவே இந்த வெறியர்கள் திட்டமிடுகிறார்கள்.

வந்தேமாதரம் பாடல் ஒரு நாவலில் அந்த துறவிகள் பாடுவதாக  வருவது. அவர்களின் மதநம்பிக்கை சார்ந்து இந்தியாவை காளியாகவும் துர்க்கையாகவும் வருணிக்கும் வரிகள் அதன் பிற்பகுதியில் உள்ளன. இந்து மதம் எப்போதுமே  இறையுருவகங்களை படிமங்களாக பயன்படுத்துவது என்பதை எவரும் அறிவார்கள். கண்ணகியை கொற்றவை என்றார் இளங்கோ. இந்திராவை காளி என்றார் வாஜ்பாய். அவை வழிபாட்டுக்காகச் சொல்லப்பட்டவை அல்ல. அவை அங்கே படிமங்களாகவே பயன்படுத்தப்படுகின்றன. உக்கிரம், வீரம் ஆகியவற்றை குறிக்கின்றன. வந்தேமாதரம் பாடலும் அப்படித்தான் இந்தியாவை நீ காளி, நீ துர்க்கை என்கிறது

அதில் இருந்து உருவாக்கப்பட்ட இன்றைய தேசியப்பாடல் இஸ்லாமியரின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவர்களுக்காகவே மாற்றியமைக்கப்பட்டது. அதில் எந்த வழிபாட்டுக்குறிப்பும் இல்லை. இந்திய தேசியபாடலாக அது இந்திய அரசியல்நிர்ணயசபையால் அங்கீகரிக்கப்பட்டது. அறுபது வருடங்களுக்கும் மேலாக இந்தியாவின் கோடானுகோடி இஸ்லாமியர் உள்ளிட்டவர்களால் பாடப்பட்டும் வருகிறது. இந்திய ராணுவத்திலும் பாடப்படுகிறது.

இந்த தடை இந்திய அரசின் ஊழியர்களாக உள்ள இஸ்லாமியர்களை கட்டுப்படுத்துமா? அப்படியென்றால் அவர்கள் உடனடியாக இந்திய அரசில் இருந்து வெளியேற வேண்டும், அல்லது போராடவேண்டும். இந்திய ராணுவத்தினர் இந்தப்பாடலுக்கு ஒத்துழைக்க முடியாதென்று கலகம் செய்யவேண்டும். உலமா சபை எதிர்பார்ப்பது இதைத்தான்.

‘வந்தே’ என்ற சொல் வழிபாட்டைச் சொல்வதல்ல என்பது பலநூறு முறை விளக்கப்பட்டிருக்கிறது. சாதாரணமாக ஒருவர் ஒருவரைப் பார்க்கும்போது சொல்லும் ‘வந்தனம்’ என்ற சொல்தான் அது. வந்தித்தல் என்றால் மதித்தல், உபச்சாரம் செய்தல் என்று மட்டுமே பொருள். இஸ்லாமியர்கள் சொல்லும் சலாம் என்ற சொல்லுக்கு நிகரானது. ‘மா துஜே சலாம்’ என்றே அதன் இந்தி- உருது அவ்டிவம் மொழியாக்கம்செய்யப்பட்டுள்ளது. இதெல்லாம் முக்கால்நூற்றாண்டாக விளக்கப்பட்டபின்னரும் புதிதாக இந்த ·பத்வா கிளப்பப்படுவதன் உள்நோக்கம் வெட்ட வெளிச்சமானது.

இந்தியாவின் இஸ்லாமியர்களின் பிரச்சினைகள் இப்போது இதுவா என்ன? இந்தியாவுக்கு எதிராக இஸ்லாமிய அடிப்படைவாதம் உலகளாவிய போரைத்தொடுத்துள்ள நிலையில், அதன் விளைவாக இஸ்லாமியரை இந்திய மையநீரோட்டத்தில் இருந்து அன்னியப்படுத்தும் மனநிலைகள் உருவாகி வரும் சூழலில், இந்த விவாதம் என்னவகையான விளைவுகளை உருவாக்கும்? அதையெல்லாம் தெரிந்தே இந்த ·ப்த்வாவை உலமா சபை பிறப்பித்துள்ளது. அவர்களின் நோக்கம் இந்திய தேசியத்தில் இருந்து இஸ்லாமியரை மத அடிப்படையில் பிரிப்பதும் , இங்குள்ள பெரும்பான்மை-சிறுபான்மை நடுவே கசப்பையும் வெறுப்பையும் வளார்ப்பதும் மட்டுமே..

ஒரு தேசம் கட்டப்பட்டிருக்கும் அடிப்படை விழுமியங்களுக்கு எதிரான அறைகூவல் என்பது அந்த தேசத்துக்கு எதிரான அறைகூவலே. இங்குள்ள கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையை விட இவர்கள் உள்ளூரக் கோன்டிருக்கும் இஸ்லாமிய அகிலம் என்ற அசட்டு ஆதிக்கக் கற்பனையே இவர்களை வழிநடத்துகிறது. தங்கள் மதத்துக்காக இந்தியா என்ற அமைப்பை அழிக்க எந்நிலையிலும் துணியும் நாமே இதில் வெளிப்படுகிறது.

இந்திய தேசிய உருவகத்தைப்பற்றி இந்த இணையதளத்தில் மிகவிரிவான கட்டுரைகளை நான் எழுதிவருகிறேன் என்பதை வாசித்திருப்பீர்கள். இந்திய தேசிய உருவகம் என்பது மதம், மொழி, இனம் என்ற எந்த ஒரு இறந்தகால விழுமியத்தில் இருந்தும்  உருவாக்கப்பட்டதல்ல.  எதிர்காலம் குறித்த கனவில் இருந்து மட்டுமே  உருவாகி வந்திருக்கும் ஒன்று. மேலான சகவாழ்வுக்காக அணைத்துப்போகக்கூடிய, சமரசம்செய்யக்கூடிய, விட்டுக்கொடுக்கக்கூடிய, உரையாடக்கூடிய ஒரு தேசிய உருவகமே காந்தி உருவாக்கியது. பல சிக்கல்கள் நடுவே இன்றும் இந்தியாவில் நீடிப்பது அதுவே. அதுவே நமது இலட்சியம்.

ஆனால் அந்த மகத்தான ஒருங்கிணைப்புத் தேசிய உருவகத்தின் ஆரம்பநிலை முதலே இஸ்லாமிய வெறியர்கள் அதை இந்துதேசியம் என முத்திரை குத்தி தங்களை அதன் எதிரிகளாக வெளியே நிறுத்திக்கொள்ளவே முயன்றிருக்கிறார்கள். ஒருபோதும் அந்த சமரசநோக்குள்ள  நவீன இந்திய தேசியத்துக்கு ஒரு குறைந்தபட்ச நல்லெண்ணத்தைக்கூட அவர்கள் அளித்ததில்லை. இஸ்லாமியர்கள் நம்மவர்கள் என எண்ணும் ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் முகத்திலும் கடந்த எண்பது வருடங்களாக ஒவ்வொரு தருணத்திலும் காறி உமிழ்ந்து வருகிறார்கள் இந்த இஸ்லாமிய வெறியர்கள். அதை தங்கள் மத உரிமை என்றும் சொல்கிறார்கள். இப்போது இவர்கள் சொல்வதும் இதையே.

இது ஒரு தேசமே அல்ல என்று சொல்லி  பிரிவினையை நிகழ்த்திய இஸ்லாமிய மதவெறியர்கள்  பிரிவினைக்குப் பின் இங்கேயே தங்கிவிட்டனர். இந்தியா தன்னை ஒரு மதச்சார்பற்ற குடியரசாக அறிவித்துக்கொண்டு அதற்கான அரசியலை ஆரம்பித்ததுமே இந்தியாவை ஓர் இந்து தேசியமாக மட்டுமே தங்களால் பார்க்க முடியும் என்று இந்திய முஸ்லீம் லீக் என்ற அமைப்பை உருவாக்கி வெளிப்படையாக அறிவித்தனர். இன்றுவரை இந்தியாவின் இஸ்லாமிய வெறியர்கள் இந்த தேசத்துக்கு எதிராகவே செயல்பட்டு வருகின்றனர். பேசியும் எழுதியும் வருகின்றனர்.

ஐயமிருப்பவர்கள் வெளியே சென்று இன்று வெளிவந்துகொண்டிருக்கும் எந்த ஒரு இஸ்லாமிய இதழையும் எடுத்துப்பாருங்கள் .சமரசம், விடிவெள்ளி, புதியகாற்று … அனைத்திலும் மென்மையாகவோ கடுமையாகவோ இந்த நாடும் தேசியமும் அரசும்  இஸ்லாமியருக்கு எதிரானது என்ற செய்தியே வேறு வேறு வழிகளில் எழுதப்பட்டிருப்பதைப் பார்ப்பீர்கள். இருபது வருடங்களாக நான் இஸ்லாமிய இதழ்களை வாசிக்கிறேன்.ஒரே ஒரு இஸ்லாமிய இதழின் ஒரே ஒரு தலையங்கத்தைக்கூட  இன்றுவரை இதற்கு விதிவிலக்காக நான் கண்டதில்லை.  இந்த தேசத்தில் பாராட்டத்தக்க ஏதேனும் ஒரு அம்சம் உள்ளது என்றுகூட இவர்கள் எழுதி நான் வாசித்ததில்லை. ஒரு இஸ்லாமிய நாடே தீர்வாகும் என மீண்டும் மீண்டும் இவ்விதழ்கள் அறைகூவுகின்றன.

தூய்மைவாத இஸ்லாம் எந்த ஒரு தேசிய உருவகத்திற்குள்ளும் அடங்காது என்ற அடிப்படைவாத அம்சத்தையே இங்கே நாம் காண்கிறோம். இன்று உலகில் உள்ள எந்த ஒரு தாராளவாத, மதச்சார்பற்ற அரசையும்– ஒன்றைக்கூட! – அவர்கள் தங்களுடையதென ஏற்றுக்கொண்டதில்லை என்ற உண்மை நம் முன் நிற்கிறது. அனைத்தையும் அவர்கள் இஸ்லாமிய எதிர்ப்பு அரசுகளாகவே காண்கிறார்கள். ஒரு தாலிபானிய அரசின் கீழே மட்டுமே  அவர்கள் தங்களை குடிமக்களாக உணர்வார்கள். ஒவ்வொருநாளும் பிற அரசுகளுக்குள் இருந்து கொண்டு அதை சிதிலப்படுத்த உழைப்பார்கள்.

வந்தேமாதரம் சர்ச்சையின் நோக்கம் ஒன்றே. இந்த நாடு தங்கள் மதவழிபாட்டுரிமையை அளிக்க மறுக்கும் ஒரு இந்துநாடு என இங்குள்ள எளிய இஸ்லாமியர் நடுவே ஒரு பிழையான வெறுப்புப் பிரச்சாரத்தை உருவாக்குவது மட்டுமே. இந்த தேசத்தைத் துண்டாடிய ‘மதத்துக்கு ஆபத்து’ என்ற கோஷத்தை மீண்டும் கிளப்பி இஸ்லாமியரை தூண்டிவிடுதல்.

இந்த வெறிக்குரலின் பின்னால் அணிதிரள இன்னமும் இந்திய சாமானிய இஸ்லாமியன் தயாராக இல்லை என்பதே இந்நாட்டின் வலிமையாக இருந்து வருகிறது. தன் வாழ்க்கையை சமாதானத்துடன், சகமனித நேயத்துடன் வாழ விரும்பும் சாமானியனே  எளிய இஸ்லாமியன். தங்கள் வாழ்வுரிமையும் வழிபாட்டுரிமையும் பாதுகாக்கப்படும் ஒருதேச உருவகத்தை தன்னுடையதென ஏற்கவும், வாழும் மண்ணை தன் மண்ணாக உணரவும்  எந்தத்தடையும் இருக்கவில்லை.

ஒரு சராசரி இந்து இந்து தீவிரவாததுக்கு எதிரானவனாக இருந்திருக்கிறான், இன்று வரை. அதையே இஸ்லாமியர்களிடமும் அவன் எதிர்பார்க்கிறான். இந்த நாட்டில் எல்லா மக்களும் தங்கள் வழிபாட்டுரிமையுடன், முழுமையான வாழ்க்கையுரிமையுடன் வாழ்வதற்கான ஒரு சூழலை உருவாக்குவது அனைவருடைய கடமை. மதவெறிக்கு இடம் கொடுத்து இந்த தாலிபான்களை தலையில் ஏற்றிக்கொள்வார்கள் என்றால் இஸ்லாமியர் தங்களுக்கும் தங்கள் தேசத்துக்கும் பேரழிவை உருவாக்குபவர்கள் ஆவார்கள்

இன்றைய இறுக்கமான சூழலில் தேவ்பந்த் உலமா சபை ஃபத்வாவை இஸ்லாமியர்களில் பெரும்பாலானவர்கள் உதறித்தள்ளியிருப்பது நம்பிக்கையூட்டும் செயலாகும். தன் மதத்துச் சாமானியனின் அந்த எதிர்ப்பைக் கன்டு உலமாசபை அதன் கடுமையான நிலைபாட்டில் இருந்து பின்வாங்கியிருக்கிறது.

அந்த தெளிவு இருக்கும் வரை இந்தியா வாழும். எந்த மதமானாலும் சரி மதத்தை மதவாதிகளிடம் விட்டால் மதம்தான் மிஞ்சும், வாழ்க்கை அழிந்துவிடும்

 

ஜெ

முந்தைய கட்டுரைகல்வி,புராணம்
அடுத்த கட்டுரைகாந்தி சலிப்பூட்டுகிறாரா? கடிதங்கள்