பொருள் அமராச் சொல்

பிரேம் -ரமேஷ் என்ற பெயர் தமிழிலக்கிய உலகில் அறியப்பட்டது. தமிழில் பின்நவீனத்துவ சிந்தனைகளை அறிமுகப்படுத்தி ஒரு விவாதத்தை உருவாக்கியதில் முக்கியமானவர்கள் அவர்கள். கிரணம், சிதைவு போன்ற அவர்களின் சிற்றிதழ்களும் அவர்கள் முக்கியப்பங்கெடுத்த நிறப்பிரிகை என்னும் இதழும் எண்பது தொண்ணூறுகளில் தீவிரமான விவாதங்களை உருவாக்கின. ஒருங்கிணைந்த இறுக்கமான வடிவமும், உணர்ச்சியற்ற தன்னிலைக்குரலும், வரலாறற்ற தனிநபர் நோக்கும் கொண்ட நவீனத்துவ எழுத்துக்கள் நிறைந்திருந்த தமிழ்ச்சூழலை நிலைகுலையச்செய்யவும் புதிய தளங்களை நோக்கிக் கொண்டுசெல்லவும் அவர்களின் முயற்சி வழிகோலியது

ரமேஷ் இப்போது பிரேமிடமிருந்து பிரிந்து தனியாகவே படைப்புகளை உருவாக்கிக்கொண்டிருக்கிறார் [தற்போது பக்கவாத நோயால் பாதிப்புற்று பாண்டிச்சேரியில் நண்பர்களின் ஆதரவில் சிகிழ்ச்சை எடுத்துக்கொண்டிருக்கிறார்] அகரம் வெளியீடாக வந்திருக்கும் ரமேஷ் பிரேதனின் அவன் எனும் சொல் அவரது சமீபத்தைய படைப்பு. பின்நவீனத்துவ எழுத்துக்களுடன் அறிமுகமுள்ளவர்களுக்கு ஆர்வமூட்டும் ஒரு படைப்பு இது

முன்னரே பிரேம்- ரமேஷ் பேரில் வெளிவந்த ‘புதைக்கப்பட்ட பிரதிகளும் எழுதப்பட்ட மனிதர்களும்’ ‘சொல் எனும் சொல்’ போன்ற நாவல்களின் கட்டமைப்பு கொண்டது இந்நாவல். இந்நாவலை சாதாரணமாக வாசிக்கும் ஒருவர் மீண்டும் எழுத்தாளனைப்பற்றி எழுத்தாளன் எழுதிய வடிவில் ஒரு நாவலா என சற்றே சலிப்புடன் கேட்கக்கூடும். இத்தகைய எழுத்துக்களின் பின்னணியை சற்றே புரிந்துகொள்ளவேண்டியிருக்கிறது

கலையிலக்கியத்தில் நவீனத்துவம் ஆழமாக வேரூன்றியபோதுதான் ‘கலைஞன்’ என்ற ஆளுமை முக்கியமானதாக ஆகியது. கலைப்படைப்புக்குப்பின்னால் இருக்கும் ஆளுமையைக்கொண்டே அந்தகலைப்படைப்பை புரிந்துகொள்ளமுடியும், புரிந்துகொள்ளவேண்டும் என்ற எண்ணம் நவீனத்துவத்தின் அடிப்படை. நவீனத்துவக்கருத்துக்களை உருவாக்கிய நூலாகக் கருதப்படும் ஜான் ரஸ்கினின் மாடர்ன் பெயிண்டர்ஸ் [ Modern Painters ] இதற்கான சிந்தனை அடிப்படைகளை உருவாக்கிய நூல். ஓவியங்களை அவ்வோவியனின் உள்ளொளியின் வெளிப்பாடாகக் காணவேண்டுமென வாதிட்ட அந்நூல் நவீன ஓவியர்களின் இயல்புகளை அவர்களின் வாழ்க்கைவரலாற்றைக்கொண்டும் ஓவியங்களில் வெளிப்படும் நுட்பங்களைக்கொண்டும் புரிந்துகொள்ளமுயன்றது.

ரஸ்கின்

நவீனத்துவத்துக்கு முந்தைய கற்பனாவாத காலகட்டத்தில் கலைஞனின் அகவெளிப்பாடே கலை என்ற எண்ணம் ஆழமாக இருந்தபோதிலும் அந்த ஆளுமையை விரிவாகக் கட்டியெழுப்பும் நோக்கு இருந்ததில்லை. அதற்கும் முந்தைய செவ்வியல்காலகட்டத்தில் கலைப்படைப்பு தன்னளவில் முழுமையானது என்ற எண்ணமே இருந்தது, கலைஞன் அதன் அடையாளம் மட்டுமே. மாறாக, நவீனத்துவம் கலைஞனை நுணுக்கமாகவும் விரிவாகவும் கட்டமைத்து கலைப்படைப்புக்கு நிகராக அல்லது ஒருபடி மேலாக முன்னிறுத்தியது

கலைஞர்கள் என நாம் நம்பும் பலருடைய வண்ணமயமான ஆளுமைச்சித்திரங்கள் இவ்வாறுதான் நமக்குக்கிடைத்தன. கற்பனாவாதக் காலகட்டத்தின் இறுதிப்புள்ளியில் நவீனகாலகட்டத்தின் தொடக்கத்தில் நிகழ்ந்த கவிஞனான ஷெல்லி மிகச்சிறந்த உதாரணம். அவனுடைய இளமை, அவனுடைய சாகசங்கள், காதல்கள், அவன் கடலில் படகுமூழ்கி இறந்த விதம் எல்லாமே தொன்மமாக ஆக்கப்பட்டன. தற்கொலைசெய்துகொண்ட படைப்பாளிகளும் மனச்சிக்கல் கொண்ட படைப்பாளிகளும் அகாலத்தில் மறைந்த படைப்பாளிகளும் நவீனத்துவத்தால் கொண்டாடப்பட்டனர். காஃப்கா, மயகோவ்ஸ்கி, வின்சென்ட் வான்கா, சில்வியா பிளாத் என நாம் நவீனத்துவத்தின் முகங்களாக எண்ணும் அனைத்துப்படைப்பாளிகளுக்கும் வண்ணமயமான அல்லது கொந்தளிப்பான ஒரு வாழ்க்கைச்சித்திரம் இருக்கிறது

பெரும்பாலும் அந்த வாழ்க்கைகளில் என்ன நிகழ்ந்திருக்குமென நாமறிய முடியாது. நாம் செய்வது அவர்களின் படைப்புகளைக்கொண்டு பின்னகர்ந்துசென்று அவர்களுக்கு ஒரு வாழ்க்கைவரலாற்றை உருவாக்கிக்கொள்வதைத்தான். அவர்களின் புனைவுகளைக்கொண்டு ஒருங்கிணைவும் தர்க்க ஒழுங்கும் உள்ள வாழ்க்கையையும் ஆளுமையையும் நாம் அவர்களுக்கு அளிக்கிறோம். நவீனத்துவத்தின் இயல்பே ஒத்திசைவுள்ள வடிவை, மையத்தை கட்டமைப்பதுதான்.

இந்தப்பின்னணியில்தான் நவீனத்துவர்கள் ‘எழுத்தாளனின் வாழ்க்கை’ என்ற அமைப்பு கொண்ட புனைவுகளை உருவாக்குகினார்கள். அவ்வாழ்க்கைக்கதைகள் தெளிவான வரையறைகள் கொண்ட கதைமாந்தர்களை நமக்களித்தன. கலகக்காரன், தோற்றுப்போன புரட்சியாளன், அன்னியன், தனியன், கற்பனாவாதி என அவர்களை வரையறுக்கமுடிந்தது.

பின்நவீனத்துவக் கதைகள் எழுத்தாளர்களைப் பற்றி எழுதும்போது இவ்வகை எழுத்துமுறைக்கு நேர்மாறான வடிவத்தை அமைக்கின்றன. அவை ஆளுமையை உருவாக்குவதில்லை, சிதைக்கின்றன. ஒழுங்கை கட்டமைப்பதில்லை சிதைவைச் சித்தரிக்கின்றன. இந்த நாவல்களின் வழியாக நாம் ஒரு கதாசிரியனை, ஆளுமையைச் சென்றடைவதில்லை. மாறாக ஓர் ஆளுமையாக எண்ணப்படும் சில பிம்பங்களைச் சென்றடைகிறோம். அப்பிம்பங்களை உருவாக்கும் சில நிகழ்வுகளை மட்டும் அடைகிறோம்.

தமிழ்நவீனத்துவப்படைப்புகளில் உச்சம் என ஜே.ஜே.சில குறிப்புகளைச் சொல்லலாம். மிகத்திட்டவட்டமாக ஒருங்கமைக்கப்பட்ட ஓர் எழுத்தாளபிம்பத்தை உருவாக்கி முன்வைக்கிறது அந்நாவல். ஆனால் நவீனத்துவத்தின் உச்சமே எப்படியோ அடுத்தகட்டத்துக்கான தொடக்கமாகவும் ஆகிவிடும். ஜே.ஜே.சிலகுறிப்புகள் எழுத்தாளன் என்ற ஒருங்கிணைவுள்ள பிம்பத்தை சிதறுண்ட கதையாடல்முறை மூலமாக சிதைத்து முன்வைத்து ஒரு தொடக்கத்தை நிகழ்த்தியது.

ரமேஷ் பிரேதன் எழுதியிருக்கும் இந்நாவல் போன்றவற்றை ஜே.ஜே.சிலகுறிப்புகளில் இருந்து முன்னகர்ந்தவை என்று எடுத்துக்கொள்லலாம். இந்நாவல் எழுத்தாளன் ஒருவனின் கடிதங்கள் உரையாடல்கள் வழியாக துண்டுதுண்டாக உருவாகிவருகிறது. அவன் தனக்கென ஒரு பிம்பத்தை கட்டி எழுப்ப முனைகிறான். தன் புனைபெயரையே தன் காதலியரும் பயன்படுத்தவேண்டுமென நினைக்கிறான். அந்தப்பிம்பம் அவன் கண்ணெதிரில் அவன் உறவுகளால் சிதைக்கப்பட்டபடியே இருக்கிறது. ஆக்கமும் அழிவும் ஒரே சமயம் நடைபெற அவன் தன் இன்றியமையாத விதியை நோக்கிச் செல்கிறான்

தனிமையின் துயர், கட்டற்ற பித்துந்லை, குரூரங்கள், அபத்தங்கள், உணர்ச்சிக்கொந்தளிப்புகள் என பின்நவீனத்துவ நாவல்களை உருவாக்கும் அனைத்து அடிப்படைக்கூறுகளாலும் அமைந்த படைப்பு அவன் பெயர் சொல். தன்னை சொல் என்று சொல்லிக்கொள்பவன் அவன். சொல் என்பது பொருளால் ஆனது. சூழலால் புழக்கத்தால் பொருளேற்றம் பெறுவது. தன்னை அது வரையறைசெய்துகொள்ளவேமுடியாது. பல்வேறு மொழிபுகள் வழியாக சொல்லிச்சொல்லி எஞ்சும் விஷயமாக இந்நாவலில் உள்ள துயர் அதுதான்

[அவன் பெயர் சொல். ரமேஷ் பிரேதன். அகரம் பதிப்பகம்.]

முந்தைய கட்டுரைகனவுப்புத்தகம்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 65