‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 55

பகுதி பதினொன்று : முதற்களம்

[ 2 ]

முரசுக்கோபுரம் சபைமண்டபத்தின் வடக்குமூலையில் தூக்கப்பட்ட கைபோல நின்றது. அதன் முட்டி சுருட்டப்பட்டதுபோன்ற மேடையில் இரண்டாளுயர விட்டத்துடன் பெருமுரசம் அமர்ந்திருந்தது. அதன் இருபக்கமும் எண்ணை எரிந்த பந்தங்கள் குழியாடியின் முன் நின்றுசுடர அந்த ஒளியில் அதன் தோல்பரப்பு உயிருள்ளதுபோலத் தெரிந்தது. கீழே மகாமுற்றத்தின் அனைத்து ஒலிகளையும் அது உள்வாங்கி மெல்ல அதிர்ந்துகொண்டிருந்தது. அதன் பரப்பை தன் கைவிரல்களால் தொட்ட முரசறைவோனாகிய கச்சன் உறுமும் யானையின் வயிற்றைத் தொட்டதுபோல உணர்ந்தான்.

கீழே மகாமுற்றத்தில் மாலைமுதலே அனைத்துச்செயல்களும் விரைவுகொண்டிருந்தன. பெரிய எண்ணைப்பந்தங்கள் அமைக்கப்பட்ட தூண்கள் அருகே எண்ணைக்காப்பாளர்கள் நின்றிருந்தனர். குழியாடிகள் பிரதிபலித்த வெளிச்சங்கள் மகாமுற்றத்தின் மண்பரப்பில் செங்குருதிவட்டங்கள் போல விழுந்துகிடந்தன. அதைக் கடந்துசென்ற சேவகர்கள் நெருப்பென எரிந்து அணைந்தனர். அதன்முன் பறந்த சிறுபூச்சிகள் கனல்துளிகள் போலச் சுழன்றுகொண்டிருந்தன. வந்து நின்ற பல்லக்குகளின் வெண்கலப்பூண்களிலும் கூரைக்குவையின் வளைவுகளிலும் செவ்வொளி குருதிப்பூச்சு போல மின்னியது.

குளம்போசையும் சகடஓசையும் எழ குதிரைகள் இழுத்த ரதங்கள் வந்து நின்றன. செவ்வொளி மின்னிய படைக்கலங்களுடன் வீரர்கள் ரதங்களை நோக்கி ஓடினர். ரதங்களில் வந்தவர்கள் விரைந்து நடந்து மண்டபத்துக்குள் செல்ல ரதங்களை சாரதிகள் கடிவாளம்பற்றி திருப்பிக்கொண்டுசென்று இருண்ட மறுமூலையில் வரிசையாக நிறுத்தினர். இருளுக்குள் காற்றில் ரதங்களின் கொடிகள் பறவைகள் சிறகடிப்பதுபோல பறந்தன. மேலும் மேலும் ரதங்கள் வந்தபடியிருந்தன. பல்லக்குகள் வந்தன, கிளம்பிச்சென்றன, மீண்டும் வந்தன. கச்சன் மேலிருந்து அவற்றை விழிவிரித்து நோக்கிக்கொண்டிருந்தான். அவனருகே முரசு மெல்ல விம்மிக்கொண்டிருந்ததை அவன் மட்டுமே கேட்டான்.

இரவின் குளிர் ஏறி வந்தபோது அவன் நெய்விளக்குகளின் அருகே நெருங்கி நின்றுகொண்டான். காற்றில் அதன் பொறிகள் எழுந்து பறந்து வடதிசை நோக்கிச் சென்றன. எண்ணைக்குடுவையுடன் வந்த சேவகர்கள் மீண்டும் எண்ணை நிறைத்துச்சென்றார்கள். “எப்போது கோல்விழும்?” என்று ஒருவன் கச்சனிடம் கேட்டான். “தெரியவில்லை. ஆணை வரவேண்டும்” என்றான் கச்சன். “அதைவிட அந்த முரசிடமே கேட்கலாம்” என்றான் எண்ணையை அகப்பையால் அள்ளி விளக்கில் விட்ட துருமன். எண்ணை சொட்டாமல் கலத்தைத் தூக்கியபடி அவர்கள் இருவரும் படியிறங்கினர்.

கீழே அவர்களைப்போல நூறு பணியாளர்கள் விளக்குகளுக்கு எண்ணைவிடும் பணியில் இருந்தனர். அவர்களில் ஒருவன் அவனை நோக்கி “மண்டபத்துக்குள் சக்கரன் இருக்கிறானா துருமா?” என்றான். “இல்லையே, நான் அவனை மடியில் அல்லவா கட்டி வைத்திருந்தேன். எங்கே விழுந்தானென்றே தெரியவில்லை” என்றான் துருமன். எண்ணை அண்டாவை ஒரு சிறிய மரவண்டியில் வைத்து மெதுவாகத் தள்ளியபடி அவர்கள் மண்டபத்துக்குள் நுழைந்தனர். செல்லும் வழியில் திரிகருகத் தொடங்கியிருந்த விளக்குகளை நோக்கி எண்ணை ஊற்றியபடியே சென்றார்கள்.

விரிந்த மகாமண்டபம் நீள்வட்ட வடிவில் ஆயிரம் மரத்தூண்கள் மேல் குவைவடிவக் கூரையுடன் அமைந்திருந்தது. வானம்போல உயரத்தில் வளைந்திருந்த வெண்சுண்ணம்பூசப்பட்ட கூரையில் இருந்து அலங்காரப்பாவட்டாக்கள் பூத்த கொன்றை வேங்கை மரங்கள் போல தொங்கி மெல்ல ஆடிக்கொண்டிருந்தன. ஆயிரம் தூண்களிலும் குழியாடியின் முன் ஏழுதிரிகளில் சுடர்கள் அசையாமல் நின்ற நெய்விளக்குகள் அமைந்திருந்தன. ஆடிப்பாவைகளுடன் இணைந்து அவை பெரிய மலர்க்கொத்துக்கள் பூத்த அரளிச்செடிகள் போலத் தோன்றின. தேன்மெழுகும் கொம்பரக்கும் வெண்களிமண்ணுடன் கலந்து அரைத்துப்பூசப்பட்டு பளபளத்த மண்டபத்தின் விரிந்த மரத்தரையில் விளக்குகளின் ஒளி நீரில் என பிரதிபலித்தது.

நூற்றுக்கணக்கான சேவகர்கள் மண்டபத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தனர். ஒளியை உள்ளனுப்பும் தாமரைச்சாளரங்களுக்கு வெளியே வெயிலை குளிர்வித்தனுப்பும் வெட்டிவேர்த்தட்டிகள் கட்டப்பட்டன. காற்றை மட்டும் அனுப்பும் மான்விழிச் சாளரங்கள் பெரிய பெட்டி ஒன்றுக்குள் திறந்தன. அந்தப்பெட்டிக்குள் ஈரமான நறுமணவேர்களைப் போட்டு மூடிக்கொண்டிருந்தனர். மண்டபத்தின் பன்னிரு காவல்மாடங்களிலும் ஒளிரும் வேல்களுடன் ஆமையோட்டுக் கவசம் அணிந்த வீரர்களை காவல் நிறுத்தி கட்டளைகளை போட்டுக்கொண்டிருந்தார் விப்ரர்.

உள்ளிருந்து வந்த ஜம்புகன் “துருமா, உன்னை நூற்றுக்குடையோர் தேடினார்” என்றபடி பெரியமலர்க்கூடையைச் சுமந்து சென்றான். அதிலிருந்து நீர் சொட்டிக்கொண்டு சென்றது. “அதென்ன வேட்டையாடிய பன்றியா? சிறுநீர் விட்டுக்கொண்டு செல்கிறது?” என்றான் துருமன். ஜம்புகன் திடுக்கிட்டு “உனக்கு நாவிலே சனி” என்றபடி சென்றான். “அவன் அடிபட்டுச் சாகும்போது நீயும்தான் அருகே சாவாய்” என்றான் கூடையின் இன்னொரு முனையைப்பற்றியவன். “ஆனால் அவனிருந்தால் வேலை சுமுகமாக நடக்கிறது” என்று ஜம்புகன் சொன்னான்.

அவர்கள் மலர்மூட்டையைக் கொண்டுசென்று மண்டபத்தின் முகப்பில் இறக்கி பிரித்தனர். அதற்குள் யானைத்துதிக்கை கனத்துக்கு தாமரைமலர்களைக்கொண்டு கட்டப்பட்ட பெரிய மலர்மாலைகள் இருந்தன. “இதென்ன யானைவடமா?” என்றான் ஜம்புகன். “பார்த்தாயா, உனக்கும் நாக்கிலே சனி” என்றான் துணைவன். இருளுக்கு அப்பால் இருள்குவைகள் அசைவது தெரிந்தது. ஜம்புகன் நோக்கியபோது அந்தரத்தில் கந்தர்வர்கள் போல இருவர் இருளில் நீந்தி வருவதைக் கண்டான். அவர்கள் மேல் பட்ட முரசுமேடையின் செவ்வொளி அவர்களை குளிர்கால நிலவின் செம்மையுடன் ஒளிரச்செய்தது. அவர்களுக்குக் கீழே அலையடித்து வந்த யானை உடல்களை அவன் அதன்பின்னரே கண்டான்.

“விடியப்போகிறது. யானைகளை கொண்டுவந்துவிட்டார்கள்” என்றான் துணைவன். யானைகள் அப்போதுதான் குளித்துவிட்டு மேற்குத்தடாகங்களில் இருந்து வந்திருந்தன. அவற்றின் அடிப்பகுதியில் தோலில் வழிந்த நீர் ஊறிச் சொட்டிக்கொண்டிருந்தது. இருண்ட நதியொன்று பெருகி வருவதுபோல மேலும் மேலும் யானைகள் வந்தபடியே இருந்தன. முதல்யானைகளை மகாமுற்றத்தின் இருபக்கமும் வரிசையாக ஆணையிட்டு நிறுத்தினர். அடுத்துவந்த யானைகள் அவையே புரிந்துகொண்டு அணிவகுத்தன. சிறுகுழந்தைகள் போல அவை தங்கள் இடங்களுக்காக முந்தி இடம் பிடித்ததும் சரியாக நின்றபின் ஆடியபடி ஓரக்கண்ணால் அருகே நின்ற யானைகளை நோக்கின. ஒரு யானை பாங் என ஓசையெழுப்பியது. அதன் பாகன் அதன் காதில் கையால் தட்டினான்.

பெரிய மரவண்டிகளில் ஏற்றப்பட்ட மரப்பெட்டிகளைக் கொண்டுவந்து யானைகளுக்கு முன்னால் வைத்து திறந்தனர். அவற்றிலிருந்து கனத்த முகபடாம்களை யானையைக்கொண்டே எடுக்கச்செய்து மத்தகத்தில் வைத்தனர். யானைகள் துதிக்கையால் முகபடாம்களை பற்றிக்கொள்ள அவற்றின் சரடுகளை யானைக்காதுகளிலும் கழுத்துப்பட்டைகளிலும் சேர்த்துக்கட்டினர். யானைகளால் தூக்கப்பட்டு சுருளவிழ்ந்து மேலேறிய முகபடாம்கள் பொன்னிறப்பெருநாகம் படமெடுத்தது போல பிரமையெழுப்பின. முகபடாமில் இருந்த பொன்னிறப் பொய்விழிகளால் யானைகளின் தெய்வவிழிகள் மகாமுற்றத்தை வெறித்து நோக்க அவற்றின் குழந்தைவிழிகள் ஒன்றை ஒன்று நோக்கி துதிக்கையை நீட்டி மூச்சு சீறிக்கொண்டன.

VENMURASU_EPI_105
ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]

யானைகளே தங்கள் அணிகளைத் தூக்கி பாகர்களுக்களித்தன. பாகர்கள் நின்று அவற்றைக் கட்டுவதற்கு தந்தங்களையும் கால்களையும் தூக்கிக் காட்டின. யானை உடலின் வெம்மையால் ஆவியெழ அப்பகுதி செடிகளுக்கு நடுவே நிற்கும் உணர்வை எழுப்பியது. ஜம்புகன் சிறிய மூங்கிலேணிகளை தூண்கள் மேல் சாய்த்து அதிலேறி தூண்களில் தொற்றி மேலேறிச்சென்றான். உத்தரத்தில் அமர்ந்தபடி தாமரைமாலையுடன் சேர்த்துக்கட்டப்பட்ட கயிறை அவன் துணைவன் வீசியெறிய பிடித்துக்கொண்டான். அந்தச்சரடைப் பிடித்து இழுத்து தாமரை மாலையை மேலே தூக்கினான். மலர்த்தூண் போல அது கூரையிலிருந்து தொங்கியது. அதன் கீழே பெரிய மலர்க்கொத்து கனத்து ஆடியது.

“வண்டுகள் விருந்தினரை கடிக்காமலிருந்தால்போதும்” என்றான் ஜம்புகன். “உன் சனிவாயை மூடமாட்டாயா?” என்றான் துணைவன். ஜம்புகன் அங்கிருந்து நோக்கியபோது நூற்றுக்கணக்கான மலர்த்தூண்கள் மண்டபத்தின் முகப்பு முழுக்க மேலேறியிருப்பதைக் கண்டான். “காலையில் இப்பகுதியே பூத்த வனம் போலிருக்கும்” என்றான். “காலையில் நம்மை இப்பகுதியில் நிற்கவிடுவார்களா என்ன?” என்றான் துணைவன். யானைகளின் முகபடாம்கள் செவ்வொளியில் சுடர்ந்தன. யானைகள் ஆடியபோது பொன்னிற அசைவுகளாலான மெல்லிய நடனம் ஒன்று அங்கே நிறைந்தது.

மண்டபத்தின் உள்ளிருந்தே பெரிய கனத்த மரவுரிச்சுருளை விரித்துக்கொண்டு வந்தனர் எழுவர். ‘விலகு விலகு’ என ஓசையிட்டபடி அவர்கள் அதை விரித்துக்கொண்டே சென்றார்கள். ஜம்புகன் “காலகன் அண்ணா, எத்தனைபேர் படுக்கப்போகிறீர்கள்?” என்றான். மரவுரியைத் தள்ளிச்சென்றவன் மேலே நோக்கி “நீ என்ன அங்கே காய்பறிக்கிறாயா? இறங்கு” என்றான். “கைமறதியாக மலர்மாலையைப் பிடித்து இறங்கிவிடப்போகிறான்” என்றான் இன்னொருவன்.

அந்த மரவுரிப்பாதையை அவர்கள் மகாமுற்றத்தின் முகப்புவரை கொண்டுசென்று நிறுத்தினர். “ஆளும் மண்ணில் மன்னர்களின் கால்கள் படக்கூடாதென்று நெறி” என்றான் காலகன். “நீ இப்படி இன்னொரு சொல் பேசினால் கழுதான்” என்றான் துணைவன். “நீங்களெல்லாம் ஒரே கூட்டம். நாக்காலேயே சாகப்போகிறவர்கள்” என்றான். “நாங்கள் ஒரேமூங்கில் மதுவை பகிர்ந்துண்பவர்கள்” என்றான் காலகன். “ஜம்புகனும் நானும் ஒரே ஊர் தெரியுமல்லவா?” “விடியத்தொடங்கிவிட்டது” என்று துணைவன் கிழக்கில் எழுந்த மெல்லிய சிவப்புத்தீற்றலை நோக்கியபடி சொன்னான்.

அதைக் கேட்டதுபோல அரண்மனையின் கோட்டைமுகப்பில் காஞ்சனம் முழங்கத்தொடங்கியது. காலகன் கன்னத்தில் போட்டுக்கொண்டு கும்பிட்டான். அவர்களைத் தாண்டிச்சென்ற நூற்றுவர் தலைவன் “இன்னுமா இதைச்செய்கிறீர்கள் மூடர்களே? அங்கே ஆளில்லாமல் கன்னன் கூச்சலிட்டுக்கொண்டிருக்கிறான். ஓடுங்கள்” என்று சொல்லிவிட்டுச் சென்றான். “ஆளில்லாமல் கூச்சலிட அவனுக்கென்ன பைத்தியமா?” என்றபடி காலகன் உள்ளே சென்றான்.

நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் சேர்ந்து விரிந்த மண்டபத்தரையில் ஈச்சையோலைப்பாய்களை விரித்துக்கொண்டிருந்தனர். அனைத்துத் தூண்களிலும் மலர்மாலைகளை தொங்கவிட்டுக்கொண்டிருந்தனர் சிலர். பாய்களுக்குமேல் கனத்த மரவுரிக்கம்பளங்கள் விரிக்கப்பட்டன. அவற்றின் மீது கம்பிளிக்கம்பளங்கள் பரப்பப்பட்டன. மண்டபத்தின் சாளரங்கள் ஒளிபெற்றன. அப்பால் தொங்கிய வெட்டிவேர்த்தட்டிகளின் வழியாக வரிவரியாக வந்த மெல்லிய ஒளி உள்ளே நீண்டு சரிந்து சதுரமாகக் கிடந்தது. “கம்பளங்கள் மேல் கால்கள் படக்கூடாது!” என்று நூற்றுவர்தலைவன் ஒருவன் ஆணையிட்டான்.

“எத்தனைபேர் இங்கே அமரமுடியும்?” என்று ஒரு கரிய இளைஞன் காலகனிடம் கேட்டான். “வசதியாகவா வசதிக்குறைவாகவா?” என்றான் காலகன். அவன் வெண்ணிற விழிகள் திகைத்து உருள விழித்தான். “யார் அமர்ந்தால் உனக்கென்ன?” என்றான் காலகன். “நீ புதியவனா?” அவன் “ஆம், பணியில் சேர்ந்து எட்டுமாதமே ஆகிறது” என்றான். “இன்னும் எட்டுமாதத்தில் நீ வாயாடியாகவோ மௌனியாகவோ ஆகிவிடுவாய். உன் பேரென்ன?” “பரிகன்” “பரிகனாக இருந்தால் சேவகனாக இருக்காதே. சேவகனாக இருந்தால் பரிகனாக இருக்கமுடியாது.” அவன் மீண்டும் விழித்தான்.

வெளியே ஓசைகள் பெருகிக்கொண்டிருந்தன. விரிந்த முகவாயிலுக்கு அப்பால் அசையும் மனித உருவங்களின் நிழலாட்டம் மண்டபத்தின் உள்ளே நிறைந்திருந்தது. மணியோசைகள். குதிரைகளின் குளம்போசைகள். கட்டளைகள். விடியும்தோறும் ஓசைகள் பெருகிக்கொண்டிருந்தன. பரிகன் மெல்ல நடந்து வெளியே வந்து நோக்கினான். கண்ணைச் சுருங்கவைக்காத காலையிளவெயிலில் மகாமுற்றம் வண்ணங்கள் நிறைந்து ததும்பியது. மலர்வடங்கள், முகபடாம்கள், கொடிகள், பாவட்டாக்கள், சுட்டிகள்… பிரமித்துப்போய் அவன் பார்த்தபடியே நின்றான்.

இருபக்கமும் கரிய கோட்டையாக, பொன்னிறநடனமாக நீண்டிருந்த யானைவரிசைக்கு அப்பால் நூற்றெட்டு பெரிய மலர்மாலைகள் தொங்கிய முகப்பில் ஏழெட்டுபேர் ஓடிவந்ததை பரிகன் கண்டான். அவர்களின் உடையும் தோற்றமும் அவனுடைய குலத்தைச்சேர்ந்த ஆயர்கள் என்று தோற்றமளித்தன. புழுதிபடிந்த உடையும் பதற்றமான முகங்களுமாக அவர்கள் அந்த அலங்கார முற்றத்தை நோக்கி திகைத்து செயலிழந்து நின்றனர். காவலர்தலைவன் அவர்களை நோக்கி ஓடிச்சென்று “நில்லுங்கள்… யார் உங்களை இங்கே அனுமதித்தது? யார் நீங்கள்?” என்றான்.

பரிகன் முற்றத்தைக் கடந்து யானைகளின் நூற்றுக்கணக்கான துதிக்கை நெளிவுகள் வழியாக ஓடி அவர்களை அடைந்தான். அவர்கள் பேசும் மொழி காவலர் தலைவனுக்குப் புரியவில்லை என்று தோன்றியது. அவர்கள் அனைவரும் ஒரே சமயம் பதற்றமாக கைகளை வீசி முகத்தை விதவிதமாகச் சுழித்து மிகவிரைவாகப் பேசினார்கள். “யார்? யார் நீங்கள்?” என்றான் காவலர்தலைவன். “இறையோரே, அவர்கள் எங்கள் ஊரைச்சேர்ந்தவர்கள். ஆயர்மக்கள்” என்றான் பரிகன். “என்ன சொல்கிறார்கள்?” என்று காவலர்தலைவன் கேட்டான்.

அவர்கள் அனைவரும் மீண்டும் ஒரே காலத்தில் கலைந்த குரல்கலவையாக பேசத்தொடங்கினர். பரிகன் மூத்தவரிடம் “மூத்தாரே நீங்கள் மட்டும் பேசுங்கள். நீங்கள் மட்டும் பேசுங்கள். மூத்தார் பேசட்டும் மற்றவர்கள் அமைதியாக இருங்கள்” என்று கூவினான். அவர்கள் ஒவ்வொருவராக நிறுத்திக்கொள்ள மூத்தவர் இருகைகளையும் விரித்து “புவிநடுக்கம்!” என்றார். நடுங்கும் கைகளை நீட்டி முகச்சுருக்கங்கள் சிலந்திவலை காற்றிலாடுவதுபோல சுருங்கி விரிய “அங்கே… அங்கே எங்களூரில் புவிநடுக்கம் வந்திருக்கிறது… மலைகள் சரிந்தன… மண்பிளந்து நதி திசைமாறி…” என்று சொல்லமுடியாமல் திணறினார்.

பரிகன் சொல்லத்தொடங்குவதற்குள்ளாகவே காவலர்தலைவன் “புரிந்துவிட்டது. இவர்களை இப்படியே அமைச்சர் விதுரரிடம் அழைத்துச்செல்” என்றான். “இது மங்கலநிகழ்வுக்கான இடம். இங்கே இச்செய்தி ஒலிக்கலாகாது.” பரிகன் “ஆம்” என்றான். “சாதாரணமாக அமைச்சரை பார்க்கப்போவதுபோலச் செல். எவரும் ஏதென்று கேட்கலாகாது. அதற்காகவே உன்னை அனுப்புகிறேன்” என்றான். “புரிகிறது இறையோரே” என்றான் பரிகன்.

அவன் அவர்களிடம் “மூத்தாரே, வருக. அமைச்சரைச் சென்று பார்த்து நிகழ்ந்ததைச் சொல்வோம்” என்றான். அவர்கள் மீண்டும் ஒரேசமயம் பேசத்தொடங்கினர். கலைந்த பறவைகள் போல பேசியபடி அவனுடன் ஓட்டமும் நடையுமாக வந்தனர். “புவி பிளந்துவிட்டது. உலகம் அழியப்போகிறது…” என்றான் ஒருவன். “பூமியின் வாய்க்குள் தீ இருக்கிறது. தீதான் பூமாதேவியின் நாக்கு” என்றான் இன்னொருவன். “புகை வந்ததை நான் கண்டேன். மலையுச்சியில் இருந்த பாறை அசைந்து யானைபோல கீழிறங்கி ஓடிவந்தது. வந்த வழியிலிருந்த அனைத்துப்பாறைகளையும் அது உடைத்து உருட்டியது. பாறைகள் மழைவெள்ளம்போல காட்டுக்குள் புகுந்தன.”

அவர்களின் கன்றுகள் நூற்றுக்கணக்கில் பாறைகள் விழுந்து இறந்திருந்தன. புவிபிளந்த இடத்திலிருந்த காடே அழிந்துவிட்டிருந்தது. புவிபிளந்த தடம் பெரிய மீன்வாய் போல திறந்திருக்கிறது; அதற்குள் நெருப்பு கொதித்து ஆவியெழுகிறது என்றார்கள். “கந்தக வாடை!” என்று கிழவர் சொன்னார். “கந்தகச்சுனைகள் அங்கே மலைகளுக்கு அப்பால் உள்ளன. அவற்றில் இருந்து வரும் அதே வாடை.”

அவர்கள் கூவியபடியே வந்தனர். உள்ளே கொந்தளித்த எண்ணங்களால் உடல் நிலைகொள்ளாதவர்களாக எம்பி எம்பி குதித்தபடியும் கைகளில் இருந்த வளைதடிகளை சுழற்றியபடியும் வந்தனர். அச்சத்தை விடவும் கிளர்ச்சிதான் அவர்களிடமிருந்தது என்று பரிகன் நினைத்தான். விதுரனின் மாளிகை முற்றத்தில் நின்ற காவலனிடம் அவர்களை அமைச்சரைப்பார்க்கும்படி மகாமண்டபத்துக் காவலர்தலைவன் அனுப்பியதாகச் சொல்லி உள்ளே அழைத்துச்சென்றான்.

விதுரன் இரவு துயிலவில்லை என்றார் மாளிகை ஸ்தானிகர். அவன் காலைநீராடிக்கொண்டிருப்பதாகவும் காத்திருக்கும்படியும் சொன்னார். விதுரனுக்காக அந்தக்கூடத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஓலைநாயகங்களும் ஸ்தானிகர்களும் ஸ்ரீகாரியக்காரர்களும் அதிகாரிகளும் நின்றிருந்தனர். அனைவருமே தங்கள் அலுவல்களின் அவசரத்துடன் வாயிலையே எட்டி நோக்கிக்கொண்டிருந்தனர். அனைவரும் நீராடி புத்தாடையும் நகைகளும் படைக்கலங்களும் அணிந்திருந்தனர். அனைவர் கண்களிலும் இரவு துயிலாத சிவப்பும் தசைத்தொய்வும் இருந்தன.

கதவு திறந்து வெளியே வந்த விதுரன் முதலில் அவர்களைத்தான் நோக்கினான். கைசுட்டி அவர்களை உள்ளே அழைத்துக்கொண்டு சென்றபின் கதவை மூடினான். அவனுடன் சோமரும் உள்ளே நுழைந்தார். அவர்கள் விதுரன் கேட்பதற்குள்ளாகவே சொல்லத்தொடங்கினர். சிலசொற்களிலேயே அவர்கள் சொல்வதென்ன என்று விதுரன் புரிந்துகொண்டான். அவர்கள் சொல்லச்சொல்ல செவிகூர்ந்து கேட்பதுபோல அவன் தலையசைத்தாலும் அவன் அடுத்து செய்யவேண்டியவற்றைத்தான் சிந்திக்கிறான் என பரிகன் உணர்ந்தான்.

அவர்களை அமைதிப்படுத்திவிட்டு விலகி வந்து சோமரிடம் “இமயத்தின் அடிவாரத்தில் புவியதிர்வும் பிளப்பும் இயல்பாக நிகழ்வனதான். இவர்களின் ஊரில் இப்போதுதான் நிகழ்கின்றன போலும்” என்றான். “ஆனால் இச்செய்தியுடன் இவர்கள் வந்த வேளை…” எனத் தொடங்கிய சோமரை கையமர்த்தி “ஆம், இவர்களை விழவு முடிவதுவரை எவரும் பார்க்கலாகாது. சிறைவைத்தலும் நன்றே. இவர்கள் வந்தபோது மண்டபமுகப்பில் இருந்த காவலர்கள் அனைவரையும் விழாமுடிவுவரை சிறைவைத்துவிடுங்கள். ஒரு சொல்கூட எங்கும் ஒலிக்கலாகாது” என்றான்.

“ஆம்” என்று சோமர் தலைவணங்கினார். விதுரன் வெளியே வந்து அங்கே அவனுக்காகக் காத்து நின்றவர்களை இருவர் இருவராக வரச்சொல்லி ஓரிரு வரிகளில் அவர்களின் தரப்பைக் கேட்டு ஆணைகளும் பரிந்துரைகளும் அளித்தபின் வெளியே வந்து தன் ரதத்தில் ஏறிக்கொண்டான். “மகாமண்டபத்துக்கு” என்று அவன் ஆணையிட்டதும் குதிரை நகரச்சாலை வழியாக விரைந்தோடத் தொடங்கியது.

மகாமண்டபத்தின் முற்றத்தை அவன் அடைந்து இறங்கி அலங்காரங்களை நோக்கினான். விப்ரர் அவனிடம் வந்து “முறையறிவிப்பு அளிக்கப்படலாமே. அனைத்துப் பணிகளும் முடிந்துவிட்டன” என்றார். அவன் நான்குபக்கமும் நோக்கியபின் தலையை அசைத்தான். விப்ரர் தனக்குப்பின்னால் நின்ற காவலர்தலைவனிடம் மெல்ல ஆணையைச் சொன்னார். அவன் திரும்பி முரசுக்கோபுரத்தை நோக்கி கையை அசைத்தான்.

மேடைமேல் நின்றிருந்த கச்சன் தன் முரசுக்கோல்களைக் கையிலெடுத்தான். அவற்றின் மரஉருளை முனைகளைச் சுழற்றி தோல்பரப்பில் அறைந்தான். அக்கணம் வரை முரசுக்குள் தேங்கி சுழன்றுகொண்டிருந்த ஒலியனைத்தும் பெருமுழக்கமாக மாறி எழுந்து காற்றை மோதின.

முந்தைய கட்டுரைநாஞ்சில்நாடனின் ஆசிரியன்குரல்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 56